Sunday, April 09, 2006

நினைவகம்

உதயச் செல்வி என்பவர் தோழியர் வலைப்பதிவில் முன்னால் ஒரு சமயம் கீழே வரும் புதுக்கவிதையை எழுதியிருந்தார். அதற்கு நான் இட்ட மறுமொழியைத் தனிப் பதிவாக இங்கு சேமிக்க வேண்டி இடுகிறேன்.

Antispyware-ஆல்
தேடி ஒழித்து
Virus Check-கை முழுதாய்
ஓடவிட்டு அழித்து
பொறுமையாய் அனைத்தையும்
Defragment செய்து
நெறிப்படுத்தி அடுக்கி
கொஞ்சம் புதுப்பித்தே ஆகவேண்டும்
அவசரமாய்
ஒருமுறையேனும்
என் மூளையையும்
அதன் நினைவகத்தையும்!

இந்தக் கவிதையை நல்ல தமிழில் சொல்ல முடியும்; என்ன, கொஞ்சம் மெனக்கிட வேண்டும்; அவ்வளவுதான். உதயச் செல்வியின் கருத்துக் குலையாமல் மரபுப் பாவில் கீழே சொல்ல முற்பட்டிருக்கிறேன். தவறிருந்தால் மன்னியுங்கள். ஓசை கூடக் கூட கவிதை சொல்லுதற்கு ஆர்வம் மிகும். புதுக் கவிதைகளில் ஓசை வரக்கூடாது என்ற விதியில்லை.

உளவறை*1 தேடி,
ஒட்டவே ஒழித்து,
வெருவி*2யைத் துழவி,
வெட்டென விரட்டி,
பொறுமையாய் அனைத்திலும்
சிதறல்*3 எடுத்து,
நெறிப்பட அடுக்கி,
புதுக்கவே*4 வேண்டும்,
அவக்கர*5 மாக,
ஒருமுறை யேனும்
என்னுடை மூளையை,
அதன்நினை வகத்தை!

1. உளத்தல் என்பது தோண்டியெடுத்தல். உளத்தலின் திரிவே உழத்தல் என்பது. உழவு செய்யும் போதும் நிலத்தில் தோண்டத்தான் செய்கிறோம். இங்கே நம்முடைய செய்திகளை, புலனங்களை இன்னொருவர் நம்மிடம் இருந்து உளந்து எடுக்கிறார். வறை என்ற சொல் ware என்பதற்கு இணையான சொல். ஆதி காலத்தில் உலர்ந்த பொருட்களே விற்பனைக்கு வந்தன. கருவாடு, உலர்ந்த மீன், உலர்ந்த காய், பழங்கள் என வெய்யிலில் வேக வைத்துப் பின் கிடைக்காத நாட்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கிய பொருட்களை ஒருவருக்கொருவர் பண்டமாற்றிக் கொண்டார்கள். பின்னால் அவற்றையே காசுக்கு விற்றார்கள். இந்த உலர்ந்த பொருட்களில் தான் வாணிகம் என்பது தொடங்கியது. சரக்கு என்ற சொல்லும் உலர்ந்து போன சருகில் இருந்தே வந்தது. எந்தச் சரக்கும் உலர்ந்தது தான். வறள்தல் என்ற வினைச் சொல்லும் உலர்தலையே குறிக்கும். வறுத்தல் என்ற சமையல் வினையும், வறுக்கப் படும் பொருளின் நீர்த் தன்மையை வாட்டிக் குறைப்பது தான். வறு என்னும் வினையடியில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் வறை.

சொவ்வறை = software,
கடுவறை = hardware;
பகிர்வறை = shareware;
பரிவறை = freeware;
உளவறை = spyware;
வறைக்கூடம் = warehouse.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். Anti spyware என்பதை அப்படியே சொல்லாமல் இங்கே ஒழிப்பதை வினையாகக் காட்டுவது தமிழ்நடைக்கு நன்றாக இருக்கிறது. கூடிய மட்டும் பெயர்ச்சொற்களைச் சரமாகப் போடுவதைத் தவிர்த்தால் தமிழ், செருமன் மொழி மாதிரித் தோற்றம் காட்டாது. வேறுவழி இல்லை என்றால் மட்டுமே பெயர்ச்சொற் சரங்களைப் பயில வேண்டும்.

2. தமிழில் கிருமி என்ற வடசொல் நெடுநாளாகப் பயிலும் சொல் என்றாலும் அது bacteria - வைக் குறித்தது. நல்ல தமிழில் bacteria -வைப் பட்டுயிரி என்று சொல்லுவோம். பட்டையாய் இருக்கும் உயிரி பட்டுயிரி. படுவது பட்டை. இப்படித்தான் மேலைநாடுகளில் bacteria-விற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். தமிழிலும் அதே போல கருத்தை எளிதில் கொண்டுவர முடியும்.

virus என்ற சொல்லைக் கிருமி என்றோ, பட்டுயிரி என்றோ குறித்தால் அதன் விதப்பான பொருள் வராது. virus என்பது நஞ்சு என்ற பொருள் உள்ளது. அது ஓர் ஒட்டுண்ணி. அது தனித்து இருக்கும் போது உயிர் இல்லாதது, வெறும் புரதமாய் இருப்பது. ஆனால் ஓர் உயிர் உள்ள கட்டகத்துள் (system) வந்தவுடன், அது ஒன்று இரண்டாகி, இரண்டு நாலாகி இப்படி மடங்கிப் (exponential) பெருகி ஓர் உயிர்ப்பைக் காட்டும். virus என்பது நம்மைத் திகைக்க வைத்து உலை வைப்பதால் அதை வெருவி என்று சொல்லலாம். வெருவு என்பதற்கு நஞ்சு என்றும் பொருள் வரும்.

துழ(஡)வுதல் என்பது checking தான். எனவே வெருவி துழவல் = virus check

3. சிதறல் = to fragment (v); சிதறு = fragment (n); சிதறு எடுத்தல் / சிதறல் எடுத்தல் = defragment; பெரும்பாலும் de என்ற முன்னொட்டு வரும் இடங்களில் எடுத்தல் என்ற வினையை பின்னால் வைத்துச் சொன்னால் சரியாக வரும்.

4. புதுக்குதல் = to make new; புதுக்குதல் என்பது தன்வினை; புதுப்பித்தல் = பிறவினை; தமிழில் பெரும்பாலும் தன்வினையை ஆளுவது மொழி நடையைக் கூட்டும். பிறவினை சேர்க்கச் சேர்க்க தமிழ் மொழி கொஞ்சம் விலகி நின்றாற் போல தெரியும்; நமக்கு நெருக்கமாய்த் தெரியாது.

5. அவக்கு, அவக்கு என்று ஓடினான் என்று சொல்லும் போது அவக்கு என்பது ஓசைக் குறிப்பு. வெறும் ஓசைக்குறிப்பால் தமிழில் ஏற்பட்டுள்ள சொற்கள் பல. அவக்கு நிலை அவக்கரம் எனப்படும். அதை வடமொழிப் பலுக்கில் அவ சரம் என்று சொல்லிவிட்டார்கள். அதன் அடிப்படை அவக்கரம் தான்.

அன்புடன்,
இராம.கி.

7 comments:

Anonymous said...

ஐயா "Phobia" மற்றும் "Paranoia" என்ற ஆங்கில சொற்களுக்கு ஏற்ற தகுந்த தமிழ் சொற்கள் என்ன?

வசந்தன்(Vasanthan) said...

//சிதறல் = to fragment (v);
சிதறு = fragment (n);
//

இவையிரண்டு மாறி வரவேண்டுமென்று நினைக்கிறேன்.
சிதறு வினையாகவும் சிதறல் பெயராகவுமல்லவா இருக்க வேண்டும்.

வெற்றி said...

ஐயா,
படித்தேன்.
மிக்க நன்றி.

அன்புடன்
வெற்றி

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

phobia, paranoia என்ற சொற்களைக் குறித்துக் கொள்ளுகிறேன். பொதுவாகப் பேச்சுவழக்கில் பயந்தாங்கொள்ளி என்று சொல்லுவோம். துல்லியமான சொற்களைத் தேடுவோம்.

அன்பிற்குறிய வசந்தன்,

காலம் கூறாத வினைச்சொல் வடிவை இப்படித்தான் தமிழில் சொல்லுவோம். வருதல்/வருகுதல், போதல்/போகுதல், செய்தல்/செய்குதல், நிற்றல்/நிற்குதல் என எல்லாமே அல்/தல் என்பதில் முடியும். அதே போல சிதறல்/சிதறுதல் என்பது காலம் கூறா வினைச்சொல் வடிவம் (infinitive form of the verb). to fragment என்பதற்கு இணையான வடிவம் இது தான்.

fragment என்ற பெயர்ச்சொல்லைச் சிதறு என்றும் சிதறல் என்றும் சொல்லலாம். இங்கே சிதறு என்று பயனாக்கி இருக்கிறேன். சிதறல் என்பது தொழிற்பெயர்; சிதறியதால் ஏற்பட்ட சில்லுகளுக்குச் சிதறு என்று பெயர். அது தொழிற் பெயரல்ல. அந்தத் தொழிலால் ஏற்பட்ட பொருட்களைக் குறிக்கிறது.

அன்பிற்குரிய வெற்றி,

வரவிற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி

கா. சேது (K. Sethu) said...

திரு இராம.கி.
//சிதறு எடுத்தல் / சிதறல் எடுத்தல் = defragment; பெரும்பாலும் de என்ற முன்னொட்டு வரும் இடங்களில் எடுத்தல் என்ற வினையை பின்னால் வைத்துச் சொன்னால் சரியாக வரும்.//

முள் எடுத்தல், களையெடுத்தல் போல பல இடங்களில் சரி. ஆனால் எடுத்தல் என்பதற்கு வேறு அர்த்தங்களும் உள்ளனவே. demagnetize என்பதை காந்தமாக்கலை (அல்லது காந்தத்தன்மையை) எடுத்தல் என்று சொல்வதை விட அவற்றில் அகற்றுதல் அல்லது நீக்கல் என்று சொன்னால் தெளிவு அதிகம் என நினைக்கிறேன்.

defragment என்பதற்கு சிதறு நீக்கல் / சிதறல் நீக்கல் என்பன கூடுதல் பொருத்தம் தானே? தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

ரவிசங்கர் said...

rod shaped என்பதில் இருந்து தான் bacteria என்ற பெயர் வந்தது. படுவது, பட்டை என்பதற்கும் rodக்கும் வேறுபாடு இல்லையா?

வெருவி பெயர் நன்று. ஆனால், இலகுவில் மக்களுக்குப் புரியாதே? நஞ்சு தமிழ் சொல் இல்லையா?

சிதறு தேங்காய் என்ற சொல்லை வைத்து நீங்கள் வசந்தனுக்கு தந்துள்ள விளக்கத்தை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

சொவ்வறையில் உள்ள சொவ், பரிவறையில் உள்ள பரி ஆகியவற்றுக்கான மூலப் பொருளை விளங்கிக் கொள்ள முடியவில்லை. விளக்கினால் மகிழ்வேன்.

எல்லாவற்றையும் பொருள், பொருள் என்று பொத்தாம் பொதுவாக சொல்வதை விட இப்படி குறிப்பாக சொல்வது நல்லது தான். softwareக்கு உள்ள பெயரை விட வறைக்கூடம் என்ற பெயர் மிகவும் பிடித்து உள்ளது.

ஊறுகாய் போல் இலங்கையில் வறை என்றும் உணவுப் பொருள் இருக்கிறது என நினைக்கிறேன். வற்றல், வறு என்றெல்லாம் சொற்கள் இருந்தாலும் இந்த வறை போன்ற சொற்களை புழக்கத்தில் கொண்டு வராமல் விட்டு விட்டோம்.

விக்கிபீடியாவில் free software, free licence என்பதை கட்டற்ற என்கிறோம். எந்தக் கட்டுகளும் இன்றி பயன்படுத்தத்தக்கது என்பதை எளிதாக புரிந்து கொள்ள உதவுகிறது.

கணினி virusக்கு நச்சுநிரல் என்பதும் பெரிதும் புழக்கத்தில் இருக்கிறது.

அவக்கு என்ற சொல்லுக்கும் அவசரத்துக்கும் தொடர்பை சுட்டியதற்கு நன்றி. இன்றும் கிராமப்புறங்களில் அவக்கு அவக்குன்னு தின்றான் என்று சொல்லும் வழக்கு இருக்கிறது.

நல்ல சிந்தனையைத் தூண்டும் இடுகை. நன்றி.

அதியமான் கோட்டை said...

படிக்கிறவர் என்ற சொல் மாணவர் என்று வருமானால்.

தமிழ் மாணவர் என்று சொல்வதை தமிழ் படிக்கிறவர் என்றா சொல்வது? அப்படி சொன்னால் அது தமிழ் பேசும் மாணவர் என்ற பொருள் தருமா இல்லை தமிழ்ப் பாடம் படிப்பவர் என்ற பொருள் வருமா?

தமிழ் பேசும் மாணவர் என்பதை தமிழ் படிக்கிறவர் என்றா சொல்ல வேண்டும்?

உங்களுக்கு முன்னிகை போட்டால் பதில் கிடைக்க மாட்டேன் என்றுதே, தனிப்பட்ட கோபதாபமா இல்லை நேரமின்மையா? :(