Friday, July 09, 2021

சாப்பாடு -3

”கானா, பீனா” இரண்டிற்கும் தமிழர் ஒரே சொல் பயில்வதாய் மராட்டிய/சங்கதக் கணிமொழியியலர், எள்ளல் பேசியது திரு. லலிதராசாவைச் சீண்டி இவ்வுரையாடலை எழுப்பியுள்ளது. (இற்றைத் தமிழர் பலரும் வினைச்சொல் மறந்து ஆங்கிலப் பெயர்ச்சொற்களாற் ”பண்ணுகிறாரே”, அதுபோன்றது எல்லா வித வினைகளுக்கும் ஒரு சொல் பயிலும் பழக்கமும்.) ”தண்ணி, ரொட்டி, இட்லி, காப்பி, ஜூஸ்” என எல்லாவற்றையும் ’சாப்பிட’ முயல்வது ஒரு சிலரின் அறியாமை; மொழியின் குற்றமில்லை. ரொட்டிக்கும் இட்டளிக்கும் வேண்டின் ’சாப்பிடு’ என்பது ஓரளவு சரியாகலாம். (ஆழம் பார்க்கின் அதுவுஞ் சரியன்று.) தண்ணி, காப்பி, ஜூசை அருந்தவும் பருகவும் குடிக்கவும் முடியும். சாப்பிட முடியாது. 

ஆங்கில, இந்திப் பேச்சுகளில் இலக்கணம் பேணவிழையும் நாம், தமிழ்ப் பேச்சில் அதை விட்டுவிடுவது நம் உளப்பாங்கைப் பொறுத்தது. தமிழ்தானே?- என்ற அலட்சியம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. நம்மிடமுள்ள தமிழ்ச்சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளாது வெறுமே 3000 சொற்களால் நம் தமிழ்ப் பேச்சை ஓட்டிவிட முயன்றால், தமிங்கிலராகவே அது நம்மை மாற்றிவிடும். பின், தமிழையும் தமிழரையும் மாற்று மொழியார் இகழ்வது நடக்கத் தான் செய்யும். “Quora" இணையக்களத்தில் கிளம்பும் கேள்விகள் போன்றது இம் மராட்டியரின் கேள்வி. தமிழர் பற்றிய அறியாமை, ஐயம், அச்சம், இகழ்வு ஆகியவற்றால் பல நூறு கேள்விகள் Quora தளத்தில் வந்து குவிந்துகொண்டு இருக்கின்றன.  

”அதிலில்லை, இதிலில்லை, தமிழில்லை” என்று திரும்பத் திரும்ப நொகையாய்ப் (negative) பேசிய மணிவண்ணன் கடைசி வரை ”எம்மொழியிலிருந்து ’சாப்பாட்டைத்’ தமிழ் கடன் வாங்கியது?” என்று பொதிவாய்க் (positive) கூறவேயில்லை. ”சப்பிலிருந்து சாப்பாடு எப்போது வந்தது? தெலுங்கிலும் மலையாளத்திலும் எப்போது வந்தது? பண்டைத்தமிழ் வழக்கில் இருந்ததெனில் ஏன் அது எழுத்தில் வரவில்லை?” என்ற கேள்விகளை எழுப்புவதும், ”வாதம் ’சப்பு’ பற்றியல்ல. சாப்பாடு, சாப்பிடு பற்றியது” என நினைவுறுத்துவதும் ஒரு படிநிலை தான். அதற்கு அவருக்கு நன்றி சொல்வோம். ஆனால் அதோடு மட்டும் இருந்தால் எப்படி? தமிழ் அகரமுதலிகளை literal ஆய்க் காணாது ”பொருளெது?”வென ஆய்ந்து, சாப்பாடு தொடர்பில் மற்ற சொற்களையும் அடையாளங் கண்டிருக்கலாமே?

பாவாணர் துணையில் இங்கே நான் அதைச் செய்ய முற்படுகிறேன். பொறுமையான தேடலும், பொருண்மை நாடலும், சொல்லுறவு காணலும், திரிவு புரிதலும், மரபு பேணலும் இருப்பவர் என்னோடு வாருங்கள். மற்றவர்க்கு நான் சொல்வது விளங்காது. இங்கொன்றைச் சொல்ல வேண்டும். பாவணரோடு நான் வேறுபடும் இடங்கள் மிகுதி. இதுகாறும் என்னைப் படித்தோருக்கு அது நன்றாகவே தெரியும். ஆயினும் அவரைப் படிக்காது இவ்வாய்வுகளில் நான் நுழைந்திருக்க முடியாது. முரணை பேசி, பாவாணரைத் துச்சமாய் ஒதுக்கி, அவர் பெயரைக் கேட்டாலே சிந்தனைக் கதவை மூடி அடம் பிடித்தால் என் சொற்கள் விளங்கா. பாவாணரை ஒதுக்கியதால் தான், Dravidian Etymological Dictionary (DED) போன்றவை தமிழ்ச் சொல்லாய்விற்கு ஓரளவு மட்டுமே பயன்படுகின்றன. (நான் புரிந்துகொண்ட வரை, DED என்பது, ஒரு  Dravidian Cognate Dictionary. அதன் மூலம் சொற்பிறப்பியல் காண முடியாது. இப்படி நான் சொல்வது பலருக்கு அதிர்ச்சி ஆகலாம்.)

”துபாசிகள்” வழி தமிழ்படித்த எல்லா மேலையரிலும், நான் பார்த்த வரை,  வையாபுரியாரே உள்நிற்கிறார். சுற்றியுள்ள நீரின் சூடு உயர்ந்துகொண்டே போவது தெரியாத தவளையைப் போல்  நம் தமிழர் உள்ளார். எவ்வளவு காலம் மேலையரின் பெயரைச் சொல்லி நம்மையெலாம் இவர் அச்சுறுத்துவாரோ, தெரியாது. எதிர்த்துப்பேச, நம் நாகரிகம் நம்மைத் தடுத்துக் கொண்டுள்ளது. ஏறத்தாழ,  வையாபுரியார், மறைமலையடிகள் என்று நம்மூர்த் தமிழாய்வு 2 அணிகளாய்ப் பிரிந்துநின்று, தொடர்ந்து குலைந்து கொண்டிருப்பதற்கு மாறாய், இரண்டு பாதைகளையும் ஓரளவாவது பிணைக்க முயலும் என் போன்றவரையும் இனவெறியன் என்று அடையாளமிட்டு விட்டால், என் சொல்வது? கால்பந்து ஆட்டத்தில், பந்தை ஆடாது ஆளை ஆடும் களத்திலிருந்து ஒதுங்கியிருக்கவே முடியும். எனவே தான் தனிக்கட்டுரைக்கு வந்தேன். ஒரு சிலரைத் திருத்த முடியாது. ஆனாற் சுற்றியுள்ள பலருக்கு, குறிப்பாய் இளைஞருக்கு, உணர்த்தவாவது வேண்டும்.   

சாப்பிடென்பது உண்ணல், உறிஞ்சல், திற்றல், தின்றல், தின்னல், து(ய்)த்தல், துற்றல், நுகர்தல், புசித்தல், பொசித்தல், மடுத்தல், மொசித்தல் போல வாய்க்குள் இடுவதைக் குறிக்கும் நேரடி வினை அல்ல. இடுதல், கொள்ளல், ஆடுதல் போல் துணைவினை சேர்ப்பது இன்னொரு வகை. கூப்பிடு/கூப்பாடு, ஏற்பிடு/ஏற்பாடு என்பவற்றை இங்கு ஒப்பிடலாம். ஓர் இயல்மொழியை ஆதமாடன் (automaton) போலெண்ணி, ”பொத்தானை அழுத்தி,, இணையத்தில் தேடினேன், கிடைக்கவில்லை” என்பது போலும் ”எடுத்தேன், கவிழ்த்தேன்” என்பது போலும் பேசுவோர்க்கு சொற்பிறப்பியல் புரியவே புரியாது. சரி, சாப்பிடுவதில் உள்நிற்கும் ”சாப்பு” தமிழ்ச்சொல்லானால் அதனுள்ளும் ஒரு வினை,வேர் இருக்குமே? அது ஒரு சொல்லை மட்டும் உருவாக்காதே?. பலவும் உண்டாக்குமே? 

எனவே சாப்பிடு, சாப்பாடு மட்டுமன்றி இன்னும் விரிவாய் பாவாணர் முறையில் தேடுவோம். எத்தனை பெருமரத்தை இந்த ஆணிவேர் உருவாக்குகிறது? கிளை வேர்களுண்டா? கிளைகள், படியாற்றங்கள் (applications) என்ன?- என்ற கொழுத்த (திரண்ட; holistic) பார்வைக்கு வந்த பின்பே ஒரு சொல்லைத் தமிழெனச் சொல்ல முடியும். அகப்பார்வையாலும் (subjective view) பாவாணரென்ற ஆளுமைக்காகவும் எம் போன்றவர் எதையுஞ் சொல்வதில்லை. புறவொழுங்கைக் (objective order) கண்டே சொல்கிறோம். அறிவியல் எதுவென எம் போன்றோருக்குந் தெரியும். சொல்லாய்வறிஞர் ப.அருளியும் இதை அழுந்தச் சொல்வார். இது பட்டம் விடுவதல்ல; அறிவியல் முயற்சி. 

”ஞால முதன்மொழி தமிழா?” என யாரும் தேடிப்போகவில்லை. அது பாவாணர் நம்பிக்கை. பின்வருவோரெலாம் அவர் நம்பிக்கைகளைக் கொள்ளவும் தேவையில்லை. நியூட்டனின் பின்னோர் அவரின் “ரசவாத”க்கொள்கையைப் பின்பற்றினாரா, என்ன? இன்னும் பல மொழிக்குடும்ப ஒப்பீடுகளை யாரும் உருப்படியாகச் செய்யவில்லை. ஞால முதன்மொழிக்குக் காலமிருக்கிறது. ஆனால் தமிழை ஆயாமல் Nostratic Studies என்பதன் முடிவு தெரியாது. பாவாணர் வழியில் பெரும்பாலும் சொல்லுடைத்து வேர் காண்பதில்லை. அப்படிச் செய்வோரை நான் மறுத்தே வந்துள்ளேன். பாவாணர் வழியார் எல்லோருஞ் சரியெனச் சொல்லேன். இன்னுஞ் சொன்னால் என் ஆய்விலும் கூடப் பிழை காணமுடியும். திறந்த மனத்தோடு தான் நான் என் பணி செய்கிறேன். எங்கேனும் தொடங்க வேண்டுமே? Present stage is classification and finding the inherent orders. செய்து பார்த்துப் பிழை கண்டு (trial and error) தேரும்முறையில் தமிழ்ச் சொற்பிறப்பியலார் இதுவரை பல ஒழுங்குகளைக் கண்டுபிடித்துள்ளார். எதிர்காலத்திற் கொத்தளவு (sample size) கூடின் அவை விதிகளாய் மலரும். காட்டாகப் ப.அருளி தன்னாய்வின் வழி ய>ஞ>ந என்ற சொற்றிரிவு விதியைக் கண்டுபிடித்தார். (அவருடைய “யா” பற்றிய ஆய்வு ஓர் அருமையான ஆய்வு.  இதுபோல் வேறு பல விதிகளும் தமிழ்ச்சொற்பிறப்பியலில் காண்கிறோம். 

சுப்/சொப்/சப் என்பது ஒலிக்குறிப்பு. இது ஒரு தனிமொழிக்கு மட்டும் உரியதல்ல. இதனுள் வருவது உகரமா, ஒகரமா, அகரமா? தெரியாது. உகரம் முதலென ஊகிக்கிறோம். உண்ணுகையில் நாக்காலும் உதட்டாலும் இவ்வொலி உண்டாகிச் சுப்பலும், சப்பலும் உறிஞ்சு பொருள் உணர்த்தும். இரட்டை வன்மெய் உள்ள தமிழ்ச்சொற்களில், ஒரே பொருளோடு, 2 ஆம் மெய், இன மெல்லினமாய் மாறலாம், இன்னுந் திரிந்து 2 மெய்களும் கூட மெல்லினம் ஆகலாம். (நீக்கல், நீங்கல், நீங்ஙல்), (அமுக்கல், அமுங்கல், அமுங்ஙல்), (அட்டல், அண்டல், அண்ணல்), (காட்டல், காண்டல், காணல்), (முறித்தல், முறிந்தல், முறிந்நல்), (உத்தல், உந்தல், உந்நல்), (ஒற்றுதல், ஒன்றுதல், ஒன்னுதல்) என்ற சொற்களில் இதைக் காணலாம். 

இற்றைத் தமிழில் 3-ஆந் திரிவு அரிதாகி, மலையாளத்தில் அது இயல்பாகி நிற்கும். எனவே பழந்தமிழில் இப்பழக்கம் இருந்திருக்கலாம். அப்படிக் காணின் (சுப்பு ,சும்பு, சும்மு), (சப்பு, சம்பு, சம்மு) இணைகளும் (கூப்பு, கூம்பு), (சீப்பால், சீம்பால்), (சுப்பு, சும்பு), (சோப்புதல், சோம்புதல்), (தூப்பு, தூம்பு), (நீப்பு, நீம்பு), (வேப்பு, வேம்பு) என்பவையும் முகன்மையே. (பப்பல்> பம்பல்> பம்மல்), (வெப்பல்> வெம்பல்> வெம்மல்) என்பனவும் உண்டு. பொருள் மாறாது முதல் எழுத்து நீள்வதும், சுப்பு> சூப்பு> சூம்பு, கம்பு> காம்பு, தூபம்> தூமம், முகு> முக்கு> மூக்கு, பசு> பாசு> பாசி, உஞ்சல்> ஊஞ்சல், விசு> வீசு என்பவற்றில் நடந்துள்ளன. எனவே சாப்பு, சாம்பு, சாமு போன்றவற்றையும் கூட நாம் இங்கே இனங்காண வேண்டும். 

முதலில் சுப்பு, சும்பு. சும்மெனும் உகரச் சொற்களைப் பார்ப்போம். இவை எல்லாவற்றிலும் உள்ளிருக்கும் பொருளாய் நீர் வற்றி, பொருள் வாடி, வதங்கிக் காய்ந்த நிலையே பேசப்படும் காட்டாகச் சுப்பல்= நீர் வற்றிய காய்ந்த விறகு; சுப்பி = நீர் வற்றிய காய்ந்த குச்சி; சுப்பு = நீர் வற்றற் குறிப்பு, சுப்பெனல் = நீரை விரைந்து உள்ளிழுக்கும் குறிப்பு; சும்பல் = வாடிச் சுருங்கல், சும்பன் = வலி யில்லாதவன்; சும்மை = சுர்ரென உறிஞ்சும் ஓசை, “இழுமென் சும்மை இடனுடை வரைப்பின்” என்பது பொருநராற்றுப்படை 65ஆம் வரியில் வரும். சுமங்கை = சுவைக்க முடியாத செடி; ஆடு தின்னாப் பாலை. சும்பு சூம்பு என்றும் நீளும். சூம்பிக் கிடப்பவன் = சரியான உடல்வளர்ச்சி பெறாமல் இருப்பவன். மனத்தாற் சூம்பிக் கிடப்பது சோம்பலாகும். (சும்பு> சூம்பு> சோம்பு)

அடுத்து, சுப்பிலிருந்து வளரும் சப்பு, சம்பு ஆகியவற்றிலும் நிறையச் சொற்களுண்டு. சப்பல் = அதுங்கல், உறிஞ்சல், சுருங்கல், மெலிதல், தட்டையாதல். இத்தனையும் வாய்க்குள் நடப்பவை. பின் பொருள்நீட்சியில் வெளியே நடக்கும் வினைகளுக்கும் இச்சொல் பயனாகும். இதைத்தான் .ஆசுக்கோ பர்போலோ, Deciphering the Indus Script நூலில் Rebus priniciple என்பார். மொழி வளர்ச்சியில் இது முகன்மை. தமிழிலும் உண்டு. ”சப்பு” என்ற சொல் மற்ற திராவிட மொழிகளிலும் உண்டு. ம.சப்புக; க.சப்பரிசு, சப்படிசு, சப்பளிசு, தப்படிசு; தெ. சப்பரிஞ்சு, சப்பு; து.சப்பரிபுனி; கோத.சப்;துட.செப்; குட.செப்பே, சபெ; நா.சவ்வ்; பர்.சவ்ல், சல்; மா.சொப்ப; பட.சப்பு; பாலியிலும் ”சப்பேத்தி” என்றுண்டு.; ஆங்கிலத்திலும், மேலைமொழிகளிலும் உண்டு. E.Sup. (சுப்பு)> சப்பு = ஒன்றை மெல்லாது நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையில் இட்டு நெருக்கி, அதன் சாற்றை மெல்ல மெல்ல உறிஞ்சுதல் அல்லது அப்பொருளைச் சிறிது சிறிதாகக் கரைத்தல் 

சப்பல் = உணவில் மீந்த எச்சில். ”சாப்பிட்டுத் தூக்கியெறியிற சப்பல்னு நினைச்சியா?” சப்புக் கொட்டுதல் = சாப்பிடும் முன்னோ, பின்னோ, சுவை நாடி நாவை மேலண்ணத்திற் பொருத்தி ஓசை எழுப்புதல்; சப்புச் சவறு = பயனுறிஞ்சிய பின் கழிக்கப்பட்ட பொருள். இங்கே பயனென்பது சாறோடு ஒப்புமையிற் கூறப்படுகிறது. “சாறெல்லாம் சப்பிட்டானே? வெறுஞ் சவறு தானே இப்பக் கிடக்கு?” சவறென்ற சொல்லும் சப்பு>சவ்வு>சவறு என்று எழுந்தது தான். சப்பெனல் = உறிஞ்சிச் சுவைபோன பின்னுள்ள சுவையின்மை; சப்பை = flat, weak, lean emaciated. சுவையற்றது, வலுவற்றது, பயனற்றது. 

உடம்பின் வலிமைபோய்க் கிடக்கும் நிலை. ”அவன் போறாண்டா? சப்பை” இதன் பொருள், வாயின் வினையிலிருந்து உடம்பிற்கு வந்துவிட்டது, பாருங்கள். எல்லா மொழியும் இப்படித் தான்.பொருள் நீட்சி சொற்களுக்கு நடந்து கொண்டேயிருக்கும். மழை பொழிகிறது என்பதிலுள்ள பொழிதல் வினை பொல்லெனும் துளையிலிருந்து வந்தது. வானத்தில் பொள் எனும் கற்பனைத் துளை இருப்பதைப் “பொத்துக்கினு மழை கொட்டுது” என்று சொல்கிறோமில்லையா? இது போல் மொழிகளின் பொருள்நீட்சி மாகை (magic) தெரியாதவரே சப்பிற்கும் சாப்பாட்டிற்கும் தொடர்பில்லையென்பார். கப்பலில் எழுதிய உலக்கைப் பொத்தகத்திற்கும் இற்றை blog ற்கும் தொடர்பு எழுந்தது நினைத்துப் பார்க்க முடியாத மாகை தானே? கணித்திரையில் நானெழுதப் பயனுறுத்தும் மூசி (Mouse)? 

மேலே சொன்னபடி flat பொருட்பாடு ஏற்பட்ட பின்னர், சப்பின் பயன்பாடு இன்னும் அதிகமாய் நீளும். சப்பென்பதை சாப்பாடு தொடர்பாய் மட்டுமே காண்பது மொழி வளர்ச்சி அறியாதோரின் கூற்று. இதில் எந்தப் பயன் முதலில் வரும்? ஒலிக்குறிப்பு முதலெழும் இடத்திற்றான். அது வாய்க்குள் நடக்கிறது. இப்போது வாய்க்கு வெளியில் வந்துவிட்டது. சப்பட்டை = flat, சப்படி = flat, தட்டையான வயிரத்தையும் சப்படி என்பர் (கல்வெட்டுச் செய்தி. மணிவண்ணனுக்குப் பிடிக்குமே?). சப்பரம் = விமானமில்லாத பல கோயில்களிலுள்ள கடவுள் திருமேனியைத் தூக்கிச் செல்லும் ஓர் ஊருலவு வாகனம். சப்பளம்/சப்பணம் = நிற்காமல் கிடையாக, தட்டையாக உட்காரும் முறை; சப்பளி = சப்பளத்தின் வினைச்சொல். இங்கு அளி என்ற துணைவினை உள்ளது; சப்பாணி = கால் விளங்காத மாற்றுத் திறனாளி சப்பையாக இருக்கும் நிலை. சப்பத்தி = தட்டையான முத்து. இதுவுங் கல்வெட்டுச் செய்தி தான். (கவனத்தோடு கண்டால் அடையாளங் காண்பது எளிது.) 

அன்புடன்,

இராம.கி.


No comments: