Thursday, November 28, 2019

சதுரங்கம் - 2

முதலில் சொல்ல விழைவது: " சதுரங்கம்  என்பது சங்கதச் சொல் இல்லை, அது ஓர் இருபிறப்பிக் கூட்டுச்சொல்" என்பதாகும். சதுரங்கத்தின் முதற் பகுதியான சதுரத்தில் ’அம்’ என்பதை விடுத்துச் சதுரெனச் சங்கதம் கொள்ளும். எப்படிப் பார்த்தாலும் சதுரம் என்பது தமிழே. நம்மில் பலரும் இதை அறியாதுள்ளோம். இதன் விளக்கத்தை மீண்டும் ஒரு முறை கொடுப்பதில் பொருளில்லை. அருள் கூர்ந்து  https://valavu.blogspot.com/2019/07/blog-post.html) என்ற வலைப்பதிவைப் படியுங்கள்.. அடுத்து வரும் அங்கம் என்பது ஓர் இருபிறப்பிச் சொல். பெரும்பாலும் அலங்குதல்>அலங்கம் (= உறுப்பு, சினை) என்ற சொல்லில் இது கிளைத்திருக்கலாம். இதற்கு https://valavu.blogspot.com/2018/07/organ.html என்ற வலைப்பதிவைப் பாருங்கள். சதுர்+அங்க = சதுரங்க என ஒருகூட்டுச்சொல் வடமொழியிலாகும்.  சதுரங்கப் பொருளுக்குக் கீழே வருவோம்.  அதற்கு முன் வேறொன்றைக் கவனிக்க வேண்டும்.

”சதுரங்கம் என்பது முதல்நிலைப் பொருளில் இவ்வாட்டத்தைக் குறிக்க வில்லை. இடம், பொருள், ஏவல் தெரிகையில், ஒரு நீளக் கூட்டுச் சொல்லை முற்றிலும் சொல்லாது  சுருங்கச் சொல்வது எல்லா மொழியார்க்கும் உள்ள பழக்கம். காட்டாக, ”ஐலசமுத்ரம்” எனும் சங்கதக் கூட்டுச்சொல்லில் ஜலத்தைத் தவிர்த்து சமுத்ரம் (=பெருகிக் கிடப்பது) என்று மட்டுமே சொல்லிப் பொருளைப் புரிய வைப்பார். [ஜலசமுத்ரத்திற்கு நேர்தமிழான நீர்க்கடலிலும் கூட நீரைத் தவிர்த்துக் கடலை (= அகண்டது, விரிந்தது, பரந்தது) மட்டும் நாம் தனியே பயில்வோம். இது போல் பல்வேறு சொற்களை நான் சொல்லமுடியும்.  சதுரங்கமும் இப்படியானதே. சதுரங்க ஆட்டத்தில் ஆட்டத்தைத் தொகுத்துச் சதுரங்கமே (இடம், பொருள், ஏவல் கருதி) பின்னால் நிலைத்தது.   அரசப் பாதுகாப்பு தொடர்பான இச்சொல்லுக்குள் போகு முன், பொருட்பாலின் (அங்கவியலின்) முதற் குறளில்

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு..

என்று அரசனோடு சேர்த்து 7 உறுப்புகளை வள்ளுவர் தெரிவிப்பதைக் கவனிப்போம். (இதில் குடி என்பது நாடு. கூழ் என்பது கூலம்/தானியத்தில் எழுந்த சொல். பயிரியற் பொருளியலில் கூலம் என்பதே செல்வ அடிப்படை.   கருவூலம் (treasury) என்பதை, நாட்டின் செல்வம் (wealth) என்றும் கூழின் வழி புரிந்து கொள்ளலாம். கூழ்பற்றிப் படிப்பது கூழியல். பொதுவாக economics க்கும், விதப்பாக macro-economics க்கும் இது சரிவரும்.  ”கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு” எனும் 554 ஆம் குறளிலும் கூழ் பயிலும். )  இக்குறளுக்கும்  அருத்த சாற்றம் (அர்த்த சாஸ்த்ரம்) 6 ஆம் பாகம், முதலாம் அத்யாயத்தில் ”ஸ்வாம்ய அமாத்ய ஜநபத துர்க கோஷ தண்ட மிதராணி ப்ரக்ருதய” என்ற முதற்சொலவ முதல்வரிக்கும் தொடர்புண்டு. ஸ்வாம்ய = அரசன்; அமாத்ய = அமைச்சு; ஜநபத = குடி/நாடு; துர்க = அரண்; கோஷ = கூழ்; தண்ட = படை; மித்ர = நட்பு.  (வள்ளுவரின் கூழ் தான் கோழ்>கோஷ என்று சாணக்கியரால் சொல்லப்படுகிறது. )  இந்த 7 உறுப்புகளில், முதலில் வள்ளுவர் சொல்வது படை தான். அந்தக் காலத்தில் நாடு, பொருளாதாரம், மக்கள், அரசு போன்றவை, உலகெங்கும் படைகளால் தான் காப்பாற்றப் பட்டன

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாந் தலை.

என்று படைமாட்சி அதிகாரம்  761 ஆங் குறளில் வள்ளுவர் படையின் முகன்மையைச் சுட்டிக் காட்டுவார். படையை மேலுங் கூறிட்டு அந்தக் காலத்தில் யானைப் படை (elephantry), தேர்ப்படை (chariotry), இவுளி/குதிரைப் படை (cavalry இவுளி என்பதே சங்க இலக்கியங்களில் பெரிதும் புழங்கியது. மேலை நாடுகளில் புழங்கும் Equus என்பது இவுளியொடு தொடர்புற்றது. இதன் அடியில்  குதிரைகள், கழுதைகள், வரிக்குதிரைகள் ஆகிய விலங்குகள் அடங்கும். குதிரை என்பது முடக்கட்டில் (metathesis) குருதை ஆகி horse ஓடு தொடர்பு காட்டும்.,) காலாட்படை (infantry) என 4 அங்கங்களாய்ப் பிரிப்பர்.  [https://valavu.blogspot.com/2018/08/8.html என்ற இடுகையையும் படியுங்கள்.]   இந்தக் காலத்தில் அரணம் (army), நாவாய் (navy), வான் (air force) என முப்படையைச் சொல்வோம்.  இது போக, போரில் ஈடுபடும் இருவேறு தானைகளும் (வள்ளுவர் காலத்தில் சேனை என்ற கருத்தீடே இல்லை போலும்) மாற்றார் வகுத்த படைவகுப்புகளை ( சங்கதத்தில்  இவற்றை வியூகங்கள் என்பார்)  அறிந்து முன்னேறிச் செல்ல வேண்டுமென்ற பொருளில்,

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

என்ற 767 ஆம் குறள் வரும். முழுப் போரிலும், “ எதிரி என்ன மாதிரிப் படை/அணி வகுப்பு செய்கிறான்?  எது முன்னால் உள்ளது? எது பக்கவாட்டில் வருகிறது? எது மறைந்து தாக்கும்? ஏன் சிலவற்றை எதிரி மறைத்து வைக்கிறான்? எப்போது வெளிப்படுத்துகிறான்?  எதிரியின் ஒவ்வொருபடை  நகர்த்தலுக்கும் பின்னுள்ள பொருளென்ன? அவற்றை எப்படி முறியடிப்பது? அவன் படையை நாம் எப்படிக் கவிழ்ப்பது? - என்று கவனித்துக் கொண்டே இருப்பது படைத்தகையில் (military strategy) சேரும். இதுவே சதுரங்க விளையாட்டின் அடிப்படையும் ஆகும். இதைக் கற்கவே பலரும் இவ் விளையாட்டை  ஆடுகிறார், ஆங்கிலத்தில் chess is a strategy game என்பார். 768 ஆங் குறளில்

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

என்பார். 768 ஆம் குறள் என்பது சதுரங்கம் ஆடுவோருக்கு முகன்மையான குறளாகும். போரல்லாத கோ-வலம் (governance; சிலம்பில் கோவலனுக்கு/கோத் தொழிலனுக்கு  இப்படிப் பெயர்வைப்பர். http://valavu.blogspot.com/2009/03/4.html), பொதின நடத்தம் (business practice) போன்றவைகளுக்கும் கூட இது போன்ற  strategy வேண்டுமென்று தான் படைத்தகை என்ற வள்ளுவரின் சொல்லைப் பார்த்துத் தடந்தகை (strategy) strategyஎன்ற சொல்லை ஒருகாற் பரிந்து உரைத்தேன். (படைத்தகை என்பது பதாகை, கொடி, குடை, பல்லியம், காகளம் போன்ற தோற்றம் கொள்ளும் என்று பரிமேலழகர் சொல்வார். நான் அதற்கு உடன்படேன். ”தோற்றத்தால் பாடு பெறும்” என்று அவர் சொல்லுவது சரியென எனக்குத் தோற்றவில்லை. )

அன்புடன்,
இராம.கி.

3 comments:

tekvijay said...

ஐயா வணக்கம், என் பெயர் விஜய், நான் ஒரு தமிழிசை ஆராய்ச்சியாளன். எனக்கு சிலம்பு, பஞ்ச மரபு மற்றும் பொதுவாக தமிழிசை குறித்து சில ஐயங்களும் சிந்தனைகளும் உள்ளன, அவற்றை உங்களிடம் கூறி/கேட்டு தெளிவுற வேண்டும், பேச/கேட்க நிறைய உள்ளது. தங்களை சந்திக்க வேண்டும், எப்படி உங்களை தொடர்பு கொள்வது... நன்றி

இராம.கி said...

முகநூல் messenger வழி தனிப்பட அணுகுங்கள். என் தொலைபேசி எண் தருகிறேன். இங்கு வலைப்பதிவில் வேண்டாம் என்று எண்ணுகிறேன்.

tekvijay said...

ஐயா, தங்கள் முகநூல் பக்கத்தில் Messenger வழியாக தகவல் அனுப்பியுள்ளேன், உங்கள் பார்வைக்கு..

மீண்டும் நன்றி,
விஜய்