Saturday, July 10, 2021

சாப்பாடு - 4

இனிச் சப்பின் திரிவான சம்புச் சொற்களைக் காண்போம். இங்கும் வாடுதல், வற்றுதல், வதங்குதல், வலியற்றுப் போதல் எனும் பொருட்பாடுகள் வந்து சேரும். சும்பு> சம்பு> சம்படம் என்பது சோம்பலைக் குறிக்கும். வலியற்றுச் சோர்ந்து கிடக்கும் நிலை. சோம்பலை மேலே பார்த்தோம். சம்படித்தல்= மென்மையாக்கல். பயிர்செய்யுங் காலத்தில் 2 ஆம் முறை உழும்போது நிலம் மேலும் மென்மையாகும். சும்பு> சம்பு> சம்பல்= மலிவு, விலையிறக்கம்; சும்பு= வாடிச் சுருங்கல்; வாடியது மலிவாகும். சம்பல் = தேங்காய், மிளகாய், புளி போன்ற கூட்டுப்பொருள்களை வதக்கி அரைக்கும் துவையல். ஈழத்தில் பெரிதும் பழகுஞ் சொல். துவண்டது தமிழ்நாட்டிற் துவையலெனில் சம்பியது ஈழத்திற் சம்பலாகக் கூடாதா? வெய்யிலில் வாட்டிய, வற்றிய மிளகாயும் சம்பலென்றே அழைக்கப்படும். சம்பாலென்பது பச்சடி வகை; (மிளகாய், மசாலா போன்ற) கறிப்பொருளை வதக்கி அரைத்து குழம்பிற் போட்டால் அது தெலுங்கிற் சம்பாரு ஆகும். பின் தஞ்சை வழியே மராட்டிக்குப் போய்த் தமிழுக்குத் திரும்பி வந்து சாம்பாராகும். (விவரம் அறியாதோர் சாம்பார் ஒரு மராட்டிச் சொல் என்பார்.)

சம்பும் அளமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது நெல்லிற்கும் கோரைக்கும் ஆன பெயர். சம்பின் உகரவீறு ஆகாரவீறு ஆகிச் சம்பாவாகும். அளமென்பது உப்பு. சம்பா = வேகவைக்கக் கூடிய நெற் பொருள்; சம்புதலுக்கு வேக வைத்தலும் ஒரு பொருள். இது ம.சம்பா, சம்பாவு, செம்பாவு; க.சம்பெ; தெ.சம்பாவுலு. என்று மற்ற திராவிட மொழிகளிலும் பரவும். ஆவாரம்பூச் சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா என்று 60 வகைகள் உண்டாம். ‘மலை கிளிய நின்றற் காலால் சம்பா அமுதுபடி நாலு மரக்காலும் இந்த திருப்போநகம் கொத்த தெருக்கைக்கு வடிதயிர் அமுதும்” என்று திருப்பதிக் கல்வெட்டுத் தொகுதி. 2 இல் 38 ஆம் கல்வெட்டில் 7ஆம் வரியில் வரும். கல்வெட்டிலுண்டா? - என்று மணிவண்ணன் கேட்டார். எனையாளும் வேங்கடத்தான் கோயிலில் இக்கல்வெட்டுண்டு. இன்றைக்கும் சம்பாவென்ற சொல் தமிழ் தானே? சம்பாவை ஏற்போம், சாப்பை ஏற்க மாட்டோமா? - என்றால் இதுவென்ன ஞாயமய்யா?

அடுத்தது சம்பாகம்; சம்பாவைச் சமைத்ததென்று பொருள். வடமொழியில் நல்ல சமையலென மேலும் விளக்கங் கொடுப்பர். சம்பா அரிசி நல்ல அரிசி தானே? பொன்னியரிசி ஏதோ ஒரு சம்பாவில் கிளைத்தது தானே? சம்பாவை அறுவடை செய்வது அரித்தல் வினையின் மூலமே. சம்பாவை அரித்துக் களத்துமேட்டில் கூலி கிடைப்பதால் சம்பாரித்தல் என்ற சொல் எழுந்தது. சம்பாரித்தல்>சம்பாதித்தல் என்றுந் திரியும். சம்பாரம் = கறிக்கான கூட்டுப் பொருள். மேலே சொன்னேனே மசாலாவெனும் வெளிச்சொல்? அதற்கான தமிழ்ச் சொல் இது தான். நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்? சம்புதல் = கூம்புதல், to lose zeal or enthusiasm, மனஞ் சம்பித் திரியாமல் (தஞ்சை. சர.ii. 119.), ”ஏண்டா சம்பிக் கிடக்குறே? கொஞ்சம் எழுந்து வா, எல்லாம் நல்லதே நடக்கும்னு நம்பு”; இதற்கு விலை குறைதல் என்ற பொருளை முன்னாற் சொன்னேன். சும்>சும்பு>சம்பு = வாடிச் சுருங்குதல்;

அடுத்தது சம்பு; சென்னை வேளச்சேரி தாண்டி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலும், காவிரிக் கரையில் சீர்காழிக்கருகே தைக்காலிலும், தாமிரபருணிக்கரையில் பத்தமடையிலும் வளருங் கோரை இதைச் சம்பங்கோரை என்றுஞ் சொல்வர். இதுவும் flattened grass தான். elephant grass, நெட்டியென்றுஞ் சொல்லப்படும். சீர்காழிப்பிள்ளைக்கு சம்புவிலிருந்தே சம்பந்தர் என்னும் பெயர் வந்தது. “சம்பறுத்தார் யாக்கைக்கு” என்பது நல்வழி 38. சம்பை என்றாலும் சம்பங் கோரை தான். சம்பென்ற சொல் செய்யுளும் உரைநடையும் கலந்து வரும் சிற்றிலக்கிய வகையைக் குறிக்கும். சங்கதத்திலும் இச்செய்யுள் வகையுண்டு. கலந்து வருவதால் சம்பு என்பதற்குச் சம்பாரம் அல்லது மசாலாப் பொருளுமுண்டு. மீனைச் சேர்த்துவைக்கச் சம்பங் கோரையில் செய்யப்பட்ட கூடை சம்புப் பெட்டி எனப்படும். (பிள்> பிளா> பிழா. வாயகன்ற ஓலைக்கொட்டான்; பிள்> (பெள்)> பெட்டி). சம்பை என்றால் மீன் கருவாடு என்றும் பொருள். சம்பியதற்கு வாடியதென்று மேலே பொருள் சொன்னேனே? நினைவிருக்கிறதா? விட்டு விடாதீர்கள். கீழே அது பற்றியும் பேசுவேன். சும்> சும்பு> சும்புதல்= நீர் வற்றுதல். சும்பு> சம்பு> சம்பை. சம்பைச் சரக்கு/ சப்பைச் சரக்கு = விலைகுறைந்த மலிவுச் சரக்கு;

அடுத்தது இன்னுமொரு திரிவு. flat ஆன நிலை சமட்டு என்று சொல்லப்படும்.. சமட்ட உதவிசெய்வது சம்மட்டி>சமட்டி. flat ஆய் உட்காருவது சம்மணம். குவியலாய் இல்லாது flat ஆவது சமம். சமப்படுத்து என்பது இதில் வளர்ந்த சொல். ”ஏன் மரக்கால்லெ அளந்துபோடுற போது குவியலாக்குறே? சமப் படுத்திப் போடு”. சம்பியது வாடுதல், வதக்குதலென்று சொன்னேன் அல்லவா? கருவாட்டை எடுத்துக்கொள்வோம். சம்பியதை எடுக்கோமோ? பொரியல், மசியல், வற்றல், வறட்டுதல், அவித்தல், அடுத்தல் என்ற செயல்களைச் சேர்த்துப் பொதுவாய்ச் சமைத்தல் எனுஞ் சொல் பயன்படுகிறதே? அடுப்படிக்குள் அடுத்தல் வினையுள்ளது. சமைத்தலும் சம்புதலோடு தொடர்புடையது தான். சமைத்தலின் தன்வினைச் சொல் சமைதல், அதன் தொழிற் பெயர் சமையல். எளிதில் சமைக்கக் கூடிய கூலம் சாமையாயிற்று.

பகரமும் வகரமும் ஒன்றிற்கொன்று போலிகள் என்பதால் சுப்/சப் என்பது சுவ்/சவ் என்றுமாகும். நாக்கில் ஒன்றைப் போட்டுச் சுவ்வும் போது (சுப்பும் போது) நரம்புகள் வழி மூளைக்குத் தெரிவது சுவை எனும் உணர்வு. அதுவும் ஒலிக் குறிப்பில் எழுந்தது தான். சுவையைத் தமிழென்போர், சுப்/சப் தொடர்பான சப்பு>சாப்பைத் தமிழில்லை என்பது எப்படி? சுவை பற்றிய தமிழிலக்கியக் குறிப்புகள் ஏராளம். சுவையின் திரிவாய் வாய்க்குள் போட்டு மெல்லுவதும் சுவைப்பதும் சவை எனப்படும். chew (v.) என்ற ஆங்கிலச்சொல்லிற்கு Old English ceowan "to bite, gnaw, chew," from West Germanic *keuwwan (source also of Middle Low German keuwen, Dutch kauwen, Old High German kiuwan, German kauen), from PIE root *gyeu- "to chew" (source also of Old Church Slavonic živo "to chew," Lithuanian žiaunos "jaws," Persian javidan "to chew") என்று விளக்கஞ் சொல்வர்.. 

பல்லில் அரைபட்டு ஆகத் தட்டையானது சவ்வு எனப்படும். சவ்வுதல் என்பது தட்டையாக்குதல் என்று பொருள்படும். சவ்வக் கூடிய அரிசி சவ்வரிசி. சவக்களித்தல் என்பது சுவையற்றுப் போதல். சவக்குச் சவக்கெனல் என்பது முற்றிலும் சுவையற்றிருத்தல். சவங்கல் என்பது மனம் தளர்தலையுங் குறித்து வலியற்றவனையுங் குறிக்கும். சவக்கம் = சோர்வு; சவடன் = பயன் அற்றவன். வலியற்று மெலிந்து கிடக்கும் சோனிப்பிள்ளை சவலை எனப்படும். உயிரற்று போனவுடல் சவம் என்று சொல்லப்படும். சவட்டுதல் என்பது அடித்தல். அதன் பின் ஒருவன் வலிவற்றவனாய், சோர்ந்து போனவனாய், எழ முடியாதவனாய் ஆகிப் போவான். சவட்டுதலின் தன்வினை சவளுதல். சவளும் வினை செய்வோர் சவளக்காரர். மிக மிக மென்மையாய் அமையும் துணி சவளி. நெய்தலில் தமிழர் திறமை சொன்னால் அதுவே ஒரு கட்டுரைத் தொடருக்குப் போகும். சவளி, வடவர் பலுக்கில் ஜவளி/ஜவுளி ஆகும். நாமும் வெட்கமின்றி நம் சொல்லை விட்டு ஜவுளி என்று பயிலுவோம். மரபு தெரியா விட்டால் இப்படித் தான் பெருஞ்சோகம் வந்துசேரும். நம் பெருமிதங்களை ஒழிப்பதே சிலருக்கு வாடிக்கையாகிறது.

இனி முதலெழுத்து நீளுஞ் சொற்களைப் பார்ப்போம். சப்பின் நீட்சி சாப்பு. அகரமுதலிகளில் சாப்புதல் என்பதற்கு அடித்தல், தட்டையாக்குதல் என்று பொருள்சொல்வர். ‘கேழ்வரகைத் தண்டெடுத்துக் கேப்பை என்று சாப்பினேன்’ என்று நெல்விடுதூது 416 ஆம் அடியில் வரும். ”ரொம்பப் பேசினால் முகத்திலே ஒரு சாப்புச் சாப்பு” என்பது நாட்டுப்புறப் பேச்சுவழக்கு. சாப்பு என்பது ஒருவகை இந்துத்தானித் தாளம். மத்தளத்தில் ஒவ்வொரு ஓட்ட முடிவிலும் அதன் தொப்பியில் அடிக்கும் ஒலி சாப்பா எனப்படும். சாப்பாக் கொடுத்தல் = ஒத்து, சுருதியுடன் இழையும் வகையில் மத்தளத்தைத் தட்டிப் பார்ப்பது.  சாப்பா = கோரைப் புல்லாலான புற்பாய். சாப்பை என்பது ஆற்றலில்லாத, மெலிந்தவனைக் குறிக்கும். ”என்ன இது? பார்த்தா ஏப்பை சாப்பையாய் இருப்பான் போலுள்ளதே?” சாப்பாடு, சாப்பிடு என்பவற்றைப் பார்க்குமுன் சாகாரத்தோடு ”ம்ப்” சேர்ந்து வரும் சொற்களைப் பார்ப்போம்.

சாம்புதல் என்றால் அகரமுதலிகளில் வாடுதல், வதங்குதல், கெடுதல், குவிதல், ஒடுங்குதல், உணர்வழிதல், ஒளி மழுங்குதல், எரிதல் என்ற பொருள்களைச் சொல்வர். சுப்பு> சும்பு> சம்பு> சாம்பு என்று இச்சொல் அமையும். சாம்பு என்பது அடித்தல் பொருளில் அமைந்து பறையையும், மெலிதல் பொருளில் படுக்கையுங் குறிக்கும். வலிந்த மரம், எரிந்து அது மெலிந்த பொருளாய் ஆவதால் அது சாம்பலாகிறது. சாம்பலுக்கு உறுதி கிடையாது. வாழ்வில் வாடி வதங்கி எரிந்து போனவன் சாம்பவன்/சாம்பன். சாம்பலைப் பூசிக்கொண்ட சிவன் சாம்ப சிவன். எந்தவொரு மாசும் சேராது முற்ற முழுத் தூய்மையான பொன் எளிதில் தட்டையாகும்; அதைக் கையாலே கூட வளைக்க முடியும், நீட்டமுடியும், மெலியும். எனவே அந்தவகைப் பொன் சாம்புநதம் எனப்பட்டது. சாம்பல் நிறம் பூசிக் கிடக்கும் புடலங்காய் சாம்பலாட்டு/சாம்பாட்டு என்று சொல்லப்படும். ”சாம்புதல்” வடிவத்தில் சங்க இலக்கியத்தில் நிறையக் காட்டுகள் உள்ளன. ஆழ்ந்து படிக்கவேண்டியவை. நண்பர் மணிவண்ணன், ”இலக்கியங்களில் உண்டா?” என்று என்னைக் கேட்டார். சாப்புதலுக்கில்லை. ஆனால் அதன் தன்வினையான சாம்புதலுக்குண்டு. இன்று நேற்றில்லை. 2300 ஆண்டுகளுக்கு முன்னிருந்தேயுண்டு.

குறுந்தொகை 46-1 இல் ”ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன” என்பதற்கு ”ஆம்பற் பூவின் வாடலை ஒத்த” என்ற பொருள் வரும். வாடுதல் எப்படி வந்தால் என்ன? இங்கே வாடிப்போன பூ பேசப்படுகிறது. அகநானூறு 298-7 இல்

”கொன்றுசினம் தணியாது, வென்றுமுரண் சாம்பாது

இரும்பிடித் தொழுதியின் இனம்தலை மயங்காது

பெரும்பெயர்க் கடாஅம் செருக்கி”

தன் பகைகொன்று சினத்தைப் போக்கிக்கொள்ளாமலும் வென்று ஓட்டி பகைமை மெலியாமலும், பெரிய பெண்யாணைகளின் கூட்டத்துடன் கலவாமலும், பெருமழை போன்ற மதத்தால் ஆண்யானை செருக்கை அடைந்தது இங்கே சொல்லப்பெறுகிறது. மீண்டும் சாம்புதல் = மெலிதல்; பகைவனைச் சாய்த்துவிட்டல், கோவம் தணிந்துவிடும்; வலிமை சாம்பிவிடும்.

அகநானூறு 160-14 இல்

...........................................................................................ஆழி

நுதிமுகம் குறைந்த பொதிமுகிழ் நெய்தல்

பாம்புயர் தலையின் சாம்புவன நிவப்ப

இரவந் தன்றால் திண்தேர்

நீர்நிறைந்த கழியின்மேல் தேர்விரைகிறது. கழியில் நிமிர்ந்து நிற்கும் நெய்தல் தண்டுகளில் மலர்கள் இருக்கின்றன. தேருருளைகள் அதன்மேல் செல்லும் போது தண்டுகள் மடிகின்றன/சாம்புகின்றன. உருளை நகர்ந்ததின்பின் தண்டுகளும் நெய்தல் மலரும் மீண்டும் எழும்புகின்றன. அது பாம்பின் தூக்கிய தலைபோல் இருக்கிறதாம். இங்கும் வாடுவன ”சாம்புவன்” என்றழைக்கப் படுகின்றன. 

பெரும்பாண் ஆற்றுப்படை.150 ஆம் வரியில், “கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பு”; இங்கே வரகின் வைக்கோலால் வேய்ந்த, கழியைத் தலையிலுடைய, படுக்கை பேசப்படுகிறது. மென்மையான வரகு வைக்கோல் சாம்பித்தானே கிடக்கும்?  4 ஆம் பரிபாடல் இல் 

”நன்றா நட்டவன் நன்மார்பு முயங்கி

ஒன்றா நட்டவன் உறுவரை மார்பின்

படிமதம் சாம்ப ஒதுங்கி”

என்று வரும். இரணியன் கொண்டிருந்த ஆணவப் பகைமதம் வாடி/வதங்கி மெலிந்துபோகும்படி நரசிங்கன் அடிப்பது இதிற்சொல்லப்படும். சாம்புவதின் அடிப்பொருள் வாடுவதும் வதங்குவதுமே. எப்படி நடக்கிறதென்பது பொருட்டு இல்லை. அது தாடைப் பல்லாலும் நடக்கலாம். கையிலுள்ள தடியாலும் நடக்கலாம். விரல் நகத்தாலும் கையாலும் நடக்கலாம்.

அடுத்துக் கலித்தொகை 60-10 இல், “பொரு களிறு அன்ன தகை சாம்பி”; பொருதுகின்ற களிறுபோல தன்வலி மெலிந்து - என்பது இங்கு பொருள்.  இதே போற் கலித்தொகை 147-34 இல், “பல்கதிர் சாம்பி பகல் ஒழிய”;  பல கதிர்களைக் கொண்ட சூரியன் கொஞ்சங் கொஞ்சமாய் மெலிந்து பகல் ஒழிகிறதாம். அடுத்து கலித்தொகொ 78-19/20 இல்,” ’பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல, யான் செலின் நந்தி, செறின் சாம்பும், இவள்’ என்னும் தகையோ தான்” என்று வரும். பெய்தால் வளம்பெற்று, வறண்டால் வாடிப்போய், புலத்திற்குப் பெய்யும் மழைபோல, நான் சென்றால் வளம்பெற்று, செல்லாவிடின் வாடியிருப்பாளோ இவள்; என்ன குணம் இது? - என்பது இதன் பொருள்., மீண்டும் இங்கே சாம்புதல் என்பது வாடுதலைக் குறிக்கிறது. மேலும் கலித்தொகை 121-17 இல், “ஒளி சாம்பும் நண்பகல் மதியம் போல்”. நண்பகலில் சூரியன் உச்சிக்கு வரும்போது நிலவைப் பார்க்கவே முடியாது. அதன் ஒளி முற்றிலும் வாடிப்போகும். அச்செய்தி இங்கு சொல்லப் படுகிறது. பகலின் மற்ற நேரங்களில் எங்கோ ஒரு மூலையில் நிலவை மிக மெல்லிதாய்ப் பார்ப்பது முடியலாம். இங்கும் சாம்புதல் என்பது வாடுதலே. கடைசியில் பட்டினப்பாலை 8-12 ஆம் வரிகளில் ஒரு நல்ல காட்டு இருக்கிறது,

”விளைவறா வியன் கழனி

கார்க்கரும்பின் கமழ்ஆலைத்

தீத்தெறுவின் கவின்வாடி

நீர்ச்செறுவின் நீள்நெய்தற்

பூச்சாம்பும் புலத்து ஆங்கண்” 

”விளைவு அறாத (நில்லாத) அகன்ற கரும்புவயலின் ஊடே நெய்தலும் வளர்ந்திருக்கிறது. கரும்புவயலுக்கு அருகில் மணங்கமழும் சருக்கரை ஆலையிருக்கிறது. அதில் நெருப்பு எரிந்து வெம்மையான புகை எழுந்து வருகிறது. அந்த வெம்மைபட்டு நெய்தற்பூ சாம்பிவிடுகிறது” என்று பொருள் சொல்லலாம். இந்தக்காட்டு ஏன் முகன்மையென்றால் சாம்புவது சூட்டாலும் முடியும் என்று உணர்த்துவதற்றான். இந்த வரிகளைப் படித்தபின் தான் சாப்பின் பொருள் எனக்குப் புரிந்தது. 

சாம்பு தன்வினையானால், இதுவரை பார்த்த தமிழின் இயல்புப் படி சாப்பு அதன் பிறவினைச் சொல்லாகும். சாப்புதல் என்பதற்கு வாட்டுதல், வதக்குதல், கெடுத்தல், குவித்தல், ஒடுக்குதல், உணர்வழித்தல், ஒளிமழுக்குதல், எரித்தலென்ற பொருள்கள் அமைய முடியும். இது நேரடியாக அகரமுதலியில் இல்லை தான். ஆனால் எல்லாத் தன்வினைக்கும் பிறவினைச் சொற்களை நம்மூர் அகரமுதலிகளிற் போட்டுள்ளாரா என்பதே என் கேள்வி. தமிழ் அகரமுதலிகள் முற்று முழுமை ஆனவையல்ல. அதேபோல தமிழிற் கிடைத்த இலக்கியங்கள் ஒரு சொல்லின் எல்லா வடிவங்களையும் கையாளுவன அல்ல. ஏதோ சில வடிவங்களே அங்கு கையாளப் பட்டிருக்கும். கிடைத்ததை வைத்து கிடைக்காததை ஏரணத்தால் ஊகிக்கத் தான் வேண்டும். இது எந்த மொழி இலக்கியங்களுக்கும் உள்ளது தான். சாப்பு = சூட்டால் வாட்டப் பட்டது, வதக்கப் பட்டது, பொரிக்கப் பட்டது, மசிக்கப் பட்டது, வற்றப் பட்டது, வறட்டப் பட்டது, அவிக்கப் பட்டது, அடுக்கப் பட்டது. சமைக்கப் பட்டது. மொத்தத்தில் வாய்க்குள் இடும்படி பதப்படுத்தப் பட்டது. plalatable = பல்லிற்கு ஏற்றபடி பதப்படுத்தல்

palate (n.) late 14c., "roof of the mouth," from Old French palat and directly from Latin palatum "roof of the mouth," perhaps of Etruscan origin [Klein]. Popularly considered the seat of taste, hence transferred meaning "sense of taste" (late 14c.), which also was in classical Latin. Related: Palatal; palatalize.

அந்தச் சாப்பை இட்டால் என்ன? ஆடினால் என்ன?

My case rests, Your Honour.

அன்புடன்,

இராம.கி. 


No comments: