Saturday, November 28, 2020

”சைவம், வைணவம்” என்னாது ”சிவம், விண்ணவம்” என்று ஏன் நாம் சொல்லவேண்டும்?

திரு. சிவக்குமார் என்பார் முகநூலில் “சிவ_சமயம் சைவ_மதமானது எப்படி? விண்ணவ_சமயம் வைணவ_மதமானது எப்படி?” என்று கேட்டிருந்தார். இதுபோன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கின்றன.  அதற்கான விளக்கம் இது. 

தமிழ்போல் ஒட்டுநிலை மொழிகளில் (agglutinative languages) ஒரு பெயரை இன்னொரு பெயரோடு சேர்ப்பதற்கும் வேற்றுமைகளைப் பயன்படுத்துவது உண்டு. அப்போது முதல் பெயரடியை அப்படியே வைத்து அடுத்து வேற்றுமை உருபுகளையும் தேவைப்பட்டால் சில தொடர்களையும் நுழைத்துப் பின் இரண்டாம் பெயரை வைப்போம். சுருக்கம் கருதிப் பின்னால், வேற்றுமைகளைத் தொகுக்கும் போது இலக்கணம் அறியாத சிலர் தடுமாறுவர். முதலில் 3 இகரமுதல் சொற்களைப் பார்ப்போம். 

காட்டு: சிவநெறி = சிவனைச் சார்ந்த நெறி என்பதில் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும், ”சார்ந்த” என்ற தொடரையும் தொக்கி ”சிவநெறி” என்போம். (சிவ எனும் பெயரடியை நாம் திரிப்பதில்லை.) இப்பழக்கத்தை இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பார். நெறியைப் போன்று மதமும் தமிழே. சமயமும் தமிழே. நெறி, சமயம் ஆகியவை தமிழோடு நின்றன. மதம் வடமொழிக்குக் கடன் போனது. அதைத் தவிர்க்க வேண்டாம். கடன்போன சொற்களை எல்லாம் நாம் தவிர்க்கத் தொடங்கினால் நமக்குத் தான் இழப்பு. 

விண்ணவநெறி = விண்ணவனைச் சார்ந்த நெறி. மாயோன்= கருத்தன். ”புவி நிலவுகின்ற பெருவெளியும் அவனே” எனுமுணர்வு நம்மில் சிலருக்குண்டு. விரிந்த பெருவெளியானை விரி> விரிநன்> விண்ணன் என்பதும் தமிழே. விண்ணனை விண்+ அவன் = விண்ணவன் எனலாம். விண்>விண்டு, விண்ணு என்றும் இச்சொல் நீட்சி பெறும். விரிநன்= விரிநு+அன் என்றுணர்ந்து ”விரிநு” என்பதைக் கடன்வாங்கி, ”ஷ்” நுழைத்து, விரிஷ்நு>விஷ்ணு என வடவர் சொல்வர். இது அவருடைய ஒலிப்புப் பழக்கம். விண்ணவ நெறி என்பதில் ”ஐ” வேற்றுமை உருபையும், ”சார்ந்த” எனும் தொடரையும் தொக்கி விண்ணவ நெறி என்போம். (விண்ணவ எனும் பெயரடியை நாம் திரிப்பதில்லை.) இப்பழக்கத்தை இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பார்.

பித்த நிலை = பித்தனின் கலங்கிய நிலை. இதில் இன் எனும் ஐந்தாம் வேற்றுமை உருபையும், ”கலங்கிய” என்ற தொடரையும் தொக்கி ”பித்தநிலை” என்போம். (பித்த எனும் பெயரடியை நாம் திரிப்பதில்லை.) இப்பழக்கத்தை ஐந்தாம் வேற்றுமைத் தொகை என்பார். பித்த நிலை = பித்த ஸ்திதி (sthitiḥ) என்று சங்கதத்தில் ஆகும். 

அடுத்து  3 உகரமுதற் சொற்களைப் பார்ப்போம்.

குரவத் துரியன் = குரவ குலத்தைச் சார்ந்த துரியன். குரவர்= பெரியவர். சிவநெறிக் குரவர் என்று சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகரைச் சொல்கிறோமே? எண்ணிப் பாருங்கள். குருக் குலம் என்பது 3000 ஆண்டுகளுக்கு முன்னால் பஞ்சாபுப் பகுதியில் இருந்த பெரிய குலம். அதைக் குரு குலம் என்றே சொல்லிவந்தார். (தமிழில் க் சேரும். சங்கதத்தில் சேராது.) அதில் உறுப்பினரைக் குரவா என்பார். தமிழில் குரவர் எனலாம். குரவத் துரியன் என்பது ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும் அத்து எனும் சாரியையும், ”குலஞ் சார்ந்த” எனும் தொடரையும் தொக்கி. ”குரவத் துரியன்” என்கிறோம். துரியன் ஒரு குரவன். 

புத்தநெறி = புத்தனைச் சார்ந்த நெறி. புத்தன் = போதி மரத்தின் அடியில் ஞானம் (புலனறிவு) பெற்றவன். புத்தர். புத்தம் = புலனறிவு = ஆசையே, பற்றே, புலனுகர்ச்சியே துன்பத்தின் காரணம் என்னும் புரிதல். இதில் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும், ”சார்ந்த” என்ற தொடரையும் தொக்கி ”புத்தநெறி” என்போம். 

குமரம்>குமாரம் என்பது முருகனைச் சார்ந்த நெறி. குமரன் = முருகன், ”குமாரன்” என்று நீட்டிச் சொன்னது சங்கதம் போனது. ”குமரன்” தமிழில் தங்கியது. இதில் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும், ”சார்ந்த” என்ற தொடரையும் தொக்கி ”குமாரநெறி” என்போம்.  

இனி வடமொழி இலக்கணத்திற்கு வருவோம். இதில் வேற்றுமை உருபுகளையும், இடைவரும் சொற்றொடர்களத் தொக்குவதும் போக, பெயரடியையும் திரிப்பார். பெயரடியைத் திரிப்பது சங்கதத்தில் ஒரு முகனப் பழக்கம். இகரமுதல் அதன் வருக்கமான ஐகாரமாயும். உகரமுதல் அதன் வருக்கமான ஔகாரமாயும். அகரமுதல் ஆகாரமாயும் அங்கு திரியும்.

சிவமதம் சங்கதத்தில் சைவமத என்றும். விண்ணவமதம். சங்கதத்தில் வைஷ்ணவமத என்றும், பித்த ஸ்திதி (sthitiḥ), சங்கதத்தில் பைத்ய ஸ்திதி என்றும்,  குரவத் துரியன் சங்கதத்தில் கௌரவ துரிய என்றும், புத்தமதம் சங்கதத்தில் பௌத்தமத என்றும், குமரமதம் சங்கதத்தில் கௌமார மத என்றும் திரியும்.  

நாம் ஏன் சங்கத இலக்கணம் பின்பற்ற வேண்டும்?  நாம் தமிழ் இலக்கணம் பின்பற்றுவோம். அதிலேயே கூட நாம் பெரும் தப்புகள் செய்கிறோம். நம் மொழியை நாம் சரியாகக் கையாள வேண்டாமா?

அன்புடன்,

இராம.கி.

  


Thursday, November 26, 2020

அகம் 127 - இல் வரும் வரலாற்றுச் செய்தி.

 அண்மையில் மாமுலனார் பாடிய அகம் 127 இல் வரும் 3-5 ஆம் அடிகளைக் கொடுத்து ”எப்படிப் பொருள் கொள்வது?” என்று நண்பர் திரு. வேந்தன் அரசு கேட்டார். இதற்கு விடைசொல்ல, வரலாற்றை விளக்க, 3-10 ஆம் அடிகள் முழுமையும் பார்ப்பதே சரியாய் இருக்கும்.     

வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து

முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து  5

நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்

பணி திறை தந்த பாடு சால் நன் கலம்

பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்

ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவண்

நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன  10

என்ற அந்த வரிகளின் திணை: பாலை. தோழி தலைவியிடம் சொன்னதாய்ப் பா அமையும். மாமூலனாரின் காலம் பெரும்பாலும் வானவரம்பன் பெருஞ் சோற்றுதியன் சேரலாதனின் முடிவுக் காலத்திற்கும் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தொடக்க காலத்திற்கும்  இடைப்பட்டதாகலாம்..

வானவரம்பன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 217-170 ஆகும். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் பாடுவார். இவன் காலத்தில் அசோக மோரியனின் தாக்கம் சேரர்மேல் தொடங்கிவிட்டது. கூடவே மோரியரை வீழ்த்திய சுங்கரின்மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதையாகும். (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பின் வஞ்சிக் காண்டத்தால் புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத் தொடரையும் படியுங்கள்.

உதியன் சேரலாதன் பொதினியைச் சேர்ந்த ஆவியர் குலத்து வேண்மாள் நல்லினியை மணஞ்செய்தான். (இற்றைப் பழனியே பழம்பொதினி. அதன் அடிவாரத்தில் ஆவினன் குடியுள்ளது.) ஆவியர் குடியோடு சேரர் குடியினர் கொடிவழி தோறும் மணத்தொடர்பு கொண்டார். உதியனின் முதல்மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனாவான். இவனைக் குடக்கோ நெடுஞ்சேரல் ஆதன் என்றுஞ் சொல்வர். (குடக்கோ என்று பெயர்வைத்துக் கொண்டு கொங்குவஞ்சியில் இவனாண்டான் என்று சில ஆய்வறிஞர் சொல்வது நம்பக் கூடியதாய் இல்லை.) 

இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 187 - 131 எனலாம். இவனுக்கு 2 மனைவியர். தன் தாய் நல்லினியின் சோதரனான வேளாவிக் கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன். இமையவரம்பன் நெடுஞ்சேரலின் தாய்மாமன்) முத்த மகள் பதுமன் தேவியை இமையவரம்பன் நெடுஞ்செரலாதன் தன் முதல் மனைவியாகப் பெற்றான். குடக்கோ நெடுஞ் சேரலாதனின் பங்காளியான செல்வகடுங்கோ வாழியதன் வேளாவிக் கோமானின் இரண்டாம் மகளை மணந்தான். ஒருவகையில் செல்வக் கடுங்கோ வாழியாதன் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கு ஒன்றுவிட்ட தம்பி முறையாகவும் இன்னொரு வழியில் சகலையாகவும் ஆவான். 

நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி உறையூர் ஞாயிற்றுச் சோழனின் மகள் நற்சோனை.  நெடுஞ்சேரலாதனின் மூத்த மனைவி வழிப் பெற்ற மக்கள் களக்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும், அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவர். இரண்டாம் மனைவி நற்சோணை வழி பெற்ற மகன் செங்குட்டுவன். இளங்கோ என்ற மகன் கிடையாது. அதற்குச் சிலம்பின் கடைசிக் காதை தவிர எந்த ஆதாரமும் கிடையாது, அந்தக் காதையில் நிறைய முரண்கள் உள்ளன. அது இளங்கோ எழுதியதா என்பதில் நிறையக் கேள்விகள் உண்டு.  

அகம் 127 இல் பேசப்படும் சேரலாதன் என்பான் பெரும்பாலும் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனாகவே இருக்கமுடியும். (அவன் தந்தை உதியன்சேரலாய் இருக்கமுடியாது,) ஏனெனில் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்காக, சேரன் செங்குட்டுவன் (தன் இளமைப் பருவத்தில்) கடல் பிறக்கோடிய செய்தியும், இலக்கத் தீவுகளில் இருந்த கடற்கொள்ளையரை ஒழித்துக் கட்டி அவருக்கு ஆதரவான (இன்றைக் கருநாடகம் சேர்ந்த) கடம்பரின் காவல் மரத்தை அறுத்ததும் இப்பாட்டின் 4 ஆம் அடியில் பேசப்படுகிறது.  இதே அடியின் தொடர்ச்சியில் இமையத்தில்  வில்பொறித்த  செய்தியும் பேசப் படுகிறது,  சிலம்பை ஆழ்ந்து படித்தால் கண்ணகிக்குக் கல் எடுக்க வடக்கே போனது இரண்டாம் முறை என்று விளங்கும். அதற்கு முன்னால், இமையத்தில் வில்பொறித்ததும், செங்குட்டுவனின் தாய் காசிக் கங்கையாற்றில் நீராடியதும் முதல்முறையாய்ப் பேசப்படும். 

செங்குட்டுவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு.131-77 ஆகும். இத்தனை மன்னரின் காலங்களைப் பொருத்திப் பார்க்கும் போது, மாமூலனாரின் காலம் பெரும்பாலும்  பொ.உ.மு. 180-125 இல் அமைந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது  இந்தப் பாடல் பெரும்பாலும் பொ.உ.மு. 131-125 இல் பாடப் பட்டிருக்கலாம். இந்தப் பின்புலத்தோடு, குறிப்பிட்ட  பாடல் அடிகளுக்கு வரலாம்.

”வெற்றி கொள்ளும்  முரசத்தை உடைய சேரலாதன் கடற்கொள்ளையரைத் தாக்கியழித்துக் கடலைப் பிறக்கோட்டி (தனக்கென ஆகும் கடல் எல்லையைப் பின் தள்ளி), கடம்பரின் காவல்மரத்தை அறுத்து, தம் பெரியவர் வியக்கும் (=மருளும்) படி இமையத்தில் வளையும் வில் சின்னத்தைப் பொறித்து,  அப் பயணத்தால் தான் பெற்ற ஒன்னார் (= பகைவர்) அவன் நன்னகர் மாந்தையின் முற்றத்தில் பணிந்து திறையாகத் தந்த பாடு (=உழைப்பு, செய்நேர்த்தி) நிறைந்த அணிகலங்களும், பொன்னால் செய்த கட்டிகளும், வயிரமும்  என 10^9 அளவு பொருந்தியதாய்க் (இங்கே ஆம்பல் எனும்  எண்குறிப்பு எடையைக் குறிக்கிறதா? - என்பது விளங்கவில்லை. ஆம்பல் என்பது உயர்வுநவிற்சியும் ஆகலாம்) குவித்து அன்று அந்த நிலம் வருந்தும் படி உறந்த நிதியத்தைப் போல்” .  

ஒரு நிதியத்தைச் சம்பாதிக்க வடபால் இருக்கும் மொழிபெயர் தேயத்திற்குப் போன தலைவனைப் பற்றித் தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.

வரலாறுச் செய்தி மட்டும் இங்கு சொன்னேன். முழுப் பாட்டையும் நான் விளக்கவில்லை.

அன்புடன்,

இராம.கி.


Saturday, November 21, 2020

ஆறாம் திகழி

" சஷ்டி " தமிழ்ச் சொல் என்ன ? - என்று திரு செம்பியன் வளவன் தமிழ்ச் சொல்லாய்வு களத்தில் கேட்டார். அவருக்கான விடை இது.

kanda shasti என்பது kanda shasti tithi என்பதன் சுருக்கம். shasti என்பது சங்கதச்சொல். ஆறாம் என்பது அதன் பொருள். kanda shasti tithi என்ற சொற்றொடரில் tithi என்பதைத் தொக்கி இக்காலம் புழங்குகிறார். tithi என்பதைத் திகழி என்று தமிழில் சொல்லுவோம். இது நிலவின் ஒரு பிறை. அமையுவாவில் (அமாவாசையில்) தொடங்கி 15 வளர் பிறைகளும், பூரணையுவாவில் (பௌர்ணமியில்) தொடங்கி 15 தேய்பிறைகளும் உண்டு. 15 ஆம் தேய்பிறையும் முதல் வளர்பிறையும் ஆன திகழியை அமையுவா என்கிறோம். அதேபோல் 15 ஆம் வளர்பிறையும் முதல் தேய்பிறையும் ஆன திகழியை பூரணையுவா என்கிறோம்.

(திகழி, தாரகை போன்ற தமிழ்ச்சொற்களின் பிறப்பைத் தெரிந்து கொள்வோம். தழல் என்பது நெருப்பு. அழல் என்றாலும் நெருப்பே. ”தழலும் தாமரையானொடு” என்பது தேவாரம் 1215:27. “தழதழவென எரிகிறது” என்று நாம் சொல்லும் போது அடுக்குத்தொடர் ஆக்குகிறோம். ழகரத்திற்கு மாறி ”தளதளத்தல்” என்றாலும் ”விளங்குதல்” பொருளுண்டு. அப்புறம், ழகரம் பயிலும் பல்வேறு சொற்கள் மாற்றொலியில் ககரம் பயிலும். இங்கே “தழதழ” என்பதும் அதே மாதிரி, ”தகதக” என்று பலுக்கப்படும். ”தகதகவென எரிகிறது” என்பதும் நம் பேச்சுவழக்கில் உள்ளதுதான். பொதுவாக எரிபவை சூடும், ஒளியுங் காட்டும். தக>தகம்= எரிவு, சூடு. தகம்>தங்கம்= ஒளிரும் பொன். தக>திக>திகழ்= திங்கள், நிலா.

திகழ்>திகழி= திதி. நிலவின் ஒரு பிறை. சூட்டின் காரணமாய் தக>தகு>தகை = தாகம். தகம்>தாகம் = நீர்வேட்கை என்ற சொற்களும் எழுந்துள்ளன. தகல் = ஒளி என்பது அகராதியில் இன்றும் இருக்குஞ் சொல். தக>தகர்>தகரம் (tin) என்பது ஒளிகாட்டும் வெளிர்ந்த வெள்ளீயத்திற்கு இன்னொரு பெயர். தகர்>தார் எனப் பலுக்கல் திரிவுகொள்ளும். இதுபோல் நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் பலுக்கல் திரிவு காட்டியுள்ளன. அவற்றில் மூன்றை மட்டும் இங்கு காட்டுகிறேன். பகல்>பால், அகல்>ஆல், நீளம்>நிகளம் இவை போலத் தகர்>தார் என்பது அமையும். பின் தார்>தாரகை என்பது அடுத்த நீட்சி. இதன் பொருள் எரியும், ஒளிதரும் விண்மீன். ]

தமிழர் கணக்கில், சந்திரமான மாதங்கள் அமையுவாவில் தொடங்கும். சந்திரமான கார்த்திகைத் திங்கள் அமையுவாவில் கந்தனின் ஆறாம் திகழி (kanda shasti tithi) விழா தொடங்குகிறது. இவ்விழாவை நான் இங்கு விவரிக்க வில்லை. இந்த ஆறாம் திகழி விழாவின் ஆறாம் நாள் (கிட்டத்தட்ட நாள், ஆனால் திகழிக் கணக்கின் படி இதைச் செய்யவேண்டும்.) இந்த ஆண்டு ஆறாம் திகழி (Shasti tithi) என்பது நவ.19 இல் பிற்பகல் 9:59 க்குத் தொடங்கி, நவ. 20 பிற்பகல் 9:29 க்கு முடிந்தது. இதைப் பொறுத்து சூர சம்மாரம் நடைபெற்றது.


Monday, November 16, 2020

Material and Process Engineering

 Material and Process Engineering என்பதை தமிழில் எப்படிக் கூறுவது? - என்று ”சொல்” முகநூல் குழுவில் கேட்டிருந்தார்.

பலநேரம்  Material தொடர்பான சொற்களுக்கு வேற்றுமை காட்டாது எல்லாவற்றிற்கும் பொருள் என்றே சொல்வது நம்மை வெகுதொலைவு கொண்டு சொல்லாது. அதிலும் துல்லியம் வேண்டும்.

content = உள்ளீடு

matter = பொருண்மை, 

material = பொருணை,

meaning = பொருட்பாடு 

substance = உள்ளடை 

subject = அகத்திட்டு, செய்பொருள், எழுவாய், கருத்தா 

topic = தலைப்பு 

article = உருப்படி, 

thing = தினை, பொருள் 

object = புறத்திட்டு, செயப்படுபொருள், கருமப்பொருள் 

Material and Process Engineering = பொருணைப் பொறியியலும், செலுத்தப் பொறியியலும்.

தாரை வாழ்சுற்று (Star life cycle)

நண்பர் ஒருவர் ”தாரை வாழ்சுற்று” பற்றிய ஒரு படத்தைக் கொடுத்து அதிலுள்ள சொற்களுக்கான தமிழ் இணைகள் கேட்டிருந்தார். கீழே அவைகளைக் கொடுத்துள்ளேன்.  

stellar nebula = தாரை முகில். தாரை என்பது விண்மீனுக்கு இன்னொரு பெயர். ஒரு கோளத்தின் எல்லாத் திசையிலும் இருந்து நீர்த்தாரை போல் ஒளி யொழுக்கு வெளிப்பட்டுக் கண்ணில் தெரிவதால், தாரையே அதற்குப் பெயராயிற்று. nebula (n.) = முகில்; mid-15c., nebule "a cloud, mist," from Latin nebula, plural nebulae, "mist, vapor, fog, smoke, exhalation," figuratively "darkness, obscurity," from PIE root *nebh- "cloud."

average star நிரவல் தாரை

red giant அரக் கயை (அரக்கு நிறம் சிவப்பு நிறம். அரன் என்றே சிவனைக் குறிக்கிறோம். அரோ அரா>அரோகரா = சிவ சிவ; கயம்/கயை = பெரியது = giant. கயன் = பெரியவன்

planerary nebula கோள முகில்

white dwarf வெண்கூளி (குள்ளம் = குறுகிய நிலை. கூளன் = குட்டையானவன். கூளி = dwarf) 

massive star மொதுகைத் தாரை (ஒரு பொருள் மொத்தையாய் இருப்பதை massive என்போம். mass = மொதுகை.) 

red Supergiant அர மீ கயை

Supernova - மீ நுவ்வை (நுல் என்பது முல்லின் போலி. முல்>முன் என்பது முன் தள்ளி வருவது. நுந்துதலும் முன் தள்ளுதலே. நுல்வி வருவது= பொங்கி வருவது. நுல்வை>நுவ்வை.)

neutron star = நொதுமித் தாரை (நொதுமல் என்பது எப்பக்கமும் சாராமல் நடுநிலையில் இருப்பது. ஓர் அணுக் கருவில்  இருக்கும் முன்னிகள் (protons) பொதிவுக் கொண்மை (positive charge) பெற்றிருக்கும்  கருவைச் சுற்றிவரும் மின்னிகள் ( electrons) நொகைக் கொண்மை (negative charge) பெற்றிருக்கும். கருவிற்குள் இருக்கும் முன்னிகள் ஒன்றையொன்று முட்டி மோதி வெளிப் படாமல் அடைத்துவைக்க எந்த மின் கொண்மையும் (electric charge) கொள்ளாத நொதுமிகள்( neutrons) பயன்படும். ஒரு தாரையில் முன்னிகளும், மின்னிகளும் குறைந்து நொதுமிகள் கூடிப்போன நிலையில் தாரை அமைந்தார் அது நொதுமித் தாரையாகும்.)

Black hole கருங்குழி (கருந்துளை என்றுஞ் சொல்வர். நான் குழியை விழைகிறேன்.)

 



Monday, November 09, 2020

பாலம்

”பாலம்’என்ற சொல்லின் சொற்பிறப்பை நண்பர் ஒருவர் கேட்டார். இதற்குச் சற்று சுற்றிவளைத்தே சரியான விடை சொல்லமுடியும். வெவ்வேறு நீர்ப் பரப்புகளைக் (அவைகள் நிலைத்தும் இருக்கலாம், ஓடவுஞ் செய்யலாம்)  கால்நடையிலோ, வண்டிகள், வேயங்களாலோ Iwagons), கடப்பதை இவ் இடத்தில் ஓர்ந்து பாருங்கள். முதலில் ஓரடியகலமே கொண்ட வாய்க்காலைக் கடப்பதாய் எண்ணுங்கள். இதைத் தாவியே  கடந்துவிடலாம். அடுத்து, 1 (அ) 2 மீ. அகலக் கால்வாயின் குறுக்கே 2 கரைகளை அணைத்தாற்போல் 2 மர இணைப்பை இட்டுக் கடந்துவிடலாம். கால்வாயின் அகலம் கூடக்கூட குறுக்கு மரத் திண்ணமும் (thickness) கூடத்தான் வேண்டும். பலநேரம் திண்ணத்தைக் கூட்டுவது  முடியாது போகலாம். இன்னுஞ் சிக்கலாய், குறுக்கு மரப் பிணைப்பின் மீது சுமையோடு போகையில் மரங்களே கூட முறிந்துவிடலாம். இதைத் தடுக்க, குறுக்குமரக் கட்டுமானம் மிக வலிதாய் இருக்கவேண்டும். 

இத்தகைய கட்டுமான அடவு செய்வதற்கு, சுற்றியுள்ள இயற்கையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். பல இடங்களில் ஆலமரம் பார்த்திருப்பீர்களே?  குட்டை அடித்தண்டும், 360 பாகையில் கிளைகள் பரந்தும் வளரும் மரம் அது . மரம் வளர, வளர, அடிமரம் மட்டுமின்றி, கிளைகளின் திண்ணமும் கூடும். கிளைகளின் கனத்தைக் காண்கையில், இவ்வளவு பளுவை இம்மரம் எப்படித் தாஙகுகிறது என்ற ஐயமும் நமக்கு எழலாம். கிடைமட்டக் கிளையிலிருந்து, உருத்துக் காற்றினூடே கீழ்நோக்கி நாலித் (தொங்கித்) தூணென விழும்  புதுவேர் (aerial prop root) நிலத்தைப் பற்றி, மரச் சுமைப்பரவலை எளிதாக்குவதை நாம் காணலாம். ஆலமரத்தின் இவ்வியத்தகு நுட்பத்தைப் பழந்தமிழன் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். ஏனெனில் அதை இந்தப் பால அடவில் பயன் படுத்தியுள்ளான். ஆலமரத்தை இன்னும் ஆழமாய்க் கவனிப்போம்.

 ஆல மரம் என்பது அகல மரம். ஆலின் சொற்பிறப்பும் அதுவே தான். அகல்> ஆல். இதுபோல் ஆகும் திரிவு 1000 சொற்களுக்கு மேல் நடந்துள்ளது. v1- short vowel. V1- long vowel. c= consonant என்று வைத்துக் கொள்ளுங்கள். c1viகc2v2 என்று சொல்லிருந்தால், பேச்சில் ”க” தொலைத்து v1 ஐ  V1 ஆக்கி c1V1c2v2 என்று ஆவது தமிழில் மிகுதி. கணக்கிலா சொற்களில் இருந்து. இங்கு 2 ஐ மட்டும் காட்டுகிறேன்.. (மற்றவற்றை ஓர் அகரமுதலியில் பாருங்கள்.) பகல்>பால்;  அகழம்>ஆழம். இதேமுறையில் அகலமரம்> ஆலமரம்.  ”க”விற்குப் பகரியாய் வகரத்திலும் இதுபோன்ற சொற்களுண்டு.  கிளையின் ஆரம் கூடக்கூட உருத்தியபடி, நாலும் (விழுகும்) விழுது கெட்டிப்படும். மர அடித்தண்டின் மேல் ஆலின் அரைக்கோளம் படர்ந்தெழும். கூர்ந்து காணின், அரைக்கோள மேங்கோப்பு (superstructure; சிவகங்கை வழக்குச்சொல்) சேர்ந்த எடையை, அடிமரமும் விழுதுகளும் சேர்ந்தே தாங்கும்..  

ஆலின் அறிவியல் பெயர்:  : Ficus benghalensis (Moraceae) இதற்குத் தமிழில் வேறு பெயர்களும் உண்டு. பூதவம் = 30 மீ உயரத்திற்கும் மேல் பூதமாய்ப் பெருத்த மரம்.  கா(ன்)மரம் = ஒவ்வொரு விழுதும் அடிமரம் போல் தோற்றுவதால், காடு போல் காணும் மரம்., கோளி = அரைக்கோள மரம்., வட்டம்>வடம் = வட்டக் குடை மரம். தொல்மரம்/பழுமரம் = தொல்/பழுத்த அகவை  கொண்ட மரம்., பால்மரம்= பால்தரும் மரம். மரத்தைக் கீறி, வடியும் பாலைக் கீரம்/கீறம் என்பர். (சங்கதத்தில், நாம் அருந்தும் பாலையே கூட இதோடு ஒப்பிட்டு, kṣīra என்பார் ) மேலே சொன்ன ”நால்குருத்தும்” (தொங்கும் வேர் கொண்ட மரம்) தமிழ்ப்பெயரே. 

சங்கதத்தில் , நால்குருத்தை, நாகுருத்த> நியக்ரோத என்று திரித்துப் பயன் உறுத்துவார். nyagrodha m.( rudh- equals ruh-),"growing downwards"the Banyan or Indian fig-tree, Ficus Indica (it belongs to the kṣīra-vṛkṣas- q.v;fibres descend from its branches to the earth and there take root and form new stems). வட்ட மரம் (vaTavRkSa), வண்டீரம் (bhaNDIra), தொழு மரம் (yajJavRkSa), விழுது மரம் (rohin) என்ற பெயர்களையும் சங்கதம் நம்மிடமிருந்து ஈர்த்துக் கொள்ளும். வணிகர் கூடும் அம்பலம் ஆனதால் வணிய மரம் (: Banyan) என்பது ஆங்கிலத்தில் பெயராயிற்று. திரு அன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருமெய்யம், திருவல்லிபுத்தூர் போன்ற பல்வேறு தலங்களில் ஆலமரமே தல மரமாகும். 

புல் எனும் வேர் புல்லி( தழுவி)க் கொள்ளலையும், பற்றிக் கொள்ளலையும் குறிக்கும். புல்லினாற் போல் பற்றிப் பொருதும் விலங்கு புலி. பல்லினாற் போல் (பற்றினாற் போல்) சுவரில் செங்குத்தாய் நகரும் உயிரி பல்லி. பல்தல் என்பதே பற்றலானது. ஒன்றைப் பற்றிக் கொள்வது பற்று. இறைவனைப் பற்றிக் கொள்வது இறைப்பற்றி.(பத்தி>பக்தி என்று திரியும்.). வாயில் பண்டத்தைப் பற்றிக் கொள்வது பல். வாயிலுள்ள ”பல்”லின் எண்ணிக்கை கருதி ”பல. பன்மை” போன்ற பொருட்படுகள் ஏற்பட்டன. பல்> பல்+து> பற்று> பத்து என்பது கூட எண்ணிக்கை வளர்ச்சியைக் குறித்தது. கை எனும் உறுப்பு 5 ஐக் குறித்தது போல் பல் எனும் உறுப்பு பத்து 10 ஐக் குறித்தது. பற்றுவதற்கு அமையும் மாந்த உறுப்புகள் கையும். பல்லுமே. 

பல்+து> பற்று> பத்து என்பது, பஃது>பது என்றும் அழைக்கப் பட்டது. தாயின் முலையைப் பிள்ளை பல்லால் பற்றி அருந்தும் நீர்மம் பால். வெள்ளை நிறம் என்ற பொருளும் கூட அதற்கு அமைந்தது. எனவே, பல்லியதைப் பாலியது என்று கூடச் சொல்லலாம்.  அதே முறையில் நீரைக் கடக்கப் பாலியது (= பற்றியது) பாலம் ஆகும். இரு கரைகளையும் பற்றிக் கொண்டு, ஆலம் விழுதுபோல் அமையும் பாலத் தூண்கள் ஆற்றுபடுகையைப் பற்றிக் கொண்டு, அமைவது பாலம். ஆங்கிலத்தில் bridge (n.1) என்பதையும் இப்படித்தான் சொல்வர். "any structure that affords passage over a ravine or river," Old English brycge, from Proto-Germanic *brugjo (source also of Old Saxon bruggia, Old Norse bryggja, Old Frisian brigge, Dutch brug, Old High German brucca, German Brücke), from PIE root *bhru "log, beam," hence "wooden causeway" (source also of Gaulish briva "bridge," Old Church Slavonic bruvuno "beam," Serbian brv "footbridge").

இது மட்டுமல்ல. beam (n.) என்பது பாலத்தில் போடப்படும் பாவம் (பல்வியது பவ்வும். பவ்வம்>பாவம்). Old English beam originally "living tree," but by late 10c. also "rafter, post, ship's timber," from Proto-Germanic *baumaz "tree" (source also of Old Frisian bam "tree, gallows, beam," Middle Dutch boom, Old High German boum, German Baum "tree," and perhaps also (with unexplained sound changes) Old Norse baðmr, Gothic bagms), which is of uncertain etymology (according to Boutkan probably a substrate word). The shift from *-au- to -ea- is regular in Old English.

பல்>பால்>பாலம் என்று தமிழில் சொல்வது ஏதோ விந்தையல்ல. அதில் மொழியின் வழமையும் உள்ளது.  இன்னொரு வேரான கல்லைப் பார்ப்போம். கல்லுதல் = குத்தல், தோண்டல், தோண்டி வெளிக்கொணர்தல்,  கல்லப்பட்டது கலம் என்ப்படும். மட்கலம், உண்கலம், நீர்க்கலம், மரக்கலம் போன்ற பயன் பாடுகளை எண்ணுங்கள். எல்லாமே கல்லப் பட்டவை. அடுத்துக் கல்லும் கருவி கலப்பை எனப்படும். இனிக் கல்லப்பட்டது கலயம்>கலசம் என்றும் சொல்லப் படும். மரத்தைக் கல்லி உருவானது கல்பு> கற்பு> கப்பு என்றும் அழைக்கப் படும். கப்பின் நீட்சி கப்பல். இனிக் கல்லியது கல்நம்> கன்னம் = குழி, படகு என்றும் அமையும். கல்லியது கடம், கரகம் என்ற சொற்களையும் உருவாக்கும். கல்வு> கவ்வு என்பது கை என்ற சொல்லுக்கும் அடிப்படையாகும். 

கல்லி எழுந்தது கலம்> களம்> கயம் = நீர்நிலை. கயத்தின் நீட்சி கயத்தில் கல்லினால் கயிதல்> கசிதல் வினை உருவாகும். வேறுவகையில் கல்லப்பட்டது கால்வாய். கல்லுதல் என்பது கறணுதல் என்ற சொல்லையும் உருவாக்கும். குல்>கல்>கால் = தோன்றல், வெளிவருதல், பாய்தல், ஓடுதல், பரவுதல், வீசுதல்; time என்பது நீண்டுபோவது எனவே காலம்  இருளைக் கல்லியது கால்>காலை ஆனது. கல்> கால்> காய்> காயம் என்பது கல்லும் உடம்பைக் குறிக்கும். நான் பல்வேறு சொற்களைச் சொல்லிப் போகலாம். கல்>காலம் போல் பல்>பாலம் என்று உணர்ந்தால் போதும்

இனி சல் வரிசையையும், தல்/தள் வரிசையும் பார்க்கலாம்.  *சல் (செல்) என்பது சால் (furrow in ploughing) என்பதைக் குறிக்கும். சால்>சாலை என்பது நீண்டு போகும் பதை.  தள் (தள்ளு)> தாள்>தாளம் (தாழை); தால் = நா>தாலம் 

6 வகைப் பாலங்கள்:
Arch = ஆலகம், ஆலகை; ஆல்-தல் = சுற்று-தல். அல்>ஆலம்> ஆரம் = சுற்றும் கை; arm; ஆல்கம்>ஆலுகம், ஆலகம் = சுற்றிப் பெற்ற சிறு பகுதி, arc. ஆல்>ஆழு>ஆழி = நிலப்பரப்பைச் சுற்றிய கடல், வில்.
Beam = பவ்வம்; கீழே முன்னிகைகளில் கொடுத்துள்ள பாலம் என பதிவைப் பாருங்கள்.)
Truss = தொடையம்; தொடுத்தல் = சேர்த்தல்; தொடை = மாலை, எதுகை - மோனை - இயைபு போன்ற யாப்புக் க்ட்டுகை. தொடையம் = இல்ரும்புச் சலாகைகளைக் கொண்டு வேண்டும் வகையில் தொடுக்கும் வடிவம்.
Cable-stay = கொப்புழைத் தாயம்; cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள். உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.) to stay = தாய்-தல்; வாழைப்பழம் வடமாவட்டப் பலுக்கலில் வாயப்பயம் ஆவது போல் தாழம் என்பது தாயமாகும். ”பரம பத விளையாட்டைப்” பாம்பு/ஏணித் தாயக்கட்டம் என்பார். தாயம் = தங்குமிடம், 100 தாயக்கட்டம் = 100 தங்குங் கட்டம். தாயத்தில் உருட்டுங் கட்டை தாயக் கட்டை (dice) ஆகும். ’ஒன்று” போட்டால் தான் தாயம் தொடங்கலாம் என்பதால் ஒன்று போடலும் ”தாயம் போடல்” ஆகும்..
Cantilever = கோணெழுவம்; canti = கோணக் கூடிய, கோடக் கூடிய, கோண்டக் கூடிய. Lever = கடப்பும் பாறை போல், எழுப்பும், எழுவும் கருவி.
suspension = ஊஞ்சுபந்தம் sus = ஊஞ்சல் போல் தொங்குதல். ஊஞ்சல்>ஊசல். pendere in Latin = பந்துறுதல்.

அன்புடன்,

இராம.கி.




Sunday, November 08, 2020

Stationary shop - 2

1500 ஆண்டுகளுக்கு முன் நம்மூரில் எழுது பொருள் என்பது பனையோலை.. தாழை மடல், எழுத்தாணி, பித்திகை, செம்பஞ்சுக் குழம்பு, கரி, சுண்ணம், மாக்கட்டி, மஞ்சள் என இவ்வளவு தான். மிஞ்சி மிஞ்சிப் போனால், கல்,  செப்பு போன்ற மாழைத்தகடு,  உளி, சிறு சுத்தியல் ஆகியவை சேரும். இவற்றைச் செய்யப் பனைமரமும். கொல்லன் பட்டறையும் போதும்.  நம்மூரில் பனை மிகுத்து வளர்ந்தது பனையோலை எளிதாகக் கிடைத்தது. எனவே paper எனும் புது நுட்பியல் ஏற்படத் தேவை நமக்கு எழவில்லை. பனையோலை கிடைத்த இடத்திலேயே எழுத்தும் ஏற்பட்டது. (பனை மிகுந்த பாண்டிநாட்டிலும், சேர நாட்டிலும் சுவடிகள் கூடின. பனை குறைந்த சோழநாட்டில் கல்வெட்டுகள் மிகுந்தன, சுவடிகள் குறைந்தன. 

தமிழகத்தில் சுவடி கூடிய இடங்களில் இயல்பாகவே படிப்பு வளர்ந்தது. நூலாக்கம் கூடியது. (வடக்கே கூட பனை கூடிய மகதத்தில் தான் படிப்பு கூடியது. மற்ற இடங்களில் நூலாக்கம் குறைவு தான். இற்றைப் பீகாருக்கும் தமிழகத்திற்கும் இருந்த உறவுகள் அதிகம். காரணமின்றி அசோகன் நம் பெயரைச் சொல்லவில்லை. “சிலம்பின் காலம்” என்ற என் நூலைப் படியுங்கள்.)  அதே பொழுது சுவடியில் எழுதிய எழுத்துகள் ஒன்றிற்கொன்று வேறுபாடு காட்டாது நாளாகும் பயன்பாட்டில் எல்லாம் வட்டமாகிச் சிதைந்தன. கல்வெட்டில் எழுதியதில் அவ்வளவு எழுத்துச் சிதைவு ஏற்பட வில்லை. ஒரே தமிழி எழுத்தாய்த் தொடங்கியது, காலவெள்ளத்தில், எழுத்து நுட்ப வேறுபாட்டால், இரு வேறு எழுத்துகளாய் மாறியது, காலஞ் செல்லச் செல்லப்  பாண்டிய எழுத்துச் சிதைவு பொருட்புரிதலைக் குறைத்தது. பேரரசன்  இராசராசன் தன் அரசாணையால், சோழர் எழுத்தைப் பாண்டி மண்டலத்தில் புகுத்தி வட்டெழுத்திலிருந்து படிப்போரை விடுவித்தான், மொத்தத்தில் கி,பி,10 ஆம் நூற்றாண்டு வரை பாண்டிநாட்டில்  இலக்கியம் வளர்ந்தது சோழநாட்டில். எழுத்துக் காப்பாற்றப் பட்டது. முடிவில் இரு வேறு மரபுகளும்  கி.பி. 10 ஆ ம் நூற்றாண்டிற்கு அப்புறம் தான் ஒன்று கலந்தன.. 

17 ஆம் நூற்றாண்டு வரை stationary shop என்பது தமிழ்நாட்டில் தனியே எழவே இல்லை. தாள் என இக்காலத்தில் paper ஐச் சொல்கிறோமே, அது பனை யோலையை ஒப்பிட்டுச் சொன்னது. paper பயன்படுத்தும் தேவை நம்மூரில் எழ வில்லை. அது எகிப்திலும், சீனத்திலும் எழுந்தது, சீனப் பழக்கத்தை நானிங்கு விவரிக்கவில்லை. எகிப்துப் பழக்கம் விவரிக்கிறேன். Cyperus papyrus (https://en.wikipedia.org/wiki/Cyperus_papyrus) என்பது அவர் நாட்டு நாணல் கோரைக்கு ஆன அறிவியல் பெயர். அடியில் ஒரு தண்டு; மேலே ஒரு குரல் கொத்து என்றே அது காட்சியளிக்கும் அந்தக் கோரை எகிப்து, phoenicia ஆகியவற்றில் மட்டும் இன்றி,  சிந்து சமவெளியிலும். ஏன் நம்மூரிலும் கூட ஆற்றங் கரைகளில் விளைந்தது. குரலை வெட்டி, தண்டின் மேல் தோலையும் சீவி, உள்ளிருக்கும் நார்ப் பொருளிலிருந்து தாள்தாளாய்ச் சீவி அப்படிப் பெற்ற தாள்களைப் பின்னி அதை அழுத்திப் பிணைய வைத்து உலர்த்திப் paper எனும் எழுது பொருளைச் செய்தார்.  புது நுட்பம் எழுந்தது. (அருமையன விழியம் ஒன்றைப் பாருங்கள். https://www.youtube.com/watch?v=DCR8n7qS43w) இக்கோரை paper இக்கு மட்டுமின்றிப் புணை செய்யவும் பயன்பட்டது. Thor Heyerdahl இன் ”Raa”, ”Tigris” ஆகிய நூல்களைப் படித்தால் கோரையின் பரந்த விரிவும் அதன் இன்னொரு பயனும் செய்முறையும் புரியும். 

கோர்த்தாளை (கோல்>கோலை>கோரைத் தாளை) phoenician மொழி வழி அறிந்த கிரேக்கர் அந்நுட்பத்தைக் கற்றார், paper ஏற்றுமதிப் பொருள் ஆனது. Chartes, chartion or charterion என்று கிரேக்கர் paper ஐ அழைத்தார். (தமிழுக்கும் phoenician உக்கும்  ஏதோ தொடர்பு இருந்திருக்குமென்றே நான் நம்புகிறேன். phoenician வழிப்பட்ட கிரேக்கச் சொல் தமிழோடு நெருக்கம் காட்டுகிறது.)  χάρτης (khartes, meaning "layer of papyrus") என்று கிரேக்கத்தில் ”கோரைத் தாள்” எழுதப் பட்டது.  Egyptian இல் இது pa-p-ouro பாப்பிரசு "the material of the Pharaoh" என்றும் வேறு பெயரில் அழைத்தார். பாப்பிரசு பெரிதும் விளைந்த phoenician துறை ரகர- லகரத் திரிவில் பைபிலோசு என அழைக்கப் பட்டது. byblos "Phoenician port of byblos" என்பதும் paper க்கு இன்னொரு பெயரானது, பைபிலோசு எனும் எழுது பொருளில் எழுதப்பட்ட நூல் பைபிள் (தாளில் எழுதப்பட்டது என்பது அதன் பொருள்) எனப்பட்டது. 

phonecian தாக்கத்தால்  தாளும் எழுத்தும் கிரேக்கரிடம் பரவின. கிரேக்க எழுத்தும் phonecian இல் இருந்தே தோன்றியது). Phoeniciaச் சொல்லான ḥrṭit (Hebrew letters חרטית, ~khartit interpreted as 'something written', cognate with Biblical Hebrew khereṭ חֶרֶט 'stylus' or by extension 'style of writing' phonecian சொல் எப்படி எழுந்தது என்று தெரியாது. கிடைத்திருக்கும் விளக்கங்கள் பொருத்தமாய்த் தெரியவில்லை) என்பது கிரேக்கத்தில் χάρτης கார்த்தெ ஆகி,  உசுபெசுகித்தான் தஜிக்கித்தான் ஆகிய இட்ங்களில் புழங்கும் சோகுதியனில்  (sogdian) காக்தி kʾγδ(y)ʾஎன்றும், Uighur இல் kägdä என்றும், Georgian இல் kaɣaldi என்றும், Turkish இல்  kâğıt என்றும், அரபியில் kāḡad என்றும், Persian இல் kāḡaḏ என்றும் ,சங்கதத்தில் kākali என்றும்,  Bengali இல் kagôj என்றும்.  Hindi இல் ‎kāġaz என்றும், தமிழில் காகிதம் என்றும் திரிந்துள்ளது. 

என்னைக் கேட்டால், paper ஐக் கோரைத்தாள் என்றே நாம் சொல்லலாம்.  அது காகிதத்திற்கு ஒப்பானதே. தாள் தவிர பட்டை/பட்டம் என்ற சொல்லும் தமிழிலுண்டு. பட்டத்தைச் சங்கதம்  பத்ரம் (patrā (पत्रा).—m. A thin plate, leaf, or sheet (of metal &c.) என்று கடன் வாங்கிக் கொள்ளும். இற்றை நிலையில் paper இன் பயன்பாடு கூடிவிட்டது,. புதுப் புது நுட்பங்கள், இயல்பொருள்கள், தொழில் முறைகள் வந்துவிட்டன. விதமான தாள்கள். அட்டைகள், மையூற்றுகள், வண்ணங்கள்,. ஈயக் கரிக் குச்சிகள், ஒட்டுப் பொருள்கள், கண்ணாடித் தாள்கள். தூரிகைகள், எழுதுகருவிகள் என ஏராளம் வந்துவிட்ட்ன. இவை விற்கும் இடம் stationary shop என்று அதன் பீடிகைத் தளம் கொண்டே அழைக்கப் படுகிறது. 100க் கணக்கான பொருள்கள் அங்கு விற்கையில் பண்டப் பெயரில் அல்லாது நிலைத்த கடை என்றே சொல்கிறார் எழுதுபொருள் கடை என்று உலகெங்கும் விதந்து சொல்லப்படுவதில்லை. நாமும் விதக்கவேண்டியது இல்லை என்பதே என் கருத்து,     

ஆங்கிலத்தில் stationer (n.) என்ற சொல்லின் சொற்பிறப்பு "book-dealer, seller of books and paper," early 14c. (late 13c. as a surname), from Medieval Latin stationarius "tradesman who sells from a station or shop," noun use of Latin stationarius (see stationary). Roving peddlers were the norm in the Middle Ages; sellers with a fixed location often were bookshops licensed by universities; hence the word acquired a more specific sense than its etymological one என விவரிக்கப்படும். நான் மேற்சொன்ன கருத்து இவ்வரையறையில் வெளிப்படுவதைக் காணலாம்.

stationary shop. = பீடிகைக் கடை. விளக்கம் சொல்லும் போது எழுதுபொருளைக் குறிப்பிடலாம்.

அன்புடன்,

இராம.கி.


Stationary shop - 1

ஒரு காலத்தில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நாட்களில் சந்தைகள் நடைபெறும். (இன்றும் கூட நம் நாட்டுப் புறங்களில் வாரச் சந்தைகள் நடை பெற்றுக் கொண்டுள்ளன.) ஞாயிற்றுக் கிழமை ஓரூரில், திங்கட் கிழமை வேறூரில், ....... முடிவில் சனிக்கிழமை இன்னோரூரில் எனச்  சுழற்சி முறையில் ஒரு வட்டாரத்தில் சந்தைகள் நடைபெறும். வெவ்வேறு விற்பனையர் தம் பொருள்களை வண்டிகளில் ஏற்றி வருவர், அவருக்கென ஓரிடத்தை சந்தையில் வாடகைக்கு எடுத்து, தம் பொருள்களைப் பரப்பி காலையிலிருந்து மாலைவரை விற்பனை நடக்கும்.  10/12 மணி நேரங்கூட சந்தைகள் நடக்கும். விற்பனையாகாப் பொருள்களை மீண்டும் வண்டியில் போட்டு, மறுநாள் வேறூரில் நடக்கும் சந்தைக்கான புதுப்பொருள்களையும் ஏற்றி வணிகர் கிளம்புவர், மறுநாள் இன்னோர் ஊர், இன்னொரு சந்தை. தொடர்கதையாய் நம்மூர்களில் நடக்கும். கடை என்பது ஏதென்று கேட்டால் அது பெரும்பாலும் அவர்களின் வண்டி தான்.  தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதுபோல் தான் நடந்தது. வண்டியிருக்கும் இடமே கடை. 

இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, வியத்நாம், சீனம், சப்பான், பாரசீகம், அரேபியா போன்ற நாடுளிலும் இதுபோல் நடந்தது. இரோப்பா, அமெரிக்காவிலும் கூட இது நடந்தது. வண்டி வண்டியாய்த் திரண்டு ஊரூராய் விற்றுப் போவதை அக்காலத்தில் சாத்துகள் என்றார். சாத்தன்= சா(ல்)த்துவோன்= விலை சால்த்தி (சாற்றி) விற்கிறவன். (என் ”சாத்தன்” தொடரையும். ”பாசண்டச் சாத்தன்” தொடரையும் படியுங்கள். விற்றலும் சாற்றலும் புரியும்.) நம் சாலுக்கும் ஆங்கிலத்தின் sale க்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு,. சாத்தன் வடக்கே சேத் என்றாவான். நம்மூரில் செட்டி என்போம். நம்மூரில் தொடங்கிய வணிக முயற்சிகளை நாம் அறியாததால் இன்று புறம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் வணிக மொழியாய் ஒரு காலத்தில் தமிழே இருந்தது. தக்கணப் பாதை பற்றியும் நம் பாலைத்திணைப் பாடல்கள் பற்றியும் ஐயனார் தொடர்பான செய்திகளையும் பல முறை சொல்லி விட்டேன். புரிந்து கொள்ளத் தான் பலரும் தயங்குகிறார். https://valavu.blogspot.com/2018/09/liberty-freedom-independence.html. 

ஒவ்வொரு நாட்டிலும் நகரங்கள் ஏற்பட்ட பின், சில குறிப்பிட்ட பொருள்களை விற்கும் கடைகள் சிற்றூர் வாரச் சந்தைகளுக்கு நகர்வதற்கு மாறாகப் பேரூர்களில் நிலைகொள்ளத் தொடங்கின. கோயில் தேர் நிலைகொள்ளும் இடம் நம்மூரில் தேர்நிலை, தேர்முட்டி, தேர் அடை/அடி என்று சொல்லப்படுமே? நினைவு வருகிறதா? நிலையம் (station) என்ற சொல் இப்படி நிலை கொண்டதில் பிறந்தது, இன்றுங்கூட  நம் நகரக் கடற்கரைப் பகுதிகளில் தள்ளுவண்டிகள் நிலைகொண்டு தான் தம் விற்பனையைத் தொடர்கின்றன. தள்ளுவண்டி> நிலை கொள்ளல்> நிலைக்கடை என்பது ஒருவித எவ்வளிப்பு (evolution) வளர்ச்சி. மக்களை நோக்கி விற்போர் போவது முதல் நிலை. விற்போரை நோக்கி வாங்குவோர், நுகர்வோர் போவது அடுத்து அமையும் வளர்ந்த நிலை. 

அழிந்து போகும் காய்கறி, சமையற் பொருள் தவிர, குறிப்பிட்ட காலம் நீடித்து நிலைக்கும் அழியாப் பொருள்களுக்கு (non-perishables), குறிப்பாக, சவளி, தொழில் ஆயுதங்கள், அணிகலன்கள், இருக்கைகள், அறைகலன்கள் போன்றவைகளுக்குப் பெருநகரங்களில் நிலைக்கடைகள் வைக்கத் தொடங்கினர்.  நகரக் கடைத் தெருக்கள் பெரிதாகின. ஒவ்வொரு கடைக்கும், தனிக் கட்டிடம், முத்திரை, இலச்சினை, .கொடி, பதாகை என அடையாளங்கள் ஏற்பட்டன. கப்பல், சாத்துகள் மூலம் இலக்கிப்பு (logistics = ஓரிலக்கைச் சென்று அடைதல்) ஏந்துகள் எளிதாக ஏற்படத் தொடங்கின. இலக்கிப்பும், போக்கு வரத்தும் தொழிலாகின. நகரங்கள் பெரிதாகின. வயிற்றுப் பசிபோக்கும் வேளாண்மைக்கு (subsistence agriculture) மாறாய்  வேளாண்மை இல்லாதோருக்கு அளிக்கும் வகையில் வேளாண் புதுக்கம் (agricultural production) எழுந்தது. 

நெய்தல் திணையே மருதத்திற்கு வழிகாட்டத் தொடங்கியது. செல்வர் எனும் புது வகையார் குமுகத்தில் நிறைய உருவாகத் தொடங்கினார். வெவேறு பண்டங்கள் விற்கும் நிலைக்கடைகள் அந்தந்தப் பண்டப் பெயராலே அழைக்கப் பட்டன. சவளி விற்கும் நிலைக்கடை சவளிக்கடை ஆனது.  அணிகலன்கள் விற்குங் கடை நகைக்கடையானது, இருக்கைகள், அறை கலன்கள்  (furnitures) என வீட்டுப் பண்டங்கள் (household articles) விற்குங் கடை அறைகலன் கடையானது, ஆயுத/கருவிக்கடை என வேறுவகை விரிந்தது. இற்றைக் குமுகாயத்தில் பெரும் பெரும் கட்டடங்களில் இக்கடைகள் இருக்கலாம். ஆனால் அன்றைக்கு இவை மரம், தகரத்தால் செய்யப்பட்ட ”பெட்டிக் கடைகளாவே” இருந்தன.

பெட்டிக் கடை என்பது கூட ஒருவிதப் பேச்சுத்திரிவு தான், அடிப்படையில் அவை பீடக் கடைகள் அல்லது பீடிகைகள். (கோயில் தேர்களை இன்றும் பீடங்களுக்கு/ நிலைகளுக்கு/ முட்டிகளுக்கு/. அடிகளுக்கு அருகில் தான் நிறுத்துகிறோம். அது போல் விற்பனை வண்டிகளை பீடங்களுக்கு (பீடம் = திரண்டது, உயர்ந்தது) அருகில் தான் நிறுத்தினார். நாளடைவில் பீடங்களின் மேலேயே கடைகள் எழத் தொடங்கின. (கோயம்பேட்டில் கட்டிடத்தின் உள்ளே இருக்கும் காய்கறிக் கடைகளைப் பார்த்திருக்கிரீர்களா? கடைகள் பீடங்களில் தான் இருக்கும், நாம்  இருபக்கப் பீடங்களுக்கு நடுவில் நடந்துகொண்டு காய்கறிகளைப் பார்த்து வருவோம். காய்கறிக்கு மட்டுமில்லாது பலவகைப் பண்டங்களுக்கும் ஆன பீடங்களையும் கற்பனை செய்யுங்கள். புரியும். ) பீடிகைகள் என்பவை நிலைப்பட்ட கடைகள். விவரம் அறியாதோர் சிறு பீடிகைகளைப் பெட்டிக்கடைகள் என்றார். 

அக்காலத்தில் பெருநகரங்கள் கழிமுகத்திற்கு அருகில், ஆற்றங்கரைக்கு அருகில், நீர் மண்டும் இடங்களில் இருந்தன. அவ்விடங்களில் திடீரென நீர் உள் நுழைந்து விடலாம்  அப்படியாகுமெனில், பீடத்தில் பொருள் வைக்காத கடைகளில் சேமித்த பொருள்கள் அழிந்து விடலாம். எனவே மேடுகளை (பீடங்களை) அமைத்து அவற்றின் மேல் மரத்தாலான கடைகளைக் கட்டியிருப்பார். எங்கள் ஊர்ச் சந்தையில் மண்மேடுகளில் பண்டம் விரித்து விற்பதைக் கண்டுள்ளேன். (இவற்றின் விவரிப்பைப் படிக்க வேண்டுமானால் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களைப் படியுங்கள். இல்லாவிடில், குறைந்தது செய மோகனின் ”கொற்றவைப்” புதினத்தையாவது படியுங்கள். புகார், மதுரை, வஞ்சி போன்றவற்றின் விவரிப்பு புரியும்.) உங்கள் புரிதலுக்காக, சிலம்பில் வரும் பீடிகைக் காட்டுகளைக் கீழே கொடுத்துள்ளேன். 

மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் - புகார்:0/21

பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் - புகார்:5/41

காவல் பூதத்து கடை கெழு பீடிகை

   புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் - புகார்: 5/67,68

முந்த சென்று முழு பலி_பீடிகை - புகார்:5/78

நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு - புகார்:5/86

மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின் - புகார்:6/122

விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை

   கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி - மது: 12/43,44

பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் - மது:15/60

பீடிகை தெருவில் பெயர்வோன் ஆங்கண் - மது:16/104

வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி - மது:22/77

பீடிகை பீலி பெரு நோன்பாளர் - வஞ்சி:26/226

சித்திர விதானத்து செம் பொன் பீடிகை

   கோயில் இருக்கை கோ_மகன் ஏறி - வஞ்சி: 27/156,157  

பீடிகைத் தெருவும், பீடிகை மறுகும் (மறுகில் பிறந்த மார்க் என்ற சொல்லை வட புலத்தார் எடுத்துக் கொண்டார்.) மேலுள்ள காட்டுகளால் புரியும். சரி, பல்வேறு கடைகளின் பெயரழைப்பைப் பார்த்தோம். அக்காலத்தில் ”stationary” கிடையாதா, எனில், சற்று விந்தையாய் விடைசொல்ல வேண்டி வரும்.  

அன்புடன்,

இராம.கி.