Saturday, September 05, 2020

கபிலரும் சாங்கியமும் - 1

 ”கபிலர்->கபில், கபிலவஸ்து.. நம்மிடமிருந்து இச்சொல் வடக்கே சென்றதற்கு ஏதேனும் வரலாறுண்டா ?” என்ற கேள்வியை நண்பர் நாக.இளங்கோவனின் முகநூல் பக்கத்தில் புறம் 53 ஐ விளக்கிய இடுகையில் 2020, 16 ஆகத்தில் இன்னொரு நண்பர் விஸ்வநாதன் எழுப்பினார். ”கபிலர்” என்ற சொல்லின் வேர்பற்றி விளக்கும் படி நண்பர் இளங்கோவனும் கேட்டிருந்தார்.  பல்வேறு கபிலர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார். அவரில் சிலரை மட்டும், குறிப்பாகச் சாங்கியத் தொடர்பு கொண்ட ஆதிக் கபிலரைப் பற்றி,  இங்கு பார்ப்போம். ”கபிலரின்” சொற்பிறப்பைக் கடைசியில் அலசுவோம். பலருமறிந்த சங்க காலக் கபிலர் பற்றிச் சொல்ல நிறைய இருப்பினும் ஏற்கனவே அவர் பற்றிய செய்திகள் இணையத்தில் ஏராளம் உள்ளதால்,  என் பார்வையில் குறைந்த சிலவற்றையே அவரையொட்டி இங்குசொல்ல விழைகிறேன்.

 1. சங்கநூல்களில் 235 பாடல்கள்  பாடிய கபிலரின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 197-143 ஆகலாம். பதிற்றுப்பத்தில் 7 ஆம் பத்தைப் பாடி, செல்வக் கடுங்கோ வாழியாதனிடம் (பொ.உ.மு. 164-140) நூறாயிரம் காணம் பொன்னும்,  "நன்றா" மலை மீதேறி அவன் கண்ணுற்ற அளவு கொடுத்த நாட்டையும் கபிலர் பரிசிலாகப் பெற்றிருக்கிறார். கபிலரோடு பரணரையும் சேர்த்தே தமிழறிஞர் இணையாய்ச் சொல்வர். அதேபொழுது பரணரைவிடக் கபிலர்  மூத்தவராகவே தெரிவார். பரணரின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு.180-123 ஆகும். பரணரைப் பாணர் என்றும் பழஞ்சுவடிகளில் படிக்கலாம். பாணரெனில் அவர் இயற்பெயர் தான் என்ன? - தெரியாது. கபிலர், பரணர், மாமூலனார், இளநாகனார், ஔவையார் ஆகியோரை ஒதுக்கிப் பார்த்தால், சங்க இலக்கியம் மெய்யாகவே வறிதாகி விடும். 

2. புறம் 200 ஆம் பாட்டில் ”யானே பரிசிலன் மன்னும் அந்தணன்” என்றும்,  புறம் 201 இல் ”அந்தணன் புலவன்” என்றும் கபிலர் தன்னை அடையாளங் காட்டிக் கொள்வார்.  "புலனழுக்கற்ற அந்தணாளன்" என மாறோக்கத்து நப்பசலையாரும் (புறம் 126, 174) கபிலரைப் பாராட்டிக் கூறுவார். [பெருங்குன்றூர்க் கிழாரும் (பதிற்.85),  பொருந்தில் இளங்கீரனாரும் (புறம் 53) கபிலரின் புலமையைப் பாராட்டியுள்ளனர்.] தந்தையை இழந்த பாரிமகளிரை ஓர் அந்தணர் வீட்டில் இறுத்தியது, “மகட்கொடைக்கு ஆட்படாது இருக்க” என்றே பல அறிஞருஞ் சொல்வர். இக்கூற்றுகளைப் பார்க்கையில், அந்தணர் என்பது இங்கு பார்ப்பனரைக் குறிப்பதாகவே கொள்ளலாம்.  தமிழ் நாவலர் சரிதையில், கபிலர் பாடியதாய் 

நெட்டிலை யிருப்பை வட்ட வான்பூ 

வாடாதாயிற்

பீடுடைப்  பிடியின் கேடேய்க் கும்மே 

வாடிலோ,

பைந்தலைப் பரதவர் மனைதொறும் உணங்குஞ்

செந்தலை யிறவின் சீரேய்க் கும்மே

என்ற தனிப்பாடலுண்டு. இது எந்தத் தொகைநூலிலும் வாராத பாட்டு. இப் பாவின் சிறப்பைக் கருதி, 12 ஆம் நூற்றாண்டு திருவாலவாயுடையார் புராணத்தின் 27 ஆம் பகுதியான ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் 3 ஆம் பாட்டிலும் (கீழே வருவது) இதே செய்தியை பெரும்பற்றப் புலியூர் நம்பி மேற்கோளாய்க் குறிப்பார். 17 ஆம் நூற்றாண்டு திருவிளையாடல் புராணத்திலும், திருவாலவாயுடையார் புராணம், கற்பனை குறைந்து, உண்மைச் செய்திகள் மிகுந்தது.  . 

தீதிலா மதூக நீழல் நெட்டிலை இருப்பை என்றோர் 

காதல்கூர் பனுவல் பாடும் கபிலனார் பிறந்த மூதூர்

சோதிசேர் வகுள நீழல் சிலம்பொலி துலங்கக் காட்டும்,

வேதநா யகனார் வாழும் வியன்திரு வாத வூரால்

என்னும் திருவாலவாயுடையார் புராணப் பாட்டின் வழி  மாணிக்கவாசர் பிறந்த அதே பாண்டிநாட்டுத் திருவாதவூரில் தான் சங்ககாலக் கபிலரும் பிறந்தார் என்றறிகிறோம். ஒருவேளை  மாணிக்கவாசகரைப் போல், கபிலரும் அமாத்திய (அமைச்ச) குலத்தில் பிறந்தாரோ, என்னவோ? தெரியாது. ஏனெனில் வாசகர் போலவே இவரும் பல்வேறு அரசரின் ஊடே வெகு எளிதில் புகுந்து வெளிவந்து விடுகிறார். பொ.உ. மு.143 இல்,  திருக்கோவலூருக்கு அருகில் தென்பெண்ணை ஆற்றின் நடுவில், கபிலர் குன்றில், உண்ணா நோன்புற்று கபிலர் இறந்திருக்கலாம் என்பர்   ஏன் இப்படி நோன்புற்று உயிர் துறந்தார் என்பது நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் பாரி மகளிரை விச்சிக் கோனுக்கும், இளங்கோவேளுக்கும் மணமுடிக்க இயலாத நிலையில் நோன்புற்றார் என்பதே நம்பமுடியாதுள்ளது.  பின்னால் ஒரு பார்ப்பனன் பாரிமகளிரை மணந்தான் என்று சிலர் சொல்வதுங் கூட பெரும்பாலும் ஊகமாகவே தெரிகிறது.  

3. ”சிலம்பின்” காலம், செங்குட்டுவன் காலம், நெடுஞ்சேரலாதன் காலம் ஆகியவற்றைக் கணித்தே புகழூர்க் கல்வெட்டு குறிக்கும் செல்வக் கடுங்கோ வாழியாதனின் காலத்தை நாம் கணிக்கமுடியும். அவன் காலங்கொண்டே கபிலரின் காலங் கணிக்கிறோம். தவிர, ஓர் ஆரிய அரசனுக்குத் தமிழ்கற்றுக் கொடுக்கக் குறிஞ்சிப்பாட்டு பாடினாரே, அது பெரும்பாலும் கடைசி மோரியன் பெருகதத்தனுக்கே (ப்ரகத்ரதன்; பொ.உ.மு.187-185) என ஆய்வு வழி தெரிகிறது. இவனை யாழ் பிரமதத்தன் என்னும் குறிப்புமுண்டு. இவன் குறுந் தொகையில் 184 ஆம் பாட்டைப் பாடியுள்ளான். கலிங்கக் காரவேலனின் (பொ.உ.மு. 185-173) சமகாலத்திலும் கபிலர் இருந்துள்ளார். அந்துவஞ்சேரல் இரும்பொறை கொங்குக் கருவூரை மீட்டதையும் பார்த்துள்ளார்.   

4. சங்ககாலக் கபிலரால் பாடப்பெற்றோர் அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர் - அகுதை, இருங்கோவேள், ஓரி, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக் கோன், வேள்பாரி, வையாவிக் கோப்பெரும்பேகன், மேற்சொன்ன பெருகதத்தன் ஆகியோராவார். கபிலர் பாடல்களில் வேள்பாரியின் தொடர்பால் பாடியதே அதிகம்.  சங்க இலக்கியத்தின் பெரும்பாலான பாடல்கள் பொ.உ.மு. 200 இலிருந்து பொ.உ.100 க்குள்  எழுந்திருக்கலாம் என்றே சொல்லமுடிகிறது இதற்கும் முந்தையப் பாடல்களும் சங்க இலக்கியத்திலுள்ளன. சங்க இலக்கியத்தின் காலத்தைப் பெரும்பாலும் பொ.உ.மு 600 இலிருந்து பொ.உ.150 வரை நான் கொண்டு செல்வேன். பொ.உ.மு.300-பொ.உ.300 என்ற காலத்தை நான் ஏற்பதில்லை.. 

மேற்சொன்ன கபிலர் தவிர, தொல்கபிலரென இன்னொருவரும் இருந்துள்ளார். அவர் பாடியதாய், அகம் 282, குறு, 14, நற். 114, 276, 328, 399 என 6 பாக்களுண்டு. அவையெலாம் வேந்தரையோ, வேளிரையோ பேசாது, பெரும்பாலும் சங்க காலத் தொடக்கக் குறிஞ்சிப் பாக்களாய் அவை தோற்றும். (பொ.உ.மு.600 க்கும் முந்தைய சனபதக் காலப் பாக்களாய் அவையிருக்கலாம்). ஆழ்ந்து படித்தால் தொல்கபிலர் என்பார் பாரிக் கபிலருக்கு முந்தையவராகவே தோற்றுகிறார். இவ்விரு கபிலர் போக, ஆவூர் மூலங்கிழார் பாடிய, கௌணிய விண்ணந் தாயனைக் குறித்த, புறம் 166 ஆம் பாடலில்  ”சாங்கியக் கபிலர் பற்றிய செய்தியும்” பெயரின்றி வரும். தொல்கபிலரும்  சாங்கியத் தோற்றுநரான ஆதிக்கபிலரும் ஒருவரா? தெரியாது. (இருப்பினும் ”தொல்” முன்னொட்டு எதைக் குறித்தது? - என்ற கேள்வி நம்மைக் குறுகுறுக்க வைக்கிறது.)  அடுத்த பகுதியில் சாங்கியக் கபிலர் பற்றி நிறையவே பேசுகிறேன். 

அன்புடன்,

இராம.கி.


3 comments:

Nilavan and friends said...

சங்க கால புலவர் மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் அவர்களுக்கு பிறகு மகதத்தை ஆண்ட மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார். மாமூலனார் முதிய வயதில் சோழன் கரிகாலன் பற்றி பாடியுள்ளார்.பரணர் தன் இள வயதில் கரிகாலன் பற்றி பாடியுள்ளார்.சேரர்களில் கரிகாலனால் நெடுஞ்சேரலாதன் வெல்லப்பட்ட பிறகு சில காலம் கழித்து அறியனை ஏறுபவன் சேரன் செங்குட்டுவன். செங்குட்டுவன் பற்றி பரணர் பாடியுள்ளார். இதன் மூலம் கரிகாலன் சேரனை விட சில வருடம் முதியவன் என்பது தெளிவாகிறது. சேரன் செங்குட்டுவன் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு ஆகும் இதற்கு சான்று கூறுங்கள் ஐயா.

சேவற்கொடியோன் said...
This comment has been removed by the author.
Nilavan and friends said...

ஐயம் தீர்தமைக்கு நன்றி ஐயா.