Saturday, March 07, 2009

எதன் அடிப்படையில் அரசியல் மாற்றம்?

மாற்றம், மாற்றம் என்று நாம் முழங்குகிறோமே, ”அது ஒரு கட்சி ஆளுவதற்கு மாறாய், இன்னொரு கட்சி ஆள வகை செய்யும் ஆட்சி மாற்றத்தைச் சொல்லவில்லை” என்றே நான் எண்ணிக் கொள்கிறேன். நம்மில் பலரும் ”இப்பொழுது, இந்தக் கட்சி பிடிக்கவில்லை, இன்னொரு கட்சி பிடிக்கிறது, இது தான் வெல்லும் குதிரை, இது தோற்றோடும் கழுதை” என்று பொருள் கொள்ளக் கூடாது. மாறாக, ”இனி வருங்காலத்தில் நாட்டு மக்களின் வாழ்வுநிலை செழிக்க, உருப்படியான பொருளியல்வளர்ச்சி நம் குமுகாயத்தில் ஏற்பட, காலங் காலமாய்த் தொடர்ந்து வந்த தமிழின மரபுகள் காப்பாற்றப் பட, தமிழன் என்ற இனம் எதிர்காலத்தில் கரைந்து, சிதைந்து, அழிந்து விடாது நிற்க, தமிழரிடையே ஓர் அடிப்படை அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும்” என்ற விழைவில், ”பட்டதெலாம் போதும், படமுடியாது இனித் துயரம்” என்ற முனைப்பில், நமக்குள்ளே எழுந்த ஓர் எழுச்சியாக, இந்த முழக்கத்தைப் புரிந்து கொள்ளுகிறேன். என்னுடைய பார்வையில் “அந்த அடிப்படை அரசியல் மாற்றம் என்ன?” என்று இந்தக் கட்டுரை மூலம் சொல்ல விழைகிறேன்.

இக்கட்டுரையின் இடுகை 2009 இல் நடந்தது. 
 
இனிக் கட்டுரைக்கு வருவோம். இரண்டாம் உலகப்போர் சற்றேறக்குறைய முடிவுற்ற நிலையில், 1940களின் பின்னைந்து ஆண்டுகளில் இரண்டு பெரிய கேள்விகள் இந்தியத் துணைக்கண்டத்தில் பூதகரமாய் எழுந்து நின்றன.

முதற் கேள்வி இந்திய விடுதலை பற்றியது. விடுதலை எப்போது கிடைக்கும்? [இந்தக் கேள்வியின் அடிப்படை, இந்தியாவின் வளங்களும், செல்வமும், உழைப்பும், பிரித்தானிய முற்றாளுமைக்குப் பயன்படாமல், இந்திய மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற வேட்கையில் இருந்தது.] 1947 ஆகத்து 15 இல் விடை கிடைத்தபின், இந்த கேள்வி மக்கள் மனத்தை விட்டு நீங்கத் தொடங்கியது. 1950 சனவரி 26 இல் ”நாமே இந்நாட்டு மன்னர்” என்று உறுதி செய்த நிலையில், பிரித்தானிய அரசின் ஆளுமை அடியோடு அறுக்கப் பட்ட நிலையில், இந்தக் கேள்விக்கு வேலையில்லாமற் போய், முற்றிலுமாய் அகன்றது.

ஆனால், இந்தியாவின் பல்தேசத் தன்மை பற்றிய இரண்டாவது கேள்வி நெடுநாட்கள் தங்கி நம்மிடையே ஊறிக் கிடந்தது. நாடு விடுதலை பெற்றபோது, ”இந்தியா என்பது பல தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் ஓர் இடமாகப்” புரியப்பட்டு, 1969க்குப் பின், தலைகீழாய், அரசியற் பொருளியல் கொள்கைகள் மாறி, இன்று எதிர்மறையாக, ஒற்றைத் தேச நாடாக, கட்டி அமைக்கப்படும் நிலைக்கு வந்திருப்பதால், இந்தக் கேள்வி நம் முன் முகன்மை பெறுகிறது. [இந்தியா என்ற அரசியல் கருத்தீடு 100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் துணைக்கண்டத்தில் இருந்ததில்லை.]

1947 அளவில் இங்கிருந்த பல கட்சிகளும், இயக்கங்களும் [அதில் பேராயமும், சமவுடைமைக் (socialistic) கட்சிகளும், பொதுவுடைமைக் கட்சியும் முகன்மையானவை], ”பல்தேசம்” என்ற உள்ளமை (= reality) நிலையை உணர்ந்தே இருந்ததால், பல்தேசத் தன்மையைக் கவனமாகவே காப்பாற்றின. பேராயக் கட்சியின் ஆவடி மாநாடு கூட அதை ஆழ்ந்து கவனத்தில் எடுத்துக் கொண்டது. இந்தகைய கவனத்தின் காரணமாக, இந்த நாட்டின் பெயரைக் கூட ”இந்திய ஒன்றியம்” என்றே அற்றை அரசியலார் சொல்லிவந்தனர். [1969 ற்கு அப்புறம் நெருக்கடி நிலை உருவான பின் தான், நம்முடைய புகற்கடவுப் (passport) பொத்தகங்களில் “இந்தியக் குடியரசு (Republic of India)” என்று பெயர் பொறிக்கும் நிலை வந்தது. ஒன்றியம் என்ற கருத்தீடு ஓடியே போயிற்று.]

தொடக்கத்தில் ”இந்திய ஒன்றியம்” என்ற புரிதலின் விளைவாக, 1954 இல் ஆந்திராவில் பொட்டி சிரி ராமுலுவின் போராட்டத்திற்கு அப்புறம் உருவான ”மொழிவாரி மாநிலங்கள்” கொள்கையைப் பேராயக் கட்சியும் ஒப்புக் கொண்டது. [இன்றோ, அதிகார வர்க்கத்தில் இருக்கும் பலரும் ”மொழிவாரி மாநிலங்கள்” என்று அன்றைய அரசு ஏற்படுத்தியதே தவறு என்று சொல்லிக் கொண்டு திரிகிறார். அதை இந்தியாத் தரகுமுதலாளியமும் (comprador capitalism) ஏற்றுக் கொள்கிறது.] "வலுவான மாநில அரசுகள் சேர்ந்தே வலுவான நடுவரசு ஏற்படமுடியும்" என்ற அடிப்படை ஆழுணர்வு மாறி, ”வலுவான நடுவரசு, வலுவற்ற மாநிலங்கள்” என்பதே இன்றையக் கட்டுமானத்தின் அடிப்படையாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் தில்லிக்காரனைத் தேடி ஓடும் நாய்ப்பிழைப்பு இன்று ஏற்பட்டிருக்கிறது.

அன்றைய நிலையில் நாட்டின் விளிம்பெங்கணும் (குறிப்பாக, கடல் மற்றும் நில எல்லைகளில்) எல்லாம், வரையறுத்துச் சொல்லத் தக்க தேசிய இனங்கள் ஏற்பட்டிருந்தன. நாட்டின் உட்புறத்தில் மட்டும் இந்தி மொழி பேசும் ஒரு தேசிய இனம் உருவாகாத நிலையில் இருந்தது. நாட்டு விடுதலைக்கு அப்புறம், பொருளியல் வளர்ச்சி ஏற்பட, ஏற்பட, இந்தி பேசும் தேசிய இனம் ஒன்று உருவாகும் என்றே பலரும் எதிர்பார்த்தார். இப்படிச் சொல்லும் போது, ”தேசிய இனங்களுக்கு இடையே முரண்பாடுகள் உண்டு, அந்த முரண்பாடுகள். இந்தியாவின் வளங்கள் மேம்பாடு ஆகாத சூழ்நிலையில், பெரிதாகிப் பின்னால் அந்த வளங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் போது, தேசிய இனங்களின் இடையே பங்குச் சிக்கல் வரத்தான் செய்யும்” என்று ஆய்ந்தோர் அறிந்திருந்தார். அதே பொழுது, ”இந்த முரண்பாடுகளைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள, இந்தியக் குடியரசுச் சட்ட அமைப்பு இடங் கொடுக்கும், பங்குச் சிக்கல்களைப் பேசித் தீர்க்க முடியும்” என்றே அவர் எண்ணினார்.

ஆனால், விடுதலை இந்தியாவில் இருந்த இரண்டுவகை முதலாளிகளில் இந்திய நாட்டு நலனில் அக்கறை கொண்ட தேசிய முதலாளிகள் வளருவார் என்ற எதிர்ப்பார்ப்புப் பொய்த்துப் போய், தரகு முதலாளிகளே வளர்ந்து, இன்றைக்கு ஒற்றை இந்தியா என்ற கட்டுமானம் பெரிதாக ஆகிப் போனது. தரகு முதலாளிகளின் முகவரான (agent) இந்திய தேசியப் பேராயக் கட்சி இன்றைக்கு ஒற்றை இந்தியாவையே முன்வைக்கிறது. அதன் விளைவாக, நாட்டில் அரசுக்கு வரும் வருமானங்கள் [வரி (tax), சுங்கம் (customs duty), உல்கு (excise duty - இதைக் கலால் வரி என்றே நாளிதழ்கள் சொல்லிவருகின்றன)] என எல்லாமே நடுவண் அரசில் குவிந்து, மாநில அரசுகள் பெறும் விற்பனை வரி ஆகக் குறைந்து போக, ஒவ்வோர் ஆண்டும் திட்டக் குழுவோடு நடக்கும் பங்குப் பிரிப்பில் ”ஐயா, சாமி, எங்களுக்கு இன்னுங் கொஞ்சம் பிச்சை போடுங்கள், நாலு மாதமாய்ச் சரியாச் சாப்பிடலை சாமி” என்று ஏந்திப் பிழைக்கும் நிலையே நடந்து வருகிறது.

எந்த தமிழ்நாட்டு முதலமைச்சரும் இந்தப் பங்குப்பிரிப்புக் கூட்டத்திற்குப் போகாமல் இருக்க மாட்டார். [வேறு எத்தனையோ கூட்டங்களுக்குப் போகாமல் இருப்பவர், இதை மட்டும் தவிர்க்கவே மாட்டார். இதில் ஐயாவும், அம்மாவும், ஒன்று போலத்தான்.] “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்று இவர் போடும் கூச்சல்கள் எல்லாம் வெற்று முழக்கங்கள். ”பிச்சை போடும் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பிச்சை போடுகிறார்” என்பதில் தான், இவரின் அந்தந்த ஆண்டு நடைமுறையே இருந்தது/இருக்கிறது. “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது கூட” அந்தக் கூட்டத்தின் வழியே தான் முடிவு செய்யப் படுகிறது.

ஆக, நடுவண் அரசை நத்திப் பிழைக்கும் பிழைப்புத்தான் இன்றைய இந்தியாவில் என்றென்றும் மாநில அரசிற்கு வாய்த்திருக்கிறது. எனவே எந்த மாநில அரசுக் கட்சியும் நடுவரசை எதிர்த்துக் கொள்ளாது. நலத்திட்டங்களில் நக்கிப் பிழைக்க வேண்டுமானால், நடுவண் அரசுக் கட்சியின் சொற்படிதான் கேட்க வேண்டும். தனிப்படச் சொந்தமாக ஒரு கொள்கை வைத்து, அரசியல் பொருளியற் புலங்களில் இவர்கள் செயற்படவே முடியாது. கிட்டத்தட்ட, ஊராட்சி மன்றங்களை தமிழ்நாடு அரசு எப்படி நடத்தி வைத்திருக்கிறதோ, அதே நிலையில் தான் மாநில அரசை, நடுவண் அரசும் நடத்துகிறது. மாநில அரசுகளுக்கு அதிகாரம், உரிமை கிடைத்திருக்கிறது என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் பம்மாத்து என்றே சொல்லவேண்டும்.

இது தான் உள்ளமை நிலை. மாற்றம் வேண்டுமானால் இதில் மாற்றம் வேண்டும். ஒரு மாநிலத்தின் செலவு நடைக்குத் தகுந்தாற்போல, அதன் வரவும் அங்கேயே அதற்குக் கிடைக்க வேண்டும். மாநிலச் செலவு 100 உருவாய் என்றால் உள்ளூர் வரவு 20 உருவாயாய் இருந்து, மீதியை நடுவண் அரசிடம் இருந்து ஏந்திப் பெறவேண்டுமானால், அப்புறம் தமிழினம், தமிழரசு என்று பேசுவதில் பொருளில்லை.

இதே நிலை தான் ஆற்று நீர் வளங்களைப் பெறுவதிலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதிலும் இருக்கிறது. காவிரி ஆற்று நீரைப் பங்கு போட்டுக் கொள்ளுவதில் உச்ச நயன்மை மன்றம் ஒரு தீர்ப்புச் சொல்கிறது. அதைச் செயற் படுத்துவதற்கு ஒரு நடுவாளராகக் (referee) கூட நடுவண் அரசு இருக்க மாட்டேன் என்கிறது. இதன் விளைவாய், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று ஆகிப் போனது. மாநில அரசு வலுவற்றதாக இருந்தால், அப்புறம் என்ன ”சுய ஆட்சி”? ஈழச்சிக்கலில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலைப்பாடும் இந்த”ஒற்றை இந்தியா” கொள்கையின் விளைவே. இந்தியத் தரகு முதலாளியத்திற்குத் தமிழீழம் என்பது ஏற்படக் கூடாது என்ற கருத்தும் ”ஒற்றை இந்தியா” என்ற கருத்தீட்டின் பரிமானம் தான். ஊழல் மலிந்த சிங்களப் பேரினவாத அரசு தனக்குப் பணி செய்யும் என்றே இந்தித் தரகு முதலாளியம் எண்ணிக் கொள்கிறது. எனவே தமிழினத்திற்கு எதிராகத்தான் இந்திய நடுவரசு வேலை செய்யும். தி.மு.க. அரசு தான் நிலைத்துநிற்கப் பேராயத்தை அண்ட வேண்டியிருக்கிற நிலையில், ஒற்றை இந்தியாவின் கருத்தை அதனால் மீறவே முடியாது. எனவே, தி,மு.க, அல்லது. அ.தி.மு.க. அரசுகள் தமிழீழம் ஏற்பட எந்தக் காலத்தும் வகைசெய்யா.

ஒற்றை இந்தியா என்ற கருத்தாக்கமும் பல்தேச இந்தியா என்ற கருத்தாக்கமும் ஒன்றிற்கொன்று முரணானவை. இற்றைப் பேராயக் கட்சி ஒற்றை இந்தியா என்ற கருத்தீட்டில் ஊன்றிப் போனது. பாரதீய சனதாக் கட்சியும் அதையேதான் சொல்கிறது. (அதனால் தான் தரகு முதலாளியமும் அதை ஏற்றுக் கொள்ளுகிறது.) பல்தேச இந்தியா என்ற கருத்தீட்டைத் தூக்கிப் பிடித்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியர்) கூட நடைமுறையில் ஒற்றை இந்தியாவைத்தான் செயற்படுத்தி வருகின்றனர். (பல்தேசம் என்ற கருத்தை உதட்டளவில் மட்டுமே அவர் சொல்லிவருகின்றனர்.) 

திராவிடநாட்டுக் கொள்கையைக் கைவிட்டபின்பு ”பல்தேச இந்தியா” என்ற கொள்கையைத் தான் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற பெயரில் தி.மு.க. சொல்லி வந்தது. அ.தி.மு.க.விற்கும் கிட்டத்தட்ட இதே கொள்கை தான். ஆனாலும் நடுவண் அரசில் பங்குபெற்றுச் சுவை கண்ட பின்னர் இந்த இரு கட்சிகளும் ”சுய ஆட்சி” என்ற கருத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த்துப் போகச் செய்து விட்டன. முதுகெலும்பு இழந்த இந்தக் கட்சிகள் இனிமேல் எழுந்துவந்து ”சுய ஆட்சியை”த் தூக்கிப் பிடிக்கும் என்பதெல்லாம் பகற்கனவே.

எனவே கொள்கையளவில், ”பல்தேச இந்தியா” என்பதற்கு எதிராகச் செயற்பட்டு, “ஒற்றை இந்தியா” என்ற கொள்கையை நிலைநாட்டி வரும் பேராயக் கட்சியும், “பல்தேச இந்தியா” என்ற கொள்கையை நீர்த்துப் போகச் செய்து, பேராயத்திற்கு/பா.ச.க. ஆகியவற்றிற்கு அடியாளாக வேலை செய்து கொண்டிருக்கும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் நாம் ஒதுக்கத்தான் வேண்டும்.

எந்தக் கட்சிகள் “பல்தேச இந்தியா” என்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்றனவோ, அவற்றையே நாம் ஆதரிக்க இயலும்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

PRABHU RAJADURAI said...

ஐயா,
ஆக'ஸ்'ட், ஸ்ரீ என்று தமிழில் எழுதலாமா?

PRABHU RAJADURAI said...

அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெய்ர்க்கும் நல்ல அகராதி ஒன்றினை பரிந்துரைக்க முடியுமா?

முடிந்த அளவு தமிழிலே எழுத முயல்கையில் அடிக்கடி சிக்கல் எழுகிறது

Anonymous said...

பல்தேச இந்தியாவை 'ஒற்றை இந்தியா'வாக்க முயற்சிக்கும் பேராயகட்சி பா.ச.கட்சிகளை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓரம் கட்டுவோம். இவர்கள் யார் வந்தாலும், 'ஒற்றை லங்கா'வையே ஆதரிப்பார்கள். இந்தியத்தமிழர்களின் போராட்டம் பல்தேச இந்தியாவே! உலகத்தமிழர்களின் போராட்டம் தனி தமிழீழம்!
J.P.Ravichandran, Bangalore

இராம.கி said...

அன்பிற்குரிய பிரபு,

ஆகஸ்ட், ஸ்ரீ போன்றவை எழுதாமல் இருப்பது நல்லது தான். ஆனாலும் சில போது, மற்றோருக்காக இப்படி எழுதவேண்டியிருக்கிறது. என்னை மன்னியுங்கள்.

இன்றைய நிலையில் க்ரியாவின் அகரமுதலி ஓரளவு பயன்படக் கூடியது.

1960 களின் புழக்கத்தில் பார்த்தால், சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி ஓரளவு பயிலலாம்.

எல்லோருக்கும் பயன்படுமாப் போல, ஒரு விரிவான ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி வெளிவரவேண்டும்.

முடிந்த அளவு தமிழிலேயே எழுதுங்கள். தமிழில் சட்டச் சிக்கல்களைத் தமிழில் எழுதுவோர் குறைவு. சட்டத் தமிழ்ச் சொற்களைப் பற்றிய சொற்தொகுப்பு நூல்களைப் பின்னொரு நாள் குறிப்பிடுவேன்.

அன்புடன்,
இராம.கி.

பதி said...

//எந்தக் கட்சிகள் “பல்தேச இந்தியா” என்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்றனவோ, அவற்றையே நாம் ஆதரிக்க இயலும்.//

ஆம்... இதற்கு முதலில் பேராயக் கட்சிகளை ஒதுக்க துவங்கினாலே போதும். தமிழகத்தை பொறுத்த வரை அரசியல் மாற்றத்தை நீண்ட கால செயல் திட்டத்துடன் அணுகினால் ஒழிய இப்பொழுதிருக்கும் இரண்டு போலி திராவிட கட்சிகளையும் அரசியல் அரங்கிலிருந்து அகற்றமுடியாது.