Thursday, July 01, 2021

முதல்வராய் நானிருந்தால் - 3


நீர்வளம்


வளநாட்டை வானத்தின் மேலிருந்து பார்க்கும்போழ்,

அளவைந்தில் ஒருபாகம் அம்மெனவே சொல்வகையில்

நீர்வளத்தைக் கூட்டுவதே நெடுநாளாய் என்கனவு;

ஆர்வலர்கள் சேர்ந்துவரின் அத்தனையும் மெய்யாகும்;

ஆறோடும் படுகைகளில் ஆங்காங்கே தடுப்பணைகள்,

நீர்கசியும் குட்டைகளும், நிலைப்பதற்கு வழிசெய்வேன்;

தடம் அகல்ந்த கொள்ளிடத்தில், தண்பொருநை, வைகையினில்,

இடம்போட்டு நிலமகழும் ஏமாற்றை நிறுத்திடுவேன்;

பாசனத்திற் கேற்றபடிப் பண்ணுதற்கும் வழிசெய்வேன்;

பாசனங்கள் ஒருங்கிணைக்க வாய்ப்புக்கள் பெருக்கிடுவேன்;

நிலத்தடிநீர் குறையாமல் நிலைப்பதற்கும் முறைசெய்வேன்;

சிலதுளிகள் எனச்சேர்த்தால் பலவெள்ளம் பெருக்கெடுக்கும்;


சேமுறுத்திய குடிநீரும், சாக்கடை மாசெடுப்பும்:


குடிப்பதற்கு ஒழுங்கான குடிநீரே இல்லாமல்

தடுக்கின்ற மாசொழித்து, தாகத்தைப் போக்கிடுவேன்.

பருநிலத்தில் சேமுற்ற குடிநீரை(7)ப் பகிர்ந்தளித்து

தருவதற்குத் தூம்புகளை(8)த் தடம்பதிப்பேன்; அதனோடு

பாதாளச் சாக்கடைகள் பள்ளுதற்கும் வழிசெய்வேன்;

ஆதாரச் சென்னையிலோ அந்நீரைச் சேகரித்து,

மூன்றாட்டாய் இழுத்துவைத்து(9) முன்னாலே விழுத்துறுத்தி(10),

சேர்ந்தாட்டு உயிர்வேதிச் செய்முறையில்(11) மாசெடுத்து,

எதிரூட்டோ(12), மின்னிளக்கி எடுவித்தோ(13), துளித்தெடுத்தோ(14),

விதவிதமாய் முயன்றிடுவேன்; வேண்டுவது நந்நீரே!


வேளாண்மை / மர வளர்ப்பு:


மாநிலத்தின் நிலப்பரப்பில் மூன்றிலொன்று காடானால்,

நானிலத்தில் நமைவெல்ல யாருமிங்கே வரமாட்டார்;

மேற்குமலைச் சரிவுகளில் மிகுமரங்கள் நட்டிடுவேன்;

தாக்குமந்தக் கருவைமரத்(15) தடவேரைக் கில்லிடுவேன்;

பார்க்கின்ற இடமெல்லாம் பரம்பரையாய் வருமரங்கள்

வேர்கொள்ள விளைத்திடுவேன்; வியன்காடு பெருகட்டும்.

தாளடியில் நெல்லின்றி தரம்குறையாக் கோதுமையை(16)

நீள்பயிராய் ஆக்கிடுவேன்; நீர்த்தேவை குறையாதோ?

எங்கெல்லாம் புழுதி எடுத்தெறிந்து பறக்கிறதோ(17),

அங்கெல்லாம் அதைத்தடுத்து அடக்கின்ற வகையினிலே

மண்வளங்கள் பெருக்கிடுவேன்; மரம்புதர்கள், செடிகொடிகள்

நண்ணுதற்கு வழிசெய்வேன். நானிலம் பின் செழிக்காதோ?


அன்புடன்,

இராம.கி.

7. சேமுற்ற குடிநீர் = safe drinking water
8. தூம்பு = tube
9. மூன்றாட்டு இழுத்துவைப்பு = tertiary treatment
10. விழுத்துறுத்தல் = filtration
11. உயிர்வேதிச் செய்ம்முறை = biochemical process
12. எதிர் ஊட்டு, எதிர் ஊடுகை = reverse osmosis
13. மின்னிளக்கி எடுவித்தல் = electro - dialysis
14. துளித்தெடுத்தல் = distillation
15. கருவை மரம்; இங்கு வேலிக்கருவை = Julia Flora; மேற்கு ஆத்திரேலியாவில் இருந்து 
கொண்டுவந்த இந்தமரம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மரபு சார்ந்த மரங்களை 
வளரவிடாமல் தான்வளர்ந்து சீரழிக்கிறது. இதை ஒழித்தால் தான் மரவளம் திரும்பக் 
கிடைக்கும்.
16. தாளடிக்குக் கோதுமைப் பயிரீடு என்பது தஞ்சைத் தரணியில் இப்பொழுது 
சொல்லப்பட்டுவரும் பரிந்துரை. தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் காரணத்தால் இது 
நல்லது என்று வேளாணியலார் சொல்லுகிறார்கள்.
17. நீர்வளம் குறைந்த காரணத்தால் புழுதி பறக்கிறது. தமிழ்நாடு சிறக்க இது 
மாறவேண்டும். செடி,கொடி,புதர்கள் மண்டினால், மண்வளம் கூடி இந்தநிலை மாறும்.

No comments: