Tuesday, April 04, 2006

புகை

அந்தப் பழக்கம் நுட்பியல் (technology) படிப்பின் முதலாண்டில் எற்பட்டது. எப்படி வந்தது என்று இப்பொழுது நினைவில்லை.

நண்பர்கள் அளித்த ஊக்கமா, அல்லது வெறும் வறட்டு படியமா (fashion), இல்லை ஒருவித உணர்வின் ஏங்கலா என்று இப்பொழுது சொல்ல முடியாது இருக்கிறேன். ஆனாலும் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியாக அந்தப் பழக்கம் எனக்குள் வளர்ந்தது. முதலில் சார்மினார் தொடங்கி, அடுத்து மார்க்கோ போலோ, பின் வில்சு, கடைசியில் கத்திரி (சிசர்சு) எனப் பொரிந்தை மாறியது தான் மிச்சம்; (பெயரை நெருப்பைக் கொண்டு பொரித்து எழுதுவதைத் தான் brand என்று ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கினார்கள். அப்பொழுது தானே பொரிந்தது கண்ணிற்குச் சட்டெனப் புலப்படும்?) கையில் பிடித்தது, முதலில் ஒன்று இரண்டானது; பின் இரண்டு நாலானது; அப்புறம் அது பத்தானது; இப்படி ஒரு பெட்டி, இரண்டு பெட்டி எனப் போய், ஒரு நாளைக்கு மூன்று பெட்டி வரைக்கும் அந்தப் பழக்கம் நீண்டது.

இந்தப் பழக்கம் எப்படி எல்லாம் ஒருவனை நிறைத்துக் கொள்ளும் என்பதை நுகர்ந்தே அறிந்தவன் நான். (நுகருதல் = முகருதல் = to smell; முகல் என்பது அடிச்சொல். smell என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அப்படியே இணையானது முகல். நாம் மணம், நாற்றம் என்ற சொற்களை இன்று பயனாக்கி வருகிறோம். முகல் என்பதும் அதற்கு இணையானது தான். முகல்ப்பது மோப்பது ஆகும். முகல்க்குதல் என்பது மோந்து பார்த்தல். smoke என்பதும் இந்த முகல்(ர்)க்கல் வினையில் எழுந்த கருத்துத்தான். ஒரே பொருளை இரண்டு விதமாகப் பார்ப்பதில்லையா? இந்தையிரோப்பியக் கருத்து ஒருவிதம்; நம்முடையது இன்னொன்று. இந்தப் பழக்கம் வெளியே இருந்து தங்களிடம் வந்து சேர்ந்த போது, முகர்க்கும் கருத்தில் பார்த்தது இந்தோயிரோப்பியக் கிளை; உயரும் கருத்தில் பார்த்தது தமிழியக் கிளை. புகுதல் என்பது உயருதல் என்ற பொருள் கொள்ளூம்; புகு+ஐ = புகை; அதாவது உயர்ந்து போகும் ஆவி.)

கல்லூரிக் காலத்தில் இப்படி ஒரு புகைப் பழக்கம் எனக்குள் தொற்றிக் கொண்டதை என் குடும்பத்தினர் யாருமே அறியார். வேறென்ன? கண்டிப்பு மிகுந்த தந்தையாரிடம் இதைக் கூவி அழைத்தா சொல்ல முடியும்? கூட இருந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே, இந்தப் பழக்கத்தின் முழு வீச்சை என்னில் கண்டவர்கள். விட முடியாது இருந்தேன் என்பதைக் காட்டிலும் விட வேண்டும் என்று தோன்றாது இருந்தேன் என்பதே சரி.

அய்ந்தாண்டுப் படிப்பில், தமிழ் ஆய்வு, நூற்றுக் கணக்கான நண்பர்கள், செம்மீன் (இறால் மீன்) மேல் ஈர்ப்பு, பல்நூறு திரைப் படங்கள், கணக்கற்ற கால்நடைகள் (ஆடுமாடு இல்லைங்க, காலாலே நடக்குறது), ஓரளவு குமுகப் பணி, தலை நிறைய இடது சாரி மெய்யியல், இன்னும் பலப் பல கற்று, கூடவே கொஞ்சூண்டு வேதி நுட்பியலும் கற்று வெளிவந்த போதும், இந்தப் பழக்கம் ஓயவில்லை; என்னைத் தொடர்ந்து வந்தது.

மறுபடியும் இரண்டாண்டு முது நிலை வேதி நுட்பியல்; இந்த முறை சென்னையில் ஒரு காட்டுக்குள் இருக்கும் இந்திய நுட்பியற் கழகம். முதலில் இடது சாரிப் போக்கின் வேகத்தில் வலுக் கட்டாயமாகத் தமிழை இறுத்தினேன் (இற்றுதல்> இறுத்தல் = to end). ஆறு மாதத்திற்குப் படிப்பின் பக்கமே, மேலோட்டமாக அன்றி, ஆழமாகத் தலையே காட்டவில்லை. புகை மற்றும் புரட்சியின் போதையில் ஊர் எங்கும் சுற்றினேன். யாராரோ பெருந்தலைகளை எல்லாம் சந்தித்தேன். "இதுதான் என் எதிர்காலம்" என்று செம்மாந்திருந்தேன். அந்தச் செம்மாப்பு சரிவதற்கு, நெடுங்காலம் ஆகவில்லை. பலரின் உண்மை முகம் வெளிப்பட்டது. ஏமாற்றம் கூடக் கூடத் தலையில் குவிந்து கிடந்த இடது சாரித் தலைக் கனம் குறைந்தது. "உருப்படியான வேலையைப் பார்ப்போம்" என்று இரண்டாவது துவ்வத்தில் (semester) இருந்து நுட்பியலில் ஆழத் தொடங்கினேன். கூடவே இந்தப் பழக்கம் குறைந்தது. ஆனாலும் அதை விட்டுத் தொலைக்கவில்லை.

வேலை கிடைத்துத் தூத்துக்குடி வந்து திருமணம் ஆகிய பின்னும் பழக்கம் தொடர்ந்தது. என் மனையாள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை; இவன் ஒரு திருத்த முடியாத "வாலி" என்று தண்ணீர் தெளித்ததாலோ என்னவோ, அவள் பொறுத்துக் கொண்டாள். வீட்டில் அவளுக்கு முன்னால் புகை பிடிக்க வெட்கப் பட்டு, வெளியே மட்டுமே இந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டேன். ஒரு நாளைக்கு 5, 10 என்ற நிலையில் அப்பொழுது இருந்தேன். மகன் பிறந்தான். பொறுப்புக் கூடியது மாதிரி ஒரு தோற்றம் ஏற்பட்டது.

கும்பணியின் குடியிருப்பில் ஒரு அடுக்கு மாடியில் முதல் அடுக்கில் இருந்தது என் வீடு. வீட்டின் எதிரே அதுவரை மணம் செய்து கொள்ளாத என் நண்பர்கள் இருவர் இருந்தனர். அவர்களைப் பார்க்க மற்ற நண்பர்களும் வருவதுண்டு. இரு வீட்டிற்கும் முன்னுள்ள முகப்பில் குட்டைச் சுவரின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு இந்தப் புகையை முகர்ந்து கொண்டு உரையாடி இருப்பது நண்பர்களின் பழக்கம். நான் மட்டும் வீட்டின் முகப்பில் இருந்து புகைப்பது கிடையாது. வெட்கம் பற்றி முன்னே சொன்னேன் அல்லவா?

திணைக்களக் கட்டுமானம் (construction of the plant) முடிந்து முந்துறுக்கும் பருவம் (commissioning phase) முடிந்து, ஒரு வழியாக மாறுகைக்கென விளைக்கும் பருவம் (commercial production phase) வந்து விட்ட காலம். இருந்தாலும் பொறியாளர் பலரும் நேரம் காலம் தெரியாமல், பட்டறையின் (factory) உள்ளே கண்ட நேரத்தில் போய், கண்ட நேரத்தில் வெளியே வந்து, ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்; குவித வேலை (shift work) (வேலைகளை இனம் பிரித்துக் குவித்துக் கொண்ட வேலை குவித வேலை; ஆங்கிலப் பொருளும் இது தான்.) என்பதெல்லாம் பெயருக்குத்தான்; வேலைப் போதை என்பது, புகைப்பதைப் போல ஒரு விட முடியாத பழக்கம்; சொல்லித் தெரிவதில்லை பொறிஞரின் கலை.

இந்தக் கால கட்டத்தில் தான், சரியான வேளை வந்தது.

திணைக்களத்திற்கு, முதல் நாள் இரவு சென்ற நான், 18 மணி நேரம் கழித்து, அடுத்த நாள் மாலை 4.00 மணிக்குத் திரும்பி வருகிறேன். வரும் வழியில், குடியிருப்பில் உள்ள வணிக வளாகத்தின் பெட்டிக் கடையில், "கத்திரி" வாங்கி இழுத்து விட்டுத்தான் வருகிறேன்.

மறுபடியும் நடை. மெதுவாக என் வீட்டிற்கு வந்து பார்த்தால், வீட்டின் முகப்பில் கிடக்கிற தீய்ந்து போன வெண்சுருட்டு (cigerette) அடிக்கட்டையை எடுத்து என் இரண்டரை அகவை மகன் வாய்க்குள் வைத்து இழுத்து இழுத்துப் பார்க்கிறான்; புகை வரவில்லை.

எனக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற வலி. அருகில் வதியும் என் நண்பர்களை இவன் பார்த்திருக்க வேண்டும். எந்தப் பழக்கத்தையும் அப்படியே திருப்பிச் செய்து தெரிந்து கொள்ளத் துடிக்கும் அகவை அல்லவா? குழந்தை அப்படியே செய்கிறது. இதை அதட்டிச் சரி செய்யலாம் தான். ஆனால் எந்த முகத்தோடு?

அடுத்த நாள் நிறுத்திவிட்டேன்.

ஆயிற்று 28 ஆண்டுகள். எல்லாவற்றிற்கும் ஒரு வேளை என்பது உண்டல்லவா?

அன்புடன்,
இராம.கி.

பி.கு. பின்னால் ஒருமுறை எனக்கும் என் மக்களுக்கும் நடந்த உரையாடல்:

"தம்பிகளா, ஏதேனும் இப்படிப் பழக்கம் இருக்கா?" - இது நான்.
"என்னப்பா நீங்க, உங்களை மாதிரி நினைச்சுக்கிட்டீங்களா? அப்படி எல்லாம் கிடையாது" - இது என் மக்கள். இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு மப்பு கொஞ்சம் கூடத் தாங்க! :-)

11 comments:

வசந்தன்(Vasanthan) said...

ஒரேயடியாக நிறுத்திவிட்டீர்களா?
புகைப்பழக்கத்தை நிறுத்த ஆலோசனையென்று சொல்பவர்கள்கூட படிப்படியாகக் குறைத்துவந்து பின் நிறுத்துவதே சாத்தியம் (நல்லதும்கூட) என்பதுபோல்தானே சொல்கிறார்கள்?

சிவகுமார் said...

சுவையான (புகையான? :-)) பதிவு.

abiramam said...

I am also looking for such an incident happen to me. Then only I quit smoking permanently. I have quit smoking many times and every time, I quit the quit of smoking within a week or two. Only once it last for a year but again i quit the quit. I am a bad boy.

abiramam said...

Mr. Vasanthan,

I could recall that I have read some article in BBC and one from Sujatha in Junior Vikatan. It all says that reducing the number of cigerettes day by day and quitting all one day is not at all possible. You (We) need to make a sudden bid of attempt to quit one fine day.

இப்னு ஹம்துன். said...

புகைப்பழக்கம் பற்றிய என் கவிதை இது!http://ezuthovian.blogspot.com/2005/05/blog-post.html

செல்வராஜ் (R.Selvaraj) said...

உங்கள் காலச்சுழலில் அழைத்துச் சென்று நல்ல விதயம் சொல்லி முடித்த பாங்கும் உரையும் மிக நன்று.

Mookku Sundar said...

வசந்தன்,

புகைப்பதை நிறுத்த ஒரே வழி, அதை உடனடியாக நிறுத்துவதுதான்.
படிப்படியாக நிறுத்துவது மிக மிக மிக கடினம்.

என் அனுபவம்:

http://mynose.blogspot.com/2004/04/blog-post.html

தமிழ் குழந்தை said...

அன்பரே,

உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவுள்ளது. தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். மிகவும் நன்றி!
தமிழ் குழந்தை,தமிழ் சிறுவன், தமிழ் சமையல்ருசி ,ஆன்மிகம் ,தமிழ் பொதுஅறிவு

அன்புடன்,
தமிழ் குழந்தை

Vidya said...

Naanum dharma adi vaangi irukkiren !!. From my father for smoking off an imaginary cigarette (Pencil). Only time my father ever raised his hands on me... P.S: Yennga veetula yaarum yennaikumey pugai pidikaradhu kedaiyaadhu !!!

இராம.கி said...

அன்பிற்குரிய வசந்தன்,

நான் ஒன்றும் திட்டமிட்டு நிறுத்தவில்லை. அந்தக் கணம் தோன்றியது. நிறுத்திவிட்டேன். அவ்வளவு தான்.

மற்ற நண்பர்கள் இங்கு சொன்னது போல், ஒரேயடியாக நிறுத்தினால் தான் நிறுத்த முடியும் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அன்பிற்குரிய பெருவிஜயன்,

வருகைக்கு நன்றி.

அன்பிற்குரிய அபிராமம்,

இன்னும் ஏதோ ஒரு நாளில் நீங்கள் நிறுத்த முடியும். ஆனால் உங்களின் ஆழ்மனத்திற்கு அது உறுத்த வேண்டும்.

அன்பிற்குரிய இப்னு ஹம்துன்,

உங்கள் வலைப்பதிவு சென்று படித்தேன். வாழ்த்துக்கள்.

அன்பிற்குரிய செல்வராஜ்,

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

அன்பிற்குரிய மூக்கு சுந்தர்,

உங்களின் பட்டறிவும் உடனே விடும்படித்தான் சொல்லுகிறது.

அன்பிற்குரிய தமிழ்க் குழ்ந்தை,

கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

அன்பிற்குரிய வித்யா,

வெறுமே தூவற்சில் (pencil) பிடித்ததற்கே இவ்வளவா? உங்கள் வீட்டின் கண்டிப்பு கூடப் போலிருக்கிறது.

வருகைக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

Dharumi said...

ஒரேயடியாக நிறுத்தினால் தான் நிறுத்த முடியும் என்பது என் பட்டறிவு ( அனுபவம்...இராமகி அவர்கள் பதிவுக்கு வந்தால் நல்ல தமிழில் எழுத ஒரு முனைப்பு வருமோ?)நான் பட்டதை, என் பட்டறிவை இங்கே எழுதியுள்ளேன்.