Sunday, July 25, 2021

பாகு - 1

”பாகு என்பது தமிழ்ச்சொல்லா? வேறுமொழி எனில், அதற்கான தமிழ் இணைச் சொல் என்ன?" என்று தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்டார். அதற்கு விடை சொல்லுமுன், கருப்பஞ்சாறு பற்றியும் விளவ மாகனவியலில் (fluid mechanics) வரும் பிசுக்குமை (viscosity) பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும்.  அப்போது தான் பாகின் சொற்பிறப்பு புரிபடும்.

நீரில் சருக்கரை அதிகங் கரையும் தானே?. காட்டாக,  25 நுறிய பாகை (centigrade) வெம்மையில் 100 குருவ (gram) நீரில் 211.4 குருவம் சருக்கரை கரையும். கரட்டு (raw) கருப்பஞ் சாற்றில் 13-15% சருக்கரை (sucrose)[சிறிது  களிக்கரை (glucose), பழக்கரை (fructose)] இருப்பதோடு, 10-15% நார்ப் பொருளும் (fiber) பல்வேறு அலங்கற் பூண்டுகளும் (organic compounds) உண்டு. [குறிப்பாய்  வெயின  அஃக-எதிர்ப்பிகள் (phenolic antioxidants), பித்தவனைய அஃக எதிர்ப்பிகள் (flavonoid antioxidants) இருக்கும்]. 

{இங்கோர் இடைவிலகல். Phenylக்கு ஒரு சொல் வேண்டுமே? Phenyl is derived from the French word phényle, which is, in turn, derived from Greek φαίνω (phaino), "shining", as the first phenyl compounds named were byproducts of making and refining various gases used for lighting. As per McMurry, "the word is derived from the Greek pheno (“I bear light”), commemorating the discovery of benzene by Michael Faraday in 1825 from the oily residue left by the illuminating gas used in London street lamps." வெயின என்பது Phenyl ஐ இதே பொருளில் குறிக்கும் சொல்.  வெயில் = ஒளியும். சூடும் சேர்ந்தது.

அடுத்து Flavonoids (or bioflavonoids); from the Latin word flavus, meaning yellow, their color in nature) are a class of polyphenolic secondary metabolites found in plants, and thus commonly consumed in diets. பித்தவனையம் என்பது flavonoid இற்கு மஞ்சள் பொருள் வழி உணர்த்துவது பித்த அனையம் ஆகும். பித்தம்= மஞ்சள். பித்தளை = மஞ்சள்நிற அட்டிழை (alloy).}

மரபு சார்ந்த கண்டச் சருக்கரை விளைப்பில், சருக்கரை ஆலையர் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சி  55-59 % செறிவிற்குக் கொண்டுவருவார். அக்காலம் போல் இல்லாது இக்காலத்தில் பல்மடி ஆவியாக்கலின் (multi-effect evaporators) வழி, இந்தக் காய்ச்சு நடக்கிறது. முடிவில், செறிவூட்டிய சாற்றிலிருந்து வெல்லம், சருக்கரைக் கண்டு போன்றவற்றைப் படிகமாக்குவர். இப்படி நடக்கையில், செறிவூட்டிய பாகின் பிசுக்குமையும் (viscosity) எக்கச்சக்கமாய்க் கூடும். பிசுபிசுப்பு என்பது வழவழத் தன்மையையும், பாகுத் தன்மையையும் குறிக்கும். பிசுக்குமைக்கு மாறாய்ப் பாகுமையையும் பயன்படுத்துவதுண்டு. பாகை அறிந்தால்தான் பாகுமை புரியும். எனவே சற்று பொறுப்போம். 

இது ஒருபக்கமிருக்க, ”சருக்கரை, சக்கரம் போன்றவை தமிழே அல்ல, அவை சங்கதம், இந்தோயிரோப்பியன் மொழிகளில் மட்டுமே உண்டு. தமிழ் கடன் பெற்றது” என்று சிலர் குறுக்குச் சால் ஓட்டுவார். அப்படியிருக்க வழியில்லை. 2500 ஆண்டுகளுக்குமுன் நம்மூரில் கரும்பில் அல்லாது,  பனஞ்சாற்றிலிருந்து சருக்கரை எடுத்தார். பனை, தமிழ்நாட்டுத் தாவரம் அல்லவா? பதநீரைக் காய்ச்சிப் பனம்பாகு எடுத்துப்  பின் பனங் கருப்பட்டி செய்தார். ஆழ ஆய்ந்தால், இந்தியாவிற்குள் கரும்பு நுழைந்தது பெரும்பாலும் தமிழ்நாட்டு வழி என்று தென்படும். சருக்கரை நுட்பியலும் கூடப் பனையிலிருந்து கரும்புக்கு மாறியிருக்கலாம். அதியமான் காலத்தில், தென்கிழக்கு ஆசியாவிலிருந்து (குறிப்பாய்ப் பாபுவா நியூ கினியா) கரும்புப் பயிரைப் பெற்றார், பொ.உ.மு. 2 ஆம் நூ. பட்டினப்பாலை தன் 8-12 ஆம் வரிகள், சருக்கரை ஆலை பற்றி தெளிவாய்ப் பேசும். 

”விளைவறா வியன் கழனி

கார்க்கரும்பின் கமழ்ஆலைத்

தீத்தெறுவின் கவின்வாடி

நீர்ச்செறுவின் நீள்நெய்தற்

பூச்சாம்பும் புலத்து ஆங்கண்”

”விளைவு அறாத (நில்லாத) அகன்ற கரும்புவயலின் ஊடே நெய்தலும் வளர்ந்திருக்கிறது. கரும்பு வயலுக்கு அருகில் மணங்கமழும் சருக்கரை ஆலையிருக்கிறது. அதில் நெருப்பு எரிந்து வெம் புகை எழுந்து வருகிறது. அந்த வெம்மை பட்டு நெய்தற்பூ சாம்பிவிடுகிறது” என்றிதற்குப் பொருள் சொல்லலாம். தவிர, “அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்” எனப் புறம் 99/2 இலும், “கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே” எனப் புறம் 392/21 இலும் வரும். 

தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கரும்பு பெற்றதை இங்கு  வெளிப்படக் கூறா விடினும், அது வெளியிலிருந்து வந்தது தெளிவு. கரும்பிலிருந்து சருக்கரை பிரித்து கட்டியாக்கும் நுட்பியற் சொற்கள் பலவும் தமிழாகவே உள்ளன. வடக்கே குத்தர் காலத்தில் இவற்றை சங்கத வழியே மொழி பெயர்த்ததாலும், மேலை ஆய்வரில் பலரும் தமிழிலக்கியம் அறியாததாலும், சங்கத மொழி பெயர்ப்பிற்கு முன் தமிழில் இவை இருந்ததை இன்றும் பலர் அறியார். ஆங்கில விக்கிப்பீடியாவில் சங்கத வழிப் பாடங்களே சொல்லப் பெறுவதால், நம்மூர் ஆட்களும் இச் சொன் மூலங்கள் ஏதெனத்  தெரியாதுள்ளார். 

சுல் எனும் வளைவுக்கருத்து வேரில் சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை எனப் பல்வேறு கருத்துச் சொற்கள் எழும். பாவாணர் நூல்களைப் படித்தால் இவற்றைத் தெளிவாய் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக ”வேர்ச்சொற் கட்டுரைகள்” நூலில் (தமிழ்மண் பதிப்பகம், 2000) பக் 102 - 117 வரை படியுங்கள். இவற்றை மீண்டுமிங்கே சொல்வதை விட, பாவாணரை நேரே படிப்பது நல்லது. பாவாணரிலிருந்து நான் பலவிடங்களில் சற்று வேறுபடுவேன். ஆனாற் பெரிதும் அவரையே தழுவுவேன்.. 

சக்கரம்> சருக்கரம்> சருக்கரை> சர்க்கரை> சக்கரை என்பன அடிப்படையில் வட்டத் தொடர்பைக் குறிக்கும். படிகமானபின் மீந்த சருக்கரைச் சாற்றுக் கலவையை, வடிகட்டிய பிறகு கிட்டும் சருக்கரைப் பாகை, வட்ட அச்சுகளில் ஊற்றிக் காயவைப்பர். அப்போது கிட்டுவது தான், சருக்கரைக்கட்டி. நாளா வட்டத்தில் இக் கூட்டுச்சொல்லைப் பிரிந்து சருக்கரை என்றாலும் கட்டி என்றாலும் sugar எனப் புரிந்துகொண்டார். கட்டிக்கு இன்னொரு பெயர் கண்டம். (உப்புக் கண்டம் நினைவிற்கு வருகிறதா?) இது வடக்கே பரவி, khanda ஆகி, மேலையரிடம் candy என்றானது. சருக்கரை jaggery என்றுந் திரிந்தது. பனஞ்சாற்றில் பெறுவது கருப்பட்டி. கருப்பென்ற தாவர நிறமே வெளிநாட்டிருந்து இறங்கிய கரும்பிற்கும் பெயரானது. 

சருக்கரைப் படிகத்தை வடிகட்டிக் கிடைக்கும் சாற்றை, மெழுகுச்சாறு  (molasses) எனலாம். இவை செய்த இடம் ஆலை ஆனது. இத்தனை விவரங்களும் சங்க இலக்கியத்தில் குறிப்பாக உள்ளன. இப்போது நாம் பயிலும் சில கலைச் சொற்கள் அவற்றில் இல்லாது போகலாம். ஆனால் நுட்பந் தொடர்பான கலைச் சொற்கள் இன்றும் நம்மிடம் உள்ளன. கருநிறங் காரணமாய் கருநல்> கன்னல் என்ற பெயரும் சருக்கரைக்குண்டு. கரும்பை இயந்திரங்களூடே கொடுத்துச் சாறுபிழிவதால் இயந்திரத்தின் இன்னொரு பெயரான விசையால் விசையம்> விசயம் என்றும் ஒரு சொல் ஏற்பட்டது. வட்டக்குழிகளில் பாகை ஊற்றுதற்கு மாறாய் குளிகைபோற் கோளமாக்குவதால் கோளப்பெயரும் சருக்கரைக்கு உண்டு. குள்> குளிகை. குள்> கொள்> கோள்> கோளம். சகர முதற் சொற்கள் சகரந் தொலைத்து அகரமுதற் சொற்களாகி மக்கள் வழக்கில் இடம்பெறும். சக்கரம்> சக்காரம்> அக்காரம். அக்கார வடிசில் = சருக்கரைப் பொங்கல்.  

நுட்பியல் வளர்ச்சியில், கருப்பஞ்சாற்றொடு சுண்ண (Calcium Hydroxide) நீர் சேர்த்து, கரிப்புகையை உள்ளனுப்பி நுரைக்கவிட்டால், கரிம ஏற்றம் (carbonation) ஏற்படும். இதனாற் சாற்றுப் புரதங்களைத் (proteins) திரளவைத்து (coagulates), கலவைக்குள் உண்டான சுண்ணாம்புத் தூள்களின் (calcium carbonte) மேல், சாற்றிற் கரைந்த கெழுவங்களைப் (colourants) பரப்பொற்றிப் (adsorb) பிரித்து, திண்மக் கழிவுகளை (solid residues) வடிகட்டி, வெள்ளைச் சருக்கரைச் சாற்றைப் பெற முடியும். வெள்ளைச் சாற்றைப் படிகம் ஆக்கினால் வெள்ளைச் சருக்கரைக் குருணைகள் (granules) கிட்டும். பாதிநிறங் கொண்ட வெள்ளைச் சருக்கரை, வெல்லம் எனப் பெறும். 

வெள்ளைச் சருக்கரையை வடிகட்டிக் கிடைக்கும் நீர்மத்தையும் மெழுகுச்சாறு எனலாம். சுண்ண நீர்சேர்ந்து அயனச்செறிவு (pH) 7 க்கும் மேல்  உயர்த்துவதால், களரிமை (Alkalinity) கூடி, களிக்கரை (glucose), பழக்கரை (fructose) போன்ற ஒற்றைச் சருக்கரைகள் (monosaccharide) சிறிதளவு சிதையலாம். சீனப்பயனர் யுவான் சுவாங் தெற்கே வந்தபிறகு அவர் வழி, வெள்ளைச் சருக்கரை செய்யும் நுட்பம்,  வடக்கேயும் சீனத்திற்கும் பரவியது. சீனத்தில் வெள்ளைச் சருக்கரை பெரிதும் விரும்பப்பட்டது. நாளடைவில் இப் புழக்கம் நம்மூரிலும் பரவி வெள்ளைச் சருக்கரையையே சீனச்சருக்கரை>சீனி என்று சொல்லத் தொடங்கினார்.      

அன்புடன்,

இராம.கி.

2 comments:

Siva said...

இறுதியில் "பாகு" என்பது தமிழ்ச்சொல்லா? என்கிற வினாவுகான விடை கட்டுரையுள் காணப்படவில்லையே

இராம.கி said...

இன்னும் கட்டுரை முடியவில்லையே? கொஞ்சம் பொறுங்கள்.