Wednesday, April 24, 2019

காப்பியம் தமிழே - 1

"There is no language in the world which is pristine and pure" என்ற வாசகத்தோடு David Shulman இன் நேர்காணல் ஒன்று Frontline இதழில் வெளிவந்தது. அதைத் தமிழியல் முகநூல் குழுவிற்கு திரு. முருகன் செவ்வேள் முன்வரித்து, “இந்தோ ஐரோப்பிய மொழியின் கிளையான இந்தோ ஆரிய மொழி பரவலால் தான் மூலத்திராவிட மொழி பல மொழிகளாக சிதறியது. தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சிக்கு மூல ஆரிய மொழிக்கு பங்குல்லது என்பதுதான் இன்றைய திராவிட மொழியியலின் நிலைப்பாடு!” என்றெழுதி, https://www.quora.com/.../Gopalakrishnan-Ramamurthy-3 என்ற இடுகையைப் பரிந்துரைந்தார். "என்னது? பரிணாம வளர்ச்சியா? தமிழுக்குச் சங்கதம் உதவியதா? இதுவென்ன கூத்து?” என வியந்துபோனேன். திரு.முருகன் செவ்வேள் பரிந்துரைத்த இடுகையையும் படித்தேன்.

திரு. கோபாலகிருட்டிணன் இராமமூர்த்தி என்பாரின் பின்புலம் மொழியியல் போல் தெரியவில்லை. 2 ஆம், 3 ஆம் ஊற்றுகளை எடுத்துரைக்கும் ஆர்வலர் ஆகவே அவர் தெரிந்தார். “So quora writers are your experts. Great” எனச் செவ்வேளுக்கு மறுமொழித்தேன். “I've cited this answer having citations. He has shared some extracts from Bh.Krishnamurti's text 'Dravidian languages'.” என்று  அவர் மறுமொழித்தார். சொற்பிறப்பின்வழி காப்பியம், 2 வகைப்பட்டது என்றுகூடத் தெரியாத பேரா.பத்ரிராசு கிருட்டிணமூர்த்தியே இவருக்கு அக்கரைப் பச்சையாய்த் தெரிந்திருக்கிறார். நம்மூர்த் தொல்காப்பியப் பச்சைகளான சி. இலக்குவனார், இரா. இளங்குமரன், தமிழண்ணல் போன்றோர் இவருக்குப் பொருட்டாய்த் தெரியவில்லை போலும். 

“So Bh Krishnamoorthy is correct in your opinion, I guess. I do respect him. But his efforts at twisting the facts to get classical status for Telugu do come in between. let me temporarily forget that. I have a lot of etymological disagreements also with him. Anyway the words he chose like kappiyam, ulagam, uruvam, aayiram, avai, pakkam etc have been countered by Tamil experts. They can of course be repeated. Shall I take only these 6 words in a separate article? Either you argue or get somebody else to argue from the primary sources? I am agreeable to that. But then no secondary author's arguments/quotings please. I am tired and sick of secondary authors. Tamil research is full od secondary authors attributions which cloud peoples thinking. At the end of it, You judge yourself” என்று மறுமொழித்தேன். “Challenge accepted” என்றிதற்கு மறுமொழி எழுதிய முருகன் செவ்வேள், பின்னதை மாற்றி, “Will be waiting for your post” என்று எழுதினார். அவர் கூறிய காப்பியம், உலகம், உருவம், ஆயிரம், அவை, பக்கம் எனும் 6 சொற்களின் தமிழ்மை பற்றியது இத்தொடராகும். இவ்விடுகையில் காப்பியத்தைப் பேசுகிறேன். மற்றவை அடுத்து வரும்.

[கட்டுரைக்குள் போகுமுன், எம் இருவரின் போக்கைச் சொல்லவேண்டும். திரு. முருகன் செவ்வேள் ஆங்கிலத்திலேயே பெரிதும் எழுதுபவர். பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்து கோரா வினாவிடைப் பக்கத்தில் தொடர்ந்து ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுகிறார். நானோ, தொகுப்புக் கட்டுரைகளெழுத விரும்பியதில்லை. புதுக்கோணம் தரவியலாவிடில், எப் புலனத்துள்ளும் நுழைந்ததில்லை. இன்னொரு வேறுபாடுமுண்டு. தமிழ்தொடர்பான கட்டுரைகளைக் காரணமின்றிநான் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை. ”தமிழருக்கு எனில், தமிழ்” என்பதே என்வழக்கம். தமிழ் தெரிந்தோர் ஆங்கில வழி உரையாடுவதும் எனக்கொவ்வாத ஒன்று. இதுபற்றிச் சொன்னதன்பின்  முருகன் செவ்வேள் தமிழிலெழுத முயல்கிறார். பாராட்டுவோம். ஆங்கிலத்திலேயே உரையாடும் தமிழிளைஞர் இக்காலம் கூடியது கண்டு மனம் வருந்துகிறது. காலத்தின் கோலம் என்பதன்றி வேறென்ன சொல்ல? இளைஞர்களே! இனியாவது தமிழுக்கு மாறுங்கள். தமிழே நம் முகவரி. கூடவே இன்னொரு வேண்டுகோள். தமிழ் ஊற்றுநூல்களை முருகன் செவ்வேள் போன்றோர் படிக்கவேண்டும். 2 ஆம் நிலை, 3 ஆம் நிலை ஆங்கில நூல்களைப் படித்துத் தமிழுக்குவந்தால் கிளிப்பிள்ளைகள் ஆவதைத் தவிர்க்க முடியாது, சிந்தனை தெளியாது.]

தொல்காப்பியத்தில்வரும் காப்பியமும், ஐம்பெரு/சிறு காப்பியங்களில்வரும் காப்பியமும் வெவ்வேறு பொருளும் சொற்பிறப்புங் கொண்டவை. தொல்காப்பியம் ”காவ்யம்” அல்ல. அது ஓர் இலக்கணம். (முற்றுமுழுதாய் இல்லெனினும் தொல்காப்பியம் சங்கநூல்களில் பெரிதும் பின்பற்றப்பட்டது.) சங்கதமொழிப் படி அதுவொரு வியாகரணம். (இதே பொருளில் அணங்கம், ஈல்ந்தமென 2 சொற்களுண்டு.) இலக்கணத்தைக் காவ்யமென யாருஞ் சொல்லார். தொல்காப்பியர் மடையரா? அஷ்டத்யாயியைக் காவ்யமெனப் பேரா.கிருட்டிணமூர்த்தி கூறுவரோ? தொல்காப்பியத்திற்கு உரையெழுதியோர் காவ்யம் என்றதில்லை. தொல்காப்பியம் கற்பித்த தமிழறிஞரும் சொன்னதில்லை. இப்போதுதான் பத்ரிராசு கிருட்டிணமூர்த்திவழி கேள்விப் படுகிறோம்! ”தொல்காப்பியம்” ஆசிரியன்பெயரால் நூலுக்கெழுந்ததெனச் சிறப்புப்பாயிரஞ் சொல்லும். பாயிரம் தொல்காப்பியர் காலத்தில் எழவில்லை. அவருக்குப்பின், இளம்பூரணர் காலத்தின் (பொ.உ.11 ஆம் நூற்றாண்டு) முன் எழுந்தது. குறிப்பாக, [”அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு” என்பதால்] நான்மறையெனும் தொடர் வந்த காலத்தில் எழுந்திருக்கலாம். நான்மறை வழக்கம் எப்போதெழுந்தது? இது அடுத்த கேள்வி.

