Wednesday, November 27, 2019

சதுரங்கம் - 1

'"சதுரங்கம்' என்ற சொல் சமக்கிருதம் என்றால் 'Chess' விளையாட்டுக்கு தமிழில் என்ன பெயர்?" என்ற கேள்வி (https://ta.quora.com/caturankam-enra-col-camakkirutam-enral-Chess-vilaiyattukku-tamilil-enna-peyar) அண்மையில் கோரா தமிழ்த் தளத்தில் எழுந்தது. இதற்கு 5 பேர் மறுமொழி அளித்தார். அவர்களில் ஒருவர் பேரா. செ.இரா. செல்வக்குமார்  16 நவம்பர் 2019 இல் அவரளித்த மறுமொழி வருமாறு:
-----------------------------------
சதுரங்கம் அல்லது ஆனைக்குப்பு என்னும் ஆட்டம் குறைந்தது 1500 ஆண்டுகளாக வெவ்வேறு விதிகளுடன் ஆடப்பட்டு வந்துள்ளது. இஃது இந்தியாவில் குப்தர்களின் ஆட்சிக் காலத்தில் (பொது ஊழிக்காலம் 300–500 வாக்கில்) தொடங்கியதாகத் தெரிகின்றது. இவ்வாட்டத்தின் வரலாற்றை அறிய விக்கிப்பீடியாவைப் பார்க்கலாம். இது சமற்கிருதத்தில் சதுரங்க (चतुरङ्ग) என்றழைக்கப் பட்டது[1]. நான்கு (சதுர்) பிரிவுகள் (காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கு பிரிவுகள்) கொண்ட போர் நகர்வு விளையாட்டு. இது பாரசீகத்துக்குப் பரவிய பொழுது (ஏறத்தாழ பொ.ஊ 600) சத்ரங்க்' Shatranj (Arabic: شطرنج‎, from Middle Persian chatrang) என்றும், கிரேக்கத்தில் ζατρίκιον (zatrikion) என்றும் அழைக்கப்பட்டது. சீனத்தில் xiàngqí 象棋 என்றழைக்கப் பெற்றது. இச்சீனச் சொல்லின் முதற்பகுதியாகிய 象 (சியாங்) என்றால் உருவம் அல்லது யானை என்று பொருள். இரண்டாவது பகுதியாகிய 棋 (சி) என்றால் சதுரங்கம். ஆக இது ஆனைச் சதுரங்கம் என்பது போன்ற பொருள் தருவதாகும். ஏறத்தாழ தமிழில் ஆனைக் குப்பு என்பது போன்ற பொருளே. இவ்விளையாட்டு இந்தியாவின் கொடை என்று சொல்லலாம்.

ஆனைக்குப்பு அல்லது சதுரங்கத்தைப் பற்றிய கலைச்சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன். இவை தமிழ்ப்பேரகராதியில் இருந்து தொகுக்கப் பெற்றவை. இவற்றில் இரண்டு சொற்கள் சமற்கிருதமென்று கருத இடமுள்ளது. ஆனால் ஒன்று (சகடு) தமிழே என்று கருதுகின்றேன்.

அரசு! int. An exclamation equivalent to 'check', used in chess; சதுரங்கத்தில் அரசன் கட்டுப்படவிருத்தலைக் குறிக்கும் குறிப்புச்சொல்
அரசு சொல்லு-தல் aracu-collu- , v. intr. < id. +. To say 'check', in chess; சதுரங்க விளையாட்டில் ராஜாவுக்குப் பகைக்காயை யெடுத்துவைத்து அரசென்று கூறுதல்
.ஆட்கால் āṭ-kāl , n. < id. +. (Chess.) Square where a piece is liable to be captured by a pawn; சதுரங்கக் கட்டத்துள் காலாட்காயால் வெட்டக்கூடிய அறை
ஆனைக்குப்பு āṉai-k-kuppu , n. < id. +. cf. குப்பி. Chess, as having elephants for rooks; சதுரங்க விளையாட்டு. ஆனைக் குப்பாடுவாரைப் போலே (ஈடு, 10, 3, 9)
(இங்கே ஈடு என்பது நாலாயிரத்திற்கு வைணவர் உரை)
ஆனையடி āṉai-y-aṭi , n. < id. +. (Chess.) Vertical and horizontal movements, the movements of the elephant or rook; சதுரங்க ஆட்டத் தில் யானை செல்லுங் கதி.
கட்டம்¹ kaṭṭam , n. < கட்டு-. Square, chequered space as in a chess-board; கவறாட்டத் திற்கு வரைந்துள்ள அறைகள். (பெருங். மகத. 14, 56.)
[இது சதுரங்கத்திற்கும் வேறு கவறாட்டம் (தாயக்கட்டை) இட்டு ஆடும் ஆட்டத்தில் பயன்படும் கட்டத்திற்கும் பொதுவான கலைச்சொல்]
கட்டு - Surrounding; forcing into a corner, as in chess; encirclement; வளைப்பு. தெறுகட்டழிய (திருக்கோ. 313). (இது சிறப்பான கலைச்சொல்)
காய் - 6. Chessman, die; ஆடுதற்குரிய காய் (சதுரங்கத்தில் உள்ள காய்களுக்கும், தாயம் போன்றவற்றில் பயன்படும் உருக்குக் காய்களுக்கும் பொதுவான சொல்)
குதிரையடி kutirai-y-aṭi , n. < id. +. Knight's move in the game of chess; சதுரங்க விளையாட்டில் குதிரையின் கதி. (இதுவும் யானையடி போன்ற சிறப்பான கலைச்சொல்)
சகடு cakaṭu , n. < šakaṭa. 2. Bishop in chess; தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய். (தேர் என்பதும் இதுவும் ஒன்றே; சகடு என்பது தமிழ்ச்சொல்லே. )
மனை² maṉai ,7. Square, as of a chess-board; சூதாடு பலகையி னறை. (W.) (இதுவும் கட்டம் என்பதும் ஒன்றுதான்)
வீடு¹ vīṭu ...Squares, as of a chess board; சதுரங்கத்தில் காய்களிருத்தற்கு உரிய தானம்.
வெட்டு² veṭṭu ...Removing a piece in chess and other games; ஆட்டக்காயை நீக்குகை.
வெட்டு¹-தல் veṭṭu- ...To take away, remove, as a piece in chess and other games; ஆட்டக்காயைப் பயனற்றதாக நீக்குதல்.
பஞ்சமகர் pañca-makar A way of ending a game in chess, when the total of pieces on both sides is five; சதுரங்க ஆட்டத்தில் இரு பக்கங்களின் காய்களுஞ் சேர்ந்து ஐந்தாவதால் ஆட்டம் முடிவுறுகை.

அடிக்குறிப்பு
———————-
[1] சதுரங்க என்பது சமற்கிருதத்தில் நான்கு படைகளைக் குறித்தற்கான இலக்கிய சான்றுகள் உள்ளன. ஆனால் விளையாட்டைக் குறித்தற்கான சான்றுகளை நான் அகராதிகளில் காணவில்லை
(மோனியர்-வில்லியம்சு, ஆப்தேயின் அகராதி). அரைகுறையாகத்தான் விளையாட்டோடு தொடர்புபடுத்தும் குறிப்புகள் உள்ளன.
அ) ஆப்தே அகராதி, " -2 a sort of chess.".
ஆ) மோனியர்-வில்லியம்சு "a kind of chess (played by 4 parties) Tithya1d."
-------------------------------

மேலே பேராசிரியர் சொன்னதோடு சேர்த்து வேறு சில கருத்துகளைச் சொல்ல விழைகிறேன். இடுகை நீளமென்பதால், கோராவில் இடாது, தனி இடுகையாக என்8 வலைப்பதிவில் இட்டு என் முகநூல் பக்கத்தில் சுட்டி கொடுக்கிறேன். சதுரங்க ஆட்டம்  எப்பொழுது எழுந்திருக்கலாம், அதன் இந்திய/தமிழ்க் கூறுகள் என்னவென ஆய்வதும் இதன் நோக்கமாகும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: