Monday, September 21, 2020

நாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்

11 ஆண்டுகளுக்கு முன் ஒரு வாரம் (21/2/2008) வெளிவந்த குங்குமம் தாளிகையில் "ஆதலினால்..." என்ற தொடரில் "முகத் திருத்தம்" பற்றிப் பேசவந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மேல்தட்டு முடி திருத்தகத்தில் நடந்த செய்தியைச் சொல்கிறார். அதை இங்கு கீழே கொடுத்திருக்கிறேன்.
-------------------------
வயதானவர், தயக்கத்துடன் "தம்பி சொன்னது புரியலை" என்றார். "இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று அவன் கோபம் அதிகமானது. வயதானவர், தான் நாற்பது வருஷத்துக்கும் மேலாக இதே தொழிலை மானா மதுரையில் செய்து வந்ததாகச் சொன்னார். அவரது குரலை யாரும் மதிக்கவேயில்லை. மாறாக "ஆங்கிலம் தெரியாதவர் ஏன் இந்த வேலைக்கு வருகிறார்?" என்ற கேலியே எழுந்தது.
தனக்குத் தெரிந்த தொழிலை நாற்பது வருடங்களுக்குச் செய்து வந்த ஒரு மனிதன், பிழைக்க வழியின்றி பெருநகரத்துக்கு வந்து, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவமானப் படுத்தப்படும் கொடுமை வேறு எங்காவது நடக்குமா என்று தெரியவில்லை. சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது.
மேலாளர் வயதை மறந்து அவரைத் திட்டிக் கொண்டிருந்தான். தலை கவிழ்ந்து நின்ற அவரது தோற்றம் அத்தனை கண்ணாடிகளிலும் பிரதி பலித்தது. ஆள் உயரக் கண்ணாடிகள் இருந்த போதும் எதையும் அந்த மனிதர் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
அவர் தனது வலியை மறைக்கத் தெரியாமல். "இந்த தலைமசிரை நேத்து வரைக்கும் சீவிச் சிங்காரிச்சிட்டு, வெட்டிப்போட்ட மறுநிமிஷம் குப்பைனு தூக்கி எறியுற மாதிரி நம்ம பொழப்பும் ஆகிப்போச்சுல்ல" என்றார். அலங்கார நிலையத்தின் மேலாளர், "இனிமே குப்பை அள்ளுற வேலை தான் உனக்கு, புரியுதா? போயி அந்த வேலையை ஒழுங்காப் பாரு" என்றான். வயதானவர் கோபத்துடன் விடுவிடுவென அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போனார்.
அந்த மனிதன் அவமதிக்கப்பட்ட வலி ஆறாமலே இருக்கிறது. இவரைப் போல மாநகரில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சொல்லும் ஆட்டோ ஓட்டுநர், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் அவமானப் படுத்தப் படுகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பின் துணி தேய்க்கிறவன், ஆங்கிலம் பேசத் தெரியாத காரணத்தால் முட்டாள் ஆக்கப்படுகிறான். லண்டனில் கூட இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் தமிழில் உரையாடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நேர் எதிரான சூழலே உள்ளது.
------------------------------------
இனி நாம் சற்று அவதானிக்கலாம் வாருங்கள்.
மேலே கூறும் "அவமதிக்கப் பட்ட வலிகள்" இன்று நேற்றா ஏற்பட்டன? ஒரு 25, 30 ஆண்டுகளாய் நடந்து கொண்டு தானே இருக்கின்றன? (நாடு விடுதலை பெற்றவுடனேயே கூட இந்த அவமதிப்புத் தொடங்கி விட்டது என்று சொல்லலாம்.)
"இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று கோபப் பட்ட இளைஞரைப் போன்றோர் இன்று இலக்கக் கணக்கில் இருக்கிறார். அவரைத்தான் தமிங்கிலர் என்று சொல்கிறோம். அவர்தான் இன்று பல இடங்களிலும் முகன்மையான ஆட்களாய் இருக்கிறார். அவர் சொல்லும் பொள்ளிகைகளைத் (policies) தலைமேல் எடுத்துக் கொண்டு நடத்தும் அடியாட்களாக, இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் இருக்கிறார். கூர்ந்து நோக்கினால், தமிங்கிலர் தமிழரை ஆண்டு கொண்டு இருக்கிறார்.
