Sunday, December 01, 2019

சதுரங்கம் - 5

சதுரங்கம் போலவே எட்டுப்பதி ஆட்டத்திலும் எதிரியின் காய்களை வெட்டுவதுண்டு. ஒவ்வொரு வெட்டுக்கும் புள்ளிகளுண்டு. காலாளை வெட்ட 1 புள்ளி, தேரை வெட்ட 2, இவுளியை வெட்ட 3, யானையை வெட்ட 4, தலைவனை வெட்ட 5. இந்த ஆட்டத்தின் நடுவில் எந்த வாய்ப்பிலும் எதிரித்தலைவனை வெட்டலாம். தலைவனைக் கட்டும் முற்றுகை (check)முயற்சி இவ்வாட்டத்தில் இல்லை.  எதிரியின் எல்லாக் காய்களையும் வெட்ட, 19 புள்ளிகள் கிடைக்கும். தன் காய்கள் பலியாகாது, 3 எதிரிப்படைகளை வீழ்த்தின் உச்சப் பெறுதியாய் 54 புள்ளிகள் கிட்டும். பொதுவாய் இது அரிது. எந்நேரத்திலும் ஆட்டத்தை நிறுத்திவிடலாம். யாருக்குப் புள்ளிகள் அதிகமோ அவர் வெற்றி பெற்றவர் ஆவார். அல்லது 3 பேர் முற்றிலும் தோற்று ஒருவர் மட்டும் எஞ்சும் நிலை ஏற்படலாம்.

மேலே யானை, இவுளி, தேரெனத் தனித்தனியே சொன்னாலும் அவற்றில் ஆட்களிருப்பதாகத் தான் பொருள். (யானையில் 6 பேர், தேரில் 6 பேர், குதிரை செலுத்த ஒருவர். தனிப்பட்ட குதிரை போல், தேர்/ யானையைச்  சுற்றியும் குதிரையுள்ளதாய்ப் பொருள். பாரதக் குறிப்பின்படி 1 யானைக்கு 3 சுற்றுக் குதிரைகளும், யானை செலுத்த 6 பணியாட்களும்,  3 சுற்றுக் குதிரைகளுக்கு 3 ஆட்களும், 3 குதிரைகளைச் சுற்றி 15 காலாட்களும் இருந்தார். இதுபோல் ஒரு தேருக்கு 4 செலுத்தக் குதிரைகளும், 3 சுற்றுக் குதிரைகளும் தேர்செலுத்த 6 பணியாட்களும், சுற்றுக் குதிரைகளின் மேல் 3 ஆட்களும். 3 குதிரைகளைச் சுற்றி 15 காலாட்களுமிருந்தார். இத்தனை ஆட்களுக்கும் பகரியாய் எட்டுப் பதி ஆட்டத்தில் 1 காலாள் மட்டுமே அந்தந்தக் காய்களின் முன் வைக்கப் பட்டு ஆட்டம் நகர்கிறது

ஒவ்வொரு வெட்டின் மறை பொருளும், உண்மைப் போரில் நடைபெறுவது போலவே வெளிப்படும். யானையிலிருந்து போரிடுவது  பெரும்பாலும் வேல்வீசிப் பொருதுதலே. தேரிலிருந்து பொருதுபவர் தம் வில்லால் அம்பை எறிந்தே போர்செய்கிறார். தலைவனும் தேர்போன்ற வையத்தில் (வாகனத்தில்) இருந்தே வேலும், அம்பும் எய்கிறார். தேவைப்பட்டால் வாட்சண்டையும் இடுகிறார். காலாள்/வயவர் என்பார் வேல்சண்டை மட்டுமே செய்கிறார். மேலே நான் கூறிய மணிமேகலை, கல்லாட வரிகளையும் நினைவு கொள்ளுங்கள். இதுவே எட்டுப்பதி ஆட்டத்தின் பின்னுள்ள போர்ச் சிந்தனை.

எட்டுப்பதி ஆட்டத்திலிருந்தே சதுரங்க ஆட்டம் பெரும்பாலும் எழுந்தது போலும். மிகச்சில மாற்றங்கள் செய்தாலே சதுரங்க ஆட்டம் வந்துவிடும். முதலில் 4 பேர் ஆட்டமானது 2 பேர் ஆட்டமாகிறது. ஒருவருக்கு 2 பட்டிகள் என்றாகி ஒரு தலைவன் அரசனாகி இன்னொருவன் அமைச்சன்/சேனாபதி ஆகிறான். அரசனின் நகர்ச்சி காலாளைப் போல் ஒரு கட்டமே தரப்படுகிறது. பகடை தவிர்க்கப் பட்டு, எக்காயை வேண்டினும் ஆட்டக்காரர் நகர்த்தலாம் என விதி மாறுகிறது.  ஆட்டமுடிவு  ”மாற்றரசன் மேல் முற்றுகை” என மாறுகிறது  ஆகப் போர்களுக்கு நடுவில் பொழுதுபோக்காயும் ஆயிற்று; போர் அறிவைக் கூர்தீட்டுவதாயும் ஆயிற்று, இப்படித்தான் சதுரங்கம் வளர்ந்தது. 

சதுரங்க ஆட்டத்திற்குத் தமிழில் வேறு தனிப்பெயர் உண்டா என்று தெரிய வில்லை, ஆனைக்குப்பு எனும் சொல் இவ்வாட்டத்தைக் குறித்தது என அகர முதலிகளில் உள்ளது தான். அதற்கு அணைவாய் எல்லோரும் ஒன்று போல,  ”ஆனைக்குப்பாடுவாரைப் போலே” என்ற திருவாய்மொழி ஈடு, 10, 3,  9 ஆம் விளக்கத்தை இனங் காட்டியிருப்பார். இதில் ஒரு வேடிக்கை தெரியுமோ? இப் பாசுரக் குறிப்பே தவறு.  ”ஆனைக்குப்பே சதுரங்கம்” என்ற சொன்ன ஒருவர் கூட ஈட்டு மூலத்தைப் பார்க்கவே இல்லை. திருவாய்மொழி பத்தாம் பத்தில் ”செஞ்சொற்கவிகாள்” எனுந் தலைப்புக் கொண்ட 7 ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டிற்கான விளக்கம் இது. அதைப் போய் 3 ஆம் பதிகம் என்று தவறாய் எல்லோரும் எழுதியுள்ளார்,  இருந்தாலும் 2 காரணங்களால் ஆனைக்குப்பு = சதுரங்கம் என்பதை இன்னும் ஏற்கத் தயங்குவேன்.

1. ”ஆறாயிரப்படி” ஈட்டு விளக்கத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அம்மூலங் காணவில்லை.  நம்பிள்ளையின் ”இருபத்தி நாலாயிரப் படி” விளக்கத்தை மட்டுமே பார்த்தேன். திருவாய்மொழி பத்தாம் பத்தில் ”செஞ்சொற்கவிகாள்” எனுந் தலைப்புக் கொண்ட 7 ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டின் விளக்கமாய்,, நாலாயிரப்பனுவலில் இல்லாத  சொல்லாட்சியாய், ஆறாயிரப் படியார் இதைச் சொல்லியுள்ளார். ”யானைக்  குப்பு ஆடுவாரை” என்று பிரிக்காது, ”யானைக்குப் பாடுவாரைப் போல” என  ஆறாயிரப்படி மூலத்தில் இருந்தால் என்செய்வது? தவிர,

 2. சதுரங்க ஆட்டத்தில் யானை மட்டுமின்றி, குதிரை, தேர், அமைச்சன்/சேனாபதி, காலாள் என்று பல காய்களும் குப்ப வைக்கப் படுகின்றன. அப்புறம் யானைக்கு மட்டும் என்ன சிறப்பு?  ஒருவேளை யானைக்குப்பு என்பது சதுரங்கப் பலகையில் ஆடும் வேறு ஆட்டமானால் என் செய்வது?

இப்போதைக்கு ஆனைக்குப்பை நான் ஏற்க முடியவில்லை.  அதேபோல் 'check', used in chess என்பதற்கு அரசு என்பதையும் நான் ஏற்கவில்லை. முற்றுகை என்பது இன்னும் தெளிவான சொல். சதுரங்க ஆட்டச் சூழ்க்குமம் ஒரு காலத்தில் சிலருக்கு மட்டுமே கமுக்கமாய்க் கற்றுக்கொடுக்கப் பட்டது. படைத்தலைவருக்கு மேல் இருந்தோர் மட்டும் தான் இந்த ஆட்டத்தை ஆடினார் போலும். எனவே தான், ஆட்டத்தை விவரிக்கும் இலக்கிய வரிகள் நமக்குக் கிடைப்பது  குதிரைக் கொம்பாக உள்ளது. இவ்வாட்டம் 19, 20 ஆ நூற்றாண்டுகளில் தான் பொதுமக்களிடை பரவியது . இந்நிலையில் ஆட்ட வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கும் பழங் கையேடுகளைத் தேடுவது போகாவூருக்கு வழி தேடுவதாகும். 

சதுரங்கம் பற்றிய என் கருத்துக்களை நான் சொல்லிவிட்டேன்.

அன்புடன்,
இராம.கி.

No comments: