Monday, July 26, 2021

பாகு - 2

சரி, பிசுக்குமை என்பதென்ன? இதுவறிய விளவ மாகனவியலுக்குள் (fluid mechanics) போகவேண்டும். பொதுவாய் நீர்மப் பொதிகளின் (bodies) நகர்ச்சியும் (motion), திண்மப் பொதிகளின் வளைப்புகளும் (deflections), மொத்தை விசைகளாலும் (bulk forces- காட்டு: புவியீர்ப்பு விசை, அழுத்தம்), பரப்பு விசைகளாலும் (surface forces- காட்டு: கத்திரி விசை- shear force) ஏற்படுகின்றன. விளவ நகர்ச்சியில் இவ் விசைகளைப் பொருத்துவது போலவே, திண்மங்களையும் இதே விசைகளுக்கு உட்படுத்தினால், திண்மங்கள் தெறித்து உடையும் வரை, வளைப்புகளைக் காட்டும்.  விசைகளையோ (forces), துறுத்துகளையோ (stresses) நிறுத்திவிட்டால், தொடர் விளவுகளும், வளைப்புகளும் நின்றுபோகும். 

[அன்றாட நடைமுறையில் அழுத்தல் என்பது to press என்றே புரிந்துகொள்ளப் படும். அதைப் பொதுமைப் படுத்தி,  ”பொதித் துகள்களை நெருங்க வைக்கும்” ஆழ்பொருளிற் துறுத்தல் வினை, பொறியியலில் ஆளப்படும். இது stress வினைக்கு ஈடானது. துறுத்தலுக்கு மாறாய் தகைத்தலென்றும் சிலர் ஆளுவர். [காட்டாகத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலியில் 'தகைத்தலே' உண்டு. அதைப் பயனுறுத்த நான் தயங்குவேன். என் பார்வையில், தகைத்தல் tighten உக்கே சரிவரும். தவிர, ஐகாரம் பயிலும் தகைப்பை விட,  உகரம் பயிலும் துறுத்து,  பலுக்குதற்கு எளிது. இதனாலேயே துறுத்தலைப் பரிந்துரைக்கிறேன். அதேபொழுது என் பரிந்துரைக்கு மாறி, "தகைப்பே" நிலைத்தாலும், எனக்கு உகப்பே.]

இயற்கையில் ஒவ்வொரு வகை விசைக்கும்/துறுத்திற்கும் ஒவ்வொரு வளைப்பு/ நகர்ச்சி ஏற்படும். அவற்றைத் துறுங்குகள் (strains)/துறுங்கு வீதங்கள் என்பார். அழுத்தப்பட்ட பொதி அழுங்குவது போல், துறுத்தப்பட்டது துறுங்கும் (to get strained). மாகனவியலில் (mechanics) திணிசுத் துறுத்தம் (tensile stress), அமுக்கத் துறுத்தம் (compressive stress), கத்திரித் துறுத்தம் (shear stress) என்று 3 வகைத் துறுத்தங்களைக் குறிப்பார். அதேபோல, நீளவாட்டுத் துறுங்கு (longitudinal strain), குறுக்குச் செகுத்தத் துறுங்கு (cross sectional strain), பருமத் துறுங்கு (bulk strain), கத்திரித் துறுங்கு (shear strain) என வெவ்வேறு துறுங்குகளுண்டு.) 

(to stretch என்பதைத் தமிழிற் குறிக்கத் துயர்தல்/ துயக்குதல் என்ற சொல்லைப் பயிலலாம். இது நீளுதல்/ நீட்டுதல் பொருளைக் கொடுக்கும். (ஏதோவொன்று stretch ஆகி நீள்வதைத் ”துயர்ந்து கொண்டே வருகிறது” எனச் சிவகங்கைப் பக்கம் சொல்வார். தொடர்ந்து வரும் துன்பமும் துயரம் என்றே சொல்லப் பெறும்.)

ஒரு விளவத்தில், கத்திரித் துறுத்தமும், கத்திரித் துறுங்கும் தம்மில் நேர்விகித உறவு காட்டினால், அவ்விளவத்தை நியூட்டோனிய விளவமென்பார். சருக்கரைக் கரைசல், ஒரு நியூட்டோனிய விளவம் தான். இந் நேர்விகிதக் கெழுவைத் (coefficient)தான் பிசுக்குமை என்கிறார். (When the relation between the shear stress (force applied per unit area) and the shear rate (velocity gradient resulting from the application of shear stress) is linear, the fluid is said to be Newtonian.) நீர்ம வெம்மை (temperature), கரைவிகளின் செறிவு (concentration of solutes), மிதப்புப் பொருள்களின் (suspended matter) செறிவு ஆகியவற்றைப் பொறுத்து பிசுக்குமை வேறுபடும். 


இப்போது,  Y இடைவெளியில் 2 இணைத் தகடுகளும் (parallel plates), தகடுகளின் இடையே ஒரு விளவமும் இருந்து, விளவக் கட்டகம் எவ்வசைவும் காட்டாது இருப்பதாய் எண்ணிக் கொள்ளுங்கள். (பொதுவாய், முப்பரிமான விளவத்தை  கணக்கற்ற இரு பரிமான ஏடுகள் (layers) ஒன்றின் மேல் ஒன்று இருப்பதாய் உருவகிக்கலாம்.)  நேரம் = 0 எனும் போது, கீழ்த் தகட்டை கிடைத்திசை (horizontal direction)யில் V கதியில் (velocity) நகர்த்துங்கள். இந்த அசைவில், கீழ்தகட்டை ஒட்டிய விளவ ஏடு சும்மா இருக்குமோ? அதுவும் நகரும் அன்றோ? என்ன? சற்றுக் குறைந்த கதியில் நகரும். அதற்கடுத்த ஏடு, இன்னும் குறைந்த கதியில் நகரும். இப்படி மேலுள்ள ஒவ்வொரு ஏடும் கீழுள்ளதைக் காட்டிலும் குறைந்த கதியில் நகரும். அதே பொழுது மேல் தகட்டை  ஓட்டிய விளவ எடு நகராமலே இருக்கும். மொத்தமாய் எல்லா ஏடுகளையும் நோக்கினால், கதி மாற்றம் ஒரு நேர்க்கோடு போல் தோற்றும். விளவத்தின் உந்தமும் (momentum) இதுபோல் கீழிருந்து மேல் குறைந்துகொண்டே போகும்.   

எளிய விளவங்கள் நகர்கையில், மேற்சொன்ன 2 பரிமான ஏடுகளிடையே இயல்பாய்த் தோன்றும் விளவுத் தடையைத் (fluid resistance) தான் பிசுக்குமை என்கிறார். காட்டாக நீர் ஒடுதற்கான விளவ தடையை விடத் தேன் நகர்வதற்கு ஆன விளவத்தடை அதிகமாகும். இட்டளி மாவு நகருதற்கான விளவத்தடை இன்னும் அதிகமாகும். நியூட்டனின் பிசுக்கு விதி இதையே கூறுகிறது, நியூட்டோனிய விளவுகளில் பிசுக்குமை என்பது துறுங்க வீதத்தைச் (rate of strain) சாராது, வெறும் நிலையெண்ணாகவே (constant) தோற்றும்.  சருக்கரைச் செறிவு 78% ஆகும் வரை, சருக்கரைச் சாறு நியூட்டோனிய விளவமாகவே இயங்கும். சருக்கரைப் படிகத்தைப் பிரித்தபின் கிடைக்கும் மெழுகுச்சாறு, சற்று வேறுவிதமாய் இயங்கும். 

கத்திரித் துறுத்தத்தைக் கூட்டுகையில்  விளவுத்தடையால் ஏற்படும் நேர் வீதத்திற்கும் அதிகமாய்த் துறுங்கு வீதம் காட்டினால், அவ் விளவம்  போலிப் பொத்திகையாய் (pseudo-plastic) இயங்கும். ( When the increase in shear stress gives more than a proportional increase in shear rate, with the curve beginning at the origin, the flow behaviour is pseudo-plastic.) மெழுகுச்சாற்றின் நகரும்போக்கு அதன் செறிவைப் பொறுத்து நியூட்டோனியனாகவோ, போலிப் பொத்திகையாகவோ அமையும்.  (The rheological behaviour of molasses may be Newtonian or pseudo-plastic depending on their composition.) 

சருக்கரைச் சாற்றின் பாகுமை பற்றி இன்னும் அறிய https://www.engineeringtoolbox.com/sugar-solutions-dynamic-viscosity-d_1895.html என்னும் பக்கத்தைப் படியுங்கள். சருக்கரைச் செறிவு கூடக்கூடப் பிசுக்குமை எக்கச் சக்கமாய் ஏறுவதை இப்பதிவின் மூலம் அறியலாம். சரி, பாகு என்ற சொல் என்ன கருத்தில் எழுந்தது? 

நம் நாட்டுப்புறங்களில், சருக்கரைப் பாகு செய்யும்போது, “சரியான பக்குவத்தில் இறக்காவிட்டால் பாகு இறுகிவிடும்” என்பார். சமையற் கலையில், சமைத்தல் பொருள்களைச் சரியான பகுப்பில் (proper composition) சேர்த்தும் கூட்டியும், கூடவே  சரியான வேக்காட்டில் அல்லது கொதிநிலையில்  (proper boiling) இறக்கிச் சுவைக்கத் தக்கதாய்ச் செய்வதையே "பக்குவம்" என்பார். இப் பக்குவமே ”பாகம்” எனச் சமையலில் சொல்லப் படுகிறது. நுகர்ச்சிக்கு/ பயன்பாட்டிற்குரிய சரியான நிலையே பக்குவம் ஆகும். இதை ஒரு தகுதி என்றும் சொல்லலாம். . பக்குதல் = பக்குவமாதல்,  பாக்கு> பாங்கு= பக்குவம் = தகுதி. ”பாங்குற உணர்தல்”  (தொல் சொல். 396) ; உணவைப் பக்குவமாகப் பண்ணுவதைச் சொல்லும்  நூல், பாக நூல். பக்குவமான உணவு= பாகம். வடக்கே நளன் எனும் அரசன், பக்குவமாய் உணவு செய்யும் கலையில் சிறந்து விளங்கியதால், ”நளபாகம்” என்ற கூட்டுச் சொல் உருவாயிற்று. 

மேலே சமையலுக்குச் சொன்னதுபோல், விளவ நகர்ச்சிக்கும் ஒரு பக்குவம் சொல்லலாம். எப்படி? முன்னால் 2 பரிமான விளவ ஏடுகளை முன்றாம் பரிமானத்தில் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கி முப்பரிமான விளவத்தை உருவகித்தது போல், விளவத்தை மீச்சிறு அளவில் பல்வேறு முப்பரிமானக் கண்டங்கள் அல்லது கற்றைகள் (quanta) நிறைந்தாயும் உருவகிக்கலாம். இக் கண்டங்கள் ஒன்றையொன்று பற்றிக் கொள்ளுமெனில், விளவம் என்பது சட்டென நகராது, இப்படி ஒரு விளவத்தினுள்ளே ஏற்படும் உராய்வுத் தடையைக் (frictional resistance) காட்டும். அடுத்து இப்  பற்றை/பிடிப்பை எப்படி ஒரு நுட்பச் சொல்லால் காட்டுவது? 

தமிழில் புல்>பல் என்பது பற்றும் நிலை குறிக்கும் வேர்ச்சொல். எல்லோர்க்கும் தெரிந்த ஓர் உயிரி, குத்திட்டு நிற்கும் சுவரையும் பற்றிக் கொண்டு கீழே விழுந்து விடாமல் நகர முடிகிறதே? நினைவுக்கு வருகிறதா? அது பல்லி. பல்லிக் கொண்டே அல்லது பற்றிக் கொண்டே அது போகும். பல்லிக்கும் சுவருக்குமான பிடிப்பைப் போலவே, விளவத்தின் தனித்தனிக் கண்டங்கள் ஒன்றையொன்று பற்றித் திரள்வதைப் பல்கு>பற்கு>பக்கு. எனலாம். நகர்ச்சிக்கான பக்குவம் இப்படி எழுகிறது. விளவக் கற்றைகள் ஒன்றையொன்று பற்றிக் கொண்டால், திணிவு அல்லது அடர்த்தியை (density) தவிர, விளவத்தடையும் (frictional resistance) பெருகும்.  ஒரு விளவத்தின் பிசுக்குமைக்கும் இதுவே காரணம் ஆகும்.

பக்கு> பகு> பாகு என்பது அடுத்த வளர்ச்சி. பிசுக்குமை கூடிய நிலை.  விளவுத்தடை பெருகப் பெருக விளவத்தின் நகர்ச்சியும் குறையும். பாகு என்ற பொருணைச் (material) சொல்லோடு மை சேர்த்தால். குணப் பெயர் (property name) வந்துவிடும். முடிவாய்ப் பாகுமை என்பது பிசுக்குமையைக் குறிக்கும் இன்னொரு பெயர்ச்சொல் ஆகும்.  அவ்வகையில் பாகு = syrup; பாகுமை = viscosity, பாகுமை மானி = viscometer பாகுமை மானியைப் பாகுநிலை அளவி என்றுஞ் சொல்லலாம், கருப்பஞ் சாறு, தேன். மாவுக் கலவைகள் ஆகியவை பாகுத் தோற்றம் கொள்கின்றன. 

அன்புடன்,

இராம.கி.

(இன்னும் சில உதிரிச் செய்திகள் உள்ளன. அடுத்த பகுதியில் தொடர் முடியும்.)


Sunday, July 25, 2021

பாகு - 1

”பாகு என்பது தமிழ்ச்சொல்லா? வேறுமொழி எனில், அதற்கான தமிழ் இணைச் சொல் என்ன?" என்று தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்டார். அதற்கு விடை சொல்லுமுன், கருப்பஞ்சாறு பற்றியும் விளவ மாகனவியலில் (fluid mechanics) வரும் பிசுக்குமை (viscosity) பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும்.  அப்போது தான் பாகின் சொற்பிறப்பு புரிபடும்.

நீரில் சருக்கரை அதிகங் கரையும் தானே?. காட்டாக,  25 நுறிய பாகை (centigrade) வெம்மையில் 100 குருவ (gram) நீரில் 211.4 குருவம் சருக்கரை கரையும். கரட்டு (raw) கருப்பஞ் சாற்றில் 13-15% சருக்கரை (sucrose)[சிறிது  களிக்கரை (glucose), பழக்கரை (fructose)] இருப்பதோடு, 10-15% நார்ப் பொருளும் (fiber) பல்வேறு அலங்கற் பூண்டுகளும் (organic compounds) உண்டு. [குறிப்பாய்  வெயின  அஃக-எதிர்ப்பிகள் (phenolic antioxidants), பித்தவனைய அஃக எதிர்ப்பிகள் (flavonoid antioxidants) இருக்கும்]. 

{இங்கோர் இடைவிலகல். Phenylக்கு ஒரு சொல் வேண்டுமே? Phenyl is derived from the French word phényle, which is, in turn, derived from Greek φαίνω (phaino), "shining", as the first phenyl compounds named were byproducts of making and refining various gases used for lighting. As per McMurry, "the word is derived from the Greek pheno (“I bear light”), commemorating the discovery of benzene by Michael Faraday in 1825 from the oily residue left by the illuminating gas used in London street lamps." வெயின என்பது Phenyl ஐ இதே பொருளில் குறிக்கும் சொல்.  வெயில் = ஒளியும். சூடும் சேர்ந்தது.

அடுத்து Flavonoids (or bioflavonoids); from the Latin word flavus, meaning yellow, their color in nature) are a class of polyphenolic secondary metabolites found in plants, and thus commonly consumed in diets. பித்தவனையம் என்பது flavonoid இற்கு மஞ்சள் பொருள் வழி உணர்த்துவது பித்த அனையம் ஆகும். பித்தம்= மஞ்சள். பித்தளை = மஞ்சள்நிற அட்டிழை (alloy).}

மரபு சார்ந்த கண்டச் சருக்கரை விளைப்பில், சருக்கரை ஆலையர் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சி  55-59 % செறிவிற்குக் கொண்டுவருவார். அக்காலம் போல் இல்லாது இக்காலத்தில் பல்மடி ஆவியாக்கலின் (multi-effect evaporators) வழி, இந்தக் காய்ச்சு நடக்கிறது. முடிவில், செறிவூட்டிய சாற்றிலிருந்து வெல்லம், சருக்கரைக் கண்டு போன்றவற்றைப் படிகமாக்குவர். இப்படி நடக்கையில், செறிவூட்டிய பாகின் பிசுக்குமையும் (viscosity) எக்கச்சக்கமாய்க் கூடும். பிசுபிசுப்பு என்பது வழவழத் தன்மையையும், பாகுத் தன்மையையும் குறிக்கும். பிசுக்குமைக்கு மாறாய்ப் பாகுமையையும் பயன்படுத்துவதுண்டு. பாகை அறிந்தால்தான் பாகுமை புரியும். எனவே சற்று பொறுப்போம். 

இது ஒருபக்கமிருக்க, ”சருக்கரை, சக்கரம் போன்றவை தமிழே அல்ல, அவை சங்கதம், இந்தோயிரோப்பியன் மொழிகளில் மட்டுமே உண்டு. தமிழ் கடன் பெற்றது” என்று சிலர் குறுக்குச் சால் ஓட்டுவார். அப்படியிருக்க வழியில்லை. 2500 ஆண்டுகளுக்குமுன் நம்மூரில் கரும்பில் அல்லாது,  பனஞ்சாற்றிலிருந்து சருக்கரை எடுத்தார். பனை, தமிழ்நாட்டுத் தாவரம் அல்லவா? பதநீரைக் காய்ச்சிப் பனம்பாகு எடுத்துப்  பின் பனங் கருப்பட்டி செய்தார். ஆழ ஆய்ந்தால், இந்தியாவிற்குள் கரும்பு நுழைந்தது பெரும்பாலும் தமிழ்நாட்டு வழி என்று தென்படும். சருக்கரை நுட்பியலும் கூடப் பனையிலிருந்து கரும்புக்கு மாறியிருக்கலாம். அதியமான் காலத்தில், தென்கிழக்கு ஆசியாவிலிருந்து (குறிப்பாய்ப் பாபுவா நியூ கினியா) கரும்புப் பயிரைப் பெற்றார், பொ.உ.மு. 2 ஆம் நூ. பட்டினப்பாலை தன் 8-12 ஆம் வரிகள், சருக்கரை ஆலை பற்றி தெளிவாய்ப் பேசும். 

”விளைவறா வியன் கழனி

கார்க்கரும்பின் கமழ்ஆலைத்

தீத்தெறுவின் கவின்வாடி

நீர்ச்செறுவின் நீள்நெய்தற்

பூச்சாம்பும் புலத்து ஆங்கண்”

”விளைவு அறாத (நில்லாத) அகன்ற கரும்புவயலின் ஊடே நெய்தலும் வளர்ந்திருக்கிறது. கரும்பு வயலுக்கு அருகில் மணங்கமழும் சருக்கரை ஆலையிருக்கிறது. அதில் நெருப்பு எரிந்து வெம் புகை எழுந்து வருகிறது. அந்த வெம்மை பட்டு நெய்தற்பூ சாம்பிவிடுகிறது” என்றிதற்குப் பொருள் சொல்லலாம். தவிர, “அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்” எனப் புறம் 99/2 இலும், “கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே” எனப் புறம் 392/21 இலும் வரும். 

தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கரும்பு பெற்றதை இங்கு  வெளிப்படக் கூறா விடினும், அது வெளியிலிருந்து வந்தது தெளிவு. கரும்பிலிருந்து சருக்கரை பிரித்து கட்டியாக்கும் நுட்பியற் சொற்கள் பலவும் தமிழாகவே உள்ளன. வடக்கே குத்தர் காலத்தில் இவற்றை சங்கத வழியே மொழி பெயர்த்ததாலும், மேலை ஆய்வரில் பலரும் தமிழிலக்கியம் அறியாததாலும், சங்கத மொழி பெயர்ப்பிற்கு முன் தமிழில் இவை இருந்ததை இன்றும் பலர் அறியார். ஆங்கில விக்கிப்பீடியாவில் சங்கத வழிப் பாடங்களே சொல்லப் பெறுவதால், நம்மூர் ஆட்களும் இச் சொன் மூலங்கள் ஏதெனத்  தெரியாதுள்ளார். 

சுல் எனும் வளைவுக்கருத்து வேரில் சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை எனப் பல்வேறு கருத்துச் சொற்கள் எழும். பாவாணர் நூல்களைப் படித்தால் இவற்றைத் தெளிவாய் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக ”வேர்ச்சொற் கட்டுரைகள்” நூலில் (தமிழ்மண் பதிப்பகம், 2000) பக் 102 - 117 வரை படியுங்கள். இவற்றை மீண்டுமிங்கே சொல்வதை விட, பாவாணரை நேரே படிப்பது நல்லது. பாவாணரிலிருந்து நான் பலவிடங்களில் சற்று வேறுபடுவேன். ஆனாற் பெரிதும் அவரையே தழுவுவேன்.. 

சக்கரம்> சருக்கரம்> சருக்கரை> சர்க்கரை> சக்கரை என்பன அடிப்படையில் வட்டத் தொடர்பைக் குறிக்கும். படிகமானபின் மீந்த சருக்கரைச் சாற்றுக் கலவையை, வடிகட்டிய பிறகு கிட்டும் சருக்கரைப் பாகை, வட்ட அச்சுகளில் ஊற்றிக் காயவைப்பர். அப்போது கிட்டுவது தான், சருக்கரைக்கட்டி. நாளா வட்டத்தில் இக் கூட்டுச்சொல்லைப் பிரிந்து சருக்கரை என்றாலும் கட்டி என்றாலும் sugar எனப் புரிந்துகொண்டார். கட்டிக்கு இன்னொரு பெயர் கண்டம். (உப்புக் கண்டம் நினைவிற்கு வருகிறதா?) இது வடக்கே பரவி, khanda ஆகி, மேலையரிடம் candy என்றானது. சருக்கரை jaggery என்றுந் திரிந்தது. பனஞ்சாற்றில் பெறுவது கருப்பட்டி. கருப்பென்ற தாவர நிறமே வெளிநாட்டிருந்து இறங்கிய கரும்பிற்கும் பெயரானது. 

சருக்கரைப் படிகத்தை வடிகட்டிக் கிடைக்கும் சாற்றை, மெழுகுச்சாறு  (molasses) எனலாம். இவை செய்த இடம் ஆலை ஆனது. இத்தனை விவரங்களும் சங்க இலக்கியத்தில் குறிப்பாக உள்ளன. இப்போது நாம் பயிலும் சில கலைச் சொற்கள் அவற்றில் இல்லாது போகலாம். ஆனால் நுட்பந் தொடர்பான கலைச் சொற்கள் இன்றும் நம்மிடம் உள்ளன. கருநிறங் காரணமாய் கருநல்> கன்னல் என்ற பெயரும் சருக்கரைக்குண்டு. கரும்பை இயந்திரங்களூடே கொடுத்துச் சாறுபிழிவதால் இயந்திரத்தின் இன்னொரு பெயரான விசையால் விசையம்> விசயம் என்றும் ஒரு சொல் ஏற்பட்டது. வட்டக்குழிகளில் பாகை ஊற்றுதற்கு மாறாய் குளிகைபோற் கோளமாக்குவதால் கோளப்பெயரும் சருக்கரைக்கு உண்டு. குள்> குளிகை. குள்> கொள்> கோள்> கோளம். சகர முதற் சொற்கள் சகரந் தொலைத்து அகரமுதற் சொற்களாகி மக்கள் வழக்கில் இடம்பெறும். சக்கரம்> சக்காரம்> அக்காரம். அக்கார வடிசில் = சருக்கரைப் பொங்கல்.  

நுட்பியல் வளர்ச்சியில், கருப்பஞ்சாற்றொடு சுண்ண (Calcium Hydroxide) நீர் சேர்த்து, கரிப்புகையை உள்ளனுப்பி நுரைக்கவிட்டால், கரிம ஏற்றம் (carbonation) ஏற்படும். இதனாற் சாற்றுப் புரதங்களைத் (proteins) திரளவைத்து (coagulates), கலவைக்குள் உண்டான சுண்ணாம்புத் தூள்களின் (calcium carbonte) மேல், சாற்றிற் கரைந்த கெழுவங்களைப் (colourants) பரப்பொற்றிப் (adsorb) பிரித்து, திண்மக் கழிவுகளை (solid residues) வடிகட்டி, வெள்ளைச் சருக்கரைச் சாற்றைப் பெற முடியும். வெள்ளைச் சாற்றைப் படிகம் ஆக்கினால் வெள்ளைச் சருக்கரைக் குருணைகள் (granules) கிட்டும். பாதிநிறங் கொண்ட வெள்ளைச் சருக்கரை, வெல்லம் எனப் பெறும். 

வெள்ளைச் சருக்கரையை வடிகட்டிக் கிடைக்கும் நீர்மத்தையும் மெழுகுச்சாறு எனலாம். சுண்ண நீர்சேர்ந்து அயனச்செறிவு (pH) 7 க்கும் மேல்  உயர்த்துவதால், களரிமை (Alkalinity) கூடி, களிக்கரை (glucose), பழக்கரை (fructose) போன்ற ஒற்றைச் சருக்கரைகள் (monosaccharide) சிறிதளவு சிதையலாம். சீனப்பயனர் யுவான் சுவாங் தெற்கே வந்தபிறகு அவர் வழி, வெள்ளைச் சருக்கரை செய்யும் நுட்பம்,  வடக்கேயும் சீனத்திற்கும் பரவியது. சீனத்தில் வெள்ளைச் சருக்கரை பெரிதும் விரும்பப்பட்டது. நாளடைவில் இப் புழக்கம் நம்மூரிலும் பரவி வெள்ளைச் சருக்கரையையே சீனச்சருக்கரை>சீனி என்று சொல்லத் தொடங்கினார்.      

அன்புடன்,

இராம.கி.

Monday, July 19, 2021

நடுதல் = ஊன்றுதல்

”நடுதல் = ஊன்றுதல். நடு>நாடு = ஊன்றியது. இது நிலத்தை, இடத்தைக் குறிக்கும் சொல். நிலம் சிறிதாகவும், பெரிதாகவும் இருக்கலாம் “ என்றும்,  ”தமிழ், தமிழர் ஊன்றிய நிலம் = தமிழ் நாடு” என்றும் .சொல்லி 2 இடுகைகளை என் முகநூல் பக்கத்தில் அண்மையில் இட்டேன்.  இதில்வரும் ”ஊல்-தல்” சொல் சிலருக்குச் சிக்கலாயிற்று போலும். இச்சொல்லைப் புதிதாய் நான் சொல்ல வில்லை. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியிலேயே இது இருக்கிறது. இத் தெளிவைக் கொடுத்தது பாவாணரே. 

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியில் இதைச் சொல்லமாட்டார். அந்த அகராதி விட்ட  செய்திகள் மிகுதி. 100 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த அகராதியின் போதாமை தனித்தமிழ் நடையாருக்கு நன்றாகவே தெரியும்.  தமிழை, மணிப்பவள நடைக்குக் கொணர்ந்ததைத் தூக்கிப்பிடிக்கும் அகராதி அதுவாக்கும். அதன் குறையைப் பாவாணர் ஒரு தனிநூலில் எடுத்துக் காட்டினார். சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்கு அப்புறம் தமிழ்ச் சொல்லாய்வில் ஏராளமாய்க் கண்டுபிடிப்புகள் நடந்து விட்டன. இன்னும் அவ்வகராதியைப் பிடித்துக்கொண்டு அதுவே சரியென வாதாடுவோருடன் உரையாடுவதை நானும் குறைத்துவிட்டேன்.       

ஊன்றுதல் என்பது தொழிற்பெயர். இதில் தல் எனும் தொழிற்பெயர் ஈற்றைப் பிரித்தால், கிடைப்பது ஊன்றெனும் வினையடி. ஊன்றினேன், ஊன்றுகிறேன், ஊன்றுவேன் என முக்கால வழி வினையை உணர்த்தலாம். ஊன்றெனும் வினையடி, சில போதுகளில் பெயராகவும் இயங்கும். காட்டாக, ஊன்று= ஊன்றுங் கோல். ஊன்று>ஊன்றி என்பதை வினையெச்சமாகவும் பயன் கொள்ளலாம். ஊன்றுதல்,  பேச்சுவழக்கில்  ஊனுதலாகும். ஊன்றில் வரும் உருபுகளைப் பிரித்தால், ஊல்+ந்+து என்றாகும். தமிழ் இலக்கணப் படி வேறுவகையில் இதைப் பிரிக்கமுடியாது. ”ல்ந்து” என்பது ”ன்று” என்று புணர்ச்சிவழி மாறியுள்ளது. நல்+ந்+து= நன்று என்பதுபோல் இந்த ஊன்றைப் புரிந்துகொள்க. சொற்பிறப்பியலின் அடிப்படை நாடுவோர்க்கு இதுபோன்ற புணர்ச்சிப் பிரிப்பு, சரியான வேர்ச்சொல்லை அடையாளங் காட்டும். ஊல் எனும் ஆதி வினையடி இங்கு கிடைப்பதை அறியலாம். புணர்ச்சி விதிகள், ஒலித்திரிவுகள், அவற்றின் ஒழுங்கு ஆகியவற்றைக் கொண்டே உண்மை எதுவென அறிகிறோம். அச்சில் வீடுபேறு (Printed salvation) தேடுவோருக்கும், குதர்க்கம் பேசுவோருக்கும் ஊலின் இயலுமை புரியாது.  

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, முதன் மடலம் மூன்றாம் பாகம், பக்கம் 191 இல், ஊல்-தலைச் செயப்படு பொருள்.குன்றிய வினை என்பார். பொருந்துதல், நிலைகொள்ளுதல், முதிர்தல் என 3 பொருள்களை  அச்சொல்லுக்கு ஈடாய் உணர்த்துவார். ஊலோடு நில்லாது. வேறு வகையிலும் சொல் வளர்ச்சி உண்டு. ஊல்>ஊழ் எனும் வளர்ச்சியில், ஏற்கனவே விதித்த நிலையை, ”ஊழ்” குறிப்பிடும்.  அற்றுவிகத்தின் (ஆசீவிகத்தின்) அடிப்படைக் கருத்து ஊழ் = நியதி. ”ஊல்” இல்லாது ”ஊழ்” எழாது. ஊழ்த்தல்,  ஊழ்வினை, ஊழி, ஊழியம்,  என்பனவும் ஊழோடு தொடர்புடையவையே. (ஊழ், ஊழியில் பல சொல்லாட்சிகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றிலுண்டு). .ந் உருபு இல்லாமலும் ஊலின் வழி பெயர் அமையலாம். அப்படியமையும் ஊற்றமும் ஊலோடு தொடர்புடையதே. ஊல்-தலின் மாற்றாய். ”ஊர்-தல் , ஊரு-தல்” எனும் தொழிற்பெயர் வடிவங்களையும் பேரகரமுதலியில் காணலாம். கூர்மைப் பொருள் விளக்கும் குல்>கூல்>கூலம் என்பதும், கூலி என்பதும், கூல்>கூள்>கூழ் என்பதும் ஊல்தலைப் போல் சொல்வளர்ச்சி அமைவதை ஒப்புநோக்கத் தக்கன.  

இவ்வளவு  சொற்களுக்கும் ஊலே அடிவினை. (ஊலை மறுப்பவர் மேற்கூறிய சொற்களின் பிறப்பையும் மறுக்கவேண்டும்.) ஊலின் முன்வடிவம் உல் என்பதாகும். உல் என்பது குத்துதல், துளைத்தலைக் குறிக்கும். மண்ணில் துளைத்து நாற்றை நிறுத்துவதே ஊன்றுதல். நெல்லின் நாற்றை ஊன்றுகிறோமே? (நால்+து = நாற்று; நால்தலும் நடுவதோடு தொடர்புடையதே.) உல்லின் வழி குத்தற் பொருளை உணர்த்தும் வேறு சொற்களாய் உல்லியம், உலக்கை போன்றவை காட்டப்படும். ஊலின் சொற்பொருள் அறிய இத்தனை சொற்களையும், அவற்றின் இயலுமைகளையும் அறியவேண்டும்.  தமிழ் இலக்கியங்கள் என்பவை அகரமுதலிகள் அல்ல., சொற்களின் எல்லா வடிவங்களையும் அவை பட்டியலிடுவதில்லை. அகரமுதலிகளிலும் சில குறைகள் உண்டு. வினைச்சொற்கள் இருப்பின் அகரமுதலிகள் பெயர்ச் சொற்களைத் தராது போகலாம்.  பெயர்ச்சொற்கள் இருப்பின், வினைச்சொற்கள் தராது போகலாம். பொறுமையாக ஆய்ந்தே தொடர்புடைய சொற்களைக் காண முயல்கிறோம்.

சூ, மந்திரக்காளி என்பதாலும், எந்திரத்தனமாய் முயல்வதாலும் ”ஊலின்” பொருள் கிட்டாது. ஏதோவொரு நிகழ்ப்பை வைத்துச் சொற்பிறப்பியலை அணுகக் கூடாது.  சொற்பிறப்பியலின் வழி,  தொடர்புடைய சொற்களை மொத்தமாய் ஆய்ந்தே, வேர்ச்சொற்களையும், அவற்றின் அடிப்பொருள்களையும், திரிவு விதிகளையும் நாம் காண முயல்கிறோம். ய>ஞ>ந என்ற திரிவு விதியை சொல்லாய்வறிஞர் அருளி விரிவாய் ஆய்ந்து கண்டுபிடித்தார். அறுபுலன் சொற்களாய் இன்று நாமறியும் கருத்துமுதல் சொற்களின் அடியில் பொருள்முதல் வாத வழி தேடினால், ஐம்புலன் சொற்களே அடிச்சொற்களாய் உள்ளன என்று திரு. பக்கிரிசாமி உணர்த்தினார்,  பல சொற்களை ஆய்ந்து, முடிவில் ள/ழ>ட>ர என்ற விதியை  (காட்டு: சோழ>சோட>சோர>கோர மண்டல்) நான் வெளிப்படுத்தினேன். இன்னும் பல விதிகளை வெவ்வேறு ஆய்வாளர் தொடர்ந்து கண்டுவருகிறார். (உன்னிப்புச் சொற்பிறப்பையும், சொற்களை  உடைத்துப் பொருள் சொல்வதையும் நான் ஏற்றதில்லை.) 


Saturday, July 10, 2021

சாப்பாடு - 4

இனிச் சப்பின் திரிவான சம்புச் சொற்களைக் காண்போம். இங்கும் வாடுதல், வற்றுதல், வதங்குதல், வலியற்றுப் போதல் எனும் பொருட்பாடுகள் வந்து சேரும். சும்பு> சம்பு> சம்படம் என்பது சோம்பலைக் குறிக்கும். வலியற்றுச் சோர்ந்து கிடக்கும் நிலை. சோம்பலை மேலே பார்த்தோம். சம்படித்தல்= மென்மையாக்கல். பயிர்செய்யுங் காலத்தில் 2 ஆம் முறை உழும்போது நிலம் மேலும் மென்மையாகும். சும்பு> சம்பு> சம்பல்= மலிவு, விலையிறக்கம்; சும்பு= வாடிச் சுருங்கல்; வாடியது மலிவாகும். சம்பல் = தேங்காய், மிளகாய், புளி போன்ற கூட்டுப்பொருள்களை வதக்கி அரைக்கும் துவையல். ஈழத்தில் பெரிதும் பழகுஞ் சொல். துவண்டது தமிழ்நாட்டிற் துவையலெனில் சம்பியது ஈழத்திற் சம்பலாகக் கூடாதா? வெய்யிலில் வாட்டிய, வற்றிய மிளகாயும் சம்பலென்றே அழைக்கப்படும். சம்பாலென்பது பச்சடி வகை; (மிளகாய், மசாலா போன்ற) கறிப்பொருளை வதக்கி அரைத்து குழம்பிற் போட்டால் அது தெலுங்கிற் சம்பாரு ஆகும். பின் தஞ்சை வழியே மராட்டிக்குப் போய்த் தமிழுக்குத் திரும்பி வந்து சாம்பாராகும். (விவரம் அறியாதோர் சாம்பார் ஒரு மராட்டிச் சொல் என்பார்.)

சம்பும் அளமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது நெல்லிற்கும் கோரைக்கும் ஆன பெயர். சம்பின் உகரவீறு ஆகாரவீறு ஆகிச் சம்பாவாகும். அளமென்பது உப்பு. சம்பா = வேகவைக்கக் கூடிய நெற் பொருள்; சம்புதலுக்கு வேக வைத்தலும் ஒரு பொருள். இது ம.சம்பா, சம்பாவு, செம்பாவு; க.சம்பெ; தெ.சம்பாவுலு. என்று மற்ற திராவிட மொழிகளிலும் பரவும். ஆவாரம்பூச் சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா என்று 60 வகைகள் உண்டாம். ‘மலை கிளிய நின்றற் காலால் சம்பா அமுதுபடி நாலு மரக்காலும் இந்த திருப்போநகம் கொத்த தெருக்கைக்கு வடிதயிர் அமுதும்” என்று திருப்பதிக் கல்வெட்டுத் தொகுதி. 2 இல் 38 ஆம் கல்வெட்டில் 7ஆம் வரியில் வரும். கல்வெட்டிலுண்டா? - என்று மணிவண்ணன் கேட்டார். எனையாளும் வேங்கடத்தான் கோயிலில் இக்கல்வெட்டுண்டு. இன்றைக்கும் சம்பாவென்ற சொல் தமிழ் தானே? சம்பாவை ஏற்போம், சாப்பை ஏற்க மாட்டோமா? - என்றால் இதுவென்ன ஞாயமய்யா?

அடுத்தது சம்பாகம்; சம்பாவைச் சமைத்ததென்று பொருள். வடமொழியில் நல்ல சமையலென மேலும் விளக்கங் கொடுப்பர். சம்பா அரிசி நல்ல அரிசி தானே? பொன்னியரிசி ஏதோ ஒரு சம்பாவில் கிளைத்தது தானே? சம்பாவை அறுவடை செய்வது அரித்தல் வினையின் மூலமே. சம்பாவை அரித்துக் களத்துமேட்டில் கூலி கிடைப்பதால் சம்பாரித்தல் என்ற சொல் எழுந்தது. சம்பாரித்தல்>சம்பாதித்தல் என்றுந் திரியும். சம்பாரம் = கறிக்கான கூட்டுப் பொருள். மேலே சொன்னேனே மசாலாவெனும் வெளிச்சொல்? அதற்கான தமிழ்ச் சொல் இது தான். நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்? சம்புதல் = கூம்புதல், to lose zeal or enthusiasm, மனஞ் சம்பித் திரியாமல் (தஞ்சை. சர.ii. 119.), ”ஏண்டா சம்பிக் கிடக்குறே? கொஞ்சம் எழுந்து வா, எல்லாம் நல்லதே நடக்கும்னு நம்பு”; இதற்கு விலை குறைதல் என்ற பொருளை முன்னாற் சொன்னேன். சும்>சும்பு>சம்பு = வாடிச் சுருங்குதல்;

அடுத்தது சம்பு; சென்னை வேளச்சேரி தாண்டி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலும், காவிரிக் கரையில் சீர்காழிக்கருகே தைக்காலிலும், தாமிரபருணிக்கரையில் பத்தமடையிலும் வளருங் கோரை இதைச் சம்பங்கோரை என்றுஞ் சொல்வர். இதுவும் flattened grass தான். elephant grass, நெட்டியென்றுஞ் சொல்லப்படும். சீர்காழிப்பிள்ளைக்கு சம்புவிலிருந்தே சம்பந்தர் என்னும் பெயர் வந்தது. “சம்பறுத்தார் யாக்கைக்கு” என்பது நல்வழி 38. சம்பை என்றாலும் சம்பங் கோரை தான். சம்பென்ற சொல் செய்யுளும் உரைநடையும் கலந்து வரும் சிற்றிலக்கிய வகையைக் குறிக்கும். சங்கதத்திலும் இச்செய்யுள் வகையுண்டு. கலந்து வருவதால் சம்பு என்பதற்குச் சம்பாரம் அல்லது மசாலாப் பொருளுமுண்டு. மீனைச் சேர்த்துவைக்கச் சம்பங் கோரையில் செய்யப்பட்ட கூடை சம்புப் பெட்டி எனப்படும். (பிள்> பிளா> பிழா. வாயகன்ற ஓலைக்கொட்டான்; பிள்> (பெள்)> பெட்டி). சம்பை என்றால் மீன் கருவாடு என்றும் பொருள். சம்பியதற்கு வாடியதென்று மேலே பொருள் சொன்னேனே? நினைவிருக்கிறதா? விட்டு விடாதீர்கள். கீழே அது பற்றியும் பேசுவேன். சும்> சும்பு> சும்புதல்= நீர் வற்றுதல். சும்பு> சம்பு> சம்பை. சம்பைச் சரக்கு/ சப்பைச் சரக்கு = விலைகுறைந்த மலிவுச் சரக்கு;

அடுத்தது இன்னுமொரு திரிவு. flat ஆன நிலை சமட்டு என்று சொல்லப்படும்.. சமட்ட உதவிசெய்வது சம்மட்டி>சமட்டி. flat ஆய் உட்காருவது சம்மணம். குவியலாய் இல்லாது flat ஆவது சமம். சமப்படுத்து என்பது இதில் வளர்ந்த சொல். ”ஏன் மரக்கால்லெ அளந்துபோடுற போது குவியலாக்குறே? சமப் படுத்திப் போடு”. சம்பியது வாடுதல், வதக்குதலென்று சொன்னேன் அல்லவா? கருவாட்டை எடுத்துக்கொள்வோம். சம்பியதை எடுக்கோமோ? பொரியல், மசியல், வற்றல், வறட்டுதல், அவித்தல், அடுத்தல் என்ற செயல்களைச் சேர்த்துப் பொதுவாய்ச் சமைத்தல் எனுஞ் சொல் பயன்படுகிறதே? அடுப்படிக்குள் அடுத்தல் வினையுள்ளது. சமைத்தலும் சம்புதலோடு தொடர்புடையது தான். சமைத்தலின் தன்வினைச் சொல் சமைதல், அதன் தொழிற் பெயர் சமையல். எளிதில் சமைக்கக் கூடிய கூலம் சாமையாயிற்று.

பகரமும் வகரமும் ஒன்றிற்கொன்று போலிகள் என்பதால் சுப்/சப் என்பது சுவ்/சவ் என்றுமாகும். நாக்கில் ஒன்றைப் போட்டுச் சுவ்வும் போது (சுப்பும் போது) நரம்புகள் வழி மூளைக்குத் தெரிவது சுவை எனும் உணர்வு. அதுவும் ஒலிக் குறிப்பில் எழுந்தது தான். சுவையைத் தமிழென்போர், சுப்/சப் தொடர்பான சப்பு>சாப்பைத் தமிழில்லை என்பது எப்படி? சுவை பற்றிய தமிழிலக்கியக் குறிப்புகள் ஏராளம். சுவையின் திரிவாய் வாய்க்குள் போட்டு மெல்லுவதும் சுவைப்பதும் சவை எனப்படும். chew (v.) என்ற ஆங்கிலச்சொல்லிற்கு Old English ceowan "to bite, gnaw, chew," from West Germanic *keuwwan (source also of Middle Low German keuwen, Dutch kauwen, Old High German kiuwan, German kauen), from PIE root *gyeu- "to chew" (source also of Old Church Slavonic živo "to chew," Lithuanian žiaunos "jaws," Persian javidan "to chew") என்று விளக்கஞ் சொல்வர்.. 

பல்லில் அரைபட்டு ஆகத் தட்டையானது சவ்வு எனப்படும். சவ்வுதல் என்பது தட்டையாக்குதல் என்று பொருள்படும். சவ்வக் கூடிய அரிசி சவ்வரிசி. சவக்களித்தல் என்பது சுவையற்றுப் போதல். சவக்குச் சவக்கெனல் என்பது முற்றிலும் சுவையற்றிருத்தல். சவங்கல் என்பது மனம் தளர்தலையுங் குறித்து வலியற்றவனையுங் குறிக்கும். சவக்கம் = சோர்வு; சவடன் = பயன் அற்றவன். வலியற்று மெலிந்து கிடக்கும் சோனிப்பிள்ளை சவலை எனப்படும். உயிரற்று போனவுடல் சவம் என்று சொல்லப்படும். சவட்டுதல் என்பது அடித்தல். அதன் பின் ஒருவன் வலிவற்றவனாய், சோர்ந்து போனவனாய், எழ முடியாதவனாய் ஆகிப் போவான். சவட்டுதலின் தன்வினை சவளுதல். சவளும் வினை செய்வோர் சவளக்காரர். மிக மிக மென்மையாய் அமையும் துணி சவளி. நெய்தலில் தமிழர் திறமை சொன்னால் அதுவே ஒரு கட்டுரைத் தொடருக்குப் போகும். சவளி, வடவர் பலுக்கில் ஜவளி/ஜவுளி ஆகும். நாமும் வெட்கமின்றி நம் சொல்லை விட்டு ஜவுளி என்று பயிலுவோம். மரபு தெரியா விட்டால் இப்படித் தான் பெருஞ்சோகம் வந்துசேரும். நம் பெருமிதங்களை ஒழிப்பதே சிலருக்கு வாடிக்கையாகிறது.

இனி முதலெழுத்து நீளுஞ் சொற்களைப் பார்ப்போம். சப்பின் நீட்சி சாப்பு. அகரமுதலிகளில் சாப்புதல் என்பதற்கு அடித்தல், தட்டையாக்குதல் என்று பொருள்சொல்வர். ‘கேழ்வரகைத் தண்டெடுத்துக் கேப்பை என்று சாப்பினேன்’ என்று நெல்விடுதூது 416 ஆம் அடியில் வரும். ”ரொம்பப் பேசினால் முகத்திலே ஒரு சாப்புச் சாப்பு” என்பது நாட்டுப்புறப் பேச்சுவழக்கு. சாப்பு என்பது ஒருவகை இந்துத்தானித் தாளம். மத்தளத்தில் ஒவ்வொரு ஓட்ட முடிவிலும் அதன் தொப்பியில் அடிக்கும் ஒலி சாப்பா எனப்படும். சாப்பாக் கொடுத்தல் = ஒத்து, சுருதியுடன் இழையும் வகையில் மத்தளத்தைத் தட்டிப் பார்ப்பது.  சாப்பா = கோரைப் புல்லாலான புற்பாய். சாப்பை என்பது ஆற்றலில்லாத, மெலிந்தவனைக் குறிக்கும். ”என்ன இது? பார்த்தா ஏப்பை சாப்பையாய் இருப்பான் போலுள்ளதே?” சாப்பாடு, சாப்பிடு என்பவற்றைப் பார்க்குமுன் சாகாரத்தோடு ”ம்ப்” சேர்ந்து வரும் சொற்களைப் பார்ப்போம்.

சாம்புதல் என்றால் அகரமுதலிகளில் வாடுதல், வதங்குதல், கெடுதல், குவிதல், ஒடுங்குதல், உணர்வழிதல், ஒளி மழுங்குதல், எரிதல் என்ற பொருள்களைச் சொல்வர். சுப்பு> சும்பு> சம்பு> சாம்பு என்று இச்சொல் அமையும். சாம்பு என்பது அடித்தல் பொருளில் அமைந்து பறையையும், மெலிதல் பொருளில் படுக்கையுங் குறிக்கும். வலிந்த மரம், எரிந்து அது மெலிந்த பொருளாய் ஆவதால் அது சாம்பலாகிறது. சாம்பலுக்கு உறுதி கிடையாது. வாழ்வில் வாடி வதங்கி எரிந்து போனவன் சாம்பவன்/சாம்பன். சாம்பலைப் பூசிக்கொண்ட சிவன் சாம்ப சிவன். எந்தவொரு மாசும் சேராது முற்ற முழுத் தூய்மையான பொன் எளிதில் தட்டையாகும்; அதைக் கையாலே கூட வளைக்க முடியும், நீட்டமுடியும், மெலியும். எனவே அந்தவகைப் பொன் சாம்புநதம் எனப்பட்டது. சாம்பல் நிறம் பூசிக் கிடக்கும் புடலங்காய் சாம்பலாட்டு/சாம்பாட்டு என்று சொல்லப்படும். ”சாம்புதல்” வடிவத்தில் சங்க இலக்கியத்தில் நிறையக் காட்டுகள் உள்ளன. ஆழ்ந்து படிக்கவேண்டியவை. நண்பர் மணிவண்ணன், ”இலக்கியங்களில் உண்டா?” என்று என்னைக் கேட்டார். சாப்புதலுக்கில்லை. ஆனால் அதன் தன்வினையான சாம்புதலுக்குண்டு. இன்று நேற்றில்லை. 2300 ஆண்டுகளுக்கு முன்னிருந்தேயுண்டு.

குறுந்தொகை 46-1 இல் ”ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன” என்பதற்கு ”ஆம்பற் பூவின் வாடலை ஒத்த” என்ற பொருள் வரும். வாடுதல் எப்படி வந்தால் என்ன? இங்கே வாடிப்போன பூ பேசப்படுகிறது. அகநானூறு 298-7 இல்

”கொன்றுசினம் தணியாது, வென்றுமுரண் சாம்பாது

இரும்பிடித் தொழுதியின் இனம்தலை மயங்காது

பெரும்பெயர்க் கடாஅம் செருக்கி”

தன் பகைகொன்று சினத்தைப் போக்கிக்கொள்ளாமலும் வென்று ஓட்டி பகைமை மெலியாமலும், பெரிய பெண்யாணைகளின் கூட்டத்துடன் கலவாமலும், பெருமழை போன்ற மதத்தால் ஆண்யானை செருக்கை அடைந்தது இங்கே சொல்லப்பெறுகிறது. மீண்டும் சாம்புதல் = மெலிதல்; பகைவனைச் சாய்த்துவிட்டல், கோவம் தணிந்துவிடும்; வலிமை சாம்பிவிடும்.

அகநானூறு 160-14 இல்

...........................................................................................ஆழி

நுதிமுகம் குறைந்த பொதிமுகிழ் நெய்தல்

பாம்புயர் தலையின் சாம்புவன நிவப்ப

இரவந் தன்றால் திண்தேர்

நீர்நிறைந்த கழியின்மேல் தேர்விரைகிறது. கழியில் நிமிர்ந்து நிற்கும் நெய்தல் தண்டுகளில் மலர்கள் இருக்கின்றன. தேருருளைகள் அதன்மேல் செல்லும் போது தண்டுகள் மடிகின்றன/சாம்புகின்றன. உருளை நகர்ந்ததின்பின் தண்டுகளும் நெய்தல் மலரும் மீண்டும் எழும்புகின்றன. அது பாம்பின் தூக்கிய தலைபோல் இருக்கிறதாம். இங்கும் வாடுவன ”சாம்புவன்” என்றழைக்கப் படுகின்றன. 

பெரும்பாண் ஆற்றுப்படை.150 ஆம் வரியில், “கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பு”; இங்கே வரகின் வைக்கோலால் வேய்ந்த, கழியைத் தலையிலுடைய, படுக்கை பேசப்படுகிறது. மென்மையான வரகு வைக்கோல் சாம்பித்தானே கிடக்கும்?  4 ஆம் பரிபாடல் இல் 

”நன்றா நட்டவன் நன்மார்பு முயங்கி

ஒன்றா நட்டவன் உறுவரை மார்பின்

படிமதம் சாம்ப ஒதுங்கி”

என்று வரும். இரணியன் கொண்டிருந்த ஆணவப் பகைமதம் வாடி/வதங்கி மெலிந்துபோகும்படி நரசிங்கன் அடிப்பது இதிற்சொல்லப்படும். சாம்புவதின் அடிப்பொருள் வாடுவதும் வதங்குவதுமே. எப்படி நடக்கிறதென்பது பொருட்டு இல்லை. அது தாடைப் பல்லாலும் நடக்கலாம். கையிலுள்ள தடியாலும் நடக்கலாம். விரல் நகத்தாலும் கையாலும் நடக்கலாம்.

அடுத்துக் கலித்தொகை 60-10 இல், “பொரு களிறு அன்ன தகை சாம்பி”; பொருதுகின்ற களிறுபோல தன்வலி மெலிந்து - என்பது இங்கு பொருள்.  இதே போற் கலித்தொகை 147-34 இல், “பல்கதிர் சாம்பி பகல் ஒழிய”;  பல கதிர்களைக் கொண்ட சூரியன் கொஞ்சங் கொஞ்சமாய் மெலிந்து பகல் ஒழிகிறதாம். அடுத்து கலித்தொகொ 78-19/20 இல்,” ’பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல, யான் செலின் நந்தி, செறின் சாம்பும், இவள்’ என்னும் தகையோ தான்” என்று வரும். பெய்தால் வளம்பெற்று, வறண்டால் வாடிப்போய், புலத்திற்குப் பெய்யும் மழைபோல, நான் சென்றால் வளம்பெற்று, செல்லாவிடின் வாடியிருப்பாளோ இவள்; என்ன குணம் இது? - என்பது இதன் பொருள்., மீண்டும் இங்கே சாம்புதல் என்பது வாடுதலைக் குறிக்கிறது. மேலும் கலித்தொகை 121-17 இல், “ஒளி சாம்பும் நண்பகல் மதியம் போல்”. நண்பகலில் சூரியன் உச்சிக்கு வரும்போது நிலவைப் பார்க்கவே முடியாது. அதன் ஒளி முற்றிலும் வாடிப்போகும். அச்செய்தி இங்கு சொல்லப் படுகிறது. பகலின் மற்ற நேரங்களில் எங்கோ ஒரு மூலையில் நிலவை மிக மெல்லிதாய்ப் பார்ப்பது முடியலாம். இங்கும் சாம்புதல் என்பது வாடுதலே. கடைசியில் பட்டினப்பாலை 8-12 ஆம் வரிகளில் ஒரு நல்ல காட்டு இருக்கிறது,

”விளைவறா வியன் கழனி

கார்க்கரும்பின் கமழ்ஆலைத்

தீத்தெறுவின் கவின்வாடி

நீர்ச்செறுவின் நீள்நெய்தற்

பூச்சாம்பும் புலத்து ஆங்கண்” 

”விளைவு அறாத (நில்லாத) அகன்ற கரும்புவயலின் ஊடே நெய்தலும் வளர்ந்திருக்கிறது. கரும்புவயலுக்கு அருகில் மணங்கமழும் சருக்கரை ஆலையிருக்கிறது. அதில் நெருப்பு எரிந்து வெம்மையான புகை எழுந்து வருகிறது. அந்த வெம்மைபட்டு நெய்தற்பூ சாம்பிவிடுகிறது” என்று பொருள் சொல்லலாம். இந்தக்காட்டு ஏன் முகன்மையென்றால் சாம்புவது சூட்டாலும் முடியும் என்று உணர்த்துவதற்றான். இந்த வரிகளைப் படித்தபின் தான் சாப்பின் பொருள் எனக்குப் புரிந்தது. 

சாம்பு தன்வினையானால், இதுவரை பார்த்த தமிழின் இயல்புப் படி சாப்பு அதன் பிறவினைச் சொல்லாகும். சாப்புதல் என்பதற்கு வாட்டுதல், வதக்குதல், கெடுத்தல், குவித்தல், ஒடுக்குதல், உணர்வழித்தல், ஒளிமழுக்குதல், எரித்தலென்ற பொருள்கள் அமைய முடியும். இது நேரடியாக அகரமுதலியில் இல்லை தான். ஆனால் எல்லாத் தன்வினைக்கும் பிறவினைச் சொற்களை நம்மூர் அகரமுதலிகளிற் போட்டுள்ளாரா என்பதே என் கேள்வி. தமிழ் அகரமுதலிகள் முற்று முழுமை ஆனவையல்ல. அதேபோல தமிழிற் கிடைத்த இலக்கியங்கள் ஒரு சொல்லின் எல்லா வடிவங்களையும் கையாளுவன அல்ல. ஏதோ சில வடிவங்களே அங்கு கையாளப் பட்டிருக்கும். கிடைத்ததை வைத்து கிடைக்காததை ஏரணத்தால் ஊகிக்கத் தான் வேண்டும். இது எந்த மொழி இலக்கியங்களுக்கும் உள்ளது தான். சாப்பு = சூட்டால் வாட்டப் பட்டது, வதக்கப் பட்டது, பொரிக்கப் பட்டது, மசிக்கப் பட்டது, வற்றப் பட்டது, வறட்டப் பட்டது, அவிக்கப் பட்டது, அடுக்கப் பட்டது. சமைக்கப் பட்டது. மொத்தத்தில் வாய்க்குள் இடும்படி பதப்படுத்தப் பட்டது. plalatable = பல்லிற்கு ஏற்றபடி பதப்படுத்தல்

palate (n.) late 14c., "roof of the mouth," from Old French palat and directly from Latin palatum "roof of the mouth," perhaps of Etruscan origin [Klein]. Popularly considered the seat of taste, hence transferred meaning "sense of taste" (late 14c.), which also was in classical Latin. Related: Palatal; palatalize.

அந்தச் சாப்பை இட்டால் என்ன? ஆடினால் என்ன?

My case rests, Your Honour.

அன்புடன்,

இராம.கி. 


Friday, July 09, 2021

சாப்பாடு -3

”கானா, பீனா” இரண்டிற்கும் தமிழர் ஒரே சொல் பயில்வதாய் மராட்டிய/சங்கதக் கணிமொழியியலர், எள்ளல் பேசியது திரு. லலிதராசாவைச் சீண்டி இவ்வுரையாடலை எழுப்பியுள்ளது. (இற்றைத் தமிழர் பலரும் வினைச்சொல் மறந்து ஆங்கிலப் பெயர்ச்சொற்களாற் ”பண்ணுகிறாரே”, அதுபோன்றது எல்லா வித வினைகளுக்கும் ஒரு சொல் பயிலும் பழக்கமும்.) ”தண்ணி, ரொட்டி, இட்லி, காப்பி, ஜூஸ்” என எல்லாவற்றையும் ’சாப்பிட’ முயல்வது ஒரு சிலரின் அறியாமை; மொழியின் குற்றமில்லை. ரொட்டிக்கும் இட்டளிக்கும் வேண்டின் ’சாப்பிடு’ என்பது ஓரளவு சரியாகலாம். (ஆழம் பார்க்கின் அதுவுஞ் சரியன்று.) தண்ணி, காப்பி, ஜூசை அருந்தவும் பருகவும் குடிக்கவும் முடியும். சாப்பிட முடியாது. 

ஆங்கில, இந்திப் பேச்சுகளில் இலக்கணம் பேணவிழையும் நாம், தமிழ்ப் பேச்சில் அதை விட்டுவிடுவது நம் உளப்பாங்கைப் பொறுத்தது. தமிழ்தானே?- என்ற அலட்சியம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. நம்மிடமுள்ள தமிழ்ச்சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளாது வெறுமே 3000 சொற்களால் நம் தமிழ்ப் பேச்சை ஓட்டிவிட முயன்றால், தமிங்கிலராகவே அது நம்மை மாற்றிவிடும். பின், தமிழையும் தமிழரையும் மாற்று மொழியார் இகழ்வது நடக்கத் தான் செய்யும். “Quora" இணையக்களத்தில் கிளம்பும் கேள்விகள் போன்றது இம் மராட்டியரின் கேள்வி. தமிழர் பற்றிய அறியாமை, ஐயம், அச்சம், இகழ்வு ஆகியவற்றால் பல நூறு கேள்விகள் Quora தளத்தில் வந்து குவிந்துகொண்டு இருக்கின்றன.  

”அதிலில்லை, இதிலில்லை, தமிழில்லை” என்று திரும்பத் திரும்ப நொகையாய்ப் (negative) பேசிய மணிவண்ணன் கடைசி வரை ”எம்மொழியிலிருந்து ’சாப்பாட்டைத்’ தமிழ் கடன் வாங்கியது?” என்று பொதிவாய்க் (positive) கூறவேயில்லை. ”சப்பிலிருந்து சாப்பாடு எப்போது வந்தது? தெலுங்கிலும் மலையாளத்திலும் எப்போது வந்தது? பண்டைத்தமிழ் வழக்கில் இருந்ததெனில் ஏன் அது எழுத்தில் வரவில்லை?” என்ற கேள்விகளை எழுப்புவதும், ”வாதம் ’சப்பு’ பற்றியல்ல. சாப்பாடு, சாப்பிடு பற்றியது” என நினைவுறுத்துவதும் ஒரு படிநிலை தான். அதற்கு அவருக்கு நன்றி சொல்வோம். ஆனால் அதோடு மட்டும் இருந்தால் எப்படி? தமிழ் அகரமுதலிகளை literal ஆய்க் காணாது ”பொருளெது?”வென ஆய்ந்து, சாப்பாடு தொடர்பில் மற்ற சொற்களையும் அடையாளங் கண்டிருக்கலாமே?

பாவாணர் துணையில் இங்கே நான் அதைச் செய்ய முற்படுகிறேன். பொறுமையான தேடலும், பொருண்மை நாடலும், சொல்லுறவு காணலும், திரிவு புரிதலும், மரபு பேணலும் இருப்பவர் என்னோடு வாருங்கள். மற்றவர்க்கு நான் சொல்வது விளங்காது. இங்கொன்றைச் சொல்ல வேண்டும். பாவணரோடு நான் வேறுபடும் இடங்கள் மிகுதி. இதுகாறும் என்னைப் படித்தோருக்கு அது நன்றாகவே தெரியும். ஆயினும் அவரைப் படிக்காது இவ்வாய்வுகளில் நான் நுழைந்திருக்க முடியாது. முரணை பேசி, பாவாணரைத் துச்சமாய் ஒதுக்கி, அவர் பெயரைக் கேட்டாலே சிந்தனைக் கதவை மூடி அடம் பிடித்தால் என் சொற்கள் விளங்கா. பாவாணரை ஒதுக்கியதால் தான், Dravidian Etymological Dictionary (DED) போன்றவை தமிழ்ச் சொல்லாய்விற்கு ஓரளவு மட்டுமே பயன்படுகின்றன. (நான் புரிந்துகொண்ட வரை, DED என்பது, ஒரு  Dravidian Cognate Dictionary. அதன் மூலம் சொற்பிறப்பியல் காண முடியாது. இப்படி நான் சொல்வது பலருக்கு அதிர்ச்சி ஆகலாம்.)

”துபாசிகள்” வழி தமிழ்படித்த எல்லா மேலையரிலும், நான் பார்த்த வரை,  வையாபுரியாரே உள்நிற்கிறார். சுற்றியுள்ள நீரின் சூடு உயர்ந்துகொண்டே போவது தெரியாத தவளையைப் போல்  நம் தமிழர் உள்ளார். எவ்வளவு காலம் மேலையரின் பெயரைச் சொல்லி நம்மையெலாம் இவர் அச்சுறுத்துவாரோ, தெரியாது. எதிர்த்துப்பேச, நம் நாகரிகம் நம்மைத் தடுத்துக் கொண்டுள்ளது. ஏறத்தாழ,  வையாபுரியார், மறைமலையடிகள் என்று நம்மூர்த் தமிழாய்வு 2 அணிகளாய்ப் பிரிந்துநின்று, தொடர்ந்து குலைந்து கொண்டிருப்பதற்கு மாறாய், இரண்டு பாதைகளையும் ஓரளவாவது பிணைக்க முயலும் என் போன்றவரையும் இனவெறியன் என்று அடையாளமிட்டு விட்டால், என் சொல்வது? கால்பந்து ஆட்டத்தில், பந்தை ஆடாது ஆளை ஆடும் களத்திலிருந்து ஒதுங்கியிருக்கவே முடியும். எனவே தான் தனிக்கட்டுரைக்கு வந்தேன். ஒரு சிலரைத் திருத்த முடியாது. ஆனாற் சுற்றியுள்ள பலருக்கு, குறிப்பாய் இளைஞருக்கு, உணர்த்தவாவது வேண்டும்.   

சாப்பிடென்பது உண்ணல், உறிஞ்சல், திற்றல், தின்றல், தின்னல், து(ய்)த்தல், துற்றல், நுகர்தல், புசித்தல், பொசித்தல், மடுத்தல், மொசித்தல் போல வாய்க்குள் இடுவதைக் குறிக்கும் நேரடி வினை அல்ல. இடுதல், கொள்ளல், ஆடுதல் போல் துணைவினை சேர்ப்பது இன்னொரு வகை. கூப்பிடு/கூப்பாடு, ஏற்பிடு/ஏற்பாடு என்பவற்றை இங்கு ஒப்பிடலாம். ஓர் இயல்மொழியை ஆதமாடன் (automaton) போலெண்ணி, ”பொத்தானை அழுத்தி,, இணையத்தில் தேடினேன், கிடைக்கவில்லை” என்பது போலும் ”எடுத்தேன், கவிழ்த்தேன்” என்பது போலும் பேசுவோர்க்கு சொற்பிறப்பியல் புரியவே புரியாது. சரி, சாப்பிடுவதில் உள்நிற்கும் ”சாப்பு” தமிழ்ச்சொல்லானால் அதனுள்ளும் ஒரு வினை,வேர் இருக்குமே? அது ஒரு சொல்லை மட்டும் உருவாக்காதே?. பலவும் உண்டாக்குமே? 

எனவே சாப்பிடு, சாப்பாடு மட்டுமன்றி இன்னும் விரிவாய் பாவாணர் முறையில் தேடுவோம். எத்தனை பெருமரத்தை இந்த ஆணிவேர் உருவாக்குகிறது? கிளை வேர்களுண்டா? கிளைகள், படியாற்றங்கள் (applications) என்ன?- என்ற கொழுத்த (திரண்ட; holistic) பார்வைக்கு வந்த பின்பே ஒரு சொல்லைத் தமிழெனச் சொல்ல முடியும். அகப்பார்வையாலும் (subjective view) பாவாணரென்ற ஆளுமைக்காகவும் எம் போன்றவர் எதையுஞ் சொல்வதில்லை. புறவொழுங்கைக் (objective order) கண்டே சொல்கிறோம். அறிவியல் எதுவென எம் போன்றோருக்குந் தெரியும். சொல்லாய்வறிஞர் ப.அருளியும் இதை அழுந்தச் சொல்வார். இது பட்டம் விடுவதல்ல; அறிவியல் முயற்சி. 

”ஞால முதன்மொழி தமிழா?” என யாரும் தேடிப்போகவில்லை. அது பாவாணர் நம்பிக்கை. பின்வருவோரெலாம் அவர் நம்பிக்கைகளைக் கொள்ளவும் தேவையில்லை. நியூட்டனின் பின்னோர் அவரின் “ரசவாத”க்கொள்கையைப் பின்பற்றினாரா, என்ன? இன்னும் பல மொழிக்குடும்ப ஒப்பீடுகளை யாரும் உருப்படியாகச் செய்யவில்லை. ஞால முதன்மொழிக்குக் காலமிருக்கிறது. ஆனால் தமிழை ஆயாமல் Nostratic Studies என்பதன் முடிவு தெரியாது. பாவாணர் வழியில் பெரும்பாலும் சொல்லுடைத்து வேர் காண்பதில்லை. அப்படிச் செய்வோரை நான் மறுத்தே வந்துள்ளேன். பாவாணர் வழியார் எல்லோருஞ் சரியெனச் சொல்லேன். இன்னுஞ் சொன்னால் என் ஆய்விலும் கூடப் பிழை காணமுடியும். திறந்த மனத்தோடு தான் நான் என் பணி செய்கிறேன். எங்கேனும் தொடங்க வேண்டுமே? Present stage is classification and finding the inherent orders. செய்து பார்த்துப் பிழை கண்டு (trial and error) தேரும்முறையில் தமிழ்ச் சொற்பிறப்பியலார் இதுவரை பல ஒழுங்குகளைக் கண்டுபிடித்துள்ளார். எதிர்காலத்திற் கொத்தளவு (sample size) கூடின் அவை விதிகளாய் மலரும். காட்டாகப் ப.அருளி தன்னாய்வின் வழி ய>ஞ>ந என்ற சொற்றிரிவு விதியைக் கண்டுபிடித்தார். (அவருடைய “யா” பற்றிய ஆய்வு ஓர் அருமையான ஆய்வு.  இதுபோல் வேறு பல விதிகளும் தமிழ்ச்சொற்பிறப்பியலில் காண்கிறோம். 

சுப்/சொப்/சப் என்பது ஒலிக்குறிப்பு. இது ஒரு தனிமொழிக்கு மட்டும் உரியதல்ல. இதனுள் வருவது உகரமா, ஒகரமா, அகரமா? தெரியாது. உகரம் முதலென ஊகிக்கிறோம். உண்ணுகையில் நாக்காலும் உதட்டாலும் இவ்வொலி உண்டாகிச் சுப்பலும், சப்பலும் உறிஞ்சு பொருள் உணர்த்தும். இரட்டை வன்மெய் உள்ள தமிழ்ச்சொற்களில், ஒரே பொருளோடு, 2 ஆம் மெய், இன மெல்லினமாய் மாறலாம், இன்னுந் திரிந்து 2 மெய்களும் கூட மெல்லினம் ஆகலாம். (நீக்கல், நீங்கல், நீங்ஙல்), (அமுக்கல், அமுங்கல், அமுங்ஙல்), (அட்டல், அண்டல், அண்ணல்), (காட்டல், காண்டல், காணல்), (முறித்தல், முறிந்தல், முறிந்நல்), (உத்தல், உந்தல், உந்நல்), (ஒற்றுதல், ஒன்றுதல், ஒன்னுதல்) என்ற சொற்களில் இதைக் காணலாம். 

இற்றைத் தமிழில் 3-ஆந் திரிவு அரிதாகி, மலையாளத்தில் அது இயல்பாகி நிற்கும். எனவே பழந்தமிழில் இப்பழக்கம் இருந்திருக்கலாம். அப்படிக் காணின் (சுப்பு ,சும்பு, சும்மு), (சப்பு, சம்பு, சம்மு) இணைகளும் (கூப்பு, கூம்பு), (சீப்பால், சீம்பால்), (சுப்பு, சும்பு), (சோப்புதல், சோம்புதல்), (தூப்பு, தூம்பு), (நீப்பு, நீம்பு), (வேப்பு, வேம்பு) என்பவையும் முகன்மையே. (பப்பல்> பம்பல்> பம்மல்), (வெப்பல்> வெம்பல்> வெம்மல்) என்பனவும் உண்டு. பொருள் மாறாது முதல் எழுத்து நீள்வதும், சுப்பு> சூப்பு> சூம்பு, கம்பு> காம்பு, தூபம்> தூமம், முகு> முக்கு> மூக்கு, பசு> பாசு> பாசி, உஞ்சல்> ஊஞ்சல், விசு> வீசு என்பவற்றில் நடந்துள்ளன. எனவே சாப்பு, சாம்பு, சாமு போன்றவற்றையும் கூட நாம் இங்கே இனங்காண வேண்டும். 

முதலில் சுப்பு, சும்பு. சும்மெனும் உகரச் சொற்களைப் பார்ப்போம். இவை எல்லாவற்றிலும் உள்ளிருக்கும் பொருளாய் நீர் வற்றி, பொருள் வாடி, வதங்கிக் காய்ந்த நிலையே பேசப்படும் காட்டாகச் சுப்பல்= நீர் வற்றிய காய்ந்த விறகு; சுப்பி = நீர் வற்றிய காய்ந்த குச்சி; சுப்பு = நீர் வற்றற் குறிப்பு, சுப்பெனல் = நீரை விரைந்து உள்ளிழுக்கும் குறிப்பு; சும்பல் = வாடிச் சுருங்கல், சும்பன் = வலி யில்லாதவன்; சும்மை = சுர்ரென உறிஞ்சும் ஓசை, “இழுமென் சும்மை இடனுடை வரைப்பின்” என்பது பொருநராற்றுப்படை 65ஆம் வரியில் வரும். சுமங்கை = சுவைக்க முடியாத செடி; ஆடு தின்னாப் பாலை. சும்பு சூம்பு என்றும் நீளும். சூம்பிக் கிடப்பவன் = சரியான உடல்வளர்ச்சி பெறாமல் இருப்பவன். மனத்தாற் சூம்பிக் கிடப்பது சோம்பலாகும். (சும்பு> சூம்பு> சோம்பு)

அடுத்து, சுப்பிலிருந்து வளரும் சப்பு, சம்பு ஆகியவற்றிலும் நிறையச் சொற்களுண்டு. சப்பல் = அதுங்கல், உறிஞ்சல், சுருங்கல், மெலிதல், தட்டையாதல். இத்தனையும் வாய்க்குள் நடப்பவை. பின் பொருள்நீட்சியில் வெளியே நடக்கும் வினைகளுக்கும் இச்சொல் பயனாகும். இதைத்தான் .ஆசுக்கோ பர்போலோ, Deciphering the Indus Script நூலில் Rebus priniciple என்பார். மொழி வளர்ச்சியில் இது முகன்மை. தமிழிலும் உண்டு. ”சப்பு” என்ற சொல் மற்ற திராவிட மொழிகளிலும் உண்டு. ம.சப்புக; க.சப்பரிசு, சப்படிசு, சப்பளிசு, தப்படிசு; தெ. சப்பரிஞ்சு, சப்பு; து.சப்பரிபுனி; கோத.சப்;துட.செப்; குட.செப்பே, சபெ; நா.சவ்வ்; பர்.சவ்ல், சல்; மா.சொப்ப; பட.சப்பு; பாலியிலும் ”சப்பேத்தி” என்றுண்டு.; ஆங்கிலத்திலும், மேலைமொழிகளிலும் உண்டு. E.Sup. (சுப்பு)> சப்பு = ஒன்றை மெல்லாது நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையில் இட்டு நெருக்கி, அதன் சாற்றை மெல்ல மெல்ல உறிஞ்சுதல் அல்லது அப்பொருளைச் சிறிது சிறிதாகக் கரைத்தல் 

சப்பல் = உணவில் மீந்த எச்சில். ”சாப்பிட்டுத் தூக்கியெறியிற சப்பல்னு நினைச்சியா?” சப்புக் கொட்டுதல் = சாப்பிடும் முன்னோ, பின்னோ, சுவை நாடி நாவை மேலண்ணத்திற் பொருத்தி ஓசை எழுப்புதல்; சப்புச் சவறு = பயனுறிஞ்சிய பின் கழிக்கப்பட்ட பொருள். இங்கே பயனென்பது சாறோடு ஒப்புமையிற் கூறப்படுகிறது. “சாறெல்லாம் சப்பிட்டானே? வெறுஞ் சவறு தானே இப்பக் கிடக்கு?” சவறென்ற சொல்லும் சப்பு>சவ்வு>சவறு என்று எழுந்தது தான். சப்பெனல் = உறிஞ்சிச் சுவைபோன பின்னுள்ள சுவையின்மை; சப்பை = flat, weak, lean emaciated. சுவையற்றது, வலுவற்றது, பயனற்றது. 

உடம்பின் வலிமைபோய்க் கிடக்கும் நிலை. ”அவன் போறாண்டா? சப்பை” இதன் பொருள், வாயின் வினையிலிருந்து உடம்பிற்கு வந்துவிட்டது, பாருங்கள். எல்லா மொழியும் இப்படித் தான்.பொருள் நீட்சி சொற்களுக்கு நடந்து கொண்டேயிருக்கும். மழை பொழிகிறது என்பதிலுள்ள பொழிதல் வினை பொல்லெனும் துளையிலிருந்து வந்தது. வானத்தில் பொள் எனும் கற்பனைத் துளை இருப்பதைப் “பொத்துக்கினு மழை கொட்டுது” என்று சொல்கிறோமில்லையா? இது போல் மொழிகளின் பொருள்நீட்சி மாகை (magic) தெரியாதவரே சப்பிற்கும் சாப்பாட்டிற்கும் தொடர்பில்லையென்பார். கப்பலில் எழுதிய உலக்கைப் பொத்தகத்திற்கும் இற்றை blog ற்கும் தொடர்பு எழுந்தது நினைத்துப் பார்க்க முடியாத மாகை தானே? கணித்திரையில் நானெழுதப் பயனுறுத்தும் மூசி (Mouse)? 

மேலே சொன்னபடி flat பொருட்பாடு ஏற்பட்ட பின்னர், சப்பின் பயன்பாடு இன்னும் அதிகமாய் நீளும். சப்பென்பதை சாப்பாடு தொடர்பாய் மட்டுமே காண்பது மொழி வளர்ச்சி அறியாதோரின் கூற்று. இதில் எந்தப் பயன் முதலில் வரும்? ஒலிக்குறிப்பு முதலெழும் இடத்திற்றான். அது வாய்க்குள் நடக்கிறது. இப்போது வாய்க்கு வெளியில் வந்துவிட்டது. சப்பட்டை = flat, சப்படி = flat, தட்டையான வயிரத்தையும் சப்படி என்பர் (கல்வெட்டுச் செய்தி. மணிவண்ணனுக்குப் பிடிக்குமே?). சப்பரம் = விமானமில்லாத பல கோயில்களிலுள்ள கடவுள் திருமேனியைத் தூக்கிச் செல்லும் ஓர் ஊருலவு வாகனம். சப்பளம்/சப்பணம் = நிற்காமல் கிடையாக, தட்டையாக உட்காரும் முறை; சப்பளி = சப்பளத்தின் வினைச்சொல். இங்கு அளி என்ற துணைவினை உள்ளது; சப்பாணி = கால் விளங்காத மாற்றுத் திறனாளி சப்பையாக இருக்கும் நிலை. சப்பத்தி = தட்டையான முத்து. இதுவுங் கல்வெட்டுச் செய்தி தான். (கவனத்தோடு கண்டால் அடையாளங் காண்பது எளிது.) 

அன்புடன்,

இராம.கி.


Thursday, July 08, 2021

சாப்பாடு - 2

"இதற்கு மறுமொழியாய், என்னை இனவெறி பிடித்தவனென்று முத்திரை குத்துவது ஒரு புறம் இருக்கட்டும்..(இந்தக் குத்தல்களையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. நான் இன வெறியனா, இல்லையா என்பது என்னோடு பழகியோருக்குத் தெரியும் .இங்கு யாரிடமும் என் நேர்மையை நிறுவிக்கத் தேவையில்லை.) அதேபோல பாவணரை நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்பது இன்னொரு புறம் இருக்கட்டும். இங்கு அதெல்லாம் பேச்சில்லை. சப்பு என்பதற்கு பர்ரொ எமனோவின் அகரமுதலியில் திராவிடச்சொல் என்று போட்டிருக்கிறதே? அதற்கு உங்கள் மறுமொழி என்ன? அதையும் மறுப்பீர்களா? இலக்கியங்களிலும் கல்வெட்டிலும் வராவிட்டால் எந்தச் சொல்லும் தமிழில்லையா? ஒலிக்குறிப்புச் சொல் என்பதற்கு உங்கள் மறுமொழி என்ன? சப்பி இடாது, சப்பி ஆடாது, தமிழன் கறியை உண்டு கொண்டிருந்தானா? நான் எப்படிக் கோழிக்கறி சாப்பிடுகிறேன்? அல்லது அவக்கு அவக்கென முழுங்கிச் சாப்பிடுகிறேனா? எனக்குப் புரியவில்லை. ’சொன்னதே சொல்வீர்கள்’ என்றால் we agree to disagree என்று சொல்லி விடலாம். சாப்பாடு பற்றிய இவ்வுரையாடலை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்“ என்று சொல்லி உரையாடலிலிருந்து விலகிக்கொண்டேன். 

மீண்டும் மணிவண்ணன், “மன்னிக்கவும் இராம.கி. நம்மை ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் இது போன்ற விவாதங்களில் கறுப்பு அடிமைகளென்று குறிப்பிடுவதில்லை. ஆனால், இன்னும் நீங்கள் “வெள்ளைத் தொரைமார்” என்று குறிப்பிடுவது கடுமையாகக் கண்டிக்க வேண்டிய இனவெறிக் கூற்று. அதை நீங்களாக விட்டுவிடுவது தான் பண்பாடு. ஒருவருடைய இனவெறி அவருடைய சொல்லிலேயே தெரிந்துவிடும். பண்பற்ற சொற்களைத் தவிர்ப்பது நல்லது.

சப்பு என்பதிலிருந்து சாப்பாடு எப்போது வந்தது? அது தெலுங்கிலும் மலையாளத்திலும் எப்போது வந்தது? பண்டைத் தமிழிலேயே அது வழக்கில் இருந்ததென்றால் ஏனது எழுத்தில் வரவில்லை? வாதம் சப்பென்ற சொல்லைப் பற்றியல்ல. சாப்பாடு, சாப்பிடு என்ற சொற்களைப் பற்றியது மட்டுமே. தமிழ் நெடிய எழுத்து மரபைக் கொண்டது. தமிழ் அளவுக்கு இலக்கிய, கல்வெட்டு, செப்பேடு மரபுகள் கொண்ட மொழிகள் உலகிலேயே மிகவும் அரிது. பண்டைத் தமிழில் சாப்பாடென்ற சொல் இருந்திருந்தால் அது எழுத்தில் வராமல் போயிருக்கும் வாய்ப்பே இல்லை. இது அடிப்படைக் கருத்து. 

தமிழ் சமஸ்கிருதத்தைப் போலல்லாமல் ஒரு வாழும் மொழி. அதனால், ஒவ்வோராண்டிலும், பல சொற்களைப் புதிதாகச் சேர்த்திருக்கும், பல சொற்களைக் கழித்திருக்கும். நன்னூலார் குறிப்பிட்டது அதையும் சேர்த்துத் தான். இன்றும் தமிழ் அப்படித் தான் இயங்குகிறது. அப்படிச் சேர்க்கும் போது புதிய சொற்களில் பல இரவற் சொற்களாக இருப்பதையும் பார்க்கிறோம். கடந்த 600 ஆண்டுகளுக்கு மேலான மரபு அதுதான். மணிப்பிரவாளம் தோன்றிய மரபும் அப்படித்தான். சப்பு என்ற சொல்லிலிருந்து சாப்பாடு தோன்றினால், தெலுங்கிலும் மலையாளத்திலும் அப்படித் தானா? ஏன் இந்த 3 மொழிகளிலுமே சாப்பாடு என்ற சொல் 15 ஆம் நூற்றாண்டு வரை எழுத்தில் வரவில்லை? சப்பு என்பதிலிருந்து சாப்பாடு வந்தது என்பது நிறுவ முடியாத கற்பனை என்பது என் கருத்து “ என்று கூறினார். 

இப்படி முன்முடிவு கொண்டவரை மாற்ற முடியாதென்று வந்ததற்கு அப்புறம், ”இனிமேலும் வாதத்தில் கலந்து கொள்வது சரியில்லை, தனிக் கட்டுரை எழுதுவோம். இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் அது இருக்கட்டும்” என்ற முடிவிற்கு வந்தேன். கட்டுரைச் சுட்டியை மட்டும் முகநூலிற் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். முகநூலில் வாதம் தொடர்ந்தது.  

செ. இரா. செல்வக்குமார், “சப்புக்கொட்டி சாப்பிடுகின்றான் என்றோ சப்புகின்றான். குழந்தை கை சப்புகின்றது (கை சூப்புகின்றது) என்றெல்லாம் சொல்லிக் கேட்டதேயில்லையா? பாவாணரை ஏற்க வேண்டாம், அவர் சொன்னதை நம்ப வேண்டாம். ஆனால் திறந்த உள்ளத்துடன் ஐயப்பாட்டோடு இருந்தாலும் திறந்த மனத்துடன் அணுகுங்கள். ஏற்க முடியாவிட்டால் தவறில்லை. அவரைப் பழிப்பது நிச்சயமாக ஒருவரின் அறியாமை, அவர் புலமையை, அவரின் பன்மொழிப் புலமையை, வாணாளெல்லாம் உழைத்தாக்கிய அறிவுக் கொடையை மறுப்பது அறியாமையாகும். 

பாவாணர் சொல்வனவற்றுள் நானும் ஏற்காதனவும், தவறென உணர்ந்தவையும் உண்டு. மரே எமெனோவைவிட ஆயிரம் மடங்கு அல்ல நூறாயிரம் மடங்கு தமிழும் தமிழின் உள்ளாழமும் அறிந்தவர் பாவாணர். மொழியியல் கூறுகளின் அறிவில் ஏறத்தாழ ஒத்த அறிவுடையவராக இருக்கலாம் அல்லது மரே எமனோ ஓரிரு மடங்கு கூடுதலான அறிவுடையவராகவும் இருக்கலாம். தோடா மொழியில் பாவாணரை விட 100 மடங்கு அறிவுடையவர் மரே எமனோ. ஆனாலும் தமிழைச் சரிவர அறியா எமனோவின் தோடா மொழியறிவும் குறைவுடையதே. கோலாமி மொழியிலும் கூடுதலான அறிவு பெற்றவர், ஆனால் அதுவுங்கூட  2-3 நிலை தாண்டிய பெயர்ப்பு வகை அறிவே. இலத்தீனும் பல கிளையான பிற்காலப் பேச்சு இலத்தீனும் (வல்கர் இலத்தீன்) எசுப்பானியமும் இத்தானியமும் பிரான்சியமும் போர்த்துகேயமும் அறியாமல் காட்டலான (Catalan) மொழி ஆய்வு செய்வதைப் போல.” என்று கூறினார். 

நண்பர் தமிழ நம்பி, “வேறு மொழியில் இச்சொல்லுக்கு வேரிருக்கிறது என்று காட்டமுடியாத நிலையிலும், இச்சொல் தமிழ்ச்சொல்லில்லை என்று கூறுவதில் விருப்பமுடைய ஒரு மனப் போக்கிற்கு எந்தச் சான்றும் ஏற்புடையதாக இருக்காது என்பதே உண்மை!” என்று கூறினார். அடுத்து Kingsley Jegan Joseph என்பார், "சப்பு" கண்டிப்பாக தமிழ்தான். "கசப்பு" அதற்கு கண்டிப்பாக தொடர்புடைய சொல் தான். மணி, இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இந்த வேர்ச்சொல் வேறு மொழியில் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து. இதற்கான இலக்கணச் சான்று எனக்கு எதுவும் தோன்றவில்லை என்றாலும் இதில் வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன். 

அப்போ, கூவு->கூப்பாடகும் போது, கொள்/கொள்கை->கோட்பாடாகும்போது, புறம்->புறப்பாடாகும்போது, சப்பு ஏன் சாப்பாடாகக்கூடாது? இது "சப்பு" என்ற வேர்ச்சொல்லின் ஒரு பயன்பாடு மட்டுமே. இதே பயன்பாடு மற்ற பல வேர்ச் சொல்களுக்கும் பொதுவானதே. இதுவும் கண்டிப்பாக தமிழ் தான் என்பது என் கருத்து. இதையும் ஏற்றுக் கொண்டீர்களானால், அப்புறம் தமிழ் தானே?” என்றார். பின் இரத்தின சபாபதி கந்தசாமி என்பார் https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/1510028865702264 என்ற சுட்டியில் உள்ள மகுடேசுவரன் கோவிந்தராஜணின் “சாப்பாடு என்றால் என்ன ? சாப்பிடு தமிழ்ச்சொல்லா?” என்ற இடுகையைச் சுட்டிக்காட்டினார். 

அந்த இடுகையில் “உண்பது, தின்பது ஆகியவற்றுக்கு மாற்றாகச் சாப்பிடுவது என்று சொல்கிறோம். உண்டுட்டேன், தின்னுட்டேன்’ என்று கூறுவதற்கு வெட்கப்பட்டு ‘சாப்பிட்டேன்’ என்கிறோம். சாப்பிடுதல் என்றால் என்ன தெரியுமா ? சா என்பது சாவைக் குறிக்கும். சாக்காடு என்றால் இறப்பு. சாப்பறை என்றால் இறப்புக்கு அடிக்கப்படும் பறை. சாப்புதல் என்றால் வருத்திக்கொல்லுதல், அழித்தல். தெலுங்குப்பட ‘சப்பேஸ்தானு’ வசனத்தை நினைவு கொள்க. நீங்கள் ஏதேனும் ஓர் உயிரை வேட்டையாடிக் கொன்று அதை உங்கள் வயிற்றுக்கு உணவாக இட்டால் அது ‘சாப்பிடுவது’ ஆகும். சாப்பு இடுவது. சாப்பு ஈடு சாப்பு ஆடு ஆயிற்று. கொன்று பெற்றதை வயிற்றுக்கு இடுவது. மாமிசக் கறிவிருந்தைச் சாப்பாடு எனலாம். மாமிசம் இல்லாத இடத்தில் காய்கறிகளோடு உண்ண வேண்டும். அதுதான் சாப்பாடு ஆகும். தடபுடலான பெரிய விருந்துதான் சாப்பாடு. அதை உண்பதுதான் சாப்பிடுவது.” என்று வரும். 

இதன்பின் Kingsley Jegan Joseph, “அதாவது, சங்க இலக்கியத்துல "பண்ணு" என்ற வேர், பல வெறு வடிவங்களில் புழங்கினாலும், "-னேன்" என்ற வடிவம் "ஆடினேன்", "பாடினேன்" என்ற பல வேர்ச் சொல்களோடு சேர்ந்து புழங்கி இருந்தாலும் கூடப் "பண்ணினேன்" என்ற ஒரு சொல் சங்க இலக்கியத்தில் தென்படவில்லை என்றால், அச் சொல்-வடிவம் அப்பொழுது பயன்பாட்டிl இல்லை என்று சொல்லவருகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு மணிவண்ணன், “பண்ணு என்ற வேரைப்பற்றி ஐயமில்லை. ஆனால், சாப்பாடு, சாப்பிடு என்பவை சப்பு என்ற வேரிலிருந்து வந்திருக்கும் என்று என்னால் ஏற்க முடியவில்லை. இந்த அடிப்படைச் சொல் 15 ஆம் நூற்றாண்டு வரை எழுத்தில் வராததற்குக் காரணம் என்ன?” என்றார். "பண்ணினேன்" கூட அடிப்படை சொல் தான். ஆனா சங்க இலக்கியம் எதிலும் படித்ததாய் நினைவு இல்லையே? வேரும் தமிழ் வேர் தான், உருவமும் பொதுவாகவும் பழமையாகவும் புழங்குகிற உருவம் தான். ஆகவே தமிழ்தான் :) கொள்-கோட்பாடு ஆகும்போது அந்த முதலெழுத்தும் நெடிலாகுது பாருங்க.” என்று Kingsley Jegan Joseph மறுமொழி கூறினார். 

இதற்கு Lalitha Raja, “உண்மை அய்யா, சப்பு என்ற சொல் தமிழ்ச்சொல் தான்.. அது எவ்வாறு சாப்பிடு ஆனது என்பதற்கான, சான்று தானே கேட்டேன்?. சப்பிடு> சாப்பிடு என்று மருவியதென்றால், அது ஒரு சொல்லுக்கான ஆக்கமாகக் கொள்ளுதல் சரியல்லவே? இதைப் போன்று, வேறு சில சொற்களுக்கும் முறையான மாறுபாடுகளையும் காட்டுதல் வேண்டும் அல்லவா?.இன்று வழக்கிலுள்ள இதை மட்டுமே குடித்தல், மற்றும் உண்ணுதல் என்ற இரண்டிற்கும் தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள், இதைப் பல தமிழ் மொழியியல் அறிஞர்கள் என்று ஒரு மராட்டிய சமஸ்க்ருத கணனி மொழியியலாளர் என்னிடம் எள்ளலாகவே கூறினார். அதனால் வந்த தர்க்கமிது” என்றார். Kingsley Jegan Joseph, “இதில் மருவலேயில்லை. ஒரு வேர்ச்சொல்லின் வடிவ ஆளுமை மட்டுமே. இதே வடிவம் பல்வேறு வேர்ச்சொற்களுடன் இணைந்து வருவது கவனிக்க” என்றார். .

இதற்கு மறுமொழி கூறிய Lalitha Raja, “அவர் தமிழர்களின் சொற்பயன்பாட்டை குறை கூறினார்.. அவர் சொன்ன கூற்று.. “Tamil people use only caapaatu for both kaanaa (உண்ண), piinaa(குடிக்க), This is evidence from many tamil scholars.." எதோ நாம் உண்/திண், குடி என்ற சொற்கள் இல்லாதவர்கள் போற் பேசியது, என்னைச் சீண்டியது.. நான் அவரிடம் உண்/திண், குடி என்பவை அதனினும் பழமை யானவை என்று கூறினேன். மேலும் இது தீர்வு கிடைக்கவேண்டிய தர்க்கம், இதில் ஏன் சிலர் வன்சொற்களை பயன்படுகின்றனர் என்று தெரிய வில்லை..தயவுசெய்து, விளக்கங் கேட்டால் சரியான, முறையான சான்றோடு சொல்லுங்கள், விளக்குங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார். ...

மீண்டும் மணிவண்ணன், “சாப்பிடு என்பது consume என்பதற்கு இணையான பொருளில் தமிழில் ஆளப்படுகிறதென நினைக்கிறேன். அதனால்தான் தண்ணி சாப்பிடு, ரொட்டி சாப்பிடு, இட்லி சாப்பிடு, காப்பி சாப்பிடு, ஜூஸ் சாப்பிடு என்ற எல்லாவற்றுக்கும் வருகிறது. அந்த இந்திக்காரரிடம் முதலில் நேற்று, இன்று, நாளைக்குக் கல், ஆஜ், அவுர் கல் என்ற முறைகேட்டைப் பற்றிக் கேளுங்கள். சாப்பிடு என்ற சொல் தமிழில் ஆளப்படுவது உண், தின், குடி, பருகு என்ற எல்லாவற்றுக்கும் பொதுவாக வருகிறது. இது சீராக இல்லை. தமிழ் போன்ற செம்மொழியில் இத்தகைய ஆட்சி பொருந்தவில்லை. இது தொல் பழஞ் சொல்லாக இருந்திருந்தால் இலக்கியத்தில் வராமல் இருந்திருக்காது. எல்லாத் திராவிடமொழிகளிலும் இருந்திருக்கும். ஆனால் இது பின்னால் தமிழிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் வந்து சேர்ந்திருக்கிறது. இது ”சோறு சாப்பிடு”, “தண்ணி சாப்பிடு” என்று இரண்டுக்கும் பொதுவாக வந்திருக்கிறது. தண்ணியில் ஊனுணவு ஏதுமில்லை. இப்படிப் பொத்தாம் பொதுவாக, நுட்பமில்லாமல் வந்து ஒட்டியிருப்பது மட்டுமே இது இரவற்சொல் என்பதைக் காட்டுகிறதெனக் கருதுகிறேன்” என்றார். 

Sankara Narayanan G கவிஞர் மகுடேசுவரனின் இடுகைக்கு மறுமொழியாய் மணிவண்ணன் எழுதியது: “முற்றிலும் தவறான கருத்து. வரதராஜர் கோயில் தெலுகு கல்வெட்டில்தான் முதலில் சாப்பாடு என்ற சொல் பழகிவருகிறது. அதன் பிறகே சொல் வழக்கிற்கு வந்தது. சம்பேஸ்தானு என்பதற்கும் சாப்பாடு என்ற சொல்லுக்கும் நீராடும் தொடர்பு கூட இல்லை. கோயில் ப்ரஸாதத்திற்கே சாப்பாடு என்ற சொல் வழக்கிலிருந்து பிறகு பொதுவழக்காகியிருக்கிறது. தெலுகுச் சொல்லே. ஆனால் இந்தப் பொருளில்லை”

முடிவாக “1860 இல் வெளிவந்த வீரமாமுனிவரின் சதுரகராதியின் திருத்திய பதிப்பில் “சாப்பாடு”, “சாப்பிடு” என்ற சொற்களில்லை. சாப்பாடு என்பது தமிழின் அடிப்படைச் சொல்லாக இருந்திருந்தால், அது 19 ஆம் நூற்றாண்டு கூட வேண்டாம், 18 ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்திருந்தால் ஏன் அது சதுரகராதியில் இடம்பெறவில்லை? 1852 இல், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த வெப்ஸ்டர் ஆங்கிலம் தமிழ் அகராதியில் சாப்பிடுதல் என்ற வினைச்சொல் இருக்கிறது. ஆனால், சாப்பாடென்ற சொல்லைக் காணவில்லை. திருவேங்கட சதகம் எந்த நூற்றாண்டெனத் தெரியவில்லை. அது 19 ஆம் நூற்றாண்டு நூலாக இருந்தால் சாப்பாடென்ற சொல் தமிழுக்குள் 19 ஆம் நூற்றாண்டில் புகுந்திருக்கும் வாய்ப்பிருக்கிறதெனக் கணிக்கலாம்.” என்று மணிவண்ணன் கூறினார்.

உரையாடல் அங்கு இன்னும் போகிறது. கட்டுரைப் பின்புலம் புரிவதற்காக முகநூல் உரையாடலை எடுத்துக்கூறினேன். பொறுத்துக்கொள்ளுங்கள். இனி என் கட்டுரைக்கு வருவோம்.

அன்புடன், 

இராம.கி.

Wednesday, July 07, 2021

சாப்பாடு - 1

இது 2017 இல் நடந்த சூடான உரையாடல். என் வலைப்பதிவில் இடவில்லை. மடற்குழுக்களில் மட்டும் இருந்தது. இப்போது நாட்களாகின. ஆறிபோன கஞ்சி. எங்காவது ஒரு நிலைத்தடத்தில் இருக்கட்டும் என்று வலைப்பதிவில் சேர்க்கிறேன். 

"சாப்பாடு, சாப்பிடு என்பவை தமிழ்ச்சொற்களா?" என Lalitha Raja என்பவர் 2017 சூலையில் முகநூற் சொல்லாய்வுக்குழுவில் ஒரு கேள்வி எழுப்பினார். (சண்டைகள் அந்தக் குழுவில் மீறிப் போனதால் அதிலிருந்து வெளியே வந்தேன்.)  நம்மிற்பலரும் நன்கறிந்த நண்பர் மணிவண்ணன் ”இல்லை” என்று தன் கருத்தைச் சொன்னார்..”ஓசையின் அடிப்படையில் பிறந்த சப்பு என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானவையே சாப்பிடு, சாப்பாடு முதலான சொற்கள். அறிமுகமில்லாத நுட்பச்சொற்களில் நாம் ஊகத்தில் குறிக்கலாம். ஆனால், பயன்பாட்டிலுள்ள சொற்களுக்கு அவ்வாறு கருதுகையைத் தெரிவிப்பது தவறானகருத்தை விதைப்பதாகவும் பரப்புவதாகவும் அமையும்” என்று திருவள்ளுவன் இலக்குவனார் கூறினார். Raveen S. Nathan என்பார் “Chapad is IA” என்று கூறினார்.

”உண்ணும்போது நாக்கினாலும் உதடுகளாலும் ’சப்’ என்ற ஒலியை உண்டாக்குகிறோம். ’ஒன்றை மெல்லாது நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையிலிட்டு நெருக்கி அதன்சாற்றை மெல்ல உறிஞ்சுதல் அல்லது அப்பொருளைச் சிறிதுசிறிதாகக் கரைத்தல்’ என்று பாவாணர் அதற்கு விளக்கஞ் சொல்வார். சப்பு>சப்பிடு>சாப்பிடு>சாப்பாடு என்று இச்சொல் பொருளில் வளரும். இறைச்சியை சப்பிச் சிறு துண்டுகளாய்க் கறித்து உண்கிறோம். சாப்பாடும் கறியும் அப்படி வந்தவை. சப்புதலும், உண்ணுதலும் ஒன்றிற்கொன்று தொடர்பானவை. ஒன்றைத் தமிழென்று சொல்லி இன்னொன்றைத் தமிழில்லை என்பது சொல்பவருக்கே அடுக்காது. சப்புதலென்ற சொல்லின் இணை கிட்டத்தட்ட எல்லாத் திராவிட மொழிகளிலுமுள்ளது. வேண்டுமானால் அத்தொகுதியைத் தருகிறேன். தவிரப் பாலி மொழியிலும் ’சப்பெதி’ என்ற வினை அதே பொருளிலுண்டு. மேலையிரோப்பிய ஆங்கிலத்திலும் சப் என்ற சொல்லுண்டு. 

sup (v.2) "to sip, to take into the mouth with the lips," Old English supan (West Saxon), suppan, supian (Northumbrian) "to sip, taste, drink, swallow" (strong verb, past tense seap, past participle sopen), from Proto-Germanic *supanan (source also of Old Norse supa "to sip, drink," Middle Low German supen, Dutch zuipen "to drink, tipple," Old High German sufan, German saufen "to drink, booze"), from PIE *sub-, possibly an extended form of root *seue- (2) "to take liquid" (source also of Sanskrit sunoti "presses out juice," soma; Avestan haoma, Persian hom "juice;" Greek huetos "rain," huein "to rain;" Latin sugere "to suck," succus "juice, sap;" Lithuanian sula "flowing sap;" Old Church Slavonic soku "sap," susati "suck;" Middle Irish suth "sap;" Old English seaw "sap").

இப்படி இந்தையிரோப்பிய மொழிக்குடும்பத்தில் வருவதால் திராவிட மொழிக் குடும்பத்தில் சப்பும் வினை இல்லையென ஆகிவிடுமா? இரு குடும்பங்களுக்கும் முன் ஏதோவொரு தொடர்பு பெரும்பாலும் இருக்கலாமென்று பலமுறை சொல்லிவிட்டேன். இவ்வுறவை Nostratic studies என்ற துறையிற் படிக்கிறார்கள். இத்துறையில் ஆர்வமுள்ளோர் பாவணரின் தேவையை உணர்கிறார்கள். ஆனாலும் அதை மறுத்து மாக்சுமுல்லர் தான், வில்லியம் சோன்சு தான், கால்டுவெல் தான் சரி, வையாபுரியார் சொன்னதே வேதவாக்கென்று சொற்களை அணுகி, திறந்த மனத்தோடு பாராது 19 ஆம் நூற்றாண்டுத் தேற்றையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் என்னசொல்வது?! மொத்தத்தில் எல்லாவற்றையும் ”தமிழில்லை” என்பது இப்போதெல்லாம் சிலருக்கு நளினமாகி விட்டதென்று நகர வேண்டியது தான். சாப்பாட்டையே தமிழில்லையென்றால் அப்புறம் எப்பாடு தமிழில் நிற்கும்? இந்தத் தமிழை என்றைக்குக் தொலைத்து முழுகலாம்? அதைச் சொல்லுங்கள்” என்று நான் அழுத்தமாய்க் கூறினேன். 

இதற்குச், “சாப்பாடென்ற சொல் அவ்வளவு அடிப்படையான தமிழ்ச்சொல்லாக இருந்திருந்தால் அது எண்ணற்ற கல்வெட்டுகளிலும் இலக்கியவழக்கிலும் வந்திருக்கும். குறைந்தது ஏனைய திராவிட இலக்கியங்களிலாவது பதிவாயிருக்கும். அப்படிப் பதிவாயிருப்பதாகத் தெரியவில்லை. தக்காளி, மிளகாய் போன்ற சொற்கள் இன்று பண்டைத்தமிழ்ச் சொற்களாகத் தோன்றினும் அவை போர்த்துக்கீசியர் வருகைக்குப் பின்னரே தமிழில் தோன்றிய சொற்கள். சாப்பாடென்பது சப்பும் உணவுக்கு மட்டுமாவது அடையாளமாக இருந்தால் சொற்பிறப்பியலுக்கு ஏதாவது பொருளிருக்கும். இது பட்டம் விடுவது போலத் தோன்றுகிறது. பாவாணர் சொன்னாரென்பதால் மட்டும் சாப்பாடென்பது தமிழ்ச்சொல்லாகி விடுமா? சான்றுகளில்லாமல் சொற்பிறப்பியல் என்ற கற்பிதத்தின் மீது மட்டும் அமர்ந்திருக்கும் இச்சொல் முற்றிலும் நிறுவும் வரை ஐயத்துக்கிடமான அயற்சொல் என்பது என் கணிப்பு.” என்று மணிவண்ணன் மறுமொழி கூறினார். 

”கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ அகராதி ஆகா. எல்லாச்சொற்களையும் இலக்கியத்தில் தேடினால் கிடைக்காது. பானையோடுகளில் காணப்படும் பெயர்கள் அனைத்துமா சங்க இலக்கியத்தில் உள்ளன?” என்று இரா. செந்தில் கேட்டார். ”Compare சாப்பாடு - கூப்பாடு, சாப்பிட்டேன்-கூப்பிட்டேன், சாப்பாடு போடு-கூப்பாடு போடு. கூப்பாடென்ற சொல்லின்வேர் "கூவு" எனலாம். அதுபோல சாப்பாடென்பதன் வேர் "சப்பு"ஆகவோ "சாறு"ஆகவோ இருக்கலாம்”, என்று Kingsley Jegan Joseph கூறினார்.

மணிவண்ணனின் மறுமொழியைப் பார்த்த நான், ”வெறுமே இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் மட்டும் தேடிக்கொண்டிராமல் பர்ரோ எமனோவின் A Dravidian Etymological Dictionary யையும் போய்த் (பக்கம் 152 இல்) தேடிப்பாருங்கள்.1927 என்ற எண்கொண்ட பதிவில் சப்பென்ற தமிழ்ச்சொல்லைப் போட்டு, இதற்கான மற்ற திராவிட இணைச்சொற்களையும் போட்டிருப்பார். இத்தனை மொழியாரும் போர்த்துகீசியரிடமிருந்தோ, பிரெஞ்சுக் காரரிடமிருந்தோ, ஆங்கிலேயரிடமிருந்தோ சப்புதற் சொல்லைக் கடன் வாங்கினாரா? சரி, வழக்கம்போல, ”விவரங்கெட்ட” தேவநேயப் பாவாணரை நம்பவேண்டாம். (பாவாணருக்கு மதிப்புக் கொடுப்பது பெருந்தவறல்லவா? இருக்க இடங்கொடுத்தால் படுக்க இடங்கேட்பாரே? எனவே அவரை ஒதுக்குவோம்.) தமிழருக்கெல்லாம் மகராசராய்ப் பட்ட, மகாகனம் பொருந்திய, தண்டனிட்டு வணங்கத்தக்க, வெள்ளைக்காரத் துரைகளை நம்பவேண்டும் அல்லவா? தம் பொத்தகத்தில் துரைமார் சொல்கிறாரே, இது திராவிடச்சொல் என்று? என்ன செய்வது? அந்தக் கூற்றையும் தூக்கிக் கடாசலாமா?

தொடர்பில்லாமல் இருந்தாலுங் கேட்கிறேன். தமிழிலக்கியங்களும், கல்வெட்டுக்களும் தமிழிலிருக்கும் எல்லாச் சொற்களையும் கொண்டுள்ளனவா? Are they repositories of all Tamil words? அவை என்ன அகரமுதலிகளா? எங்கோ ஒரு வினையிருக்கலாம், பெயரிருக்கலாம், இடைச்சொல்லிருக்கலாம், உரிச்சொல்லிருக்கலாம், வேரிருக்கலாம். இவற்றைக் கொண்டு கொஞ்சம் ஏரணத்தோடு ஓர்ந்து பார்த்து மற்றதை ஊகிக்கத்தான் வேண்டும். எல்லா வடிவங்களையுமா இவற்றில் எடுத்துப் போட்டிருப்பார்கள்? ’சப்’ என்ற ஒலிக்குறிப்பு (onomatopoeic sound) இந்தையிரோப்பியனுக்கு மட்டுமா வரும்? ஒரு திராவிடனுக்கு வரவே வராதா? நாமென்ன ஊமையா? சப்பென்பதற்கு மாறாய் ’உள்’ என்றா நாம் நாக்காற் சப்பிக்கொண்டிருப்போம்? ஏன் இப்படியோர் விதப்பான சிந்தனை வருகிரது? 

பொது அவையில் இப்படிக் கேட்கக்கூடாது தான். இருப்பினும், இடக்கரடக்கற் சொற்களான கெட்ட வார்த்தைகள், பாலுறுப்பைக் குறிக்கும் சொற்கள் என்றவையெல்லாம் தமிழ் இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் வந்துள்ளனவா? சரி, இவை வேண்டாம், பொதுப்படையான, எங்களூர்ப்பக்கம் புழங்கும், இலக்கியங்களில் வந்தேயிராத, சொற்களைப் பட்டியலிடவா? நண்பர்களே! நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். ”அது தமிழில்லை, இது தமிழில்லை” என்று சொல்லி, இருப்பதையும் தொலைத்துவிட நாமேன் இவ்வளவு முனைப்போடு இருக்கிறோம்?” எனக் காரமாய்க் கூறினேன். 

காரம் பேசியதைக் குறைத்து அக்காரம் சேர்த்திருக்கலாம். ஆனாலும் வந்துவிட்டது. ”எதையெடுத்தாலும் தமிழில்லை” என்போரின் தாக்கம் இணையத்திற் கூடுவதைக் கண்டெழுந்த சினம் எல்லைமீறிய போது காரங்கூடிவிட்டது. மேற்சொன்ன தாக்கத்தில் தமிங்கில இளைஞர் இன்று தடுமாறுகிறார். பட்டிமன்றம், பாட்டரங்கம், பேச்சரங்கமென்றே கதியாகிப்போன தமிழறிஞர் பலரும் ஆய்வுப் புலங்களிலும், இணையத்திலும் கணிசமான பங்களிப்புக் காட்டாதுள்ளார். காலம் மாறிவிட்டதை தமிழையாக்கள் இன்னும் உணரவில்லை. இன்னும் 1960/70 களிலேயே இருந்தாலெப்படி? சரியான தலைமை இன்று இல்லாது போனதால், ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சக்கரை போல என்போன்ற அரைகுறைகள் “தமிழில்லை” என்போருக்கு மறுமொழி சொல்லவேண்டியுள்ளது.  

”அருள்கூர்ந்து இனவெறி சொட்டும் ’வெள்ளைக்காரத் தொரைமார்’ போன்ற சொற்றொடர்களை இந்தக் குழுவில் புழங்குவதைத் தவிருங்கள். பேரா. எமனௌ அவர்களை நான் அறிவேன். அவர் அமெரிக்கர். பிரித்தானியத் துரைமார் பட்டியலில் அவரை இடுவதைக் கேட்டிருந்தால் நொந்திருப்பார். அவர் நூறு வயதுக்கும் மேல் வாழ்ந்த பெருமகனார். தம் வாழ்வு முழுவதும் தமக்குத் தெரியாத மொழிகளைக் கற்று அவற்றை ஆய்ந்து பதிவுசெய்வதிலேயே முனைப்பாயிருந்தவர். இப்படிப் போகிற போக்கில் சாணியடிக்கும் அளவுக்குத் தாழ்ந்தவர் அல்லர். ஆம். எனக்குப் பாவாணர் முறை மீது சற்றும் நம்பிக்கையில்லை. அவரது சொற்பிறப்பியல் முறை எப்படியாவது தமிழை ஞாலத்தின் முதல்மொழி என்று காட்டுவதன் அடிப்படையில் எழுந்தது.

தமிழ் மற்ற எல்லா மொழிகளையும் போல மனிதர்களின் மொழி. புனிதமானது அல்ல. பிறக்கும்போதே செம்மொழியாகப் பிறந்ததல்ல. ஆனால் ஒரு கட்டத்தில் செம்மொழியாக மலர்ந்தது. மற்ற எல்லா மொழிகளையும் போல அதிலும் பழையன கழிந்தன, புதியன புகுந்தன. தமிழிலிருக்கும் எல்லாச் சொற்களும் அதன் வேரிலிருந்து வந்தவை அல்ல. அதில் பல இரவற் சொற்கள் இருக்கின்றன. திருக்குறளிலிருக்கும் எல்லாச்சொற்களும் தமிழே என்ற சமய நம்பிக்கை கொண்டவர்களுடன் வாதாடுவது கடினமே. சமஸ்கிருதம் போலச் செம்மொழித்தமிழும் காலத்தில் உறைந்து மறைந்திருந்தால் அதன் சொற்களைப்பற்றி எப்படி ஆய்ந்திருப்போம்? 

நாம் இன்று எழுதிப்பேசும் தமிழ் செம்மொழித் தமிழல்ல. தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் தெருவிலும் புழங்கும் தமிழ் செம்மொழியல்ல. அது வாழும் மொழி. ஏனைய வாழும் மொழிகளைப் போல அது இயல்பாகப் பிறமொழிச் சொற்களை எடுத்துக் கொள்ளும். அப்படி அது எடுத்துக்கொண்டதற்கான அடையாளங்களைக் கல்வெட்டுக் காலத்திலிருந்தே பார்க்கிறோம்.

சப்பு என்பதிலிருந்து சாப்பாடு, சாப்பிடு என்பவை வந்தன என்பது ஊகம் மட்டுமே. அதற்குச் சான்றுகளில்லை. பெருஞ்சோறென்று எழுதத் துணிந்தவர்கள் கல்யாணச் சாப்பாடு என்று ஏன் 15 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தில் இடவில்லை என்பது எளிதாகக் கடந்து செல்லக் கூடிய கேள்வியல்ல. உண்பது என்பது அடிப்படைச் செயல். சப்புவதிலிருந்து சாப்பாடு வந்தது கற்பனை என்பது என் கருத்து. தண்ணீர் சப்பு, குடிநீர் சப்பு, என்று ஏதாவது ***எழுத்தில்*** இலக்கண வழக்கில் இருந்தனவா?

பாவாணரின் மரபு சொற்பிறப்பியல் என்பது ஊனமுற்றவர்களின் ஊன்று கோல் போல். அதை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்பதுதான் அதன் பெருங்குறை. விரும்பிய படியெல்லாம் விதிகளைக் கூட்டிக்கொண்டு எந்தவித நெறிமுறையுமில்லாமல் எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் இட்டுச் செல்லும் என்பதால் அதன் மீது எனக்கும் நம்பிக்கையில்லை.

சாப்பாடு, சாப்பிடு என்பவை உறுதியாகச் செம்மொழித் தமிழில் வழக்கில் இருந்ததற்கு எந்தச் சான்றுமில்லை. ஊகங்கள் மட்டுமே சான்றுகளென்றால் நாமும் சமஸ்கிருதப் பண்டிதர்கள் போலத் தெய்வ மொழியிலிருந்து எல்லாமே வந்தன என்று பூசிக்கலாம். அது பொருளற்றது” என்று திரு. மணிவண்ணன் எனக்கு நீண்ட பாடம் படித்தார்.

அன்புடன்,

இராம.கி.


Friday, July 02, 2021

முதல்வராய் நானிருந்தால் - 4

அடிக் கட்டுமானம்(18):


அடிக்கட்டு மானத்தில் அதிசிறந்த மாநிலமாய்

கொடிகட்டிப் பறப்பதற்கு கூட்டாகச் செயல்முடிப்பேன்.

நகர்ச்சாலை, நெடுஞ்சாலை, நாலிரண்டில் ஒழுங்கை(19)யென

அகலிட்டுச் செய்தால்தான் அடர்துரக்கு(20) இருக்காது;

மூன்றுமணி நேரத்தில் சென்னைமுதல் திருச்சிவரை;

தாண்டிஒரு மணிநேரம் தடம்பெயர்ந்தால் மதுரைநகர்;

ஏழுமணி நேரத்தில் எங்குமரி முனைசெல்ல,

ஆலநெடுஞ் சாலைகளை அமைத்திடவே வழிவகுப்பேன்;

குமுகத்தில் எங்கிருந்தும் கூடுதொலைத் தொடர்புகொள

குமுனேற்ற ஏந்துகளை(21) கொண்டுவந்து குவித்திடுவேன்


கல்வி:


வதிகின்ற தமிழ்நாட்டில் வாழுகின்ற இளஞ்சிறுவர்

பதினாறு அகவுவரை இனிப்படிப்பர் தமிழில்தான்;

ஆனாலும் தெளிவாக ஆங்கிலத்தில் ஆளுதற்கு

வேணுகின்ற வழிமுறைகள் விரிவாகச் செய்திடுவேன்;

மாநிலத்துப் பள்ளியெலாம், மடிக்குழையோ(22), மற்றதுவோ,

மாநிலத்தில் ஒருபாடத் திட்டத்தில் மாற்றிடுவேன்

எந்தவொரு பிள்ளையுமே ஈரயிர மாத்திரி(23)க்குள்

அண்டிப் படிப்பதற்கு ஆவனதாய்ச் செய்திடுவேன்;

மாநிலத்தின் வரும்படியில் ஆறே விழுக்காடு

தானாக்கி கல்விக்கே தரமுயர வழிசெய்வேன்.

கல்லூரிப் படிச்செலவு கடுசாகிப் போனாலும்

பள்ளிப் படிச்செலவு பாடாக விடமாட்டேன்.

பொதுவிடத்தில் தமிழ்புழங்க புதுஆணை பிறப்பிப்பேன்;

எதுவேனும் கட்டுறுத்தல்(24) தேவையெனில் இயற்றிடுவேன்;


மருத்துவம்:


அடிப்படையாய் மருத்துவங்கள் அய்ந்தயிர மாத்திரி(25)யில்

தொடுப்பதற்கு வழிசெய்வேன்; தொண்டார்வப் படைபோல

அடுக்கடுக்காய் மருத்துவர்கள் அமைவதற்கும் வழிசெய்வேன்;

இடுக்கண்கள் எழுகாமல் இதன்செலவை ஏற்றிடுவேன்.


அரசு நிர்வாகம்:


அன்றாட வாழ்க்கையிலே அரசின் குறுக்கீடு

குன்றுதற்கு வழிசெய்வேன்; கூடிவரும் துறைகளெலாம்

குழுமாக்கிப்(26) பணியாற்ற கூடவொரு முயற்சிசெய்வேன்

பழுவான பணியாளர் பத்திலொரு பங்காக்கி

அரசின் பணச்சுமையை அதிரடியாய்க் குறைத்திடுவேன்;

அரசுத் துறைகளெலாம் ஆங்காங்கே நகர்மாற்றி

சென்னைச் சுமைகுறைப்பேன்(27); சீரமைப்பை ஒழுங்குசெய்வேன்;

சென்னையொரு அரசாளும் நகரென்று அமையாது;

சட்டத்தின் பேரவையும் ஆளுநரின் இருக்கைமட்டும்

இட்டதுபோல் சென்னையிலே இருந்திட்டால் தாழ்வில்லை;

சென்னையெனும் நகரினிமேல் வணிகத்தால் பெயர்பெறட்டும்;

சென்னைக்கு வளர்ச்சியினி அரசியலால் வாராது;


அரசுச் சீரமைப்பு:


அறுபத்தைந் தகவையின்பின் யாருமினித் தேர்தலிலே

உறுவதற்கு முடியாமல் ஓய்வுபெற வழிசெய்வேன்;

இனித்தேர்தல் நிற்பவர்கள் ஈரைந்து ஆண்டின்மேல்(28)

முனைந்துவர முடியாமல் போவதற்கும் சட்டம்வரும்.

..........................


திடீரென்று நான் விழித்தேன் ...... என் புயவுக்(29) கனவு வியந்தோடியது.


இதுவரைக்கும் வந்திருந்த கனவெங்கே நீண்டிருக்கும்?

இதன்நிகழ்ப்பு யாரறிவார்? என்றாலும் எண்ணுதற்கு

வாய்ப்பளித்த கவியரங்கத் தலைவருக்கு என்வணக்கம்;

நோய்ப்பட்ட(30) எனைத்தூண்டி துவளாமல் சிலசொல்லிப்

பங்கெடுக்க வைத்த அவர் பண்பிற்கு என்நன்றி!

இங்குற்ற பாவலர்கள் எத்தனையோ கனவுகளை

சொல்லி நெகிழவைத்த சுற்றிடையே என்றனையும்

புல்லி யணைத்ததற்குப் புலனறிந்து வணங்குகிறேன்;

கொள்ளுவதோ, கூறிட்டுத் தள்ளுவதோ, மாறாக

விள்ளுவதோ உங்களுடை வேட்பு.


அன்புடன்,

இராம.கி.


18. அடிக்கட்டுமானம் = infrastructure

19. நாலிரண்டு ஒழுங்கை = எட்டு ஒழுங்கை = eight lane

20. அடர் துரக்கு = heavy traffic

21. குமுனேற்ற ஏந்துகள் = communication facilities.

22. மடிக்குழை = matriculation

23. ஈர் அயிர மாத்திரி = 2 kilo meter

24. கட்டுறுத்தல் = control

25. அய்ந்து அயிர மாத்திரி = 5 kilo meter

26. குழுமாக்கல் = corporatization; this does not mean privatization

27. அரசுத் துறைகள் மாநிலத்தின் மற்றநகர்களுக்கு இடம் மாற்றப் பட்டு, சென்னைநகர் அரசாங்கநகர் என்ற பெயர் மாறவேண்டும். நெதர்லாந்தில் இப்படித்தான் நடக்கிறது. ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு நகரில் இருக்கும். நுட்பியல் பெருகிப் போன இந்தக் காலத்தில் இது எந்த வாய்ப்புக் குறைச்சலையும் ஏற்படுத்தாது. ஆனால் அதிகாரம் என்பது அகலப் படுத்தப்படும். சென்னைநகர் அளவிற்கு மீறி வளராது.

28. பத்தாண்டிற்கு மேல் யாரும் அரசில் பங்கு பெறமுடியாது.

29. புயவு = power

30. சிலநாட்களாய் கணியின்முன் அமர்ந்து தட்டச்சுவது சரவலாய் இருக்கிறது. 

தலைச்சுற்று, கிறுகிறுப்பு போன்றவை கூடுதலாய் இருக்கின்றன. சிந்தனை நகர மறுக்கிறது. இருந்தாலும் முனைவர் சுவாமிநாதனின் தூண்டுதல் இந்தப் பாவரங்கில் பங்குகொள்ள வைத்தது.      


Thursday, July 01, 2021

முதல்வராய் நானிருந்தால் - 3


நீர்வளம்


வளநாட்டை வானத்தின் மேலிருந்து பார்க்கும்போழ்,

அளவைந்தில் ஒருபாகம் அம்மெனவே சொல்வகையில்

நீர்வளத்தைக் கூட்டுவதே நெடுநாளாய் என்கனவு;

ஆர்வலர்கள் சேர்ந்துவரின் அத்தனையும் மெய்யாகும்;

ஆறோடும் படுகைகளில் ஆங்காங்கே தடுப்பணைகள்,

நீர்கசியும் குட்டைகளும், நிலைப்பதற்கு வழிசெய்வேன்;

தடம் அகல்ந்த கொள்ளிடத்தில், தண்பொருநை, வைகையினில்,

இடம்போட்டு நிலமகழும் ஏமாற்றை நிறுத்திடுவேன்;

பாசனத்திற் கேற்றபடிப் பண்ணுதற்கும் வழிசெய்வேன்;

பாசனங்கள் ஒருங்கிணைக்க வாய்ப்புக்கள் பெருக்கிடுவேன்;

நிலத்தடிநீர் குறையாமல் நிலைப்பதற்கும் முறைசெய்வேன்;

சிலதுளிகள் எனச்சேர்த்தால் பலவெள்ளம் பெருக்கெடுக்கும்;


சேமுறுத்திய குடிநீரும், சாக்கடை மாசெடுப்பும்:


குடிப்பதற்கு ஒழுங்கான குடிநீரே இல்லாமல்

தடுக்கின்ற மாசொழித்து, தாகத்தைப் போக்கிடுவேன்.

பருநிலத்தில் சேமுற்ற குடிநீரை(7)ப் பகிர்ந்தளித்து

தருவதற்குத் தூம்புகளை(8)த் தடம்பதிப்பேன்; அதனோடு

பாதாளச் சாக்கடைகள் பள்ளுதற்கும் வழிசெய்வேன்;

ஆதாரச் சென்னையிலோ அந்நீரைச் சேகரித்து,

மூன்றாட்டாய் இழுத்துவைத்து(9) முன்னாலே விழுத்துறுத்தி(10),

சேர்ந்தாட்டு உயிர்வேதிச் செய்முறையில்(11) மாசெடுத்து,

எதிரூட்டோ(12), மின்னிளக்கி எடுவித்தோ(13), துளித்தெடுத்தோ(14),

விதவிதமாய் முயன்றிடுவேன்; வேண்டுவது நந்நீரே!


வேளாண்மை / மர வளர்ப்பு:


மாநிலத்தின் நிலப்பரப்பில் மூன்றிலொன்று காடானால்,

நானிலத்தில் நமைவெல்ல யாருமிங்கே வரமாட்டார்;

மேற்குமலைச் சரிவுகளில் மிகுமரங்கள் நட்டிடுவேன்;

தாக்குமந்தக் கருவைமரத்(15) தடவேரைக் கில்லிடுவேன்;

பார்க்கின்ற இடமெல்லாம் பரம்பரையாய் வருமரங்கள்

வேர்கொள்ள விளைத்திடுவேன்; வியன்காடு பெருகட்டும்.

தாளடியில் நெல்லின்றி தரம்குறையாக் கோதுமையை(16)

நீள்பயிராய் ஆக்கிடுவேன்; நீர்த்தேவை குறையாதோ?

எங்கெல்லாம் புழுதி எடுத்தெறிந்து பறக்கிறதோ(17),

அங்கெல்லாம் அதைத்தடுத்து அடக்கின்ற வகையினிலே

மண்வளங்கள் பெருக்கிடுவேன்; மரம்புதர்கள், செடிகொடிகள்

நண்ணுதற்கு வழிசெய்வேன். நானிலம் பின் செழிக்காதோ?


அன்புடன்,

இராம.கி.

7. சேமுற்ற குடிநீர் = safe drinking water
8. தூம்பு = tube
9. மூன்றாட்டு இழுத்துவைப்பு = tertiary treatment
10. விழுத்துறுத்தல் = filtration
11. உயிர்வேதிச் செய்ம்முறை = biochemical process
12. எதிர் ஊட்டு, எதிர் ஊடுகை = reverse osmosis
13. மின்னிளக்கி எடுவித்தல் = electro - dialysis
14. துளித்தெடுத்தல் = distillation
15. கருவை மரம்; இங்கு வேலிக்கருவை = Julia Flora; மேற்கு ஆத்திரேலியாவில் இருந்து 
கொண்டுவந்த இந்தமரம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மரபு சார்ந்த மரங்களை 
வளரவிடாமல் தான்வளர்ந்து சீரழிக்கிறது. இதை ஒழித்தால் தான் மரவளம் திரும்பக் 
கிடைக்கும்.
16. தாளடிக்குக் கோதுமைப் பயிரீடு என்பது தஞ்சைத் தரணியில் இப்பொழுது 
சொல்லப்பட்டுவரும் பரிந்துரை. தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் காரணத்தால் இது 
நல்லது என்று வேளாணியலார் சொல்லுகிறார்கள்.
17. நீர்வளம் குறைந்த காரணத்தால் புழுதி பறக்கிறது. தமிழ்நாடு சிறக்க இது 
மாறவேண்டும். செடி,கொடி,புதர்கள் மண்டினால், மண்வளம் கூடி இந்தநிலை மாறும்.