அருத்தசாற்றம் (அர்த்தசாஸ்திரம்), 2 ஆம் அத்யாய முதற்கூற்றில் [அத்வீக்ஷிகீ, த்ரயீ, வார்த்தா, தாண்டநீதிஷ்சேதி வித்யா] வேதம் மூன்று என்பார். அதர்வணத்தை இவற்றொடு தொகுக்கமாட்டார். அருத்த சாற்றக் காலத்தை பொ.உ.மு.323 என்பாரும், பொ.உ.தொடக்கத்தில் என்பாருமுண்டு. (இச்சிக்கலுள் நான் போகவில்லை.) பொ.உ. தொடக்கத்தில் அதர்வணம் எழுந்ததென்பதே பலரின் முடிபு. எனவே சங்கவிலக்கியம் தொகுத்த காலத்தில், அதர்வணத்திற்கப்புறம், பொ.உ.மு.50-பொ.உ.50 இல், பாயிரம் எழுந்திருக்கலாம். தரவுகள் வேறேதும் வருமாயின், இக்கணிப்பு மாறலாம். பின் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து என்கிறாரே? முரண் இல்லையா? பனம்பாரனாருக்கு முந்தி நடந்தவை அவருக்குச் செவிவழிச் செய்தியாகலாம். இக்காலத்தில் ஓரு கோயிலுக்குப் போய்க் குருக்களிடம் கோயிலின் அகவையை வினவினால், 2000 ஆண்டிற்கு முந்தையது என்பார். கோயிலில் கட்டுமானம், கல்வெட்டுகள், படிமங்கள், சிற்பங்கள் ஆகியவற்றை அறிவியற்கண் கொண்டு அலசினால், அது குலோத்துங்க சோழன் காலத்தையுங் காட்டலாம். இம்முரணை எப்படி விளக்குவது? வரலாற்றில் கேள்விஞானம் மட்டுமேகொண்ட குருக்களையே பெரிதும் ஐயப்பட வேண்டும். 

இதுபோற்றான் பனம்பாரனாரும். ”நிலந்தருதிருவின் பாண்டியன் அவையம்” என்பதும் ”நான்மறைமுற்றிய அதங்கோட்டாசான்” என்பதும் முரணெனத் தெரிய அவருக்கு வாய்ப்பில்லையோ, என்னவோ? ஏதேனுமோர் ஆய்வாளர் தான் தரவுகளை ஆய்ந்துபார்த்து, “எதையேற்கலாம், எதைமறுக்கலாம்?” என முடிவுசெய்ய வேண்டும். நான் ”நான்மறைமுற்றிய” என்பதை மறுக்கிறேன். ”நிலந்தருதிருவின் பாண்டியன் அவையம்” என்பதை ஏற்கிறேன். பாண்டியன் அவையம் சரியிலாவிடில், இரண்டையும் மறுப்பேன். இப்பின்புலத்தோடு பாயிரத்தைப் பார்ப்போம். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து (இவ்வொரு தொடரே பெருத்த ஆய்விற்குரியது. வெங்காலூர்க் குணா தான் வடவேங்கடத்தின் சரியான பொருளை விதந்தோதினார். வேறொரு கட்டுரையில் அதைப் பார்ப்போம்.)

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட்ட எண்ணிப்
புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே.

என்று சிறப்புப்பாயிரம் கூறும். இப்பாயிரம் பற்றி விரிவாக, நுட்பமாய்ச் சொல்லலாம் குறிப்பாக, “அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” என்பதைச் சுவையாரமாய் விளக்கலாம்.) எனினுமதைத் தவிர்க்கிறேன். பேசவேண்டிய பொருளைவிட்டு விலகவேண்டாமெனும் எண்ணம்தான்  ”உலகவழக்கும், செய்யுளும் ஆய 2 முதலின் எழுத்தும், சொல்லும், பொருளும் நாடி, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் போக்கறு பனுவல் புலம் தொகுத்தோன்” என்பதால், முந்துநூல், முன்மரபு போன்றவற்றைக் கண்டு அவற்றை முறைப்பட எண்ணி “குற்றங்களில்லாப் பனுவலாய்ப் புலப்படும் படி தொகுத்தான்” என்பது நன்கு புரியும். தொல்காப்பியனின் கற்பனைச் சரக்குகள் எவையும் இதிலில்லை. என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. "என்மனார் புலவர்” என 250 இடங்களுக்கு மேலும் தொல்காப்பியன் சொல்வான். ஒருசில தேவையான, கற்பனையிலா, மாற்றங்களை மட்டுமே சொந்தமாய்ச் செய்தான். அதுவும் அவன் நூலை ஆழப்படித்தால் எங்கெங்கென்பது புரிந்துபோகும். தொல்காப்பியம் காவ்யமெனில் கற்பனைச்சரக்கு பல இடங்களில் இருந்திருக்குமே? அப்படியிலாதபோது, காவ்யம் என்பது சரியா?

அன்புடன்,
இராம.கி.

No comments: