Friday, April 26, 2019

காப்பியம் தமிழே - 3

கல்லுதல்= ஓசையிடல். ஒருகாலத்தில் திண்ணைப்பள்ளியில் கல்லிக் கல்லியே (=ஓசையெழுப்பியே) சிறார் படித்ததால் கல்தல் கற்றலாயிற்று. கல்வியும் ஆயிற்று. (நானும் சிற்றகவையிற் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தான் படித்தேன். 3 ஆம் வகுப்பில் அரசினர் கல்விமுறையில் வரும் தனியார் பள்ளிக்கு மாறினேன்.) திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியரும், ஓரிரு சட்டாம்பிள்ளைகளும் இருப்பர். எழுத்து, செய்யுள், கணக்கு எல்லாவற்றையும் ஆசிரியரோ, சட்டாம்பிள்ளையோ சத்தமிட்டே சொல்லித் தருவர். மாணவர் திருப்பிச் சொல்வர். ”அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம் ... ஓரோண் ஒண்ணு, ஈரோண் ரெண்டு...” என்றே பயின்றோம். பள்ளிமுழுதும் கல்லெனும் ஒசை கேட்கும். (இன்றும் என் வீட்டிற்கருகில் CBSE பள்ளியில் கல்விச்சத்தம் ஓரோ பொழுதில் வானம் பிளக்கும். முகனக் (modern) கல்வி, ஓசையின் பங்கைப் பெரிதுங் குறைத்தாலும் முற்றிலும் விலக்கவில்லை.)

கற்றலைக் கத்தலென்றும் பேச்சுவழக்கில் சொல்வார். கத்தல்= உரத்தபேச்சு, அலறல். ”கத்து கடல் சூழ்நாகை காத்தான் தன் சத்திரத்தில்..” எனும் தனிப் பாடல் கேட்டிருக்கிறீர்களா? கல் ஒலிக்குறிப்பு கொல்லெனவுந் திரியும். (கல் வேர் பற்றி கு. அரசேந்திரன் 4 அரிய நூல்கள் எழுதினார். படிக்காதவர் படியுங்கள். சொற்பிறப்பியல் புரியும்.) கத்தல்= ஓதல். படிப்புக்குக் கல்விப் பெயர் சத்தங் கருதி ஏற்பட்டது. கல்லோடு உகரவீறு சேர்ந்து கல்வாகிப் பின் கல்வியானது. கல்>கல்வு>கல்வி. (ஒப்பு நோக்குக: செல்>செல்வு (அழகு) >செல்வி.) ஏறத்தாழ எல்லாத் திராவிட மொழிகளிலும் கல்வியோடு தொடர்புடைய சொல்லுண்டு. கல்வியில் விளைந்த கூட்டுச்சொற்களும் பல. அவற்றை இங்கு நான் விவரிக்கவில்லை. கற்பு= படிப்பு. இதுவே அதன் முதற்பொருள். மாறாக பெண்ணின் மணவொழுக்கம் தொடர்பாய்ப் பிற்காலம் பேசியது பொருள்மாறிவந்தது. உடல்வரிதியாய்ச் சொல்வது முறையற்றது. பெண்ணுக்கோர் ஒழுக்கமெனில் ஆணுக்கும் அதுவுண்டு பெரியோரும், பெற்றோரும், கணவனும் கற்றுத் தந்ததற்கு மாறாது வாழ்தலே சங்க காலத்தில் கற்போடு வாழ்தலாகும். கற்பு= கற்றது. இதற்குச் சொல் திறம்பாமை என்றும் பெயருமுண்டு.             

கல்= பேரோசைக் குறிப்பு; கல்லாம்>கல்லம்= ஒலி கேளாதவன். கல்லல்= ஒரேநேரத்தில் பலர்பேச எழுமொலி. அதனாலெழும் குழப்பம், கல்லவடம்= கல்லும்வட்டம், பறைவகைகளில் ஒன்று; கல்லவல்= கற்கவல்ல பா. கல்லார்= படிக்காதவர். கல்லி= படித்தவன். குழந்தை ”கல்லியாய்ப் பேசுது.” கல்லி> கெல்லி>கேலி= நகையாட்டு. கல்லோலம்= ஒசும் அலை. கலகல= ஒலிக் குறிப்பு. கலகம்= சத்தமிட்டுச் சண்டையிடல். கலித்தல்= ஒலித்தல்; கலியோசை= துள்ளலோசை. ”முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணியெழுந்தது” என்பது சிலம்பின் மங்கலவாழ்த்து. கலிப்பு= ஒலிக்கை. கலியோடு எதுகைசேரக் கலிபிலி= ஆரவாரம். கலி+யாணம்= கலியாணம். தலைவன் தலைவி கால்கட்டிற்கு (யாணம்= கட்டு) உறவினர், நண்பர், ஊரார் சேரின், கலியெழும். கலின்கலின்/கலீர்கலீர்= ஓசைக்குறிப்பு. கல்>கலுழ்= அழல். கழறல்= சத்தமாய்ச் சொல்லல் க(ல்)ம்பல்= பேரொலி எழுப்பல். மராத்தியில் கம்பல்= ஊதுசங்கு; கம்பலை= அழுகொலி. குக்குக், கக்கக், கெக்கெக், கொக்கொக் எனவும் ஒலிக்குறிப்பெழும். குக்குக்கென்பதால் தான் கோழி குக்குடமானது. கக்கல்= தெற்றிப் பேசுவோர் இடையிலெழுப்பும் ஒலிக்குறிப்பு. 

கல், கர்ரென்றுந் திரியும். கரகர= ஒலிக்குறிப்பு. முடிவில் கரைதல்= சத்தமிடல், அழுதலென்றும் பொருள்கொள்ளும். விதவிதமாய்க் ககரத்தில் ஒலித்தலைக் குறிப்போம். குதிரை கனைக்கும். கோழி கொக்கரிக்கும். குயில் கூவும். நாய் குரைக்கும், கழுதை கத்தும். கழல்>கழற்று>கழத்து>கத்து. கத்துவது சிலபோது கதலும். கதல்>கதறு= உரக்க அழுதல், கதலுதல்= நடுங்கல், அசைதல்; கதித்தல் = ஒலித்தல்; கதிதம்= உரைக்கப்பட்டது; கதை= உரையாடல் ஈழத்தில் கதைத்தல் என்பது இதுவே. story சொல்வதல்ல. கல்தல் கத்தலாகிப் பின் கதமெனும் சொல்லாகும். பாகதம்= பரந்த பேச்சு, நாவலந் தீவின் வடபுலத்திற் பெரிதும் பரவிய பேச்சு, சம்கதம்>சங்கதம்= கலப்புப்பேச்சு. நாவலந்தீவின் பலமொழிகளிலிருந்து சொற்கள், இலக்கணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கலந்து புனைந்த பேச்சு, பின் இது செம்கதம்>செங்கதம்= செம்பேச்சு என்றாகும். standardized speech, (செந்தமிழ் போல. மொள்>மொழு>மொழி. மொழு>மிழு> மிழற்று= பேசு. தம்மொழி தமிழி>தமிழாயிற்று. their language.)

தமிழிசையின் எழுசுரங்களின் சொற்பிறப்பு தெரியுமோ? குரல் என்பது அடிப்படை ஒலி (குர்ரெனும் ஒலிக்குறிப்பில் பிறந்தது) குரத்தம் (= ஆரவாரம்), குரம் (= ஒலி), குரவை>குலவை (= மகிழ்வொலி), (தென்பாண்டிப் பெண்களின் குலவை தெரியுமோ?) குருமித்தல் (= பேரொலிசெய்தல்), குரைத்தல்> குலைத்தல் (= ஆரவாரித்தல்), குலிலி (= வீராவேச ஒலி), குழறல்/குளறல் (= பேச்சுத் தடுமாறல்), குளிறல் (= ஒலித்தல்), குறட்டை (= உறக்கத்தூடே மூசும் ஒலி) எனும் சொற்களை எண்ணின், குர் ஒலிக்குறிப்பு புரியும்.) துத்தம், குரலுக்கு உயர்ந்த ஒலி. குரலொடு காய்ந்தது காய்க்கிளை. அதாவது குரலுக்குப் பகையொலி. குரலுக்குப் பக்கம் உழை.= குரலுக்கு நள்ளிய ஒலி (நள்ளல்= நெருங்கல்) குரலுக்கிணங்கிய ஒலி இளி. தாரத்திலும் வெளிரிய ஒலி விளரி. குரலிலும் (மிகமிக) நீண்ட ஒலி தாரம்

கல்தல் போல் சல்தல்வினை எழுந்து சத்தமெனும் பெயரை உருவாக்கும். (அதைச் சப்தமாக்கிச் சங்கதம் பயன்கொள்ளும்.) சரகமும் சத்தமும் ஒரே பொருள் குறிக்கும் ஒலிச்சொற்கள். சகரம் தவிர்த்த அத்தமும் சுருதி குறிக்கும். (சென்னைப் பல்கலையின் முன்னாள் பூதியற் (physics) பேராசிரியர் வீர பாண்டியன். http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R.) தமிழிசைக் கருத்தே இன்னொரு விதமாய் மணிப்பவள நடையில், சங்கதத்துள் நுழையும். குரல்= சத்தம்>சக்தம்>சக்சம்>சக்ஷம்>சட்சம். துத்தம்= உயரொலி= பேரொலி= விடையொலி, விடைமம்>விடமம்>வ்ரிஷமம்>ரிஷபம். கய்க்கிளை> காய்க்கிளை= பகையொலி =காய்ந்தஆரம் =காய்ந்தாரம்>காந்தாரம்; உழை= உள்ளொலி =நட்டுமம்>மத்திமம், இளி= இணங்கொலி= பொஞ்சொலி= பொஞ்சுமம்> பஞ்சுமம். விளரி= விளரொலி= தய்வத ஒலி= தய்வதம்; தாரம்= உச்சவொலி= நிவந்தஒலி= நிவதம்>நியதம்>நியாதம்>நிஷாதம். ஏழுசுரங்கள் பற்றிய என் முழுத்தொடரையும் படியுங்கள். நான்சொல்வது புரியும்.

http://valavu.blogspot.com/2008/03/1.html
http://valavu.blogspot.com/2008/03/2.html
http://valavu.blogspot.com/2008/03/3.html
http://valavu.blogspot.com/2008/03/4.html

க என வாய்திறந்து (அங்காத்து) தொடர்ந்து ஒலிக்கவேண்டுமெனில் நெடில், அளபெடை என நீண்டுகொண்டே போகும். (அளபெடை= அளவு மிக்கெடுத்தல் உலகியல் அளபெடையைப் பலவிடங்களில் பார்த்துள்ளோம். வீதியில் தயிர் விற்கிறவள், “தயிரோஒஒஒ தயிரு” என்கிறாளே? கோயிலில் தேவாரம் பாடுவார், ”பொன்னாஅர் மேனியனேஎஎ!....” என்கிறாரே? தொலைவில் போகின்ற பெரியவரை, “அண்ணோஒஒ....ய்” என விளிக்கிறோமே? அழுகையிற் கூட அளபெடை பயில்கிறோம். இது பறவைகளைப் பார்த்து வந்தது. கொக்கரக்கோஒஒ என்கிறது கோழி. காகா என்கிறது காக்கை. காள்காள் என்கிறது கழுதை. இதனாலேயே கழுத்தைக்குக் காளவாய் என்றும் பெயருண்டு. காளவாயன் = கூச்சலிட்டுக் கத்துபவன்;

]ககரம் தவிர்த்த இன்னொரு வினையுமுண்டு. ஆ-தல், ஆகாரமிடுதல் என்போம். அதைச் சற்றுதிரித்து ஆதல்>அகவுதல் என்றுஞ் சொல்வோம். (தமிழில் இது பலசொற்களுக்கு ஆகியுள்ளது. ஏறத்தாழ ஒரு மொழியியல் விதியெனலாம். பகல்>பால், அகல்>ஆல், மகன்>மான். நான் 100 சொற்களுக்கும் மேல் பட்டியலிடமுடியும். இது இரு திசைகலிலும் நடக்கும். அகவுதல் ஆ-தல் ஆயிற்றெனலாம். ஆ-தல் அகவுதல் ஆயிற்றெனலாம். இரண்டும் ஒன்றே.  மயில் அகவுதல் என்கிறோமே? அதன்பொருள் அழைத்தல் நாலைந்து ஆண்டுகளுக்குமுன் call centre என்பது பெருவலமாயிருந்தது. அது அகவு மையம்/நடுவம், அகவல்= மயிற்குரல், அழைக்கை, எடுத்தலோசை ”அகவல் என்பது ஆசிரியம்மே”- தொல் பொருள் செய்யுளியல் ,80 ஆம் நூற்பா. அகவற்பாட்டு= ஆசிரியப்பாட்டு. படிப்புச் சொல்லிக்கொடுக்கும் குரல் இழையும். அகவலன்= பாணன்; அகவர்= பாடித் துயிலெழுப்பும் பாணர்; “அகவன் மகளே, அகவன் மகளே!” என்பது ஔவையார்பாடிய குறுந்தொகை 23 ஆம் பாட்டு.]

அளபெடுத்துக் கூப்பிடல் போலவே பொருள்கொண்டது கல்தல்>கா(ல்)-தல். கா(ல்)ச்சுமூச்சு= ஒலிக்குறிப்பு.”காச்சுமூச்சுனு கத்தாதே, பையப்பேசு”- எங்களூர் உரையாடல். கூப்பீட்டுத் தொலைவை தமிழர் நீட்டளவை உணர்த்தியது. தென்புல நெடுந்தொலை வாய்ப்பாட்டில் 500 பெருங்கோல் (தண்டம்)= 62 1/2 கயிறு= 1 கூப்பீடு= 5500 அடி= 1.04167 மைல்= 1.6763595 கி.மீ வடபுல வாய்ப்பாட்டில், 500 கோல்= 31 1/4 கயிறு= 1 கூப்பீடு= 2750 அடி= 0.520835 மைல்= 0.8381798 கி.மீ ஆகும். இதற்கடுத்த அளவையாய்க் கா(ல்)தல் காதம் எனும் பெருந்தொலைவைக் காட்டும்;. காவதமென்றும் திரியும். காவுதலும் கூப்பிடலே. தென்புல வாய்ப்பாட்டில், 4 கூப்பீடு= 1 காதம்= 22000 அடி= 4.166667 மைல்= 6.7050438 கி.மீ. வடபுல வாய்ப்பாட்டில், 4 கூப்பீடு= 1 காதம்= 11000 அடி= 2.088888 மைல்= 3.3525219 கி.மீ ஆகும். காதம்/காவதம் எனும் கலைச்சொல் வடக்கில் குரோசம் என்று பரவியுள்ளது. குரோசம் நம் குரைதல்/கரைதல் (காகம் காகாவெனக் கரைகிறது- to cry) வினையோடு தொடர்பு உற்றது. குரையம்>குரயம்>குரசம்>குரோசம். காதம்/காவதம்/குரோசம் ஆகியவற்றின் வேர்கள் தமிழில்தான் உள்ளன. தேடியறியத்தான் ஆட்களைக் காணோம். சங்கதத்திற்கு தண்டனிடத் துடிக்கிறோம்.

முன்னே சொன்னதுபோல் ஒருவன் இன்னொருவனுக்கு ஒரு நிகழ்வைச் சொல்லுவது கதைத்தல். சொல்லப்படுவது கதை. அதேகதையைப் பலரறியச் சத்தமாய்ச் சொல்வது காதை. காப்பியங்களின் உட் பகுதியாய்க் ”காதை” வரும். காப்பியங்கள் தனித்துப்படிப்பது ஒருபக்கமெனில் எல்லோருமறியக் கூட்டாய்ப் படிப்பதும் கேட்பதும் கூத்தாக்குவதும் இன்றுமுண்டு. கால் வினையின் அடுத்த வளர்ச்சி காள். கால்>காள்>காளம்= ஊதுகொம்பு. காளகம், காகாளம்>காகளம், எக்காளம் என்றுமாகும். ஆங்கிலத்தில் horn. இதிலும் Nostratic தொடர்பிருக்கலாம். பித்தளையில் நீண்ட குழலிசைக் கருவி காளம். கோயில் மேளங்களிலும், நாட்டுப்புற இசையிலும் இக்கருவி பெருவலமாய்ப் பயிலும். புள்ளோசை கூடக் காளமெனப்படும். காகளி = இன்னிசை.

முன்னே சொன்னேன். கற்பு= சத்தமாய்ப் படிப்பது. (கற்புண்டேல் கல்வுமுண்டு. புகரவீற்றுச் சொற்கள் வுகரஈறும் காட்டுவது பன்னூற்றுச் சொற்களிலுண்டு. புகரவீறு மட்டுமே தமிழென்பது ஒருதலைப் பேச்சு.) ’கல்லி’ போல் கல்வி ஒருகாலத்தில் படிப்பையும், படித்தவனையுங் குறித்திருக்கலாம். இக்காலம் படிப்பைமட்டுமே குறிக்கும். பேச்சுவழக்கில் கல்வி>கவ்வி>கவி ஆகிப் படித்தவனைக் குறிக்கும்.. வெட்கத்தை வெக்கம் என்கிறோமே, அதுபோல் இதைக்கொள்ளலாம். ’மெய்யொலி மயங்கல்’ தொல்காப்பியத்தில் வரும். பாகதத்திலும் இப்பழக்கமுண்டு. இலக்கியம், இலக்கணம், யாப்பு, இசை பலவும் படித்தவன் கவி. மோனியர் வில்லியம்சில் gifted with insight, intelligent, knowing, enlightened, wise, sensible, prudent, skillful, cunning, thinker, man of undestanding, leader sage, seer, prophet என்றெலாம் சொல்லி, a singer, bard, poet என்ற பொருள்கள் வேதத்திலில்லை என்றுஞ் சொல்லும். இதுவொரு முகன்மைக் கூற்று. கவியின் முதன்மைப் பொருள் சங்கதத்தின் படியும் படித்தவனே.

கவியின் ஆக்கம் சங்கதத்தில் கவித/கவிதா. தமிழில் தற்பவமாய்க் கவிதை யாகும். கவிதைக்கும் பாட்டுக்கும் வேறுபாடுண்டு. நம்மூர் புதுக்கவிஞர் இவ்வேறுபாட்டை அறிந்தோரோ, என்னவோ தமிழிற் பாட்டு/ பா என்பது எப்போதும், பாடத்தெரிந்தவர் கூற்று. இவர் படித்தவராகத் தேவையில்லை. நம்மூர்க் கல்லாப் பாட்டி பாடுவது கூட பாட்டுத்தான்; பண்தான். பாடத் தெரிந்தவர் பாணர்/பாடினி. இவர் பாடுவது கவிதையில்லை. ஓசையின்றிப் பாட்டில்லை. கவியின் பெருவாக்கத்தைச் சங்கதத்திற் காவ்ய என்பர். காவ்ய - படிப்பது. பாடுவதில்லை. (இராமவதாரம் படிக்கவேண்டியது. பாடவேண்டியது இல்லை. பாடவேண்டுமெனில் கோபால கிருட்டிண பாரதியின் “எப்படிப் பாடினரோ? - வுக்குப் போகவேண்டும்,

காவ்ய என்பதற்கும் அங்கு வரையறையுண்டு. ஆனால் அது செய்யுளாகத் தேவையில்லை. தமிழிற் காப்பியம் என்பது இதுநாள்வரை செய்யுள் தான். முதல்மாற்றம் சிலம்பில் வந்தது உரையிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள். இதை நான் மாற்றலாம் என்கிறேன். கற்பு கப்பாகிப் பின் காப்பாகும். கற்று வந்தது காப்பு. காப்பு+ இயம்= காப்பியம். இதைக் காவ்யத்தின் தற்பவமாய்ச் சொல்வது பிழை. இரண்டும் வெவ்வேறுமுறையில் கல்வு, கற்பு எனும் தமிழ்ச்சொற்களிலிருந்து கிளர்ந்தவை. காப்பியம் இன்றும் தமிழில் உள்ளது காவ்யம் சங்கதத்திலுள்ளது. இதை ஏற்கனவே என் வலைப்பக்கத்தில் கவி என்ற இடுகையில் [http://valavu.blogspot.com/2018/09/blog-post_22.html] சொன்னேன்.

காப்பியத்தின் தமிழ் வரையறையாய் “அறம், பொருள், இன்பம் எனும் நிலைப் பொருளை (பின்னால் வீடும் இதோடு சேர்க்கப்பட்டது) தொடர்நிலைச் செய்யுள் வழி சொல்வது” என்பார். இந்த வரையறை சங்கதத்தில் இல்லை. சங்கத வரையறை ஆளை வைத்து வரும். kAvyA. (H1) kAvy/a [p= 280,1] [L=49757] mfn. (fr. kav/i) , endowed with the qualities of a sage or poet , descended or coming from a sage , prophetic , inspired , poetical RV. i , 117 , 12 ; viii , 8 , 11 VS. AV. [L=49758] [id. RV. v , 39 , 5 ; x , 144 , 2 ; VS. ] [L=49759] mf(A)n. coming from or uttered by the sage uzanas Para1s3. MBh. ii , 2097 (H1B) kAvy/a [L=49760] m. (gaNa kurv-Adi) a patr. of uzanas RV. TS. &c (H1B) kAvy/a [L=49761] mf(A)n. of the planet zukra VarBr2S. Sarvad. (H1B) kAvy/a [L=49762] m. pl. poems MBh. ii , 453 (H1B) kAvy/a [L=49763] m. a class of Manes S3a1n3khS3r. La1t2y. Mn. iii , 199

(H1B) kAvy/a [L=49764] m. the descendants of kavi VP.(H1B) kAvyA [L=49765] f. intelligence L. (H1B) kAvy/a [L=49766] m. N. of a female fiend (= pUtanA) L. (H1B) k/Avya [L=49767] n. wisdom , intelligence , prophetic inspiration , high power and art (often in pl.) RV. AV. S3Br. xi (H1B) kAvy/a [L=49768] m. a poem , poetical composition with a coherent plot by a single author (opposed to an itihAsa) R. Sa1h. &c (H1B) kAvy/a [L=49769] m. term for the first tetrastich in the metre SaT-pada (H1B) kAvy/a [L=49770] m. a kind of drama of one act Sa1h. 546 (H1B) kAvy/a [L=49771] m. a kind of poem (composed in Sanskrit interspersed with Prakrit) Sa1h. 563 (H1B) kAvy/a [L=49772] m. happiness , welfare L.
.
இந்த வரையறையில், இளங்கோ, சாத்தனார், திருத்தக்க தேவர், வளையாபதி ஆசிரியன், குண்டலகேசி ஆசிரியன், சிறுகாப்பியங்களின் ஆசிரியர், கம்பர், சேக்கிழார், வில்லிபுத்தூரார், கல்கி என எவரும் வரமாட்டார். நம்மூர்க் காப்பியங்களை இந்த வரையறை ஏற்கவே ஏற்காது. என்னுடைய இறுதி முடிவு காப்பியம் என்பது தமிழ்ச்சொல் தான். காவியம் என்ற அதன் திரிவு வடக்கே புழங்கியுள்ளது. இரண்டிற்கும் உறவுண்டு. ஆனால் இத்தனை கலிச்சொற்கள் இருக்கும்போது மாற்றாய்க் கருத்துச் சொல்வது முறையில்லை.

அடுத்த இடுகையில் அடுத்த சொல்லான உலகத்தைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, April 25, 2019

காப்பியம் தமிழே - 2

அப்படியானால் தொல்காப்பியம் என்ற பெயர் எப்படியெழுந்தது? 

“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி” என்றதால் நூலாசிரியனால், நூலிற்குப் பெயர் வந்தது தெளிவு. 

ஐந்திரம் ஒரு வடமொழி இலக்கணமென்று சொல்லி ஏராளமான சங்கதச் சார்பாளர் நம்மை மடைமாற்றுவார். தமிழ் உரையாசிரியர் பலருங் கூட ஐந்திரத்தை வடமொழி இலக்கணம் என்பார். மாற்றுக் கருத்தர் தமிழ் இலக்கணம் என்பார். ஐந்திரமெனும் விதப்பு நூல் இதுவரை எம்மொழியிலுங் கிட்டவில்லை. தமிழுக்கு, “அகத்திய இலக்கணம்” போல், சங்கதத்திற்கு, “ஐந்திரம்” என்பது ஒரு கற்பனை நூல். 

(இதையொட்டிய வாதங்களுக்கு இன்னொரு கட்டுரை தேவைப்படலாம் அவ்வளவு செய்திகள் உண்டு. விழைவோர் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முதன்மடலம் 3ஆம் பாகம் 321-323ஆம் பக்கங்களைப் படியுங்கள். அவற்றை மீள இங்கே விவரித்து எங்கெலாம் நான் வேறுபடுகிறேனென்று சொல்வது தேவையில்லை). 

{இங்கோர் இடைவிலகல். பொதுவாய் நமை மருட்டவே ”சங்கதம்” என்பது பயனாகிறது. ஒரு சொல்லைச் ’சங்கதம்’ என்போரில் பலர், மோனியர் வில்லிம்சு அகரமுதலியையும், சங்கத இலக்கிய மூலங்களையும் பார்ப்பதே யில்லை. கண்ணை மூடிக் கொண்டு,  இக்கால நடைமுறைகளை வைத்துச் சொல்லி விடுவார். 

ஆதாரங்களைக் கொணர்ந்து நாமடுக்கிக் குறிப்பிட்ட சொல் சங்கதம் இல்லை என்றால், ”முண்டா மொழி” என நகர்ந்துகொள்வார். முண்டா மொழியை இனங் காட்டச் சொன்னால் அமைதி காப்பார். அல்லது பேச்சு மாறுவார். சண்டையைச் சங்கதத்தோடு போடாது ”ஒப்புக்குச் சப்பாணியாய்த்” தமிழோடு போடுவார். இணைய வாதங்கள் பலவும் கணநேர வெற்றி நாடி அரைகுறையாகவே அமைகின்றன. சொற்பிறப்பியல் பற்றிய அறிவுக் குறைவாலும், நாம் சொல்பவற்றை மறுப்பார். [சில போது நம் பக்கத்தாரே கூடக் கற்றுக்குட்டியாய் உன்னிப்புச் சொற்பிறப்பைக் (folk etymology) காட்டுவதாலும் எதிர்வினை நிகழும். தமிழுக்கு உரையாடுவோர் அருள் கூர்ந்து ஆழப் படியுங்கள். மேலோட்ட உன்னிப்பை உதறித் தள்ளுங்கள்.]

குறித்த சொல்லின் தமிழ்மையை மறுப்பதே சங்கத ஆர்வலர் குறிக்கோளாகும். மற்ற இந்தையிரோப்பியன்களில் இதுபோல் உண்டா? சொல்லின் வேரும், கிளை வினை/பெயர்ச் சொற்களும், உள்ளனவா? அல்லது ஒற்றைச்சொல் மட்டும் அங்குள்ளதா?- என ஆயமாட்டார். தமிழெனில் ஆயிரங் கேட்போர், சங்கதம் எனில் தண்டனிட்டு வணங்குவார். ”சாமி, தப்பாச் சொல்வாரா?” எனும் implicit obedience வேறு வாதாடுவோரின் ஊடே வந்து சாதி நடைகள் நம்மைப் பலிகடா ஆக்கும். இவற்றை விட்டு வெளிவராது மொழியொப்புமை செய்யவே முடியாது. திராவிட வாதிகளின் இடையூறுகளோ வேறு மாதிரி. அதே பொழுது சங்கதவாதிகள் போலவே இவரும் நடந்துகொள்வார். பட்டகைகள் (facts) எதையும் இவர் படிக்கமாட்டார். அவரின் தேற்றே (theory) அவருக்கு முகன்மை. திராவிடரைச் சார்ந்து நாமிருக்கும் வரை இவருக்குத் தமிழ் இணக்கமே. சாரா விடில், ”எம்மை மீறி இவனா?” எனும் ஆணவங் கொப்பளிக்க, ”புலவனுங்க பற்றி எமக்குத் தெரியாதா?” என்பார். திராவிடர் என்பார் வெள்ளைக்காரர் சொல்வதே வேதமெனக் குள்ளக்குனியத் தேடிக் கொண்டிருப்பார்.}

சரி, ஐந்திரமென்ற சொல்லுக்கு வருவோம். ”குணம்/நட்பு/இனிமை நிறைந்த” என்று விதவிதமாய்ச் சொல்கையில் கலனுக்குள் அன்றேல் மாந்தனுக்குள் இருக்கும் உள்ளீடு பற்றியே பேசுகிறோம் ”ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற தொடரும் தொல்காப்பியனுள் உள்ளிட்டுக் கிடக்கும் குறிப்பிட்ட திறமையை/தன்மையைத் தான் குறிக்கிறது. அப்படியெனில் ஐந்திரம் என்பது என்ன?- என்று கேட்டால், சொற்பிறப்பின் வழி, ஐந்திரம் என்பது ”இலக்கணம்” என்னும் பொதுமையைக் குறிக்கும் என்பேன்.. வடமொழி இலக்கணம், தென்மொழி இலக்கணமெனும் விதுமைகளை (specifics) அது குறிக்கவில்லை. ஏன் அப்படிச் சொல்கிறேன்? அதற்குமுன் இலக்கியம் - இலக்கணம் என்ற என் கட்டுரைத்தொடரைப் படித்துவிடுங்கள். 

http://valavu.blogspot.com/2011/07/1.html
http://valavu.blogspot.com/2011/07/2.html
http://valavu.blogspot.com/2011/07/3.html
http://valavu.blogspot.com/2011/07/4.html

மேலேயுள்ள தொடரில் சொன்னபடி, இல்லுதல்> இலுங்குதல்> இலுக்குதல்> இலக்குதல் என்பது குற்றுதலையும், குறித்தலையும், கூர்த்தலையும், பிளத்தலையும் உணர்த்தும். கொடுத்தான் என்ற சொல்லை கொடு+த்+த்+ஆன் என்றும், அவனிற்கு>அவனுக்கு என்பதை அவன்+இல்+கு என்றும் இலக்கண உருபுகளின்வழி பிரிப்பதும் ஒருவகையில் இலக்குஞ்/பிரிக்குஞ் செயலே. வடமொழியில் வரும் ”விய ஆகரணமும்” உருபுகளாய் (விள்ளி, வியந்து= பிரித்து. வியாக்ர பாதர்= விரிந்த புலிவிரற் பாதங் கொண்ட முனி. தில்லையில் நடவரசன் முன்னிருப்பதாய்ச் சொல்லப் படுவார்.) அரிவதையே சொல்லும். இலுக்கு> இலக்கு = எழுத்து, குறி, உருபு போன்றவை. இலக்குகளால் இயன்றது இலக்கியம் (= இலக்கு+இயம்). இலக்குகளை அணக்குவது இலக்கணம் (அண்ணல்> அணத்தல்= பொருத்தல்.) ’முலை மூன்றணந்த சிறுநுதல்’ என்பது கல்லாடம் (13:12) இலக்கணப் பகரியாய் அணங்கமெனுஞ் சொல் அகரமுதலிகளிற் சொல்லப்படும். அதேபோல் அணங்கியம் என்பது இiலக்கியப் பகரி.)
.
இல்தலின் திரிவான ஈல்தல் மேலுந் திரிந்து ஐல்தல்>அயில்தல் ஆகும். அடிப்படையில் கூர்ங் கருவியால் பிரிப்பதையே இது குறிக்கிறது. அயில்= கூர்மை, வேல், அறுவை செய்யுங் கத்தி என அகராதியில் கொடுத்திருப்பர். ஒரு மொழித்தொடரை அயிலுந்திரம் ஐ(ல்)ந்திரமானது. (திரம்= வலு). ஆங்கிலத்தில் சொன்னால் analytic capability. ”அவனுக்குக் கொடுத்தான்” என்பதை விடக் கடினமான, பலக்கிய சொற்றொடரை உருபுகளாய்ப் பிரித்துக் கையாளும் திறம் ஐந்திரம். ”grammatic capability நிறைந்த தொல்காப்பியன்” என்பதே ”ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற தொடரால் சொல்லப் படுகிறது. முடிவில் வியாகரணம் என்ற இருபிறப்பிச் சொல்லும் தமிழ்ச் சொற்களான இலக்கணமும், ஈல்ந்தமும் ஒருபொருட் சொற்களே. சங்கதச் சொல்லை ஏற்போர், தமிழ்ச் சொற்களை ஏன் மறுக்கிறார்? 

நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப்புணரியல் என எழுத்ததிகாரத்திலும், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியலெனச் சொல்லதிகாரத்திலும், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியலெனப் பொருளதிகாரத்திலும் மரபையும், இயலையும் பேசிய தொல்காப்பியனுக்கு தமிழ்மொழி மரபைக் காப்பது முகன்மையாய்த் தெரிந்திருக்கிறது. தொல்காப்பியன் என்பது நம் காலப் :”புதுமைப்பித்தன்” போன்றதொரு புனைப்பெயரே. தொல்காப்பு= தொன்மையை, மரபைக் காப்பாற்றுவது. தொல்காப்பு+இயன் எனத் தன்பெயரை அவன்கொண்டதில் வியப்பென்ன? 

அவன் இயற்பெயர் யாருக்கு தெரியும்? (நச்சினார்க்கினியர் விட்ட கட்டுக்கதை ஒன்றுண்டு. தொல்காப்பியரின் இயற்பெயர் த்ரணதூமாக்னியாம்.) புனைப் பெயர் வைக்கக்கூடாதெனச் சொல்ல நாம் யார்? செம்புலப் பெயல்நீரார், விட்ட குதிரையார் என்றெலாம் நாம் பெயர் வைக்கலாமெனில், தொல்காப்பியன் எனத் தனக்கு அவன் புனைப்பெயர் வைக்கக் கூடாதா? புனைப்பெயர் கொள்வது தமிழ்க்குடியில் இன்று நேற்றுப் பழக்கமா? நிலந்தரு திருவிற் பாண்டியன், கரிகாற் சோழன், நெடுஞ்சேரலாதன் என்பவை இயற்பெயர்களா, என்ன? கபிலன் என்பது இயற்பெயரா? குடிப்பெயரா? நிறப்பெயரா? பரணனா? பாணனா? வள்ளுவன், இளங்கோ, மணிவாசகன், நாவுக்கரசன், கம்பன், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் இயற்பெயர்களா? குடிப்பெயர்களா? புனைப் பெயர்களா? 100க்கு 95 எழுத்தாளர் புனைப்பெயரோடு தானே நம்மூரில் வலம் வருகிறார்? இக்காலம் அவரின் இயற்பெயர் நமக்கு எளிதில் தெரிந்து விடுகிறது. 2700 ஆண்டுகளுக்கு முன்னுள்ளவனின் இயற்பெயரை எங்கு போய்த் தேடுவது?

இன்னும் வேறு சிலர் உள்ளார். காப்பியக்குடி என்பது காவ்ய கோத்ரமாம் ”ஐயர், சர்மா” என்பது போல் அவன் ”காவ்ய” எனும் பெயர் கொண்டானாம். முது முனைவர் இரா. இளங்குமரன் அவருடைய தொல்காப்பியப் பதிப்பில் அக்கு வேறு ஆணி வேறாக இதைப் பிரித்துக் குதறியிருப்பார். தொல்காப்பியரைப் பெருமானராகக் காட்ட விழையும் போக்கு, தமிழ்நாட்டில் நெடுநாள் நடக்கிறது. தொல்காப்பியர் காப்பியக்குடி எனவாக்க இளம்பூரணரைத் துணைக்கழைப்பர், தொல்காப்பியர் பெயரைத் ”திரணதுமாக்கினி” என்றுகூறி வேறு குடியில் அவர் பிறந்ததாய் ”உச்சிமேல் புலவர்கொள்” நச்சினார்க்கினியர் கூறுவாரே? அக்கூற்றைக் கடாசலாமா? இளம்பூரணர் உரையை அடியொற்றும் நச்சினார்க்கினியர் இதில் மட்டும் ஏன் மாறுகிறார்? தொல்காப்பியர் பற்றி நச்சர் விட்ட கதை முழுக்க நம்பும்படி உள்ளதா? தொல்காப்பியன் இப்படியெனில் வேறு காப்பியர்களை (சங்கப் புலவரை) என்ன செய்வது? அவர்களும் காப்பியக்குடியா? ஏன் தொல்காப்பியருக்கு மட்டும் குடிப்பெயர் சொல்கிறார்? வேறெந்தப் பெயரும் ஏன் ஒட்டப்படவில்லை? ஐயர் என்றால் எந்த ஐயர்? ”காவ்ய ஐயர்” என்றால் போதுமோ? யாரென விளங்கி விடுமோ? இன்னும் அதிகக் குறிப்பு வேண்டாமா?

இன்னுஞ் சிலர் சிலம்பின் 30 ஆம் காதையின் 80 ஆம் வரியில் ”தேவந்திகையின் கணவன் காப்பியக் குடியெனச் சொல்லப்பட்டுள்ளதே?” என்பர். தேவந்தியின் கணவன் காப்பியக் குடியினன் என்று சொல்ல 30 ஆம் காதையை விட்டால் வேறு ஆதாரமில்லை. நான் சிலம்பின் 30 ஆம் காதையை ஏற்றதில்லை. அது இளங்கோவிற்குப் பின் சேர்க்கப்பட்ட பின்னொட்டென்றே என் “சிலம்பின் காலம்” நூலில் வாதாடியிருப்பேன். முந்தைக் காதைகளோடு அது பெரிதும் முரணும். ஒரு காப்பியன் முன்னுக்குப் பின் முரணாய் இப்படிச் செய்யான். உறுதியாக இளங்கோ இதை எழுதியிருக்க வழியில்லை. யாரோ ஒருவர், மணிமேகலை நூலோடு சிலம்பைத் தொடர்புறுத்த வேண்டி, இதை உருவாக்கி ஒட்டியிருக்கிறார் என்பதே.என் தேற்று. 

இன்னுஞ் சிலர், முதற்பராந்தகன் (கி.பி.941) காலக் கல்வெட்டில் (தெ.கல்.தொ 8, கல் 196) “இப்பொன்னில் காப்பியந் வடுகங்கணத்தாந் வாசிரியும், காப்பியந் சேந்தன் மாடமுடையநும், காப்பியந்சேந்தந் முசிறி நமலியும், காப்பியன் சேந்தந் சோமதேவநும், காப்பியந்வடுகந் தாமோதிரநும்” என்று வருவதையும், (தெ.கல்.தொ 8, கல் 197) இல், “காப்பியந்நானூற்ருவந்” என்று வருவதையும் கொண்டு காப்பியக் குடிக்கு ஆதாரந் தேடுவர். இக்கல்வெட்டுகள் இன்னும் ஆய வேண்டியவை. சேதமுற்ற இவற்றைப் படித்தால், காப்பியந் என்பது குடியா, காப்பிய ஊரனா என்பது விளங்கவில்லை. (காப்பியாற்றுக் காப்பியனார் என்றொரு சங்கப்புலவர் இருக்கிறார்.) சொல்லப்படுவோர் தெலுங்குப் பார்ப்பாராய்த் தெரிகிறார். பெருஞ்சோழர் காலத்தில் தெலுங்குப் பெருமானரை தமிழகத்தில் ஏராளங் குடியேற்றினார். இன்றைக்கும் தமிழ்ப் பெருமானருக்கும் தெலுங்குப் பெருமானருக்கும் காவிரி நாட்டில் சதுர்வேதி மங்கல உரிமைகளால் உள்ளார்ந்த முரண்களும் கதைகளுமுண்டு. சங்ககாலத்தின் முன் இங்கிருந்த தமிழ்ப்பெருமானர் பெரும்பாலும் முன்குடுமியர் எனப் பேரா. நா. சுப்பிரமணியம் Brahmins in the Tamil country இல் நிறுவியிருப்பார். காப்பியக் குடியார் முன்குடுமியரா என்றெனக்குத் தெரியாது. 

நம்பூதிகளின் கோத்திரங்கள் அளவிற்கு தமிழ்ப்பெருமானரின் கோத்திர வரலாறு எழுதப்படவில்லை. அதையெழுதப் பலரும் தயங்குகிறார். விவரந் தெரிந்தவருங் குறைகிறார். [பெருங்கணத்தாருக்கும் (ப்ரகச்சரணம்) வடமருக்குமான ஊடாடலைக் கூட யாரும் எழுதியதில்லை.] தொல்காப்பியத்தில் தென்குமரி வழக்கு அதிகம்..பெருஞ்சோழர் காலத்தில் வடக்கிருந்து வந்த பெருமானரோடு அவரைச் சேர்க்கலாமோ? நானறிந்தவரை இற்றைப் பெருமானரில் காப்பியக்குடி அறவே கிடையாது. (அவர் இருந்தாரா? கற்பனையா? தெரியாது.) காப்பியக் குடியினர் செய்ததாய் வேறெந்த மொழியிலக்கியமும் நான் அறியேன். காப்பியக் குடியின் “ரிஷிமூலம்” நம்பும்படி இல்லை. தொல்காப்பியர் பெருமானரா? இல்லையா?” என்பது கூட என்னைப் பொறுத்தவரை தேவையிலாக் கேள்வி. அவர் பெருமானராகவே இருக்கட்டுமே? அதனாலென்ன? ஆனால், அவரின் சில கூற்றுகள் அவரை ஆழ்ந்த வேதமறுப்பாளராகக் காட்டுகின்றன. [அவர் அற்றுவிகரா (ஆசீவிகரா), செயினரா, புத்தரா, சாங்கியரா, சாருவாகரா, ஞாயவாதியா, விதப்பியரா (வைசேடிகரா) என்ற ஆய்வினுள் நானிப்போது நுழையவில்லை.] வேத நெறிப்பட்ட காப்பியக் குடியாராய் அவரைக் காட்டுவது எனக்கு முரணாகவே தோற்றுகிறது.

இதுவரை தொல்காப்பியத்திற்கே மிகுந்தநேரம் செலவழித்துவிட்டோம். இனி இன்னொருவகைக் காப்பியத்தைப் பார்க்கலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற பெருங்காப்பியங்களும், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி எனுஞ் சிறுகாப்பியங்களும், காதம்பரி போன்ற இன்னுஞ்சிறு காப்பியங்களும் உண்டு., இராமாவதாரம், பெரிய புராணம், வில்லிபாரதம் என்பவற்றையும் காப்பியங்களுள் சேர்ப்பவருண்டு. இந்தக்காலப் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பெருங்கதைகளையும் காப்பியங்களுள் சேர்க்கலாமென்றே நான்சொல்வேன். இவ்வகைக் காப்பியங்களின் வரையறைதான் என்ன?  முதலில் காப்பியம் என்பதன் சொற்பிறப்பைப் பார்ப்போம், இது நீண்டது.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 24, 2019

காப்பியம் தமிழே - 1

"There is no language in the world which is pristine and pure" என்ற வாசகத்தோடு David Shulman இன் நேர்காணல் ஒன்று Frontline இதழில் ஒருமுறை வெளிவந்தது. அதைத் தமிழியல் முகநூல் குழுவிற்கு திரு. முருகன் செவ்வேள் என்பார் முன்வரித்து, “இந்தோ ஐரோப்பிய மொழியின் கிளையான இந்தோ ஆரிய மொழி பரவலால் தான் மூலத்திராவிட மொழி பல மொழிகளாக சிதறியது. தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சிக்கு மூல ஆரிய மொழியின் பங்குள்ளது என்பது தான் இன்றையத் திராவிட மொழியியலின் நிலைப்பாடு!” என்றெழுதி, https://www.quora.com/.../Gopalakrishnan-Ramamurthy-3 என்ற இடுகையைப் பரிந்துரைந்தார். "என்னது? பரிணாம வளர்ச்சியா? தமிழுக்குச் சங்கதம் உதவியதா? இதுவென்ன கூத்து?” என வியந்து போனேன். திரு.முருகன் செவ்வேள் பரிந்துரைத்த அந்த இடுகையையும் படித்தேன்.

அந்த இடுகையின் ஆசிரியரான திரு. கோபாலகிருட்டிணன் இராமமூர்த்தி என்பாரின் பின்புலம் மொழியியல் போல் எனக்குத் தெரியவில்லை. 2 ஆம், 3 ஆம் நிலை ஊற்றுகளை எடுத்துரைக்கும் ஆர்வலர் போன்றே அவர் எனக்குத் தெரிந்தார். “So quora writers are your experts. Great” எனச் செவ்வேளுக்கு மறுமொழி கொடுத்தேன். “I've cited this answer having citations. He has shared some extracts from Bh.Krishnamurti's text 'Dravidian languages'.” என்று  அவர் மறுமொழி தந்தார். சொற்பிறப்பின் வழி காப்பியம் என்ற சொல், இருவகைப் பட்டது என்றுகூடத் தெரியாத பேரா.பத்ரிராசு கிருட்டிணமூர்த்தியே இவருக்கு அக்கரைப் பச்சையாய்த் தெரிந்திருக்கிறார். நம்மூர்த் தொல்காப்பியப் பச்சைகளான சி. இலக்குவனார், இரா. இளங்குமரன், தமிழண்ணல் போன்றோர் இவருக்குப் பொருட்டாகவே தெரியவில்லை போலும். 

