Friday, April 12, 2019

Hotel ”

சென்னையின் 5 முத்திரை உயர்தர விடுதியிலிருந்த ஒரு தமிழறிவிப்பை” வியந்து நண்பர் முத்துநெடுமாறன் ஓர் இடுகையிட்டார். ”முத்திரைக்கு மாறாய் நட்சத்திரம் என்பதாய்” நண்பர் வெங்கட்ரங்கன் தெரிவித்தார். நான் ”5 தாரகை விடுதி" எனப் பரிந்துரைத்தேன். இதன்பின் ”விடுதிக்குப் பதிலாக உண்டுறை எனலாமா?” என்று நண்பர் கா.சேது கேட்டிருந்தார். இது என் சிந்தனையைத் தூண்டியது. ஆங்கிலச் சொற்பிறப்பியல் hotel (n.): என்பதை 1640s, "public official residence; large private residence," from French hôtel "a mansion, palace, large house," from Old French ostel, hostel "a lodging" (see hostel). Modern sense of "an inn of the better sort" is first recorded 1765. The same word as hospital என்று பதியும். தமிழர் முதன் முதல் விடுதியில் தங்கியது 18 ஆம் நூற்றாண்டில் தான் என்றெண்ணக் கூடாது. தங்குதல், வெறும் தங்கலல்ல. உணவோடு தங்கலே. பலவிடங்களில் தங்கலின்றி உணவளிக்கும் சாலைகளும் (restaurants) உள்ளன.

தென்பாண்டி நாட்டில் restaurant க்கு இணையாய் “ஊட்டுப்புரை” என்ற சொல் உண்டு. பல கல்வெட்டுக்களிலும் இது பயின்று வந்துள்ளது. இதன் பொருள் உணவளிக்கும் சாலை என்பதே. இருந்தும், அதைமறந்து, உணவகமெனும் புதுச்சொல்லை இன்று படைத்துவிட்டோம். திருநெல்வேலி, குமரியிற்கூட ஊட்டுப்புரையை மறந்துவிட்டார். (உணவிற்குக் காசு வாங்குகிறோமா? கொடையா? - என்பது வேறுகதை.) ஊட்டு= உண்பிக்கை, உணவு; ஊட்டி= உணவு; ஊட்டம்= உண்டி, உணவு என்ற பலசொற்களை இக்காலம் மறந்து விட்டோம். உணவு மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிகிறது. ஏராளம் சொற்களைத் தொலைத்து சொற்றொகுதிகளைக் குறைத்துவிட்டோம். நம்மிற் பலரும் தமிங்கிலம் விழைவதற்கு அதுவே காரணம். நம் சோம்பலை ஏற்கவும் தயங்குகிறோம். (சில இளைஞர் இன்னும் மேலேகித் தமிழெழுத்தையும் தொலைத்து உரோமனில் எழுதுகிறார். ஏதேதோ காரணங்கள் சொன்னாலும் அடிப்படையில் அது இறுகிப்போன சோம்பலே. We just don't care. We don't want to accept also.)

பின்னூட்டு= feedback என்ற சொல் மட்டும் இணையத்தின் முதல் தமிழ்மடற் குழுவான தமிழ்.இணையத்தால் புத்துயிருற்றது. நான் hotel க்கு வருகிறேன். இதன்பொருள் தங்குமிடம். பழந்தமிழ் மாந்தனின் இருப்பிடம் பெரும்பாலும் பள்ளத்திலேயே இருந்தது. இல்லுக்குத் துளை, பள்ளமென்று பொருள். ”மனை”யும் நிலைபேற்றுப் பொருள்கொள்ளும். ஊர்விட்டு ஊர்போயின், அக்காலத்தில் தங்குவதற்குப் பொது இல்கள் இருந்தன. பொதியில், பின் கோயிலையுங் குறித்தது. அம்பலம்= கூடுமிடம். நம்மிடம் உள்ள கூட்டச் சொற்கள் கணக்கில. உறை, ஊர், களம், குடி, குப்பம், கும்பை, குலம், கொட்டாரம், கோட்டம், சேரி, தொழுவம், பாக்கம், மடம், மடு, மண்டபம், மண்டலம் மண்டி, மந்து, மந்திரம் மன்று/மன்றம் எனப் பல்வேறு சொற்கள் உறையுள் தொடர்பைக் குறிக்கும். பெரும்பாலும் குகைகள் பள்ளம் தான். ”பட்டி, பட்டினம் பள்ளி, பண்னை, குட்டம், பதி” போன்ற சொற்களும் பள்ளம் தொடர்பாய் எழுந்தவையே. நாம் இந்த இடுகையில் தகரச் சொற்களை மட்டும் பார்க்கப் போகிறோம்.

துல்>துள்>துளை. துல்லின் துளைப்பொருளில் பல சொற்களுண்டு. நான் இடப்பொருள், பள்ளப்பொருள், கீழ்மைப்பொருள் தொடர்பாயுள்ளவற்றை மட்டுமே பேசுகிறேன். துல்>தல்>தலம்= இடம். முன்னால் ஸ் சேர்ந்து சங்கதம் ஸ்தலமாக்கும். ஆனாலும் சிலர் இதை மறுப்பார். ”சங்கதத்தில் இருந்தே தமிழ் கடன்வாங்கியது” என்று காரணமின்றி அடம்பிடிப்பார். ஸ்-ஐ வெட்டி தமிழ், தலம் ஆக்கியதாம். ஏன் ஸ்-ஐச் சங்கதம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?- எனில் மறுமொழி வராது. ”வேதம், அதுயிது” எனப் பேச்சைத் திருப்புவார். ”நண்பரே! ஒரு சொல் மட்டும் பாராதீர். தொடர்புடைய சொற்கூட்டம் பார்த்துப் பின் ”சங்கதம் கடன் வாங்கியதா, தமிழ் கடன் வாங்கியதாவென முடிவு செய்யுங்கள்” என்று பலதடவை சொல்லியாகி விட்டது. ”உன் உற்றார், உறவினர், நண்பர் கூட்டத்தை சொல், நீ எப்படி என்று நான் சொல்கிறேன்” என்பதில்லையா? அதுபோல் தான் சொற்களிலும். ”சங்கதம் மேடு. தமிழ் பள்ளம்”.என்பது ஒருவித மூட நம்பிக்கை. ஆமாய்யா, இப்பப் பள்ளம் பற்றியே இங்கு பேசுகிறோம்!!!
 
தல்>(தள்)>தளி= இடம், கோயில். எங்கள் சிவகங்கை மாவட்டத் திருப்புத்தூர் இறைவரின் பெயர் திருத்தளி நாதர். தல்>த(ல்)ங்கு> தங்குதல்= வைகுதல், அடங்குதல், நிலைபெறுதல். (பெரும்பாலும் ங்கு என்பது குறிப்பிட்டவினை தொடர்ந்துநடப்பதைக் குறிப்பது continuing verbs have this ங்கு. இப்பழக்கம் பன்னூறு வினைச்சொற்களில் உண்டு. ங்கு சேரும்போது முன்னுள்ள ல் ஒலிப்பில் தெளிவாய் வராது நாளாவட்டில் இது மறைந்து போகும். இப்படிப் பல சொற்களில் ஆகியுள்ளது.) தல்>(தள்)>தள்+கு> தட்கு>தட்குதல்= தங்குதல், பதிதல், கீழிருத்தல் (லகரம் ளகரமாகிப் பின் புணர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறது.) தல்>தள்>தள்+கு>தட்குதல்> தக்குதல்= தங்குதல், கீழிருந்தல் (ட்கு என்பது போலியாய் க்கு என்றாகும். இப் பழக்கம் தமிழிலும் பாகதத்திலும் உண்டு.) தக்கு> தக்கணம்= கீழிடம். வடக்கே உத்தரம், தெற்கே தக்கணம் (இந்தியாவின் விந்தைப் பூகோளத்தில் வடக்கும் மேற்கும் உயரம். கிழக்கும் தெற்கும் பள்ளம். தக்கணம் பின் தெக்கணமாகும். தக்கு>தெக்கு>தெற்கு. தல்>தெல் என்பதே தெற்கின் மூலச்சொல். தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நம்மூருக்கு இறக்குமதியான தென்னைக்கும் தெற்கிற்கும் தொடர்பில்லை, 

தட்கியது தடகும், (புள்ளியின்றி ஒலிக்கும்.) பின் தடவும். அதன்பொருள் “கீழிருக்கும்”. தடவியது தடமென்றும் பொருள்கொள்ளும். வண்டிச்சக்கரம் அழுத்தியது தடம். பாதங்கள் அழுத்தப் போடப்படுவது தடம். களிமண்ணை உருட்டிக் கோளமாக்கி அதனுள் குழிவாக்கிச் (= தடவி) செய்வது தடவு> தடா= பானை, பானையிலும் பெரியது தடாகம்= குளம்; தட்குதல்>தட்டுதல், தள்> தள்+து =தட்டு. மேட்டை அடித்து அடித்துப் பள்ளமாக்குவது. தட்டு= ஒரே அளவில் தகடாக்கியது. தட்டித்தல்>தடித்தல்= தங்குதல், உறைதல். தள்+ந்+இ= தள்நி>தணி>தணிதல்= தாழ்தல்; தமத்தல்= தணிதல்; தள்> தரு=  நிலைப்படும் மரம். தரு>தரி>tree= நகராது நிலைத்து நிற்கும் இயற்கை உயிர். நிலைத்திணை. தரு+இ+தல்= தரித்தல்= நிற்றல்; தரி> தரிப்பு= தங்குகை, இருப்பிடம்; தரு>தரை= நிலம் (தலம் தமிழில்லை என்றால் அப்புறம் தரையும் தமிழில்லை என்றாகும். கூட்டமாய்ப் பல சொற்களை ஏன் பார்க்கிறோமென்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா?

அடுத்துத் தாகாரச் சொற்களுக்கு வருவோம். தல்>தள்>தழு>தாழ்> தாழ்வு= கீழ்நிலை; தாழ்வு>தாவு= பள்ளம். உறைவிடம். வேதியல் (chemistry), பூதியலில் (physics) isotope என்பாரே அது இசைத்தாவு. இசைந்துநிற்கும் தாவு. நிறை (weight) வேறுபட்டாலும் முறைப்பட்டியலில் (periodic table) ஒரே இடம் என்று பொருள்; தாழ்ங்குதல்= தாங்குதல்= இளைப்பாறுதல், தாமதித்தல்; தாவளம்= தங்கும் இடம். இதுதான் அக்காலத்தில் lodging-இற்கு இணையான சொல். கல்வெட்டுக்களிலும் வந்துள்ளது. தாவளக்காரர்= தாவளத்தில் தங்குபவர்; தாவணி= சேர்ந்திருக்கும் இடம் மாட்டுத்தாவணி என்பது இன்றும் மதுரையில் மாடுகளை சேர்த்துவைத்து நடக்குஞ் சந்தை. தாவணியடித்தல்= காரியமின்றி ஒருவன் வீட்டில் தங்குகை; தாணையம் போடுதல்= உறவினர் பலர் ஒரு வீட்டில் பலநாள் கூடியிருத்தல். தாவடி= பயணம்; தாவரம்= நிலத் திணை. (தாவரம் வடமொழிச்சொல்லெனப் பலரும் நினைப்பார். நானும் ஒருகால் நினைத்தேன். நகராது ஒரு நிலத்தில் தங்கியிருப்பதால் அது நிலத் திணை யானது. இது கனகச்சிதமான சொற்கட்டு. தாவரசங்கமம்= வீட்டுப் பண்டங்களான அசையும்பொருளும் நிலம், வீடு முதலிய அசையாப் பொருளும். சிவபுராணப் பாட்டில் மாணிக்கவாசகர் இதைப் பயனுறுத்துவார்.

தாவரித்தல்= தாங்குதல்; தட்டுத்தாவரம்= புகலிடம்; தாவித்தல்> தாபித்தல்> ஸ்தாபித்தல்= நிலைநிறுத்தல். (இங்கும் ஸ் சேர்ந்ததால் இது வடமொழி ஆகாது. தாவித்தலென்பது நல்லதமிழ்.. தாபி(bi)த்தல் எனும்போது வடமொழி ஓசைபெறும். அதைத் தவிர்க்கலாம். தாயம்= தங்குமிடம், தாயக் கட்டம், பரமபதம் ஆடும்போது ஒன்றோ இரட்டை ஆறுகளோ போட்டால் தாயம் என்பார். போய்ச்சேரும் இடத்தையும் தாயமென்பார். dice ஐத் தாயக் கட்டை என்பார். தங்குமிடம் என்பதையே தாயங் குறிக்கிறது. தாயகம் என்பதற்கு தாய்வழிபிறந்த இடமென்று ஒருபொருள் இருந்தாலும், “:அடைக்கலம்” என்ற பொருளுமுண்டு. அது தங்கும் பொருளில் வந்தது. தாயத்தார் தாய்வழி உறவுமுறையார் என்பதோடு ஒரே இடத்தில் உரிமைகொண்ட கூட்டத்தார் என்ற பொருளுமுண்டு. இறந்து பட்டோரைக் குத்தவைத்து உட்கார்த்திப் புதைக்கும் வாயகன்ற சால், பாண்டத்தைத் தாழி என்பார். இதற்கு வைகுந்தம் என்ற பொருளுமுண்டு. ஆதிச்சநல்லூர்  தாழி இப்போது எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது. தாழ்மதம்> தாமதம்> தாமசம். ”உங்களுக்கு எங்கே தாமதம்/தாமசம் என்பது தென்பாண்டிநாட்டிலும் கேரளத்திலும் உண்டு. ”எவிடேயா தாமசம்?”. தானம் = இடம்; இந்துத்தானம், பாக்கித்தானம் என்கிறாரே அதுவும் தமிழ்ச் சொல் தான். 10கள் இருக்குமிடம் பத்தாந்தானம் (tens palce) , இதுபோல் நூறாம் தானம் (hundreds place).

அடுத்தது விடுதி எனும் சொல். விடுதல் = தங்குதல். காவினுள் நடந்த விட்டார்களே” சீவக. 1905. “விடுதியே நடக்கவென்று நவிலுவீர்” பாரதம் சூது, 165) தெலுங்கு: விட்டி; க பிடதி. ம.விடுதி இதற்கு மாறாய் மடம், சந்திரம் என்ற சொற்களும் உண்டு. மடுத்தல் என்பது சமையலறை. மடை = சமையல். உணவு தருமிடம் = மடம். சாந்திருக்கும் இடம் சா(ர்)த்திரம்>சத்திரம். பல்வேறு சாத்துக்கள் போகும் வழியில் தங்கிப்போகும் இடங்கள் சத்திரம் என்பார். இன்றைக்கு நகரத்தாரும் நாடாரும் பல்வேறு இடங்களில் நகரத்தார் சத்திரங்களும், உறவின்முறைச் சத்திரங்களும் கட்டிவைத்திருப்பார். இது நெடுங்காலப் பழக்கம். அங்கே பெயருக்கு ஒரு மகமைப்பணம் கட்டிவிட்டுத் தங்கிக் கொள்ளலாம்.

hotel க்கு என் பரிந்துரை விடுதியே. Lodge = தாவளம். restaurant = ஊட்டுறை (சேதுவின் உண்டுறையைச் சற்று மாற்றியுள்ளேன். ஏனெனில் ஓய்விற்காக அங்கு சிறுநேரம் உறையவுஞ் செய்கிறோம்.)

அன்புடன்,
இராம.கி.     

No comments: