கீழே வருவது, மின்தமிழ் மடற்குழுவில், S.P.Senthil Kumar என்பார் 19/11/2019 இல் அனுப்பிய மடலில் இருக்கும் செய்தி. பலருக்கும் பயன்படும் என்று இங்கு முன்வரிக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
-----------------------------------------------------------
திருவள்ளுவர் பிறந்த
ஊருக்கு சென்றிருக்கிறேன். அவரைப் பற்றி ஏரளமான ஆய்வுகள் செய்த முனைவர்
எஸ்.பத்மநாபன் அதற்கான ஆதாரங்களையும் இங்கு சொல்லியிருக்கிறார். 2013-ம் ஆண்டு
பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையை இங்கு அப்படியே தருகிறேன். இவர் சொல்வதும்
நம்பக்கூடியதாகவே இருக்கிறது.
கன்னியாகுமரி என்றதுமே முக்கடலும் கடலுக்குள் உயர்ந்து நிற்கும்
திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும்தான் நினைவில் வந்து போகும். படகுத்
துறையில் இருந்து திருவள்ளுவர் சிலையைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டமும் கடலின்
மத்தியில் எழுந்து நிற்கும் அழகும் நமக்குள் இனம்புரியா ஒரு பரவசத்தை ஏற்படுத்தும்.
இவ்வளவு பெரிய சிலையை இங்கு வைக்க என்ன காரணம் என்ற கேள்வியும் மனதில் எழும்.
படகு துறையிலிருந்து திருவள்ளுவர் சிலை |
திருவள்ளுவர்
என்ற உடனே வரலாற்று ஆய்வாளரும் 'ஆய்வுக் களஞ்சியம்' மாத இதழ் ஆசிரியருமான
டாக்டர் எஸ். பத்மநாபன் என் நினைவில் வந்து நின்றார். திருவள்ளுவர் குறித்த
ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர். வள்ளுவரைக் குறித்து கேட்டதுமே
"வாங்க வள்ளுவர் பிறந்த ஊரைப் பார்த்து வருவோம்'' என்று அவரது ஸ்கார்பியோவில்
அழைத்துச் சென்றார்.
கரை கண்டேஸ்வரர் ஆலயம் |
கன்னியாகுமரி
மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் முட்டம் கடற்கரையில்
இருந்து 5 கி.மீ. தொலைவிலும் அந்தக் கிராமம் இருந்தது. அதன் பெயர்
திருநாயனார்குறிச்சி. எளிமையான கிராமம், மற்ற கிராமங்களைப் போலவே நவீன வடிவம்
பூண்டிருந்தது. அங்கிருக்கும் கரை கண்டேஸ்வரர் ஆலயம் முன் எங்களது கார்
நின்றது.
"இதுதான்
திருவள்ளுவர் பிறந்த ஊர்" என்றார்.
வள்ளுவர்
பிறந்த அந்த புனிதமான மண்ணில் கால் பதிக்கிறோம். மனதுக்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பு
முழுவதுமாக ஆட்கொள்கிறது. பின் காலாற கிராமத்து தெருக்களில் நடந்தோம். பசுமை
பூத்துக் குலுங்கும் வயல்களுக்குள் உலாவினோம். மனம் முழுவதும் வள்ளுவர் பற்றிய
பெருமிதம் தொற்றிக் கொண்டிருந்த நேரம். அதே வேளை என் மனதை அரித்துக் கொண்டிருந்த
கேள்வியையும் பத்மநாபன் சாரிடம் நேரடியாகவே கேட்டேன்.
பளிங்கினால் ஆனா யானை சிற்பம் - விவேகனத்தர் பாறை |
"வள்ளுவர்
இங்குதான் பிறந்தார்! என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? '' என்று கேட்டேன்.
"நிறைய
ஆதாரங்கள் இருந்ததால்தான் மூன்று முதல்வர்களிடம் இதைப்பற்றி என்னால் பேசமுடிந்தது.
எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் எனது ஆய்வு குறித்து
பேசியிருக்கிறேன்.
ஐம்பது
ஆண்டுகளாக திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து
வருகிறேன். எனது ஆய்வுகளில் தலைசிறந்தது என்றால் அது 'திருவள்ளுவர் பிறந்தது
குமரி மண்' என்ற எனது கண்டுபிடிப்புதான். இதை 1989 டிசம்பர் மாதம்
மொரீஷியஸ் தீவில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசினேன். பின்
அதையே புத்தகமாக வெளியிட்டேன். அதை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர்
வெளியிட்டார்.
