Thursday, April 13, 2006

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

மேலே உள்ள சொலவடையை எழுத்தாளர் நா.பா தன் புதினம் ஒன்றில் (அது குறிஞ்சி மலரோ, பொன் விலங்கோ, எனக்கு இப்பொழுது நினைவுக்கு வரவில்லை) எழுதுவார். இந்தப் புதிதாய்ப் பிறக்கும் உணர்வு, பழையதை எல்லாம் அழித்துக் கழித்தபின் ஆர்வத்தோடு புதியதை எதிர்கொள்ளும் பாங்கு, நமக்கெல்லாம் மிகவும் தேவையான ஒரு பழக்கம். இந்த வாழ்வின் ஓட்டத்தில் விழுந்து எழுந்து, முக்கி முனகி, போராடித் தள்ளாடி, முன்வந்து நிற்கும் வேளையில், சோர்வு என்பது நம்மை அடைந்தாலும், மறுநாளைச் சந்திக்க வேண்டுமே என்னும் பொழுது, இந்தப் புத்துணர்வு நமக்கு மிகத் தேவையாக இருக்கிறது.

சில குறிப்பிட்ட நாட்கள் - பொழுதுகள்- காலங்களில் இந்தப் புத்துணர்வைத் தூண்டுகிற நிகழ்வுகள் ஏற்படுவது உண்டு. அப்படி ஒரு நிகழ்வே ஆண்டுப் பிறப்பு. ஒரு பாவலன் சொன்னது போல், "ஆண்டொன்று போனால் அகவை ஒன்றல்லவா போகிறது?" வாழ்வில் எவ்வளவு கனவுகளைத் தேக்கி நாம் நனவாக்கத் துடிக்கிறோம்? இனி வரும் ஆண்டில் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று உறுதி கொள்ளுகிறோம் அல்லவா? அந்த உறுதி இல்லையெனில் வாழ்வு ஏது?

உலகின் வெவ்வேறு பகுதிகளில், ஆண்டுப் பிறப்பு என்பது ஒரே காலத்தில் வருவது அல்ல. இது இடத்திற்கு இடம் மாறலாம்; ஏன் ஒரே நாட்டின் வரலாற்றில், காலத்துக்குக் காலம் கூட மாறலாம். ஆனாலும் ஆண்டுப் பிறப்பு என்பது அனைவரும் எதிர் நோக்குகின்ற ஒரு நிகழ்வு. இந்தக் காலப் பண்பாட்டுக் குழப்பத்தால், தமிழர்கள் ஆங்கில ஆண்டுப் பிறப்பை மட்டுமே கொண்டாடுவது அதிகரித்தாலும், தமிழாண்டுப் பிறப்பை விழிவைத்து எதிர்கொள்ளுவோர் இன்னும் இருக்கிறார்கள்.

என்ன, திருப்பதியிலும், பழனியிலும், இன்னும் ஓராயிரம் கோயில்களிலும், இது போலக் கிறித்துவ தேவாலயங்களிலும், சனவரி முதல் நாளுக்குக் கூடும் கூட்டம், சித்திரை முதல் நாளுக்குக் கூடுமா என்பது அய்யம் தான். எந்தச் சமய நெறியாக இருந்தால் என்ன, தமிழனுக்கு உரிய சித்திரை நாளைக் கொண்டாட நம்மில் பலர், குறிப்பாக தமிங்கிலர் ஆகிப் போனவர்கள், ஏன் தயங்குகிறார்கள், வெட்கப் படுகிறார்கள்? இவர்கள் தனிப்பட்டுப் போனதாக உணர்கிறார்களோ? "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதன் பொருளே அவரவர் தங்கள் தனித்தன்மையை இழப்பதுதானோ?" என்று ஒரோர் சமயம் உள்ளத்தை உறுத்துகிறது.

இருந்தாலும், விட்ட குறை தொட்ட குறை மறக்காத சில தமிழர்கள் சித்திரைத் திங்கள் பிறக்கும் நாளை ஆண்டுப் பிறப்பு என்று இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். அன்றைக்குக் கோயிலுக்கும், தேவாலயத்திற்கும், இன்னும் பள்ளிவாசலுக்கும் போய், "இறைவா, இந்த ஆண்டில் இன்னும் பல நல்ல செயல்களைச் செய்ய உறுதி கொடும், அய்யா" என்று வேண்டிக் கொள்ளுகிறோம். அன்று உறவினர்களையும், நண்பர்களையும் கூப்பிட்டு முகமன் கூறுகிறோம். வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். மாந்தோரணம் கட்டுகிறோம். அந்த ஆண்டின் பெயரைக் கோலத்திற்கு அருகில் எழுதி வரவேற்கிறோம். வீட்டை முடிந்த வரையில் அழகு படுத்துகிறோம். (இந்த நாளில் தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து யாரோ ஒரு திரைப் படக் கலைஞனின் விடலைத் தனத்தை விழிநீர் தேங்க, வாய்நீர் வடியப் பார்த்து நேரத்தைக் கழிப்பது விழாவைச் சேர்ந்தது அல்ல; அது இன்னொரு வகை)

பனைவெல்லம் சேர்த்து, வேப்பம்பூப் பச்சடி வைக்கிறோம். ஒரு இனிப்பாவது அன்றையச் சமையலில் சேர்ந்து கொள்ளுகிறோம். மறவாமல் அன்று பாயசம் வைக்கிறோம். முடிந்தால் ஒரு உளுந்து வடை. இன்னும் சிலர், குறிப்பாகத் தமிழகத் தென் மாவட்டத்தினர் காலையில் எழுந்தவுடன் பூசை அறைக்குப் போய் கண்ணாடி பார்க்கிறோம். ஒரு சிலர் பூசை வேளையில் புத்தாண்டிற்கான அஞ்சாங்கம் படிக்கிறோம். அந்த ஆண்டுப் பலன் என்று சொல்லப் பட்டதை அறிந்து கொள்ள முற்படுகிறோம். புத்தாடை, பூ, பழம் எனப் புதுக்கிட்டுப் பெரியவர்களிடம் வாழ்த்துப் பெறுகிறோம். ஊரெல்லாம் வலம் வந்து யாரைக் கண்டாலும் வழுத்திக் கொள்ளுகிறோம். இப்படி எல்லாம் செய்து "செல்வம் நம் வாழ்வில் பொங்கி வழியட்டும்" என்று இறைவனை வேண்டிக் கொள்ளுகிறோம்..

மேலே சொன்னதை ஒரு சில மாற்றங்களோடு இசுலாமியர், கிறித்தவர், சிவநெறியாளர், விண்ணெறியாளர், சமணர், புத்தர் என எல்லாச் சமயத்தினரும் செய்ய முடியும். ஏனென்றால், ஆண்டுப் பிறப்பு என்பது குமுகாயப் பழக்கம், பண்பாட்டுப் பழக்கம் அல்லவா? அதைச் சமயம் தடுக்க இயலாது. ஓணம் என்று வந்தால் சேரலர் அனைவரும் அதைக் கொண்டாடவில்லையா? இதில் சமயம் குறுக்கே வருகிறதோ? இல்லையே! இந்த விவரம் கெட்ட ஆங்கில அடிமைத்தனம் ஊடே வந்து தடுக்கிறதோ? இல்லையே!

அதே முனைப்பில், தமிழர் எல்லோருக்கும் உரியது தமிழ் ஆண்டுப் பிறப்பு அல்லவா?

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

17 comments:

Anonymous said...

சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா. - பாரதி

எல்லோருக்கும் மனம்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

அய்யா,

அருமையான பதிவு. ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் எதாவது ஒரு தீர்மானம் (Resolution) செய்து அதைக் கடைப்பிடிக்க முயல்பவர் அநேகம். அதைப்போல் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத்தில் ஏன் செய்வதில்லை?

இன்று முதல் நமக்காகவும், தமிழுக்காகவும், தினமும் புதிதாய் ஒரு வார்த்தையை அறிந்து கொள்ளவோ, அல்லது ஆங்கில கலப்பில்லாமல் ஒரு பத்தி எழுதிப் பழகவோ ஒரு தீர்மானம் செய்து கொண்டால் என்ன?

இதையொட்டியே நீங்கள் எழுதிய வெண்பாவும் மிகச் சிறப்பாய் அமைந்துள்ளது.

SnackDragon said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

சிங்களவரும் இதை தான் புது வருடமாக கொண்டாடுகின்றனர்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அன்பின் இராம.கி ஐயா, மீண்டுமொரு இனிய கட்டுரை. ஊரில் இருந்த போது தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடிய நினைவு இருக்கிறது. அயலூரில் மறந்துபோன நாட்களில் ஒன்றாகிப் போய் சில சமயம் தமிழ்ப்புத்தாண்டையும் தவற விட்ட காலமும் உண்டு. மறக்காதிருக்கச் சொல்லும் உங்கள் உரையையும் ஏற்று இவ்வாண்டு ஏதேனும் செய்ய எண்ணம்.

உங்கள் பணி தொடர்க. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்/எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

ஞானவெட்டியான் said...

அன்பு இராமகி,

தங்களுக்கும், தங்களின் இல்லத்தோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Anonymous said...

மனம்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

Why there is no tamil names for Tamil new year. All the names are in sanskrit.

Anonymous said...

இமிழ்போல் தமிழால் இராமகி நீயும்
அமிழ்தென வெண்பா அளித்தாய் - தமிழர்
வணங்கும் தமிழாலே வாழ்த்த வயதின்றி
வணங்கினேன் என்னையும் வாழ்த்து.

இராதாகிருஷ்ணன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மணியன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

இந்த புதிதாய்ப் பிறந்தோம் என்ற தொடர் பாரதியில் வருவதை அறிவேன்; நான் நா.பா.வைச் சொன்னதற்கு இரண்டு காரணங்கள். அந்தச் சொற்றொடரின் ஆழத்தை நான் உணர்ந்தது நா.பா.வின் குறிஞ்சி மலர் மற்றும் பொன்விலங்கு ஆகிய புதினங்களால்; இன்னொன்று அந்தப் புதினங்கள் மீள்வாசிப்பிற்கு வர வேண்டும் என்ற விழைவால். தமிழில் ஒரு சில சொற்றொடர்களும், கருத்துக்களும் மீண்டும் மீண்டும் மறுசுழற்சி பெற்றிருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.

அன்பிற்குரிய இலவசக் கொத்தனார்,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. கூடிய மட்டும் நல்ல தமிழில் எழுத எல்லோரும், குறிப்பாக இளையோர், பழகவேண்டும் என்பது என் வேணவா.

அன்பிற்குரிய கார்த்திக்ராமாஸ்,

வாழ்த்திற்கு நன்றி.

அன்பிற்குரிய பெயரில்லாதவற்கு,

இந்த நாள் நமக்கு மட்டும் புத்தாண்டு இல்லை. நம் தொடர்பு இருந்த எல்லா நாடுகளுக்கும், குறிப்பாக பர்மா, தாய்லாந்து, சிங்களம் ஆகியவற்றிற்கும் புது ஆண்டே. கம்போடியா, வியட்நாம் பற்றி நான் அறிந்தேனில்லை.தெரிந்தவர் சொன்னால் நல்லது.

அன்பிற்குரிய செல்வராஜ்,

தமிழ்ர்கள் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெருநாள் தமிழ்ப் புத்தாண்டு நாள். பலரும் ஒருவருக்கொருவர் சொல்லி, இந்தப் பழக்கத்தை விடாது இருந்தால் நல்லது.

ஒரு இனம் அழிவதற்கு முதற்படி, மொழியைப் பயன்படுத்தாமல் விடுவது; இது கலப்பு மொழிப் பயனாக்கத்தில் தான் தொடங்குகிறது, அடுத்தது பண்பாட்டுக் கூறுகள், விழாக்கள் ஆகியவற்றைத் தொலைப்பது என ஒவ்வொன்றாக நகரும். நாம் எவற்றை இழக்கிறோம் என்று நமக்கே தெரியாமல் சுகங் கண்டு கிடக்கிறோம்.

முன்னரே சொன்னது போல் இளஞ்சூட்டில் உள்ளே கிடந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் சூடு ஏறப்போகிறது என்று அறிக் கூட முடியாமல், தண்ணீர் அண்டாவில் இருந்து தவ்வக் கூடத் தெரியாத தவளையாக நாம் இருக்கிறோமோ என்று எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு.

இதற்கு மேல் நான் சொன்னால் அது அரசியல் ஆகிவிடும்.

அன்பிற்குரிய ஞானவெட்டியான்,

உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி

இராம.கி said...

அன்பிற்குரிய மணிவண்ணன்,

பல்லாண்டு நம்தமிழின் பற்றாளர் மணிவண்ணர்;
சுள்ளிச் சிலகாலம் சோர்ந்ததுவோ? - வல்லையீர்!
இவ்வீர்ப்பு மீண்டதுவோ? என்றுமினி நீடிக்க,
அவ்வன் வழுத்தென்றே அமை.

அவ்வன் = அவ்வையின் ஆண்பால்; இங்கு இறைவன்; அவ்வை = இறைவி.
சு(ள்)ளித்தல் = சினத்தல்
வழுத்து = வாழ்த்து

சோர்வு போக்கி, மீண்டும் வீறுகொண்டு எழுந்து, தமிழில் திளைத்து, எழுந்து, வெண்பாவாய்க் கொட்டும் மணிவண்ணருக்கு என் வாழ்த்து.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன், மற்றும் மணியன்,

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

ஐயா மீண்டும் விரைவில் கேட்பதற்கு மன்னிக்கவும், ஆனால் சிறு சிறு சந்தேகம்.

வணிகமும், வாணிபமும் ஒன்றா?

இந்த பயன்பாடு சரியா??

வணிகம் = "Business"
வர்த்தகம் = "Commerce"
வியாபாரம் = "Trade"

இராம.கி said...

அன்புடைய பெயரில்லாதவருக்கு,

மேலே உள்ள கேள்வியை முன்னரே கேட்டிருக்கிறீர்கள். நான் அலுவ வேலையில் ஆழ்ந்திருப்பதால் உங்களுக்கு இப்பொழுது விடையிறுக்க முடியவில்லை. நினைவில் வைத்துக் கொண்டு பின்னால் மறுமொழிப்பேன்.

விரைவான விடை: வணிகமும், வாணிபமும் ஒன்றே எனப் பயன்படுத்துகிறார்கள். என் கருத்தை விளக்காமல் நான் சுருக்கமாய் விடையிறுப்பது சரியாய் இருக்காது.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

பதிலுக்கு நன்றி ஐயா.

மீண்டும் கேட்டதுக்கு மன்னிக்கவும், நீங்கள் பலுவில் மறந்து விட்டீர்களா எனறு நினைத்தேன்.