தமிங்கிலர் உருவான கதை ஒரு தனிக்கதை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது, எழுபதுகளில் பல நாளிதழ்களில், தாளிகைகளில், கதைகளில், தமிழ்த் திரைப்படங்களில், ஒரு ஏக்கம் தொடர்ச்சியாய் வெளிப்பட்டு வந்தது. காட்டாக, தமிழ்த் திரைப்படங்களில், கதைநாயகி என்பவள் ஆங்கிலப் பள்ளி (convent)யிலிருந்து படித்தவளாயும், கதைநாயகன் ஆங்கிலம் தெரியாத, வெகுளியானதொரு பட்டிக்காட்டானாகவும் உருவகிக்கப் பட்டு, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவனைக் கேலி செய்கிற காட்சியையும் காட்டி, அதற்குப் பின், எப்படியோ ஆங்கிலத்தில் தேறி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்து, விளையனிடம் (villain) இருந்து கதைநாயகியைக் காப்பாற்றி, அவளையே அடைவதாகக் கதை நகரும். பார்க்கும் பலருக்கும் வாழ்விற் செய்யவேண்டியது என்று சில அடிப்படைக் கருத்துக்கள் ஊசியேற்றுவது போல் உறுத்தப்படும். அதில் ஒன்று "ஆங்கிலம் தெரிந்தால் தான் வாழ்க்கையிற் கடைத்தேறலாம்" என்ற ஏக்கமும் ஆகும். இந்த ஏக்கத்தை இன்று நேற்றல்ல; ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளாகவே தமிழ் மக்களிடையே உருவேற்றியிருக்கிறார். இந்த ஏக்கத்தின் விளைவு தமிழரில் மேல்வருக்கத்தார் தமிங்கிலராய் மாறிக் கொண்டு வருகிறார்.
அந்த ஏக்கத்தின் வடிகாலாய், சென்னை போன்ற பெருநகரங்களில், ஒன்றிரண்டு ஆங்கிலோ இந்தியர் பள்ளிகளும், மிகமிகக் குறைந்த வகையில் தென்னிந்தியக் கிறித்தவ சபையினர் (Church of South India) பள்ளிகளும், மற்றும் ஏசு குமுகத்தினரின் (Society of Jesus) கத்தோலிக்கப் பள்ளிகளுமாய் ஆங்கிலப் பள்ளிகள் அமைந்திருந்தன. வணிக நோக்கில் நடத்தப்பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் அப்போது கிடையா. பொதுவாய் பழைய, புதிய பணக்காரர் தம் பிள்ளைகளை இம்மடலாயப் பள்ளிப் (convent school) படிப்புக்கு அனுப்பி வைத்து அந்தக் காலத்தில் ஊருக்குள் பெருமை கொண்டார்.
பின்னால், மேட்டுக்குடியைப் பின்பற்றி அப்படியே ஈயடிச்சான் படி(copy) யெடுக்கும் உயர் நடுத்தர வருக்கமும், அதையடுத்து நடுத்தர வருக்கமும், இன்னும் கீழே உள்ளவரும் எனக் கொஞ்சம் கொஞ்சமாய் கூம்பின் உச்சியில் இருந்து ஆர்வம் கீழாய்ப் பெருகி, பொல்லாத ஏக்கம் கொண்டு, ஆங்கிலப் பள்ளிப் படிப்பிற்கு மாற முற்பட்டனர். கூடிப் போன இந்த ஏக்கத்தை நிறைவு செய்யுமாப் போல மடிக்குழைப் பள்ளிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒருசிலர் வளர்த்தனர். ஒரு கட்டத்தில், இந்தக் கூடுதற் தேவையை ஈடு செய்ய மடலாயப் பள்ளிகளால் முடியவில்லை.
இப் பள்ளிகளில் இருந்து வெளிவந்த ஒரு சிலர், தனியார் பள்ளிகளாய், "மடலாயப் பள்ளிகள் போலவே தாங்களும் நடத்த முடியும்" என்ற முன் மொழிவில், மடிக்குழைப் பள்ளிகளைத் தொடங்கினர். அந்நிலையில் தான், பள்ளி தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் போது இடையாளராய் இருந்து ஏகப்பட்ட பணம் பண்ண முடியும் என்று யாரோ சில சூழ்க்குமதாரிகள் சொல்லிக் கொடுக்க, அதைத் தாரக மந்திரமாய் எடுத்துக் கொண்டு, 2 கழகத்தாரும் அவரின் அமைச்சர்களும் ஒன்றிற்கு ஒன்று போட்டியாய், அடுத்தடுத்து தங்கள் ஆட்சியில் காசுக்கு அனுமதி வழங்கினார். இதன் விளைவாய், "சடசட"வென, "படபட"வெனப் புற்றீசலாய், மடக்கை (exponential) வேகத்தில், பணம் ஒன்றே குறியாய், தேவையை நிறைவு செய்யும் அளிப்பாக மடிக்குழைப் பள்ளிகள் பெருகின. மாநிலத்தின் கல்வித்துறை, கையூட்டு மல்கிய துறையாக, மாற்றம் பெற்றது. தலையில் இருந்து கால்வரை பணம் ஏராளமாய்ப் புரண்டது. மேடையில் முழங்குவது மட்டும் தமிழாகவும், அன்றாட நடைமுறையில் புரந்தருவது ஆங்கிலம் ஆகவும் கல்வி வணிகர்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரிகள் ஆகியோரின் கூட்டுறவில் ஆகிப் போனது. தமிழக அவலத்தின் ஊற்றுக்கண் மடிக்குழைப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் தான் இருந்தது.
இவ்வேகம் ஓர் அசுர வேகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் அரசு வாரியம் வழிநடத்திய தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 99 விழுக்காடு தமிழகத்தில் இருந்தன. தவிர, அப்போது ஆட்சியில் இருந்த பேராயக் கட்சியும் பெரிதும் விடுதலை உணர்வால் உந்தப்பட்டுத் தமிழை முன்னெடுத்துச் செல்லுவதாய்த் தான் செயற்பட்டு வந்தது. அதனால் 67 தொடங்கும் வரை, இன்னுஞ் சொன்னால், எழுபதுகளின் முடிவுவரை கூட நிலை ஒன்றும் பெரிதாய் மாறவில்லை; மாநிலமெங்கும் 80 மடிக்குழைப் பள்ளிகளே இருந்தன. இன்றோ, மாநிலமெங்கும் 6500க்கும் மேற்பட்ட மடிக்குழைப் பள்ளிகள் இருக்கின்றன. தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 50 மேனி இருக்குமா என்பது கேள்விக் குறியே! (அதோடு, இன்றைக்கு மடிக்குழைப் பள்ளி நடத்துவோரின் கூட்டமைப்பு பணமும் வலியும் கொண்ட அமைப்பாக, வழக்குமன்றம், சட்டப் பேரவை போன்றவற்றை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இவரைச் சாய்க்காமல், ஒரு மண்ணும் தமிழகத்தில் செய்யமுடியாது; தமிங்கிலரைத் தொடர்ந்து உருவாக்குவதே இவரின் பணி.)
தமிழ் மாநிலத்தில் தமிழில் படிப்பது தொலைந்தது மட்டுமல்லாமல், தமிழே படிக்காமல் (அதாவது மொழியாய்க் கூடப் படிக்காமல்) பிரஞ்சு, சங்கதம் என்று வெறும் மதிப்பெண்ணிற்காகப் மட்டுமே படிக்கும் தற்குறிகளாய் மாறிப் போன தமிழ் இளைஞர் 20, 30 இலக்கத்தை நெருங்குவர். தம் வீட்டு வேலைக்காரர், தம் அடுக்குவீட்டுக்கு அருகில் உள்ள துணிதேய்ப்பவர், தம்மைப் பள்ளிக்கு இட்டுச் செல்லும் தானி ஓட்டுநர், எனத் தாழ்நிலை வேலையாளருடன் பேசுவதற்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இவர் தமிங்கிலராய் ஆகாமல் வேறு எப்படி ஆவர்? மேலே முடிதிருத்தகத்தில் கோவப் பட்ட இளைஞரும் இத்தமிங்கிலரில் ஓர் உறுப்பினர் தான்.
பணம் சம்பாரிப்பதற்காக தமிழ்நாட்டுக் கல்விப் பொள்ளிகையைக் காற்றில் பறக்கவிட்ட கழக அரசுகளே தமிங்கிலரை உருவாக்கியதில் பெருங் காரணம் என்பதை வேதனையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. (இளமையில் 67- ல் கழக அரசு ஏற்பட வேண்டும் என்று பெரிதும் பாடுபட்ட என்னைப் போன்றவர் மனம் வெதும்பி இப்பொழுது நிற்க வேண்டி யிருக்கிறது. உண்மையான திராவிடக் கொள்கையில் ஒரு பிடிப்பு இருந்திருக்குமானால், இப்படி இவர் சோரம் போவாரா?)
இன்னொரு சிந்தனையும் எழுகிறது. அந்த முடிதிருத்தகத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் தமிழ்நாடெங்கணும் நடக்கின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை நிறுத்த முயற்சிகள் செய்திருக்கிறோம்? கூடிவரும் ஆங்கிலத் தாக்கத்தை அப்படியே அடிமையாய் ஏற்றுக் கொள்ளுவதைத் தவிர, அதனால் விளையும் தமிங்கில நோய் எங்கணும் பரவ நாம் தரும் பங்களிப்பையும் தவிர, நம்மைப் போன்றோர் என்ன செய்துள்ளோம்?
வெள்ளைக்காரன் ஆண்டிருந்த காலத்தில் மகிழ் குழும்புகளின் (ஜிம்கானா, காசுமாபாலிடன் போன்றவை) நுழைவாயிலில் "Indians and dogs are not allowed" என்று எழுதிப் போட்டிருந்ததாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்நிலை மீண்டும் இப்பொழுது வருகிறது அல்லவா? "Tamils and dogs are not allowed" என்று அந்த முடிதிருத்துக் கடையில் நேரடியாய் எழுதிப்போடவில்லை தான்; ஆனாலும் நடைமுறையில் அதுதானே இருக்கிறது?
இன்றையத் தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாகச் சென்னை போன்ற பெரு நகரங்களில், எந்தவொரு அலுவத்திலும் (அது தனியாராய் இருந்தாலும் சரி, அரசினராய் இருந்தாலும் சரி) தமிழில் கேள்வி கேட்டால், நம்மைத் தள்ளித் தான் வைக்கிறார். ஆங்கிலத்தில் கேட்டால் ஏதோ ஒரு மறுமொழி, இணங்கியோ, இணங்காமலோ கிடைக்கிறது. இதே போல சென்னை அடையாற்றில் உள்ள ஒரு மடிக்குழைப் பள்ளியில் ஒருமுறையும், மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்திலும் தமிழில் தங்களுக்குள் உரையாடிக் கொண்ட சிறுவர் தண்டனை பெறத் தான் செய்தனர். அங்கும் "Tamils and dogs are not allowed" என்பது தானே நடைமுறைப் பொள்ளிகையாய் (policy) இருந்திருக்கிறது? அப்புறம் என்ன, வேண்டிப் பெற்ற விடுதலை? "சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்?"என்ற மன்றாட்டு?
நன்றாக நினைவுக்கு வருகிறது நான் பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் (1965 - 70) விடுதிகளுக்கு வரும் நாட்டுப்புற மாணவர்களில் பலர், தமிழ்மட்டுமே தெரிந்த தம் பெற்றோரை மற்றோரிடம் அறிமுகம் செய்ய வெட்கப்பட்டு ஒதுக்கித் தள்ளிய பழக்கம் இன்றளவும் மாற வில்லையே?
ஒரு காலத்தில் ஐயா என்று மரியாதையுடன் அழைக்கப் பட்ட தமிழாசிரியர் இன்றைக்கு தாளிகை, திரைப்படம், தொலைக் காட்சி எல்லாவற்றிலும் கேலிக்கு ஆளாகும் மாந்தராகத்தானே காட்டப் படுகிறார்? தமிழாசிரியர் கேலிக்குரிய மாந்தரானால், அப்புறம் தமிழும் கேலிப்பொருளாய் மாணவரிடையே ஆகிவிடாதோ?
விடுதலைக்கு முன்னால் வெள்ளைக்காரத் துரைக்கு எழுத்தராய் (clerk) தமிழர் வேலை செய்தது போல, தேயிலையைத் தவிர வேறு எதுவும் பெரிதாய் விளைவிக்காமல், வாழ்க்கைத் தேவையான பலவற்றையும் இறக்குமதி செய்துகொண்டு, அதற்கு ஏந்தாக ஏராளமான எழுத்தர்கள், அரசதிகாரிகள், இலடண்டனுக்கான முகவர்கள் எனப் பழகிய குடியேற்ற காலத்து இலங்கைத் தீவுப் பொருளாதாரம் போல, எங்கோ இருக்கிற புத்தாக்கத்திற்கு, இங்கிருந்து சேவைசெய்யும் பொதினச் செலுத்த வெளியூற்று (business process outsourcing) புற்றீசல் போலத் தமிழகத்தில் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் "எந்தத் தொழில் துறை அறிவும் தேவையில்லை, வெறுமே ஆங்கில பேசத்தெரிந்தால் போதும், நீங்கள் கூலி எழுத்தராய் ஆகிச் சம்பாரிக்கலாம்" என்று ஆசைகாட்டி, நுனிநாக்கு ஆங்கிலம் பேச வைக்கும் அளவுக்கு உள்ளூர் மனவியலை மாற்றியதை என்ன சொல்லுவது?
ஆங்கிலத் தாக்கத்துக்குக் கொடிபிடிக்கும் தமிங்கிலகம் என்ற நாட்டிற்குக் கீழ் தமிழகம் என்ற நிலம் குடியேற்ற நாடாகத் தானே இருக்கிறது? வெள்ளைக்காரன் காலத்தில் நாடு அடிமைப் பட்டிருந்ததற்கு என்னென்ன அடையாளங்கள் இருந்தனவோ, அவை அத்தனையும் மீண்டும் வந்தாயிற்று அல்லவா? என்ன, இந்த முறை தமிழரை ஆள்பவர், தமிழரே போலும் இருக்கிறார். அதன் காரணமாகவே, அவர் ஆட்சி இன்னும் முற்றாளுமையோடு இருக்கிறது. "மக்களே போல்வர் கயவர்" என்றார் வள்ளுவர். தமிங்கிலருக்கும் தமிழருக்கும் வேறுபாடு தெரியாத வகையில் பல இடத்தும் நாம் தடுமாறுகிறோம்.
"தமிழில் தலைப்பு வையுங்கள்; கேளிக்கை வரி விலக்குத் தருகிறோம்" என்ற அளவுக்கு ஓர் அரசு போகுமானால், இங்கே ஆங்கில, தமிங்கிலத் தாக்கங்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?
"தமிழில் பேசு; தங்கக் காசு தருகிறோம்" என்று ஒரு தொலைக்காட்சியினர் சொல்லும் அளவுக்குத் தமிங்கிலம் இங்கு இயல்பாகிப் போனதே? அந்தத் தொலைக்காட்சி தவிர மற்றெல்லாத் தொலைக் காட்சி, பருவெண் மட்டுழைத்த (frequency modulated) வானொலி நிலையங்கள் என எல்லாவற்றிலும் தமிங்கிலம் தடையின்றிப் புழங்குகிறதே?
இதற்கிடையில் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கும் வகையில் 12/06/2006ல் கொண்டுவரப்பட்ட தமிழகச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட (petition) ஆகஸ்டு 23ம் தேதி உயர்நய மன்றம் கூறிய தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நயமன்றம் தள்ளிவைத்தது.
முதல்வர் பெருமைப் பட்டுக் கொள்ளுகிறார். முன்னே 20 ஆண்டுகள் இரு கழக ஆட்சியில் கல்வியில் நடந்த அவலங்களை அவர் எண்ணிப் பார்ப்பாரோ?
தமிங்கிலம் என்று சொன்னவுடன், தேனிசைச் செல்லப்பா பாடிய இன்னொரு பாடலின் தொடுப்பு நினைவிற்கு வருகிறது.
வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ? - நல்
இணக்கம் தருதமிழில் இருகை கூப்பிநின்று (வணக்கம்)
- தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வரிகள்.
அன்புடன்,
இராம.கி.

1 comment:

Unknown said...

இந்த சிறந்த கட்டுரைக்கு நன்றி ஐயா!!