மைலாப்பூர்தான்
திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வள்ளுவருக்காக வள்ளுவர்
கோட்டம் அமைத்த கலைஞருக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது. ஆதாரங்களோடு நான்
எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதன் மூலம் வள்ளுவர் பற்றிய பொய்யான பல
கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அதன்படி திருவள்ளுவர் வள்ளுநாட்டை ஆண்ட
மன்னர், வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான முட்டத்தை அடுத்துள்ள
திருநாயனார்குறிச்சியில் பிறந்து, மதுரையில் சில காலம் தங்கி, மயிலாப்பூர் சென்று
மறைந்தார். இதற்கான ஆதாரங்கள் திருக்குறளிலேயே எனக்கு கிடைத்தன.
கிட்டத்தட்ட
திருக்குறளில் 50-க்கும் மேற்பட்ட சொற்கள் இந்தப் பகுதியில் மட்டுமே பேசப்படும்
தனிச் சொற்கள் உள்ளன. 'இன்னைக்கு ஒரே மடியா இருக்கு' என்பது சாதாரண
பேச்சு மொழி. மடி என்றால் சோம்பல். திருவள்ளுவர் மடியின்மை என்று ஒரு
அதிகாரத்தையே எழுதியுள்ளார். தமிழகத்தில் வேறெங்குமே சோம்பலை மடி என்று
சொல்வதில்லை. இங்கு அது சாதாரண பேச்சுத் தமிழ்.
தமிழகத்தின்
மற்ற பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் நீரை மட்டுமே வெள்ளம் என்று சொல்லுவார்கள். குமரி
மாவட்டத்தில் மட்டும்தான் கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் போன்றவற்றையும்
வெள்ளம் என்பார்கள். இதை வள்ளுவர் 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு ' என்று குறிப்பிடுகிறார். இந்த மண்ணில்தான் தாமரை
பூத்த தடாகங்கள் அதிகம். குடிக்க வெள்ளம் வேண்டும் என்பது இங்கு
பேச்சு வழக்கில் உள்ளது. மற்ற இடங்களில் இப்படி பேசினால் சிரிப்பார்கள். குமரி
மாவட்டத்தில் வெள்ளம் என்றால் தண்ணீர் என்று பொருள். இதனை அப்படியே
வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.
அதேபோல்
எழுவாய் உயர்தினையாக இருந்தாலும், பயனிலை அஃறிணையாகக் கூறுவது இந்த மக்களின்
வழக்கம்.' அப்பா வரும்', 'அம்மா பேசும்', 'மாமா முடிக்கும்' இப்படி பல. இதை
அப்படியே திருக்குறளில் பயன்படுத்துகிறார் வள்ளுவர். 'இதனை இதனால் இவன்
முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல்' இந்த குறளில், இதனை இவன்
முடிப்பவன் என்று கூறாமல் முடிக்கும் என்று கூறுவது, குமரித் தமிழ்
இங்கு பேசுகின்றது.
அதேபோல் உணக்கின் என்ற
வார்த்தையும், ஒரு பங்கு மண், கால் பங்கு ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி
உரம் கூட தேவையில்லாமல் அந்த நிலத்தில் பயிர் செய்யலாம் என்பதை
வள்ளுவர் 'நொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது
சாலப்படும்' என்று குறிப்பிடுகிறார். இதில் உணக்கின் (காய
வைத்தல்) என்ற வார்த்தையை குமரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள் பேசுகின்றனர்.
மீன்கள்
மிணு மிணுப்பிற்கு மயங்கும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு. முட்டம்,
கடியப்பட்டினம் மீனவர்கள் தூண்டிலில் ஜரிகையை இணைத்து மீன் பிடிப்பதில் வல்லவர்கள்.
இப்படி தூண்டிலில் பொன் இழையை வைத்து மீன் பிடிக்கும்
வழக்கத்தை 'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்ற தூஉம், தூண்டிற்பொன் மீன்
விழுங்கியற்று' என்று குறிப்பிடுகிறார். இத்தகைய தூண்டில் முறை
திருவள்ளுவர் பிறந்த திருநாயனார் குறிச்சிக்கு அருகில் மட்டும்தான் உள்ளது. வேறு
எங்கும் இல்லை. இந்த ஊரின் பழைய பெயர்தான் கடியப்பட்டினம்.
இவற்றையெல்லாம்விட
ஓர் அரிய சான்றினை கூறுகிறேன். இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர்
என்பதற்கு மிக அரிதான சான்று. 'வரைவின் மகளிர்' என்ற தலைப்பில்
விலைமகள்களைப் பற்றி கூறுகிறார். 'பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம்
இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று' என்பது அந்தக்குறள்.
வாடிக்கையாளர்களை
மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின்
தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார். பிணம்
தழுவுதல் என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்தது. திருமணம்
முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர்
இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த
இருட்டறைக்கு அனுப்புவார்கள். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தை தழுவி
வரவேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை
உறுதி செய்வார்கள். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா
சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.
கூலிக்காக
முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தை தழுவிய இளைஞனையும், பணத்திற்காக எந்த உடலையும்
தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார். மலை நாட்டிலுள்ள பிணம்
தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே
பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சி'' என்றார் உறுதியான குரலில்
பத்மநாபன்.
வள்ளுவன் கல் பொற்றை |
திருநாயனார்
குறிச்சியை வலம் வந்த நாங்கள் அடுத்து சென்றது, வள்ளுவன் கல் பொற்றை என்ற
இடத்திற்கு.எங்களுடன் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன்
ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள். இந்த இடத்திற்கும் திருவள்ளுவருக்கும் நெருங்கிய
சம்பந்தம் இருக்கிறது. தடிக்காரங்கோணம் அருகே உள்ள கூவைக்காடு என்ற இடத்தில்தான்
இந்த மலை இருக்கிறது. இது அந்த காலத்திய ஊட்டி, கொடைக்கானல் போல் குளுமையாக
இருந்திருக்க வேண்டும். இந்த மலையில்தான் திருவள்ளுவரும், அவர் மனைவியும்
ஓய்வெடுக்க வருவார்கள். தேனும் தினைமாவும் விரும்பி உண்பார்கள். அப்படி அவர் தங்கி
இளைப்பாறிய இடம்தான் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
வள்ளுவன் கல் பொற்றையில் டாக்டர் பத்மநாபன், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன் ஆகியோருடன் நான் |
சிறிய
மலையின் மீது ஏறிய எங்கள் கார் ஒரு இடத்தில் நின்றது. எங்களுக்கு எதிரில் கருமை
நிறத்தில் பெரிய பாறை ஒன்று சிறு குன்று போல் இருந்தது. "அதுதான் வள்ளுவன்
கல்பொற்றை'' என்றார் பத்மநாபன். அதன் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ள பாதம் 'வள்ளுவர்
பாதம்' என்று அழைக்கிறார்கள் இங்குள்ள பழங்குடிமக்கள்.
டாக்டர்
பத்மநாபன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி படிக்கும் காலத்தில்
இருந்தும், அதன்பின் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் போதும்
திருவள்ளுவரைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வந்திருக்கிறார். திருவள்ளுவர் சிலை
இங்கு வருவதற்கான காரணத்தை ஆதாரத்தோடு சொல்லி முடித்தார்.
திருவள்ளுவர்
பிறந்த ஊரான திருநாயனார் குறிச்சியும், அவர் மலைவாழ் மக்களோடு ஓய்வெடுத்த வள்ளுவன்
கல் பொற்றை இரண்டு இடங்களையும் பத்மநாபன் சாரின் துணையோடு பார்த்தப்பின் எனது பயணம்
கன்னியாகுமரியை நோக்கி நகர்ந்தது.
விவேகானந்தர் பாறை |
கன்னியாகுமரி
என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது விவேகானந்தர் பாறை. இந்தியாவின்
தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிறிய பாறைத் தீவில்
விவேகானந்தர் பாறை அமைக்கப்பட்டுள்ளது. 1892-ல் சுவாமி விவேகானந்தர் இங்கு நீந்தி
வந்து தவம் புரிந்திருக்கிறார் என்றும், அதன் நினைவாகவே விவேகானந்தர் பாறை
உருவாகியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.
மிகப்
பெரிய தேசிய சின்னமாக விளங்கும் விவேகானந்தர் பாறை ஏக்நாத் ரானடே என்ற தனி மனிதரின்
தன்னிகரில்லா உழைப்பின் வெளிப்பாடு. முதலில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஆரம்ப
கட்ட வேலை நடைபெறும் போதே பிரச்சினை கிளம்பியது. கிறிஸ்துவ மக்களை
பெரும்பான்மையாகக் கொண்ட குமரியில் புனித சவேரியருக்கு ஒரு கோயில் கட்டவேண்டும்
என்பது அவர்களின் ஆசை. அதற்காக மிகப் பெரிய சிலுவை ஒன்றைக் கொண்டு போய் அங்கு
வைத்தார்கள். விஷயம் கோர்ட்டுக்குப் போனது. அதில் இந்தப் பாறை விவேகானந்தர்
பாறைதான் என்று தீர்ப்பு வந்தது. இரவோடு இரவாக சிலுவையை எடுத்துச் சென்றனர். அதே
வேளையில் கலவர சூழ்நிலை உருவானது. அதன்பின் பாறை தடை செய்யப்பட்ட பகுதியாக
அறிவிக்கப்பட்டு யாரும் நுழை முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டது.
தியான மண்டபம் |
1963ல்
அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் சிறிய நினைவகம் கட்டுவதற்கு அனுமதி தந்தார்.
மத்திய அரசின் பண்பாட்டு துறை அமைச்சராக இருந்து ஹூமாயூன் கபீர் நினைவுச் சின்னம்
அமைத்தால் பாறையின் இயற்கை அழகு போய்விடும் என்று அனுமதி மறுத்தார். இனி வேறு
வழியில்லை, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரித்தால் மட்டுமே நினைவகம் எழுப்ப முடியும்
என்ற நிலை.
டெல்லியில்
மூன்று நாட்கள் முகாமிட்டு 323 எம்பிக்களின் கையெழுத்தை விவேகானந்தர் நினைவுச்
சின்னத்திற்கு ஆதரவாக வாங்கினார் ஏக்னாத். ஆனால் 15 அடிக்கு 15 அடி என்ற மிகக்
சிறிய அளவில் கட்டுவதற்கு மட்டுமே பக்தவச்சலம் அனுமதி தந்தார். அதையும் கடந்து
மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நிதி, பொதுமக்களின் நிதியோடு கட்டுமானப்
பணியைத் தொடங்கியது. 6 வருடங்களாக உருவான நினைவகம் 1970-ல் தேசத்திற்கு
அர்ப்பணிக்கப்பட்டது.
ஆறு
அறைகள் கொண்ட தியான மண்டபம் ஒன்றும், விவேகானந்தர் நின்ற நிலையில் ஒரு வெண்கல சிலை
அமைக்கப்பட்ட சபா மண்டபமும், முக மண்டபமும் அமைக்கப்பட்டன. இந்தப் பாறையில் குமரி
பகவதியம்மன் ஒற்றைகாலில் நின்று தவம் செய்ததாக ஒரு ஐதீகம் உண்டு. அந்த பாதச் சுவடு
பாறையில் இருப்பதால் அதற்கென்று ஸ்ரீ பாத மண்டபம் ஒன்று கட்டுப்பட்டுள்ளது.
விவேகானந்தர்
பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து உண்டு. தமிழ்நாடு அரசு
பூம்புகார் போக்குவரத்துக் கழகம் இவற்றை இயக்கி வருகிறது. இதற்கு இரண்டு வித
கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. சாதாரணக் கட்டணம் ரூ.34. (சிறப்புக் கட்டணம்
ரூ.169). இதில் ரூ.29 படகுக்கான கட்டணமாகவும், ரூ.5 திருவள்ளுவர் சிலைக்கான
கட்டணமாகவும் சேர்த்தே வசூலித்து விடுகிறார்கள். இதுபோக விவேகானந்தர் பாறைக்கு
விவேகானந்தர் மண்டபத்திற்கு நுழைவுக் கட்டணமாக ரூ.20 விவேகானந்தா கேந்தரா மூலம்
வசூலிக்கப்படுகிறது.
1970ல்
செப்டம்பர் 2-ல் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி இதனை திறந்து வைத்தார். 5 வருடம்
கழித்து 1975ல் விவேகானந்தர் பாறை அமைந்திருக்கும் பெரிய பாறைக்கு அருகில் உள்ள
சிறிய பாறையில் 8 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலையை எழுப்ப வேண்டும்
என்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு ஏக்நாத் ரானடே ஒரு கடிதம் எழுதினார். 1976ல்
சட்டமன்றத்தில் திருவள்ளுவருக்கு 30 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று கலைஞர்
அறிவித்தார். 1979-ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முதல்வர் எம்.ஜி.ஆர்.
தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நாட்டினார். அதன்பின் எந்த வேலையும்
நடைபெறவில்லை. மீண்டும் 1990-ல் பணி தொடங்கப்பட்டது. 10 வருடமாக கட்டுமானப் பணி
முடிந்து 1.1.2000-த்தில் புத்தாயிரம் ஆண்டில் திருவள்ளுவர் சிலை கலைஞரால் திறந்து
வைக்கப்பட்டது.
திருவள்ளுவர்
சிலை செய்யும் பணி கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சங்கராபுரம் ஆகிய மூன்று
இடங்களில் நடைபெற்றது. அம்பாசமுத்திரத்தில் இருந்து 5,000 டன் கற்களும்,
சங்கராபுரத்தில் இருந்து 2,000 டன் உயர்வகை கிரானைட் கற்களும் கொண்டு
உருவாக்கப்பட்டது. மொத்தம் 3,681 பெரிய கற்களால் சிலை வடிவமைக்கப்பட்டது. இதில்
15 டன் வரை கனமான கற்களும் உள்ளன. பெரும்பான்மையான கற்கள் 3 முதல் 8 டன் எடை
கொண்டதாக இருந்தன. கற்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்காக 18,000 துளைகள்
போடப்பட்டுள்ளன. இது பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டடம் போன்றது.
உலகத்திலேயே வேறு எங்கும் இப்படியொரு கருங்கல் சிலை அமைக்கப்படவில்லை.
பீடம்
38 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. அது திருவள்ளுவர் கூறும் அறத்துப்பாலின் 38
அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலை பொருட்பால்
இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கும் விதமாக கடல் மட்டத்திலிருந்து 30
அடி உயரம் கொண்ட பாறையின் மீது 133 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிலையின் மொத்த எடை 7,000 டன், இதில் சிலையின் எடை 2,500 டன், பீடத்தின் எடை
1,500 டன், பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3,000 டன், முகம் 10 அடி
உயரமும், தோள்பட்டை அகலம் 30 அடியும் கொண்ட இந்த பிரமாண்ட சிலை தமிழுக்கு பெருமை
சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர்
பாறைக்கும் திருவள்ளுவர் சிலை இருக்கும் சிறிய பாறைக்கும் இடையே 200 அடி
இடைவெளிதான் உள்ளது. இந்த இரண்டு சிறு தீவுகளையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட
வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் நெடுநாளைய விருப்பம். இணைப்பு பாலம் இல்லாத
காரணத்தால் அங்கிருந்து திருவள்ளுவர் பாறைக்கும் படகில் போகவேண்டியுள்ளது.
தென்
பகுதியில் உள்ள இந்தியாவின் கடைசி நிலத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இரண்டு
தத்துவ ஞானிகளின் நினைவாக நினைவுச் சின்னங்கள் அமைந்திருப்பது நம் எல்லோருக்கும்
பெருமையே...!
2 comments:
'பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீஇ யற்று' - இக்குறளுக்கான விளக்கம் பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரையில் காணப்படுவதே! வேறு சான்றுகளும் பொதுவானவையாகவே உள.
திருவள்ளுவர் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும்.ஆனால் அவர் முட்டம் ஊருக்கு அருகில் பிறந்தவர் என்பதும், தடிக்காரங்கோணம் அருகில் வள்ளுவன் பொற்றை என்ற பாறை இருப்பதும் இதுவைர தெரியாமலே இருந்துள்ளேன். தெரியப்படுத்திய உங்களுக்கு எனது நன்றி.
ஆனால் திருவள்ளுவர் மதுரையில் வாழ்ந்தார் என்பதற்கும், மயிலையில் மரித்தார் என்பதற்கும் சான்றுகள் உண்டா?
Post a Comment