தாளில் இருந்து கணிக்கு:
மின்னியல் உலகு என்றவுடன் என்னமோ, ஏதோ, என்று தெரியாதோர் மயங்குற வேண்டாம். கற்சுவர், மரப் பட்டை, துணி, தோல், ஓலை, தாள் என்று ஒவ்வொரு எழுது பொருளையும் தாண்டி, இன்று கணி வழி ஒரு புதிய எழுது பொருளுக்கு வந்திருக்கிறோம், அவ்வளவு தான்.
கணி என்பது "இருக்கிறது (ஒன்று), இல்லை (சுழி)" என்னும் இருமைத் தட (binary state) நிலையை வைத்து இயங்கும் ஒரு பொறி. தவிர காந்தப் புலத்தின் மூலம் இருமைத் தடங்களைச் சேகரித்துக் கிடங்கில் (storage) வைக்க முடியும் என்பதால், இருமை எண்களையும் சேகரிக்கக் கூடிய வாய்ப்பு, கணியில் இயங்கும் கடுந் துரவிகள் (hard-drives) மூலமாகவும் வளைப்பித் துரவிகள் (floppy drives) மூலமாகவும், இன்னும் சில முறைகளாலும் நமக்குக் கிடைக்கிறது. இப்படி ஒரு கணியில், பல்வேறு இருமைத் தடங்களை நம்மால் சேமிக்கவும் முடிகிறது. பல்வேறு இருமைத் தடங்களை அருகருகே வைத்து பெரிய பிணைப்பு(combination)களையும் மடக்கு(permutation)களையும் ஏற்படுத்திப் பலக்கிய(complex) முறையில் எண்களையும், கட்டியங்களையும் (conditions) புனைய வைத்து அலசவும் முடிகிறது.
சரியாகச் சொன்னால், அத்தனை அலசல்களையும் கணிப்பாகவே (computation) கொண்டுவரும் ஒரு பொறிதான் கணி என்று அழைக்கப் படுகிறது. கணிக்குள் இரும (binary) இலக்கங்களும், எண்ம (octal) இலக்கங்களும், பதினறும (hexadecimal) இலக்கங்களும் பயில்கின்றன. ஆனால் நாம் பெரிதும் ஏற்கனவே பழகியிருந்த பதின்ம (decimal) இலக்கங்கள் என்பவை கணிக்கு ஏந்தாக இருப்பதில்லை. அதே பொழுது மாந்தர்கள் பதின்ம இலக்கங்களுக்கே பெரிதும் பழகியதால், அவருக்குப் புரிவதற்காக வெறும் வெளிப்பாட்டுக் கருவிகளில் (output devices) மட்டும் பதின்ம இலக்கங்கள் ஆளப் படுகின்றன.
இந்தக் கணியை உள்ளீட்டுக் கருவியும் (input devices), நடுவச் செலுத்தியும் (central processor), வெளியீட்டுக் கருவியுமாக (output devices) நாம் புரிந்து கொள்ள வேண்டும். எளிதாகச் சொன்னால் நாம் பொத்தான்களை அழுத்தும் குயவுப் பலகை (key board) என்பது ஓர் உள்ளீட்டுக் கருவி; நாம் காணும் கணித்திரை என்பது ஒரு வெளியீட்டுக் கருவி. நடுவச் செலுத்தி என்பது மேலே சொன்ன இருமத் தடங்களை (binary states) வைத்து அலசி நமக்கும் விடை சொல்லும் ஒரு கருவி.
இன்னொரு வகையில் பார்த்தால், கணித்திரை என்பது கிட்டத்தட்ட ஒரு மெய்நிகர் (virtual) தாள் தான். இந்தத் தாளில் தான் நாம் இப்பொழுதெல்லாம் அச்சடித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மெய்நிகர் தாளிற்குப் பகரியாக, மெய்யான தாளிலேயே கூட அச்சிடவும் முடியும். தவிரக் கணியில் இருந்து எங்கோ ஒரு காந்தப் புலச் சேமிப்பால் நாம் அச்சிட வேண்டியதைச் சேமிக்கவும் முடியும். அந்தச் சேமிப்பை, மீண்டும் மீண்டும் வேண்டும் போது, கணித்திரைக்குக் கொண்டு வரவும் முடியும். இந்தச் சேமிப்பு மற்றும் கணித்திரை சேர்ந்த தொகுதியைத் தான் ஓமின்னியல் உலகுஔ என்று சுற்றி வளைத்துச் சொல்லுகிறோம். தாளுக்கு மாறாக இந்தச் சேமிப்பு ஏந்துகள், பல்வேறு வகை வட்டுக்கள், தொடர்புகள், இணையம் என ஏராளமாய் மாறி இருக்கின்றன. வட்டுக்கள், தொடர்புகள், இணையம் எனக் கணுத்தப் பட்ட (கணுத்தல் = to connect) ஒரு கணி மூலம் நாம் எழுத முடிகிறது; படிக்க முடிகிறது; இவை எல்லாமே மின்னியல் வாயிலாய் முடிகிறது. மொத்தத்தில் கணி என்பது இன்றைக்கு ஓர் எழுது பொருளாகவும் ஆகிவிட்டது.
எண்களின் அடிமானக் குறியேற்றம் (encoding of number basis):
கணி என்பது எண்களைக் கையாளுவது. எண்களோ முடிவில்லாத வரம்பிலிகள் (infinities). அவை எல்லாவற்றையும் எப்படிக் கையாளுவது?
மாந்தன் முதலில் அறிந்தது தொகு எண்களே (integer numbers); பின்னால், அவற்றை நீட்டி அறுக்கை எண்கள் (பகு எண்கள் = rational numbers), அறுக்கொணா எண்கள் (பகா எண்கள் = irrational numbers), நொகை எண்கள் (negative numbers), இயல் எண்கள் (natural numbers), பலக்கிய எண்கள் (complex numbers) என ஒவ்வொரு மட்டத்திலும் வளர்ச்சியுற்று, இன்று எண்கோடு (number line) என்பது நீண்டுவிட்டது. முழு எண்கோட்டையும் கணி எப்படிக் கையாளுகிறது என்று கேட்டால், உட்பக்கமாடுதல் (approximation) என்னும் முறையால் என்றே விடை சொல்ல முடியும். [proxi = பக்கம் proximate = பக்கமாடுதல், approximate = உட்பக்கமாடுதல்; ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு இன்னும் அருகில், உட்பக்கம், உட்பக்கம் என அருகிலும் அருகாய்ப் போய் குறித்துக் காட்டுவது approximation)]
தொகு எண்களை, பெரும எண்களை (prime numbers;) வைத்துக் கூட்டிக் கூட்டிப் பெற முடியும். அறுக்கை எண்களைத் தொகு எண்களின் வகுத்தல் முறையால் பெற்றுவிட முடியும். உட்பக்கமாடலை ஏற்றுக் கொண்டுவிட்டால், பிறகு நம்முடைய தாளுகையைப் (tolerance; தாளுதல் = þயலுதல், பொறுத்தல்) பொறுத்து, ஒரு அறுக்கை எண் வாய்பாட்டை உருவாக்கி அதன் அண்மதிப்பைச் (near value) சொல்லி விடலாம். அதே போல பை எýனும் இயலெண்ணைச் சொல்ல உட்பக்கமாடல் எýனும் கருத்துப் பயன்படும். பலக்கிய எண்களையும் இதே போல ஒன்றித்த செலுத்தத்தால் (unique process) காட்டிவிட முடியும். ஆக வெறும் பெரும எண்களை வைத்துச் செயற்படத் தெரிந்தால் கணியில் எல்லாமே செய்யமுடியும்..
இந்தப் பெரும எண்களையும், மற்றவற்றையும் இரும அடிமானத்தால் (binary basis), எண்ம அடிமானத்தால், பதினறும அடிமானத்தால் குறியேற்றிக் காட்ட முடியும். இங்கே குறியேற்றம் என்பதும் பரத்திக் காட்டுதலும் (representation) ஒன்று தான். ஒரு குறியேற்றம் உயர்த்தி, இன்னொரு குறியேற்றம் தாழ்த்தி என்று யாரும் சொல்வதில்லை. எந்தச் செயலுக்கு எது உறுதுணையாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்துகிறோம்.
வேதியல் எளிமங்களின் அடிமானக் குறியேற்றம் (encoding of the basis of chemical elements):
இனி வேதியலுக்கு வருவோம். வேதியல் என்பது வேதித்தல் (= வேறுபடுத்தல்) என்ற சொல்லிலிருந்து எழுந்தது. இந்தச் சொல் படிப்படியாகத் தாழ்ந்த மாழையை (metal) உயர்ந்த மாழையாய் மாற்றுதல், புடமிடுதல், ஆவி, புகை முதலியவற்றால் வெம்மை செய்தல் இப்படிப் பல பொருள்களைக் குறிக்கத் தொடங்கியது. இந்தக் காலத்தில் இதன் பொருளை இன்னும் நீட்டி, முழு chemical action க்கும் இணையாகச் சொல்லுகிறோம். ஒரு மொழியின் சொல் நீட்சி இப்படித்தான் நிகழும். வேதியலில் 103 எளிமங்களால் (elements), [இன்று அதற்குமேல் உரேனியத்திற்கும் துரந்ததாய் (trans-Uranic; துரத்தல் = தள்ளிப் போதல்; trans என்னும் முன்னொட்டிற்கு இணையாகத் துரந்த என்ற சொல்லை Óன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ பயனாக்கலாம்.) எளிமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.] பல்வேறு கூட்டுப் பிணைப்புகளும் (compounds) உருவாக்குகிறோம். எந்தவொரு வேதிப் பிணைப்பையும் வேதியல் வாய்பாட்டில் காண்பிக்க 103 எளிமங்களை அடிமானங்களாய்க் கொள்ளுகிறோம்.
வேதியலுக்கு இன்னும் கீழே போய், அணுப்பூதியல் (atomic physics) கண்ணோடு பார்த்தால், அணுவின் அடிப்படையாய், முன்னி(proton), மின்னி(electron), நொதுவி(neutron) எனப் பலவும், இன்னும் ஆழம் போய் கீழணுப் பொருள்களாய் (sub-atomic particles) குவார்க்காலும் (quarks) கண்ட பிறகு, 103 அடிமான அணுக்கள் வேண்டாம்,. வெறுமே கீழணுப் பொருள்களான முன்னி, மின்னி, நொதுவி ஆகியவற்றின் சேர்ப்பாக ஓவ்வொரு அணுவையும் காட்டத் தோன்றும்.
காட்டாக, நீரகமா (hydrogen),
அது ஒரு முன்னி + ஒரு மின்னி, கூடவே ஒன்றோ, இரண்டோ நொதுவி கொண்ட எளிமம்,
இதே போல எல்லியமா (helium),
அது இரண்டு முன்னி + இரண்டு மின்னி, வேணும் என்கின்ற அளவிற்கு நொதுவி
என்று சேர்த்துச் சொல்லலாம். இது போல ஒவ்வொரு எளிமத்தையும் முன்னி, மின்னி, நொதுவி ஆகியவற்றின் கூட்டாகச் சொல்லலாம் தான்.
இப்படிச் செய்தால், முழு வேதியலுக்கும் ãன்று அடிமானங்களே போதும் என்று ஆகிவிடும். ஆனால் அது அன்றாட வேதியலுக்கு வாகாய் வருமோ? அன்றாட வேதியலை மிகவும் பலக்கியதாய் அது காட்டி விடாதா? எந்தவொரு வேதியலாராவது இதை ஒப்புவாரா? பூதிவேதியல்காரருக்கு (physical chemists) வேண்டுமானால் அது சரியாக இருக்கும். மற்றவருக்கு அது மேற்கொண்டு சிந்திக்க விடாத அடித்தளக் கட்டு.
மொழியியல் அடிமானங்கள்:
அது போலத்தான் மொழியியலில். உயிர்மெய் எழுத்துக்கள் என்பவை 12 உயிர்கள், 18 மெய்களின் சேர்க்கையால் உருவானவை என்ற போதிலும், உயிர்மெய் எழுத்துக்களைத் தவிர்த்து வெறும் உயிரையும், மெய்யையும் வைத்து ஓரொரு முறையும் பிரித்துச் சொல்வேம் என்பது பொதுவானவருக்கு உகந்ததாய்ப் படாது. ஆனால் இலக்கணிகளுக்கு அது உகந்ததாய் இருக்கும். வெறும் வல்வழக்காய், உயிர்மெய் என்பதற்கு குறியேற்றமே தேவையில்லை என்று சொல்லுவது இலக்கணிகளின் பார்வையைச் சார்ந்தது என்றே நான் சொல்லுவேன்.
தமிழ்மொழியின் அன்றாடப் பயன்பாட்டிற்கு அடிமானமாய்த் தமிழ் நெடுங்கணக்கையும், தமிழ்மொழியின் இலக்கணப் பயன்பாட்டிற்கு அடிமானமாய் தமிழ்க் குறுங்கணக்கையும் கொள்ளுவதே சரியானது என்பது என்னுடைய புரிதல்.
அன்புடன்,
இராம.கி.
2 comments:
அய்யா, இன்றைக்குத்தான், அனைத்துப் பகுதிகளையும் ஒரே மூச்சில் வாசித்தேன். பயனுள்ள தொடர்..
ரொம்ப நாளாகக் கேட்கவேணும் என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களை தரும் போது, இரு மொழிகளிலும் அவை, பெரும்பாலும் ஒரே மாதிரி ஒலிப்பது போல வருகிறதே. இது இயல்பாக நடக்கிறதா அல்லது 'கொண்டு' வருகிறீர்களா? ஆனால், அவற்றை சந்தர்ப்பம் கிடைக்கும் போது பயன்படுத்தத் தோன்றுகிற மாதிரி இருக்கிறது என்பது வேற விஷயம் :-)
அன்பிற்குரிய பிரகாஷ்,
தொடர் பயன்பட்டால் மகிழ்ச்சியே.
ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களைத் தரும் போது ஒரே மாதிரி ஒலிப்பு வருகிறதே,என்று கேட்டிருக்கிறீர்கள். இந்தக் கேள்வி இன்னும் பலராலும் கேட்கப் பட்டது. அதற்காக என்னைச் சாடியவர்களும் உண்டு. அவர்களைப் பொரூத்தவரை தமிழிய மொழிகள் எதிலும் சேராத தனிக் குடும்பம்.
நான் காட்டும் ஒப்புமை ஒருவகையில் வேரைப் பார்க்கும் போது இயல்பாய் வந்தது, இன்னொரு வகையில் அந்தத் தோற்றத்தை விடாது தேடும் போக்கால் வந்தது.
என்னுடைய புரிதலின் படி, தமிழிய மொழிகளுக்கும் இந்தோயிரோப்பிய மொழிகளுக்கும் இடையில் இனங் காண முடியாத தொடர்பு ஏதோ ஒன்று இருக்கிறது. இதைப் பலரும் ஏற்காது மறுத்தும் வருகிறார்கள். இவர்களை மாக்சு முல்லர் ஆழ்ந்து ஈர்த்திருக்கிறார். இவர்கள் தமிழின் ஒருசொல் - பல்பொருள் தொகுதிகளையும், பலசொல் - ஒருபொருள் தொகுதிகளையும் கவனிக்க மாட்டாதவர்கள். கொஞ்சம் மாந்தவியலும், மொழியியலும் சேர்த்துப் பார்க்காமல் தொன்மங்களையும், சமயங்களையும் மொழியியலோடு குழம்பிக் கொள்கிறவர்களும், தமிழ் ஒப்புமையை மறுக்கிறார்கள். நானோ இன்னும் தேட்டை (search)நிலையிலே நிற்கிறேன்; தேற்ற (theory) நிலைக்கு வரவில்லை. என்னுடைய தேடுதல் முகனைப் (main) பாதையாக இல்லாமல் வெறும் மொண்ணைப் பாதையாக ஆகிப் போகலாம். ஆனாலும், இதுவரை இந்தப் பாதை வளமான ஒப்புமைகளைக் காட்டிக் கொண்டுதான் போகிறது.
இந்த இணைகளைப் புழங்குவதும், ஒதுக்குவதும் அவரவர் உகப்பு.
அன்புடன்,
இராம.கி.
Post a Comment