Saturday, April 20, 2019

செவிலி

முகநூல் சொல்லாய்வுக்குழுவில் இச்சொல்லுக்கு இணையான ஆண்பாற் பெயர் கேட்டார். அங்கெழுந்த உரையாடலினூடே, சொல்லின் ஏரணம் பலருக்கும் புரியாது இருந்ததைக் கண்டேன். சொற்றோற்றம்  அறியமுயலாது, பகுதிமட்டும் பார்த்து, சொற்பிறப்பியலைக் கேலிசெய்வோருக்குச் செவிலியின் பொருள் புரிபடாது. தொல்காப்பியமும், சங்கநூல்களும், அவ்வக்கால இலக்கணம், இலக்கியம், பண்பாடு, வாழ்க்கை, வரலாறு போன்றவற்றைச் சொல்ல வந்தவை. அடிப்படையில் அவை எல்லாச்சொற்களையும் தொகுக்கும் அகரமுதலிகளல்ல. இடைக்காலத்தில் நாமழித்த நூல்களும் மிகப்பல. பிற்காலத்தே அகரமுதலி செய்தோரும் சொற்களின் இயலுமைகளை நமக்குச் சொல்லியதில்லை. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது வெறுஞ்சொலவமல்ல.
சொல்லின் எல்லாத் தோற்றங்களும் நமக்குக் கிட்டாநிலையில், ”வினைச்சொல் காணின், அதன்வழி பெயர்ச்சொல்லெது? பெயர்ச்சொல் காணின், அதனடி வினைச் சொல் யாது?” என நம் மரபிற்கேற்பப் பல்வேறு இயலுமைகளை உய்த்தறிய வேண்டும் என நெடுங்காலம் நான் சொல்லியதுண்டு. இன்றும் ஆட்சியிலுள்ள ”செவிலி” என்பது வெறும் பெயர் மட்டுமன்று. இதனோடு தொடர்புள்ள வினைச் சொல் எது?. தொடர்புடை வினையெச்சம், பெயரெச்சங்கள் எவை? ஒப்புநோக்கித் தொடர்பு காட்டும் வேறு சொற்களுண்டா? செவிலி, செவிலித் தாய் என்பவற்றுள் முன்னது பொதுச்சொல்லெனில், பின்னது விதப்புச் சொல்லா? செவிலியோடு தொடலும் வேறு சொற்களை இப்போது நாம் ஆள்கிறோமா? - என்றெல்லாம் ஆயாது இச்சிக்கலைத் தீர்க்க முடியாது. இக்கட்டுரை அதற்கான முயற்சி.
சங்ககாலம் என்பது வேடுவச் சேகர நிலையிருந்து சற்று முன்னேறிய ஆனால் கூறு பட்ட அரசுகள் (segmentary stateகள்) உருவாகிய காலமென்று மேலைநாட்டு பர்ட்டன் ஸ்டெய்ன் போன்றோர் சொல்வர். குறிப்பாகச் சங்கவிலக்கியக் குமுகாய நிலையை இவர் மேலோடக் கண்டு வேந்தரென்போர் சிறு இனக்குழுத் தலைவரே என்பார் சங்க நூல் வரலாற்றுக் குறிப்புகளை வைத்து மூவேந்தரைச் சரியான வட அரசர் காலத்திற் பொருத்தாது, 200/300 ஆண்டுகள் தள்ளிப் பொருத்தி, பொ.உ.மு.300-பொ.உ.300 என்றே சங்ககாலத்தை வரையறை செய்வார். வையாபுரிப் பிள்ளை, சிவராசப்பிள்ளை, கமில் சுவலபில், கைலாசபதி, சிவத்தம்பி, உரோமிலா தாப்பர் ஆகியோர் புரிதலே 1970/80 கள் வரை முகனமாய்த் தெரிந்தது. இன்றும் பல்வேறு இடதுசாரி வரலாற்று ஆசிரியர் இதைப் பிடித்துத் தொங்குவார். இன்று கிட்டும் ’கீழடி’நகர எச்சங்கள், மணிப் பட்டறைகளால் உருவான பொருந்தல், கொடுமணம் போன்ற வணிக எச்சங்கள், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வணிக இயலுமை காட்டும் துறை முக எச்சங்கள், முத்து/பவளம்/தங்கம்/வெள்ளி/செம்பு போன்றவற்றின் அதிகப் பயன்பாடு, நாணயப்புழக்கம், சங்கவிலக்கிய மீள்வாசிப்பு ஆகியவை கொண்டு அலசினால், பெரும்பாலும் பொ.உ.மு.600- பொ.உ.225 காலமே சங்ககாலம் என்று விளங்கும். இதை நிறுவ இக்கட்டுரை முகனக் களமல்ல. ஆனால் செவிலியின் பொருளறியப் இக் குமுகாயப் புரிதல் கட்டாயந் தேவை.
என் புரிதலில், வேடுவச் சேகர நிலையிலிருந்து தமிழர் மாறிக் கூறுபட்ட வேளிர் அரசுகள் குறைந்தது மூவேந்தர் பொ.உ.மு. 200-பொ.உ.100 அளவில் தமிழகத்தில் நிலையுற்றார், They were real kings and not chieftains. இக்காலத்தில் வணிகரும், நிலக் கிழாரும் உயர்நிலைக்கு வரமுயன்றார். வேடுவச் சேகரம் முற்றிலும் நின்றது பொ.உ.200 அளவில் என்றே சொல்லலாம். பொ.உ.200 களில் ஏற்பட்ட வேந்தர் வீழ்ச்சியில் களப்பிரர் உயர, பொ.உ.200-400 இன் மாற்றுக் காலத்தில் (transition stage) வணிகர் உச்சம் பெற்றார். பொ.உ.400-550களில் வணிகரின் ஏற்றங் குறைந்து, கிழாரியக் குமுகம் வலுப் பெற்றது, . மேலையரின் வேடுவச் சேகரம்- அடிமைக் குமுகம்- கிழாரியமென்ற அச்சடிப்பையோ, அல்லது கார்ல்மார்க்சு சொல்லிய வேடுவச் சேகரம்- ஆசிய விளைப்பு நடைமுறை- கிழாரியமென்ற அச்சடிப்பையோ இடது சாரியர் திரும்பத் திரும்பச் சொல்வார். மாற்று இயலுமைகளை எண்ணிப் பாரார். பெர்ட்டன் ஸ்டெய்ன் கூற்றைப் பிடித்துப் பெருஞ்சோழர் காலத்திற்றான் கிழாரியம் வலுவுற்றது என்றும் சாதிப்பார். கூடவே நொபுரு கராசிமாவையும் சுப்பராயலுவையும் துணைக்கழைப்பார். என் கணக்கில் சங்க காலத்திலேயே கிழாரியக் கூறுகள் இருந்தன. ’செவிலி’யை மேற்சொன்ன பின்புலத்தில் காண வேண்டும்.
செவிலியர் என்போர் செல்வந்தர் வீட்டில் நெடுங்காலம் பணி புரிவோர். காசு வாங்கிக் குறிப்பிட்ட நேரம் மட்டும் வேலை புரிவோராய்க் காணக் கூடாது. கால காலத்திற்கும் இவர் குடும்பம் செல்வர் குடும்பத்திற்குக் கடன் பட்டு (வாழ்வுக் கடன் என்று கொள்ளுங்கள்; பணக் கடன் அல்ல.) பணி செய்வோர் என்று கொள்ள வேண்டும். செல்வந்தரின் உறவினராய்க் கூட இவர் இருக்கலாம். சங்க காலக் குமுகாய வழக்கில் செவிலியரும், அவர் கணவரும் தலைவியின் தந்தைக்கு நெடு நாள் சேவகஞ் செய்வோராய் இருந்திருக்கவே வாய்ப்புண்டு. இது போற் பழக்கம் தமிழக நாட்டுப் புறங்களில் எனக்குத் தெரிந்து 1960 கள் வரையுண்டு. செல்வந்தர் வீட்டில் வேலை செய்வோரை உறவிலா விடினும் உறவு முறை சொல்லியழைக்கும் பழக்கம் உண்டு. இதுவொரு கிழாரிய (நிலவுடைமை)ப் பண்பாட்டுக்கூறு. செவிலியர் பிள்ளைகள் தலைவியோடு சேர்ந்து விளையாடும் நிலை கூடப் பண்ணையில் இருக்கும். செவிலி, எல்லாத் தலைவிக்கும் இருந்துவிட மாட்டாள். செவிலி வரும் பாடல்களைத் திரும்பப் படியுங்கள். தலைவியின் செல்வநிலை எங்கோ ஒரு மூலையில் உணர்த்தப்படும். செவிலி தலைவியைச் சிறு பிள்ளையிலிருந்து ஊட்டி வளர்த்தவளானால், செவிலித் தாய் என்றே அழைக்கப் படுவாள். செவிலியின் பெண்ணே தலைவியின் தோழியாகலாம். பாட்டில் பேசப் படுகிற தலைவி கிழாரியப் பெண்ணாகவும் இருக்கலாம், வணிகர் பெண்ணாகவும் இருக்கலாம். மொத்தத்தில் செல்வரின் பெண்.
செய்தலென்பது ”பொருளையும், பணிகளையும் செய்தலென” கிழாரியக் குமுகாயத்தில் தன்வினையாகப் பொருள் கொள்ளப்படும். செய்கை (எதிர்காலத் தொனி இதிலுண்டு), செய்தி (இறந்த காலத் தொனி இதிலுண்டு) என்பவை இதில் எழுந்த பெயர்ச்சொற்கள். செய்வு என்பதும் தொழிற்பெயரே. செய்வித்தலென்பது பிறவினை குறிக்கும். செய்விக்கை இதிற் பிறந்த பெயர்ச்சொல். செய்கை/செய்விக்கை என்ற இரண்டும் புணர்ந்து சேவுகையாகும். சேவுகை செய்தவர் சேவுகர்/சேவுகன்/சேவுகி ஆனார். இன்னுந் திரிந்து சேவகன்/சேவகி/சேவகர் ஆகும். சேவகம்/சேவை எனும் தொழிற்பெயர்களும் பிறக்கும். நம் சேவுகைக்கும் ஆங்கில serve இற்கும் தொடர்பிருக்குமோ என்ற ஐயம் எனக்குண்டு. சொன்னால் நம்பத் தான் ஆட்களில்லை. ரகரம் இடையிற் சேர்வதில் வியப்பில்லை. கோத்தல்>கோர்த்தல் ஆகிறதே? வகுதல்>வகிர்தல் ஆகிறதே? தேடிப் பார்த்தால் இன்னும் பலசொற்கள் கிடைக்கும். இனி இருத்தலென்பது இல் எனும் வேரிற் பிறந்தது. இல்>இர்>இரு. to exist, to sit, to stay என்று பல்வேறு பொருள்களை உணர்த்தும். இல்தல்> இர்தல்> இருதல், இருத்தல் என்பதெல்லாம் இவற்றின் தொடர்ச்சி.
சேவை செய்து இருப்பதென்பது சற்று கால நீட்சியைக் குறிக்கும். செய்வு+இல்தல்= செ(ய்)வில்தல். தொடர்ந்து சேவை செய்தல். இதுபோல் வருவதை “புதிய தமிழ்ப் புணர்ச்சி விதிகள்” எழுதிய இலக்கண அறிஞர் செ.சீனி நைனா முகம்மது கூட்டு வினைத் தொழிற்பெயர் என்பார். நகம்வெட்டு, சுமைதாங்கு, உருப்பெருக்கு போன்றவை அவர் சொல்லும் காட்டுகள். செய்வு+இல்= செவில் செவில்தல் என்பதை நம்பாதவர் குவில்தல், நவில்தலுக்கு என்ன சொல்வார்? குவில்= நெற்கதிர்களைக் கையிற்பிடித்துக் குவித்து அறுத்தல். இல்லுதலுக்கு அறுத்தல், பிரித்தலெனும் பொருளுமுண்டு. நா+இல்தல்= நாவில்தல்> நவில்தல் = நாக்கசைத்துப் பேசி யிருத்தல். தொடர்ச்சியாய்ப் பேசுவதையே நவில்தலென்பார். அதே போல செவில்தலும் தொடர்ந்து சேவை செய்வதே. செவிலும் பெண் செவிலி. (நகம்வெட்டி, மண்வெட்டி, சுமைதாங்கி, இடிதாங்கி, உருப்பெருக்கி, ஒலிபெருக்கி போன்றவற்றை நினைவு கூறுங்கள். இலக்கணம் புரிந்து போகும்.) செவிலன் ஆண்பாற்பெயர் = male nurse. எந்த அகரமுதலியிலும் பதிவு செய்யாத இதை நாம் உய்த்தே அறிகிறோம். செவிலர் = பால்தழுவாப் பெயர்ச் சொல். வெறும் nurse. ஆணோ, பெண்ணோ முகன்மையில்லை.
அன்புடன்,
இராம.கி.

No comments: