இனி இராம.கி..யின் மறுப்பு.
திரு.நா.க. எடுத்துக் கூறும் ”கர்ணக” என்ற சொல்லிலிருந்தே தொடங்கலாம். மோனியர் வில்லியம்சு அகரமுதலி அதற்கு pericarp of a lotus என்று பொருள் தந்து, இந்தச் சொல்லாட்சி மகா பாரதத்திலும், பாகவத புராணத்திலும் இருப்பதைக் கூறும். [வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றில் இந்தச் சொல்லாட்சி கிடையாது போலும்.] பாகவத புராணம் என்பது தெற்கே இருந்து எழுதப் பட்டதாகவே பலரும் சொல்கிறார்கள். அதன் காலம் கி.பி. 650 - 1000 க்குள் இருக்கக் கூடும். சில அறிஞர்கள் பாகவதத்தின் ஆசிரியர், நாதமுனி காலத்தவர் என்றும், தென்னாட்டின் ”பத்தி” இயக்கச் சாரத்தைச் சங்கதத்தில் பதியவே, பாகவதம் எழுந்தது என்றும், அதன் நடை வேத நடை போற் தொனித்தாலும், மற்ற சான்றுகளை வைத்துப் பார்க்கையில், அது வேத காலத்தில் எழ வாய்ப்பே இல்லை என்றும் சொல்லுகிறார்கள். (Daniel Sheridan, The Advaitic Theism of the Bhagavata Purana, South Asia Books, 1986)
தென்னாட்டில் எழுந்த சங்கத நூலில் தென்னிந்தியச் சொல்லாட்சிகள் பலவும் ஊடுறுவப் பெரிதும் வாய்ப்புண்டு. அடுத்து, பாரதக் கதை கி.மு. 800 களில் இருந்தே துணைக் கண்டம் எங்கணும் சிறிது சிறிதாகப் பரவி யிருந்தாலும், மகா பாரதத்தின் முதற் பதிப்பு பெரும்பாலும் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்றும், இன்றைக்கும் இருக்கும் வடிவில் இறுதிப் பதிப்பு வந்தது கி.பி. 4 ஆம் நூற்றாண்டு என்றும் தான் அறிந்தவர் சொல்லுகிறார்கள். அதாவது 800 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாய் மகாபாரத்துள் இடைச்செருகல்கள் இருந்திருக்கின்றன. [விக்கிபீடியா அப்படித்தான் சொல்லுகிறது.]
”கர்ணக என்ற சொல் சங்கதத்துள் எப்போது வந்தது?” என்று கேட்டால், கி.மு.800-ல் இருந்து கி.பி.400-க்குள் எப்பொழுது வேண்டுமானாலும் வந்திருக்கலாம் என்றே சொல்ல முடியும். அதே பொழுது, ”அச்சொல்லைக் கேட்டவுடனேயே, வடமொழி என்று எப்படிச் சிலர் உறுதியாய்க் காட்டுகிறார்கள்?” என்று எனக்குப் புரியவில்லை. தமிழென்று வந்தால் ஆயிரம் சான்றுகளைக் கேட்கிறோமே? (அப்படிக் கேட்பதில் கொஞ்சங் கூடத் தவறில்லை.) அதே அளவிற்கு வடமொழிச் சான்றுகளைத் துழாவுகிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை. ஏன் ஆய்வாளர்கள் சங்கதச் சான்றுகளின் முன்னால் அமைதியாக இருக்கிறோம்? அதற்கு உரியவர்களைக் கேள்வி கேட்கலாமே? வேண்டுமானாற் சொல்லுகிறேன், உங்கள் காதைக் கொடுங்கள், ”மோனியர் வில்லியம்சில் தாமரைப் பொகுட்டைக் குறிக்கும் கர்ணகா என்ற சொல்லிற்கு வேரை அடையாளம் காட்டவே இல்லை.”]
