Monday, May 23, 2005

தமிழ் வாழ்க - ஒரு பின்னூட்டு

தமிழ் வாழ்க என்ற தலைப்பில் திரு கிச்சு பதிந்த பதிவிற்கான பின்னூட்டு, பெரிதாய் இருந்ததால் அங்கு இடமுடியவில்லை. எனவே இதைத் தனிப்பதிவாக்குகிறேன். பொறுத்துக் கொள்க!

நீங்கள் உங்கள் கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய தமிழறிஞர் யார் என்று நான் அறியேன். அது முகமையான செய்தியும் அல்ல. "இந்தச் சொல் அங்கிருந்து இங்கு வந்ததல்ல, இங்கிருந்துதான் அங்கு சென்றது" என்று அவரைப் போன்ற சிலர் ஏன் வாதிடுகிறார்கள் என்று நீங்கள் எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? காரணமில்லாமல் அவர்கள் செய்ய மாட்டார்களே? ஆழ்ந்து பார்த்தால் ஏனென்று புலப்படும். முன்னால் இங்கு தேவ மொழி என்று பரப்பட்ட முட்டாள் தனமான மூதிகங்களையும், எல்லாமே வடக்கிருந்து வந்தது தான் என்று சொல்லிச் சொல்லி இந்த மக்களின் பெருமிதத்தைக் குலைத்ததிற்குமாக, இப்பொழுது தாங்கள் கண்ட ஆய்வின் படி உண்மையை நிலைநாட்ட அவர்களைப் போன்றோர் முயலுகிறார்கள். நீங்கள் அவரிடம் பார்த்தது முதல்வினை அல்ல; மறுவினையே. எந்த ஒரு ஆய்வாளனும் செய்யக் கூடியதைத்தான் அவரைப் போன்றோர் செய்திருக்க வேண்டும். இந்த அளவிற்கு இவர்கள் மனத்தை ஆழமாக முற்கால முதல்வினை தாக்கியிருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்களேன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முதல்வினை பற்றிப் பேசுதற்கு மறுத்துவிட்டு மறுவினையை மட்டும் குறைகூறுவது இந்தக் காலப் பழக்கம் போலும். உங்கள் வாதத்தின் படி, சூரியன் புவியைச் சுற்றிவருகிறது என்று முன்னாளில் உணர்ந்ததைத் தவறு என்றும், புவிதான் சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொல்லுவதும் தவறுபோலும். ஏனென்றால் இவர்கள் முன்னதை மறுக்கிறார்கள் அல்லவா?

அடுத்து இந்த நாவலந்தீவினில் ஏற்பட்ட சொற்களின் போக்குவரத்தைப் பற்றி அவர் கூறியதைத் தொடர்ந்து, நீங்கள் நாவலந்தீவிற்கும் வெளியிலிருந்து வந்ததாகச் சொல்லப்படும் உள்ளேற்றம் (invasion) பற்றியதோடு தொடர்பு படுத்தி ஒரு பொறி கிளப்புகிறீர்கள் பாருங்கள்; இது தேவையா? எங்கிருந்து எங்கு தாவுகிறீர்கள்? எங்கோ கிடக்கும் இரண்டையும், இங்கு கிடக்கும் இரண்டையும் சேர்த்து நாலு என்பது என்னவிதமான வாதம்? இதற்குப் பெயர்தான் இட்டுக் கட்டிய வாக்குவாதம்.

மொழியியல் என்பது அதற்கென சில ஒழுங்கு முறைகளை வைத்துக் கொண்டு அதன்படியே தன் ஆய்வுகளைக் கையாளுகிறது. மொழியியலும் ஓர் அறிவியல் தான். மொழியியலுக்கு வெளியில் உள்ளோருக்கு மொழியியலுக்குள் கையாளும் சொல்லொப்புமை வாதங்கள் சரியா, இல்லையா என்று புரியாமல் போகலாம். அது ஒன்றும் வியப்பில்லை. அந்தந்த அறிவியலுக்கு என்று சில நடைமுறைகளும் நெறிமுறைகளும் இருக்கின்றன. அது அறியாதோருக்கு எல்லாம் மாயம் போலவும், கலைந்து போன நூற்கண்டில் முடிவு எது தொடக்கம் எது எனப் புரிபடாததாகவும், காட்சியளிக்கும். அந்தத் துறைக்கு வெளியிருப்போர் அதைப்பற்றி அரைகுறை அறிவோடு முன்னிகை (comments) அளிப்பது தவிர்க்கப் படவேண்டியது. வேதியியலில் இந்த மூலக்கூறு இன்னொன்றோடு தொடர்பு உடையதா இல்லையா, ஒரு கரைசலுக்குள் இருக்கும் அடிப்படைப் புனைகளில் (components) எத்தனை விதமங்களை (species) உன்னிக்க முடியும், அவற்றில் எத்தனையை அடையாளம் காணமுடியும், அவற்றின் உருவாக்க நெறிமுறைகள் யாவை என்பதை கரிமவேதியலிலோ, உயிர்க் கரிம வேதியலிலோ விவரம் தெரிந்தோருக்குத் தான் புலப்படும். வெளியாருக்கு அது மாய மந்திரிகமாகத் தான் தெரியும். அறியாமல் இன்னோர் இயலைப் பற்றிக் குறை சொல்லுவது படித்தவருக்கு அழகல்ல.

மொழி என்பது நம் எண்ணங்களை அடுத்தவருக்கு சேர்ப்பிக்க உதவும் கருவி மட்டுமல்ல. அதற்கும் மேற்பட்டது. இது பற்றிப் பல பதிவுகளும், கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். எந்த நேரத்தில், எதுபோன்ற நிகழ்வுகளில் குலவை இட வேண்டும் என்று தெரிந்திருந்தால் தான் குலவை இடுவதற்குப் பொருளுண்டு. தென்பாண்டி நாட்டுப் பழக்கம் தெரியாதவனுக்குக் குலவை இடுவது புரிபடாததாகத் தான் இருக்கும். என்னுடைய பண்பாடு, பழக்க வழக்கம் தெரியாதவனுடன், "மாலை இனிதாக இருக்கிறது" என்றால் அவன் விளங்காது நிற்பான். ஆங்கிலக்காரன் நம்மிடம் வந்து "உங்கள் வெதுவெதுப்பான வரவேற்பிற்கு நன்றி" என்றால் நாம் ஙே என்று விழிப்போம். மொழி ஒரு கருவி என்ற வாதம் வெறும் தட்டையான வாதம். இதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிற்று. வேறு ஏதாவது புதிய வாதம் சொல்லிப் பாருங்கள். தமிழ் மொழி என்பது தமிழர் குமுகாயத்தின் கூட்டுப் பட்டறிவின் (collective experience) வெளிப்பாட்டு உத்தி. ஒரு தமிழன் பேசுவதே இன்னொரு தமிழனுக்கு, ஒரேவிதப் பின்புலம் இல்லையென்றால், புரியாத போது, இது போன்ற மொட்டையடி அடிப்பது சரியல்ல. "என்னண்ணே, இப்படி நட்டமே நின்னா எப்படி, அப்புறம் புழிஞ்சு விட்டுருவாக, பையப் பாத்து நடங்க" எங்கே இன்னொரு மொழிக்காரனிடம், ஏன் சிவகங்கைப் புழக்கம் இல்லாத தமிழனிடம், என் எண்ணத்தை இது சேர்ப்பித்து விடுமா? "மொழி என்பது நம் எண்ணங்களை அடுத்தவருக்கு சேர்ப்பிக்க உதவும் கருவி" - என்ன ஒரு வறட்டுத் தனமான புரிதல். இசைத்தட்டுக் கீற்றல் போல மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?

ஆங்கிலத்தில் படிப்பதற்கும் சொவ்வறை/ மென்பொருள் எழுதுவதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அதில் ஈடுபட்டு இருப்பவர்களுக்குத் தெரியும். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டே பேசுவேன் என்றால் நான் ஒன்றும் சொல்ல முடியாது. எந்த ஒரு புது விதயத்தையும் தமிழிலும் சொல்லத் தெரியாது, ஆங்கிலத்திலும் சொல்லத் தெரியாது, இரண்டுகெட்டான் வாழ்க்கையில் ஒரு பரம்பரையே உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு வழி ஆங்கிலத்தில் படிப்பதாம்?!

பொதினச் செலுத்தத்தில் (பொதினச் செலுத்தம் = business process) வெளியூற்றைத் (வெளியூற்று = outsource) தேடுகிற இன்னொரு துறையில் ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டுமே ஒழிய அடிப்படை இயல்களைப் புரிந்துகொள்ள ஆங்கிலம் தேவையில்லை. இது போன்ற பம்மாத்துக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்று பார்ப்போம். ஆங்கிலத்தில் படித்தறியா, ஆனால் ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுத்த சீனரும், மெக்சிகரும், பிலிப்பினோவும் பொதினச் செலுத்த வெளியூற்றைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாம் கூலிவீதம் எவ்வளவு என்ற கணக்குத்தான். ஒரு இந்தியனின் மணி நேரக் கூலி 9 வெள்ளி என்றால் பிலிப்பினோவின் கூலி 11 வெள்ளி, மெக்சிகனின் கூலி 10 வெள்ளி, சீனனின் கூலி 7 வெள்ளி. நாளைக்கு யாரோ ஒரு சிங்களக்காரன் 6 வெள்ளிக்கும், ஒரு பங்களாதேசி 5 வெள்ளிக்கும் வந்தால் BPO அங்கு பறக்கும். நீங்கள் என்னவென்றால் இந்தக் கூலி விவரங்களின் ஆழம் புரியாமல் மெய்யறிவியல் (philosophy) சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். என்னவோ, ஆங்கிலம் படித்தால், அடுத்த நுணுத்தமே, குபேரன் நம் வீட்டைத் தட்டிக் கொண்டு வந்து விடுவான் போலச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். (மறுபடியும் நான் அழுத்திச் சொல்ல வேண்டும். ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று நூற்றிற்கு நூறு ஒப்புக் கொள்ளுவேன்.)

அறிவியல், கணக்கு போன்றவற்றையாவது ஆங்கிலத்தில் கற்பிக்கலாமே என்ற உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு. நீங்கள் கேட்ட பையன் விடை சொல்லாததினாலேயே சட்டென்று எப்படிப் பொதுமைப் படுத்தினீர்கள்? அந்தப் பையனுக்கு அறிவியலின் மேல் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். இவன் புரியாமல் வெறுமனே மனப்பாடம் பண்ணியிருக்கலாம். அந்தக் கேள்வியைப் படிக்காதிருந்து இருக்கலாம். அவனுக்குச் சரியான ஆசிரியர் இல்லாது இருக்கலாம். அடிப்படையில் அவன் படித்த பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கும் நடைமுறை, ஒழுங்கு போன்றவை சரியில்லாது இருக்கலாம். இது போன்ற நூறு காரணங்கள் இருக்கலாம். இதை வைத்துக் கொண்டு, காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைஒயாக ஒரு அரங்கில் பெரிய வாக்குவாதம் செய்ய வந்துவிட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது.

இனி அடுத்த மாநிலத்தவர் நம்மேல் வெறுப்புக் கொள்ளுவது பற்றி வியப்புக் கொள்ளுகிறீர்கள். இதில் என்ன வியப்பு. இது போன்ற உணர்வுகள் தெரிந்தோ, தெரியாமலோ இருக்கத்தான் செய்யும். அவர்கள் நம் அண்டை நாட்டார் தானே? பிரஞ்சு நாட்டில் ஆங்கில எதிர்ப்பும், சுபெயின் நாட்டில் பிரஞ்சு எதிர்ப்பும், பெல்சிய நாட்டில் டச்சு, பிரஞ்சுக் காரர் இருவருக்கும் இடையில் எதிர்ப்பும் ..... இப்படி எதிர்ப்பு எங்குதான் இல்லை? ஊராருக்கு நல்லுரை சொல்லுமுன்னால், மற்ற நாடுகளையும் கொஞ்சம் பாருங்கள் அய்யா!

மற்ற மாநிலத்தவர் பற்றிச் சொல்லி ஆந்திரக்காரர் அவ்வளவு வெறுப்புக் கொள்ளாததற்கு, பெரியார் ஈ.வெ.ரா. காரணமோ என்ற அய்யப் பாடு. இது என்ன போகிற போக்கில் சேறடிப்பா? பெரியார் ஈ.வே.ரா. கன்னடமொழி பேசிய நாயக்கர். அவர் கொடிவழி தெலுங்கு பேசியதில்லை.

வேற்றுமொழியை விரட்டுவோம் என்று தமிழன் ஒரு நாளும் சொல்லாது இருந்ததால் தான் கி.பி. 200 முதல், 1800 ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் தமிழ் அரசாணை மொழியாக ஆகாமல் இருந்தது. "அட, வெட்கம் கெட்ட தமிழா, இன்னும் ஊமையாய் இருந்தால், உன்னைச் சூறையாடிவிட்டுப் போய்விடுவார்கள். உன் நாட்டிலாவது தமிழைப் பேசு, தமிழை ஆள வை" என்று சொல்லுவது உங்களுக்குத் தவறாகத் தெரிகிறது. நாங்கள் வேறு ஊர்களில் தமிழ் ஆளவேண்டும் என்று சொன்னால் தான் அது வன்முறை. எங்கள் மக்களிடம், "இனிமேலும் அடிமைப் பட்டம் கட்டிக் கொண்டு நிற்காதீர்கள், இங்கு தமிழ்தான் ஆளவேண்டும்" என்று சொல்லுவது எங்கள் உரிமையை உணர்த்தும் ஒரு செயல்முறை.

வடமொழி தேவமொழி என்று எங்கள் நடுவிலேயே சொல்லி, பலக்கிய தன்மை (complex) உண்டு பண்ணிக் கொண்டிருந்ததை எங்கு போய்ச் சொல்லுவது? "முடியிருக்கிறவ, கொண்டைமுடிவா" என்பது நாட்டுப்புறச் சொலவடை. தமிழின் தொன்மை சொல்லுவதால் எல்லாம் எந்த ஒரு மலையாளியோ, கன்னடரோ, ஆந்திரரோ முரண்டு பண்ணிக் கொள்ளவில்லை. "காவிரியில் தண்ணீர் கேட்கிறோம், மேற்கில் விழும் ஆறுகளில் அணை கட்டித் தண்ணீரைத் திருப்பிவிடச் சொல்லுகிறோம், தெலுகு கங்கையில் தண்ணீர் விடவில்லையே, பணம் கொடுத்தோமே" என்று கேட்கிறோம். ஆக இது எல்லாமே பொருளியல் வரிதியான சிக்கல். அதனால் அவர்கள் முரண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். மராட்டியத்திற்கும் - கன்னடத்திற்கும், கன்னடத்திற்கும் - ஆந்திரத்திற்கும், மராட்டியத்திற்கும் - ஆந்திரத்திற்கும் இடையே இருக்கும் சிக்கல் எல்லாம் மொழியால் வந்ததாய்க் கதைவிட்டுப் பாருங்களேன்? கேப்பையில் நெய்வடிகிறது என்று கேட்பதற்கு ஆட்கள் அங்கு இருக்கிறார்களா என்று பார்ப்போம்.

மொழி ஒரு இனமா என்று கேட்டிருந்தீர்கள். மொழியும் இனம். இந்தியத் தமிழர்களுக்கும் , ஈழத் தமிழர்களுக்கும் உள்ள வெறுப்பும் பொருளியல், அந்தக்கால பண்னைக் குமுகாய சாதிச் சிக்கல்களின் அடிப்படையில் எழுந்தது. கொஞ்சம் வரலாறு படியுங்கள். கூட்டிப் பெருக்குவது போல் முன்னிகை தந்து கொண்டு இருக்காதீர்கள்.

இனி அடுத்து ஈழத் தமிழர்கள் மேல் ஒரு கரிசனம். அப்பாடா, இப்பொழுதாவது இது போல ஒரு சிலருக்கு தமிழ் என்ற உணர்வு, ஒரே கருப்பையில் பிறந்தவன், அண்ணன் - தம்பி என்ற புரிதல் வருகிறதே? தமிழ்நாட்டில் தான் ஈழம் என்று பேசினாலே பேர்சொல்ல முடியாத "வரிவிலங்கு" என்று பட்டமிட்டு பொடா, தடா என்று விடுவார்களே, அப்புறம் எங்கே எல்லோரும் பேசுவது? நடுவண் அரசிற்கும், தமிழக ரசிற்கும், நாங்கள் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசுவோம் என்று ஒரு விண்ணப்பம் போடுவீர்களா?

அப்புறம், சாதி உணர்வைத் தூண்டி விடுவது யார் என்று ஒருபக்க வாதம் போடாமல், மொத்தமாகப் பாருங்கள். புரையோடிப் போன புண்கள் ஆறுவதற்கு நாட்கள் ஆகும்.

ழ் என்பதைப் பலுக்குவோம். ழ என்பதை ஒழுங்காக உயிர்தரிக்க (=உச்சரிக்க)ப் பழகுவோம்.

அன்புடன்,
இராம.கி.

19 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//மொழி ஒரு கருவி என்ற வாதம் வெறும் தட்டையான வாதம். இதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிற்று. வேறு ஏதாவது புதிய வாதம் சொல்லிப் பாருங்கள். தமிழ் மொழி என்பது தமிழர் குமுகாயத்தின் கூட்டுப் பட்டறிவின் (collective experience) வெளிப்பாட்டு உத்தி. ஒரு தமிழன் பேசுவதே இன்னொரு தமிழனுக்கு, ஒரேவிதப் பின்புலம் இல்லையென்றால், புரியாத போது, இது போன்ற மொட்டையடி அடிப்பது சரியல்ல.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா.

// "என்னண்ணே, இப்படி நட்டமே நின்னா எப்படி, அப்புறம் புழிஞ்சு விட்டுருவாக, பையப் பாத்து நடங்க"//

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

'நட்டமே நின்னா' & 'புழிஞ்சு'

இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் ஐயா.

Mahamaya said...

மொழியை, பிறர் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் ஆயுதமாகக் கைக்கொண்டு, வருங்கால சமுதாயத்தின் எதிர்காலத்தோடு சிலர் விளையாடிக்கொண்டிருப்பதை நியாயப்படுத்த முயல்கிறது உங்கள் வாதம். நாம்தான் முன்னுக்கு வந்து விட்டோமே, பிறர் உணர்வுகளோடுதான் சிறிது விளையாடுவோமே!

"ஆங்கிலம் கற்க வேண்டாம். ஆனால் பேசத்தெரிந்தால் போதும்" - சிறப்பான வாதம்!

தமிழும் வேண்டும், ஆனால் பிற மொழிகள் மீது வெறுப்புதான் வேண்டாம் என்பதுதான் நான் எழுதியதன் அடிப்படைக் கருத்து. ஆனால் எல்லோரும் இஷ்டம்போல் திரிக்கலாம். இல்லாவிட்டால் தன்னை மொழிக்காவலனாக எப்படி முன்னிறுத்துவது!

மற்றபடி உங்கள் வடமொழி வெறுப்பும், பார்ப்பன எதிர்ப்பும் எல்லோரும் அறிந்ததே. இதில் புதிதாக ஒன்றுமில்லை.

மாயவரத்தான் said...

'தமிழை வாழ வைக்கிறேன்' என்ற பெயரில் அரசியல்வா(ந்)திகள் அதை பிய்த்து பிராண்டாமல் இருந்தாலே போதும்.. தமிழ் நன்றாக வளர்ந்து விடும்.

Anonymous said...

மாயவரத்தான்.
ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்கி நீங்கள்(உங்களைப் போன்றவர்கள்)
பிய்த்து பிராண்டாமல் இருந்தாலே போதும். தமிழ் நன்றாக வளர்ந்து விடும்

ஆங்கிலமும் தமிழும் ஒழுங்காக தெரியாத ஒரு தமிழ் சமூகத்தினை உருவாக்க வேண்டும் என்றா சொல்கின்றீர்கள்?

SnackDragon said...

//'நட்டமே நின்னா' & 'புழிஞ்சு' //
மதி,
நட்டமே என்றால் நேர்குத்தாக,செங்குத்தாக நிற்பது என்ற பொருளில் கேள்விப்பட்டதுண்டு.
பிழிந்து = புழிஞ்சு. ஆனால் இங்கே இந்த வாக்கியத்தில், வட்டார வழக்காகையால் என்ன பொருளில் வழங்குகிறார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

இராம.கி said...

அன்புடையீர்,

என்னுடைய சொந்த வேலைகளில் அலைந்து கொண்டிருக்கிறேன். இடையே சிறிது நேரம் கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன். அது முடியாமல் போய்விட்டது. அடுத்து ஒரு 10 நாட்களுக்கு இந்தப் பக்கம் வரமுடியாது. "நட்டமே நிற்பது" பற்றி பின்னால் எழுதுகிறேன். அது தஞ்சைப் பக்கம் போகும் சிவகங்கை வேளாண் கூலித் தொழிலாளர்கள் பேச்சு. பின்னால் விளக்குகிறேன்.

திரு கிச்சுவின் பின்னூட்டிற்கு நீண்ட மறுமொழி அளிக்கவேண்டும். பின்னால் வாய்ப்புக் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். பார்ப்பன எதிர்ப்பு என்ற மழுங்கிப் போன மொந்தை அடியை அவர் கொடுத்திருக்க வேண்டாம். என் பதிவுகளைத் தொடர்ந்து படித்திருந்தால் என் அடித்தளங்களைக் கொச்சைப் படுத்தியிருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். வெறுப்பு என்னும் மையூற்றி எழுத எனக்கு வெகு நேரம் பிடிக்காது. ஆனால் செய்ததில்லை.

அவர் எல்லோர் மேலும் கறுப்பு, வெள்ளைச் சாயம் பூசுகின்ற வேலையைத் தவிர்க்கலாம். தமிழர் யாரும் வேறு மொழிகளைப் படிப்பதையும், (கற்பது என்று சொல்ல வேண்டுமோ?) புழங்குவதையும் தவறு என்று சொல்லவில்லை.

வடமொழியை ஓரளவு படிக்க முயற்சிப்பவன் என்ற முறையிலும், தமிழிய மொழிகளின் சொல்லாட்சிகளை ஆழ்ந்து தேடிப் பார்க்கிறவன் என்ற முறையிலும், டச்சு, செருமன் என மேலை மொழிகளில் ஓரளவு பழக்கம் உள்ளவன் என்ற முறையிலும், "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் வரவேண்டும்" என்று விரும்பிய எட்டயபுரத்தானைப் பலகாலம் படித்தவன் என்ற முறையிலும், பிறமொழி வெறுப்பு எனக்குக் கிடையாது.

ஆனால் என்னையே, என் மொழியையே அரித்துச் சூறையாட முற்பட்டிருக்கும் காலத்தில் என்னால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது. எங்கள் முன்னாலேயே தமிழே அறியாத ஒரு தமிழ்ப் பரம்பரை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாங்கள் வாய்பேசாதிருந்தால் அப்புறம் நாங்கள் தமிழராய்ப் பிறந்து பயனில்லை.

அன்புடன்,
இராம.கி.

சுந்தரவடிவேல் said...

இந்தப் பதிவும், உங்கள் எழுத்தும் என்னைப் போன்றோருக்கு நல்லதொரு வழிகாட்டியும், உற்ற துணையுமாகும். நன்றி.

Anonymous said...

நன்றிகள் இராம.கி அய்யா.
இது மிகவும் ஆழமாக, அதே நேரத்தில் எளிமையாக புரியும்படியும் எழுதப்பட்டதாக பார்க்கின்றேன். இது மிகவும் நன்று.
மீண்டும் நன்றிகள் அய்யா.

Thangamani said...

அருமையான பதிவு. நன்றிகள். மொழி ஒரு தொடர்புச்சாதனம் மட்டுமே என்ற மடத்தனமான கருத்தை யார் சொன்னார்களோ, தமிழை எதிர்க்கவிரும்புகிறவர்கள் ஒருவர் தவறாமல் அதை ஒரு முறை கூட சிந்தித்துப் பார்க்க்காமல் அப்படியே பயன்படுத்துகின்றனர். மொழி என்பது ஒரு சமூகத்தின் மொத்த அறிவுச்சேகரத்தின் வெளிப்பாடு.

மொழியை இழக்கும் இனம் அதன் தொல்லறிவனைத்தையும் இழக்கும் என்பதை யாரும் அறிவதில்லையா?

ROSAVASANTH said...

"தமிழ் எனது மூச்சு, ஆனால் பிறர் மேல் அதை விடமாட்டேன்" என்று ஞானக்கூத்தன் ஒரு கவிதையில் எழுதியிருப்பார். என் வாசிப்பில, தன் மொழியை மற்றவர் மீது திணிப்பதற்கு எதிரான விரிகளாக (குறைந்த படசம் அப்படி மட்டும்) இதை பார்க்க முடியவில்லை. அந்த காலக்கட்டத்தில் எழுச்சி பெற்றிருந்த திராவிட இயக்கத்தை கொச்சை படுத்தும் நோக்கம(உம்) இந்த வரிகளின் பின்னால் எனக்கு இருப்பதாக படுகிறது.

ஆனால் நான் இராம.கி ஐயாவை படித்தவரையில் அவரிடம் ஒரு போதும் இந்த 'பிறர் மீது மூச்சுவிடும்' தன்மையை பார்த்ததில்லை. உண்மையில் "தமிழ் எனது மூச்சு, ஆனால் பிறர் மேல் அதை விடமாட்டேன்" என்று இராம.கி சொல்லியிருந்தால் பொருத்தமாக (அவருக்கு உண்மையிலேயே மூச்சாக இருப்பதாலும்) இருக்கும். ஆனால் அவரையே வடமொழி வெறுப்பாளர் பார்பன வெறுப்பாளர் என்றெல்லாம் திரிக்கும் போது, திருமாவளவனையும், ராமதாஸையும் (உண்மையிலேயே வாய்ப்பு இருக்கும் போது) எந்த காழ்ப்புணர்வையும் தார்மீக போர்வையில் கக்க முடியும் என்று புரிகிறது.

ROSAVASANTH said...

//இந்த வரிகளின் பின்னால் எனக்கு இருப்பதாக படுகிறது. ..//

'இந்த வரிகளின் பின்னால் இருப்பதாக எனக்கு படுகிறது' என்று இருக்க வேண்டும்.

ஒரு பொடிச்சி said...
This comment has been removed by a blog administrator.
ஒரு பொடிச்சி said...

இப்போதான் முதன்முதலா படிக்கிறேன், உங்கள் வலைப் பதிவை. இந்தப் பதிவு மிகவும்ம் பிடித்தது, பயனுள்ளதா இருக்கு. முக்கியமா இந்த வரிகள்:

"எந்த ஒரு புது விதயத்தையும் தமிழிலும் சொல்லத் தெரியாது, ஆங்கிலத்திலும் சொல்லத் தெரியாது, இரண்டுகெட்டான் வாழ்க்கையில் ஒரு பரம்பரையே உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு வழி ஆங்கிலத்தில் படிப்பதாம்?!"
நானும் இப்படி ஒரு இரண்டுகெட்டானா இருப்பதாலும், பிடித்திருந்தது.
ஆங்கிலத்தை எனது பதின்மங்களில் இருந்து இரண்டாவது மொழியாய் படித்தவள் என்கிறவகையில் என்னால் சொல்லக்கூடியது, நன்றாக தனது மொழியைத் (இலக்கணம்) தெரிந்த ஒருவரால் எந்த மொழியையும் இலகுவாகக் கற்க முடியும். அல்லாதவரை விடவும். ஏதோ ஒரு மொழியில் எமக்கு தொடர்பாட (communicate) தெரியவேண்டும். இப்போதுருவாகிற தலைமுறைக்கு இரண்டிலுமே தெரியவில்லை என்பதே உண்மை. இது சமூகரீதியாகவும் தனிப்பட்டரீதியாகவும் யாருக்குமே உதவாத ஒன்று.
உங்கள் பதிவில் மொழிகுறித்த ஆதங்கம் மட்டுமே தெரிகிறது.
பார்ப்பன எதிர்ப்பு போன்றனவை எப்படி அடையாளங் காணுகிறார்கள் என்பது புரியவில்லை.

-/பெயரிலி. said...

/மற்றபடி உங்கள் வடமொழி வெறுப்பும், பார்ப்பன எதிர்ப்பும் எல்லோரும் அறிந்ததே. இதில் புதிதாக ஒன்றுமில்லை./
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
அப்படியென்றால், தமிழோவியம். நேசகுமார் என்ற பாதையிலே பதிவுகள் போட்டால், வடமொழிக்காதல் & பார்ப்பன ஆதரவென்று அர்த்தப்படுமா? ;-)

Sri Rangan said...

மொழியைப் பற்றிய மடத்தனமான புரிதலும்,அதுசார்ந்து பொருட்குவிப்பு,வேலைவாய்ப்புப் பற்றிய புரிதலில் தமிழைத் தவிர்க்கும்படி கூறுபவர்களுக்கு உலகம் புரியவில்லை.இவர்கள் அந்நியனிடம் அடிமையாய்க் கிடந்து அண்டிப் பிழைத்திட முனையும் மனோநிலையில்; இருக்கிறார்கள்.இத்தகைய உணர்வை இந்த வர்த்தகச் சமூகம் இதுவரையூட்டி வந்திருக்கிறது.இதையே பலர் வாந்தியெடுக்கிறார்கள்.என்னால் பலமொழிகளோடு(ரொம்ப அடக்கத்தோடு) விவாதிக்க முடியும்.எனினும் எந்தமொழியோடும் ஒன்றிக்க முடியவில்லை.தமிழைத்தவிர வேறெந்த மொழியோடும் ஆத்மார்த்தமாக ஒன்றிக்க முடியவில்லை.டொச்சில் பொருளியல் பாடத்தைப் படித்தேன்,அங்கு பொருளாதாரம் மட்டும் கற்பிக்கவில்லை.மாறாக அவர்களது கலை-இலக்கியம்,அறிவியல் தத்துவம் என்று அதற்குள் விரவிக்கிடக்கிறது.இதன் பொருள்,ஒருமொழியைக் கற்பவர்-வெறும் ஊடகமொன்றைக் காவுகின்றவரில்லை.மாறாக அந்த மொழியின் கடந்தகாலப் பண்பாடுகளை,அறிவியல் புனைவுகளை,அந்த இனத்தின் எண்ணவோட்டத்தை இப்படிப் பலதைக் கற்கிறார்.தாய்மொழியை மறுத்து அந்நியமொழியைக் கற்ற இளையவர்களின் முகம் என்னவாக இருக்கும்?மொழியென்பது அந்தந்த இனத்தின் இருப்பாகும்.ஒரு இனத்தை அழித்திடவேண்டுமானால் அந்த இனத்தின் மொழியைச் சிதையென்று கிட்லர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளில் படிக்கிறேன்.

வர்த்தகத் தேவைகளுக்காக உலகுக்கு ஒரு மொழி,ஒரேயொரு மொழிதேவையாக இருக்கிறது.இதற்காக முன்பு செய்பட்ட மொழியான எஸ்பெரொண்டோ மரணப்படுக்கைக்குப் போனபின,; ஆங்கிலமே தஞ்சமென வர்த்தக உலகம் நம்புவதால,; நமது மக்களும் ஆங்கிலத்தில் மகாப்பெரும் மோகத்தோடு தமிழைத் தள்ளிவிட்டபடி... தமிழர்கள் பலமொழிகள் கற்ற வல்லுனர்களாக வருவதற்கு வக்கில்லாமல்,தமிழைவிட்ட வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளநேர்தல் மடமையிலும் மடமை! இராம கி.ஐயாவின் கருத்துக்கள் சரியானவை,இன்றைக்கு மிக மிக அவசியமானவை!நன்றி ஐயா!

தாழ்மையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

-/சுடலை மாடன்/- said...

சொல்ல வேண்டிய செய்தியை எளிமையாகவும், பக்குவமாகவும் சொல்லிப் பார்க்கிறீர்கள்! நீங்கள் இந்தப் பதிவு எழுதியதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு இந்தப் பதிவு தேவையில்லை, ஆனால் அவர்களால் ஏமாற்றப் பட்டு வரும் அப்பாவிகளுக்கு இந்தப் பதிவு தேவை.

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியுமா? அதுவும் மற்றவர்கள் தூங்கிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக தானும் தூங்குவது போல நடிப்பவர்களை என்ன செய்ய முடியும்?

//எந்த ஒரு புது விதயத்தையும் தமிழிலும் சொல்லத் தெரியாது, ஆங்கிலத்திலும் சொல்லத் தெரியாது, இரண்டுகெட்டான் வாழ்க்கையில் ஒரு பரம்பரையே உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு வழி ஆங்கிலத்தில் படிப்பதாம்!//

நான் அடிக்கடி நினைப்பதையே, கூறுவதையே நீங்களும் இந்த வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள்.

போன தலைமுறையில் வறுமையில் வாடினாலும், பெற்றோர் கல்வி வாசனையே இல்லாதவர்களாக இருந்தும், கிராமத்து மூலை முடுக்கில் உள்ள பள்ளிகளில் படித்தவர்கள் என்றாலும், தாய்மொழி வழியாகவே கல்லூரி செல்லும் வரை படித்தாலும் எத்தனையோ பேர் நன்றாகப் படித்து இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாகவும், பிற நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் இருக்கின்றனர். இந்த வலைப்பதிவு உலகத்திலே கூட பல பேர் உண்டு.

இவர்கள் எல்லாம் அலட்டலாக அல்லது டம்பமாக ஆங்கிலத்தில் பேச முடியாவிட்டாலும், அடுக்கு மொழித் தமிழில் பேசுவதை வேண்டுமென்றே தவிர்த்தாலும், தெளிவாகவும், பிழையில்லாமலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசவும், எழுதவும் செய்கிறார்கள். இவர்களுடைய இளமைக்கால தாய்மொழிக் கல்வியும், தாய்மொழி வழிக் கல்வியும் அதற்கு உதவியாக இருக்கின்றன. மிகவும் பின் தங்கிய சமூகத்தில் இருந்து வந்தாலும் கூட தாய்மொழிக் கல்வி இவர்களுடைய உயர்வுக்கு உந்துதலாக இருந்திருக்கின்றது. இதற்காக ஒரு புள்ளிவிபரம் கூட நம்மால் சேகரித்துக் காட்ட முடியும். தாய்மொழி + தாய்மொழிவழிக் கல்வி பின் தங்கிய சமுகத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது என்பதை யுனெஸ்கோ போன்ற நிறுவனங்கள் எப்பொழுதும் வலியுறுத்திக் கொண்டேயிருக்கின்றன.

ஆனால் இன்றைய தமிழ் நாட்டில் பின் தங்கிய சமூகங்களில் உள்ள பெற்றோர்கள் கல்வி வாசனையே இல்லாவிடினும் தங்கள் பிள்ளைகளை அடிப்படை உடமைகளை விற்றாவது ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற மனநிலையை திட்டமிட்டு உருவாக்கப் பட்டு விட்டது. அதற்கு மிகவும் துணை போகிவிட்டன கடந்த 30 ஆண்டு ஆட்சிகள்.

அந்த நிலையிலிருந்து சமூகத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்கிற பொழுது அவர்கள் தூங்கிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாங்களும் தூங்குவது போல பாவனை செய்கிறார்கள். மற்றவர்களையும் தூங்கிக் கொண்டேயிருங்கள் என்கிறார்கள். அவர்களுக்குப் பிரச்சினையில்லை, அவர்கள் மேல்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்களும் ஓரளவு ஆங்கிலம் படித்தவர்கள், ஆங்கிலத்தில் படிக்கும் குழந்தைகளின் கல்வியைக் கண்காணிக்க முடியும், சொல்லிக் கொடுக்க முடியும்.

இந்த வசதியெல்லாம் இல்லாத சுப்பனும், குப்பனும்தான் எழுப்பப் பட வேண்டும். அவர்களுடைய குழந்தை ஆங்கிலத்தில் பேச ஆசைப் பட்டு தமிழும் சரியாகத் தெரியாமல் போய், வாழ்க்கைக்குத் தேவையான கல்வியையும் தொடர முடியாமல் தங்களைப் போலவே ஆக வேண்டுமா என்ற விழிப்புணர்வைக் கொண்டு வர வேண்டும். இந்த தலைமுறையில் ஆரம்பம் முதல் ஆங்கில வழிக் கல்வி படித்து வரும் எத்தனையோ இளைஞர்களை (உறவினர் அல்லது நட்பினர்) நான் பார்த்து வருகிறேன். அவர்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் இலக்கணப் பிழையின்றி ஒரு கடிதம் உருப்படியாக எழுதத் தெரியவில்லை என்பதே உண்மை. வேண்டுமானால் எங்கள் தலைமுறையைப் போல் அல்லாது கொஞ்சம் துணிச்சலோடு அலட்டலான ஆனால் ஓட்டை ஆங்கிலம் வேண்டுமானால் பேசுகிறார்கள் எனலாம்.

எனவே உண்மையிலேயே தூங்குகிற அப்பாவிகளை எழுப்ப உங்கள் எழுத்துக்கள் தேவை, இதை வேண்டுமென்றே வடமொழி வெறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்றெல்லாம் திரிக்கும் "தூங்குவது போல நடிப்பவர்களை" கண்டு கொள்ளாதீர்கள், ஏற்கனவே முத்திரை குத்தப் பட்ட நான், ரோசா வசந்த் போன்றவர்கள் கவனித்துக் கொள்கிறோம் :-)

நன்றி - சொ. சங்கரபாண்டி

P.V.Sri Rangan said...

சொ.சங்கரபாண்டி அவர்கள்தம் கருத்துக்கள் மிகவும் சரியானது!இதை நான் வழிமொழிகிறேன்.
பரமுவேலன்.PhD,MRCP,MRCS,Dip.Ling,Dip.Ed.

வானம்பாடி said...

//மற்றபடி உங்கள் வடமொழி வெறுப்பும், பார்ப்பன எதிர்ப்பும் எல்லோரும் அறிந்ததே. இதில் புதிதாக ஒன்றுமில்லை.//
இந்தப் பின்னூட்டை எழுதிய அறிஞருக்கு: மேலே உள்ள வரியில் உள்ள 'எல்லோரும்' என்பது யாரை குறிக்கிறதென சொல்ல முடியுமா? ஏனென்றால் இங்கு பின்னூட்டிய வேறு யாருக்கும் இந்த 'அரிய உண்மை' தெரியவில்லை. ஆனால் இந்த நச்சுப் பின்னூட்டம் எழுதியவரின் தரம் புலப்படுகிறது.