Thursday, April 25, 2019

காப்பியம் தமிழே - 2

அப்படியானால் தொல்காப்பியம் என்ற பெயர் எப்படியெழுந்தது? “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி” என்றதால் நூலாசிரியனால், நூலிற்குப் பெயர்வந்தது தெளிவு. ஐந்திரம் ஒரு வடமொழி இலக்கணமென்று சொல்லி ஏராளமான சங்கதச்சார்பாளர் நம்மை மடைமாற்றுவார். தமிழ் உரையாசிரியர் பலருங்கூட வடமொழி இலக்கணம் என்பார். மாற்றுக்கருத்தர் தமிழிலக்கணம் என்பார். ஐந்திரமெனும் விதப்புநூல் இதுவரை எம்மொழியிலுங் கிட்டவில்லை. தமிழுக்கு, “அகத்திய இலக்கணம்” போல், சங்கதத்திற்கு, “ஐந்திரம்” ஒரு கற்பனை நூல். (இதையொட்டிய வாதங்களுக்கு இன்னொரு கட்டுரை தேவைப்படலாம் அவ்வளவு செய்திகள் உண்டு. விழைவோர் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முதன்மடலம் 3ஆம் பாகம் 321-323ஆம் பக்கங்களைப் படியுங்கள். அவற்றை மீள இங்கே விவரித்து எங்கெலாம் நான் வேறுபடுகிறேனென்று சொல்வது தேவை யில்லை). 

{இங்கோர் இடைவிலகல். பொதுவாய் நம்மை மருட்டவே ”சங்கதம்” பயனாகிறது. ஒருசொல்லைச் ’சங்கதம்’ என்போரில் பலர், மோனியர் வில்லிம்சு அகரமுதலியையும், சங்கதவிலக்கிய மூலங்களையும் பார்ப்பதே யில்லை. கண்ணை மூடி இக்கால நடைமுறைகளை வைத்துச் சொல்லி விடுவார். ஆதாரங்களைக் கொணர்ந்து நாமடுக்கிக் குறிப்பிட்ட சொல் சங்கதம் இல்லை என்றால், ”முண்டா மொழி” என நகர்ந்துகொள்வார். முண்டா மொழியை இனங்காட்டச் சொன்னால் அமைதிகாப்பார். அல்லது பேச்சு மாறுவார். சண்டையைச் சங்கதத்தோடு போடாது ”ஒப்புக்குச் சப்பாணியாய்த்” தமிழோடு போடுவார். இணையவாதங்கள் பலவும் கணநேர வெற்றி நாடி அரைகுறையாய் அமைகின்றன. சொற்பிறப்பியல் அறிவுக்குறைவாலும், நாம் சொல்பவற்றை மறுப்பார். [சிலபோது நம்பக்கத்தாரே கற்றுக்குட்டியாய் உன்னிப்புச் சொற்பிறப்பைக் (folk etymology) காட்டுவதாலும் எதிர்வினை நிகழும். தமிழுக்கு உரையாடுவோர் அருள்கூர்ந்து ஆழப்படியுங்கள். மேலோட்ட உன்னிப்பை உதறித் தள்ளுங்கள்.]

குறித்தசொல்லின் தமிழ்மையை மறுப்பதே சங்கத ஆர்வலர் குறிக்கோளாகும். மற்ற இந்தையிரோப்பியன்களில் இதுபோல் உண்டா? சொல்லின் வேரும், கிளை வினை/பெயர்ச் சொற்களும், உள்ளனவuா? ஒற்றைச்சொல் மட்டும் அங்குளதா?- என ஆயமாட்டார். தமிழெனில் ஆயிரங் கேட்போர், சங்கதம் எனில் தண்டனிட்டு வணங்குவார். ”சாமி, தப்பாச் சொல்வாரா?” எனும் implicit obedience ஊடே வந்து சாதிநடைகள் நம்மைப் பலிகடாவாக்கும். இவற்றை விட்டு வெளிவராது மொழியொப்புமை செய்யவே முடியாது. திராவிட வாதிகளின் இடையூறுகளோ வேறுமாதிரி. அதேபொழுது சங்கதவாதிகளின் போலவே நடந்துகொள்வார். பட்டகைகள் (facts) எதையும் படிக்கமாட்டார். அவரின் தேற்றே (theory) அவருக்கு முகன்மை. இவரைச் சார்ந்து நாமிருக்கும் வரை இவருக்குத் தமிழ் இணக்கமே. சாரா விடில், ”எம்மை மீறி இவனா?” எனும் ஆணவங் கொப்பளிக்க, ”புலவனுங்க பற்றி எமக்குத் தெரியாதா?” என்பார். வெள்ளைக்காரர் சொல்வதே வேதமெனக் குள்ளக்குனியத் தேடிக் கொண்டிருப்பார்.}

சரி, ஐந்திரமென்ற சொல்லுக்கு வருவோம். ”குணம்/நட்பு/இனிமை நிறைந்த” என்று விதவிதமாய்ச் சொல்கையில் கலனுக்குள் அன்றேல் மாந்தனுக்குள் இருக்கும் உள்ளீடுபற்றியே பேசுகிறோம் ”ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றதொடரும் தொல்காப்பியனுள் உள்ளிட்டுக்கிடக்கும் குறிப்பிட்ட திறமையை/தன்மையைத் தான் குறிக்கிறது. அப்படியெனில் ஐந்திரம் என்பது என்ன?- என்று கேட்டால், சொற்பிறப்பின் வழி, ஐந்திரம் என்பது ”இலக்கணம்” என்னும் பொதுமையைக் குறிக்கும் என்பேன்.. வடமொழி இலக்கணம், தென்மொழி இலக்கணமெனும் விதுமைகளை (specifics) அது குறிக்கவில்லை. ஏன் அப்படிச் சொல்கிறேன்? அதற்குமுன் இலக்கியம் - இலக்கணம் என்ற என் கட்டுரைத்தொடரைப் படித்துவிடுங்கள். 

http://valavu.blogspot.com/2011/07/1.html
http://valavu.blogspot.com/2011/07/2.html
http://valavu.blogspot.com/2011/07/3.html
http://valavu.blogspot.com/2011/07/4.html

மேலேயுள்ள தொடரில் சொன்னபடி, இல்லுதல்>இலுங்குதல்>இலுக்குதல்>இலக்குதல் என்பது குற்றுவதையும், குறித்தலையும், கூர்த்தலையும், பிளத்தலையும் உணர்த்தும். கொடுத்தான் என்ற சொல்லை கொடு+த்+த்+ஆன் என்றும், அவனிற்கு>அவனுக்கு என்பதை அவன்+இல்+கு என்றும் இலக்கண உருபுகளின்வழி பிரிப்பதும் ஒருவகையில் இலக்குஞ்/பிரிக்குஞ் செயலே. வடமொழியில் வரும் ”விய ஆகரணமும்” உருபுகளாய் (விள்ளி, வியந்து= பிரித்து. வியாக்ர பாதர்= விரிந்த புலிவிரற் பாதங் கொண்ட முனி. தில்லையில் நடவரசன் முன்னிருப்பதாய்ச் சொல்லப் படுவார்.) அறிவதையே சொல்லும். இலுக்கு>இலக்கு = எழுத்து, குறி, உருபு போன்றவை. இலக்குகளால் இயன்றது இலக்கியம் (= இலக்கு+இயம்). இலக்குகளை அணக்குவது இலக்கணம் (அண்ணல்>அணத்தல்= பொருத்தல்.) ’முலை மூன்றணந்த சிறுநுதல்’ என்பது கல்லாடம் (13:12) இலக்கணப் பகரியாய் அணங்கமெனுஞ் சொல் அகரமுதலிகளிற் சொல்லப்படும். அதே போல் அணங்கியம் என்பது இiலக்கியப் பகரி.)
.
இல்தலின் திரிவான ஈல்தல் மேலுந்திரிந்து ஐல்தல்>அயில்தல் ஆகும். அடிப்படையில் கூர்ங்கருவியால் பிரிப்பதையே இதுகுறிக்கிறது. அயில்= கூர்மை, வேல், அறுவை செய்யுங் கத்தி என அகராதியில் கொடுத்திருப்பர். ஒரு மொழித்தொடரை அயிலுந்திரம் ஐ(ல்)ந்திரமானது. (திரம்= வலு). ஆங்கிலத்தில் சொன்னால் analytic capabiliy. ”அவனுக்குக் கொடுத்தான்” என்பதை விடக் கடினமான, பலக்கிய சொற்றொடரை உருபுகளாய்ப் பிரித்துக் கையாளும் திறம் ஐந்திரம். ”grammatic capability நிறைந்த தொல்காப்பியன்” என்பதே ”ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற தொடரால் சொல்லப் படுகிறது. முடிவில் வியாகரணம் என்ற இருபிறப்பிச் சொல்லும் தமிழ்ச் சொற்களான இலக்கணமும், ஈல்ந்தமும் ஒருபொருட் சொற்களே. சங்கதச் சொல்லை ஏற்போர், தமிழ்ச்சொற்களை ஏன் மறுக்கிறார்? 

நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப்புணரியலென எழுத்ததிகாரத்திலும், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியலெனச் சொல்லதிகாரத்திலும், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல்,மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியலெனப் பொருளதிகாரத்திலும் மரபையும், இயலையும் பேசிய தொல்காப்பியனுக்கு தமிழ்மொழி மரபைக் காப்பது முகன்மையாய்த் தெரிந்திருக்கிறது. தொல்காப்பியன் என்பது நம் காலப் :”புதுமைப்பித்தன்” போன்றதொரு புனைப்பெயரே. தொல்காப்பு= தொன்மையை, மரபைக் காப்பாற்றுவது. தொல்காப்பு+இயன் எனத் தன்பெயரை அவன்கொண்டதில் வியப்பென்ன? 

அவன் இயற்பெயர் யாருக்கு தெரியும்? (நச்சினார்க்கினியர் விட்ட கட்டுக்கதை ஒன்றுண்டு. தொல்காப்பியரின் இயற்பெயர் த்ரணதூமாக்னியாம்.) புனைப் பெயர் வைக்கக்கூடாதெனச் சொல்ல நாம் யார்? செம்புலப் பெயல்நீரார், விட்ட குதிரையார் என்றெலாம் நாம் பெயர் வைக்கலாமெனில், தொல்காப்பியன் எனத் தனக்கு அவன் புனைப்பெயர் வைக்கக்கூடாதா? புனைப்பெயர் கொள்வது தமிழ்க்குடியில் இன்று நேற்றுப் பழக்கமா? நிலந்தருதிருவிற் பாண்டியன், கரிகாற் சோழன், நெடுஞ்சேரலாதன் என்பவை இயற்பெயர்களா? கபிலன் இயற்பெயரா? குடிப்பெயரா? நிறப்பெயரா? பரணனா? பாணனா? வள்ளுவன், இளங்கோ, மணிவாசகன், நாவுக்கரசன், கம்பன், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் இயற்பெயர்களா? குடிப்பெயர்களா? புனைப்பெயர்களா? 100க்கு 95 எழுத்தாளர் புனைப்பெயரோடு தானே நம்மூரில் வலம்வருகிறார்? இக்காலம் அவரின் இயற்பெயர் நமக்கு எளிதில் தெரிந்துவிடுகிறது. 2700 ஆண்டுகளுக்கு முன்னுள்ளவனின் இயற்பெயரை எங்கு போய்த் தேடுவது?

இன்னும் வேறுசிலர் உள்ளார். காப்பியக்குடி என்பது காவ்ய கோத்ரமாம் ”ஐயர், சர்மா” என்பது போல் அவன் ”காவ்ய” எனும் பெயர்கொண்டானாம். முதுமுனைவர் இரா. இளங்குமரம் அவருடைய தொல்காப்பியப் பதிப்பில் அக்குவேறு ஆணிவேறாக இதைப்பிரித்துக் குதறியிருப்பார். தொல்காப்பியரைப் பெருமானராகக் காட்டவிழையும் போக்கு, தமிழ்நாட்டில் நெடுநாள் நடக்கிறது. தொல்காப்பியர் காப்பியக்குடி எனவாக்க இளம்பூரணரைத் துணைக்கழைப்பர், தொல்காப்பியர் பெயரைத் ”திரணதுமாக்கினி” என்று கூறி வேறு குடியில் அவர் பிறந்ததாய் ”உச்சிமேல் புலவர்கொள்” நச்சினார்க்கினியர் கூறுவாரே? அக்கூற்றைக் கடாசலாமா? இளம்பூரணர் உரையை அடியொற்றும் நச்சினார்க்கினியர் இதில் மட்டும் ஏன் மாறுகிறார்? தொல்காப்பியர் பற்றி நச்சர்விட்ட கதை முழுக்க நம்பும்படி உள்ளதா? தொல்காப்பியன் இப்படியெனில் வேறு காப்பியர்களை (சங்கப் புலவரை) என் செய்வது? அவர்களும் காப்பியக்குடியா? ஏன் தொல்காப்பியருக்கு மட்டும் குடிப்பெயர் சொல்கிறார்? வேறெந்தப் பெயரும் ஏன் ஒட்டப்படவில்லை? ஐயர் என்றால் எந்த ஐயர்? ”காவ்ய ஐயர்” என்றால் போதுமோ? யாரென விளங்கிவிடுமோ? இன்னும் அதிகக் குறிப்பு வேண்டாமா?

இன்னுஞ்சிலர் சிலம்பின் 30 ஆம் காதையின் 80 ஆம் வரியில் ”தேவந்திகையின் கணவன் காப்பியக்குடியெனச் சொல்லப்பட்டுள்ளதே?” என்பர். தேவந்தியின் கணவன் காப்பியக் குடியினன் என்று சொல்ல 30 ஆம் காதையை விட்டால் வேறு ஆதாரமில்லை. நான் சிலம்பின் 30 ஆம் காதையை ஏற்றதில்லை. அது இளங்கோவிற்குப்பின் சேர்க்கப்பட்ட பின்னொட்டென்றே என் “சிலம்பின் காலம்” நூலில் வாதாடியிருப்பேன். முந்தைக்காதைகளோடு அது பெரிதும் முரணும். ஒரு காப்பியன் முன்னுக்குப்பின் முரணாய் இப்படிச் செய்யான். உறுதியாக இளங்கோ இதை எழுதியிருக்க வழியில்லை. யாரோ வொருவர், மணிமேகலை நூலோடு சிலம்பைத் தொடர்புறுத்த வேண்டி, இதை உருவாக்கி ஒட்டியிருக்கிறார் என்பதே.என் தேற்று. 

இன்னுஞ் சிலர், முதற்பராந்தகன் (கி.பி.941) காலக் கல்வெட்டில் (தெ.கல்.தொ 8, கல் 196) “இப்பொன்னில் காப்பியந் வடுகங்கணத்தாந் வாசிரியும், காப்பியந் சேந்தன் மாடமுடையநும், காப்பியந்சேந்தந் முசிறி ந்மலியும், காப்பியந் சேந்தந் சோமதேவநும், காப்பியந்வடுகந் தாமோதிரநும்” என்றுவருவதையும், (தெ.கல்.தொ 8, கல் 197) இல், “காப்பியந்நானூற்ருவந்” என்றுவருவதையும் கொண்டு காப்பியக் குடிக்கு ஆதாரந் தேடுவர். இக்கல்வெட்டுகள் இன்னும் ஆய வேண்டியவை. சேதமுற்ற இவற்றைப் படித்தால், காப்பியந் என்பது குடியா, காப்பிய ஊரனா என்பது விளங்கவில்லை. (காப்பியாற்றுக் காப்பியனார் என்றொரு சங்கப்புலவர் இருக்கிறார்.) சொல்லப்படுவோர் தெலுங்குப் பார்ப்பாராய்த் தெரிகிறார். பெருஞ்சோழர் காலத்தில் தெலுங்குப் பெருமானரை தமிழகத்தில் ஏராளங் குடியேற்றினார். இன்றைக்கும் தமிழ்ப் பெருமானருக்கும் தெலுங்குப் பெருமானருக்கும் காவிரி நாட்டில் சதுர்வேதி மங்கல உரிமைகளால் உள்ளார்ந்த முரண்களும் கதைகளுமுண்டு. சங்ககாலத்தின் முன் இங்கிருந்த தமிழ்ப்பெருமானர் பெரும்பாலும் முன்குடுமியர் எனப் பேரா. நா. சுப்பிரமணியம் Brahmins in the Tamil country இல் நிறுவியிருப்பார். காப்பியக் குடியார் முன்குடுமியரா என்றெனக்குத் தெரியாது. 

நம்பூதிகளின் கோத்திரங்கள் அளவிற்கு தமிழ்ப்பெருமானரின் கோத்திர வரலாறு எழுதப்படவில்லை. அதையெழுதப் பலரும் தயங்குகிறார். விவரந் தெரிந்தவருங் குறைகிறார். [பெருங்கணத்தாருக்கும் (ப்ரகச்சரணம்) வடமருக்குமான ஊடாடலைக்கூட யாரும் எழுதியதில்லை.] தொல்காப்பியத்தில் தென்குமரி வழக்கு அதிகம்..பெருஞ்சோழர் காலத்தில் வடக்கிருந்து வந்த பெருமானரோடு அவரைச் சேர்க்கலாமோ? நானறிந்தவரை இற்றைப் பெருமானரில் காப்பியக்குடி அறவே கிடையாது. (அவரிருந்தாரா? கற்பனையா? தெரியாது.) காப்பியக் குடியினர் செய்ததாய் வேறெந்த மொழியிலக்கியமும் நான் அறியேன். காப்பியக்குடியின் “ரிஷிமூலம்” நம்பும்படியில்லை. தொல்காப்பியர் பெருமானரா? இல்லையா?” என்பதுகூட என்னைப் பொறுத்தவரை தேவையிலாக் கேள்வி. அவர் பெருமானராகவே இருக்கட்டுமே? அதனாலென்ன? ஆனால், அவரின் சிலகூற்றுகள் அவரை ஆழ்ந்த வேதமறுப்பாளராகக் காட்டுகின்றன. [அவர் அற்றுவிகரா (ஆசீவிகரா), செயினரா, புத்தரா, சாங்கியரா, சாருவாகரா, ஞாயவாதியா, விதப்பியரா (வைசேடிகரா) என்ற ஆய்வினுள் நானிப்போது நுழையவில்லை.] வேத நெறிப்பட்ட காப்பியக் குடியாராய் அவரைக் காட்டுவது எனக்கு முரணாகவே தோற்றுகிறது.

இதுவரை தொல்காப்பியத்திற்கே மிகுந்தநேரம் செலவழித்துவிட்டோம். இனி இன்னொருவகைக் காப்பியத்தைப் பார்க்கலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற பெருங்காப்பியங்களும், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி எனுஞ் சிறுகாப்பியங்களும், காதம்பரி போன்ற இன்னுஞ்சிறு காப்பியங்களும் உண்டு., இராமாவதாரம், பெரிய புராணம், வில்லிபாரதம் என்பவற்றையும் காப்பியங்களுள் சேர்ப்பவருண்டு. இந்தக்காலப் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பெருங்கதைகளையும் காப்பியங்களுள் சேர்க்கலாமென்றே நான்சொல்வேன். இவ்வகைக் காப்பியங்களின் வரையறைதான் என்ன?  முதலில் காப்பியம் என்பதன் சொற்பிறப்பைப் பார்ப்போம், இது நீண்டது.

அன்புடன்,
இராம.கி.

No comments: