முன்னொரு முறை ஆப்பிரிக்க கவிஞர் ஒருவரின் கவிதையை இணையத்தில் படிக்க நேர்ந்தது. ஆசிரியர் பெயர், அடையாளம் எனக்கு இன்றுவரை தெரியாது. நண்பர் இரமணிதரன் கந்தையா அதைத் தமிழ்ப் படுத்த மாட்டாரா என்று ஒரு காலத்தில் தமிழ் இணையத்தில் கேட்டிருந்தேன். (இரமணியின் கவிதைகளில் கொஞ்சம் கிறங்கிப் போனவன் நான். இரமணி ஒரு அருவி, காட்டாறு போல; திடீரென்று பெருக்கெடுப்பார்; கொட்டுவார்; பிறகு நெடு நாள் பெருக்கு இல்லாது போகும்.) அருவி இப்போதைக்கு கொட்டாது என்று எண்ணிக் கீழே உள்ள கவிதையைக் கிடப்பில் போட்டு விட்டேன். பின்னால், என் பழைய குப்பைகளைக் கிளறியதில் மறுபடியும் வெளிப்பட்டது. நானே உரைவீச்சாய் தமிழில் மாற்றியதைக் கீழே தந்திருக்கிறேன்.
_____________
When I'm born.. I'm black.
When I grow up.. I'm even more black.
When I am in the sun.. I'm still black.
And When I'm cold. guess what.. I'm black.
And when i die, I'm @*!&^% black too.
But you...
When you're born.. you're pink.
When you grow up..you're white.
When you're sick..man.. look at yourself.. your're green.
When you go in the sun.. you turned red.
When you're cold..you turned blue.
And when you die..you look purple.
And YOU got the nerve to call ME.. Coloured..?!
________________________________
Lyrics & Vocals: LaMont Humphrey
என்னருமை வெள்ளைக்காரா,
சேதி கொஞ்சம் தெரிஞ்சுக்கோணும்!
நான்
பிறந்த போது, கருப்பு
வளர்ந்த போது, கருப்பு;
காய்ஞ்ச போது, கருப்பு;
குளிர்ந்த போது, கருப்பு;
பயந்த போது, கருப்பு;
நொய்ஞ்ச போது, கருப்பு;
இறக்கும் போது கூடக் கருப்புத்தான்
ஆனால் நீயோ,
பிறந்த போது, பூஞ்சை
வளர்ந்த போது, வெள்ளை,
காய்ஞ்ச போது, சிவப்பு,
குளிர்ந்த போது, நீலம்
பயந்த போது, மஞ்சள்
நொய்ஞ்ச போது, பசலை
இறக்கும் போது, வெளிறு
இருந்தாலும், என்னைக்
கெழிறுன்னு கூப்பிட
உனக்குத் திமிரு இருக்குல்லெ?
அன்புடன்,
இராம.கி.
பி.கு. கெழு = நிறம், வண்ணம். (கெழுமிய = நிறைந்த)
கெழு>கெழிறு>colour
7 comments:
//பி.கு. கெழு = நிறம், வண்ணம். (கெழுமிய = நிறைந்த)
கெழு>கெழிறு>colour//
கலரை இப்படி வெளுத்துட்டிங்களே. கலரோட சாயம் இதுதானா ? colour இப்படித்தன் வண்ணம் பூசிக்கொண்டதா ? மிகவும் வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
புதிய சொல்லுக்கு நன்றி அய்யா
தொடர்பில்லாமல் ஒரு கேள்வி. களிறு / வேழம் என்றால் யானை என்று தானே பொருள்? இதன் பெய்ர்க்காரணம் சொல்வீர்களா?
இது இடுகைக்குப் பொருந்தா முன்னிகை என நீங்கள் கருதினால் அனுமதிக்க வேண்டாம்
நன்றி.
அய்யா,
நன்றி
பிறக்கும்போது... நான் கறுப்பு.
வளரும்போது... மேலும் கறுப்பு.
வெயிலிலிருக்கையிலும் கறுப்புத்தான்.
எனக்குக் குளிரெடுக்கையில், தெரிந்துகொள்ளுங்கள்... நான் கறுப்பு.
செத்துப்போகையிலும் நான் @*!&^% கறுப்பே.
ஆனால் நீ...
பிறக்கும்போது ரோஜா நிறம்.
வளர்கையில்... நீ வெள்ளை.
நோயுற்றிருக்கையில்... உன்னையே பார்த்துக்கொள்... பச்சை.
வெயிலில் நனைகையில் சிவப்பாய் மாறினாய்.
குளிரெடுக்கையில் நீலமாய் மாறினாய்.
இறக்கையில்... கத்திரிப்பூ நிறமாயிருக்கிறாய்.
என்னைக் கெழிறென்றழைக்க என்ன திமிருனக்கு?
பிறப்பில் வளர்ப்பில் பொசுக்கும் வெய்யில்
வறுப்பில் குளிரின் விறைப்பில் தெறுவில்ஏன்
நொவ்வில் இறப்பிலும் நான்கருப்பு நீயோ
இவ்வுலகில் உள்ளநிறம் எல்லாமும் பெற்றாய்
பிறக்கையில் பூஞ்சை பிறகு வளர
உறுவதோ வெள்ளைத்தோல் வெய்யில் வறுக்க
குருதிபோல் செம்மை குளிரிலோ நீலம்
மருளவும் நொவ்விலும் மஞ்சள் பசலை
அழிவில் வெளிறினாய் இன்றென்னைக் காட்டிக்
கெழிறென்றாய் என்னே கொழுப்பு.
அன்பிற்குரிய சம்மட்டி,
உங்கள் பாராட்டிற்கு நன்றி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் இது போன்ற இணைகள் தமிழுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இடையே தொடர்பு காட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றை எடுத்துக் காட்டினால், பலரும் என்னை ஏற்க முடியாதது போல் தான் பார்க்கிறார்கள்; அந்த அளவு இந்தக் கால இந்தியவியல் எல்லை வரைந்து கொண்டு வரப்பைக் காத்து இருக்கிறது. வடமொழியோடு எதை வேண்டுமானாலும் பொருத்திப் பார்ப்பார்கள்; ஆனால் தமிழென்று சொன்னால் தயங்கி நிற்பார்கள்.
அன்பிற்குரிய புகழேந்தி,
கீழே வரும் செய்திகள் ப.அருளியின் "யா" என்ற பொத்தகத்தில் பக்கம் 27-29 ல் இருந்து எடுத்துச் சொல்லப் பட்டவை.
கள் என்னும் வேருக்கு கருப்பு என்ற பொருள் உண்டு. யானையின் பலபெயர்கள் அதன் கருப்புத் தன்மையைக் குறிப்பன. களிறு என்பது விதப்பான பொருளைக் கொண்ட சொல். கள் + இர் = களிர்>*களிரு>களிறு = மதங் கொண்ட யானை. "களிறு மதயானை" [பிங்கலம். 2413]
வேய் + அம் >வேயம்>வேழம் = மூங்கில்; மூங்கில் முளைகளை விரும்பியுண்ணும் யாணைக்கும் அதே பெயர் ஏற்பட்டது.
அன்பிற்குரிய சங்கரய்யா,
உங்கள் வருகைக்கு நன்றி.
அன்பிற்குரிய சன்னாசி மற்றும் மணிவண்ணன்,
உங்களின் மறுவாக்கங்களையும் படித்தேன். சிறப்பாக இருக்கின்றன. என் பாராட்டுக்கள். ஒவ்வொரு குயவனும் செய்யும் போது வெவ்வேறு வகையில் குடங்கள் அமைவது இயற்கை தானே! இன்னும் பலரும் முயலட்டும்.
நிறங்களைப் பற்றிச் சொல்லுகையில் மஞ்சள் பற்றிச் சேர்த்து நான் சொன்னது, ஆங்கிலத்தில் இல்லை தான். அது நம் கொடிவழியில பயத்தில் மஞ்சள் அடிப்பதாகச் சொல்லுவதை எண்ணிச் சொன்னேன்.
மற்றபடி நிறங்களின் பெயர்களை கூடிய மட்டும் தமிழ்முறைப் படி சொல்லியிருக்கிறேன் என எண்ணுகிறேன். (இரண்டு நிறங்களைப் பற்றி மட்டும் விளக்க வேண்டும். பூஞ்சை நிறம் என்பது நாட்டுப்புற வழக்கில் pink என்பதைக் குறிக்கவே பயன்படுகிறது. purple என்பதற்கு ஆங்கில முறையில் சொன்னால் செந்நீலம் என்று குறிக்கலாம்; அல்லது கத்திரிப்பூ என்று சன்னாசி குறித்தது போலும் குறிக்கலாம். தமிழ்முறைப் படி அது வராது; இறக்கும் பொழுது (அரத்தம் சுண்டிப் போனதால்) நிறம் வெளிறிப் போனதாகத் தான் சொல்லுவார்கள். இது pale என்பதற்கு இணையாக ஆகும்.
அன்புடன்,
இராம.கி.
அருமை...அருமை...அருமை..
Post a Comment