Monday, July 19, 2021

நடுதல் = ஊன்றுதல்

”நடுதல் = ஊன்றுதல். நடு>நாடு = ஊன்றியது. இது நிலத்தை, இடத்தைக் குறிக்கும் சொல். நிலம் சிறிதாகவும், பெரிதாகவும் இருக்கலாம் “ என்றும்,  ”தமிழ், தமிழர் ஊன்றிய நிலம் = தமிழ் நாடு” என்றும் .சொல்லி 2 இடுகைகளை என் முகநூல் பக்கத்தில் அண்மையில் இட்டேன்.  இதில்வரும் ”ஊல்-தல்” சொல் சிலருக்குச் சிக்கலாயிற்று போலும். இச்சொல்லைப் புதிதாய் நான் சொல்ல வில்லை. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியிலேயே இது இருக்கிறது. இத் தெளிவைக் கொடுத்தது பாவாணரே. 

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியில் இதைச் சொல்லமாட்டார். அந்த அகராதி விட்ட  செய்திகள் மிகுதி. 100 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த அகராதியின் போதாமை தனித்தமிழ் நடையாருக்கு நன்றாகவே தெரியும்.  தமிழை, மணிப்பவள நடைக்குக் கொணர்ந்ததைத் தூக்கிப்பிடிக்கும் அகராதி அதுவாக்கும். அதன் குறையைப் பாவாணர் ஒரு தனிநூலில் எடுத்துக் காட்டினார். சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்கு அப்புறம் தமிழ்ச் சொல்லாய்வில் ஏராளமாய்க் கண்டுபிடிப்புகள் நடந்து விட்டன. இன்னும் அவ்வகராதியைப் பிடித்துக்கொண்டு அதுவே சரியென வாதாடுவோருடன் உரையாடுவதை நானும் குறைத்துவிட்டேன்.       

ஊன்றுதல் என்பது தொழிற்பெயர். இதில் தல் எனும் தொழிற்பெயர் ஈற்றைப் பிரித்தால், கிடைப்பது ஊன்றெனும் வினையடி. ஊன்றினேன், ஊன்றுகிறேன், ஊன்றுவேன் என முக்கால வழி வினையை உணர்த்தலாம். ஊன்றெனும் வினையடி, சில போதுகளில் பெயராகவும் இயங்கும். காட்டாக, ஊன்று= ஊன்றுங் கோல். ஊன்று>ஊன்றி என்பதை வினையெச்சமாகவும் பயன் கொள்ளலாம். ஊன்றுதல்,  பேச்சுவழக்கில்  ஊனுதலாகும். ஊன்றில் வரும் உருபுகளைப் பிரித்தால், ஊல்+ந்+து என்றாகும். தமிழ் இலக்கணப் படி வேறுவகையில் இதைப் பிரிக்கமுடியாது. ”ல்ந்து” என்பது ”ன்று” என்று புணர்ச்சிவழி மாறியுள்ளது. நல்+ந்+து= நன்று என்பதுபோல் இந்த ஊன்றைப் புரிந்துகொள்க. சொற்பிறப்பியலின் அடிப்படை நாடுவோர்க்கு இதுபோன்ற புணர்ச்சிப் பிரிப்பு, சரியான வேர்ச்சொல்லை அடையாளங் காட்டும். ஊல் எனும் ஆதி வினையடி இங்கு கிடைப்பதை அறியலாம். புணர்ச்சி விதிகள், ஒலித்திரிவுகள், அவற்றின் ஒழுங்கு ஆகியவற்றைக் கொண்டே உண்மை எதுவென அறிகிறோம். அச்சில் வீடுபேறு (Printed salvation) தேடுவோருக்கும், குதர்க்கம் பேசுவோருக்கும் ஊலின் இயலுமை புரியாது.  

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, முதன் மடலம் மூன்றாம் பாகம், பக்கம் 191 இல், ஊல்-தலைச் செயப்படு பொருள்.குன்றிய வினை என்பார். பொருந்துதல், நிலைகொள்ளுதல், முதிர்தல் என 3 பொருள்களை  அச்சொல்லுக்கு ஈடாய் உணர்த்துவார். ஊலோடு நில்லாது. வேறு வகையிலும் சொல் வளர்ச்சி உண்டு. ஊல்>ஊழ் எனும் வளர்ச்சியில், ஏற்கனவே விதித்த நிலையை, ”ஊழ்” குறிப்பிடும்.  அற்றுவிகத்தின் (ஆசீவிகத்தின்) அடிப்படைக் கருத்து ஊழ் = நியதி. ”ஊல்” இல்லாது ”ஊழ்” எழாது. ஊழ்த்தல்,  ஊழ்வினை, ஊழி, ஊழியம்,  என்பனவும் ஊழோடு தொடர்புடையவையே. (ஊழ், ஊழியில் பல சொல்லாட்சிகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றிலுண்டு). .ந் உருபு இல்லாமலும் ஊலின் வழி பெயர் அமையலாம். அப்படியமையும் ஊற்றமும் ஊலோடு தொடர்புடையதே. ஊல்-தலின் மாற்றாய். ”ஊர்-தல் , ஊரு-தல்” எனும் தொழிற்பெயர் வடிவங்களையும் பேரகரமுதலியில் காணலாம். கூர்மைப் பொருள் விளக்கும் குல்>கூல்>கூலம் என்பதும், கூலி என்பதும், கூல்>கூள்>கூழ் என்பதும் ஊல்தலைப் போல் சொல்வளர்ச்சி அமைவதை ஒப்புநோக்கத் தக்கன.  

இவ்வளவு  சொற்களுக்கும் ஊலே அடிவினை. (ஊலை மறுப்பவர் மேற்கூறிய சொற்களின் பிறப்பையும் மறுக்கவேண்டும்.) ஊலின் முன்வடிவம் உல் என்பதாகும். உல் என்பது குத்துதல், துளைத்தலைக் குறிக்கும். மண்ணில் துளைத்து நாற்றை நிறுத்துவதே ஊன்றுதல். நெல்லின் நாற்றை ஊன்றுகிறோமே? (நால்+து = நாற்று; நால்தலும் நடுவதோடு தொடர்புடையதே.) உல்லின் வழி குத்தற் பொருளை உணர்த்தும் வேறு சொற்களாய் உல்லியம், உலக்கை போன்றவை காட்டப்படும். ஊலின் சொற்பொருள் அறிய இத்தனை சொற்களையும், அவற்றின் இயலுமைகளையும் அறியவேண்டும்.  தமிழ் இலக்கியங்கள் என்பவை அகரமுதலிகள் அல்ல., சொற்களின் எல்லா வடிவங்களையும் அவை பட்டியலிடுவதில்லை. அகரமுதலிகளிலும் சில குறைகள் உண்டு. வினைச்சொற்கள் இருப்பின் அகரமுதலிகள் பெயர்ச் சொற்களைத் தராது போகலாம்.  பெயர்ச்சொற்கள் இருப்பின், வினைச்சொற்கள் தராது போகலாம். பொறுமையாக ஆய்ந்தே தொடர்புடைய சொற்களைக் காண முயல்கிறோம்.

சூ, மந்திரக்காளி என்பதாலும், எந்திரத்தனமாய் முயல்வதாலும் ”ஊலின்” பொருள் கிட்டாது. ஏதோவொரு நிகழ்ப்பை வைத்துச் சொற்பிறப்பியலை அணுகக் கூடாது.  சொற்பிறப்பியலின் வழி,  தொடர்புடைய சொற்களை மொத்தமாய் ஆய்ந்தே, வேர்ச்சொற்களையும், அவற்றின் அடிப்பொருள்களையும், திரிவு விதிகளையும் நாம் காண முயல்கிறோம். ய>ஞ>ந என்ற திரிவு விதியை சொல்லாய்வறிஞர் அருளி விரிவாய் ஆய்ந்து கண்டுபிடித்தார். அறுபுலன் சொற்களாய் இன்று நாமறியும் கருத்துமுதல் சொற்களின் அடியில் பொருள்முதல் வாத வழி தேடினால், ஐம்புலன் சொற்களே அடிச்சொற்களாய் உள்ளன என்று திரு. பக்கிரிசாமி உணர்த்தினார்,  பல சொற்களை ஆய்ந்து, முடிவில் ள/ழ>ட>ர என்ற விதியை  (காட்டு: சோழ>சோட>சோர>கோர மண்டல்) நான் வெளிப்படுத்தினேன். இன்னும் பல விதிகளை வெவ்வேறு ஆய்வாளர் தொடர்ந்து கண்டுவருகிறார். (உன்னிப்புச் சொற்பிறப்பையும், சொற்களை  உடைத்துப் பொருள் சொல்வதையும் நான் ஏற்றதில்லை.) 


1 comment:

இ.பு.ஞானப்பிரகாசன் said...

ஐயா! லகரம் றகரமாகத் திரியும் என்பது ஓரளவு தமிழ் அறிந்தவர்க்குக் கூடத் தெரியும். பல் > பற்கள், சொல் > சொற்கள் என நம் அன்றாடப் பயன்பாட்டிலேயே இதற்கு எடுத்துக்காட்டுகள் நிரம்பியுள்ளன. எனவே ‘ஊற்று’ என ஒரு சொல் இருக்கையில் ‘ஊல்’ எனும் வேர்ச்சொல்லும் இருந்துதானே ஆக வேண்டும். இது கூடப் புரியாதவர்கள் அடிப்படைத் தமிழ் இலக்கணம் அறியாதவர்களே! அப்படிப்பட்டவர்களுக்காகப் பெருந்தமிழறிஞரான நீங்கள் கவலைப்படாதீர்கள்! நீங்கள் எழுதுவதை எழுதிக் கொண்டே இருங்கள்! உங்களைப் படிக்கவும் ஏற்கவும் பின்பற்றவும் என்னைப் போல் ஏராளம் பேர் இருக்கிறோம்.