Friday, March 20, 2009

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 1

அண்மையில் அமெரிக்கா ஊசுடனில் இருக்கும் நண்பர் நா.கணேசன் ”கண்ணகி, கோவலன், மாதவி” பெயர்களுக்குச் சங்கதப் பின்புலம் காட்டி, ”இளங்கோ அடிகள் கிருஷ்ணாவதாரக் கதையின் சில பகுதிகளை ஒரு நாவல் போலச் செய்து கதைமாந்தர் பெயர்களைப் படைத்திருக்கிறார்" என்று ”மின்தமிழ்” குழுமத்தில் எழுதியிருந்தார். "அட, இப்படியும் சிலம்பைப் பார்க்க இயலுமா?" என்று நான் வியந்து போனேன். பிற்காலத்தவர் (குறிப்பாக மு.இராகவையங்கார்) கருத்தை, முதலாசிரியர் மேல் ஏற்றிக் கூறி, சிலம்பிற்கு விண்ணவச் சாய்வை திரு. நா.க. ஏன் கொணர்கிறார் என்பதும், ”மைய நீரோட்டமில்லாததை நடுமைப் படுத்துவது ஏன்?” என்றும் எனக்குப் புரியவில்லை. நான் புரிந்த அளவில் நா,க, கூறும் பெயர்க் காரணங்கள் ஏற்க முடியாதவை.

சிலம்பு, ஒரு தமிழர் காப்பியம், அத்தகைய காப்பியம் சங்கதத்தில் இல்லை. அதன் நலம் பாராட்ட, சங்கதம் என்னும் ஊடாடி நமக்குத் தேவையும் இல்லை. [நம்மூரில் சங்கதப் பெயர்கள் மிகுந்தது களப்பாளர் காலத்திலும், அதற்குப் பின்னாலும் தான்.] சிலம்பில் ஆசிரியர் கூற்றாகச் சில சமயக் கருத்துக்கள் (குறிப்பாக செயினம், ஆசீவகம்) இருக்கின்றன என்றாலும், விண்ணவத்தையும் சேர்த்து மற்ற சமயங்களின் செய்திகள் சிலம்பின் கதையோட்டத்தில் தன்னேர்ச்சியாய்த்தான் சொல்லப் படுகின்றன. விண்ணவப் பின்புலம் என்பது சிலம்பிற்குக் கிடையவே கிடையாது, அது சொல்ல வந்த மையக் கருத்து ”செயினமா, ஆசீவகமா?” என்பதில் தான் வேறுபாடே ஒழிய, அதன் தலைமாந்தருக்கு விண்ணவச் சாயல் கொண்டு வருவது முற்றிலும் கற்பிதம் என்றே நான் எண்ணுகிறேன். வள்ளுவரைப் பல சமயத்தாரும் தங்களவர் என்று சொல்ல முயன்று, குறளில் விளக்கம் காண்பதுபோல், இங்கு நண்பர் நாக. கணேசன் விண்ணவச் சாயலுக்கு முயலுகிறார் என்றே தோன்றுகிறது. இனி என் மறுப்பு இங்கே [ஆறு பகுதிகளாய் அனுப்புகிறேன்.] மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் உரையாடலாம்.

முதலில் முழுமை கருதி திரு. நாக.கணேசனின் மடலை அப்படியே இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.
___________________________________________

கர்ணகம் என்றால் தாமரைப் பொகுடு, பெண்பாலில் கர்ணகீ என்றாகும். இலக்குமிக்கு ஒருபெயர் என்பதை ஆனந்த குமாரசாமி நூல்களில் அறிந்தேன். மஹாபாரதம், பாகவதம்
காவியங்களில் கர்ணகம் என்ற சொல் உள்ளது. மோனியர்-வில்லியம்ஸின் வடமொழி அகராதியிலும் இச்சொல் இருக்கிறது. பாலக - பாலகீ, தேவக - தேவகீ என்பதுபோல் கர்ணகீ (= ஸ்ரீ)

