(பாவேந்தர் பாரதிதாசனின் நினைவை ஒட்டி பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பாடியது. அவர் நாளை நினைவு கூர்ந்து இங்கே இந்தப் பாவைப் பதிகிறேன்.)
அன்புடன்,
இராம.கி.
எவர்கொல் துணையே! கவர்பு உற்றனையே!
குவடு பட நடந்த சுவடும் மாறாது;
வான் பட்டு அதிரும் குரலும் தேயாது;
வல்லுயிர் செகுக்க மாற்றலர் வெரூஉம்
கொல் அயில் விழியின் இமையும் குவியாது;
முன்னைப் பெருமையின் முங்கு பேர் உணர்வால்
அன்னைத் தமிழ்க்கே அலங்கல் சார்த்தித்
தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்தி,
ஓச்சிய தடங்கை வீச்சும் ஓயாது;
உயிர் உணர்வு ஊரப் பொழிந்து உயர் வாழ்க்கைப்
பயிர் செழிப்பு ஊரப் பாடினை கொல்லோ!
இனியே
துவர் இதழ்த் தாமரை கவர்துளி மாந்தி
உவப்புற முரலும் கரு வண்டு ஒப்ப
இயற்கை தூங்கும் புலவரும் இல்லர்!
மயற்கை அகற்றும் புலவரும் இல்லர்!
மருட்சி அகற்றிடு புரட்சியும் இல்லை!
இருள் துயில் கொண்ட தமிழகம் எழவே
அருள்மொழி நெஞ்சத்து அறமும் மடிந்தது!
தயிர்கடை மத்தம் ஆகித் தமிழர்
உயிர்கடைந்து எடுக்கும் நின் பெரும் பிரிவால்
உள்ளமும் அறிவும் ஓய்ந்த
கள்ளமில் உணர்வின் கனியுநர் தமக்கே!
பொழிப்பு:
குன்றம் பொடிந்து படும்படி பெருமிதத்தோடு நீ நடந்து சென்ற காலடிகளும் இன்னும் மறையவில்லை; வானில் தெறித்து அதிரும்படி முழங்கிய நின் குரலொலியும் இன்னும் தேய்ந்து போகவில்லை; வலிந்த உயிர் அழிந்து போகும்படி பகைவர் அஞ்சுகின்றதும் உடலைக் கொல்லுகின்றதும் வெல் போல் கூரியதும் ஆன நின் விழியின் இமைகள் இன்னும் குவிந்து போகவில்லை; முன் நாளைய பெருமையுள் முழுகி எழுந்த பேருணர்வினால் தமிழன்னைக்குப் புகழ் அலை சுட்டியும், தீயின் ஒளிநாக்குகள் போலும் எழுத்துக்களினால் பாட்டில் சுடர் கொளுத்தியும், அரசோச்சி நின்ற நின் பெரிய கைகளின் வீச்சும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. உயிர்களின் உணர்வு மிகும்படிப் பாடல்களை மழையெனப் பொழிந்து உயரிய வாழ்க்கை எனும் பயிர் செழித்துப் புடை நிரம்பும்படி நீ பாடியிருந்தனையே!
இனியே, சிவந்த இதழ்கள் நிறைந்த தாமரையின் தேன் துளிகளைக் கவர்ந்து அருந்திய உவப்பின் மேலீட்டால் முரலுதல் செய்யும் கரிய வண்டைப் போல், இயற்கையோடு ஒன்றிப் படியும் புலவர் எனப்படுவோரும், இனி இலராக; மக்களின் அறிவு மயக்கம் அகற்றுகின்ற மறவர் எனப்படுவோரும் இனி இலராக; இருள் மண்டி உறக்கம் கண்டிருந்த தமிழ் நிலம் விழித்து எழும்படி, அருள் மழை பொழியும் அறம் பூண்ட நெஞ்சம் மடிந்துற்றதாக. தயிரை அலப்பிக் கடைகின்ற மத்துப் போலும், தமிழரின் உயிரைக் கடைந்தெடுக்கின்ற நின்னுடைய பிரிவினால் உள்ளமும் அறிவும் ஓய்தல் நின்ற கள்ளமற்ற உணர்வினாற் கனிந்து நிற்போர் தமக்கு, எவர் இனித் துணையாவரோ? இறப்பெனும் கள்வனால் கவர்ந்து கொள்ளப் பெற்றனையே!
விரிப்பு:
இப் பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும். பாவேந்தர் பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினம் மறைந்த ஞான்றை உள்ளக் கவற்சி மீதூரப் பாடிய கையறு நிலைப் பாடல் இது.
பாவேந்தரின் பெருமிதமான போக்கும், தமிழுக்கென ஓங்கி நின்ற குரலும், தமிழ்ப் பகைவர் அஞ்சிப் புறம் நடுங்கும் நோக்கும், பேரரசன் எனப் பெருமிதங் கொண்டு ஒச்சிய கைவீச்சும், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பெரும்பயனும் இன்னும் தமிழர்களின் நெஞ்சங்களில் காட்சியாகி நிற்கும் நிலையினைக் காட்டி, அவர் பெரும் பிரிவால் தமிழர் இழந்த இழப்பையும், அவலத்தையும் தொகுத்துக் கூறியதாகும் இப்பாடல்.
5 comments:
அன்பின் அய்யா,
பாவேந்தரின் நினைவு போற்றிய தங்களின் பா
என்னை ஆட்கொண்டது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
//தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்தி,//
இதலொரு சந்தேகம்!தீ,தீயாக எரியும்போது சுடர் எறிகிறது.எனவே சுடர் என்கிறோம்.பின்பு பாச்சுடர் எப்படிக் கொளுத்துவது?பாத்தான் சுடராக இருக்கும்போது-மீளவும் தீச்சுடர் கொண்டு, எரிந்து சுடரும் பாவை எதற்காகக் கொளுத்தவேண்டும்?தீச்சுடர்:"ஒளி நாக்குகளென்றால் அல்லது தீ நாக்குகள் என்றால் பாவும் சுடராகி, நாக்கை நீட்டும்போது அதைப் பற்றவைத்தல்...
இல்லையில்லை,சுடரென்றால் தீ,விளக்கு,ஒளி,திங்கள்,ஞாயிறு,தளிர்,தீச்சிகை என்று பொருள்படும்.எனவே பா விளக்கை எழுத்து விளக்கால்-அல்லது எழுத்துத் தீயால் பற்ற வைத்தார் பாரதிதாசன்!என்னவோ பாவேந்தர்கள் எழுதுகிறாங்கள்,நாங்கள் கம்மென்டு கேட்டுக்கணும்!
அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,
உங்கள் வீட்டில் அகல் விளக்கு, குத்து விளக்கு, நிலை விளக்கு என ஏதோ ஒன்று இருக்கிறது; அதில் திரி நீண்டு வெளியே தெரிகிறது. நீங்கள் எப்படிப் பற்ற வைக்கிறீர்கள் (பற்ற வைத்தல் = கொளுஹ்துதல்)? நெருப்பை உருவாக்க நெருப்புப் பயன்படுவதில்லையா? ஒரு தீக்குச்சியைத் தீப்பெட்டியில் தேய்த்து உருவாக்கிய தீச்சுடரைக் கொண்டு திரியில் தீ ஏற்றுவதில்லையா?
தீச்சுடர்க் குச்சியால் திரிச்சுடர் கொளுத்தும் போது தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்துவது
ஓர் அய்யப்பாடோ?
அன்பரே, காரணமில்லாமல் பெருஞ்சித்திரனாரைப் பாவலர் ஏறு என்று பலரும் சொல்லுவதில்லை. அவருடைய ஆக்கங்களைத் தேடிப் படியுங்கள். வியந்து போவீர்கள். அவர் ஒரு திறமையான பாவலர்; அவருடைய நூறாசிரியம் என்ற நூல் தமிழில் ஓர் ஒப்பற்ற படைப்பு.
நூறாசிரியத்தில் இருந்து இன்னொரு பாடலை உங்களுக்குத் தருகிறேன்.
நுரைதிரை சாய்த்த நுங்கேய் கிளிஞ்சில்
கரைசிறு மணலுள் கரப்பினும் ஒருகால்
அலைக்கை அகழும் அன்ன
உலைக்கு நெஞ்சு ஈங்கு உய்வது இயல்பே!
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய் இளங்கோ,
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி. பாவேந்தரை நினைவு கொள்ள இந்த வலைப்பதிவு உலகில் இருவராவது இருக்கிறோமே?
அன்புடன்,
இராம.கி.
அன்புள்ள இராம.கி:
நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! நூறாசிரியம்
பற்றி யாரும் எழுதி இருக்கிறார்களா என்று
தேடியதில், தங்கள் எழுத்துக்கள் மட்டுமே
தென்பட்டன. சங்க இலக்கியத்திற்கு
ஒப்பான பாடல்களாக கருதப்படும்
நூறாசிரியப் பாடல்களைத்
தமிழ் உலகம் இன்னும் ஒரு சிறிதும்
உணரவில்லை. 1970களில் எழுதினார் பாவலரேறு. அவருடைய பாடல்களில் இழையோடும் சொற்பொருள் அழகும், ஒத்த ஆழமும், ஒலிநடம் புரியும் இனிமைப்பொலிவும் கண்டு களித்தவர்களுக்கே விளங்கும் அன்றோ!
தங்கள் இடுகைக்கு நன்றி!
அன்புடன் செல்வா
வாட்டர்லூ, கனடா
மே 23, 2006
Post a Comment