கருணிகை என்ற சொல்லைத் தமிழ் அகரமுதலிகள் ”பூவினிற் கொட்டை, தாமரைப் பொகுட்டு, காயின் நெற்று” என்ற பொருள்களில் பதிவு செய்திருக்கின்றன. பூவினிற் கொட்டை, காயின் நெற்று ஆகியவை சங்கதத்தில் இல்லாப் பொருட்பாடுகள். [சூரிய காந்திப் பூவின் நடுவில் இருப்பதும் கூடக் கருணிகை தான்.] இவற்றை ஓர்ந்து பார்த்தால், சொல்லின் வேர் தெற்கே இருப்பதற்கே வாய்ப்பு உண்டு என்று புரியும். குல்>குரு>கரு என்ற சொற்பிறப்பில் கருத்தல் என்ற வினை வித்துதற் பொருளைச் சுட்டும். கருத்தலின் பெயராய்க் கருணம்> கரணம் என்பது அமையும். கருத்தல் = செய்யுதல் என்ற பொருளில் கரணியம், கருமியம் என்ற தமிழ்ச்சொற்கள் “காரண - காரியங்களைக்” குறிக்கும். நெற்றும் கூட ஒரு விதையே. கொட்டை என்பது விதைகளைக் கொண்டது. தாமரை மலரின் இதழ்கள் காய்த்து விழுந்த பின்னும், தாமரைப் பொகுட்டு தன் புதலில் (=தாவரம்) நிலைத்து நிற்கும். பின்னால், முதிர்ச்சியடைந்த பொகுட்டில் குழிவுகள் ஏற்பட்டு, உள்ளிருக்கும் முற்றிய, கரும் பழுப்பு (black brown) நிறம் பெற்ற விதைகள், குழிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரிந்து, பொகுட்டுத் தண்டோடு வளைந்து கீழ்நோக்கித் தொங்கும் போது, நீருக்குள் விழுந்து மண்ணில் நான்றிக் கொள்ளும். கருணிகை என்பது விதையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு கொட்டை. அது தாமரையிலும் உண்டு. கை என்பது குறுமைப் பின்னொட்டு (Diminutive suffix) [காட்டு: குடி> குடிகை> குடிசை]
இதே போலக் கன்னுதல்>கன்னித்தல் என்ற வினை, கருத்தலைக் குறிக்கும். கன்னித்தல் என்பது பழுத்தலைக் குறிப்பது இதன் தொடர்ச்சி தான். கனி என்ற சொல் இதன் வழி பிறக்கும். கன்னித்தலைச் சங்கதம் ஜனித்தல் என்று உள்வாங்கிக் கொள்ளும். கன்னுதல்>கன்னித்தலில், உள்ள ககரத்தைப் போக்கி, ஈனுதல், ஈனித்தல் என்பவை எழுந்து, பிள்ளை பெறுதலைக் குறிக்கும். கன்னிகை என்ற சொல் பிள்ளை ஈனக் கூடிய பெண்ணை மட்டும் அல்லாமல், விதை தரும் தாமரை மொட்டையும் குறிக்கும் என்றே தமிழ் அகரமுதலிகள் பதிவு செய்கின்றன. இங்கும் கை என்பது குறுமையைக் குறிக்கும் ஈறு.
மொத்தத்தில் கருணிகை, கன்னிகை ஆகிய இரண்டுமே அகரமுதலிகளில் பதிவுற்ற நல்ல தமிழ்ச் சொற்கள். இவை இரண்டிற்கும் சங்கதத்தில் வேர் தேடிக் கொண்டிருந்தால் கிடைக்காது.
சரி, நிகண்டுகளையும் பார்ப்போமா? தாமரைக் கொட்டையின் பெயராகச் சூடாமணி நிகண்டு ”பொகுட்டு, கன்னிகை” என்பவற்றைத் தரும். கண்ணிகை/கண்ணகி என்ற சொல் அங்கு இல்லை. திவாகரம் 833 ஆவது நூற்பா, ”பொகுட்டே, பூவினுள் கொட்டை ஆகும்” என்று குறிக்கும். பொகுட்டு, தாமரைக்கு மட்டும் விதப்பானது அல்ல, இந்த நூற்பாவின் பாட வேறுபாடாய், ”பொகுட்டே கன்னிகை, பூவினுட் கொட்டை” என்றும் சொல்லப் பட்டிருக்கும். இது போக, திவாகரத்தின் 835 ஆம் நூற்பா,
முகை, நனை, கலிகை, முகிழ், சினை, கோரகம்,
நகை, கன்னிகை, போகில், அரும்பு, மொட்டே
என்றும் சொல்லும். ஆகக் கன்னிகை என்பது பொதுவாய் மொட்டைக் குறிக்கும் என்றே அறியப் படுகிறது; தாமரைக்கென விதந்து சொல்லப் பட்டது அல்ல.
சரி, ஒரு பேச்சுக்குக் கர்ணி என்பதைச் சங்கதச் சொல் என்றே கொள்ளுவோமே!. இப்பொழுது, கர்ண என்பதைத் தமிழில் எப்படி எழுதுவீர்கள், கன்னன் என்றா, கண்ணன் என்றா? சத கர்ணி என்பதை ”நூற்றுவர் கன்னராய்” ஆக்கிய இளங்கோ, அதே முறையில் ”கர்ணகி” என்ற சொல் சங்கத மூலம் என்றால் ”கன்னகி” என்று தமிழிற் சொல்லாமல், ”கண்ணகி” என்று எழுதுவாரோ? உருப்படியான, இலக்கணம் தெரிந்த, இருமொழி இடையாட்டம் புரிந்த, ஓர் இலக்கியவாதி என்று கூடவா இளங்கோவடிகளை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்? கர்ண என்பது மூலமானால், ஓரிடத்தில் கன்னர் என்றும், இன்னோரிடத்தில் கண்ணகி என்றும் சொல்வது எப்படி? ஏதோ ஒன்று, உதைக்கிறது அல்லவா? எனவே, கர்ணக - சங்கதச்சொல் என்னும் முதற் கருதுகோள் தவறு தானே?
கண்ணகிக்கு மூலமாய்க் கர்ணகியைச் சொல்லி, பின் தாமரை மொட்டைக் கொண்டுவந்து, அது இலக்குமியைக் குறிக்கும் ஸ்ரீ என்று சுற்றி வளைத்துத் தொடுத்து, விண்ணவக் குறியீட்டை ஏன் இங்கு சுட்ட வேண்டும்? உலகையே கண்ணன் மூலம் பார்க்க விழையலாம் தான். இருந்தாலும், அதற்கு ஒரு வரைமுறை இல்லையா? நம் உகப்பை இளங்கோவின் மேல் ஏற்றினால் எப்படி?
இலக்குமி என்பவள் செல்வத்திற்கான குறியீட்டைக் குறிப்பவள். அந்தக் குறியீடு விண்ணவத்திலும் உண்டு. செயினம், ஆசீவகம் ஆகிய மற்ற நெறிகளிலும் உண்டு. [ஆசீவகனான மாநாய்கனுக்கு இலக்குமி ஒன்றும் வேண்டாத தெய்வம் இல்லை. ஆசீவகம், செயினம் ஆகியவற்றின்படி, இலக்குமியும் ஓர் இயக்கி தானே? செயினனான மாசாத்துவனுக்கும் (முடிவில் புத்த நெறியாளனாகிப் போனான்) இலக்குமியின் பெயர் ஒன்றும் ஏற்க முடியாதது இல்லை. கோவலனின் சமயத்தை நம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. அவன் காதற் கிழத்தியும், மகளுமோ புத்தசமயம் புகுகிறார்கள். ஆழ்ந்து பார்த்தால், அந்தக் குடும்பம் சமயப் பொதுமை கொண்டதாகவே தென்படுகிறது. இப்படி இருந்தும் அந்தக் குடும்பத்திற்கு விண்ணவச் சார்பை ஏன் கொணர வேண்டும்? “நாவல்” எழுதுபவராய் இருந்தால் இளங்கோவடிகள் எல்லோரையும் ஒரே சமயத்தவராய்க் காட்டிப் புகழ் பாடியிருக்கலாமே?] இன்றைக்கும் கூட விண்ணவனை வணங்காத, அதே பொழுது சிவ வழிபாட்டில் பெரிதும் ஆழ்ந்திருக்கிற, நகரத்தார் வீடுகளில் பாடுவார் முத்தப்பரின்
காடுவெட்டிப் போட்டு கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு
அன்றைக்கு வந்தவெங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு.
என்ற செல்வ நிலைப்புப் பாட்டு, இலக்குமியை வேண்டியே சொல்லித் தரப்படும். அது தெரியாத அகவை மூத்தோர் செட்டிநாட்டில் இருக்க மாட்டார்கள். இலக்குமி, அலர்மேல் மங்கை (அலமேலு என்று சுருக்கிச் சொல்லுவார்கள்) என்ற பெயர்கள், வழிவழியாய் வந்து, நகரத்தாரிடம் இன்றும் பரவலாகப் புழங்குபவை. இவை விண்ணவத்தால் தூண்டப்பட்டவை அல்ல. எனவே
போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதேத்தம் வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர் மன்னுங் கண்ணகி என்பாள் மன்னோ?
- மங்கல வாழ்த்துப் பாடல் (26-29)
என்று சிலம்பின் மங்கல வாழ்த்துப் பாடலில் வருவது வியப்பே இல்லை. ”போதில் ஆர் திரு” என்பது ”அலர்மேல் மங்கை” தான். இங்கே ஒப்புமையை ஒப்புமையாய்ப் பார்க்காமல், கண்ணகியை அலர்மேல் மங்கையின் அவதாரம் என்பது ஓர் உயர்வு நவிற்சியாய், உங்கள் பொருளை இளங்கோவின் மேல் ஏற்றிச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணியாய்த் தோன்றவில்லையா?
இந்த மங்கல வாழ்த்துப்பாடல் அடிகளில், வந்திருந்த மாதர்கள் சொல்கிறார்களாம்: “இவள் அலர்மேல் மங்கையின் வடிவம் போல இருக்கிறாள், அருந்ததியின் திறம் கொண்டவளாய் இருக்கிறாள்”. இத்தோடு மங்கல வாழ்த்தில் நிறுத்தவில்லை. ”சாலியொருமீன் தகையாளை (51)”, ”அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை (63)” என்றும் இளங்கோ சொல்லுகிறார். மொத்தம் மூன்று தடவை அருந்ததிக்கு இணையாக இளங்கோவடிகள் கண்ணகியை வைக்கிறார். உடனே அவளை அருந்ததியின் அவதாரம் என்று சொல்லிவிடலாமா? கண்ணகி இலக்குமியின் அவதாரம் என்பது உண்மையானால், எந்தப் புலவராவது, (அல்லது எந்த ஆழ்வாராவது) வேறொரு ஒப்புமையை ஊடே செய்வார்களோ? அது விண்ணவ மரபாகுமோ? அப்படி இருக்கிறது என்றால் என்ன பொருள்? கண்ணகி அவதாரமில்லை; அவள் வெறும் மாந்தப் பெண். அவளை மற்றோரோடு ஒப்பிடுவது மக்களிடையே இருக்கும் ஒரு பொதுப் பழக்கம், அவ்வளவு தான். அதற்கு மேல் வரிப் பிளந்து பொருள் கொள்வதிற் பயனில்லை.
இன்னொன்றும் சொல்ல வேண்டும். இலக்குமி ஒளியின் வடிவம்; பொன்னிறத்தவள். அதனாற்தான் பெருமாள் கோயிலில் தாயாரின் திருமுன் பொற்சுண்ணம் தருகிறார்கள். தாயார் திரு முன் பொற்சுண்ணமும், ஆண்டாள் திரு முன் குங்குமமும் கொடுப்பதைத் தலைகீழாய்ச் செய்யும் முட்டாள்ப் பட்டர்கள் இன்று மிகுந்து போனது வேறு கதை. அது இங்கு வேண்டாம்.) பொதுவாய் மஞ்சள் என்பது தமிழரிடையே மங்கலத்தின் அடையாளம். எந்த நிறத்தாளும் மஞ்சள் பூசிக் கொண்டால், இலக்குமியின் களை, அழகு, ஆகியவை வந்து விடுவதாக தமிழர்கள் நம்புகிறார்கள்.”மஞ்சள் பூசி, இலக்குமி மாதிரி இருக்கிறாள்” - எத்தனை முறை பெண்கள் வாய்களில் கேட்டிருப்போம்? ஆனால் கண்ணகி மஞ்சள் நிறத்தவளா என்றால் இல்லை. மனையறம் படுத்த காதையில் கண்ணகியின் நிறம் தெளிவாகச் சொல்லப் படுகிறது.
மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞை நின்
சாயற்கு இடைந்து தண்காண் அடையவும் (53-54)
மேலே உள்ள சாயல் எனும் சொல் நிறத்தைக் குறிக்கிறதா என்று புரிய இரண்டு அடிகளையும் சேர்த்துப் படித்து ஓர்ந்து பாருங்கள். சாயலின் மற்ற பொருட்பாடுகள் இங்கு வர வாய்ப்பே இல்லை. கண்ணகியின் சாயலைப் பார்த்து ”மாயிரும் பீலி மணிநிற மயில்” ஒன்று, இடங்கிக் கொண்டு காட்டிற்குப் போனதாம். அப்படியென்றால் என்ன பொருள்? கண்ணகி கருப்புத் தான். ஆனால் அழகு கொழித்து ஈர்க்கும் கருப்பு. (கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு......என்ற திரைப் பாட்டு நினைவுக்கு வருகிறதா?) அதைப் பார்த்து மணிநிற மயிலே வெட்கப் பட்டு காட்டிற்கு ஓடிவிட்டதாம். இது போகக் காடுகாண் காதையில் ”புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்” என்ற 199 ஆம் அடியில் அவள் காட்டுமயிலின் சாயல் கொண்டவள் என்றே சொல்லப் படுகிறாள். ஆண்மயில் தான் நீல நிறங் காட்டும். பெண்மயில் கருப்புத்தான் ஐயா? [ஆனால் முழுக் கருப்பு அல்ல.]
எங்கள் ஊர்ப்பக்கம் இப்படி ஈர்க்கும் கருப்பை மாநிறம் என்பார்கள். மாநிறம் என்பது அட்டக் கருப்பில்லை. ஆனால், வைத்த கண் வாங்காமல், ஒரு கணம் பார்க்க வைக்கும் கருப்பு. சற்று மஞ்சள் ஊடோடும் கருப்பு. மாங்கொழுந்து பார்த்திருப்பீர்களே? கருப்பு, புகர், குரால், சிவப்பு, மஞ்சள் எல்லாம் கொஞ்சமாய்க் கலந்த நிறம். அது தான் மாநிறம் என்று சுருக்கமாய்ச் சொல்லப் படுகிறது. கண்ணகி நிறம் அதுவாய் இருக்கவே வாய்ப்புண்டு. [இலக்குமி அவதாரங்களில் பொன்னிறம் இல்லாமல் ஏதும் உண்டோ? அவளுக்கு மாங்கொழுந்து நிறம் சுட்டுவார்களோ? [எட்டு இலக்குமி வடிவுகளிலும் கூட 4 பொன்னிறம், 1 தளிர் நிறம், ஒன்று மஞ்சள், ஒன்று வெள்ளை, ஒன்று செந்தாமரை என்றே காட்டுவர்.]
சிலம்பின் புகார்க் காண்டத்தில் மூன்று தலைமாந்தரிடையும் நிறம் பற்றிய தமிழரின் உளச் சிக்கல் உள்ளூர நிலவுகிறது. கண்ணகி மாநிறம், கோவலன் செவ்வை, மாதவி வெளிறிய சிவப்பு. அதற்குரிய சான்றுகளைக் கீழே தருகிறேன்.
அன்புடன்,
இராம.கி
No comments:
Post a Comment