Saturday, September 12, 2020

Buoy

ஒரு நண்பர் ஒருவர் தனிமடலில் ”Buoy” என்ற சொல்லுக்கான தமிழ்ச்சொல் கேட்டிருந்தார். ”மிதவை எனும் சொல் தனக்குச் சரியாய்ப் படவில்லை” என்றும் சொல்லியிருந்தார். கூடவே, “சுடர் மிதவை எனலாமா?” என்றும் கேட்டிருந்தார். என் பார்வையைக் கீழே சொல்கிறேன்.

தென்பாண்டிக் கடற்கரைக்கு அருகில், முத்துக்கள் கிளிஞ்சல்களுக்காக முக்குளிக்கும் போது, மீண்டும் மீண்டும் இறங்கும் கடலடி இடங்களை நீர்மட்டத்தில் அடையாளங் காட்டும் தேவை இயல்பாக எழுந்தது. எனவே இதற்குத் துணையாக ஒரு வேலையைச் செய்தார். முதல்நாள் முத்துக் குளித்த இடத்தில், ஒரு கல்லை இறக்கி (இதுபோன்ற நங்கூரக் கற்களை இராமேசுரத்தில் கடலடித் தொல்லாய்வர் கண்டுபிடித்தார். கல் நங்கூரங்கள் தென்பாண்டிக் கடற்கரை நெடுகிலும் உண்டு.), அக்கல்லோடு ஒரு கயிறைக் கட்டி, கயிற்றின் இன்னொரு முனையில் ஒரு கிண்ணத்தை முடிந்து வைத்து இறக்குவார். கயிற்றின் நீளம் கடலின் ஆழம்பொறுத்து வேறுபடும். கல் கடலடித் தரையிலும், கிண்ணம் கடல்நீர்ப் பரப்பின் மேலும் இருக்கும். 

கிண்ணம் கல்லிருக்கும் இடத்திற்கு நேர்மேல் மிகவும் அலைபாயாது மிதந்து (மீ>மீது>மித) நிற்கும். பகல் நேரங்களில் கிண்ணத்தை அடையாளங் காண்பது சரவலில்லை. மாறாய், கருக்கல் நேரங்களிலும், மூட்ட நேரங்களிலும் இது கடினம். எனவே கிண்ணத்தினுள் ஒரு விளக்கும் வைப்பதுண்டு. அடுத்த நாள் முத்துக்குளிக்க வரும் வரை விளக்கு எரியும்படி மீன் கொழுப்பு கிண்ணத்தில் வைக்கப் பட்டிருக்கும்  கலங்கரை விளக்கம் (=கலத்தை அழைக்கும் விளக்கம்) போல், மிதக்கும் விளக்கங்களை ”இடங்கரை விளக்கம், முக்குளி விளக்கம் அல்லது ஆழிட விளக்கம்” என்று சொன்னால் விளங்கிவிடும். கீழுள்ள ஆங்கிலப் பெயரிடலையும் கவனியுங்கள்.

buoy (n.) "float fixed in a place to indicate the position of objects underwater or to mark a channel," late 13c., boie, probably from Old French buie or Middle Dutch boeye, both of which likely are from Proto-Germanic *baukna- "beacon, signal" (see beacon). OED and Century Dictionary, however, suggest it is from Middle Dutch boeie or Old French boie "fetter, chain" (see boy), "because of its being fettered to a spot."

beacon (n.) Old English beacen "sign, portent, lighthouse," from West Germanic *baukna "beacon, signal" (source also of Old Frisian baken, Old Saxon bokan, Old High German bouhhan); probably from Proto-Germanic *baukna- "beacon, signal," from suffixed form of PIE root *bha- (1) "to shine." Figurative use from c. 1600.

மேலேயுள்ள வரையறைகளைப் படித்தால், “கிண்ணம் நீரில் மிதப்பது விதப்பல்ல. கிண்ணத்துள் விளக்கமிருப்பதே விதப்பு” என்பது புரியும். இன்று கொழுப்பு விளக்கங்களுக்கு  மாறாய், மின்கல விளக்கங்களை ஏற்றுவார். ஒரு துறைமுகத்தில் கப்பல் அணைவதற்கான பாதை இதுபோன்ற விளக்கங்களால் அடையாளங் காட்டப்படும். (பறனை நிலையங்களில் ஓடுபாதை காட்டப்படுவது போல் இது அமையும்.) என்னைக் கேட்டால் buoy என்பதற்கு ”விளக்கமே” போதும்.  மிதத்தலைச்  சொல்லத் தான் வேண்டுமென எண்ணினால் ”மீதவிளக்கம்” எனலாம்.  


1 comment:

KILLERGEE Devakottai said...

தங்களது விளக்கம் அருமை ஐயா.
- கில்லர்ஜி