Wednesday, December 14, 2005

தமிழிசை பற்றிய ஏக்கமும், பொங்கு தமிழிசை இயக்கமும்

பத்ரியின் தமிழிசை பற்றிய பதிவைப் பார்த்தவுடன், அரையர் குழும்பில் இரண்டாண்டுகளுக்கு முன்னால் நடந்த பழைய உரையாடல் நினைவுக்கு வந்தது. அதை இங்கு மீண்டும் பதிப்பிக்கிறேன்.
---------------------------------------------
"சங்கீத வித்வத்சபை" யில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி பற்றிச் சொல்லி விட்டு, இரா.மு. கீழ்க் கண்டவாறு எழுதினார்:

"இது பற்றிக் கேட்கலாமென்று நாக்கு நுனி வரை வந்ததை அடக்கி க் கொண்டேன். நல்ல கச்சேரி. அந்த மன நிறைவோடு போகட்டும். முழுக்க முழுக்கப் பாரதி, பாரதிதாசன் பாடல்கள். யாராவது வாய்ப்பாட்டுக் கச்சேரி செய்வார்களா? ராஜ்குமார் பாரதி போன்றவர்கள் முயன்றால் முடியும்."
--------------------------------------------
நான் அதற்கு பின்னூட்டாக கீழே உள்ளதை எழுதியிருந்தேன்.
--------------------------------------------
"நல்லவேளை, அடக்கிக் கொண்டீர்கள், முருகன் :-) இல்லாவிட்டால், உங்களை ஒருமாதிரிப் பார்த்திருப்பார்கள். அழையாத வீட்டில் நுழையாத விருந்தாளி ஆகியிருப்பீர்கள்; இங்கெல்லாம் போய் இப்படிப் பேசலாமா?:-) பகலில் பக்கம் பார்த்துப் பேசுன்னு பெரியவுக சொல்லியிருக்காக; தியாகராசா, முத்துசாமி தீட்சிதர், சியாமா சாத்திரி பற்றிப் பேசினீர்கள்னா, உங்களை அங்கு மதிப்பாங்க! தமிழ்நாட்டில் போய் தமிழைப் பற்றிப் பேசிக்கிட்டு இருக்கலாமோ? :-) இதெல்லாம் வேண்டாத வேலை :-) அதுவும் பத்ரி சொன்னாப்பிலே இளங்கோவடிகள் பாட்டு? கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை! :-)

முழுக்க பாரதிதாசனைக் கேட்கணும்னா, ஓவ்வொரு ஆண்டும் மாணவர் நகலகம் அருணாசலம் நடத்து இயலிசை நாடக மன்ற இசை விழாவுக்குப் போங்க! அதை இந்த ஆண்டு முதல் பா.ம.க. நடத்துறதாக் கேள்வி.

(ஓராண்டு அந்த மன்றத்தில் நடந்த இசை நிகழ்வில் தமிழிசைப் பாணர் புசுபவனம் குப்புசாமி பண் ஆளத்தியோட விளாசிட்டார் போங்க! அவரை இன்னும் நாட்டுப்புறமுன்னே நம்மில் பலரும் நினைச்சிட்டு இருக்கோம். எல்லாப் பண்ணும் செவ்வியல் இசையும் தமிழில் பொருத்தி மிக அருமையாப் பாடக் கூடியவருங்கோ! அவருடைய அந்த நிகழ்ச்சியின் ஒலிப்பேழை கேட்டிருக்கீங்களோ? நித்யசிறீ மகாதேவன் கூட பாரதிதாசனில் ஒரு முழு ஒலிப்பேழை கொடுத்திருக்காங்க!)

எல்லாருக்கும் தமிழ்லே பாடணும்னுதான் உள்ளூற ஆசை இருக்கு! ஆனா, யாரு பூனைக்கு மணி கட்டுறதுன்னுட்டு அங்கும் இங்கும் திருதிருன்னு பார்த்துட்டு இருக்காங்க! அப்புறம் பிரிஞ்சு போன வெள்ளாடுன்னு யாரும் சொல்லிறப் படாது பாருங்க! அப்புறம் பொழைப்பு என்ன ஆகிறது? பூ விற்ற காசு மணக்குமா? புலால் விற்ற காசு நாறுமா? என்ன சொல்றீங்க? "
--------------------------------------------
என்று எழுதினேன். இதற்குப் பின்னூட்டாக இன்னொரு நண்பர் எழுதியது:
-------------------------------------------
இராம. கிருஷ்ணன்
"முழுக்க பாரதிதாசனைக் கேட்கணும்னா, ஓவ்வொரு ஆண்டும் மாணவர் நகலகம் அருணாசலம் நடத்து இயலிசை
நாடக மன்ற இசை விழாவுக்குப் போங்க! அதை இந்த ஆண்டு முதல் பா.ம.க. நடத்துறதாக் கேள்வி.)"
என்று எழுதியிருந்தார். மழைக்கு ஒதுங்குவது போல் நானும் இந்த பா.ம.க.வின் பொங்குதமிழ்ப்பண்
விழாவிற்குச் சென்றிருந்தேன். ஐந்தாவது முறையாக மேடையில் உணவுப் பஞ்சமில்லா அரங்கத்தில்
அமைதி காக்க வேண்டிப் பேச்சாளர் தோன்றிய போது எழுந்து வந்தேன். பா.ம.க. கட்சிப்
பிரசுரங்கள்,
கட்சித்தலைவர், தலைவரது முதல்வர் படம் பொறிக்கப்பட்ட சாவிக்கொத்துகள் வியாபாரம் சுறுசுறுப்பாக
நடந்து கொண்டிருந்தது.
-------------------------------------------
இந்தப் பின்னூட்டிற்கு மறுமொழியாய், நான் மீண்டும் எழுதினேன்.
--------------------------------------------
"நண்பரே! உங்களது பார்வை ஒருவிதமானது. சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் பார்வை உங்களுக்கு! நண்பர் இரா.மு. வேறு நறுக்கென்றும் சுருக்கென்றும் சொல்லுகிறார்.

நானொன்றும் பா.ம.க ஆளில்லை. அதே பொழுது, இதுபோன்ற முயற்சிகளை நீங்கள் பார்ப்பதுபோல் பார்க்க மாட்டேன். மேலே இருந்து கீழே பார்ப்பது ஒருவகை. கீழே இருந்து, பக்கவாட்டில் பார்த்து கூட இருக்கும் உடன்நெஞ்சன் (எப்படிச் சொல்லுவீர்கள்? சக ஹ்ருதயன்....இல்லையா?) பார்வை உயர தன்னால் இயன்ற படி வழி சொல்லிக் கொடுப்பது இன்னொரு வகை. கானாப் பாடுகிறவன் ஆர்வ மிகுதியில் கரகரப்பிரியா பாடும் போது தப்பும் தவறுமாகத் தான் தொடங்குவான். ஏனென்றால் அவன் நடக்க வேண்டிய தொலைவு கூட.

இசை பற்றி ஒரு காலத்தில் சற்றும் தெரியாத நான் கூட "அலை பாயுதே" வைத் தட்டுத் தடுமாறித்தான் தொடங்கினேன். கூடவே புரிந்து நகர, "வேயுறு தோளி பங்கனும்" " மன்னுபுகழ் கோசலைதன் .... என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ" வும், "மானா மதுரைக்குப் போகும் மச்சான் - எங்க சின்ன மச்சான், எங்க பெரிய மச்சானும் " கைகொடுத்தன. ஓசை சற்றே கை வந்தது.

இது போன்ற முயற்சிகள் தொடங்கும் போது முதலில் முட்டாள் தனமாகத் தான் இருக்கும். பெர்னாட்சாவின் பிக்மேலியன் நினைவிற்கு வருகிறது. கால காலமாக இந்த இசையின் அருமை தெரியாது ஒதுக்கி/ஒதுங்கி இருந்த கூட்டம், நீங்கள் அந்த அரங்கில் பார்த்த கூட்டம், தட்டுத் தடுமாறி எழுகிற கூட்டம், திடிரென்று நடந்துவிடாது. பட்டு விழுந்துதான் நடை போடும்.

அதனால் என்ன? விழுந்து எழாமல் மிதிவண்டி கற்றவர் யார்? இத்தனை கால அழிம்புகளுக்கும் பிறகு, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தை மருத்துவர் அய்யாவிற்காகக் கேட்க முற்படுகிறார்கள் அல்லவா? இது ஒரு தொடக்கம், நண்பரே! இதற்குப் பலன் கிடைக்கும். கேள்வி ஞானம் ஒரு நாள் அடிப்படை ஞானமாக மாறும்; நாளடைவில் அவர்களில் இருந்து, நூற்றில் ஒருத்தன் சிந்து பாடுவதில் பெரிய ஆளாக வருவான். வரட்டுமே? சிந்து பாடுவதில் JKB மட்டும் தான் இருக்க வேண்டுமா, என்ன?

கீழை நாட்டுக் கிழவன் ஒருத்தன் (அவன் தலைவனும் கவிஞனும் கூட) சொன்னானாம்; புரட்சி என்பது ஓவியம் அல்ல; இரவுச் சாப்பாட்டு விருந்தும் அல்ல; அது நளினமாகவும் ஒயிலாகவும் என்றைக்கும் இருக்க முடியாது; அது மாந்தர்களால் நடத்தப் படுவது."
--------------------------------------------
மீண்டும் ஒரு மார்கழி மாதம் வருகிறது. பழையபடி தமிழிசைக்குச் சிலர் குரல் கொடுப்பதும், அதைச் சிலர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடரும். எத்தனை தலைமுறைகள் இதைப்பற்றிப் பேசிக் கொண்டு இருக்கப் போகிறோமோ?

கிட்டத்தட்ட 3 தலைமுறை ஆகிவிட்டது.

இன்னும் ஓர் ஆண்டு மலரும்.

அன்புடன்,
இராம.கி.

14 comments:

icarus prakash said...

அய்யா, நன்றாக நினைவில் இருக்கிறது. அரையர் குழும்பில், கச்சேரியை, முனைவர் வாஞ்சி துவக்கி வைத்ததாக நினைவு. மீண்டிம் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்

Badri said...

ஆனால் ஐயா, குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் சீக்கிரம் வரும் என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

No use of crying like this every year and for generations.Why should
"they" change for "us"? In a democratic country,"they" can do what they want,sing what they like.After all, "they" rose to such a position through dedication and hardwork.

"We" can make our kids learn carnatic music.Once, "our" kids reach the top of carnatic music,then the trend can be altered.

Thangamani said...

உங்கள் குரலுக்கு நன்றி. புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடிய பல கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். அதே போல நித்தியஸ்ரீயின் பாரதிதாசன் பாடல்களும்.

சுந்தரவடிவேல் said...

அண்ணாமலையாரின் "சீர்வளர் பசுந்தோகை மயிலான்" உட்பட முழுக்க முழுக்கக் காவடிச்சிந்துகளாலான ஒலிப்பேழையொன்றை வைத்திருந்தேன். சௌமியா பாடியது. வார்த்தையும் தாளமும் புரிகின்ற போது எழும் உணர்ச்சி ஆட வைக்கும். பாரதியார் பாட்டுக்களைப் பாடுகிறேன் என்று கிளம்பும் பலரும் பெரும்பாலாகப் பாடுவது அவர் எழுதிய 'தெய்வப்பாடல்கள்' வரிசையிலிருந்துதான். ராஜ்குமார் பாரதியின் கச்சேரியொன்றுக்குப் பெருத்த எதிர்பார்ப்போடு போன போது அவரும் அவர் தாத்தா எழுதியதைப் போல "தோல் காது இருக்கும் தேசங்களில் பொறுத்துக் கொள்ளாத" வகையில்தான் பாடிக்கொண்டு போனார். விதி விலக்காகத் தாத்தாவின் இரண்டு பாடல்களை அதிகமாகப் பாடினார்.
ஆனாரூனா போன்றவர்களின் முயற்சிகள் மேலும் ஊக்குவிக்கப் பட வேண்டும். பதிவுக்கு நன்றி.

Anonymous said...

மிகச் சமீபத்தில் இறையன்பன் குத்தூஸ் என்பவரை வானொலிக்காக நேர்முகம் கண்டபோது 'இசுலாமியப்பாடல்கள் மட்டுமேயில்லாது தமிழிசைப் பாடல் கச்சேரியும் செய்து வருவதாகச் சொன்னார். தமிழிசைப் பாடல்களுக்காக மட்டும் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புவதாகவும் கூறினார். மாற்றம் வரத்தான் செய்கிறது. அரசியல்வாதிகள் குழப்பாமல் இருந்தால் போதும்.

பத்மா அர்விந்த் said...

கர்னாடக இசை என்றாலே தெலுங்கு கீர்த்தனைக, சமஸ்கிருத பாடல்கள் என்பது பல ஆசிரியர்கள் மனதிலும் வேரூன்றி இருக்கிறது. வாய்ப்பாட்டு என்று மட்டும் இல்லை, உச்சரிப்பே தேவை இல்லாத வாத்திய கருவிகளில் கூட கற்றுத்தரப்படுவது இவ்வகை பாடல்களே. ஆசிரியர்கள் தமிழ் பாடல்களை அதிக அளவு ஊக்கத்துடன் சொல்லி பயிற்சி தந்தால் நிலை மாறும். கடல்கடந்து வந்து இங்கே நியுஜெர்ஸியில் கூட ஆங்கில உச்சரிப்பில் தெலுங்கு பாடல்கள் இன்னும் அவஸ்தையாக இருக்கிறது. மாற்றம் வரவேண்டுமானால், அது பயிற்சி காலத்தில் இருந்தே வரவேண்டும்.

Anonymous said...

பாரதியார் பாட்டுக்களைப் பாடுகிறேன் என்று கிளம்பும் பலரும் பெரும்பாலாகப் பாடுவது அவர் எழுதிய 'தெய்வப்பாடல்கள்' வரிசையிலிருந்துதான்.

Excellent! First the complaint is that Tamil is not sung.Now, the complaint is Tamil songs sung are in praise of God! Next complaint is probably they are not singing songs of non Hindu Gods.
Then, the complaint will be that songs praising Periyar are not being sung in kutcheries!

Keep on complaining except attempting to learn the art which is the first step. Once, our kids too master this art, then we can make them sing in praise of anyone we want,in the language we want.

Trying to force others to adopt our point of view ,sing in praise of our idealogy,religion etc is waste of time and fascist attitude

Vanthiyathevan said...

திரு. இராம.கி,

//கீழை நாட்டுக் கிழவன் ஒருத்தன் (அவன் தலைவனும் கவிஞனும் கூட) சொன்னானாம்; புரட்சி என்பது ஓவியம் அல்ல; இரவுச் சாப்பாட்டு விருந்தும் அல்ல; அது நளினமாகவும் ஒயிலாகவும் என்றைக்கும் இருக்க முடியாது; அது மாந்தர்களால் நடத்தப் படுவது."//

இதைக் கூறியவர் யாரென்று அறிய அவா. மேலும் இக்கூற்றில் "புரட்சி" என்பது அனைத்துத் துறைகளுக்கும் பொதுமைப்படுத்தப்பட்டதா? எச்சூழலில் இக்கருத்து சொல்லப்பட்டது என்பதை தயவு செய்து விளக்கமுடியுமா?

Natarajan Srinivasan said...

ஐயா

உங்கள் பதிவிற்கு நன்றி.

புஷ்பவனம் குப்புசாமி அசாத்திய திறமை வாய்ந்தவர். இவர் நாட்டுப்புற இசை தவித்து தமிழிசையையும் சிறப்பாக பாடக் கூடியவர் என்பதை பலர் அறியாமலேயே இருக்கிறார்கள். அந்த ஒலிப்பேழையை வாங்கிக் கேட்க ஆவலாயிருக்கிறேன்.

அன்புடன்
நடராஜன்.

சே said...

//கீழை நாட்டுக் கிழவன் ஒருத்தன் (அவன் தலைவனும் கவிஞனும் கூட) சொன்னானாம்; புரட்சி என்பது ஓவியம் அல்ல; இரவுச் சாப்பாட்டு விருந்தும் அல்ல; அது நளினமாகவும் ஒயிலாகவும் என்றைக்கும் இருக்க முடியாது; அது மாந்தர்களால் நடத்தப் படுவது."//

இதைக் கூறியவர் யாரென்று அறிய அவா. //

மாவோ சே துங்????

நற்கீரன் said...

பொன்.சுந்தரலிங்கம். இனிமையான பாடகர். தமிழ் "எழுச்சி" பாடல்களுக்கு புகழ் பெற்றவர். நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லையே. (http://media.webtamilan.com/eelasongs01.html)

dwainflynn31381933 said...

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog

நா.கண்ணன் said...

பாரதிதாசனின் "துன்பம் நேர்கையில்" பாடலுக்கு புதிய ஊக்கத்துடன், புதிய மெருகுடன் சுதா இரகுநாதன் பாடிய பாடலை "நாத உபாசனை" வலைப்பதிவு வழியாக கேட்டு எழுதுகிறேன். அற்புதமாக வந்திருக்கிறது. ரொம்ப அருமையான குலசேகர ஆழ்வார் பாடலொன்றை அரியக்குடியின் வாரிசு ஒன்று பாடும் பாடலின் தொடுப்பும் அங்கு கிடைத்தது. இப்படித் தமிழிசை பொங்கும் நிகழ்வுகளை இனம் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும். "சித்திரமும் கைப்பழக்கம்"! எல்லோரும் தமிழிசை விரும்ப ஆரம்பித்தால் பாணர்கள் பாடித்தானே ஆகவேண்டும்!