Wednesday, February 21, 2007

தனித் தமிழ் - 3

இனி "உண்மையில் ஒழுங்காக சம்ஸ்கிருதம் படித்த எந்தத் தமிழ் அறிஞரும் அம்மொழியை வெறுத்ததில்லை, நேசிக்கவே செய்தனர். அருணகிரி நாதர், தாயுமானவர் முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாகவி பாரதி வரை. கவியரசு கண்ணதாசனும் சம்ஸ்கிருதம் கற்றார், "அழகின் அலைகள்", "பொன்மழை" என்று சம்ஸ்கிருத பக்திப் பனுவல்களை அழகு தமிழில் தந்தார். வெறுப்படைந்தவர்கள் சம்ஸ்கிருதம் அறிந்தவர்களல்ல. வெறுப்பை மட்டுமே அறிந்தவர்கள்." என்று சொல்லுகிறார் திரு.ஜடாயு. [நான் மேலே உள்ள பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றிய செய்திகளைக் கொடுத்து அவர்களுடைய சங்கத நிலைப்பாடு பற்றி எழுத முடியும்; ஏற்கனவே கட்டுரை நீண்டு போனது, இனிமேலும் நீட்ட வேண்டாம் என்று அதைத் தவிர்க்கிறேன். ஒரே ஒரு புறனடை.]

முதலில் இந்தப் பட்டியலில் இருந்து கண்ணதாசனை நீக்குங்கள். அவரை நாங்கள் அறிந்தவரையில் அவருக்குச் சங்கதம் தெரியாது. சௌந்த்ர்ய லகரியையும், கனகதாரா ஸ்தோத்திரத்தையும் அவர் தமிழாக்கம் செய்ததாலேயே அவருக்குச் சங்கதம் தெரியும் என்பது எவ்வளவு முட்டாள் தனமான சில்லடிப்பு? இப்படி எழுதும் திரு.ஜடாயு கண்ணதாசனின் பொன்மழை என்ற பொத்தகத்தைப் படித்தது கூட இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இல்லையென்றால் இப்படிச் சொல்ல மாட்டார். பொன்மழைப் பொத்தகத்துள் கோபுரவாசல் என்று தன் முன்னுரையை எழுதும் கண்ணதாசன் சொல்லுவது கீழே வருகிறது:

"ஆதிசங்கரர் தமிழ்ப் படத்திற்கு என் மகன் சுப்பு வசனம் எழுதினான். என்னைப் பாடல் எழுத அழைத்தார்கள். அதன் மலையாளப் பதிப்பை நான் போட்டுப் பார்த்த போது, அதில் "கனகதாரா" வடமொழி ஸ்தோத்திரம் வந்தது.

அதன் சுவையை எண்ணிக் கொண்டே எனது மண்டபத்தில் நான் அமர்ந்த போது, எனது அருமை நண்பர் வழக்குரைஞர் அ.ச.நடராஜன் அவர்கள் வந்தார்கள்.

எழுத்துலகில் 'ஆஷா' என்னும் புனைப்பெயரில் அவர் எழுதுவது வழக்கம். எனது பத்திரிக்கைகள் எல்லாவற்றிலும் எழுதியிருக்கிறார். ஆங்கிலக் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்து என் பத்திரிக்கைகளுக்குத் தந்திருக்கிறார். என்னைப் பற்றிச் சில கட்டுரைகளும் வடித்திருக்கிறார்.

திடீரென்று அவர் என்னைப் பார்த்து, ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரங்களை நான் தமிழ்ப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இருவரும் இதுபற்றி வெகுநேரம் விவாதித்தோம். வெறும் கவிதையிலேயே அதனை மொழிபெயர்த்தால் சாதாரண மக்களிடம் அது பரவாது என்று எனக்குத் தோன்றியது. ஆஷா வடமொழிப் பயிற்சி மிக்கவர். இருவரும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தோம். உரைநடையில் அவர் எழுதுவது என்றும், அதைக் கவிதையாக நான் ஆக்குவது என்றும் முடிவாயிற்று.