வடசொல். தமிழில் கண்ணகி என்று மருவும். காப்பியக் கண்ணகி பெயரை அலர்மேல்மங்கையுடன் தொடர்புபடுத்தியவர் முதன்முதலாக மு. ராகவையங்கார் ஸ்வாமி. அவரது ஆராய்ச்சித் தொகுதியில் பார்க்கலாம். கர்ணகீ > கண்ணகி - எவ்வாறு? 10 ஆண்டுகளுக்கு முன் சில உதாரணங்கள் கொடுத்தேன்:

http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R4239
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R14635

அப்போது, இந்திய/மொழியியலார் ஆஸ்கோ பார்ப்போலா குறிப்பிட்டார்:

http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R4492

”The Prakritic consonant assimilation may be due to a substratum influence of Dravidian originally spoken in North India: when people speaking a language with few or very simple consonant clusters speak another language with complicated consonant clusters such as Sanskrit, this is what tends to happen. I think the Tamil assimilation provides a parallel showing that this is indeed a likely hypothesis.”

மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணகி தெய்வம் ஆனாள் என்கிறது சிலம்பு. அம்மலைத் தொடர்களில் வாழும் மமைவாசிகள் (உ-ம்: முதுவர்) பலரும் கண்ணகியைக் கர்ணகி என்றுதான் வழிபடுகின்றனர். மூத்தாந்தரை கர்ணகி அம்மன் கோவில்: பாலைக்காட்டில் கர்ணகி கோவில் பிரசித்தமானது.

http://en.wikipedia.org/wiki/Valliya_Aarattu_-_Karnaki_Amman_Temple
http://palakkad.nic.in/tourism.htm

தெருக்கூத்து நாடகங்களில் ’கோபாலஞ்செட்டியாரும், கர்ணகை அம்மாளும் மதுரைக்குச் சென்ற கதை’ என்று காலங்காலமாக நடிக்கப்படுகின்றன. பார்க்க: வன்னியகுலம் வீரபத்திர நாயகர் (செட்டிபட்டி), கோவிலன் வட்டப்பாரையில் வதைபட்ட கோவிலன் - கர்ணகி நாடகம். சென்னை,107 பக்கம்,1912. மேலும், (அ) தாயம்மாள் அறவாணனின் களப்பணித் தொகுப்பு:

http://www.viruba.com/final.aspx?id=VB0000817

கண்ணகி மண்ணில், இன்றைய பூம்புகாரில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களும், கதைகளும், கர்ணகி கதைப்பாடல்களும் கள ஆய்வில் நேர்முகமாகத் திரட்டியவை. 2003, 248 பக்கம்.

(ஆ) தி. நடராசன், கோவலன் கர்ணகை கதை, 1979, மதுரை.

சமண சமயத்தைச் சேர்ந்த இளங்கோ அடிகள் கிருஷ்ணாவதாரக் கதையின் சில பகுதிகளை ஒரு நாவல் போலச் செய்து கதைமாந்தர் பெயர்களைப் படைத்திருக்கிறார் எனலாம். சமணர்களின் இராமாயணம் சற்றே மாறுபடும், அதுபோல சிலம்பு கிருஷ்ண சம்பந்தமான பெயர்களை வைத்து எழுதப்பட்ட ஒரு ’நாவல்’. கண்ணகி சமணசமயஞ் சார்ந்த செட்டிகுலப் பெண்திலகம் என்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குறிப்பிடுவார். எஸ். வையாபுரிப்பிள்ளை சிலம்பைச் சமணக் காப்பியம் என்பார்கள்:

http://groups.google.com/group/minTamil/msg/7172ac747da6267e

கோவலன் (> கோபாலன்), மாதவி (குருக்கத்தி - வசந்தமல்லி என்னும் கொடி. முல்லைவகையுள் ஒன்று. தமிழில் முல்லைக்கு மாற்றாகப் பயன்படும் மலர், முல்லைநில கோபியருள் ஒருத்தி), மாதவி - மாதவனின் காதற் பரத்தை. முல்லை என்பதை மாதவி என்று வடமொழியில் மொழிபெயர்ப்பதுண்டு. உதாரணம்: திருமுருகன்பூண்டி = மாதவிவனம். முல்லைத் தாது

மணங்கமழ் முருகன்பூண்டி (சுந்தரர்) முல்லைப் புறவம் முருகன்பூண்டி - அப்பர் தேவாரம்.

கண்ணகி < கர்ணகீ, தாமரைப்பொகுடு - இலக்குமி (ஸ்ரீ) வாழிடம். பத்மேஸ்திதாம், பத்மவர்ணாம், பத்மானனே, பத்ம ஊரு, பத்மாக்ஷி, பத்ம ஸம்பவே, பத்மப்ரியே, பத்மினீ, பத்ம ஹஸ்தே, பத்மாலயே, பத்மதலாயதாக்ஷீ, பத்மபத்ராயதாக்ஷீ, பத்மாசனஸ்த விபுல கடீதடீ, கமலாசனஸ்தாம்.....கனகதாராவில் ”ஸரஸிஜநிலயே, ஸரோஜஹஸ்தே......” கம்பனில் “செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் நந்தா விளக்கை”.

தமிழ்த்தாயின் முன்னோடி கண்ணகியே.இளங்கோவின் ஊர் கரூர் (வஞ்சி) ஆகலாம், சேரர்கள் கொல்லி காவலர்கள். சங்ககால வஞ்சி = கரூர் தான். கண்ணகி சோழநாட்டில் பிறந்து, பாண்டி நாட்டில் நீதி கேட்டு, சேர நாட்டில் தெய்வம் ஆனாள் என்று தேசிய உணர்வை ஊட்டப் பாடியிருக்கிறார். ஆனால் அதில் பல பழைய நாட்டுப் புறக் கதைகளை
இணைத்து இந்தக் காவியம் (தமிழின் முதற் காவியம்) செய்து தந்துள்ளார் என்று நினைக்கிறேன். “ஆணாதிக்க, தந்தை வழிச் சமுதாய அமைப்பு விழுமியமான “கற்பு” என்பது சுமத்தப்பட்ட படிமமாக அல்லாமல் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பும் சாமானியக் குடிமகளின் படிமமாகக் கண்ணகி உருவகிக்கப்பட்டிருப்பது தமிழ் மரபுகளின் சிறப்புக்களில் ஒன்றாகும்.” (S. V. Rajadurai)

http://nmuralitharan.blogspot.com/2006/09/blog-post_12.html

சிலம்பின் கதைமாந்தரின் பெயர்களில் கிருஷ்ணாவதாரப் பின்புலம் பற்றி சிலம்பின் நான்கு உதாரணங்களும், அதன் இரட்டைக் காப்பியமான மணிமேகலையில் ஒன்றும் காட்டுவாம்.

(1) கண்ணகி இலக்குமியின் வடிவமானவள்:
-----------------------------------
புகார்க் காண்டம், மங்கல வாழ்த்து
கண்ணகியின் குலமும் நலமும்

நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;

அவளும்-தான்,

*போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்*,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.

தாமரைப் பூவிற் பொருந்திய திருமகளின் புகழுடைய வடிவு கண்ணகி வடிவை யொக்குமென்றது அற்புதமான இடம். இளங்கோ கண்ணகியை திருமாமகளின் வடிவம் என்பது இந்து சமயத்தில் அவதாரம் என்று சொல்வர்.

(2) பாற்கடல் கடைந்த போது பிறந்த இலக்குமி (கண்ணகி)
--------------------------------------------
சந்திரனின் உடன்பிறப்பு என்பது.
--------------------------
மனையறம் படுத்த காதை
கண்ணகியின் நலத்தைக் கோவலன் பாராட்டுதல்

”தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என”

இளம்பிறை சிவபெருமான் அணிந்ததே. ஆனால் உன் உடன்பிறப்பு ஆனமையால் மகாதேவன் உன் திரு நுதல் ஆக்கினான். பிறை திருவொடு பாற்கடலிடைப் பிறத்தலின் இவளைத் *திருமகளாக மதித்து* இங்ஙனம் கோவலன் கூறினான் என்பது சிலம்பின் உரை. கன்னட நாடு (Mme. Frere, Old Deccan days) கண்ணகி சந்திரா என்ற பெயரில் வழிபடப்படுகிறாள்.

மாதவியை முல்லை என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள். இலங்கையில் (R. Gombrich) கண்ணகிக்குப் பெயரும் சந்திரா. பூரணை என்பதும் சந்திரனால் கண்ணகியைக் குறித்த சொல்.

பௌர்ணமியன்று கண்ணகிவிழா நடக்கிறது. கம்பம் - தேக்கடி மங்கலாதேவி கோட்டம் சோழர் கல்வெட்டில் ஸ்ரீபூரணகிரி என்று அழைக்கப்படுகிறது.

தேவர்களால் தொழப்படுகின்ற இளம்பிறை, சிவன் தனது சடையில் எடுத்துச் சூடியதால் சிறப்புற்றது; ஆயினும், திருமகளோடு பாற்கடலிலிருந்து தோன்றியதால் திருமகளின் மறுவடிவமாகிய கண்ணகியின் உடன்பிறப்பாகின்ற உயர்வும் அடைந்தது எனச் சிலப்பதிகாரம் (2:38-40) குறிப்பிடுகின்றது.

(3) கண்ணபிரானும், கோவலன் முன்சென்ம வரலாறுகளும்.
---------------------------------------------
சிலப்பதிகாரத்தில் சக்திவாய்ந்த மதுராபதி (கொற்றவை வடிவினள்) கண்ணகிக்குப் பின்புறமாகத் தோன்றி கோவலன் கொலையுண்ட காரணத்தை முன்சென்மச் செயலாகப் பேசுகிறது. இதில் கோவலன் - கண்ணபிரான் தொடர்புகள் விளக்கமாய்ச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

மதுரையைக் கண்ணகி தீயழல் மடுத்த அழற்படுகாதையின் பின் நிகழும் கட்டுரைகாதையில் அர்த்தநாரீசுவரராகத் தோன்றும் மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன் வர அஞ்சி அவள் பின்புறத்தே தோன்றி “நங்கையே! தோழியே!” என்று அழைத்தது என்று இளங்கோவடிகள் கூறுகிறார். தீயின் வெம்மையைப் பொறாமல் மதுராபதித் தெய்வம் தோன்றியது கண்ணகி இருக்குமிடத்தில். ஆனால் உடனே அவள் முன்தோன்றவில்லை.

அந்த மதுராபதித் தெய்வத்தின் கோலம் என்ன? சடையில் பிறைநிலா சூடிய சிவன் ஒரு பாகம்; குவளைமலர் போலும் கருங்கண்களும் தூயஒளிவீசும் முகமும் உடைய பார்வதி ஒருபாகம். இடப்புறம் பார்வதியாக நீலநிறம் இருப்பினும் வலப்பாகம் பொன்னிறம் போன்ற சிவன் மேனி. இடக்கையில் பொற்றாமரையை ஏந்தினாலும் வலக்கையில் அழகிய சுடர்விடும் வளைந்த வாள். வலக்காலில் வீரக் கழலைக் கட்டியிருந்தாலும் இடக்காலில் சிலம்பொலிக்கிறது. [கட்டுரை காதை: 1-10]

“சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி;
...
இடமருங்கு இருண்ட நீலம் ஆயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியள்;
இடக்கைப் பொலம்பூந் தாமரை ஏந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்;
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள்”

அத்தகைய கடவுளர்க்கெல்லாம் கடவுள் ஆகிய அர்த்தநாரீசுவரக் கோலம் கொண்ட மதுராபதி கொற்கையும் குமரியும் குற்றாலம் என்னும் பொதியில் மலையும் ஆளும் பாண்டியர் குலத்தெய்வமும் ஆவாள். ஆயினும் கண்ணகியின் முன்னால் உடனே தோன்றவில்லை. மதுராபதித் தெய்வத்திற்குக் கண்ணகியின் சீற்றத்தைக் கண்டு அச்சம் கலந்த மரியாதை. எனவே பின்புறம் இருந்து பேசுவது தகுதிக்கு ஒவ்வாதது ஆனாலும் கண்ணகியின் மேல் உள்ள மதிப்பினால் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறது மதுராபதி. ஆதலால் ஒருமுலை இழந்தவளும் இலக்குமிகரம் விளங்கும் பெரிய பத்தினியும் துன்பத்தால் சுழலும் அழகிய முகமும் தேர்ந்த அணிகலன்களும் உடைய நங்கையாகிய கண்ணகியின் முன்னால் நில்லாமல் அவள் பின்னிலையில் தோன்றியது மதுராபதி. [கட்டுரை காதை: 14-16]

“ஒருமுலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றி”

அதற்கு உரையெழுதிய ந.மு.வெங்கடசாமி நாட்டார் அவர்கள் “கற்புடைத் தெய்வம் ஆகலானும் வெகுளியோடு இருந்தனள் ஆகலானும், அவள் முன்னர்த் தோன்றாது பின்னர்த்
தோன்றினாள்” என்று கூறுகிறார். தோன்றிய அந்த மதுராபதி கண்ணகியை “நங்கையே கேள் என் கவலையை!” என்று அழைக்கிறது. அதைக் கேட்டுக் கண்ணகி தன் திருமுகத்தைப் பின்புறம் திருப்பி “யார் நீ என்பின் வருகிறாய்? என்னுடைய பெரிய துன்பத்தை நீ அறிவாயா?” என்று கேட்கிறாள்.

கோவலன் முன்சென்மத்தில் பணியாளாக இருந்தது வசு, குமரன் என்னும் இரு பங்காளி மன்னர்களிடையேயாம்.

”வடி வேல் தடக் கை வசுவும், குமரனும்,
[...]
அரைசு ஆள் செல்வத்து, நிரை தார் வேந்தர்-
வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த
தாய வேந்தர்” (கட்டுரை காதை, 139, 142-144).
வசுவின் குமரன் வாசுதேவ கிருஷ்ணன் ஆயிற்றே!
வசு, குமரன் என்னும் அரசர்ளின் அடியான்
கோவலன் என்றது கிருஷ்ண பரமாத்மாவைப்
பூடகமாய்ச் சுட்டியதென்க. கண்ணனையே
விஷ்ணுவாக வழிபடல் தேவாரத்தில் கூடக்
காணலாம். (1) கோவலன், நான்முகன்
நோக்க ஒணாத குழகன் (தேவா. 3.101.9)
(2) கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக்
குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும்
(தேவா. 6.3.10).

”முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன்-
வெந் திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்,
பரதன் என்னும் பெயரன் அக் கோவலன்”
(கட்டுரை காதை, 152-154).

’குடவல இடவல கோவல காவல’ - பரிபாடல்.

மதுராபதித் தெய்வம் கோவலனின் முந்தைய பிறப்பில் அவனுக்குப் பெயர் பரதன் என்கிறது. தசாவதாரங்களில் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்திற்கு முன்னால்தானே. பரதன் ராமனின் தம்பி. பலராமன்-சங்கர்ஷணனின் தம்பி கிருஷ்ணன்-கோவலன். வசு என்னும் மன்னற்குக் கோத்தொழில் செய்யும் பரதன் ஒருவனை ஒற்றன் எனக் கருதிக் கொலைகுற்றம் சாட்டி அழித்ததால், அத் தீவினை காரணமாக, அந்தப் பரதன் பின்னாளில் பூம்புகாரின் கோவலன் ஆகப் பிறந்தான் என்னும்போது, பழைய இதிஹாசப் பெயர்களை இணைக்கிறார் அல்லவா?

சேர மன்னன் குலசேகர ஆழ்வாரும் கண்ணன் ஆகிய கோவலன் குணங்களைப் பாடுகிறார். மூன்று உதாரணங் காட்டுவாம்.

(அ) கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக்
கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால்
மருவி மனம் வைத்து, மற்றொருத்திக்கு
உரைத்து, ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னைப்
புணர்தி; அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே
வளர்கின்றதால் உன்தன் மாயை தானே

(ஆ) ஆய்மிகு காதலோடு யான் இருப்ப
யான் விட வந்த என் தூதியோடே
நீமிகு போகத்தை நன்கு உகந்தாய்

(இ) என்னை வருக எனக் குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப் புக்கு
மற்று என்னைக் கண்டு உறழா நெகிழ்ந்தாய்.

இதுபோலவே கோவலன் பண்பை சிலம்பு (5:200-201) பேசுகிறது:

“குரல் வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல”.

(4) திருமா உண்ணி - கண்ணகி என்னும் பத்தினித் தெய்வம்
---------------------------------------------
திருமா மகள் = இலக்குமி.
திருமாமகள் கேள்வா! - நம்மாழ்வார்
நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்
பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல - சிந்தாமணி
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் - மணவாளமாமுனி

இதுபோலவே, திருமாமகள் எனும் பதத்தில் உள்ள ’மகள்’ என்னும் சொல்லின் பகரியாக (substitute) திருமா பத்தினி, திருமாமணி என்பார் இளங்கோ.

”ஒருமுலை குறைத்த திருமா பத்தினி” - சிலம்பின் கட்டுரை காதை.

”இவளோ,
கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;
ஒருமா மணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திருமா மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப” (வேட்டுவவரி).

’திருமா உண்ணி’ நற்றிணை 216-ல் கண்ணகி வருகிறாள். உண்ணி < நுண்ணிய (Cf. உண்ணி கிருஷ்ணன்) என்பது மலைநாட்டு வழக்கு. இன்னலெ < நென்னல் என்பது இன்றைய மலையாளம்.

(5) மணிமேகலை கண்ணகியை வழிபடல்:
---------------------------------------------
கோயில் கொண்ட கண்ணகி சிலையை மாதவியின் மகளான மணிமேகலை வந்து வணங்கி நின்றாள் என்றும், கண்ணகி மணிமேகலைக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்றும் சாத்தனார் எழுதிய மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. அதிலும் சிலம்பில் இருப்பதுபோல, மதுராபதித் தெய்வம் கோவலனின் முன்னோன் பெயர் பரதன் என்றுள்ளது. பத்தினி கண்ணகியைத் தாய் என வணங்கும் மணிமேகலையின் முற்பிறப்பில் பெயர் என்ன தெரியுமா? ”இலக்குமி!” என்று குறிக்கிறாள் சுதமதி. கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் தம் காப்பியத்தில் கண்ணகி என்னும் சமணச்சி மகள் மணிமேகலையைத் (முற்பிறப்பில் மேகலை பெயர் இலக்குமி) புத்த பிக்‌ஷுணியாகப் படைத்தார்.

முடிபுரை:
----------
சிலப்பதிகாரம் இயற்றிய சேரகுலதிலகர் இளங்கோ அடிகள் கண்ணகியை இலக்குமியின் வடிவமாகப் பிறந்தவள் என்றும், அவள் கணவனுக்குக் கண்ணபிரான் பெயராகிய கோவலன்
என்று சூட்டித் தன் ஒப்பற்ற முத்தமிழ்க் காப்பியத்தைச் செய்து தமிழர்க்கு வழங்கியுள்ளார். தமிழகத்தில் கர்ணகி/கண்ணகி 1000 வருடம் முன்னர் திருமாமகளாகவே பார்க்கப்பட்டதால்
அவளுக்குத் தனிக்கோயில்கள் ஏற்படவில்லை போலும். கிராமப்புறக் கோயில்களாக இலக்குமி கோயில்கள் இல்லாமையால், இளங்கோ அடிகள் மறைந்த பல நூற்றாண்டுகள் கழிந்தபின் கண்ணகி பத்தினித் தெய்வத்தின் சில எச்சங்கள் மாரியம்மைக்கும், பகவதி கோவில்களிலும் ஏறியுள்ளன. ஆனால், இளங்கோ அடிகளின் ஆதி காப்பியத்தில் ஏனைத் தெய்வங்களைவிட கண்ணகிக்கும் இலக்குமிக்குமான ஒப்பீடுகளே மிகுதியாக உள்ளன.

நா. கணேசன்
மார்ச் 9, 2009
________________________________________

அன்புடன்,
இராம.கி.

No comments: