Sunday, March 29, 2009

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 6

குருக்கத்திப் பூவும், அதன் இளம் இலைகளும், முதிர் இலைகளும் சேர்ந்து அளிக்கும் தோற்றம், சங்க காலத்தில் இருந்து முல்லைத்திணைப் பாட்டுக்களை ஆக்கிய புலவர்களைப் பெரிதும் கவர்ந்தது போலும். குறிஞ்சிப்பாட்டு 92 ஆம் அடி “பைங் குருக்கத்தி” என்று முதிர் இலைகளைச் சொல்லும். இதே விவரிப்பை இளங்கோ சொல்லுவதைப் பின்னாற் பார்ப்போம். அடுத்து நற்றிணை 96 ஆம் பாட்டின் 5-9 அடிகள்

..................................................மதனின்
துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தியென
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என
வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனிமட மகளே!

என அருமையான காட்சியொன்றை விவரித்துச் செல்லும். மேலே மதன் (= மயக்கம்) என்பதைப் பார்த்தோம் இல்லையா? முதிர்ந்த பச்சை இலைப் பின்புலத்தில், ”மயக்கும் துய்த்தலை இதழோடு (=பஞ்சு போன்ற தூய வெள்ளை நிறம்) காட்சியளிக்கும் குருக்கத்தியையும், பித்திகைப் பூவையும் (=பிச்சிப்பூ, சிறு செண்பகம்) கலந்து வண்டுகள் சூழும் வட்டிலில் வைத்துக் கொண்டு “பூ வாங்கலையோ, பூவு?” என்று கூவிப் போகிறாளே, அந்த உழத்தி!” என்று தலைவி சொல்கிறாளாம். ”துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தி” - என்ன அருமையான தொடர்!

இன்னொரு செய்தியையும் சங்க இலக்கியம் சொல்கிறது. எந்த ஒரு அதிர்ச்சியையும், குருகு இலையும், பூவும், தாங்காவாம். பரிபாடல் 15 ஆம் பாட்டில் 41 ஆம் அடியில், “குருகு இலை உதிர குயிலினம் கூவ” என்று வரும். அதாவது குயிலினம் கூவினாலே, குருகு இலை உதிரலாமாம். இனி நான்மணிக் கடிகையின் 38 ஆம் பாட்டு,

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்.

என்று சொல்லி, ”இடியிடிக்க, மழை பெய்ய, இளஞ்சிவப்புக் குருகு இலை தளிர்க்கவும் செய்யும்” என்று இன்னுமொரு புதலியற் செய்தியைப் புகல்கிறது. இதே செய்தியைக் கார்நாற்பது 27 ஆம் பாடல்,
.
முருகியம் போல் வானம் முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவு எண்ணி
உள்ளாது அகன்றார் என்று ஊடியாம் பாராட்டப்
புள்ளியுள் பாயும் பசப்பு.

என்று சொல்லி “குறிஞ்சிப்பறை போல வானம்முழங்க, இடியிடிக்க, மழை கொட்ட, காட்டில் இளஞ்சிவப்புக் குருகிலை பூத்ததை” அறிவிக்கும். திணைமொழி ஐம்பதின் 30 ஆம் பாடலோ,

அருவி அதிரக் குருகிலை பூப்பத்
தெரியா இனநிறை தீம்பால் பிலிற்ற
வரிவளைத் தோளி வருவார் நமர்கொல்
பெரிய மலந்தது இக் கார்.

என்று சொல்லி, ”அருவி அதிர, இளஞ்சிவப்புக் குருகிலை பூத்துப் போகும்” என்று உரைத்துக் கார்கால மலர்ச்சியை வியக்கும். இதே திணைமொழி ஐம்பதின் 21 ஆம் பாட்டோ,

அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கமழ் கோடல் துடுப்பீனக் காதலர்
வந்தார் திகழ்கநின் தோள்.

என்று சொல்லி, காயாம்பூ மலர்வதையும், ஒளிரும் பெண்களின் முறுவலைப் போல இளஞ்சிவப்புப் குருகிலை பூப்பதையும், குளிர்ந்த, நறுமணம் பொருந்திய வெண் காந்தள் பூப்பதையும் உரைத்து, “உன் காதலர் வந்து விட்டார், இனி உன் தோள்கள் திகழட்டும்” என்று தோழியின் கூற்றைப் பதிவு செய்யும். இதனினுஞ் சிறப்பான பதிவு, தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-379 ஆம் வரிகளில் வரும்.

குறுங் காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார்மணல் நீர்முகத்து உறைப்பப்

”குட்டையான அடிமரம் கொண்ட கரிய காஞ்சி மரத்தைச் சுற்றி, நெடிய குருக்கத்திக் கொடி முதிர்ந்த பச்சை இலைகளோடு படர்ந்திருக்கிறது, முன்னே சொன்னது போல் பூவின் வெளிப்புறத்தில் வரிவரியாய் பூஞ்சை நிறம் படர்ந்திருக்கும் பூக்கள் உதிர்ந்து, கீழே காஞ்சியின் நிழல் படியும் ஆற்றுமணல் நீர்முகத்தில், கிடக்கின்றன. இந்தக் காட்சி எப்படி இருக்கிறதாம். இடியாப்ப வணிகர் பாகொடு பிடித்த இடியாப்ப வட்டம் பாலில் மிதக்கக் காட்சியளிக்கும் கரிய அகலைப் போன்று இருக்கிறதாம். கூடவே திருவெஃகாவின் கிடந்த திருக்கோலத் திருமாலையும் இங்கு நினைவு கொள்ளுவார்.

இந்த விவரிப்போடு குருக்கத்தி பற்றிய எல்லா இணையதளங்கள், பொத்தகச் செய்திகள் ஆகியவை ஆர்வத்தோடு குறிப்பிடும் காளிதாசனின் சாகுந்தல விவரிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் மாமரத்தின் மேல் சுற்றியிருக்கும் குருக்கத்தி, காதலனின் மேல் தழுவியிருக்கும் காதலி போல் தோற்றமளிக்கிறதாம். குருக்கத்திக் கொடியை மாமரத்திற்கு மணஞ் செய்வதாய் முனிபுங்கவர்கள் உருவகஞ் செய்வார்களாம். துசியந்தனைச் சகுந்தலை சந்தித்த பின்னால், ”என் மகளே. நான் தேடிக் கொண்டிருந்த ஆண்மகனை நீ காதலனாகப் பெற்றாய், குருக்கத்திக் கொடிக்குச் சாய்ந்து கொள்ள, எழிலான மாமரத்தைத் தோளாக ஆக்கி மணஞ்செய்து கொடுப்பேன்” என்று கண்வ முனிவர் சொன்னாராம்.

[குருக்கத்தி என்று சொன்னவுடனே, சகுந்தலையும், காளிதாசனும் பற்றி இடைவிடாது ஒருசிலர் சொல்லுவதை நான் குறையென்றும் சொல்லவில்லை. ஆனால் அதற்கு 200/300 ஆண்டுகளுக்கு முந்திய பெரும்பாணாற்றுப் படையும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரும் திருவெஃகா விவரிப்பும் எத்தனை பேருக்குத் தெரிகிறது, சொல்லுங்கள்? குருக்கத்திக் கொடி, மாமரத்தை மட்டும் சுற்றிக் கொள்ளாது. காஞ்சி மரத்தையும் சுற்றிக் கொள்ளும். ஏன், அருகில் வேறு மரங்கள் இருந்தாலும் அவற்றையும் சுற்றத்தான் செய்யும். ஆனாலும் பாருங்கள் தொன்மம், காளிதாசன், வடமொழி ...நாவலந்தீவில் இப்படிப் பாடுவதே பழக்கமாயிற்று. .என்ன சொல்லுவது? [தமிழருக்கோ, தாழ்வு மனப்பான்மை மிகுந்து கிடக்கிறது. எதையும் பேச மாட்டேம் என்கிறோம்.]

இனிக் குருகின் மற்ற தமிழ்ப்பெயர்களைப் பார்ப்போம். குருகு என்னும் பெயரைப் பெண்ணாக்கிக் குருக்கத்தி என்று சொல்வது சொல்வளர்ச்சியின் அடுத்தநிலை. ”குடந்தைக் கிடந்த கோவே! குருக்கத்திப்பூச் சூட்ட வாராய்” என்று சாரங்கபாணியைப் பெரியாழ்வார் (நாலா. 2.7.7) அழைப்பார். ”குருங்கு, குருந்து, குருந்தை” என்ற சொற்கள் குருகின் திரிவு. [குருந்தம் என்னும் வேறொரு மரம் மாணிக்கவாசகரோடு திருப்பெருந்துறைத் தொடர்பு கொண்டது; அதனை இதனோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.] குருங்கொடி, குருதக் கொடி என்பவை குருகில் கிளைத்த வேறு சொற்கள். ”குரிஞ்சான், சிறு குரிஞ்சான்” ஆகியவை இன்னும் மேலெழும் திரிவுகள். ”குருகுக் கோதை” என்பது குருக்கத்தியைப் பெண்ணாக்கும் இன்னொரு சொல் உத்தி, கோதை மாதவி என்பது இரட்டை வழக்கு. மாதவி பற்றி ஏற்கனெவே சொல்லிவிட்டேன். குருக்கத்திப்பூ தன் அழகால், மணத்தால், நிறத்தால், சுவையால் மயங்க வைப்பது. பூ ஊறிய நீர் நொதித்த பின்னால் மது மயக்கம் ஊட்டியதா என்பதைப் புதல்வேதியல் (Phytochemistry) மூலம் தான் சொல்லமுடியும். ஏதேனும் ஆய்வுகள் இருந்தால் தெரியப் படுத்துங்கள். பழம் அறிவைப் புதுப்பிக்கும் தேவை நெடுகவே உண்டு.

குருக்கத்தி மார்ச்சு மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை பூக்கும். சில இடங்களில் பெப்ருவரியிலேயே வெள்ளெனப் பூப்பதும் உண்டு. இது சூழல் பசியப் பசந்து (பசந்தம்>வசந்தம் - இருபிறப்பிச் சொல்) கிடக்கும் காலத்தில் பூப்பதாலும், மல்லிகை போன்று வெள்ளையாய் இதழ்களின் உட்புறம் காட்டுவதாலும், வசந்த கால மல்லிகை என்று சொல்லுகிறார்கள். [முல்> மல்> மல்லி> மல்லிகை = வெள்ளை நிறப்பூ. முல்லை என்னும் விதப்புப் பெயரையும், மல்லிகை என்னும் பொதுப்பெயரையும் குழப்பிக் கொண்டு ஒரு சிலர் சொல்லுவது உண்டு. முல்லையும் மல்லிகையும் மாறி மாறிப் பகரியாய் நாட்டு வழக்கில் உண்டு என்றாலும், மல்லிகை என்னும் பொது மலரினத்தில் முல்லை என்பது ஒரு விதப்பான வகை என்பதை மறக்கக் கூடாது. முல்லையின் மொட்டு, முல்லிக் கொண்டு (முனைந்து கொண்டு) இருப்பதால் அது முல்லை ஆயிற்று. அதை ஊசிமல்லிகை என்று நாட்டுப் புறங்களிற் சொல்லுவதும் இதையே உணர்த்தும். முல்லை என்னும் சொல்லில் வெள்ளை என்னும் பொருள் கிடையாது.] வசந்த கால மல்லிகை என்பது குருக்கத்தியைப் போல முதற் பெயரல்ல. இன்னொன்றை ஒப்பிட்டு எழும் இரண்டாம் வழிப் பெயர். வசந்த கால மல்லிகையைச் சுருக்கி வசந்தி, பின் நீட்டி வாசந்தி என்ற பெயர்களும் குருக்கத்தியையே குறிக்கின்றன.

புண்டரம், புண்டரவம் என்பவை வெள்நீற்று நிறத்தை ஒட்டி எழுந்த சொற்கள். புடம்> புண்டம்> புண்டரம்> புண்டரவம் என்று விரியும். புடம்போடுதல் என்பது எரித்து நீறாக்குதலைக் குறிக்கும். வாலாகினி என்பது வால் என்னும் வெள்ளை நிறத்தில் எழுந்த சொல். வெள்நலங் கொடி என்பதன் பொருள் வெள்ளிடை மலை. நான் சொல்ல வேண்டியதில்லை. எருக்கம் பூவும் வெள்ளை நிறந்தான், எருக்கம் பூவிற்கு ஒப்பிட்டெழும் எருக்கத்தி என்ற சொல்லும் குருக்கத்தியைக் குறிக்கும்.

அடுத்த சொல் சோகை நீக்கி. இதைப் பார்த்துத்தான், ”குருக்கத்திப்பூவில் ஏதோ ஒரு போதைப் பொருள் இருக்கக் கூடுமோ?” என்று தோன்றுகிறது. புதல்வேதியல் (Phytochemistry) தான் இதற்கு விடை சொல்லவேண்டும். குருக்கத்திப்பூவில் ஈர்க்கும் வேதிகள் (chemicals) இருப்பதால் தான் காமுகம், காமகாந்தம் என்ற சொற்கள் ஏற்பட்டனவா என்பதும் ஆய்விற்கு உரியது.

அடுத்த வரிசைச் சொற்கள், குருக்கத்தி இணர்களாய் (=கொத்துக்களாய்) இருப்பதை வைத்து எழுந்த சொற்களாகும். கொத்து>கத்து>கத்தி>கத்திகை, அதித்த கத்திகை அதிகத்தியாகும். மூக்கொலி ஏற்பட்டு அதிகாந்தியும் ஆகும். சுருங்கிப் போய் அதிகம் என்றும் அமையும். இனி மிகுந்த மயக்கத்தைக் கொடுப்பதால் அதிமத்தம், அதிகமாலி என்ற சொற்கள் எழும்.

மொட்டாய் இருக்கும் போது முத்துப் போல் அமைவதால் குருக்கத்திக்கு முத்தகம், அதிமுத்தம், அதிமுத்தகம் என்ற சொற்கள் ஏற்பட்டன.

இன்னும் ”அயந்தனைச் சிந்தூரமாக்கி, கரிப்பாக்குக் கொடி, நாகரி, நாகரு, பன்றிமொத்தை” என்ற சொற்களும் சித்த மருத்துவ அகரமுதலிகளில் இருக்கின்றன. பெயர்க் கரணியம் நான் அறிந்தேனில்லை.

குருக்கத்தியின் பெயர்களை இதுவரை விரிவாகப் பார்த்தோம். ”மாதவி என்ற பெயர் குருக்கத்தியையே குறிக்கிறது என்று எப்படி அறுதியிட்டுக் கூறுமுடிகிறது?” எனில் நாம் சிலம்பில் புறஞ்சேரியிறுத்த காதைக்குப் போகவேண்டும்.

மதுரையின் புறத்திருந்த பார்ப்பனச்சேரிக்கு வந்த சேர்ந்தபின், கண்ணகியையும், கவுந்தியையும் முள்வேலி சூழ்ந்த காவலில் இருக்கச் செய்து, ஒரு நீண்ட பாதையில் போய் அங்கிருந்த நீர்நிலையில் கோவலன் காலைக்கடன் கழிக்க முற்படுகிறான். இதே நீர்நிலைக்கு, ”வருந்துயர் நீக்கு” எனச் சொல்லி மாதவி ஓலை கொடுத்து அனுப்பிய கோசிகனும் வந்து சேருகிறான். கோசிகன் கோவலனை ஏற்கனவே பார்த்திருக்க வேண்டும். ஆனால் கோவலன் கோசிகனை அறியான் போலும். மனத் துயரம், புகாரில் இருந்து மதுரைக்கு நடந்த உடலயர்ச்சி, ஊதுலைத் துருத்தி போன்ற பெருமூச்சு, அழுக்கான மெய், உடை என எல்லாம் சேர்ந்து, கோவலனின் தோற்றுருவை மாற்றிய கரணியத்தால், கோசிகனால் கோவலனைச் சட்டென்று அடையாளம் காணமுடியவில்லை. உறுதிசெய்து கொள்ளும் முகத்தான், கோவலன் கேட்குமாறு ஓர் உரையாடலைத் தான் சாய்ந்திருக்கும் குருக்கத்திக் கொடியோடு கோசிகன் எழுப்புகிறான்.

”கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்று இவ்
அருந்திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே
வருந்தினை போலுநீ மாதவி!” என்று ஓர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக்
கோசிக மாமணி கூறக் கேட்டே (48-53)

என்று புறஞ்சேரியிறுத்த காதையில் வரிகள் வரும். ”குருக்கத்திக் கொடியே! கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய மாதவி போன்று, இந்தக் கொடிய வேனிலில் மலர் களைந்து நீயும் வருந்தினாயோ?” என்று பாசிலைக் குருக்கத்தியின் பந்தரில் சாய்ந்து கோசிக மாமணி கூறக் கேட்டான்.” இங்கே “பாசிலைக் குருகு” என்ற சொல்லாட்சி “பைங்குருக்கத்தி” என்ற சங்க இலக்கியச் சொல்லாட்சியை அப்படியே ஒத்திருப்பதைப் பார்க்கலாம். மாதவி என்ற பரத்தைப் பெயரையும், குருக்கத்தி என்ற கொடிப்பெயரையும் அப்படியே இங்கு பொருத்திச் சொன்ன பிறகும் நண்பர் நா. கணேசன் மாதவிக்கு எப்படி முல்லையைப் பின்புலமாய்ச் சொல்லுகிறார் என்று புரியவில்லை [அதுவும் கிட்டத்தட்ட 8, 9 ஆண்டுகளாக அவர் இந்த ஒப்புமையைப் பல்வேறு குழுமங்களில் சொல்லுகிறார்.]

கோவலன் ~ க்ருஷ்ணன், கண்ணகி<கர்ணகி ~ இலக்குமி என்ற முன்முடிவுடன் வந்து சேரும் நண்பருக்கு, மாதவியை முல்லைக்கு ஒப்பிடுவது ஒருவேளை இயல்பாகத் தெரிகிறது போலும். ஆனால் மாதவி என்ற சொல் முல்லையைக் குறிக்கிறதா? [மோனியர் வில்லியம்சு வடமொழி அகரமுதலி மாதவி என்ற சொல்லால் குருக்கத்தியையே குறிக்கிறது. பெருவாரியான இலக்கியக் குறிப்புக்களும் அப்படியே இருக்கின்றன. முல்லை என்று குறிப்பது யாரோ செய்த தவறான குறிப்பு என்றே நான் எண்ணுகிறேன். ”முல்லை என்பதை மாதவி என்று வடமொழியில் மொழிபெயர்ப்பதுண்டு. உதாரணம்: திருமுருகன்பூண்டி = மாதவிவனம். முல்லைத் தாது மணங்கமழ் முருகன்பூண்டி (சுந்தரர்) முல்லைப் புறவம் முருகன்பூண்டி - அப்பர் தேவாரம்” என்ற கணேசனாரின் கூற்றுக்கு என் மறுப்பு இதோ.

முல்லையையும் முருகன்பூண்டியையும் சுந்தரர், அப்பர் ஆகியோர் இணைத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்பது உண்மை தான். [அப்பர் ஆறாம் திருமுறை 700 ஆம் பாடல் பொது - வெவ்வேறு தலங்களைக் கோத்துச் சொல்லும் திருத்தாண்டகம் “முல்லைப் புறவம் முருகன்பூண்டி”; சுந்தரர் ஏழாம் திருமுறை திருமுருகன் பூண்டி பற்றிய 499 ஆம் பாடல் “முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்”.] இது ஒரு பக்கம். அதே பொழுது முல்லை என்பதை மாதவி என்று யாரோ மொழிபெயர்த்திருக்கிறார்கள் -. இது இன்னொரு பக்கம். ஆனால் சுந்தரரும், அப்பரும் முருகன் பூண்டியை மாதவிப் புதலோடு இணைத்திருக்கிறார்களா, என்றால் இல்லை.

நண்பர் நாக. கணேசனுக்குத் தெரிந்த ஒப்பீட்டையே இங்கு பார்ப்போம். தேவாரத்தில் மயிலாடுதுறை இறைவி அஞ்சொலாள் என்று சொல்லப்படுகிறாள். (சில பதிப்புக்களில் அஞ்சலாள் என்றும் இருக்கிறாள்.) - இது ஒரு பக்கம், அஞ்சலாள் என்பதை அபயாம்பிகை என்று யாரோ மொழிபெயர்த்திருக்கிறார்கள் - இது இன்னொரு பக்கம் இதைப் பார்த்த நா.க. ”இரண்டும், இரண்டும் நாலு” என்று நகர்ந்து போனாரா? இல்லையே? ”இன்னின்ன பதிப்புக்களில் அஞ்சொலாள், இன்னின்னவற்றில் அஞ்சலாள். அஞ்சொலாள் என்பது இந்தக் கரணியங்களால் சரி. எனவே இங்கே எழுத்துத் திரிவு நடந்திருக்கிறது. அஞ்சொலாளை அபயாம்பிகை என்று பிணைத்தது தவறு” என்று சொல்லவில்லையா? அது போலத்தான், இங்கும்.

அவிநாசியில் இருந்து 5. கி.மீ. தொலைவுள்ள முருகன் பூண்டியின் தல வரலாற்றில் ஒரு தொன்மச் செய்தி வருகிறது. ”துர்வாசர் என்ற முனிவர் கற்பகவுலகில் இருந்து மாதவிச் செடியை (குருக்கத்தியை) இங்குக் கொண்டு வந்தார். எனவே மாதவி வனம்.” [பக்கம் 793-795, திருமுறைத் தலங்கள் - பு.மா. ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 2001 - அருமையான விவரமான நூல்] எனவே மாதவி வனம் என்ற காரணப் பெயர் குருக்கத்தியை வைத்தே வந்திருக்கிறது. முல்லையை வைத்து அல்ல. குருக்கத்தியும், முல்லையும் ஒரே ஊரில் பூத்துக் கிடந்த காலம் போய், தேவாரக் காலத்தில் குருக்கத்தி அருகி, முல்லை பெருகிப் பூத்திருக்கலாம். அதனால் அப்பரும், சுந்தரரும் முல்லையையே சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள். தேவார காலத்திற்குப் பிற்பட்ட யாரோ ஒரு பெருகபதி (ப்ரஹஸ்பதி) முன்னால் இருந்த குருக்கத்திப் பெருமையை அறியாமல், முல்லைக்கும் மாதவிக்கும் முடிச்சுப் போட்டிருக்கிறான். அதை உண்மையென்று எண்ணி நா. கணேசன் போன்றவர்கள் தவறான அடையாளங்களில் மயங்கிப் போகிறார்கள்.

திருக்கருகாவூர் (தஞ்சையில் இருந்து 20 கி.மீ. கும்பகோணம் போகும் வழியில் ஆவூருக்கு அருகில் உள்ள ஊர்) முல்லைவனம் என்றும், கூடவே மாதவிவனம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அதே பொழுது முதலாம் இராசராசனின் கல்வெட்டில் “நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர்” என்று இந்தத் தலம் குறிக்கப் படுவதைப் பார்த்தால் ஆவூர்க் கூற்றத்தில் உள்ள குருகு + ஆவூர் = குருகாவூர்>கருகாவூர் என்றாகியிருக்கும் பட்டுமை (possibility) தெரிகிறது. இந்தத் திரிவு தேவார காலத்திற்கு முன்னேயே ஏற்பட்டிருக்கலாம். இந்தப் பட்டுமை மற்ற சான்றுகளால் உறுதி செய்யப் படவேண்டும்.

இன்னுமொரு கோயில் திருவாரூருக்கு அருகில் உள்ள நன்னிலம் பெருங்கோயில். இங்கே ”வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம்” ஆகியவை தலமரங்களாய் இருந்ததாகவும், இப்பொழுது வில்வம் மட்டுமே உள்ளதாகவும் சொல்லப் படுகிறது. ஆனாலும் ஊருக்கு மதுவனம் என்ற பெயர் இருக்கிறது. மதுவுக்கும் குருக்கத்திக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தால், சற்று ஓர்ந்து பார்க்க வைக்கிறது. என்றாலும் முடிவிற்கு வர அதிகத் தரவுகள் வேண்டும். [ஆனாலும் முல்லை இங்கு சற்றும் சொல்லப் படவே இல்லை.]

முடிவாக, மாதவி = குருக்கத்தியின் இணை பல்வேறு கூறுகளில் வெளிப்படுவதால், பிறந்த போது “வெளிறிய சிவப்பு அல்லது பூஞ்சை நிறத்தவளாய்” மாதவிப் பெண்ணாள் இருந்திருக்க வேண்டும், எனவே ”நிறத்தையும் பார்த்துக் குருக்கத்தியை நினைத்து மாதவியென்று பெயரிட்டார்களோ?” என்றும் சொல்லத் தோன்றுகிறது. முல்லைத் திணையில் குருக்கத்திப்பூ விதப்பானது. முல்லைத் திணையில் காதல் வயப்படும் பெண்டிருக்கு குருக்கத்தி நினைவு வராமற் ஓகாது. மயக்கம் தருபவள் என்னும் பொருளும் மாதவி என்னும் பெயருக்கு அணி சேர்க்கிறது. இளஞ்சிவப்புக் குருகிலை, ஒலி ஆரவாரத்தில் சட்டென்று பூப்பது, தளிர்ப்பது, எனப் பல புதலியற் செய்திகளும் இதையே குருக்கத்தியைப் பரத்தைப் பெண்ணுக்கு ஒப்பிட்டு நினைவூட்டுகின்றன.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இடியாப்ப வணிகர் பாகொடு பிடித்த இடியாப்ப வட்டம் பாலில் மிதக்கக் காட்சியளிக்கும் கரிய அகலைப் போன்று இருக்கிறதாம். கூடவே திருவெஃகாவின் கிடந்த திருக்கோலத் திருமாலையும் இங்கு நினைவு கொள்ளுவார்//

ஹா ஹா ஹா!
அடுத்த முறை இடியாப்பம் சாப்பிடும் போது, கிடந்த கோலம் தான் ஞாபகத்துக்கு வரப் போகுது-ன்னு நினைக்கிறேன் இராம.கி. ஐயா!

குறுங் காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
என்று பாட்டிலேயே ஒரு ஓவியம் வரைந்து காட்டுகிறாரே உருத்திரங் கண்ணனார்! அருமை!

குருக்கத்திக் குறிப்புகள் பலவும் அருமை!
சிலம்பில் மாதவி=குருக்கத்தி என்று காட்டப்படும் இடத்தைச் சுட்டிக்காட்டியதும் பொருத்தமே!

பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லையில் குருக்கத்தி மலரில் தோன்றியதாகச் சொல்லுவார்கள்!

மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் - என்ற திருப்பாவை வரிக்கும், பெரியவாச்சான் பிள்ளை குருக்கத்தியைத் தான் காட்டுகிறார்!

திருச்சிரபுரத்து சம்பந்தர் தேவாரத்திலும்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே - என்று குருந்தொடு மாதவி என்றே வருகிறது!