உரைநடையில் அவர் எழுத எழுத அதைக் கவிதையாக எழுதிக் கொண்டுவந்தேன். புதுவகை இரட்டைப் புலவர்களாக நாங்கள் உருவானோம். விளைவு, இன்னொருவரோடு சேர்ந்து நான் எழுதிய முதல்நூலாக இது வெளிவருகிறது"
---------

விவரம் இப்படி இருக்கையில் "கவியரசு கண்ணதாசனும் சம்ஸ்கிருதம் கற்றார்" என்று முழுப்பூசனியைச் சோற்றில் எப்படி மறைக்கிறார் திரு. ஜடாயு? இந்த இரட்டைப் புலவர் முறையில் எழுதியதற்கே கண்ணதாசனைச் சங்கதம் தெரிந்தவர் என்று சொன்னால், அப்புறம் கலைஞர் உருசியன் தெரிந்தவர் என்றல்லவா சொல்ல வேண்டியிருக்கும்? ஏனென்றால் இரட்டைப் புலவர் முறையில் தான் அவரும் மார்க்சிம் கார்க்கியின் தாய் என்னும் நூலைத் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்தார். திரு. ஜடாயுவுக்கு எப்படி வசதி? கலைஞருக்கு உருசியன் தெரியும் என்று சொல்லுவாரா? இதுபோன்ற வடிகட்டிய சமக்காளப் பொய்களுக்கு எல்லை இல்லையா? சங்கதம் என்றவுடன் இது போன்ற கற்பனைகள் எங்கிருந்துதான் வருகின்றனவோ?

அன்புடன்,
இராம.கி.

7 comments:

Thangamani said...

தனித்தமிழ் பற்றிய உங்கள் தொடர் கட்டுரைகளுக்கு நன்றி.


இவ்வகையில் தமிழை சம்ஸ்கிருதத்தில் புதைத்துவிட (காலந்தோறும்) நடந்த முயற்சிகளையும், அதனை ஒட்டிய செய்திகளையும் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

இப்படி உணர்வுகள் களத்தில் ஒருத்தர் பின்னூட்டம் இட்டார். அதைப் படித்தபோது எனக்குக் குமரிமைந்தன் திண்ணையில் எழுதிய சாதியமும் மொழியும் கட்டுரைதான் நினைவுக்கு வந்தது. உங்கள் பக்கம் ஆகூழ் ஐயா, எனக்குத் தெரிந்த தமிழ் அறிவை மீண்டும் மீண்டும் இப்படித் தர்க்கம் செய்வோருக்காக அரைத்து அரைத்து என் கைவலிக்கின்றது. அதென்னவோ தெரியா.. கேட்கும் கேள்வியைத் திரும்பத் திரும்ப இரை மீட்கிறார்கள்.

"The problem is, u spent lot of time in justifying your usage of unfamiliar words among the commoners like me. If I write the word as Sivayi and Samarkritham, my tamil teacher will put zero mark and my friends will laugh at me ...

Apart from that, language is nothing but transport of communication...Tamil, today has changed a lot ...tamil what our ancestors spoke should have been different and I know the involvement of Krantham...

U r tamil is like Thanimaram....athu thoppakaathu. "

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

இவ்வகையில் தமிழை சம்ஸ்கிருதத்தில் புதைத்துவிட (காலந்தோறும்) நடந்த முயற்சிகளையும், அதனை ஒட்டிய செய்திகளையும் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வழிமொழிகிறேன்.

bala said...

//இவ்வகையில் தமிழை சம்ஸ்கிருதத்தில் புதைத்துவிட (காலந்தோறும்//

ஞாயிறு அய்யா,

என்ன,தமிழை சமசுகிருதத்தில் புதைக்கிறார்களா?என்ன ஆணவம்?சீக்கிரமே, இராம.சாவி அய்யாகிட்ட சொல்லி தமிழை, தனித்தமிழிலேயே புதைக்க சொல்லுங்கய்யா.அவர் தனித்தமிழில் புதைச்சாத்தான்,தனித்தமிழ் ஆத்மா சாந்தி அடையும்.

பாலா

குமரன் (Kumaran) said...

கண்ணதாசனின் பொன்மழை பாடல்களை சிறுவயதில் கற்றுக் கொண்டேன். இன்னும் பலமுறை முணுமுணுப்பேன். பின்னர் வடமொழி கொஞ்சம் தெரியத் தொடங்கிய பிறகு மூலத்தையும் படிக்கத் தொடங்கினேன். பல இடங்களில் ஆதி சங்கரரின் கூற்றுக்கு மேலும் பொலிவு தரும் வகையில் கண்ணதாசன் பொன்மழைப் பாடல்களை இயற்றியிருப்பது புரிந்தது. சில நேரங்களில் மூலத்தில் ஒரு பாடலையும் பொன்மழையில் ஒரு பாடலையும் எடுத்து மனத்தில் அசை போடுவதுண்டு. அருமையான அனுபவமாக இருக்கும்.

Anonymous said...

// [நான் மேலே உள்ள பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றிய செய்திகளைக் கொடுத்து அவர்களுடைய சங்கத நிலைப்பாடு பற்றி எழுத முடியும்; ஏற்கனவே கட்டுரை நீண்டு போனது, இனிமேலும் நீட்ட வேண்டாம் என்று அதைத் தவிர்க்கிறேன். ஒரே ஒரு புறனடை]//

இது தான் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் என்பது.

தாயுமானவரையும், அருணகிரியையும் என் வாழ்நாள் முழுதும் படித்து வந்திருக்கிறேன். அவர்கள் வடமொழியை வெறுத்தவர்கள் என்று உங்களால் தலைகீழாக நின்றாலும் நிறுவமுடியாது.

முதலில் கிரந்த எழுத்துகள் இல்லாமல் பல திருப்புகழ் பாடல்களை எழுத முடியாது. எந்தத் திருப்புகழ் பதிப்பைப் பார்த்தாலும் இது புரியும்.

இந்த அடியார்கள் வடமொழியை வெறுக்காதோர் மட்டுமல்ல, அம்மொழியின் பால் மிக்க அன்பும் கொண்டவர்கள் என்பதே உண்மை. பல சொற்களை தற்பவமாக அல்ல தற்சமமாகவே அதே வடிவத்தில் எடுத்தாண்டுள்ளார்கள்.

இகபர சௌபாக்யம் அருள்வாயே..
இதயம் தனில் இருந்து க்ருபையாகி..
சிகராத்ரி கூறிட்ட..

இவற்றில் சௌபாக்கியம், கிருபை, சிகராத்திரி என்றெல்லாம் எழுதினால் பாடல் தளை தட்டும், சந்தம் அடிபடும், தாள லயமே போய்விடும்!

தாயுமானவர் "மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரு மௌன குருவே" என்று பாடுகிறார். இதில் "மந்திர", "தந்திர" என்று போட்டால் ஆசிரிய விருத்தத்தின் யாப்புக்கே பொருந்தாமல் போகும்!

இவர்கள் வேதநெறியையும், தமிழையும், சைவத்தையும் வாழவைக்க வைந்த மகான்கள். வடமொழியை வெறுத்தவர்கள் என்று சொல்வது இவர்களது புகழுக்கே இழுக்கு விளைவிப்பதாகும்.

கவியரசு கண்ணதாசன் வடமொழியை முறையாகக் கற்றுக் கொண்டிருக்காமல் இருக்கலாம். ஆனால் அம்மொழியை வெறுத்தவர் என்று சொன்னால் அது பச்சைப் பொய். அந்த மொழியை கற்க விரும்பினார், அந்த மொழியின் பல ஆன்மீக நூல்களைத் தமிழில் தரவும் விரும்பினார். வடமொழி கவச தோத்திரங்கள் பாணியில் தன் இஷ்ட தெய்வமான கண்ணன் பற்றி "கிருஷ்ண கவசம்" எழுதிருக்கிறார். ராஜா பர்த்ருஹரி பற்றி அவர் எழுத ஆரம்பித்த நூல் பாதியில் நின்றுவிட்டது.

// உண்மையில் ஒழுங்காக சம்ஸ்கிருதம் படித்த எந்தத் தமிழ் அறிஞரும் அம்மொழியை வெறுத்ததில்லை, நேசிக்கவே செய்தனர் //
// வெறுப்படைந்தவர்கள் சம்ஸ்கிருதம் அறிந்தவர்களல்ல. வெறுப்பை மட்டுமே அறிந்தவர்கள் //

ஜடாயு கண்ணதாசன் பற்றி எழுதியது தகவல் பிழை. சொன்ன இந்தக் கருத்து சரிதான்.

ஆனால், நீங்கள் இங்கே செய்ய முயல்வது மோசடி.

sethu said...

thanthiram and manthiram are pure tamil words.