“So Bh Krishnamoorthy is correct in your opinion, I guess. I do respect him. But his efforts at twisting the facts to get classical status for Telugu do come in between. let me temporarily forget that. I have a lot of etymological disagreements also with him. Anyway the words he chose like kappiyam, ulagam, uruvam, aayiram, avai, pakkam etc have been countered by Tamil experts. They can of course be repeated. Shall I take only these 6 words in a separate article? Either you argue or get somebody else to argue from the primary sources? I am agreeable to that. But then no secondary author's arguments/quotings please. I am tired and sick of secondary authors. Tamil research is full od secondary authors attributions which cloud peoples thinking. At the end of it, You judge yourself” 

என்று மறுமொழி கொடுத்தேன். “Challenge accepted” என்றிதற்கு மறுமொழி எழுதிய முருகன் செவ்வேள், பின்னதை மாற்றி, “Will be waiting for your post” என்று எழுதினார். அவர் கூறிய காப்பியம், உலகம், உருவம், ஆயிரம், அவை, பக்கம் எனும் 6 சொற்களின் தமிழ்மை பற்றியதே இத்தொடராகும். இவ்விடுகையில் காப்பியத்தைப் பற்றிப் பேசுகிறேன். மற்றவை அடுத்து வரும்.

[கட்டுரைக்குள் போகுமுன், எம் இருவரின் போக்கைச் சொல்லவேண்டும். திரு. முருகன் செவ்வேள் ஆங்கிலத்திலேயே பெரிதும் எழுதுபவர். பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்து கோரா வினாவிடைப் பக்கத்தில் தொடர்ந்து ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுகிறார். நானோ, தொகுப்புக் கட்டுரைகள் எழுத விரும்பியதில்லை. புதுக்கோணம் தர இயலாவிடில், எந்தப் புலனத்துள்ளும் நுழைந்ததில்லை. இன்னொரு வேறுபாடும் உண்டு. தமிழ் தொடர்பான கட்டுரைகளைக் காரணமின்றி நான் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை. ”தமிழருக்கு எனில், தமிழ்” என்பதே என் வழக்கம். தமிழ் தெரிந்தோர் ஆங்கில வழி உரையாடுவதும் எனக்கு ஒவ்வாத ஒன்று. இது பற்றிச் சொன்னதன் பின்  முருகன் செவ்வேள் தமிழிலெழுத முயல்கிறார். பாராட்டுவோம்.

 ஆங்கிலத்திலேயே உரையாடும் தமிழிளைஞர் இக்காலம் கூடியது கண்டு மனம் வருந்துகிறது. காலத்தின் கோலம் என்பதன்றி வேறென்ன சொல்ல? இளைஞர்களே! இனியாவது தமிழுக்கு மாறுங்கள். தமிழே நம் முகவரி. கூடவே இன்னொரு வேண்டுகோள். தமிழ் ஊற்றுநூல்களை முருகன் செவ்வேள் போன்றோர் படிக்கவேண்டும். 2 ஆம் நிலை, 3 ஆம் நிலை ஆங்கில நூல்களைப் படித்துத் தமிழுக்கு வந்தால் இவர் போன்றோர் கிளிப்பிள்ளைகள் ஆவதைத் தவிர்க்க முடியாது, சிந்தனை தெளியாது.]

தொல்காப்பியத்தில் வரும் காப்பியமும், ஐம்பெரு/சிறு காப்பியங்களில் வரும் காப்பியமும் வெவ்வேறு பொருளும் சொற்பிறப்புங் கொண்டவை. தொல்காப்பியம் ”காவ்யம்” அல்ல. அது ஓர் இலக்கணம். (முற்று முழுதாய் இல்லெனினும் தொல்காப்பியம் சங்க நூல்களில் பெரிதும் பின்பற்றப்பட்டது.) சங்கத மொழிப் படி அதுவொரு வியாகரணம். (இதே பொருளில் அணங்கம், ஈல்ந்தமென 2 சொற்களுண்டு.) இலக்கணத்தைக் காவ்யமென யாருஞ் சொல்லார். தொல்காப்பியர் மடையரா? அஷ்டத்யாயியைக் காவ்யமெனப் பேரா.கிருட்டிணமூர்த்தி கூறுவரோ? தொல்காப்பியத்திற்கு உரையெழுதியோர் காவ்யம் என்றதில்லை. தொல்காப்பியம் கற்பித்த தமிழறிஞரும் அப்படிச் சொன்னதில்லை. இப்போது தான் பேரா. பத்ரிராசு கிருட்டிணமூர்த்தியின் வழி இப்படிக் கேள்விப் படுகிறோம்! 

”தொல்காப்பியம்” என்பது ஆசிரியனின் பெயரால் நூலுக்கு எழுந்ததெனச் சிறப்புப் பாயிரஞ் சொல்லும். பாயிரம் தொல்காப்பியர் காலத்தில் எழவில்லை. அவருக்குப்பின், இளம்பூரணர் காலத்தின் (பொ.உ.11 ஆம் நூற்றாண்டு) முன் எழுந்தது. குறிப்பாக, [”அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு” என்பதால்] நான்மறையெனும் தொடர் வந்த காலத்தில் எழுந்திருக்கலாம். நான்மறை வழக்கம் எப்போதெழுந்தது? இது அடுத்த கேள்வி.

அருத்த சாற்றம் (அர்த்த சாஸ்திரம்), 2 ஆம் அத்யாயம் முதற்கூற்றில் [அத்வீக்ஷிகீ, த்ரயீ, வார்த்தா, தாண்டநீதிஷ்சேதி வித்யா] வேதம் மூன்று என்பார். அதர்வணத்தை இவற்றொடு தொகுக்க மாட்டார். அருத்த சாற்றக் காலத்தை பொ.உ.மு. 323 என்பாரும், பொ.உ.தொடக்கத்தில் என்பாரும் உண்டு. (இச்சிக்கலுள் நான் போகவில்லை.) பொ.உ. தொடக்கத்தில் அதர்வணம் எழுந்தது என்பதே பலரின் முடிபு. எனவே சங்கவிலக்கியம் தொகுத்த காலத்தில், அதர்வணத்திற்கு அப்புறம், பொ.உ.மு.50-பொ.உ.50 இல், பாயிரம் எழுந்திருக்கலாம். 

தரவுகள் வேறேதும் புதிதாய் வருமாயின், ஒருவேளை இக்கணிப்பு மாறலாம். பின் பனம்பாரனார் ”நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து” என்கிறாரே? அது முரண் இல்லையா? - என்றால், பனம்பாரனாருக்கு முந்தி நடந்தவை அவருக்குச் செவிவழிச் செய்தியாகலாம் என்பேன். இக்காலத்தில் ஓரு கோயிலுக்குப் போய்க் குருக்களிடம் கோயிலின் அகவையை வினவினால், 2000 ஆண்டிற்கு முந்தையது என்று தான் சொல்வார். கோயிலில் கட்டுமானம், கல்வெட்டுகள், படிமங்கள், சிற்பங்கள் ஆகியவற்றை அறிவியற்கண் கொண்டு அலசினால், அது குலோத்துங்க சோழன் காலத்தையுங் கூடக் காட்டலாம். இக் காலமுரணை எப்படி விளக்குவது? வரலாற்றில் கேள்வி ஞானம் மட்டுமேகொண்ட குருக்களையே நாம் பெரிதும் ஐயப்பட வேண்டும். 

இதுபோல் தான் பனம்பாரனாரும். ”நிலந்தரு திருவின் பாண்டியன் அவையம்” என்பதும் ”நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என்பதும் முரணெனத் தெரிய அவருக்கு வாய்ப்பில்லையோ, என்னவோ? ஏதேனுமோர் ஆய்வாளர் தான் தரவுகளை ஆய்ந்து பார்த்து, “எதை ஏற்கலாம், எதை மறுக்கலாம்?” என முடிவு செய்ய வேண்டும். நான் ”நான்மறை முற்றிய” என்பதை மறுக்கிறேன். ”நிலந்தருதிருவின் பாண்டியன் அவையம்” என்பதை ஏற்கிறேன். பாண்டியன் அவையம் சரியிலாவிடில், இரண்டையும் மறுப்பேன். இப்பின்புலத்தோடு பாயிரத்தைப் பார்ப்போம். 

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து (இவ்வொரு தொடரே பெருத்த ஆய்விற்குரியது. வெங்காலூர்க் குணா தான் வட வேங்கடத்தின் சரியான பொருளை விதந்து ஓதினார். வேறொரு கட்டுரையில் அதைப் பார்ப்போம்.)

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட்ட எண்ணிப்
புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே.

என்று சிறப்புப் பாயிரம் கூறும். இப்பாயிரம் பற்றி விரிவாக, நுட்பமாய்ச் சொல்லலாம் குறிப்பாக, “அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” என்பதைச் சுவையாரமாய் விளக்கலாம்.) எனினும் அதைத் தவிர்க்கிறேன். பேச வேண்டிய பொருளை விட்டு விலகவேண்டாம் எனும் எண்ணம் தான்  ”உலக வழக்கும், செய்யுளும் ஆய 2 முதலின் எழுத்தும், சொல்லும், பொருளும் நாடி, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் போக்கறு பனுவல் புலம் தொகுத்தோன்” என்பதால், முந்துநூல், முன்மரபு போன்றவற்றைக் கண்டு அவற்றை முறைப்பட எண்ணி “குற்றங்கள் இல்லாப் பனுவலாய்ப் புலப்படும் படி தொகுத்தான்” என்பது நன்கு புரியும். தொல்காப்பியனின் கற்பனைச் சரக்குகள் எவையும் இதில் இல்லை. என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. "என்மனார் புலவர்” என 250 இடங்களுக்கு மேலும் தொல்காப்பியன் சொல்வான். ஒரு சில தேவையான போது, கற்பனையில்லா, மாற்றங்களை மட்டுமே சொந்தமாய் அவன் செய்தான். அதுவும் அவன் நூலை ஆழப் படித்தால் எங்கெங்கென்பது புரிந்து போகும். தொல்காப்பியம் காவ்யமெனில் கற்பனைச்சரக்கு பல இடங்களில் இருந்திருக்குமே? அப்படியில்லாதபோது, அதைக் காவ்யம் என்பது சரியா?

அன்புடன்,
இராம.கி.

Saturday, April 20, 2019

செவிலி

முகநூல் சொல்லாய்வுக்குழுவில் இச்சொல்லுக்கு இணையான ஆண்பாற் பெயர் கேட்டார். அங்கெழுந்த உரையாடலினூடே, சொல்லின் ஏரணம் பலருக்கும் புரியாது இருந்ததைக் கண்டேன். சொற்றோற்றம்  அறியமுயலாது, பகுதிமட்டும் பார்த்து, சொற்பிறப்பியலைக் கேலிசெய்வோருக்குச் செவிலியின் பொருள் புரிபடாது. தொல்காப்பியமும், சங்கநூல்களும், அவ்வக்கால இலக்கணம், இலக்கியம், பண்பாடு, வாழ்க்கை, வரலாறு போன்றவற்றைச் சொல்ல வந்தவை. அடிப்படையில் அவை எல்லாச்சொற்களையும் தொகுக்கும் அகரமுதலிகளல்ல. இடைக்காலத்தில் நாமழித்த நூல்களும் மிகப்பல. பிற்காலத்தே அகரமுதலி செய்தோரும் சொற்களின் இயலுமைகளை நமக்குச் சொல்லியதில்லை. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது வெறுஞ்சொலவமல்ல.
சொல்லின் எல்லாத் தோற்றங்களும் நமக்குக் கிட்டாநிலையில், ”வினைச்சொல் காணின், அதன்வழி பெயர்ச்சொல்லெது? பெயர்ச்சொல் காணின், அதனடி வினைச் சொல் யாது?” என நம் மரபிற்கேற்பப் பல்வேறு இயலுமைகளை உய்த்தறிய வேண்டும் என நெடுங்காலம் நான் சொல்லியதுண்டு. இன்றும் ஆட்சியிலுள்ள ”செவிலி” என்பது வெறும் பெயர் மட்டுமன்று. இதனோடு தொடர்புள்ள வினைச் சொல் எது?. தொடர்புடை வினையெச்சம், பெயரெச்சங்கள் எவை? ஒப்புநோக்கித் தொடர்பு காட்டும் வேறு சொற்களுண்டா? செவிலி, செவிலித் தாய் என்பவற்றுள் முன்னது பொதுச்சொல்லெனில், பின்னது விதப்புச் சொல்லா? செவிலியோடு தொடலும் வேறு சொற்களை இப்போது நாம் ஆள்கிறோமா? - என்றெல்லாம் ஆயாது இச்சிக்கலைத் தீர்க்க முடியாது. இக்கட்டுரை அதற்கான முயற்சி.
சங்ககாலம் என்பது வேடுவச் சேகர நிலையிருந்து சற்று முன்னேறிய ஆனால் கூறு பட்ட அரசுகள் (segmentary stateகள்) உருவாகிய காலமென்று மேலைநாட்டு பர்ட்டன் ஸ்டெய்ன் போன்றோர் சொல்வர். குறிப்பாகச் சங்கவிலக்கியக் குமுகாய நிலையை இவர் மேலோடக் கண்டு வேந்தரென்போர் சிறு இனக்குழுத் தலைவரே என்பார் சங்க நூல் வரலாற்றுக் குறிப்புகளை வைத்து மூவேந்தரைச் சரியான வட அரசர் காலத்திற் பொருத்தாது, 200/300 ஆண்டுகள் தள்ளிப் பொருத்தி, பொ.உ.மு.300-பொ.உ.300 என்றே சங்ககாலத்தை வரையறை செய்வார். வையாபுரிப் பிள்ளை, சிவராசப்பிள்ளை, கமில் சுவலபில், கைலாசபதி, சிவத்தம்பி, உரோமிலா தாப்பர் ஆகியோர் புரிதலே 1970/80 கள் வரை முகனமாய்த் தெரிந்தது. இன்றும் பல்வேறு இடதுசாரி வரலாற்று ஆசிரியர் இதைப் பிடித்துத் தொங்குவார். இன்று கிட்டும் ’கீழடி’நகர எச்சங்கள், மணிப் பட்டறைகளால் உருவான பொருந்தல், கொடுமணம் போன்ற வணிக எச்சங்கள், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வணிக இயலுமை காட்டும் துறை முக எச்சங்கள், முத்து/பவளம்/தங்கம்/வெள்ளி/செம்பு போன்றவற்றின் அதிகப் பயன்பாடு, நாணயப்புழக்கம், சங்கவிலக்கிய மீள்வாசிப்பு ஆகியவை கொண்டு அலசினால், பெரும்பாலும் பொ.உ.மு.600- பொ.உ.225 காலமே சங்ககாலம் என்று விளங்கும். இதை நிறுவ இக்கட்டுரை முகனக் களமல்ல. ஆனால் செவிலியின் பொருளறியப் இக் குமுகாயப் புரிதல் கட்டாயந் தேவை.
என் புரிதலில், வேடுவச் சேகர நிலையிலிருந்து தமிழர் மாறிக் கூறுபட்ட வேளிர் அரசுகள் குறைந்தது மூவேந்தர் பொ.உ.மு. 200-பொ.உ.100 அளவில் தமிழகத்தில் நிலையுற்றார், They were real kings and not chieftains. இக்காலத்தில் வணிகரும், நிலக் கிழாரும் உயர்நிலைக்கு வரமுயன்றார். வேடுவச் சேகரம் முற்றிலும் நின்றது பொ.உ.200 அளவில் என்றே சொல்லலாம். பொ.உ.200 களில் ஏற்பட்ட வேந்தர் வீழ்ச்சியில் களப்பிரர் உயர, பொ.உ.200-400 இன் மாற்றுக் காலத்தில் (transition stage) வணிகர் உச்சம் பெற்றார். பொ.உ.400-550களில் வணிகரின் ஏற்றங் குறைந்து, கிழாரியக் குமுகம் வலுப் பெற்றது, . மேலையரின் வேடுவச் சேகரம்- அடிமைக் குமுகம்- கிழாரியமென்ற அச்சடிப்பையோ, அல்லது கார்ல்மார்க்சு சொல்லிய வேடுவச் சேகரம்- ஆசிய விளைப்பு நடைமுறை- கிழாரியமென்ற அச்சடிப்பையோ இடது சாரியர் திரும்பத் திரும்பச் சொல்வார். மாற்று இயலுமைகளை எண்ணிப் பாரார். பெர்ட்டன் ஸ்டெய்ன் கூற்றைப் பிடித்துப் பெருஞ்சோழர் காலத்திற்றான் கிழாரியம் வலுவுற்றது என்றும் சாதிப்பார். கூடவே நொபுரு கராசிமாவையும் சுப்பராயலுவையும் துணைக்கழைப்பார். என் கணக்கில் சங்க காலத்திலேயே கிழாரியக் கூறுகள் இருந்தன. ’செவிலி’யை மேற்சொன்ன பின்புலத்தில் காண வேண்டும்.
செவிலியர் என்போர் செல்வந்தர் வீட்டில் நெடுங்காலம் பணி புரிவோர். காசு வாங்கிக் குறிப்பிட்ட நேரம் மட்டும் வேலை புரிவோராய்க் காணக் கூடாது. கால காலத்திற்கும் இவர் குடும்பம் செல்வர் குடும்பத்திற்குக் கடன் பட்டு (வாழ்வுக் கடன் என்று கொள்ளுங்கள்; பணக் கடன் அல்ல.) பணி செய்வோர் என்று கொள்ள வேண்டும். செல்வந்தரின் உறவினராய்க் கூட இவர் இருக்கலாம். சங்க காலக் குமுகாய வழக்கில் செவிலியரும், அவர் கணவரும் தலைவியின் தந்தைக்கு நெடு நாள் சேவகஞ் செய்வோராய் இருந்திருக்கவே வாய்ப்புண்டு. இது போற் பழக்கம் தமிழக நாட்டுப் புறங்களில் எனக்குத் தெரிந்து 1960 கள் வரையுண்டு. செல்வந்தர் வீட்டில் வேலை செய்வோரை உறவிலா விடினும் உறவு முறை சொல்லியழைக்கும் பழக்கம் உண்டு. இதுவொரு கிழாரிய (நிலவுடைமை)ப் பண்பாட்டுக்கூறு. செவிலியர் பிள்ளைகள் தலைவியோடு சேர்ந்து விளையாடும் நிலை கூடப் பண்ணையில் இருக்கும். செவிலி, எல்லாத் தலைவிக்கும் இருந்துவிட மாட்டாள். செவிலி வரும் பாடல்களைத் திரும்பப் படியுங்கள். தலைவியின் செல்வநிலை எங்கோ ஒரு மூலையில் உணர்த்தப்படும். செவிலி தலைவியைச் சிறு பிள்ளையிலிருந்து ஊட்டி வளர்த்தவளானால், செவிலித் தாய் என்றே அழைக்கப் படுவாள். செவிலியின் பெண்ணே தலைவியின் தோழியாகலாம். பாட்டில் பேசப் படுகிற தலைவி கிழாரியப் பெண்ணாகவும் இருக்கலாம், வணிகர் பெண்ணாகவும் இருக்கலாம். மொத்தத்தில் செல்வரின் பெண்.
செய்தலென்பது ”பொருளையும், பணிகளையும் செய்தலென” கிழாரியக் குமுகாயத்தில் தன்வினையாகப் பொருள் கொள்ளப்படும். செய்கை (எதிர்காலத் தொனி இதிலுண்டு), செய்தி (இறந்த காலத் தொனி இதிலுண்டு) என்பவை இதில் எழுந்த பெயர்ச்சொற்கள். செய்வு என்பதும் தொழிற்பெயரே. செய்வித்தலென்பது பிறவினை குறிக்கும். செய்விக்கை இதிற் பிறந்த பெயர்ச்சொல். செய்கை/செய்விக்கை என்ற இரண்டும் புணர்ந்து சேவுகையாகும். சேவுகை செய்தவர் சேவுகர்/சேவுகன்/சேவுகி ஆனார். இன்னுந் திரிந்து சேவகன்/சேவகி/சேவகர் ஆகும். சேவகம்/சேவை எனும் தொழிற்பெயர்களும் பிறக்கும். நம் சேவுகைக்கும் ஆங்கில serve இற்கும் தொடர்பிருக்குமோ என்ற ஐயம் எனக்குண்டு. சொன்னால் நம்பத் தான் ஆட்களில்லை. ரகரம் இடையிற் சேர்வதில் வியப்பில்லை. கோத்தல்>கோர்த்தல் ஆகிறதே? வகுதல்>வகிர்தல் ஆகிறதே? தேடிப் பார்த்தால் இன்னும் பலசொற்கள் கிடைக்கும். இனி இருத்தலென்பது இல் எனும் வேரிற் பிறந்தது. இல்>இர்>இரு. to exist, to sit, to stay என்று பல்வேறு பொருள்களை உணர்த்தும். இல்தல்> இர்தல்> இருதல், இருத்தல் என்பதெல்லாம் இவற்றின் தொடர்ச்சி.
சேவை செய்து இருப்பதென்பது சற்று கால நீட்சியைக் குறிக்கும். செய்வு+இல்தல்= செ(ய்)வில்தல். தொடர்ந்து சேவை செய்தல். இதுபோல் வருவதை “புதிய தமிழ்ப் புணர்ச்சி விதிகள்” எழுதிய இலக்கண அறிஞர் செ.சீனி நைனா முகம்மது கூட்டு வினைத் தொழிற்பெயர் என்பார். நகம்வெட்டு, சுமைதாங்கு, உருப்பெருக்கு போன்றவை அவர் சொல்லும் காட்டுகள். செய்வு+இல்= செவில் செவில்தல் என்பதை நம்பாதவர் குவில்தல், நவில்தலுக்கு என்ன சொல்வார்? குவில்= நெற்கதிர்களைக் கையிற்பிடித்துக் குவித்து அறுத்தல். இல்லுதலுக்கு அறுத்தல், பிரித்தலெனும் பொருளுமுண்டு. நா+இல்தல்= நாவில்தல்> நவில்தல் = நாக்கசைத்துப் பேசி யிருத்தல். தொடர்ச்சியாய்ப் பேசுவதையே நவில்தலென்பார். அதே போல செவில்தலும் தொடர்ந்து சேவை செய்வதே. செவிலும் பெண் செவிலி. (நகம்வெட்டி, மண்வெட்டி, சுமைதாங்கி, இடிதாங்கி, உருப்பெருக்கி, ஒலிபெருக்கி போன்றவற்றை நினைவு கூறுங்கள். இலக்கணம் புரிந்து போகும்.) செவிலன் ஆண்பாற்பெயர் = male nurse. எந்த அகரமுதலியிலும் பதிவு செய்யாத இதை நாம் உய்த்தே அறிகிறோம். செவிலர் = பால்தழுவாப் பெயர்ச் சொல். வெறும் nurse. ஆணோ, பெண்ணோ முகன்மையில்லை.
அன்புடன்,
இராம.கி.

Friday, April 12, 2019

Hotel ”

சென்னையின் 5 முத்திரை உயர்தர விடுதியிலிருந்த ஒரு தமிழறிவிப்பை” வியந்து நண்பர் முத்துநெடுமாறன் ஓர் இடுகையிட்டார். ”முத்திரைக்கு மாறாய் நட்சத்திரம் என்பதாய்” நண்பர் வெங்கட்ரங்கன் தெரிவித்தார். நான் ”5 தாரகை விடுதி" எனப் பரிந்துரைத்தேன். இதன்பின் ”விடுதிக்குப் பதிலாக உண்டுறை எனலாமா?” என்று நண்பர் கா.சேது கேட்டிருந்தார். இது என் சிந்தனையைத் தூண்டியது. ஆங்கிலச் சொற்பிறப்பியல் hotel (n.): என்பதை 1640s, "public official residence; large private residence," from French hôtel "a mansion, palace, large house," from Old French ostel, hostel "a lodging" (see hostel). Modern sense of "an inn of the better sort" is first recorded 1765. The same word as hospital என்று பதியும். தமிழர் முதன் முதல் விடுதியில் தங்கியது 18 ஆம் நூற்றாண்டில் தான் என்றெண்ணக் கூடாது. தங்குதல், வெறும் தங்கலல்ல. உணவோடு தங்கலே. பலவிடங்களில் தங்கலின்றி உணவளிக்கும் சாலைகளும் (restaurants) உள்ளன.

தென்பாண்டி நாட்டில் restaurant க்கு இணையாய் “ஊட்டுப்புரை” என்ற சொல் உண்டு. பல கல்வெட்டுக்களிலும் இது பயின்று வந்துள்ளது. இதன் பொருள் உணவளிக்கும் சாலை என்பதே. இருந்தும், அதைமறந்து, உணவகமெனும் புதுச்சொல்லை இன்று படைத்துவிட்டோம். திருநெல்வேலி, குமரியிற்கூட ஊட்டுப்புரையை மறந்துவிட்டார். (உணவிற்குக் காசு வாங்குகிறோமா? கொடையா? - என்பது வேறுகதை.) ஊட்டு= உண்பிக்கை, உணவு; ஊட்டி= உணவு; ஊட்டம்= உண்டி, உணவு என்ற பலசொற்களை இக்காலம் மறந்து விட்டோம். உணவு மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிகிறது. ஏராளம் சொற்களைத் தொலைத்து சொற்றொகுதிகளைக் குறைத்துவிட்டோம். நம்மிற் பலரும் தமிங்கிலம் விழைவதற்கு அதுவே காரணம். நம் சோம்பலை ஏற்கவும் தயங்குகிறோம். (சில இளைஞர் இன்னும் மேலேகித் தமிழெழுத்தையும் தொலைத்து உரோமனில் எழுதுகிறார். ஏதேதோ காரணங்கள் சொன்னாலும் அடிப்படையில் அது இறுகிப்போன சோம்பலே. We just don't care. We don't want to accept also.)

பின்னூட்டு= feedback என்ற சொல் மட்டும் இணையத்தின் முதல் தமிழ்மடற் குழுவான தமிழ்.இணையத்தால் புத்துயிருற்றது. நான் hotel க்கு வருகிறேன். இதன்பொருள் தங்குமிடம். பழந்தமிழ் மாந்தனின் இருப்பிடம் பெரும்பாலும் பள்ளத்திலேயே இருந்தது. இல்லுக்குத் துளை, பள்ளமென்று பொருள். ”மனை”யும் நிலைபேற்றுப் பொருள்கொள்ளும். ஊர்விட்டு ஊர்போயின், அக்காலத்தில் தங்குவதற்குப் பொது இல்கள் இருந்தன. பொதியில், பின் கோயிலையுங் குறித்தது. அம்பலம்= கூடுமிடம். நம்மிடம் உள்ள கூட்டச் சொற்கள் கணக்கில. உறை, ஊர், களம், குடி, குப்பம், கும்பை, குலம், கொட்டாரம், கோட்டம், சேரி, தொழுவம், பாக்கம், மடம், மடு, மண்டபம், மண்டலம் மண்டி, மந்து, மந்திரம் மன்று/மன்றம் எனப் பல்வேறு சொற்கள் உறையுள் தொடர்பைக் குறிக்கும். பெரும்பாலும் குகைகள் பள்ளம் தான். ”பட்டி, பட்டினம் பள்ளி, பண்னை, குட்டம், பதி” போன்ற சொற்களும் பள்ளம் தொடர்பாய் எழுந்தவையே. நாம் இந்த இடுகையில் தகரச் சொற்களை மட்டும் பார்க்கப் போகிறோம்.

துல்>துள்>துளை. துல்லின் துளைப்பொருளில் பல சொற்களுண்டு. நான் இடப்பொருள், பள்ளப்பொருள், கீழ்மைப்பொருள் தொடர்பாயுள்ளவற்றை மட்டுமே பேசுகிறேன். துல்>தல்>தலம்= இடம். முன்னால் ஸ் சேர்ந்து சங்கதம் ஸ்தலமாக்கும். ஆனாலும் சிலர் இதை மறுப்பார். ”சங்கதத்தில் இருந்தே தமிழ் கடன்வாங்கியது” என்று காரணமின்றி அடம்பிடிப்பார். ஸ்-ஐ வெட்டி தமிழ், தலம் ஆக்கியதாம். ஏன் ஸ்-ஐச் சங்கதம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?- எனில் மறுமொழி வராது. ”வேதம், அதுயிது” எனப் பேச்சைத் திருப்புவார். ”நண்பரே! ஒரு சொல் மட்டும் பாராதீர். தொடர்புடைய சொற்கூட்டம் பார்த்துப் பின் ”சங்கதம் கடன் வாங்கியதா, தமிழ் கடன் வாங்கியதாவென முடிவு செய்யுங்கள்” என்று பலதடவை சொல்லியாகி விட்டது. ”உன் உற்றார், உறவினர், நண்பர் கூட்டத்தை சொல், நீ எப்படி என்று நான் சொல்கிறேன்” என்பதில்லையா? அதுபோல் தான் சொற்களிலும். ”சங்கதம் மேடு. தமிழ் பள்ளம்”.என்பது ஒருவித மூட நம்பிக்கை. ஆமாய்யா, இப்பப் பள்ளம் பற்றியே இங்கு பேசுகிறோம்!!!
 
தல்>(தள்)>தளி= இடம், கோயில். எங்கள் சிவகங்கை மாவட்டத் திருப்புத்தூர் இறைவரின் பெயர் திருத்தளி நாதர். தல்>த(ல்)ங்கு> தங்குதல்= வைகுதல், அடங்குதல், நிலைபெறுதல். (பெரும்பாலும் ங்கு என்பது குறிப்பிட்டவினை தொடர்ந்துநடப்பதைக் குறிப்பது continuing verbs have this ங்கு. இப்பழக்கம் பன்னூறு வினைச்சொற்களில் உண்டு. ங்கு சேரும்போது முன்னுள்ள ல் ஒலிப்பில் தெளிவாய் வராது நாளாவட்டில் இது மறைந்து போகும். இப்படிப் பல சொற்களில் ஆகியுள்ளது.) தல்>(தள்)>தள்+கு> தட்கு>தட்குதல்= தங்குதல், பதிதல், கீழிருத்தல் (லகரம் ளகரமாகிப் பின் புணர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறது.) தல்>தள்>தள்+கு>தட்குதல்> தக்குதல்= தங்குதல், கீழிருந்தல் (ட்கு என்பது போலியாய் க்கு என்றாகும். இப் பழக்கம் தமிழிலும் பாகதத்திலும் உண்டு.) தக்கு> தக்கணம்= கீழிடம். வடக்கே உத்தரம், தெற்கே தக்கணம் (இந்தியாவின் விந்தைப் பூகோளத்தில் வடக்கும் மேற்கும் உயரம். கிழக்கும் தெற்கும் பள்ளம். தக்கணம் பின் தெக்கணமாகும். தக்கு>தெக்கு>தெற்கு. தல்>தெல் என்பதே தெற்கின் மூலச்சொல். தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நம்மூருக்கு இறக்குமதியான தென்னைக்கும் தெற்கிற்கும் தொடர்பில்லை, 

தட்கியது தடகும், (புள்ளியின்றி ஒலிக்கும்.) பின் தடவும். அதன்பொருள் “கீழிருக்கும்”. தடவியது தடமென்றும் பொருள்கொள்ளும். வண்டிச்சக்கரம் அழுத்தியது தடம். பாதங்கள் அழுத்தப் போடப்படுவது தடம். களிமண்ணை உருட்டிக் கோளமாக்கி அதனுள் குழிவாக்கிச் (= தடவி) செய்வது தடவு> தடா= பானை, பானையிலும் பெரியது தடாகம்= குளம்; தட்குதல்>தட்டுதல், தள்> தள்+து =தட்டு. மேட்டை அடித்து அடித்துப் பள்ளமாக்குவது. தட்டு= ஒரே அளவில் தகடாக்கியது. தட்டித்தல்>தடித்தல்= தங்குதல், உறைதல். தள்+ந்+இ= தள்நி>தணி>தணிதல்= தாழ்தல்; தமத்தல்= தணிதல்; தள்> தரு=  நிலைப்படும் மரம். தரு>தரி>tree= நகராது நிலைத்து நிற்கும் இயற்கை உயிர். நிலைத்திணை. தரு+இ+தல்= தரித்தல்= நிற்றல்; தரி> தரிப்பு= தங்குகை, இருப்பிடம்; தரு>தரை= நிலம் (தலம் தமிழில்லை என்றால் அப்புறம் தரையும் தமிழில்லை என்றாகும். கூட்டமாய்ப் பல சொற்களை ஏன் பார்க்கிறோமென்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா?

அடுத்துத் தாகாரச் சொற்களுக்கு வருவோம். தல்>தள்>தழு>தாழ்> தாழ்வு= கீழ்நிலை; தாழ்வு>தாவு= பள்ளம். உறைவிடம். வேதியல் (chemistry), பூதியலில் (physics) isotope என்பாரே அது இசைத்தாவு. இசைந்துநிற்கும் தாவு. நிறை (weight) வேறுபட்டாலும் முறைப்பட்டியலில் (periodic table) ஒரே இடம் என்று பொருள்; தாழ்ங்குதல்= தாங்குதல்= இளைப்பாறுதல், தாமதித்தல்; தாவளம்= தங்கும் இடம். இதுதான் அக்காலத்தில் lodging-இற்கு இணையான சொல். கல்வெட்டுக்களிலும் வந்துள்ளது. தாவளக்காரர்= தாவளத்தில் தங்குபவர்; தாவணி= சேர்ந்திருக்கும் இடம் மாட்டுத்தாவணி என்பது இன்றும் மதுரையில் மாடுகளை சேர்த்துவைத்து நடக்குஞ் சந்தை. தாவணியடித்தல்= காரியமின்றி ஒருவன் வீட்டில் தங்குகை; தாணையம் போடுதல்= உறவினர் பலர் ஒரு வீட்டில் பலநாள் கூடியிருத்தல். தாவடி= பயணம்; தாவரம்= நிலத் திணை. (தாவரம் வடமொழிச்சொல்லெனப் பலரும் நினைப்பார். நானும் ஒருகால் நினைத்தேன். நகராது ஒரு நிலத்தில் தங்கியிருப்பதால் அது நிலத் திணை யானது. இது கனகச்சிதமான சொற்கட்டு. தாவரசங்கமம்= வீட்டுப் பண்டங்களான அசையும்பொருளும் நிலம், வீடு முதலிய அசையாப் பொருளும். சிவபுராணப் பாட்டில் மாணிக்கவாசகர் இதைப் பயனுறுத்துவார்.

தாவரித்தல்= தாங்குதல்; தட்டுத்தாவரம்= புகலிடம்; தாவித்தல்> தாபித்தல்> ஸ்தாபித்தல்= நிலைநிறுத்தல். (இங்கும் ஸ் சேர்ந்ததால் இது வடமொழி ஆகாது. தாவித்தலென்பது நல்லதமிழ்.. தாபி(bi)த்தல் எனும்போது வடமொழி ஓசைபெறும். அதைத் தவிர்க்கலாம். தாயம்= தங்குமிடம், தாயக் கட்டம், பரமபதம் ஆடும்போது ஒன்றோ இரட்டை ஆறுகளோ போட்டால் தாயம் என்பார். போய்ச்சேரும் இடத்தையும் தாயமென்பார். dice ஐத் தாயக் கட்டை என்பார். தங்குமிடம் என்பதையே தாயங் குறிக்கிறது. தாயகம் என்பதற்கு தாய்வழிபிறந்த இடமென்று ஒருபொருள் இருந்தாலும், “:அடைக்கலம்” என்ற பொருளுமுண்டு. அது தங்கும் பொருளில் வந்தது. தாயத்தார் தாய்வழி உறவுமுறையார் என்பதோடு ஒரே இடத்தில் உரிமைகொண்ட கூட்டத்தார் என்ற பொருளுமுண்டு. இறந்து பட்டோரைக் குத்தவைத்து உட்கார்த்திப் புதைக்கும் வாயகன்ற சால், பாண்டத்தைத் தாழி என்பார். இதற்கு வைகுந்தம் என்ற பொருளுமுண்டு. ஆதிச்சநல்லூர்  தாழி இப்போது எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது. தாழ்மதம்> தாமதம்> தாமசம். ”உங்களுக்கு எங்கே தாமதம்/தாமசம் என்பது தென்பாண்டிநாட்டிலும் கேரளத்திலும் உண்டு. ”எவிடேயா தாமசம்?”. தானம் = இடம்; இந்துத்தானம், பாக்கித்தானம் என்கிறாரே அதுவும் தமிழ்ச் சொல் தான். 10கள் இருக்குமிடம் பத்தாந்தானம் (tens palce) , இதுபோல் நூறாம் தானம் (hundreds place).

அடுத்தது விடுதி எனும் சொல். விடுதல் = தங்குதல். காவினுள் நடந்த விட்டார்களே” சீவக. 1905. “விடுதியே நடக்கவென்று நவிலுவீர்” பாரதம் சூது, 165) தெலுங்கு: விட்டி; க பிடதி. ம.விடுதி இதற்கு மாறாய் மடம், சந்திரம் என்ற சொற்களும் உண்டு. மடுத்தல் என்பது சமையலறை. மடை = சமையல். உணவு தருமிடம் = மடம். சாந்திருக்கும் இடம் சா(ர்)த்திரம்>சத்திரம். பல்வேறு சாத்துக்கள் போகும் வழியில் தங்கிப்போகும் இடங்கள் சத்திரம் என்பார். இன்றைக்கு நகரத்தாரும் நாடாரும் பல்வேறு இடங்களில் நகரத்தார் சத்திரங்களும், உறவின்முறைச் சத்திரங்களும் கட்டிவைத்திருப்பார். இது நெடுங்காலப் பழக்கம். அங்கே பெயருக்கு ஒரு மகமைப்பணம் கட்டிவிட்டுத் தங்கிக் கொள்ளலாம்.

hotel க்கு என் பரிந்துரை விடுதியே. Lodge = தாவளம். restaurant = ஊட்டுறை (சேதுவின் உண்டுறையைச் சற்று மாற்றியுள்ளேன். ஏனெனில் ஓய்விற்காக அங்கு சிறுநேரம் உறையவுஞ் செய்கிறோம்.)

அன்புடன்,
இராம.கி.     

Wednesday, April 10, 2019

கொல்/பொன் - 2

பொல்லெனும் வேரில் ஒளி/பொலியெனும் கருத்தும் பொன்னெனுஞ் சொல்லும் ஏற்பட்டன. பொலமென்றாலும் பொன்னே. (ஏராளமான சங்கத்தமிழ் வரிகளுண்டு. வேந்தனரசைக் கேட்டால் அடுத்தடுத்து விவரிப்பார்.) தகதக வென ஒளிர்ந்ததால் தங்கமானது. கொல்லெனும் மஞ்சட்பொருட் சொல்லும் அதற்குப் பயன்பட்டது. கொல்லின் தொடர்ச்சியாய் ஒருமலைக்கே கொல்லி யெனப் பெயரிட்டார். அடுத்து நாம் காணவேண்டியது, பொன்னெனும் விதப்புச் சொல்லுக்குப் பொதுமைப் பொருள் எப்படியேற்பட்டது என்பதாகும். தமிழில் (மட்டுமல்ல, பல மொழிகளிலும்) விதப்புச் சொல்லே முதலில் உருவாகும்.. பின் பயன்பாட்டில் கொஞ்சங்கொஞ்சமாய் பொதுமைப் பொருள் பின் வந்துசேரும். இவ்வழக்கத்தை ”மொழியியல் விதி” என்றே சொல்லலாம்.

காட்டாக, மாட்டுப்பாலில் திரளுங் கொழுப்பை நெய்யென்போம் [நுள்>நெள்> நெய்; தோலில் ஒட்டினால், நெருங்கித் தங்கினால், சட்டென நெய் விலகாது. நெடுநேரம் நீரில் அலசினாலும் போகாது நிலைக்கும். சிகைக்காய்த் தூள்போல் ஏதேனுமிட்டு அலசினாற்றான் விலகும். பழம்மாந்தனுக்கு அதுவே வியப்பு ஆகும். சிகைக்காய்போல் ஒன்றை அறியும்வரை நெய்யின் ஒட்டு/நெருக்கம் உள்ளத்தில் தைக்கும். அந்நெருக்கத்தைத் தொடுவுணர்வில் அவனுணர்வான். அதிற்கிளைத்த விதப்புச்சொல் நெய்.] மாட்டுப்பாலில் பெற்றதுபோல் மற்ற விலங்குகளிலும் நெய் பெற்றபின், மாட்டுவிதப்பில் (from the specificity of cow) இருந்து முதல்நிலைப் பொதுமைப்பொருள் வந்தது. (மாட்டிலிருந்து எல்லா விலங்கிற்கும் வந்த பொதுமை.) விலங்குநெய்க்குக் பழகியவன் அடுத்து எள் விதையிற் பெற்றநெய்யை ”எள்நெய்” என விதப்பான். அடுத்தவளர்ச்சியில் மற்றபருப்புகளில் நெய்பெற்றபோது, எள்நெய்>எண்ணெய் என்னும் விதப்புச் சொல் இரண்டாம் நிலைப் பொதுமைப்பொருள் கொள்ளும்.

அடுத்த வளர்ச்சியில் கடலை எண்ணெய், புங்க எண்ணெய், விளக்கு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் போன்ற சொற்களில் பொதுமைப்பொருள் விரிந்தது. உள்ளே மறைந்துநின்ற எள்ளை இப்போது யார் நினைவுகூர்கிறார்?! நல்லெண்ணெய் என்கிறோமே அது good oil ஆ? இல்லை. எண்ணெய் பொதுமை ஆனபின் நல்ல என்பதைச் சேர்த்து விதப்பாக்கிய சொல். நல்ல= கருத்த. கருத்த எள்ளில் பெறப்படும் எள்நெய் நல்லெண்ணெய். (எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என 3 பிரிவுகளுண்டு. கருப்பு எள் அதிக மருத்துவப் பண்பு கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து உண்டு என்பார். வெள்ளை, சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதாம்.) இன்று கருத்த எள்ளில் மட்டுமின்றி எல்லா எள்ளிலும் எள்நெய் எடுக்கிறார். ”மரச்செக்கு” என்பதே அடையாய் மிஞ்சுகிறது. 

இன்னும் அடுத்தவளர்ச்சியில் தாவர எண்ணெய்க்கு மட்டுமின்றி பாறை/கல்/மண்ணில் பெறும் எண்ணெய்களுக்கும் பாறை(எள்)நெய், கல்(எள்)நெய், மண் (எள்)நெய் என்போம். மொழிவளர்ச்சி என்பது இப்படித்தான் பெரும்வியப்பு ஆகும். மக்கள் சிந்தனையோட்டத்தை யாரளக்க முடியும், சொல்லுங்கள்? காலம் ஓட ஓட, விதப்புப்பொருள் பொதுப்பொருளாகும், மீள வேற்றுருவில் விதப்பாகும். இப்படி மாறிமாறி, இயங்கியலில் (dialectics) சொல்வது போல் (எதிர்களின் ஒன்றிப்பாய் மீண்டும் எதிர்களாய் - unity of opposites and one becoming into oppoosing twio) நீள்சுருளில் (helical) சொல்வளர்ச்சி மொழிகளில் ஏற்படுகிறது. பொன்னிற்கும் அப்படியொரு வளர்ச்சி தமிழில் ஏற்பட்டது.

[இன்னொரு மொழியியல் விதியையுஞ் சொல்கிறேன். எங்களூரைச் சேர்ந்த திரு, பக்கிரிசாமி ”அறுபுலன் சொற்கள் ஐம்புலன் சொற்களிலிருந்தே தொடங்கும்.” என்பார். நல்லது, கொடியது, பண்பு, சிறப்பு, அறம் போன்ற கருத்துமுதற் சொற்களை (conceptual words; இவற்றை அறுபுலன் சொற்கள் என்பார்) ஐம்புலன்களால் (கண்ணால், காதால், மூக்கால், வாயால், தொடு உணர்வால்) அறிய ஒண்ணுமோ? How does a conceptual word form? எண்ணிப் பாருங்கள். நெல்லை ஐம்புலனால் அறியலாம். நெல்லிருந்தால் அரிசி. அதன் வழி சோறு. நாம் பசியாறலாம். பசியாறினால் மனம் அமைதி யுறும். அதனால் தான் ”நல்”, ’நெல்லிற் பிறந்திருக்குமோ?’ என ஐயுறுகிறோம். சென்னையில் சிலகாலம் நான் வசித்தபகுதி சோழகங்க நல்லூர். அது பல்லவ அரசரால் பார்ப்பனர் அல்லாதாருக்குத் தானமாய்க் கொடுக்கப்பட்டது. ஏரிவேளாண்மை இருந்த ஊர். இங்கே நெல்லூர்>நல்லூர் ஆயிற்று. இது போல் தமிழகமெங்கும் பல நல்லூர்கள் உள்ளன. அவையெல்லாம் நெற்பின்புலம் காட்டுகின்றன.

இன்னொன்றையும் பார்க்கலாம். இப்போது நான் சென்னையில் வசிக்கும்பகுதி திருமங்கலம். இது பார்ப்பனருக்கு பல்லவ அரசன் தானமாய்க் கொடுத்த ஊர் இது மங்கல்>மங்கள்>மஞ்சளில் பிறந்த சொல். கொடுவெனும் தின்மைப் பொருள் வளைவுகுறிக்கும் கொடு”வெனும் ஐம்புலன்சொல்லில் கிளைத்தது, பண்பெனும் அறுபுலன்சொல் பள்>படு எனும் ஐம்புலச்சொல்வழி to set பொருளில் கிளைத்தது. எல்லோரும் போற்றும் அறுபுலன் சொல்லான ”அறம்” எப்படிப் பிறந்தது? வெட்டொன்று துண்டிரண்டாக கொள்கை, சட்டம், ஆணை, என அறுத்ததில் பிறந்தசொல் அறம் (அறுத்தல் என்பதை ஐம்புலனால் அறிய முடியும் தானே?) இதுபோல் ஒவ்வொரு அறுபுலன் சொல்லிற்கும் பின் ஓர் ஐம்புலன் சொல்லுங் கருத்துமிருக்கும் அதைச்சரியாய் அடையாளங் காண்பதிற்றான் நாம் பலநேரம் தவறுகிறோம். நம் சிந்தனையில் பொருள் முதல் வாதம் தொலைத்துக் கருத்துமுதல் வாதம் ஊடிவிடுகிறது. தடுமாறி விடுகிறோம். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? If you cannot feel it with your senses, you can never define it. A certain materiality has to stand at the back of every idea word.]   . 

சரி, பொன்னுக்கு வருவோம். முதலில் பொன் என்பது, ஒளிபொருந்திய தங்கத்தை, விதப்புப்பொருளை மட்டுமே முதலில் குறித்தது. பின் அதன் பொருள் விரிந்து மாழையெனும் பொதுப்பொருளைக் குறிக்கத் தொடங்கியது. தங்கால் பொற்கொல்லனார் காலத்தில் கொல்லிற்குப் பொதுப்பொருள் வந்து விட்டது போலும். நற்றிணை 13 இல் 6-7 ஆம் வரிகளில் “கொல்லன் எறி பொன் பிதிரின் சிறுபல தாஅய் வேங்கை வீ உகும் மலை” என்ற சொற்றொடரில் இதைச் சரியாயறியலாம். சூடாய்ச் சிவந்த மாழையில் சுத்தியலால் அடிக்கும் போது பொறிகள் தெறித்தெழுமே, அவற்றைப் ”பொன்பிதிர்” என்று புலவர் குறிக்கிறார். இது விதப்புத் தங்கமா? பொது மாழையா? அடுத்து வருவது,,

நல் இணர் வேங்கை நறுவீ கொல்லன்
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கிச்
சிறுப;ல் மின்மினி போல

எனும் அகநானூறு 202 ஆம் பாடலின், 5-7 ஆம் வரிகள். இங்கும் பிதிர்வு சொல்லப்படுகிறது, ”பிதிர்த்தல்” என்பது எல்லா மாழைகளுக்கும் ஏற்படலாமே? ”பொன்” இங்கே தங்கத்தைக் குறிக்கிறதா? ”மாழை” எனும் பொதுப்பொருள் அல்லவா குறிக்கிறது? இப்பொதுப்பொருள் வழக்கத்திற்றான் வெண்பொன் (வெளிர்ந்த பொன்), செம்பொன், இரும்பொன் என்ற சொற்கள் எழுந்தன. அகராதிகளிலும் இவையுள்ளன. காட்டுக்களையும் தேடமுடியும். ஒருமுறை நீங்கள் தேடிப்பாருங்களேன். சரி கொல்லிமலையில் கொல்/பொன் கிடைத்ததை எப்படிநாம் அறிகிறோம்? இளஞ்சேரல் இரும்பொறையை பதிற்றுப்பத்தின் 81 ஆம் பாடலில் 22-26 ஆம் வரிகளில் பெருங்குன்றூர் கிழார்.கீழ்க்கண்டவாறு சொல்வார். 
.
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயர்க் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து
மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை ஆயத்து
               
இதற்குப் பொருள் சொல்கையில் உரையாசிரியரிலிருந்து சற்றுநான் வேறு படுவேன். ”காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” = காந்தள்மாலை அணிந்த செழுங்குடிச் செல்வர். அதாவது கொழுத்த பணக்காரர். ”கலிமகிழ் மேவலர்” = ஆரவாரமும் மகிழ்ச்சியும் மேவியவர். பணக்காரன் மகிழ்ந்து கிடக்கும் போது தானே கொடை தருவான். ”இரவலர்க்கு ஈயும்”= இரவலர்க்குக் கொடுக்கும்..செல்வர் இங்கு என்னகொடுப்பார்? சொத்தா? இல்லையே? செலாவணியுள்ள பொற்காசுகள் தானே? அக்காலக் காசுகள் எல்லாம் தட்டை ஆனவை அல்ல. குன்றிமணி, கழஞ்சு, காணம், வேப்பங்கொட்டை மாதிரிச். சற்று தட்டையான குண்டுருவம் (flattened spheroid) பெற்றும் இருந்ததாகவே பல சங்க இலக்கிய வரிகள் சொல்கின்றன.

இக்காசுகள் எப்படியிருக்கின்றனவாம்? என்று பெருங்குன்றூர் கிழார் இரு மலர்களை உவமிக்கிறார். கொல்லிமலையில் வண்டுகள் மொய்க்கும் பெருவாய் மலரும் (இருவாட்சி), பசும்பிடியும் (இக்காலப் ”பசிய மஞ்சள்” நிறங் கொண்ட மனோரஞ்சிதம்) இவ்வகைத் தங்கத்திற்கு கிளிச்சிறை என்றொரு பெயர்சொல்வர். மின் உமிழ்ந்ததுபோல் இருந்ததாம். மின் = ஒளி;. தங்கம் நிறைந்த செல்வர்களின் ஆயம் இங்கே “சுடரிழை ஆயம்” எனப்படுகிறது. கொல்லியில் தங்கம் நிறையக் கிடைத்ததால், கொல்லித்தங்கத்தை பெருவாய் மலருக்கும், பசும்பிடிக்கும் புலவர் உவமிக்கிறார். இரண்டும் இயற்கையில் கிடைப்பன. தங்கமும் இயற்கையில் கிடைப்பது. கொல்லிச் செல்வருக்கு தங்க்கம் அதிகமாகவே கிடைத்தது. ஏனெனில் திறந்த கட்டுச் சுரங்கம் (open cast mine) அங்கிருந்தது.

(தங்கத்தில் 4 வகையுண்டு. முதல்வகை, சாதரூபம்- பிறந்தபடியே இயல்பாய் இருப்பதற்குள்ள பெயர். இரண்டாவது, கிளிச்சிறை- கிளிச்சிறகுபோல கொஞ்சம் பசுஞ் (பச்சைச்) சாயல்கொண்ட பொன்; மூன்றாவது, ஆடகம்- கொஞ்சம் குங்குமச்சாயல் கொண்டது; ஆடகன்= பொன்னிறமுடைய இரண்யகசிபு, ஆடகமாடம் = பொன்பதித்த உப்பரிகை. திருவனந்தபுரப் பெருமாளை ஆடகமாடத்துப் பெருமாளாய்ச் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் சொல்வார். நாலாவது, சாம்பூநதம்= ஒளிசாம்பி, மங்கிப்போன பொன். மேலே சாதரூபம், சாம்பூநதம் ஆகிய இரண்டும் வடமொழி வடிவில் இருப்பது மனதிற்கு ஒரு மாதிரியாய் இருக்கும்; என்ன பண்ணுவது? இடைக் காலத்தில்,நம்மவர் அளவுக்கு மீறி வடமொழியைப் பயன்படுத்தினார். இதுக்கெல்லாம் தமிழ் எதுவோ, அது தெரியாமலே போனது.. வேண்டுமெனில் புதுப்பெயர் வைத்துக்கொள்ளலாம். என்னசெய்வது? தமிழில்பேசினால் இளக்காரம், தஸ்ஸு புஸ்ஸென்றால் உயர்த்தியென நினைக்கும் அடிமைப் புத்தி நம்மைவிட்டுப் போகவில்லையே!)

சரி சுரங்கம் அது இது என்று இராம.கி. சொல்கிறானே? அதற்கு ஆதாரம் என்ன? தாயங்கண்ணனாரால் அகநானூறு 213 ஆம் பாட்டில் 11-15 ஆம் வரிகளில் இவ் விவரிப்புச் சொல்லப்படும்.(தாயங்கண்ணனார் மாமுலனார் மாதிரி. பாட்டுள் வரலாறுச் செய்தியிலையெனில் அவருக்கு இருப்புக் கொள்ளாது. இவர் போன்ற புலவரால் தான் நம்மால் வரலாற்றை மீட்டெடுக்க முடிகிறது.) 

------------------------------------------பகல்செலப்
பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப்
பெருமரம் கொன்ற கால்புகு வியன்புனத்து
எரிமருள் கதிர திருமணி இமைக்கும்
வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை

”பகல்முடிந்து கதிர்சாயும் நேரத்தில், பெருமரங்கள் வெட்டியதால் காற்றுப் புகும் அகன்றவனத்துள் எரிப்பதுபோல் கண்ணை மருட்டிக் கதிர்விடும் மணிக் கற்கள் இமைக்கும் சேரனின் கொல்லிக் குடவரை” என்று இவ்வரிகளுக்குப் பொருள்சொல்வர். ”பெருமரம் கொன்ற கால்புகும் வியன்புனம்” என்பது தெள்ளத்தெளிவாகச் திறந்தகட்டுச் சுரங்கமுள்ள இடத்தைக் குறிக்கிறது. இச்சுரங்கம் எப்படி உள்ளதாம்? அதில் தங்கக் கீற்றுகளும், மணிக்கற்களும் ஒளிவிடுகின்றனவாம். மறவாதீர். இருள்மங்கும் நேரம். ”எரிமருள் கதிர“ என்ற சொற்கூட்டு தங்கத்தை அன்றி வேறெதைக் குறிக்கமுடியும்? மணிகள் இருந்தால் அதை ”எரிமருள் கதிர” என்றுகுறிப்பாரா? மறவாதீர், தேய்த்துப் பாளபளப்பு ஏற்றாதவரை, பாடஞ் செய்யாதவரை, இயற்கையில் கிடைக்கும் மணிக்கற்கள் ஒளிவிடா. இங்கு ஒளிவிடுகிற காட்சி தெள்ளத்தெளிவாய்ச் சொல்லப்படுகிறது. திரு என்பது இங்கே பொற்செல்வத்தையும், மணி என்பது மணிக்கற்களையும் தான் குறிக்கின்றன.
       
இன்னொரு பாட்டில் (புறம் 156) 405 ஆம் வரிகளில் பெருஞ்சித்திரனார் குமணனைப் பாடும் போது ”பிறங்குமிசைக் கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்” என்பார் மிறங்குமிசை என்பது இளிபொருந்திய என்றுபொருள் பிறங்கு என்ற பெயரடை பொதுவாய் metalic lustre க்குத் தான் சொல்வது. 

நான் இன்னும் பல சங்க இலக்கிய வரிகளை எடுத்துக் கூறலாம் ஆனால் கொல்/பொன் பற்றிச் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேனென்று எண்ணுகிறேன். வேறேதும் தோன்றின் பின்னால் செய்வேன்,

அன்புடன்,
இராம.கி.

Tuesday, April 09, 2019

கொல்/பொன் - 1

https://www.facebook.com/krishnan.ramasamy.31/posts/10218571448016554 என்ற இடுகையில் தமாசுக்கசு எஃகுக் (wootz steel) குறுவாள் பற்றியும் தமிழரின் பங்குபற்றியும் வெளிவந்ததை முன்வரித்து இருந்தேன். அதற்கு முன்னிகையாய், “அடித்து அடித்து இரும்பைக் கொல்லுவதால் கொல்லன்” என திரு. வேந்தன் அரசு எழுதியிருந்தார். “கிடையாது. தமிழன் முதலிலறிந்த மாழை பொன் அதன் இன்னொருபெயர் கொல். பொன்னே பின் பொதுப் பெயராகி, வெண்பொன், செம்பொன், இரும்பொன் என்றுபல மாழைகளுக்குப் பெயராகியது. கொல்லும் பொதுப்பொருள் கொண்டது. கொல்லில் வேலை செய்தவன் கொல்லன்” என மறுமொழித்தேன். இதையேற்காத வேந்தனரசு, “பொன்னுக்கு கொல் எனும்சொல் எங்கு காணலாம்? தங்கால் பொற்கொல்லனார் என்பது ஏன்.?” என வினவினார்.

இன்னொரு நண்பரான கருப்புச் சட்டைக்காரரோ, இதற்கும் மேலே போய், நக்கலாய், “தமிழர் முதலில் அறிந்த மாழை பொன்னா??? அப்படி எனில் தமிழர் இந்த கற்காலம், இரும்பு காலம் என்று உலகவழக்கு எதையும் வாழவில்லை? அட்லாண்டிசு, வகாண்டா, அமேசான் போல தமிழர் குமரிக்கண்டத்திலும் வாழ்ந்தனர் போலும். மேலும் வகாண்டா மக்கள் வைப்பிரேனியத்தை அறிந்ததுபோல் தமிழர் பொன்னை அறிந்து அனைத்தையும் பொன்னால் இழைத்திருந்தனர் போலும்” என்றெழுதினார். இவரிருவரும் இப்படி வினவுகையில், உடன் விடையிறுக்கவியலாது, கூர்ச்சரம், இராசத்தானம் போன்றவிடங்களில் நான் ஊர்சுற்றிக் கொண்டிருந்ததால், இப்போது திரும்பிவந்தபின் எழுதுகிறேன். முதலில் இக்கேள்விக்கு அடிப்பார்வை கொடுக்கும் வேதியல் விவரங்களைப் பார்த்துவிடுவோம்.  ..

திண்ம (solid), நீர்ம (liquid), வளிம (gas) வாகைகளில் (phases), மாழைகளாயும் (metals), அல்மாழைகளாயும் (non-metals), ஆலாதிகளாயும் (interts), இதுவரை 118 எளிமங்கள் (elements) மாந்தரால் காண/செய்யப் பட்டுள்ளன. வினைமைகளையும் [reactivities] தன்மைகளையும் (properties) பொறுத்து இவ்வெளிமங்களை ஒரு முறைப்பட்டியலில் வேதியலார் வகைப்படுத்துவர். முறைப்பட்டியலின் 11 ஆம் குழுவில் (group; இதை 1b என்பாருமுண்டு ), 4 ஆம் பருவத்தில் (period) செம்பும் (Copper; Cu 29), 5 ஆம் பருவத்தில் வெள்ளியும் (Silver; Ag 47). 6 ஆம் பருவத்தில் பொன்னும் (Gold; Au 79), 7 ஆம் பருவத்தில் உரோஞ்செனியமும் (Roentgenium; Rg 118) அமையும். இந்நிரலின் கடைசி மாழை இயற்கையில் கிடைப்பதல்ல. மாந்தன் தன்முயற்சியில் செயற்கையாய்ச் செய்தது.

முதலில்வரும் செம்பு ஓரளவு வினைமை கொண்டது. உலகின் பல்லாண்டு அகவையில் பெரும்பாலும் அது செப்புக் கந்தகையாகவே (Copper Sulphide) கிடைக்கிறது. செம்பை எளிமமாக்கியபின் காற்றில் கந்தக இரு அஃகுதை (Sulpher di-oxide) வளி இலாதவரை, செம்பை ஓரளவு காப்பாற்றி விடலாம். காற்றில் அவ்வளி நுல்லியனில் 1 பங்கு (parts per million) இருப்பினும், செம்பு தன் பளபளப்பிழந்து செப்புக் கந்தகையாய் (CuS2), அல்லது செப்புக் கந்தக அஃகையாய் (CuSO4) மாறிப் பல்லிழிக்கும். நாட்பட, நாட்படச் செம்புச் சிலைகளும் கலன்களும் பாசம் பிடிப்பது இப்படித்தான். நாம் இந்தப் பாசத்தை திருநீறாலோ, புளியாலோ, எலுமிச்சையாலோ தேய்த்து அகற்றிக் கொண்டிருக்க வேண்டும். 

அடுத்து வரும் வெள்ளியோ கந்தக இரு அஃகுதையோடு அதேயளவிற்கு வினைபுரியாது. எனவே எளிதில் பூண்டுறாது (not become a compound), தூய, பரி எளிமமாகவோ (pure, free element), அன்றிப் பொன்னோடும், மற்ற மாழைகளோடும் சேரும் அட்டிழையாகவோ (alloy), அன்றி ஆர்ச்சினைட் (argentite) குளோர் ஆர்ச்சிரைட் (chlorargyrite) போல் மண்ணூறல் பூண்டாகவோ (mineral compound) அமையும். இப்போதெலாம் செம்பு, பொன், காரீயம் (lead), துத்தநாகம் (zinc) போன்ற மாழைகளைக் கனிமங்களிலிருந்து தூவிக்கும் (refining) போதே வெள்ளி பெறப்படுகிறது. தனித்துக் கிடந்த வெள்ளிகளெலாம் ஏற்கனவே மாந்தரால் பிரித்துப் பொறுக்கப்பட்டு விட்டன. பூண்டுறாது தனித்தே ஒருகாலத்தில் வெள்ளி கிடைத்ததால், அதை உயர்தனி மாழை (noble metal) என்றார்.

பொன்னோ வெள்ளியினுஞ் சிறந்த உயர்தனிமாழை. மாந்தனுக்குக் கிட்டிய மாழைகளில் அதுவே மீக்குறை வினைமை கொண்டது. வெகு எளிதில் பூணாது, பல நூறாண்டுகளுக்கு எளிமாய்க் கிடைத்தது. தங்கத்தின் சிறப்பே அதுதான். அதனாற்றான் பொன்னை முதலிற் கிட்டிய மாழையென்பார். மற்ற மாழை மண்ணூறல்களோடு கலந்து கனிமங்களாய்க் கெட்டிப் பட்டோ, மண்/மணலாகவோ கிடந்ததை நீர்பாய்ச்சிப் பிரித்தார். இன்னுமரிதாய், பாறைகள் ஊடேயும் பொன் சிறைப்பட்டிருந்தது. காலங்காலமாய் நடக்கும் மழை, புயல், பனி போலும் இயற்பாடுகளால், பொன்கலந்த கட்டி, மண், மணல்கள் பொடிப் பொடியாகி ஆற்றுப்படுகைகளுக்கு வந்துசேர்ந்தன. மாந்தன் பொன்னை முதலிலறிந்தது ஆற்றுப்படுகைகளின் வழிதான். [நம்மூர்ப் பொன்னியின் ஆற்றுப்படுகையிலும் பொன்கிடைத்தது. கொல்லி மலையும் பொன்/மணி கிடைத்த மலையே. (கொல்>கொல்லி). கொல்தொடர்பால் கோலார், அதைக் கோலாள>குவலாள புரமெனுஞ் சொற்கள் பிறந்தன. (கொல்லுக்கு பொதுமைப் பொருள் வந்தபின், மாழை/மணி கிட்டியதால் கொ(ல்)ங்கு என்றபெயர் ஏற்பட்டதோ என்ற ஐயமும் எனக்குண்டு. கொல்தொடர்பான சொற்கள் பற்றியறிய ”கொன்றையும் பொன்னும்” எனும் என் தொடரைப் படியுங்கள்.

https://valavu.blogspot.com/2006/01/1_23.html
https://valavu.blogspot.com/2006/01/2_24.html
https://valavu.blogspot.com/2006/01/3.html
https://valavu.blogspot.com/2006/01/4.html
https://valavu.blogspot.com/2006/01/5.html
https://valavu.blogspot.com/2006/01/6.html
https://valavu.blogspot.com/2006/01/7.html ]

இன்றைக்குச் சிலவற்றை இத்தொடரில் மாற்றுவேனெனினும், பெரும்பாலும் மற்றவை ஏற்பேன். கொல்லை நாம் குறைத்து மதிக்கிறோம். ஆற்றுப் படுகையிலும், கரைகளிலும் கிடைப்பவற்றை புவியியலார் இடப்பொதிகை (placer deposit) என்பார். இவற்றில்கிட்டும் பொன்னை, சல்லடை அல்லது தட்டிலிட்டு நீராலலசிப் பொறுக்கி, நுண்டி(>நோண்டி) எடுப்பது கொழித்தல் (Panning) எனப்பட்டது. அரிசியில் கல்பொறுக்க முறம் பயன்படுத்துகிறோமே அதற்கும் கொழித்தலென்றே பெயர். இதில் முறத்தோடு நீருங் கலந்து வீழும். தாம்பாளம் போலுந் தட்டத்தில் (shallow pans) பொன்கலந்த மணற் சல்லியை இட்டு, நீரிலமிழ்த்தி அலசி, வேதிவினையின்றி, பூதிகப்பிரிப்பால் (physical separation) அடர்பொன்னை அடராப்பொருள்களிலிருந்து பிரிப்பர். இதன்மூலம் 99/99% தூயதங்கம் கூட நேரடியாய்க் கிட்டும்.

அடுத்தமுறை மடைவாய்த்தல் (Sluicing). மாறிமாறி மடைகளுக்கிடை கொட்டிய தங்க மணல், மண், கட்டி, பரல் போன்றவற்றை நீரோட்டத்தால் பொன் அல்லாதவற்றை வெளிக்கொணர்ந்து, பொன்னை மடைகளிடையே, தொடர்ந்துபாயும் நீரால் சிக்கவைப்பது இம்முறையாகும். 3 ஆம் முறையை ஆழ்படுகை உறிஞ்சல் (Dredging) என்பார். நல்ல ஈர்ப்புத்திறன்கொண்ட களி மிதவை இறைப்பி (suspension pump) மூலம் நீருக்கடியிலுள்ள ஆற்றுப் படிவை உறிஞ்சிச் சல்லடைக்குக் கொணர்ந்து மடைத்தலுக்கும் அலசலுக்கும் உட்படுத்திப் பொன்னைப் பிரிப்பது இதில்நடக்கும். அடுத்துவரும் 4 ஆம் முறையை ஊஞ்சல்பெட்டி (Rocker box) முறையென்பார். இன்னுங் கடினக் கட்டிகளில் சிக்கிய பொன்னை நீரால் பிரிக்கும் முறை இதுவாகும். இப்படி ஒவ்வொருமுறையிலும் பூதிகமுறைகளே பயன்படும்.

பலநாடுகளில் நாலாம்முறை பயன்பட்டாலும், நம்மூரில் மிகுத்துச் சொல்லப் படுவது கோலார்ச் சுரங்கமே. இன்னொன்று கருநாடகக் கட்டிச் (Hutti) சுரங்கம். (தமிழகத்தில் கட்டியர் என்றே ஒரு குறுநில வேளிர் சங்ககாலத்தில் இருந்தார். கட்டி என்ற சொல்லைப் பொன் எனும் பொருளில் சம்பந்தர் தேவரத்தில் ஆண்டுள்ளார். ) 1954 இல் கருநாடக மாநிலம் ஏற்பட்டபோது அதனுட்சேர்ந்த கோலார் முற்றிலும் தமிழர் தொடர்புள்ளதே. சென்னையைத் தக்கவைக்க பெருந்தலைவர் காமராசர் கொடுத்த விலைகளில் அதுவுமொன்று. கோலார், கொள்ளேகால், இன்னும் வடக்கே வட கொங்கு (இதைக் கங்கர் நாடு என்பார்.) முழுதும் தமிழ்ப்பகுதிகளே. இன்று அங்குள்ளோர் தமிழை மறந்தார். கன்னடர் ஆக்கப்பட்டார். கிட்டத்தட்ட இற்றைநிலையில் 2 கோடித் தமிழர் தம் மொழி யிழந்து உள்ளார். (நான் தெலுங்கு, மலையாள மாநிலங்களின் வழி இழந்த மக்கள் தொகை பேசவில்லை.)   

5 ஆம் முறையில் மட்டும் வேதியல் குறுக்கிடும். பெரும்பாலான சுரங்கத் திணைக்களங்களில் (mine based plants) இன்று இம்முறையே பயன்படுகிறது. இம்முறை எழுந்து 100 ஆண்டுகள்கூட ஆகாது. இதில் பொற்பாறையை உடைத்துப் பொடியாக்கி சவடியக் கரிங்காலகைக் (Sodium Cyanide) கரைசலோடு வினைபுரிய வைத்து பொடிக்குள் பொதிந்த தங்கம்.வெள்ளியைக் கரைத்துப் பொன்/வெள்ளிக் கரிங்காலகைக் (gold/silver cyanide) கரைசலாக்குவர். பின் அதனோடு, துத்துநாகஞ் (Zinc) சேர்த்து பொன், வெள்ளி மாழைகளை திரைய (precipitate) வைத்து, நாகக் கரிங்காலகைக் (Zinc Cyanide) கரைசலைப் பெறுவர். இதோடு, கந்தகக் காடியை (sulphuric acid) வினைக்கவைத்து, கரிங்காலகைக் காடி (Hydrogen Cyanide) ஆக்கி, சமையலுப்போடு (Cooking salt)மேலும் வினைக்க வைத்து சவடியக் கரிங்காலகை (Sodium Cyanide) செய்வர். சவடியக் கரிங்காலகையை பொற்பாறைப் பொடியோடு மீள வினைக்கவைப்பார். இப்படி அதிகத் தங்கம் பிரித்தெடுக்கப்படும். முதல் 4 முறைகளுக்கு ஆகுஞ் செலவை விட 5 ஆம் முறைக்குச் செலவதிகம். சூழியற்கேடும் அதிகம். ஆயினும் பொன்னாசை யாரை விட்டது, சொல்லுங்கள்?

இப்போதைக்கு இவ்வேதியல் விவரங்கள் போதும். மாழையெனும் தனி வகையை மாந்தன் முதலிலுணர்ந்தது பொன்வழிதான். அதன்பின் தான் வெள்ளி, (No process to invent. Ordinary separation is enough.) ஆனால் எந்தக் கடின வினைக்கும் பயன்கொள்ள முடியவில்லை. வெறும் கலம், அணிகலன் என்றே பயன்கொண்டார். (கற்காலக் கல்லறைகளில் தங்க அணிகலன்கள் கண்டு பிடித்துள்ளார்.) செம்பைக்காட்டிலும் வெள்ளி, அதைக்காட்டிலும் தங்கமென எளிதிலடித்து நீட்டவும், வளைக்கவும் முடிந்தது. தண்டுமை (ductility), மெலுக்குமை (Malleability) என இப்பண்பைச் சொல்வர் (a single ounce of gold can be beaten into a sheet of 300 square feet.) சூளை வெம்மையிலேயே இவற்றை உருக்கவும் முடிவதால் அணிகலன் செய்வது எளிது. தங்கம் உருகுப்புள்ளி (melting point) 1064 செல்சியசு. வெள்ளி 961.8 செல்சியசு. தங்க, வெள்ளி உருகுலைச் செய்முறையின் ஊடே தப்பு/சரி முறையில் தன்னேர்ச்சியாய்ச் செம்பைப் பிரித்தறிந்தார். (இதன் உருகுப்புள்ளி 1085 செல்சியசு).

மற்ற நாகரிகங்களை ஏற்குஞ் சிலர் தமிழர் பொன்னை முதலிலறிந்தார் என்றால் மட்டும் நக்கலும் கேலியும் கொழிக்க வேதியல் அறியாது பேச முற்படுகிறார். தமிழர்க்கு கொம்பு முளைக்கவுமில்லை. இராம.கி. அப்படிச் சொல்லவுமில்லை. அட்லாண்டிசு, வகாண்டா, அமேசான் போலத் தமிழர் குமரிக்கண்டத்தில் வாழ்ந்தாரெனவுஞ் சொல்லவில்லை. வகாண்டா மக்கள் வைப்பிரேனியத்தால் செய்தது போல் தமிழர் பொன்னால் இழைக்கவும் இல்லை. எல்லோரையும் போல் தமிழரும் பழங்கற்காலம், நடுக்கற்காலம், புதுக்கற்காலம், பெருங்கற்காலம், பொற்காலம், செம்புக்காலம், வெண்கலக் காலம் இரும்புக்காலமென மாந்த வரலாற்றைத் தாண்டித்தான் வந்தார். பொற்காலம் என்றவுடன் தமிழர் பொன்னால் இழைத்தாரென்று பொருள் இல்லை. பொன்னறிந்த காலமென்று பொருள்

[வேதியலறியாது, அரைகுறைப் புரிதலில் இப்படி நக்கலடிப்பதை நண்பர் தவிர்த்திருக்கலாம். கேள்வி கேட்பதிலும் ஒரு மட்டு, வரைமுறை கிடையாதா? ”இப்படி மெனக்கெட்டு இவன் சொல்கிறானே? மடத்தனமாய்ச் சொல்வானா? சற்று கூகுளிட்டுத்தான் பார்ப்போமெ”ன்ற கனிவு கூட நண்பருக்கு இல்லாது போனது வருத்தமாகிறது. நக்கலுங் கேலியும், புத்தறிவிற்குக் கேடே விளைக்கும். Bro, You may get some brownie points out of that. But is that what you aim in facebook discussions? I wonder.]

இதற்கடுத்தது வெள்ளி; அதுவும் அணிகலன், கலனென நின்றுபோனது. மூன்றாவதாய்ச் செம்பு, அணிகலனில் தொடங்கி ஆயுதமாய் நகரும். ஆயினும் செம்பு அவ்வளவு கடினமில்லை. கொஞ்சம் அழுத்தினால் செம்புக் கலம் அமுங்கும். தகடு வளையும், செப்பு வாள் ஒருபோரில் உறுதியாய் நிற்காது. வெள்ளீயம் (Tin) சேர்த்து வெண்கலம் செய்தாற்றான் செம்பு நிலைப்படும். (வெள்ளீயங் கிடைத்த தென்கிழக்காசியா நமக்குப் பூகோளத் தன்னேர்ச்சி. அத்தொடர்பின்றி சங்ககால நாகரிகமில்லை.) பின் காரீயஞ்(Lead) சேர்ந்த செம்பு. அதற்குப் பின் நாகஞ் (zinc) சேர்ந்த பித்தளை (brass). இப்படிப் பல்வேறு அட்டிழைகள் உருவாகும் .வெண்கலம் எழுந்த பிறகே மருதம் உருவானது. செம்புருக்கும் நுட்பியலை நீட்டியபின் தான் இரும்பு நமக்கு வாய்த்தது. இரும்புக்கு மாறியபின்தான் நம்மூரில் மருதம் நிலையுற்றது. இவற்றைப்பற்றியும் விவரித்துச் சொல்லவேண்டும். வேறொரு தொடரில் செய்வேன். இப்போது பொன்னுக்கு மீள்வோம். கொஞ்சம் சங்க இலக்கியம். நண்பர் இதையும் படிக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.