Sunday, March 29, 2009

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5


அடுத்தது மாதவி. இவள் புகார்க் காண்ட முக்கோணத்தின் மூன்றாம் முனை, அதோடு காப்பியத்தையே கிடுக்கும் முனை. இவள் பெயர்க் கரணியம் சொல்ல இரண்டு பகுதிகள் ஆகும்.

பழந்தமிழிலக்கியம் ஒர் ஆட்டக்காரியைப் பரத்தை என்று கூறும். [’விறலி’ என்பது சற்று வேறுபட்டது.] இச் சொல்லிற்கு 2 பொருட்பாடுகள் உண்டு. முதற் பொருள், பரத்தில் (மேடை) ஆடும் பெண் பரத்தை (= மேடைக்காரி) என்பதாகும். நாட்டம், நாட்டியம், நாடகம், நட்டம், நட்டணம், நடனம், நடம், நடை, கூத்து, தூக்கு, தாண்டவம், படிதம் எனப் பல்வேறு சொற்களும் தமிழில் வேர் கொண்டவை. மற்றை நாட்டியங்களைப் பார்க்கப் பரத்தையின் நாட்டியம் விதப்பான கூறுகளையும், ஒழுங்குகளையும் கொண்டதால் (இவற்றை சிலம்பின் அரங்கேற்றக் காதை விவரிக்கும்.), பரத்தை நாட்டியம்> பரத்த நாட்டியம் (=மேடை நாட்டியம்)>பரத நாட்டியம் ஆயிற்று என்பார் சொல்லாய்வர் பேரா. ப.அருளி. 

நாட்டியக் கலை, தெற்கிருந்து, வேத நெறிக்கு மாறானவர்களால், வளர்த்தெடுக்கப் பட்டது என்றே பல வல்லுநரும் கருதுகிறார். [சங்க காலத்தை ஒட்டி எழுந்த ஸ்ம்ருதிகளும், சங்கத வியாகரண நூல்களும் நாட்டியத்தையும், அதைக் கற்றவரையும், இழிவு படுத்தியே கூறின. குடிலனின் அர்த்த சாற்றமும் அப்படித்தான் கொள்கிறது. (பரதக் கலைக்களஞ்சியம் - கலைமாமணி எஸ்.என். ஸ்ரீராமதேசிகன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 2001).]

பின்னால், வடபுலத்து எழுந்த சமயப்பூசலால், வேதநெறியர் தெற்கே நகர்ந்து, (இப்படித் தெற்கு நகர்ந்தது மூன்று முறையாவது நடந்திருக்க வேண்டும் என்பார் வரலாற்று ஆசிரியர் ந.சுப்பிரமணியம். (The Brahmin in the Tamil Country, Ennes Publications, 1989) இங்கிருந்த அரசர், வணிகரைச் சார்ந்து, வேத நெறி பரப்பியபோது, தென்னக நடைமுறைகளுக்கு ஏற்பத் தம் கொள்கைகளில் சில மாற்றங்கள் கொண்டுவர நேர்ந்தது. அவற்றில் ஒன்று பரத்தையர் பற்றிய கருத்து. அரசர், வணிகருக்குப் பாங்கராய், அரச/பரத அதிகாரத்திற்கு நயன்மை (நீதி) சொல்பவராய், பார்ப்பனர் ஆன பின்னால், அரசர்/வணிகர் - பரத்தையர்/கிழத்தியர் ஆகியோர் இடையாட்டத்திலும், இங்கிருந்த புலவர்/பாணரைப் போல, இடைப்பாங்கராய் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. ”தலைமாந்தரிடையே ஊடலும், பிரிவும் நடந்து, வருத்தம் தொடர்ந்த நிலையில், அரசர்/வணிகர், பரத்தையர்/கிழத்தியர் என இரு சாராரும் ஒரு காலத்தில் பார்ப்பனரையே யோசனைக்காக நாடியிருக்கிறார். [இன்றுங் கூட சோதியம், கோயிலிற் பரிகாரம் என்று பலரும் பார்ப்பனரை நாடுகிறாரே, அதைப் போல.]

சிலம்பில் தலைமாந்தரிடையே நடந்த அத்தனை ஆட்டங்களிலும், பார்ப்பனரே பாங்கராய் வருவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். இவ் வழமையைப் பார்த்தால், வேத நெறித் தாக்கம் அரசர் - பரதரிடம் அதிகம் இருந்திருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

”நடுகற்களுக்கும், இறையுருக்களுக்கும் முன்னிகழும் வேலன் [இன்று வேளார் எனப்படும் குயவர்] வெறியாட்டம்-படையலைக் காட்டிலும், விரிவாய், அலங்காரமாய், புகைமருட்டிற் செய்யப்படும் பார்ப்பன வேள்விகளும், இனம் புரியாத மொழியில் சொல்லப்படும் மந்திரங்களும் தமக்கு மேலும் நல்லதைச் செய்மோ?” என உயர்சாதியர் நம்பத் தொடங்கிய காலத்தில், ஏற்கனவே தமிழ்க் குமுகாயத்தின் பூசாரிகளாய் இருந்த தமிழ் மறையோர்- அறிவரின் தாக்கம் கொஞ்சங் கொஞ்சமாய் குறையத் தொடங்கியது. இப் போட்டியில், தமை நிலைத்துக் கொள்ளும் முகமாய், தம்மோடு முரண்பட்டுக் கிடந்த தமிழகக் கலை, பண்பாடு / பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, வேதநெறியாளர் நெகிழ்ந்து கொடுக்க முனைந்தார். ஏற்கனவே பரத்தைக் கூத்தோடு முரண் பட்டு, ஸ்ம்ருதிகள், வியாகரணங்கள் செய்த இகழ்வை ஒதுக்கி வைத்து, சமனிலைக்கு நகர்ந்து வந்து ”பரத முனிவர் வடக்கிருந்து வந்தார், அவரே நாட்டியத்திற்கு முதலில் சாற்றம் எழுதினார்” என்று புதுக்கதை எழுப்பியது இப்படி நிகழ்ந்ததே. பரத்தை நாட்டியக் கலை வடமொழித் தோற்றம் கொண்டதும், நாளடைவில் அக்காலப் பரத்தையருக்கு வடமொழி அறிவு தேவைப்பட்டதும், பார்ப்பனரே இடையாட்டங்களில் இருந்ததும், இயல்பாய் ஏற்பட்டவையாகும்.

”பரத்தை”யின் இரண்டாம் பொருள்: முறையான வரைவை (திருமணத்தை) மீறிப் பரகுவதால், பரவுவதால் (=பழகுவதால்), பரத்தை [”வரைவின் மகளிர்” என்ற புதுச் சொல்லை வள்ளுவர் உருவாக்குவார்] என்ற சொல் இங்கே எழுந்தது. சிலம்பில் வரும் மாதவி பொதுப் பரத்தையல்ல. இற்பரத்தை (concubine). [இந்தக் காலத்தில் வேடிக்கையாய்ச் சொல்லப்படும் சின்ன வீடு.] சிலம்பை ஆழ்ந்து படிக்காத பலரும் மாதவி ஓர் இற்பரத்தை என்று உணர்வதில்லை. ”அவள் விலைமகள்” என்று சொல்லியே நிலைப்பாடு கொள்வார். ஆனால், காப்பியம் முழுவதும் ”தான் கோவலனின் காதற் கிழத்தி, ”இற்கிழத்தி இன்னொரு பக்கம் இருக்கிறாள்” என்ற முழு உணர்வோடு மாதவி செயற்படுவாள். [கண்ணகியும் கூடப் பொருபொருத்த மரியாதையோடு, மாதவியை நடத்தியிருக்க வேண்டும் என்றே காப்பியத்தின் வாயிலாய்ச் சுற்றி வளைத்து உணருகிறோம். இருவரும் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டும், உறுத்திக் கொண்டும் இருந்திருக்க வேண்டும். ஒருவேளை, காதற் கிழத்திக்கு மகள் பிறந்ததும், தனக்கு மகவில்லாமற் போனதும், கண்ணகியைச் சற்று அதிகமாகவே உறுத்தியிருக்கலாம். கணவனைக் கேட்க முடியாது போனதற்கு அதுவுங் கூடக் காரணமாகலாம்.]

இனி மாதவியின் பெயர்க் கரணியத்திற்கு வருவோம்.”வானுலக அரம்பையர் செய்கையோடு பொருந்திய பிறப்பு” எனச்சொல்லி ”பெருந்தோள் மடந்தை; பூ அவிழும் சுருட்டை மயிர், மாதவியின் பெயர்” என்ற விவரிப்போடு, ”ஆட்டக்காரி” யாய் அரங்கேற்ற காதையில் இவள் அறிமுகப் படுத்தப் படுகிறாள். ”ஆடல், பாடல், அழகு” என மூன்றிலும் குறைபடாமல், ஐந்து அகவையிற் தண்டியம் பிடித்து, பன்னிரண்டாம் ஆண்டில், சூழ்கழல் மன்னர்க்குக் காட்டல் வேண்டி, மாதவி நாட்டிய அரங்கேறுகிறாள். “தலைக்கோல் எய்தி, தலையரங்கு (=வேந்தனின் அரங்கு) ஏறி, விதிமுறைக் கொள்கையால், ஆயிரத்தெண் கழஞ்சும் பெறுகிறாள். பின் அதை மாலை யாக்கி, நகர நம்பியர் திரியும் மறுகில், பகர்வனர் (பகர்ச்சி = price) போலும் பான்மையில், கூனி கை கொடுத்து, நிறுத்துகிறாள். இதற்கு அப்புறம்,

“மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கோவலன் தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்தென்

என்று முடிகிறது காதை. ஆடல், பாடல், அழகு எனத் தொடங்கிய பொதுவிவரிப்பு பின்னால் காப்பியத்துள் விதப்பாய்ப் பெருகுகிறது. முதலில் வருவது மேல்வரும் கண் விவரிப்பே.
“பெரிய, மலர்போன்ற, நெடுங்கண்ணை உடையவள்” என்று சொல்லும் போது,
”கண்ணகிக்குச் சொன்ன அதே உவமையா?” என்று நமக்குத் தோன்றுகிறது. “மாமலர் நெடுங்கண் மாதவி” என்னும் விவரிப்பு 3.170, 6.174, 8.16, 8.118 ஆகிய இடங்களிலும் வரும்.

”மாநெடுங் கண்” என்பது கண்ணகிக்கும், மாதவிக்கும் ஒன்றேபோல் இருந்த சிறப்புப் போலும். ஓர் ஆடவன் ஒருத்தியிடம் இருந்து இன்னொருத்திக்குத் தாவும் போது, பெண் இருவருக்கும் இடையான ஒப்புமைதானே, முதலில் அவனைப் பார்க்க வைக்கும், இல்லையா? மற்ற அழகுக் கூறுகள் அதற்குப் பின்னால் ஈர்த்ததால், கோவலன் மாதவியோடு பல காலம் தங்கிவிடுகிறான். முடிவில் முழுதாக மாதவியிடம் மயங்கி அயர்கிறான். அந்த மயக்கம், மாதவி என்னும் பெயரிலேயே, தொடங்குகிறது. எப்படி என்று பார்ப்போம்.

முல் என்னும் வேர் ”கூடல், குவிதல், கலத்தல், கலங்கல், காணல், பொருத்தல், மூடல், பற்றல், ஒன்றல், உறழ்தல், திரளல்” ஆகிய துறைகளைச் சார்ந்து சொற்களை உருவாக்குவதைப் பாவாணர் தம் “முதற்றாய் மொழி” யில் விளக்குவார். கலத்தற் துறையிலிருந்து கலங்கற் துறை பிறக்கும். கலக்கத்திற்கு ஏதுவாகப் பல பொருள்கள் உண்டு. கலத்தல், கலங்கலாகும். கலங்கலைக் குழம்பு என்றும் நாம் சொல்லுகிறோம் அல்லவா? கலங்கலின் அடுத்த நிலை மயக்கம்.

முல்> முள்> முய> முயங்கு> மயங்கு> மயக்கம் என்ற வளர்ச்சி இங்கு நினைக்கற் பாலது. முயங்கலில் இருந்து மயங்கல் வருவது நுணுகிய வளர்ச்சி. மயக்கம் பல்வேறாகும். ஒரு வேற்றுமையுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல் வேற்றுமை மயக்கமாகும். ஒரு திணைப்பொருள் மற்றொரு திணை நிலத்திற் கலத்தல் திணை மயக்கமாகும். மெய்ம்மயக்கம், காதல் மயக்கம், குடி மயக்கம் என வெவ்வேறு மயக்கங்களை நாம் அறிவோம் இல்லையா? இனி,

முல்>மல்>மல>மல-த்தல் = மயங்குதல். [”கண் மலந்து கிடக்கிறதே? அடிபட்டதோ?”]
மல> மலங்கு>மலக்கு> மலக்கம் = மயக்கம் [”என்ன ஆயிற்று, இப்படி மலங்கிக் கிடக்கிறாள்?”]
மலங்கு>மதங்கு>மதக்கம் = மயக்கம் [”நல்ல குடி போலிருக்கிறது, மதக்கம் தலைக்கு ஏறிருச்சு”. மதக்குதல் = மயக்குதல்]
மல> மலை> மலை-த்தல் = மயங்குதல் [”என்ன மலைச்சு நிக்குறீங்க, உறுதியோடு இருந்தா, செய்ஞ்சுடலாம்”]
மல>மலம்>மதம் = மயக்கம் [”யானைக்கு மதம் பிடித்திருக்கிறது”.]

மல்>மால் = மயக்கம், காதல், பித்து [பெரிய திருமொழி 2.7.7 -இன் இரண்டாம் வரி: ”மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்யவல்ல என் மைந்தா!” மால் செய்தல் = மயக்கம் செய்தல்.]
மால்>மாலம் = மயக்கும் வித்தை, பொய்நடிப்பு (”அவளைப் பார்த்தியா? கள்ளி.... எல்லாம் நடிப்பு, மாய்மாலம்”)
மால்>மாலை = இரவும் பகலும் கலக்கும் அந்தி வேளை; ஒளி மயங்கும் நேரம். [பிற்பகல் 6-இல் இருந்து 10 மணிவரை. நம்மில் பலரும் பிற்பகல் 4 மணிப் பொழுதை, மாலை என்று சொல்லித் திரிகிறோம். பழந்தமிழர் புரிதலின் படி அது தவறு. பிற்பகல் இரண்டில் இருந்து ஆறு மணி வரை உள்ள பகற்பொழுதுக்கு ”எற்பாடு” என்று பெயர் (எல் - சூரியன்.- படும் நேரம் எற்பாடு). அந்தச் சிறுபொழுதின் பெயரையே தொலைத்துவிட்டு, இந்தக் காலத்தில் பிறசொற்களைக் கடன்வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் சொல்ல முற்படுபவரை, மொழிவெறியர் என்ற குற்றமும் சாட்டுகிறோம்.]

மதம்>மத்தம் = பித்து, மயக்கம்; உன்மத்தம் என்பது கடும் பித்து; உன்மத்தம்>ஊமத்தை
மத்து>மத்தன்>மதன் = மயக்கம் [நற்றிணை 97.5]

மல= மத>மது = கள், தேன் [பலரும் ’மது’வை வடசொல் என்றே எண்ணிக் கொள்கிறார்கள். உண்மையில் அது நல்ல தமிழ். ’மது’ வடசொல்லெனில், மேலே சொன்ன ’மல்’ வேர்ச்சொற்கள் பலவும் தமிழென்று சொல்லவியலாது. மொழியியலில், பொதுவாய் இணைச்சொற்களின் கூட்டம், வேர், வளர்ச்சி, சொல்லாட்சிக் காலம், ஆகியவை பார்த்தே ”ஒரு சொல் இயற்சொல்லா, அன்றிப் பிற சொல்லா?” என்று ஆய்கிறோம். தமிழ்ச் சொல்லைத் தனியே பார்த்து வடசொல்மூலங் காட்ட விழைவோர், அவக்கரம் (=அவசரம்) காட்டாது, சற்று பொறுத்து, சீரான நடைமுறையைக் கொண்டால் அவர்களுக்கு உண்மை புரியும். அதற்கு மேல் சொல்ல என்னிடம் ஏதும் இல்லை.]
மது>மத்து>மட்டு = கள், தேன்
மத>மதி = மயக்கந் தரும் நிலவு [மேலைச் சிந்தனையிலும் luna வை lunacy யோடு தொடர்பு படுத்துவதைப் பார்த்தால், மதியின் பொருள் புரிபடும். பூரணை நிலவு, மனவெழுச்சிக்குத் தூண்டுதலாய் இருப்பதாய்த்தான் அறிவியல் கூறுகிறது.]
மதி>மாதம் = நிலவை வைத்து கணிக்கப் படும் காலச் சுழற்சி. [குறிலிற் தொடங்கும் சொல், நெடிலாய் நீண்டு, இன்னொரு சொல் புதுக்குவது தமிழுக்கும் உண்டு, வடமொழிக்கும் உண்டு.]
மது>மதுர்>மதுரி மதுரித்தல் = இனித்தல்; கள்ளில் இருந்து களித்தல் ஏற்படுவது போல், இங்கு மதுரில் இருந்து மதுரித்தல் ஏற்படுகிறது.
மதுர்>மதுரம்>மாதுரம் [அதி மதுரம் என்பது சித்த மருத்துவத்தில் உள்ள இனிப்பான, நறுமணப் பூண்டு வகை.]
மாதுர்>மாதர் = காதல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம், உரியியல், 322, “மாதர் வண்டொடு கரும்பிசைத்தது என்றக்கால் காதல் வண்டு என்பதாம்” என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டு தருவார்; காதலும் களிப்பு, மயக்கம் தானே? மதுவில் இருந்து பிறந்த ”மாதர்” எனும் சொல் அப்படித்தான் காதலைக் குறிக்கிறது.]

மது>மதுகம் = இலுப்பை ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை” என்பது பழமொழி. கரும்பு விளையா இடத்தில், இலுப்பைப்பூவை இனிப்பாய்ச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. இந்தக் காலம் போல, வெல்லம், சர்க்கரை, கற்கண்டு பெறமுடியாக் காலத்தில், இலுப்பை மரங்கள் பாலை நிலத்தில் பெரிதும் இருக்கும். இலுப்பைப் பூ இனிப்பிற்குப் பகரியாய் அமைவது இப்படியே. இன்றையச் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு காலத்தில் இலுப்பை மரங்கள் மிகுதி. இப்பொழுது குறைந்துவிட்டன. காரைக்குடி இருவாய் நிலையத்திற்கு (Railway) மிக அருகில் இலுப்பைக்குடி என்ற ஊர் உண்டு. (நகரத்தாரின் ஒன்பது குலக்கோயில்களில் இதுவும் ஒன்று.) சில சிவத்தலங்களின் தலமரமாய் இலுப்பை இன்றும் உண்டு. (வைத்தீசுவரன் கோயிலுக்கு அருகில் ”பழமண்ணிப் படிக்கரை” என்னும் ”இலுப்பைப் பட்டு”, கொங்குநாட்டில் ”கொடிமாடச் செங்குன்றூர்” எனும் ”திருச்செங்கோடு”, ஆகிய தலங்களில் இலுப்பையே தலமரம் ஆகும்.) மதுசத் துருமம், மதுத் துருமம், மதுத் தூரு என்ற கலவைச் சொற்களும் இலுப்பை மரத்தையே குறிக்கும். மதுகம்> மதுவம்> மாதவம் = இலுப்பை [மதக்கும் (=இனிக்கும்,களிக்கும்) பூவைத் தரும் மரம் மாதவம்.] மதுக என்னும் பெயர் இலுப்பைக்குச் சங்கதத்திலும் உண்டு. மாதுகம், மாதூகம், மாவகம் என்ற திரிவுகளும் உண்டு. மதுக என்ற பெயரைக் கேட்கும் பலரும் உடனே ”சங்கதம் முதல், தமிழ் பின்” என்றே சொல்ல முற்படுகிறார்கள். கொஞ்சம் ஆய்ந்து பார்த்தால், உண்மை புலப்படும். Madhuca Indica என்பது இதன் புதலியற் பெயர்.

காய்ந்த இலுப்பைப் பூவை நீரில் ஊறவும், பின் நொதிக்கவும் வைத்துக் கிடைக்கும் மதுவை இன்றும் நடு இந்தியாவில் பழங்குடியினர் குடிக்கிறார்கள். மதுவிற்குரிய எல்லாக் குணமும், நொதித்த இலுப்பைப்பூ நீருக்கு உண்டு. வெறியத்தின் (alcohol) செறிவு வேண்டுமானால் மாறியிருக்கலாம். இலுப்பைப்பூவை, கரடி, முள்ளம்பன்றி, மான் ஆகியவை விரும்பிச் சாப்பிடுமாம். கரடியின் வயிற்றிற்குள் சேரும் இலுப்பைப் பூ, அதன் இரப்பையில் நொதித்து, கரடியைக் கள்ளுண்டது போல் நடந்து கொள்ள வைக்குமாம். மதுகம், மாதவம் என்ற பெயர்கள் இலுப்பைக்கு ஏற்பட்டது நொதித்த இலுப்பைச் சாறு மயக்கம் தரும் கரணியம் பற்றியேயாகும்.]

ஆக, மயக்கம் கொடுக்கும் பூவைத் தருவது மாதவம்; காம மயக்கம் தருபவள் மாதவி. பரத்தையர் குலத்தில் காமப் பெயர் வைப்பது முற்றிலும் பொருத்தமே. அதுவும் மாதவியை வைத்துப் பெரும்பொருள் சேர்க்க நினைத்த சித்திராபதி, தன்மகளுக்கு மாதவி எனப் பெயர்வைத்தது முற்றிலும் இயல்பானதே.

சரி, மாதவி என்ற பெயரின் சொற்பொருள் புரிகிறது; ஆனால் அது குறிக்கும் பருப்பொருள் தான் என்ன? இலுப்பைப் பூவா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும். இங்கே குருக்கத்தி என்னும் வேறொரு பூ பருப்பொருளாகிறது. குருக்கத்தியை வாயிற் போட்டு குதப்பினாலும், இலுப்பையைப் போல் இன்சுவை கிடைக்கத்தான் செய்யுமாம். ”குருக்கத்திப்பூ ஊறிய நீரையும் நொதிக்க வைத்து மதுவாக்கலாமா?” என்றால் எனக்குத் தெரியாது. நாட்டுப்புறத்துப் பட்டறிவுகளைத் தொகுத்தோர், அல்லது சித்த மருத்துவக்காரர், என யாரோ தான் சொல்ல வேண்டும். இந்தக் கேள்விக்கு விடை கிடப்பது மாதவியின் பெயர்க்காரண ஆய்விற்கு மேலும் அணி சேர்க்கும்.

இன்றையப் புதலியல் (botany) குருக்கத்தியை Hiptage benghalensis (Linn.) என்று சொல்லும்; இதற்குப் பகரியாய், Hiptage madablota Gaertn. Kurz, Gaertnera racemosa Roxb என்றும் கூடப் பெயர் சொல்லுகிறார்கள். குருக்கத்தியில் செடி, கொடி என இருவகையுண்டு. “தமிழ்நாட்டுத் தாவரங்கள்” என்ற நூலில் திரு. ச.சண்முகசுந்தரம் [படிக்க வேண்டிய நூல். மெய்யப்பன் தமிழாய்வகம், 2002) இதை மாதவிக் குருக்கத்தி என்று சொல்லும். நமக்கு முகன்மையான குருக்கத்திப் பூக்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு விவரிப்பார்.

”குருக்கத்திப் பூக்கள் மார்ச்சு தொடங்கி செப்டம்பர் வரையிலும் கொனைகளில் [=இலை, தழை, பூங்கொத்து ஆகியவை முடிவுறும் நுனிப் பகுதி] அல்லது கட்கத்தில் [=தண்டிற்கும் அதனின்று தோன்றும் கிளை மற்றும் இலைக்கும் இடையே உள்ள சந்து மூலை] கொத்துக்களாய்ப் பூக்கும். இந்தப் பூக்களின் குறுக்களவு 0.5 முதல் 0.75 அங். வரை இருக்கும். பூவின் 5 இதழ்களில் 4 வெண்மையாகவும், ஒன்று மட்டும் வேறு (சிவப்பு மற்றும் மஞ்சள்) நிறத்துடனும், நறுமணத்துடன் இருக்கும். ”குருக்கத்தி எல்லா மலைக்காடுகளிலும் சிறப்பாக ஓடைகளின் அருகில், (சமவெளித் தோட்டங்களில் வளர்ப்பாக) 4500 அடி வரையில் காணப்படும்”

மருத்துவர் தாமோதரனாரின் “செந்தமிழ்ச் சித்தர்களின் மருத்துவ அகராதி” ”குருக்கத்திப் பூவை உட்கொண்டால் சிர ரோகம், தாகம், சிலேட்டுமம், பல்விஷம், பித்தம், விரணம் ஆகியவை போகும்” என்று சொல்கிறது. கூடவே குருக்கத்திப்பூ கைப்பும், மதுரமும் சேர்ந்து இருக்கும் என்று அதன் சுவை பற்றி அறிகிறோம். பூவின் வளர்ச்சியைப் பொறுத்து, மதுரச் சுவை கூடும், குறையும் போலும். பூங்கொடிப் பதிப்பகத்தின் “மூலிகைக் களஞ்சியம்” என்னும் நூலில் மருத்துவர் திருமலை நடராசன், பூவின் சுவை சிறிது கைப்பும், சிறிது இனிப்பும் கொண்டதாகவே சொன்னாலும், இந்தப் பூவை இனிப்பெனவே வகைப்படுத்துவார். குருக்கத்திப் பூவை உட்கொண்டால், ”குளிர்ச்சியுண்டாக்கும், இளைப்பாற்றும்” என்றும் சொல்லப் படுகிறது. மேலே மருத்துவர் தாமோதரனார் சொன்ன நோய்கள்,
”குருக்கத்திப்பூவை குடிநீரில் இட்டு ஊறவைத்துக் குடித்துவரக் குணமாகும்” என்றும் அறிகிறோம்.

இந்திய மொழிகளிலேயே அதிகமான குருக்கத்திப் பெயர்கள் தமிழிற் தான் உண்டு. ”குருவும் கெழுவும் நிறனா கும்மே” என்பது தொல்காப்பியம் உரியியல் 786 ஆம் நூற்பா. அகரமுதலிகளிற் குருவிற்கு வெள்ளையும், சிவப்பும் விதப்பான பொருளாய்ச் சொல்லப் படும். வெளியே பூஞ்சையும் (pink), சிவப்பும் வரிக்கோலம் போட, உட்பக்கம் முற்றிலும் வெள்ளையிற் துலங்கி, ஓரிதழில் மட்டும் மஞ்சட் தெறிப்புக் காட்டும் இந்தப் பூவின் அழகும், நறுமணமும் யாரையும் கவரும். [உடனுள்ள படத்தைப் பாருங்கள்] அந்த கவின் நிறமே ”குருகு” என்னும் பெயரைப் பூவிற்குக் கொடுத்தது போலும். [வெள்நாரையைக் குருகு என்பதையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம். செங்கால் நாரை மனம் கவரும் இல்லையா?]

பூக்களைப் பற்றி மேலே பார்த்த நாம் இலைகளின் சிறப்பையும் தெரிந்து கொண்டால், பின்னால் இலக்கியச் சான்றுகளை அடையாளம் காணமுடியும். குருக்கத்தி இலைகள் 4 முதல் 7 அங். வரை பெரிதாக, மண்டிலமாக (மண்டிலம் என்பது இலைவடிவம் பற்றிய கலைச்சொல். கோள்களின் பாதையை ஒத்த இருமுனை கொண்ட நீள்வட்டம்.) முரப்பாக (முரப்பு என்பது தொடுவதற்குத் தோலின் பதத்தில் கடிதாக என்று பொருள்.), மேனி வறியதாக, மேற்புறம் பளபளப்பாக, தண்டில் இருந்து கணுவாய்களின் [கணுவாய் = ஒன்று, அல்லது அதற்கு மேற்பட்ட இலைகள் இணையப்பெற்ற கொப்பின் பகுதி] இருபக்கம் இரட்டையாய் முளைவிட்டுத் தோன்றும். இந்த விவரிப்பையும் ச.சண்முகசுந்தரத்தின் நூலிற் காணலாம். [கிட்டத்தட்ட அ.தி.மு.க. வின் இரட்டையிலைச் சின்னம் போல இதை எண்ணிக் கொள்ளலாம்.] குருக்கத்தியின் இளங்குருத்து இலைகள் இளஞ் சிவப்பு நிறத்திற் தொடங்கி முதிர்ச்சியடையும் போது கொஞ்சங் கொஞ்சமாய் பச்சைக்கு மாறும். எனவே குருக்கத்தி இலைகள் தளிர்ப்பதும் பூத்தல் என்றே பழந்தமிழ் இலக்கியங்களிற் சொல்லப் படுகிறது.

அன்புடன்,
இராம.கி

No comments: