அடுத்து, கோவலன் என்னும் பெயரைப் பார்ப்பதாகச் சொன்னேன். காப்பியம் எங்கணும் கோவலன் என்ற பெயரே, ஒரே ஒரு இடத்தைத் தவிர, பயிலப் படுகிறது; அந்தப் புறனடை அடைக்கலக் காதையில் 93-94 ஆம் வரிகளில் மாடலன் சொல்வதாக வருகிறது.
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவ (93-94)
இங்கே ”மாமணிக் கொழுந்து” என்பது கண்ணகியைக் குறிக்கிறது. “விருத்த கோபால” என்பதற்கு ”அறிவால் முதிர்ந்தவனே” என்று உரையாசிரியர்கள் பொருள் தருகிறார்கள். ”அறிவு என்பது இந்த வரிகளின் ஊடே எப்படி வந்தது?” என்று புரியவில்லை. ”அறிவு” என்ற கருத்தைத் தவிர்த்துப் பார்த்தால், அதோடு ”விருத்த கோபால” என்பது இளங்கோவின் சொல்லாட்சியெனில், ”கோவலன் கிழவன், கண்ணகி இளையோள்” என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், கண்ணகியைக் காட்டிலும் 4 அகவை மூத்தவனை ”விருத்த கோபால” என்று இளங்கோ சொல்லுவானோ? மாட்டான், எனவே விருத்த கோபாலனை ஆழ்ந்து ஆயவேண்டியிருக்கிறது. “அறிவு” என்னும் தொடர்பையும் பார்ப்போம்.
”மணிமேகலைக்குப் பெயரிட்ட போது, கோவலன் கொடுத்த கொடை, தானங் கேட்ட பார்ப்பனனை யானை இடற முயன்ற போது, கோவலன் காப்பாற்றியது, ’இனி நீயே பிழைத்துக் கொள், என்னை நாடி நிற்காதே’ என்று ஒரு பார்ப்பனன் தன் மனைவிக்குக் கொடுத்த வடமொழி வாசக ஓலையைக் கோவலன் வாங்கிக் கொண்டு பார்ப்பனிக்குப் பணங் கொடுத்துக் காப்பாற்றியது” என்று மூன்று கொடை நிகழ்ச்சிகளைக் கூறிய மாடலன், அதைத் தொடர்ந்து மேலும் கொடைநலம் பாராட்டாது, “அறிவு முதிர்ந்த கோபால” என்று சொல்லுவது ”இடம், பொருள், ஏவற்” பொருத்தம் இல்லாது தோற்றுகிறது. [அறிவுத் திறன் நாட்டிய கதைகளைச் சொல்லி ”அறிவில் முதிர்ந்தவனே!” என்று சொன்னால் அதிற் பொருளிருக்கிறது. ஆனால் அப்படியில்லை.]
அதிலும் பார்ப்பனியைக் காப்பாற்றும் நிகழ்ச்சிக்கு முன்னால், அவள் கணவன் தவிக்க விட்டு ஓலை கொடுத்த கதை, ”பஞ்ச தந்திரத்தில்” வருகிற, கற்றோர் பலரும் அறிந்திருக்கக் கூடிய, அன்றையப் பொதுக் கதை. அதைக் பிய்த்துக் கொண்டு வந்து, இங்கு ஒட்டி, பார்ப்பனியைக் கோவலன் காப்பாற்றுவதாகச் சொல்லுவது இளங்கோவின் நம்பகத் தன்மையை பெரிதும் குலைக்கிறது. ”வேறொரு பொதுக் கதையைக் கொண்டு வந்து அதை முடிப்பித்தவன் தன் கதைத் தலைவன்” என்று பொருந்தச் சொல்லுவது இளங்கோவின் எழுத்து நேர்மைக்குப் பொருந்துமா? இளங்கோ எழுத்துத் திருட்டாளியா? இல்லையே?
[கதையைச் சொல்லுவது தவறில்லை. ”அந்தக் கதையைத் தன் தலை மாந்தனே முடித்தான்” என்று இளங்கோ சொல்லியிருந்தால் அது பெரும் இழுக்கு.] இந்த வரிகள் ”இளங்கோவின் வரிகள் தானா?” என்று நம்மை வியக்கவும், மருளவும் வைக்கின்றன. ஒருவேளை கம்பராமாயணத்தில் சடையப்ப வள்ளலைச் சிறப்பிக்கும் முகமாக இராமனின் முடிசூட்டு விழவில் ”வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி” என்று கம்பன் பாராட்டியது போல், பொதுக்கதையைக் கோவலனோடு ஒட்டிவைத்துக் கோவலனின் கொடையை இளங்கோப் பாராட்டினானோ, என்னவோ? அல்லது இப்படி ஒரு கதையைக் கோவலனோடு ஒட்டியது இளங்கோ அல்லாத பின்னொருவர் இடைச்செருகலா? [அழற்படுகாதையில் இது போன்ற பிற்காலச் சாதிக் குமுகாய வழக்குகளைப் புகுத்திய அளவிறந்த இடைச்செருகல்களை வேங்கடசாமி நாட்டார் தன் உரையில் குறிப்பிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.] மொத்தத்தில் ”விருத்த கோபால” என்ற விளி இளங்கோவோடு பொருத்தமில்லாத படி தொங்கி நிற்கிறது.
கோவலன் முன்னால் செய்த கொடைச் செய்திகளைக் கூறும் இடத்தில், ”கொடைமடத்தில் சிறந்த கோவலனே!” என்று கூறுவதில் பொருளிருக்கிறது. அதை விடுத்து, “அறிவு முதிர்ச்சி” என்ற பொருளில் ”விருத்த கோபால” என்று சொல்வது, ஏதோ இடறல் என்றே தோற்றுகிறது. ஒருவேளை, ஏட்டுப் படி எடுக்கையில், ஏற்பட்ட முறை தெரியா இடைச்செருகலாய்க் கூட அது இருக்கலாம். அன்றேல், ஓரோவழிப் பார்ப்பனர் வழக்காயும் இருக்கலாம். பொது வழக்கில், கோபாலன் என்பது இளங்கோவின் பயன்பாட்டாய் இருந்தால், காப்பியத்தில் வேறு எங்கணுமே அதைப் பயன்படுத்தாதது நமக்கு வியப்பையே அளிக்கிறது. இத்தனைக்கும் யாப்பு தவறாமல் ”கோவல” என்றே அங்கு இளங்கோ பயின்றிருக்க இயலும் நிலையில், ஏன் ”கோபால” என்று பயன்படுத்தினான்? அதன் தேவை என்ன? - என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. [கோபால என்பதை சிலம்பு அல்லாத மற்ற ”கோவலன் - கண்ணகிக் கதைகள்” பயன் படுத்தியிருப்பதைப் பின்னால் பார்ப்போம்.]
{இங்கு ஓர் இடைவிலகல். ஓரெழுத்து, ஈரெழுத்தை மாற்றி, எத்தனை சிவன் கோயில்களின் இறைவன், இறைவி பெயரை சங்கதமாக்கி ”அம்புலிமாமா கதை” பின்னியிருக்கிறார்கள்? திரு. நா. கணேசனுக்குத் தெரியாததா, என்ன? மயிலாடுதுறை அஞ்சொலாளை, ஓரெழுத்து மாற்றம் கொடுத்து, அஞ்சலாள் என்று ஆக்கிப் பின் ”அபயாம்பிகை” என்று மொழிபெயர்த்ததை அவரும் தமிழ் கூறு நல்லுலகிற்கு விரிவாக எடுத்துரைத்திருக்கிறாரே? நானும் சிலவற்றை இங்கு சொல்ல விழைகிறேன்.
தில்லையில் இருக்கும் நடவரசன் கோயில் என்பது மூன்றாம் நூற்றாண்டு வாக்கில், பழைய திரு மூலத்தானத்திற்கு அருகில் இருந்த சிறிய அம்பலம். அதை அந்நாளிற் சிற்றம்பலம் என்றே சொன்னார்கள். பின்னால் காலப்போக்கில், பேரரசுச் சோழர் ஆதரவில் அது பேரம்பலம் ஆயிற்று, பொன்னம்பலமும் ஆயிற்று. [தீட்சிதர்கள் இப்பொழுது சொந்தம் கொண்டாடுவதைத் தூக்கியெறியுங்கள். தில்லைக்”கோயில்” பேரரசுச் சோழரின் பெரும்பணி.] சிற்றம்பலம்> சித்தம்பரம்> சிதம்பரம் என்று ஆக்கிப் பின் சித் + அம்பரம் என்று பிரித்து ”ஞான ஆகாசம்” என்று பொருள் சொல்லி, அங்கே ஆகாச பூதம் இருப்பதை நுழைத்து, எப்படியெல்லாம் இன்று புது விளக்கம் சொல்லப் படுகிறது? ஊற்றுகை (origin) என்னவோ சிற்றம்பலம் தான், எவ்வளவு முயன்றாலும் சிதம்பரம் இல்லை.
கோடிக்கரைக்கு அருகில் மரை மான்கள் உலவிய மரைக்காட்டை ஓரெழுத்துத் திரிவில் மறைக்காடாக்கி, வேதாரண்யம் என்று மொழிபெயர்த்து, என்னவொரு கதை?
நாவல் மரக்காட்டுக்குள் இருந்த நாதரை நாவல்கா நாதர் என்று சொல்லுவது இயல்பான முறை. அதைச் சரியாகத் தான் ”ஜம்புகேஸ்வர” என்று வடமொழியில் மொழிபெயர்த்தார்கள். பின்னால் பேச்சுவழக்கில் மடைத்தேற்ற (metathesis) முறையில் திருநாவல்கா> திருவாநல்கா> திருவானக்கா> திருவானைக்கா என்றாகிப் பின் ”ஆனை வந்தது, நீரூற்றி வழிபட்டது, இறைவன் மகிழ்ந்து போனார்” - என்றெல்லாம் விளக்கம் சொல்லுவது இன்னும் ஒரு கதை.
ஐம்பூதங்களின் வடிவில் இலிங்கத்தைப் பார்க்கும் தொன்மத்தில் கால் (>காற்று) என்பதற்கான தலம் திருக் காலத்தி. இதையும் ஓரெழுத்துத் திரிவில் திருக் காளத்தி ஆக்கி அதை ஸ்ரீ + காளம் + அஸ்தி என்று பிரித்து, ”சிலந்தி, பாம்பு, யானை முதலிய மூன்றும் வழிபட்ட இடம்” என்று பொருந்தச் சொன்னது இன்னொரு கதை.
வேல மரங்கள் மிகுத்துக் கிடந்த காடு திரு வேற்காடு. அதில் இருந்த நாதர் வேற்காட்டு நாதர். (ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால், விருது பட்டி விருது நகர் ஆனது போல்) [லகர/தகரப் போலியில்] வேலக்காட்டை வேதபுரியாக்கி, வேதம், வேலமரங்களாய் வந்து வழிபடும் ஈசர் என்று பொருள் சொல்லி - இப்படியும் ஒரு கதை.
ஆகக் கதை, கதையெனப் பல தலங்களிலும் இறைவன், இறைவி, இடங்களின் பெயர்கள் திரிந்து கொண்டே போகின்றன. எல்லாம் அடிப்படைச் சொல்லின் ஓரிரு எழுத்துக்களை மாற்றி அமைத்துக் கொண்டு அமைந்தவை. இது போன்ற காட்டுக்களைக் காட்டிக் கொண்டே போகலாம். அப்படித்தான் இருக்கிறது இந்தக் கோபாலன்>கோவலன் என்னும் பொருத்தமும், அதுவும் ஒரேயொரு எடுகுறிப்பை (reference) நம்பி.}
இனிக் கோவலன் என்ற சொல்லை மாட்டோடு தொடர்புறுத்தும் பொருளுக்கு வருவோம். தமிழில் ஆயர் என்பவர் இடையர், கோவலர், அண்டர் என்று மூன்று விதமாய் பிரிக்கப் படுவர். இதில் கோவலர் என்பது மாட்டைக் குறித்துக் கீழே உள்ளது போலவே தமிழில் அமையும்.
கோ>கோவு (பசு மாடு)>கோவல் (மாட்டு மந்தை) + அர்
இங்கே முகன்மையானது மந்தை என்னும் பன்மைப் பொருள். ”மாட்டு மந்தை வைத்திருக்கிறவன், மாட்டு மந்தைக்குச் சொந்தக் காரன்” என்ற ஒரு பொருளை ”கோவலன்” என்ற தமிழ்ச் சொல் காட்டும். கோவலர் என்பது கோவலனின் பன்மை. இந்தப் பொருளில் ஆனால் பன்மையில் மட்டுமே, தன் காப்பியம் எங்கணும் இளங்கோ பயன்படுத்துகிறான். [அதே பொழுது கோவலன் என்ற சொல்லிற்கு இது மட்டுமே பொருளல்ல.] கோபால என்னும் வடமொழிச் சொல் சற்று நுண்ணிய அளவில் வேறுபடும். மாட்டைப் “பரிபாலிக்கிறவன்” கோபாலன். இங்கே மந்தை இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்; வெறும் ஒற்றை மாடு கூட இருக்கலாம். ஆனாலும் ”கோவலன், கோபாலன்” என்ற இரண்டையும் ஒன்றிற்கொன்று சமனாகப் ”பத்திக்” காலத்தில் இருந்து பலரும் பாவித்து இருக்கிறார்கள். [சங்க காலத்தில் நானறிந்த வரை கோவலன் என்ற சொல்லே பயன்பாட்டில் இருந்திருக்கிறது. கோபால என்ற சொல் புழக்கத்தில் இல்லை. ஏதேனும் புறனடை இருந்தால் தெரிவியுங்கள். “விருத்த கோபால” என்பது இளங்கோவின் சொல்லாட்சியானால், தமிழிலக்கியத்தில் அதுவே முதல் சொல்லாட்சியாய் இருக்க வாய்ப்புண்டு.] கோவலன் = மாட்டு மந்தைக்குச் சொந்தக் காரன் என்ற பொதுப்பொருளை ஆயர்பாடிக் கண்ணனுக்கு ஏற்றியது, பொதுப்பெயரை தனியாளுக்கு விதப்பாய்ச் சொல்லும்
பழக்கத்தால் என்றும், கோவலன் என்ற சொல் கண்ணனுக்குப் பகரியாய் வந்தது பொருள் நீட்சியில் என்றும் உணர்க.
[கண்ணன் என்பது க்ருஷ்ணன் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து எழுந்தது என்று ஒரு கருத்து மின்தமிழ் மடற்குழுமத்தில் எழுந்தது. ஆடிப் போனேன். இப்படியாகத்தான் சொற்பிறப்புக்கள் பார்க்கப் படுமானால், நான் இந்தக் கட்டுரைத் தொடர் எழுதுவதில் பொருளில்லை. ”எல்லாமே சங்கதத்தில் இருந்து கடன்பெற்றது; தமிழில் ஒன்றுமே இல்லை” என்று ஏற்றுக் கொண்டு நான் போய் விடலாம். ”கருப்பன்” என்னும் சொல் தமிழா, இல்லையா? ”கருவேல மரம்” தமிழா, இல்லையா? அடுக்கிக் கொண்டே போகலாம் கல் என்னும் வேரில் இருந்து கருமைப் பொருளில் ஆயிரக் கணக்கில் தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. (கல் எனும் வேரிற் பிறந்த சொற்களைப் பற்றி நான்கு பெரும் பொத்தகங்களே போட்டிருக்கிறார் பேரா. கு.அரசேந்திரன்.) அவற்றை எல்லாம் அப்புறம் வடமொழி என்று சொல்லவேண்டும். (கல் என்னும் வேரில் இருந்து கல்>கரு>கருநன்>கண்ணன் என்று பெயர் எழுந்ததாகத்தான் தமிழ்ச் சொற்பிறப்பு சொல்லுகிறது. உருநம்>உண்ணம் என்பது போல. உண்ணம் = உருமம் என்னும் வெய்யில் வேளை, மத்திய உண்ணம் = மத்தியாண்ணம் என்ற கலப்புச்சொல்லில் உண்ணம் என்ற தமிழும் இருக்கிறது.) கருத்தவன் தன் நிறத்தைச் சொல்லிக் கொள்ளத் தன்மொழியில் சொல்லில்லாமல் இருந்தான் என்றால், பிறகு என்ன சொல்லி தன்னை அழைத்துக் கொண்டான்? 65000 ஆண்டு இங்கே தெற்கு முனையில் குப்பை கொட்டியிருக்கிறானே? ”க்ருஷ்ண” என்று சொல்லை கி.மு.1200-1500ல் தெரிந்து கொள்ளும் வரை இவன் ஊமையாய் இருந்தானா? - என்றெல்லாம் மாந்தவியல், மொழியியல் சார்ந்து கேள்வி எழுகிறது.
பொதுவாய் உரையாடுவதில் ஓர் அடிப்படைச் சமதளம் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். “நீ தடுக்கில் பாய்ந்தால் நான் கோலத்தில் பாய்வேன்” என்பது உரையாடலுக்கு அழகல்ல. தமிழைச் செம்மொழி என்று சொல்லிவிட்டு, பின்னால் எல்லா வேரும் வடமொழியில் இருந்து பெற்றது என்றால் அப்புறம் செம்மொழி என்பதற்குப் பொருளில்லை. நான் நிற்கும் இருக்கையை நீங்கள் பிடுங்குகிறீர்கள் என்று பொருள். அந்த நிலையில் நான் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. "நீ வாங்கியதெல்லாம் கடன்” என்று சொல்லிவிட்டு, “போனால் போகிறது, வேண்டுமானால் என்கீழ் அடிமையாய் இருந்து கொள்” என்பது போல் இருக்கிறது. ”கண்ணன்<க்ருஷ்ண என்பது போன்ற கூற்றுக்களை இனித் தவிர்க்கலாம். காட்டு விலங்காண்டி நிலையில், குறிஞ்சி, முல்லையில் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை அறிவும், அதற்கான சொற்களும் தமிழில் 3800 ஆண்டுகளுக்கு முன் ஆதிச்ச நல்லூர் பழந்தமிழனுக்கு இருந்திருக்க வேண்டும் என்று ஒப்புவது நம்மை முன்கொண்டு செல்ல உதவும். We have to acknowledge some basic intelligence to our old Thamizan.]
”கோவலன் என்பது பொதுவாய்ச் செல்வந்தனைக் குறிக்கும். ஏனென்றால் மாடு என்றால் செல்வம்” என்ற கருத்து மிகவும் தட்டையாய் இருக்கிறது. செல்வன் என்ற சொல் இருக்கிற போது கோவலன் = செல்வன் என்று மாசாத்துவன் பெயரிடுவது சற்று சாத்தாரமாய்த் தெரிகிறது (சாத்தாரன்>சாத்தாரனம்>சாத்தாரணம்>சாதாரணம். இந்த விளக்கம் நீலகேசியில் இருக்கிறது. ஏதோ ஒரு இடுகையில் சொன்னேன். சட்டென ஏதென்று நினைவிற்கு வரவில்லை. சுருக்கமாய் சாத்தாரம் என்றே சொல்லலாம்.இந்தக் காலத்தில் “குப்பன், சுப்பன்” என்று அடையாளந் தெரியாத ஒரு பொதுத் தமிழனைப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லுவது போல, அந்தக் காலத்தில் தமிழ்ப் பொது மாந்தன் “சாத்தன், சாத்தாரன்” என்று பெயரிட்டு அழைக்கப் பட்டிருப்பது நீலகேசியின் மூலம் தெரிகிறது.)
இனிக் கோவலனின் பொருளுக்கு வருவோம். விண்ணவன் ஆன கண்ணனின் மேல் கொண்ட ஈடுபாடு காரணமாய்க் கோவலன் என்று தன் மகனுக்கு மாசாத்துவான் பெயரிட்டான் என்றால், அதுவும் நகரத்தார் பழக்கம் அறியாதவர் கூற்று என்றே சொல்லுவேன். ஒரு 100, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வரை, சிவநெறிப் பெயர் அல்லாத, அல்லது ஊர்க் காவற் தெய்வங்கள் அல்லாத, பெயரைப் பிள்ளைகளுக்கு இடமாட்டார்கள். அதோடு அவர்களின் சமயக் குருவின் (சிவ நெறியாளர்) சொல்லை மீறி நகரத்தார் அன்று இருந்ததில்லை. பாண்டியநாட்டிற்கு (நின்றசீர் நெடுமாறன், சுந்தர பாண்டியன் காலம், பேரரசுச் சோழன் விசயாலயனுக்குச் சற்று முன்னால்) வந்த காலத்தில் இருந்தே சிவநெறியில் தான் இருந்தார்கள். பத்தி இயக்கத் தொடக்கத்தில் பல்லவர்/ பாண்டியர் காலத்தின் தொடக்கத்தில் நகரத்தார் சிவநெறிக்கு மாறியிருக்கலாம். அதற்குமுன் சோழநாட்டில் இருந்தபோது நகரத்தார் சமணம், ஆசீவகம், புத்தம் என்று பலநெறிகளில் இருந்திருக்கிறார்கள். பத்தி இயக்கம் தமிழகம் எங்கணும் மக்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது. [அதை இன்றளவும் நன்கு ஆய்ந்து அறிந்தோம் இல்லை. தொடவும் மறுக்கிறோம், தயங்குகிறோம். வென்றவர்கள் வரலாறு எழுதி வைத்ததால் உண்மை தெரியப்படாமலே போகிறது.] பத்தி இயக்கம் நகரத்தார்களையும் புரட்டியது. சிவநெறிக்கு மாறிய நகரத்தார்கள் ஒரு காலத்தும் விண்ணவ நெறியைத் தங்கள் சமயமாக 100, 150 ஆண்டுகளுக்கு முன்வரை பின்பற்றினார்கள் என்பதற்கு இதுவரை எந்தச் சான்றுகளும் இல்லை. இப்பொழுது கோவலன் / கோபாலன் என்ற பெயர்க்குழப்பத்தை வைத்து ஒரு முயற்சி நடக்கிறது. [இன்றுங் கூட சமண, ஆசீவகப் பழக்கங்களும், பெயர்களும், மரபுகளும் விட்டகுறை, தொட்டகுறையாய்ப் பலசான்றுகளோடு நகரத்தாரிடையே இருக்கின்றன. விண்ணவ சமயத்தை நகரத்தார் போற்றத் தொடங்கியது கடந்த 100, 150 ஆண்டுகளில் தான். அதுவும் சிவநெறியை ஒருபக்கம் வைத்துக் கொண்டே தான் நடந்து வருகிறது.]
இனி கோவலன் என்ற பெயருக்கும், கூடவே மாசாத்துவான், மாநாய்கன் என்ற பெயர்களுக்கும் காரணங்களைக் காண்போம்.
மாசாத்துவான் என்பது இயற்பெயர் அல்ல. அது ஒரு பட்டப் பெயர். மாநாய்கன் என்பதும் இயற்பெயர் அல்ல, பட்டப் பெயர். இயற்பெயரைச் சொல்லாமல், பட்டப் பெயர் வைத்து ஊருக்குள் அழைப்பது இன்றைக்கும் நகரத்தார் இடையே இருக்கும் பழக்கம். ”சேந்தனைய்யா வீடு, மாந்தளையார் வீடு, கொரட்டியார் வீடு” என்றெல்லாம் செட்டிநாட்டுப் பக்கத்தில் கூறிக்கொள்ளும் பழக்கம் உண்டு. மாசாத்துவான் என்பதற்கு ”பெரிய வணிகன்” என்றே பொருள்.
சால்தல் = இதற்குச் சேர்த்தல், பொருத்துதல் என்றே பொருள்; அதாவது பண்டமாற்றுச் செய்தல். இதன் பொருள் நீண்டு ”விலை சொல்லுதல், விற்றல்” என்று தொடர்ச்சியாய் அமையும். (இந்தையிரோப்பியத்தில் sale என்று சொல்லுகிறோமே, அது இதற்கு இணையானது.) சால்தலைச் செய்வது சாத்து. அது ஓராளையும் குறிக்கும், ஒரு கூட்டத்தையும் குறிக்கும். சாத்து என்பது ”சேர்த்து” என்னும் பலுக்கல் வழியாக வடபுலத்தில் சேத் ஆகும். சேத், செட்டி என்ற சொற்கள் தொடர்பு கொண்டவை தான். இவர்கள் வணிகர்கள். சாத்தன் என்பவன் சாலும் தொழிலைச் செய்பவன், வணிகன். மாசாத்தன் = பெரும் வணிகன். ”அதோ! அங்கே புகார் பட்டினப்பாக்கத்தில் தெரிகிறதே! அது யார் வீடு தெரியுமா? மாசாத்தன் வீடு”. அப்படித்தான் சிலம்பு சொல்லுகிறது. கடைசி வரை அவன் இயற்பெயர் என்னவென்று இளங்கோ நமக்குத் தெரிவிக்கவே இல்லை.
அடுத்தது மாநாய்கன். நாவுதல் = நீரைத் தள்ளுதல். அது துடுப்பாலும் இருக்கலாம், கையாலும் இருக்கலாம். நாவிப் போகும் கலம் நாவாய். கடலோடுவது பற்றிய தமிழ்ச் சொற்களை நான் இங்கு அடுக்கினால் அது விரியும். அதற்கு இது இடமல்ல. நாவிகன்>நாய்கன் = கடலோடி, மாநாய்கன் = பெரும் கடலோடி, பெரும் நாவாய்களுக்குச் சொந்தக்காரன். மாநாய்கனின் இயற்பெயரும் சிலம்பில் கிடையாது.
மாநாய்கன், மாசாத்தன் இருவருமே வணிகர்கள் (traders) என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். கிடையாது. ஒருவன் வணிகன். இன்னொருவன் வணிகம் செய்யக் கப்பல் கொடுத்துப் பொதினம் செய்கிறவன். இருவரும் பொதினர்கள் (business men). ஒருவன் செயினத்தில் இல்லறத்தான் [இறுதிக் காலத்தில் புத்தத்திற்கு மாறினான்]; இன்னொருவன் ஆசீவகத்தில் இல்லறத்தான். இப் பொதினர்களைத் தான் பரதர் என்று சிலம்பும் சங்க இலக்கியமும் அழைக்கின்றன. [பரதர் வேறு, பரதவர் என்னும் fishermen வேறு.] [உரைசால் சிறப்பிற் அரைசுவிழை திருவிற் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் - மனையறம் படுத்த காதையின் தொடக்க வரிகள். ”அரசருக்கு முடியெடுத்துக் கொடுக்கும் உரிமை பெற்றவர்” என்பது இன்றைக்கும் நகரத்தாரிடம் இருக்கும் ஒரு தொன்மம்.]
சரி, மாசாத்துவான் என்ன வணிகம் செய்தான்? உப்பு, கூலம், மணி, மாணிக்கம், முத்து, .... இப்படி பல்வேறாய்க் கிடைக்கும் கற்கள் இது போன்று எது வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இவர் உள்நாட்டு வணிகராயும் இருந்தார். ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வணிகராயும் இருந்தார். ஓரோவழி சிலம்பைப் படித்தால், கோவலன் ஏற்றுமதி இறக்குமதியில் தான் இருந்திருப்பதாய்த் தோற்றுகிறது. அவன் தந்தை உள்நாட்டு வாணிகனாய் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் கவுந்தியடிகள் ”மதுரைக்கு உள்ளே போனால், இவன் தந்தையைத் தெரியாத வணிகன் யாரும் இருக்க மாட்டார்” என்று மாதரிக்குச் சொல்கிறாள். கண்ணகியே கூடத் தன் மாமனாரைத் தான் நெடுஞ்செழியன்முன் சொல்லித் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள். மாசாத்துவான் தமிழக உள்நாட்டு வணிகருக்கும், வேந்தருக்கும் கூட நன்றாய்த் தெரிந்தவனாய் இருந்திருக்க வேண்டும். அதே பொழுது, கோவலன் இவர்களோடு தொடர்பில்லாத இறக்குமதியாளர், ஏற்றுமதியாளரோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்திருக்க வேண்டும். அவனை மதுரையின் உள்ளூர் வணிகரோ, அரச அலுவரோ அறியாமல் இருந்திருக்கலாம். கோவலன் புகாரின் இறக்குமதி, ஏற்றுமதியாளரின் முன்னம் மீண்டும் விழிக்க வெட்கப் பட்டு, மதுரைக்கு (உள்நாட்டு வணிகம் செய்ய) விழைந்து வருகிறான். அப்படி வந்து சிலம்பு, மாணிக்கம் என்று தந்தையின் வணிகத்துள் போக முயல்கிறான்.
அப்படியானால், கோவலன் என்ற சொல்லின் பொருள் தான் என்ன என்று கேட்டால், கோவல் என்ற வினைச்சொல்லோடு அன் என்பதைச் சேர்த்தே நான் பொருள் சொல்லுவேன். மற்ற ஒப்பீட்டுச் சொற்களைப் பார்ப்போம்.
பாவல் + அன் = பாவலன் (பா-வல், பா-தல் = பாப் புனைதல்)
காவல் + அன் = காவலன் (கா-வல், கா-த்தல் = காப்பாற்றுதல்;)
ஏவல் + அன் = ஏவலன் (ஏ-வல், ஏ-தல் = கட்டளையிடுதல்)
நாவல் + அன் = நாவலன் (நா-வல், நாவு-தல் = நவிலுதல்)
இரவல் + அன் = இரவலன் (இர-வல், இர-த்தல் = இரவுதல்)
அதே போல கோ-வல் என்பது to govern, to administer என்று பொருள் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் சிலம்பில் கோவல் என்னும் தொழிலுக்குப் பெயர்ச்சொல்லாய்க் கோத்தொழில் என்ற சொல்லாட்சி மூன்று இடங்களில் வந்திருக்கிறது. கோத்தொழிலாளர் என்பவர் bureaucrats. கோ-த்தல் = இணைத்தல், சேர்த்தல், ஒழுங்கு படுத்தல், to compose, compile, arrange, reduce to order, to systematise. கோ-த்தல் என்பது கோ-வல் என்றும் மேலே உள்ளது போல் தமிழில் அமையலாம்.
மேலே சொன்ன மூன்று இடங்களைப் பார்ப்போம். முதலில் காடுகாண் காதை
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியல்நிலம் போல 60-61
அரசின் அலுவலரோடு அரசன் முரண்பட்டு அரசாண்மை இழந்த நாட்டைப் போல (You see, even a king cannot go against bureaucrats, it can spoil the govenance of a country.)
இரண்டாவது கட்டுரை காதை
வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பிக்
கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என
இடுசிறைக் கோட்டத்து இட்டனர் ஆக (100-103)
வார்த்திகனைக் அரசன் ஏவல் செய்வது பற்றி, இளைய அரசதிகாரிகள் (கோத்தொழில் இளையவர், junior bureaucrats) ”அரசநீதி இல்லாது புதையலைக் கவர்ந்த பார்ப்பான் இவன்” என்று கூறி கள்வரை இடும் சிறைக்கோட்டத்தில் இட்டனர் ஆக.
மூன்றாம் சொல்லாட்சிதான் இங்கு நமக்கு மிக முகன்மையானது. கட்டுரை காதையில் 152-154 ஆம் அடிகளில்
”முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தர்க்குக் கோத்தொழில் செய்வான்
பரதன் என்னும் பெயரெனக் கோவலன்”
என்று சொல்லுவதை ஆழ்ந்து படித்தால் ஒரு நகைமுரண் சட்டென்று புலப்படும். முற்பிறப்பில் கோவலனின் தொழில் வேந்தர்க்குக் கோத்தொழில் செய்வது = governance, bureaucracy, administration. இப்பிறப்பில் அவன் தொழில் பரத்தல் (to say a price or to sell for a price) செய்வது. பரத்தல் என்றவுடன் இந்தக் காலத்தில் பொருள் தெரியாமற் தடுமாறலாம். ஆனால் மலையாளம் தெரிந்தால் குழப்பம் வராது. பரயுதல் என்று இன்றும் மலையாளத்தில் சொல்கிறாரே! “இது விலை எந்தா, பரயு” ஒன்றை பரத்தியே, அல்லது பரத்தியதைக் கேட்டே நாம் விற்கவும், வாங்கவும் செய்கிறோம். This is nothing but business.
ஆக இப்பிறப்புத் தொழிற்பெயர் முற்பிறப்பில் இயற்பெயராயிற்று. முற்பிறப்புத் தொழிற்பெயர் இப்பிறப்பில் இயற்பெயராயிற்று. It is as simple as that. இளங்கோ இங்கே ஒரு பெயர் விளையாட்டைச் செய்கிறான். அவன் சார்ந்த ”ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”கொள்கையை நிலைநாட்டுவதில் ஒரு பெயர் விளையாட்டும் நடக்கிறது. மேலே கொடுத்துள்ள மூன்று வரிகளில் இளங்கோவே கோவலனின் பெயர் முடிச்சை அவிழ்த்து விடுகிறான். அதனால் தான் நகைமுரண் என்று மேலே சொன்னேன். [முற்பிறப்பு என்பது செயினத்திலும், ஆசீவகத்திலும் ஏற்கப்படக் கூடியதே. செயினம், ஆசீவகம், புத்தம், ஆகியவற்றின் கொள்கை ஊடாட்டங்களைத் தெரிந்து கொள்ளாமல் சிலப்பதிகாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது.]
கோவலனின் நிறம் பற்றிச் சொல்லுவதாய்க் கூறியிருந்தேன். அது மங்கல வாழ்த்துப் பாடலில் அறிமுகப் படுத்தும் போதே சொல்லப் படுகிறது.
மண் தேய்த்த புகழினான் மதிமுக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பாள் மன்னோ? (36-39)
இசை பாடும் பெண்கள் தங்கள் ஆயத்தில் பாராட்டும் செவ்வேளாய் கோவலன் நிறத்தை உணர்த்துகிறார்கள்.
ஆகச் சிவந்தவன் மாநிறத்தவளைக் கட்டிக் கொள்கிறான். இதில் உள்ள ”நிறப் பலக்குமம் (colour complexity)” பின்னால் மாதவியைப் பார்க்கும் போது வெளிப்படுகிறது.
இனி மாதவிக்கு வருவோம்.
அன்புடன்,
இராம.கி..
8 comments:
மிகவும் அருமையான கட்டுரைத் தொடர். உங்கள் ஆய்வுகள் மிகவும் தீர்க்கமாக இருக்கின்றன. தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கின்றேன்.
கோவலன் கண்ணகி இருவரும் சிவநெறி தழுவியவர்கள். சிலம்பு எழுதப்பட்ட காலத்தில் சமணம் போன்றவற்றின் தாக்கங்கள் அதிகரித்து இருந்தன. இடையில் பல செருகல்களும் நடைபெற்றன. வள்ளுவனை எவ்வாறு பிற மதங்கள் தமது தமது என்று வீண்வாதங்கள் செய்கின்றனவோ அதேபோல்தான் கண்ணகி, கோவலன் மற்றும் அவர் உறவினர்கள் சமணம் எனக்கூறுவதும் பொருள்படும். தமிழல்லாத சமயங்களைத் தமிழ்நாட்டில் வெகுநாள் கடவுள் விடுவதில்லை.
மாதவியோ மணிமேகலையோ புத்த மதத்தைத் தழுவில்லை, இருப்பினும் அவர்கள் தழுவியதாகத் திரிவுபடுத்தப்பட்டு புத்த சமயத்தைச் சார்ந்தவரால் திரிவுபடுத்தப்பட்டது என்பதே உண்மை.
முப்பிறப்பை சிவனிய மாலியம் சார்ந்த இந்துமதமே முதலில் முன்மொழிந்தது. இப்ப எப்படி சில மனிதர்கள் தெய்வங்களாக உருவகிக்கப்படுகின்றனரோ அவ்வாறே சிலரை உருவகித்து உருவாக்கப்பட்ட பொதின சமயங்கள்தான் (business religions) பௌத்தம், சமணம் போன்றவை.
ஆசீவகம் தமிழ்தோற்றம் எனினும் கடவுள் மறுப்புக் கொள்கையால் அது வேரறுக்கப்பட்டது. பெயரியார் போன்ற ஒருத்தர் அதற்கும் இருந்திருப்பார். கடவுள் இல்லை எனக்கூறி கனநாள் ஏமாற்றமுடியாது என்பதற்கே ஆசீவகத்தின் மறைவு சான்று.
Neengal peysuvathu anaithum karpanaye!
evidence no.1. satthan yenbathu Vaniyar(thiruvilakku nagarathar)galing kula theivam peyar.
if u want to confirm it , go n see kancheepuram kamatchi amman temple and see the ayyanar sannathi behind kamatchi amman sannathi. An old inscription is there.
evidence no.2. they have followed Jain or buddhism because kannagi refuses supersitions (kannagi thanathu thozhiyidam peysuthal).
kovalan - name aaraichi seithal ungalukku thevai illathathu. paniyaram kuduthal saapiduveergala allathu athu yentha sattiyil suttathu , yentha oil il suttathu yentha maavil suttathu yendru aaraichi seiveergala ?
silappathigaram unarthum 3 unmaigalai mattum yeduthu kollungal.athai vittu ippadi kovalanaiyum masathuvaanuayum aaraichi seeiyatheergal .
Neengal peysuvathu anaithum karpanaye!
evidence no.1. satthan yenbathu Vaniyar(thiruvilakku nagarathar)galing kula theivam peyar.
if u want to confirm it , go n see kancheepuram kamatchi amman temple and see the ayyanar sannathi behind kamatchi amman sannathi. An old inscription is there.
evidence no.2. they have followed Jain or buddhism because kannagi refuses supersitions (kannagi thanathu thozhiyidam peysuthal).
kovalan - name aaraichi seithal ungalukku thevai illathathu. paniyaram kuduthal saapiduveergala allathu athu yentha sattiyil suttathu , yentha oil il suttathu yentha maavil suttathu yendru aaraichi seiveergala ?
silappathigaram unarthum 3 unmaigalai mattum yeduthu kollungal.athai vittu ippadi kovalanaiyum masathuvaanuayum aaraichi seeiyatheergal .
மாசாத்துவான் என்பது இயற்பெயர் அல்ல. அது ஒரு பட்டப் பெயர். மாநாய்கன் என்பதும் இயற்பெயர் அல்ல, பட்டப் பெயர். இயற்பெயரைச் சொல்லாமல், பட்டப் பெயர் வைத்து ஊருக்குள் அழைப்பது இன்றைக்கும் நகரத்தார் இடையே இருக்கும் பழக்கம். ”சேந்தனைய்யா வீடு, மாத்தளையார் வீடு, கொரட்டியார் வீடு” என்றெல்லாம் செட்டிநாட்டுப் பக்கத்தில் கூறிக்கொள்ளும் பழக்கம் உண்டு. மாசாத்துவான் என்பதற்கு ”பெரிய வணிகன்” என்றே பொருள்.. மாத்தளையார், கொரட்டியார்,சேந்தனைய்யா வீடு இதெல்லாம் 24 மனையாரின் குலப் பெயர்கள்.
சேந்தனைய்யா வீடு
Sir, I have small doubts in silapathikaram history. I am also, one of the research student. Thank you.
என்ன ஐயம்?
Post a Comment