Friday, November 29, 2019

சதுரங்கம் - 3

இனிச் சதுரங்க ஆட்டம் எக்காலம் எழுந்ததெனப் பார்ப்போம். நிலைப் படைகள் என்பன ஓர் அரசிற்குப் பின்புலனாய் அமைவதற்கு வெகுகாலம் முன்னே, துணைக்கண்ட நெய்தலிலும், அடுத்துள்ள திணைகளிலும் மாந்த நகர்ச்சிக்கு நெடுநாட்கள் நடையே வழியானது. நடைக்கு அடுத்த நகர்ச்சி சகடங்களால் விளைந்தது. விலங்காண்டி நிலையிலிருந்து வளர்ந்த பின், குறிப்பிடத்தக்க நுட்பியல் மாற்றமாய்ச் சக்கரம், சகடம், சகடை, தேர், உருளம்> உருடம்> உருதம்> ரதம் போன்றவை குமுகத்தில் உருவாகின. இவை எங்கு எப்பொழுது முதலில் உருவாகின என இன்னுந் தெரியாது. ஆனாற் சிந்து வெளியில் இவையிருந்ததற்குச் சான்றுகளுண்டு. [தொடக்கத்தில் காளைகளே சகடங்களை இழுத்திருக்கலாம். கால்> காள்> காளை; கால்நடை என இன்றும் சொல்லப் படுவதே ”காளைச்” சொற்பிறப்பைக் காட்டும்]. இதே போன்ற சான்றுகள் எகிப்திய, சுமேரிய நாகரிகங்களிலும் கிடைத்துள்ளன.

பொ.உ.மு.9000-1800 வரை சிந்துவெளியில் குதிரைப்புழக்கம் இருந்தது போல் தெரியவில்லை.  (யானையும் சகடும் இருந்தன.) இத்தனைக்கும் ஆவ்க்கனித்தான், இரான், நடு ஏசியா போன்ற மேற்கு ஆரிய நாடுகளில் குதிரை உலவியது. இட்டைட், மித்தனி நாகரிகங்களில் குதிரை, வண்டி கொண்டே ஆரியர் ஓர் உயர்ந்த முன்னிலைக்கு வந்தார். சிந்துவெளி நாகரிக முடிவில் குதிரைத் தாக்கம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கலாம். சிந்துவெளிக்கு மேற்கே நடுக்கிழக்கு நாடுகள் நடுவண் ஆசிய நாடுகள், இரோப்பா போன்ற இடங்களில் யானையில்லை. ஆனால் தேரும் குதிரையும் இருந்தன.

பாரசீக, அரேபியா நாடுகளிலிருந்து நிலம் மூலம் வடக்கேயும், நருமதைத் துறைகள் தொடங்கி தீவகற்ப முழுமையில் தெற்கே கப்பல் மூலமும் குதிரைகள் (பொ.உ.மு. 1500க்கு அப்புறம்) தொடர்ந்து இறக்கப் பட்டன. இதன் பின் சுமைவண்டிகளைக் காளைகளும், வேகவண்டிகளைக் குதிரைகளும் இழுத்தன. இந்திய நாகரிகத்தில் பொ.உ.மு.1500/1200 க்கு அப்புறமே படை வேலைகளுக்குக் குதிரை பயன்பட்டது. குதிரையையும், வண்டிகளையும் இணைத்த பின் தான் சாலைகளிற் கல் பாவும் பழக்கமும், மேடுபள்ளமின்றிச் சாலைகளை அமைக்கும் நுட்பமும் இந்தியாவிற் பரவியது.  இந்த நுட்பமின்றி குதிரை பெருவலப் (ப்ரபலப்) பட்டிருக்காது.
.
இந்தியாவில் யானைகளும் மாந்தவேலைக்கு உதவியாய் நெடுநாள் பழக்கப் பட்டு வந்தன. அவற்றைக் கொண்டு எதிரிக் கோட்டைகளை அழிப்பது பொ.உ.மு. 2000க்கு முன்னும் இருந்திருக்கலாம். இப் பழக்கம் எப்போது ஏற்பட்டதென உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. பெரும்பாலும் பொ.உ.மு. 1200 - 1000 க்கு அப்புறம்,  சகடங்களும், யானைகளும், குதிரைகளும் போர் உத்திகளில் பயன்படத் தொடங்கின. போரொட்டிய இலக்கிப்பு முயற்சியில் (logistic effort. இலக்கு= குறிப்பிட்ட இடம்; இலக்கிப்பு= குறிப்பிட்ட இடத்திற்குப் பொருள்களைக் கொண்டு சேர்த்தல்.) தேரும், யானையும் ஒன்று போல் கருதப் பட்டன தேரை நகர்த்துவதும், யானையை நகர்த்துவதும் (அவற்றின் எடை கூடக் கூட) ஒரேயளவு மாந்தமுயற்சி கொண்டவையாகக் கருதப்பட்டன. சதுரங்கத்திலும் கூட rook ஐச் சிலர் தேரென்பார். சிலர் யானையென்பார். இவற்றிடை ஒற்றுமைகளும்ம் வேற்றுமைகளும் உண்டு. (இரண்டையும் நடத்துவோர் நம்மூரில் பாகரென்றே சொல்லப்பட்டார்.)

பேரரசுகள் ஏற்படுமுன் இனக்குழுச் சண்டைகளே இங்கு இருந்தன. ஓர் இனக் குழுவோடு இன்னோர் இனக்குழு போரிடுகையில் கூட்டமாய்த் திரண்டு, கையிற் கிடைத்த ஆயுதங்களையும், கூட இருந்த விலங்குகளையும் பயன் படுத்தியே பொருதினார்.  இக்காலத்தில் யாரிடமும் நிலைப்படைகள் இல்லை. 16 கணபதக் காலத்திற்கு (பொ.உ.மு. 800 க்கு) அருகில் தான் பேரரசுகள் (குறிப்பாகக் கோசலமும் மகதமும் பின் வச்சிரமும் அவந்தியும்) வடபுலத்தில் எழுந்தன.  தென்புலத்தில் பேரரசு அப்போது இருந்ததா? இது வரைக்கும் தெரியாது. ஆனால் பொ.உ.மு. 600 அளவில் நம்மூரில் அரசுகள் இருந்தன. போர்த் தடந்தகை (war strategy) பற்றிய சிந்தனையும்  ஆட்டமும் பொ.உ.மு.700/600 களில் எழவே  வாய்ப்பதிகம். மாபாரதக் கதை கூட (அது உண்மையோ, கற்பனையோ) பொ.உ.மு.600 களில் எழுந்ததென்றே வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. மாபாரதத்திலும் இடைச் செருகல் தொடர்ந்து நடந்து முழு வடிவுற்றது பொ.உ.400 என்பார். 

முப்படைகள் பற்றி தமிழில் முதலில் சொன்னது தொல்காப்பியமே, பொருள் அதிகாரம் புறத்திணையியலில் தும்பைத்திணை பேசும் 17 ஆம் நூற்பாவின் முதலிரு அடிகள்,

தானை, யானை, குதிரை என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்

என்று போகும். இதில் தேர் நேரடியாகக் கூறப்படவில்லையாயினும், இதே புறத்திணையியல் 21 ஆம் நூற்பாவில் தேர் பேசப்படுகிறது. ஒருவேளை தானைக்குள் காலாட்களோடு, தேரும் சேருமா? தெரியாது. (தொல்காப்பியக் காலம் குறைந்தது பொ.உ.மு. 700 என்றே பலரும் சொல்கிறார்.) நாற் படைகளை முதலில் வெளிப்படச் சொன்ன சங்க இலக்கியம் புறநானூறு தான். (இக்குறிப்பிற்கு முன்னும் தமிழ்வேந்தரிடை நாற்படைகள் இருந்திருக்கலாம்.) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடும் புறம் 55 ஆம் பாட்டில்,

கடுஞ்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும் என

7-8 ஆம் வரிகள் வரும்.  இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், மருதன் இளநாகனார் ஆகியோரின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 50 என்று ”சிலம்பின் காலம்” நூலில் சொல்லியிருப்பேன். இதற்கடுத்து வெளிப் படையாகத் தமிழிலக்கியத்தில் நாற்படையைச் சொல்லியது பொ.உ.375-385 இல் தோன்றிய மணிமேகலையே. அதன்படி, இருபெரும் மன்னர் மணி பல்லவப் புத்தபீடிகையை தாமே கொள்வதற்காக தம்பெருஞ் சேனைகளால் சண்டையிட்டாராம். அடுத்து, சேர, பாண்டியரின் யானை, தேர், குதிரை மாவொடு, வயவர் நிரம்பிய சேனைகளோடு வஞ்சியிற் பொருதி சோழன் காரியாற்று மாவண் கிள்ளி அடைந்த வெற்றி பற்றி,

வஞ்சியினிருந்து வஞ்சி சூடி
முறஞ்செவி யானையும் தேரும் மாவும்
மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை
ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி
ஒளியொடு வாழி ஊழிதோ றூழி.

என்று மணிமேகலை 19, 120-128 வரிகள் சொல்லும். எனவே சதுரங்கப் போர் என்பது பொ.உ.மு. 50 க்கு அருகில் வந்துவிட்டது என்றே பொருளாகும்.  மூன்றாவதாய், என் கணக்கில் 6 ஆம் நூற்றாண்டு ஆன (இதை ஒப்பாது, 9/10 ஆம் நூற்றாண்டு என்பாரும் உண்டு) கல்லாடம், 36 ஆம் பாட்டில் 6-7 ஆம் வரிகளில்,  ”முன்னொரு நாளில் நால்படை உடன்று செழியன் அடைத்த சென்னி பாட” என்றும், 40 ஆம் பாட்டில் 14-15 ஆம் வரிகளில், “தருமப் பெரும்பயிர் உலகுபெற விளக்கு நாற்படை வன்னியர் ஆக்கிய பெருமான்” என்றும் 4 படைகளை வெளிப்படச் சொல்லிவரும்.

எனவே சதுரங்க ஆட்டம் என்பது பொ.உ.மு. 700 அளவில் சற்று முன்னோ, பின்னோ தோன்றியிருக்கலாம்.  தொல்லாய்விற் காய்கள் கிடைத்தால் இதை உறுதி செய்யமுடியும். கீழடி ஆய்வில் கிடைத்த விளையாட்டுக் காய்கள் எந்த நூற்றாண்டு அளவில் கிடைத்தன, அவை எதற்குப் பயன்பட்ட காய்கள் என்பதும் தெரியவில்லை. எதிர்காலமே இதற்கு விடையிறுக்க வேண்டும்..

அன்புடன்,
இராம.கி.

No comments: