அண்மையில் “தமிழ் இலக்கணம் ஒப்பும் ஆய்த எழுத்துப் பயன்பாடு பற்றி விளக்கம் தேவை” என்று கேட்டு திரு. ரவி கீழே உள்ள கேள்விகளை
http://groups.google.com/group/tamil_wiktionary/browse_thread/thread/c58070aa3be622fa என்ற இழையில் எழுப்பியிருந்தார்.
------------
* ஆய்த எழுத்துக்கு முன்பும் பின்பும் என்னென்ன எழுத்துகள் வரலாம்? அடுத்து
வரும் எழுத்துகளை எவ்விதம் மாற்றுகிறது? எடுத்துக்காட்டுகள், ஒலிக்குறிப்புகள்
கிடைக்குமா?
* சொல்லின் முதலில், கடைசியில் ஆய்த எழுத்து வரலாமா?
* ஆய்த எழுத்தின் நோக்கம் என்ன? ஏன் உயிரும் இல்லாமல் மெய்யும் இல்லாமல்
சார்பெழுத்து என்று ஒன்றே ஒன்றை மட்டும் உருவாக்கினார்கள்? இது மிகவும் குறைவாக
மட்டுமே பயன்படுவது ஏன்?
-------------------
இதற்கான என் மறுமொழி.
இலக்கணம் பற்றிக் கேட்டிருப்பதால் தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நூன்மரபு கூறும் முதல் நூற்பாவில் இருந்தே தொடங்குவோம்.
எழுத்து எனப்படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே
இதன்படி, தமிழில் முதலெழுத்துக்கள் 30 ஆகும் (உயிர் 12, மெய் 18). அவை போக மூன்று, சார்பெழுத்துக்கள் எனப்பட்டன. இங்கே அலங்கடை = அல்லாதது ஆகும். அதாவது 30 முதலெழுத்துக்கள் அல்லாத, ஆனாலும் முதலெழுத்துக்களைச் சார்ந்த, எழுத்துக்கள். இப்படி முதலெழுத்து, சார்பெழுத்து எனப் பிரிப்பது, இலக்கணத்தில் ஒரு வகையாக்கம் [classification], அவ்வளவுதான். மூன்று சார்பெழுத்துக்களை விரிப்பின்,
அவைதாம்
குற்றியிலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்து ஓரன்ன. [தொல். எழுத்து. நூன்மரபு - 2]
என்று ஆகும். அதாவது, சார்பெழுத்துக்கள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்று அழைக்கப் பெறும். [ஆயுதத்திற்கு முப்பாற் புள்ளி என்ற பெயரும் உண்டு. தவிரத் தனிநிலை, புள்ளி, நலிபு என்றும் ஆய்தத்தை அழைத்திருக்கிறார்கள்.]
இந்த மூன்றில் குற்றிகரம், குற்றுகரம் என்பவை உயிரையும், ஆய்தம் மெய்யையும் சார்ந்தது. இவை ஏன் சார்பெழுத்துக்கள் எனப்பட்டன? - என்ற கேள்விக்கு, ”குற்றிகரமும், குற்றுகரமும் உயிரின் எல்லா இயல்புகளும் காட்டாமல், ஒரு சில இயல்புகளே காட்டுவன” என்றும், ”ஆய்தம் மெய்யின் எல்லா இயல்புகளும் காட்டாமல், ஒரு சில இயல்புகளே காட்டுவது” என்றும், விடையிறுக்க முடியும்.
[இந்த இடத்தில் தமிழெழுத்துக்கள் பற்றி நெடுங்காலம் நான் சொல்லிவரும் ஒரு பொதுவான செய்தியை நினைவிற்குக் கொண்டுவருகிறேன். வடவெழுத்துக்களில் ஓர் உருவிற்கு ஓர் ஒலியே உண்டு.
i.e. Sound of a nagari / grantha letter = f (letter shape)
ஆனால், தமிழெழுத்தில் ஓர் உருவிற்கு பல ஒலிகள் இருக்கலாம்; இருக்கின்றன. தமிழெழுத்தின் ஒலி என்பது, அதன் தொடர்புள்ள எழுத்தின் உரு, சொல்லில் எந்த இடத்தில் (தலை, இடை, கடை) அந்த உரு வருகிறது, பக்கத்தில் என்ன ஒலிகள் தொடர்கின்றன, என்பதையும் பொறுத்தது.
i.e. Sound of Tamili letter = f (letter shape, place of the particular letter in a word, sound by the side)
இந்த அடிப்படை புரியாததாலே தான், இக்கால இளைஞர்கள் தமிழொலிப்பில் குழப்பம் அடைகிறார்கள். குறிப்பாக வடபுல மொழிகளின் ஓரோரன்மையைப் [one-to-one correspondence] பார்த்து, தமிழின் பல்லோரன்மையைப் [many-to-one correspondence] புரியாதிருக்கிறார்கள். பல்லோரன்மை என்பது மொழியமைப்பில் ஒன்றுங் குறைவானது அல்ல. There are many many-to-one correspondences in nature. மொழியைச் சரியாய்ப் பலுக்க, அந்த நடைமுறையில் இருக்கும் விதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். [காட்டு: கப்பல், காக்கை, கங்கை, பாகு என்ற சொற்களில் ககரத்தில் இருக்கும் ”ஒரெழுத்து - பல்லொலிப்பு” வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.]
குற்றிகரம், குற்றுகரம், ஆய்தம் ஆகியவற்றின் ஒலிப்பிற்கு அடுத்து வருவோம்.
சார்தல் என்பது சேர்தல் என்று பொருள் கொள்ளும். காட்டாக, குற்றியலிகரம் என்பது முற்றியலிகரத்தைச் சார்ந்தது. முற்றிகரம் பிறக்கும் இடத்திலேயே, குற்றிகரமும் பிறக்கிறது; அது போலவே ஒலிக்கத் தொடங்குகிறது; ஆனால் முற்றிகரத்தைக் காட்டிலும் மாத்திரை குறைந்து பாதி ஒலித்து நின்று போகிறது. இதே போல, குற்றுகரமும், முற்றுகரம் பிறக்கும் அதே இடத்தில் பிறக்கத் தொடங்கி, பின் குறுக ஒலிக்கிறது. இதை தொல்காப்பியம் 101 ஆம் நூற்பா,
சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பில எனத்
தேர்ந்து வெளிப் படுத்த ஏனை மூன்றும்
தத்தஞ் சார்பில் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம்மியல்பு இயலும்
என்று தெளிவாகச் சொல்லும். அதாவது சார்பெழுத்துக்கள் அந்தந்த முதலெழுத்துக்கள் பிறக்கும் வகையிலேயே பிறப்பிற் பொருந்தி ஒத்த தோற்றத்தில் தம் இயல்பைக் காட்டும். இங்கே குற்றிகரம் முற்றிகரத்தைச் சாருவதும், குற்றுகரம், முற்றுகரத்தைச் சாருவதும், அஃகேனம் ககரத்தைச் சாருவதும் இதனாலே தான்.
முற்றிகரமும், முற்றுகரமும் ஒரு சொல்லைத் தொடங்கலாம்; இறுக்கலாம் (மெய்யோடு ஈற்றாக இருக்கும்); சொல்லின் நடுவிலும் வரலாம். ஆனால் குற்றிகரமோ, சொல்லிடையில் மட்டுமே வரும். குற்றுகரமோ, சொல்லின் கடையில் மட்டுமே வரும். [குற்றுகரம் வரும் இடம் பற்றி ஒரு புறனடை - exception - உண்டு. அதாவது, ”குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்” என்று தொல்காப்பியம் சொல்லதிகாரம் 67 ஆம் நூற்பா சொல்லும். இதற்குக் காட்டு ”நுந்தை” எனும் சொல்லாகும். இங்குள்ள நுகர ஒலி குற்றுகரமாய் ஒலிக்கப் படலாம். ஆனாலும் ”உன் தந்தை” எனும் பொருள் மாறாது.]
இப்படிக் குறுகியொலித்தாலும், குற்றிகரத்தையும், குற்றுகரத்தையும் உயிர் போன்றே கருதுமாறு உரையாசிரியர் இளம்பூரணர் தெளிவாகச் சொல்லுவார். “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது. அது போல, இகர, உகரங்கள் குறுகினவிடத்தும், அவை உயிராகற் பாலன. அவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும், பொருள்வேற்றுமையும் நோக்கி வேறெழுத்தென்று வேண்டினார் என்று உணர்க” என்று அழகாகச் சொல்லுவார்.
ஆக, மூன்று இகரங்கள் உள்ளன; அவற்றில் குற்றியலிகரம் என்பது அரை மாத்திரை அளபும், இகரம் ஒரு மாத்திரை அளபும், ஈகாரம் இரண்டு மாத்திரை அளபும் இசைக்கும்.
அதே போல, குற்றியலுகரம் அரை மாத்திரை அளபும், உகரம் ஒரு மாத்திரை அளபும், ஊகாரம் இரண்டு மாத்திரை அளபும் இசைக்கும். தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நூன்மரபு, 11 ஆம் நூற்பாவில் ”மெய்யின் அளபே அரையென மொழிப” என்று சொல்லி, 12 ஆம் நூற்பாவில், “அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே” என்று சொல்லி சார்பெழுத்து மூன்றிற்கும் மாத்திரை அரை என்று அளபு சொல்லப்படும்.
குற்றிகரம், குற்றுகரம் பற்றி மேலும் சொல்லிக் கொண்டிருக்காது, ஆய்தம் பற்றி மட்டுமே இனிச் சொல்ல முற்படுகிறேன்.
ஆய்தம் என்பது மெய்யெழுத்தைச் சார்ந்தது, ஆனாலும் முற்றிலும் மெய் அல்ல என்று சொன்னேன். ஆய்தத்தை நுண்ணிய ககரம் போலவே ஒலிக்க வேண்டும். வடபுலத்து ஹகரம், மேலை மொழிகளின் h ஆகியவற்றைக் காட்டிலும் தமிழ் அஃகேனம் வலிந்தது. ஆனால் தமிழ்க் ககரத்தைக் காட்டிலும் நுண்ணியது. இதற்குக் கிட்டத்தட்ட இணைந்து வரும் ஒலியாக, மேலை மொழிகளில் டச்சில் வரும் ch என்பதைச் சொல்ல முடியும். "achter = ஆஃதர் [ஆனால், பயன்பாட்டில் தமிழுக்கும் டச்சுக்கும் ஒரு வேறுபாடு உண்டு, தமிழில் அஃகேனத்திற்கு முன்னால் நெடில் இருக்க முடியாது, குறிலே இருக்க முடியும். டச்சில் இருக்கலாம். இதே போல தமிழில் அஃகேனத்திற்கு அப்புறம் வல்லின உயிர்மெய்கள் மட்டுமே வரமுடியும். இந்த கட்டியம் - condition - டச்சில் கிடையாது.]
ஆய்தம் என்றாலே நுணுக்கம் எனத் தொல்காப்பியம் 813 ஆம் நூற்பா பொருள் சொல்லும்.
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்
எந்த வகையில் நுணுக்கம் என்னும் போது, அது ககரத்தின் நுணுக்கம் என்பதை அஃகேனம் பயிலும் சொற்களை தென்பாண்டி நாட்டார் பலுக்கும் முறையால் அறிந்து கொள்ளுகிறோம்.
ஃ என்பது நுணுகிய ககரம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ளாமல், ஃ என்பது ”ஏதோ ஒரு ஒலி மாற்றக் குறி” என்றவாறு இந்தக் காலத்தில் சிலர் புரிந்து கொள்ளுகிறார்கள். அது பெருந்தவறு. காட்டாக, ஆங்கிலச் சொல்லான femina என்பதைத் தமிழெழுத்திற் சிலர் ஃபெமினா என்று எழுதுகிறார்கள். இது போன்ற பயன்பாட்டைத் தமிழ் இலக்கணம் ஏற்காது. அதைத் தொல்காப்பியம் மட்டுமல்ல, நன்னூலும் கூட ஏற்காது. நேற்றைய மு.வ. இலக்கணமும் ஏற்காது. பேரா. வ.சுப. மாணிக்கம் போன்றோர் அதைப் பெரிதும் எதிர்த்திருக்கிறார்கள்.
பங்கு என்ற சொல்லில் ”கு”வுக்கு முன்னால் ங் என்ற ஒலி வருவதால், கு என்பது gu என்ற அதிரொலியாக (voiced k) மாறும் என்ற உண்மையை வைத்துக் கொண்டு, அதே போல, ஃ என்னும் உரு பெ என்னும் ஒலியின் பலுக்கலை மாற்றும் என்று எண்ணுவது பெரும் முட்டாள் தனம். அப்படி மாற்ற முற்பட்டு, கூடவே ஏரணம் (logic) பார்த்தால், அது பகரம் என்ற ஒரு வல்லினத்திற்கு மட்டுமான விதப்பு மாற்றமாய் அல்லாமல், மற்ற வல்லினங்களுக்கும் பொதுமையாக வேண்டும் என்ற நெறி புலப்படும். அப்படிச் செய்யும் போது, இன்னும் பல குழப்பங்கள் ஏற்படும். குழப்பமில்லாத இலக்கணம் வேண்டுமெனில், கனடாப் பேரா. செல்வக் குமார் சொல்வது போல, வேறு ஏதோ ஓர் ஒட்டுக் குறியை உருவாக்கி f என்னும் ஒலியைக் கொண்டு வரலாமே ஒழிய அஃகேனத்தை ஒட்டுக் குறியாக மாற்றக் கூடாது.
ஆய்தத்திற்கு முன்னும் பின்னும் எந்த எழுத்துக்கள் வரலாம் என்பது தொல். எழுத்ததிகாரம். மொழிமரபு - 38 ஆம் நூற்பாவிற் சொல்லப் படுகிறது.
”குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே”
-
இங்கு குற்றெழுத்தின் முன்னே ஆய்தமாகிய புள்ளி வருகிறது என்று சொல்லப்பட்டு, அது 6 வல்லின உயிர்மெய்களின் மேல் இசைத்து வருகிறது என்று சொல்லப் படுகிறது. அதாவது இன்றையத் தமிழிற் சொன்னால், ஆய்த எழுத்தின் முன்னால் எந்தக் குறிலெழுத்தும் வரலாம் [5 குறில் உயிர் + மற்ற குறில் உயிர்மெய்கள் என எவையும் மொழிமரபிற்கு ஏற்றாற் போல வரலாம்]; ஆனால் நெடில் வரக்கூடாது. [மேலே சொன்ன டச்சுச் சொல்லான ஆஃதர் வேறுபாட்டை இங்கு எண்ணிப் பாருங்கள்.] ஆய்தத்திற்கு அடுத்த எழுத்து, வல்லின உயிர்மெய்யாக மட்டுமே இருக்கும். (அதாவது 6*12 = 72 உயிர்மெய்கள் வரலாம்.) இந்த நூற்பாவின் மூலம் ஆய்தம் என்பது ”சொல்லின் இடையில் மட்டுமே வரும், சொல்லின் முதலிலோ, கடையிலோ வராது” என்ற உண்மை பெறப்படும். இந்த நூற்பா சொல்லும் படியான காட்டுக்களை இனிக் கீழே தருகிறேன். (கீழே வரும் சொற்களுக்கு பெரும்பாலும் ஒரு பொருட்பாடு மட்டுமே காட்டுகிறேன். சிலவற்றிற்கு ஒன்றிற்கு மேல் பொருட்பாடுகள் இருக்கலாம். அவற்றை அகரமுதலிகளிற் கண்டு கொள்க!)
அஃகான் (=அகரம்), இஃகான் (=இகரம்), உஃகான் (=உகரம்), எஃகான் (=எகரம்), ஒஃகான் (=ஒகரம்), மஃகான் (=மகரம்), யஃகான் (=யகரம்), வஃகான் (=வகரம்), லஃகான் (=லகரம்), ளஃகான் (=ளகரம்), றஃகான் (=றகரம்), னஃகான் (=னகரம்),
அஃகம் (தவசம், grain), அஃகரம் (வெள்ளெருக்கு), அஃகல் (குறுகுதல், சுருங்குதல்), அஃகு (ஊறுநீர்), அஃகுல்லி (உக்காரி என்னும் சிற்றுண்டி), அஃகுள் (அக்குள்), அஃகேனம் (ஆய்தத்தின் பெயர்), அஃது (அது), அஃதை (இயற்பெயர், சோழன் ஒருவனின் மகள், அகநா. 96.12), இஃகுதல் (இழுத்தல்), இஃது (இது), உஃது (உது), எஃகம் (கூர்மை), எஃகு (உருக்கு), எஃகுதல் (நெகிழ்தல்), ஒஃகல் (ஒதுங்கல், பின்வாங்குதல்), கஃசு (காற் பலம் என்னும் நிறையளவு), கஃறு (கறுத்தது), சஃகுல்லி (சிற்றுண்டி வகை), சுஃறு (பனையோலை போன்றன எரியும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு), பஃது (பத்து), பஃதி (பகுதி), பஃறி (படகு), வெஃகல் (விரும்புதல்)
மேலே உள்ளது போன்று, தனிச்சொற்களின் இடையில் வரும் ஆய்தம் போக, சொற்களின் புணர்ச்சியாலும் ஆய்தம் எழலாம் என்று தொல்காப்பியர் 39ஆம் நூற்பா வழி சொல்லுவார்
”ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்”
அதாவது, நிலைமொழி ஈறு, வருமொழி முதலோடு புணரும் இடத்திலும், ஆய்த ஒலி தோன்றும்.
காட்டு: அல்+ கடிய = அற்கடிய, அஃகடிய, (இஃகடிய உஃகடிய); அல்+ சிறிய = அற்சிறிய, அஃசிறிய; அல் + திணை = அற்றிணை, அஃறிணை; அல்+ பெரிய = அற்பெரிய, அஃபெரிய; சில் + தாழிசை = சிற்றாழிசை, சிஃறாழிசை; பல் + தானை = பற்றாணை, பஃறானை; பல் + துளி = பற்றுளி, பஃறுளி; பல்+தொடை = பற்றொடை, பஃறொடை; முள் + தீது = முட்டீது, முஃடீது
இந்தக் காட்டுக்களில் இரண்டு விதமான புணர்ச்சிகளைக் காட்டியிருக்கிறேன். ஒன்று மற்றொன்றின் திரிவு. சில திரிவுகள் நிலைப்பட்டுப் போகின்றன. சில மறைந்து போகின்றன. காட்டாக எல்லோரும் பஃறுளி என்றே சொல்லுவர், பற்றுளி மறைந்து போயிற்று. மாறாக சிஃறாழிசை இன்று அழிந்து போயிற்று. சிற்றாழிசை நிலைத்து நிற்கிறது.
அடுத்து ஆய்தம் மொழியிற் தோன்றும் நிலைகளைச் சொல்லி, சில புறனடைக் குறிப்புக்களைத் தொல்காப்பியர் சொல்லுவார்.
உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான.
- தொல்காப்பியம் நூற்பா. 40
உருவிலும், ஒலியிலும் அருகித் தோன்றும் மொழிக்குறிப்புகள் எல்லாவற்றையும் எழுத்தின் வழி சொல்லிவிடமுடியாது. ஆய்தம் அது போன்று அருகி வரும் தன்மையது.
இந்தச் செய்தி மொழியியலில் ஒரு விதப்பான செய்தி. ”பேச்சில் வரும் எல்லா வொலிகளையும் ஒரு மொழியின் எழுத்து வெளிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அது குறைபாடுடைய எழுத்து” என்று ஒருசிலர் இந்தக் காலத்தில் சொல்ல முற்படுகிறார்கள். ”இதை வைத்து தமிழி எழுத்தில் ஓரோன்மை இல்லை, வர்க்க எழுத்துக்கள் இல்லை” என்று வல்வழக்குச் செய்ய முற்படுகிறார்கள். தமிழ் எப்படிப் பல்லோரன்மையை வெகு நளினமாகக் கையாளுகிறது என்று அறியாதவர்கள் அவர்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்கள் இந்தத் தொல்காப்பிய நூற்பா 40 ஐ, ஆழ்ந்து படித்து ஓர்வார்களாகுக!
அடுத்த கேள்வி அஃகேனம் இரட்டிக்கலாமா? என்றால், ஒற்றளபெடை போலச் சில இடங்களில் ஒலிக்குறிப்பு கருதி இரட்டிக்கலாம். காட்டாக பனையோலை எரிவது பற்றி முன்னால் சொன்ன சொல்லில், அந்த எரிப்பின் இழுப்பையும், அடர்த்தியையும் குறிக்குமாப் போல “சுஃஃறெனல்” என்று அஃகேனம் இரட்டித்துச் சொல்லலாம்.
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு மறுமொழி தந்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன். வேறு ஏதேனும் ஐயம் இருந்தால் கேளுங்கள், தெரிந்ததைச் சொல்லுவேன்.
அன்புடன்,
இராம.கி.
13 comments:
முதற்கண், நேரமும் உழைப்பும் தந்து மிக அருமையான ஒரு கட்டுரையைத் தந்ததற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பல ஐயங்களைத் தெளிவுபடுத்தியது.
இன்னும் சில ஐயங்கள்:
* உயிர், மெய் போல் ஆயுதமும் ஒரு தனித்த ஒலி தானா? அடுத்து வரும் எழுத்தின் ஒலியை மாற்றுகிறதா இல்லையா?
அஃகு என்பதை ahku என்பதா ahhu என்பதா?
ahhu என்றால் மற்ற வல்லின மெய்களான ச, ட, த, ப, ற ஆகியவற்றின் ஒலியை எப்படி மாற்றுகிறது?
* அஃது, இஃது போன்றவை மருவி அது, இது ஆனதா? அல்லது, பாக்களில் தளை தட்டக்கூடாது என்பதற்காக ஃ சேர்த்துக் கொண்டார்களா? ஒரு எழுத்தைத் தூக்கினாலும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஏன் வந்தன? இது மாதிரி வேறு எழுத்துகளுக்கும் நேர்வதுண்டா?
* அல்+திணை = அஃறிணை, முள்+தீது = முஃடீது போல் எந்தெந்த இடங்களில் எல்லாம் புணர்ச்சியால் ஃ வரலாம்?
* ஆய்தம் குறைவான தமிழ்ச் சொற்களில்
மட்டும் வருவது ஏன்?
Sound of a nagari / grantha letter = f (letter shape)
என்பதை சிலர் புரிந்து கொள்ளச் சிரமப்படலாம். f என்பதற்குப் பதில் function of என்றே எழுதி விடலாம்.
ஆய்தம் தனித்த ஒலிதான். அதை நுண்ணிய ககரம் என்று சொன்னேனே? ங், ஞ், ண், ந், ம் போன்ற மெல்லினங்கள் எப்படி அடுத்து வரும் வல்லினங்களை அதிரொலிகளாய் மாற்றுகின்றனவோ, அதுபோல ஆய்தமும் தனக்கு அடுத்து வரும் வல்லினங்களின் ஒலிப்பைச் சற்று மாற்றத்தான் செய்கிறது. ஆனால் ககரத்தையும், சகரத்தையும் போல், டகரம், தகரம், பகரம் ஆகியவற்றின் ஒலிகளை மென்மையாய் ஆக்குகிறதா என்றால், அதற்குக் காட்டுக்கள் அவ்வளவாய் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த மூன்று மெய்களின் ஒலிப்புமாற்றம் பற்றி நான் அவ்வளவு உறுதியான கருத்துடையவன் இல்லை. கற்றுக் கொள்ளக் காத்திருக்கிறேன்.
எப்படி ஒலிப்புக்கள் என்று கேட்டிருந்தீர்கள்.
இங்கே ஃ என்பதை q என்ற ஆங்கில எழுத்தால் பெயர்த்துக் காட்டுகிறேன். [அதை டச்சுக் காரர்கள் பலுக்கும் ch க்கு இணையாக எடுத்துக் கொள்ளுங்கள். ஹ் (h) என்ற ஒலி அவ்வளவு பொருத்தமாய் அமையாது.]
முதலில் ஃ ஐ அடுத்துக் ககரம் வருவதைப் பார்ப்போம். அஃகு என்பதை aqku என்று எழுதி அப்படியே பலுக்க முடியாது. நம்மையறியாமலே aqqu என்று தான் பலுக்குவோம்.
அடுத்தது சகரம். கஃசு என்பதை kaqcu என்று எழுதினாலும், kaqsu என்றே பலுக்க இயலும்.
அடுத்தது டகரம். இங்கு தனிச்சொல் கிடையாது. கூட்டுச்சொல் தான் இருக்கிறது. முஃடீது என்பதை muqtiithu என்று எழுதி muqtiithu என்றே பலுக்க முடியும். நம்மையறியாமல் ஓரோவழி t என்னும் ஒலி d - ஆக ஒலிக்கலாம். இரண்டிற்கும் இடையே, இந்தச் சொல்லில் நுணுகி வேறுபாடு காணமுடியுமா என்பது எனக்கு ஐயமே.
அடுத்தது தகரம். அஃது - aqthu - என்பதை aqthu என்றோ aqdhu என்றோ பலுக்கலாம். தவறில்லை. இங்கும் அதிரொலியா, அதிரா ஒலியா என்பதைக் கண்டுபிடிப்பது சரவலே.
அடுத்தது பகரம் வரும் கூட்டுச்சொல். அஃபெரிய இதை aqperiya என்றே ஒலிக்க முடியும். அதிரொலி வர வழியில்லை.
முடிவில் றகரம். பஃறி என்பதைப் paqRi என்று எழுத்துப் பெயர்த்து paqri என்று ஒலிக்க முடியும். றகரமா, ரகரமா என்பதில் வேறுபாடு காண்பது கடினம்.
சுருக்கமாய்ச் சொன்னால், உறுதியாக ஆய்த எழுத்து, தனக்கு அடுத்துவரும் ககரத்தையும் சகரத்தையும் மென்மையாக்குகிறது. அதே அளவு மற்ற வல்லினங்களையும் ஆக்குகிறதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. யாராவது தேர்ந்த ஒலியியல் ஆய்வாளரே சொல்ல முடியும்.
அடுத்து அது, இது, உது என்ற சொற்களின் தோற்றம் பற்றிக் கேட்டிருந்தீர்கள். அஃது, இஃது, உஃது போன்றவற்றில் இருந்தே அது, இது, உது போன்றவை எழுந்திருக்க வேண்டும் என்று ஏதோ ஒரு ஆய்வுக் கட்டுரை படித்திருக்கிறேன். ஆனால் அதன் உசாத்துணை எனக்கு இப்பொழுது கிட்டவில்லை. கிடைத்தால் சொல்லுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
ஒரு எழுத்தைத் தூக்கினாலும் அதே பொருள் வரும் சொற்கள் தமிழில் மிகப் பல. அகரமுதலியைப் பொறுமையாய் அலசுங்கள். நீங்களே கண்டுபிடிக்க முடியும்.
பெரும்பாலும் நிலைமொழி லகரத்திலோ, அன்றி ளகரத்திலோ முடிந்து, வருமொழி தகரமாய் இருந்தால் புணர்ச்சியில் றகரம், டகரமாய் மெய்ம்மயக்கத்தோடு திரிந்து வரும். சிலபோது மெய்ம்மயக்கம் (ற்ற, ட்ட) ஆன கூட்டுச்சொல் ஃற, ஃட என்று திரிவில் மாறலாம். என்னுடைய கட்டுரையில் இதைத் தெளிவாகக் குறித்திருக்கிறேன்.
ஆய்தம் எப்படி எழுந்தது என்று கேட்டால், அது தொடக்க கால மாந்தனிடம் இருந்தே வந்திருக்க வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகிறது. இன்றைய மாந்தரில் மிகப் பழமையான மாந்தராய் ஆப்பிரிக்காவில் உள்ள San - formerly called Bushmen - இனத்தவரைச்சொல்லுவார்கள். இவர்களின் மொழி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மொழி. இங்கே The journey of man - A genetic odessey - Spencer Wells - என்பவரின் பொத்தகத்தில் இருந்து சிலவரிகளை எடுத்து எழுதுகிறேன். [வாங்கிப் படிக்க வேண்டிய பொத்தகம்.]
They also speak one of the strangest languages on the planet, notable for its use of clicks as integrated parts of words - like the clicking sound we might make when we guide a horse, or imitate a dripping tap. No other language in the world uses clicks in regular word construction, and thisquirk has inspired linguists to study the San language family for 200 years, since Europeans first colonized southern Africa. The languages of the family are incredibly complicated. English, for example, has thrty-one distinguishable sounds used in every day speech (two-thirds of the world's languages have between twenty and forty), while the San !Xu language (the '!' in !Xu sounds a bit like a bottle opening) has 141.
நம்முடைய அஃகேனமும் அந்தச் சொடுக்கொலிகளைப் (click sounds) போன்றதொரு மிச்ச சொச்சம் தான். இன்று நம்மிடம் ஒரு சொடுக்கொலியே மீந்து இருக்கிறது. இந்தச் சொடுக்கொலி ஏதோ ஒரு தொல்லியல் மிச்சம். தமிழ் எப்படிப் பிறந்தது என்ற கேள்வி இன்னும் முடியாத ஆய்வு. தமிழர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவரா, குமரிக்கண்டத்தில் எழுந்தவரா என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. ஆனால் தமிழ் ஒரு முது மொழி என்று சொல்லுவதில் இந்த ஆய்தமும் ஒரு காரணம் என்றே நான் எண்ணுகிறேன்.
ஆய்தம் அடங்கிய சொற்கள் ஏன் அருகி இருக்கின்றன? - என்று கேட்டிருக்கிறீர்கள். மொழி வளர்ந்த காலத்தில் சொடுக்கொலி குறைந்து போயிருக்கலாம். ஆய்வு செய்யப் படவேண்டிய கேள்வி. நானும் விடைக்காகக் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
விரிவான விளக்கத்துக்கு நன்றிங்க. என் பல ஐயங்களைத் தீர்த்தது.
இளமுறியா கண்டம் = இளமை + முறியா கண்டம் (சதுப்பு நிலக்காடுகள் நிறைய இருந்தது)
இந்து (சிந்து) = சந்திரன். பாண்டியர்கள் சந்திர வம்சம். இந்து மதம் என்பது தமிழர்களின் முதல் அரசான பாண்டியர்களால் இளமுறியா கண்டத்தில் இருந்த இந்து நதி கரையில் தோற்று விக்க பட்டது. ஆதி சிவன் முதல்
பாண்டிய மன்னன். அவரது தலையில் சந்திரனை காணலாம்.
மோகஞ்சதொரோ = மோகம் + சிதறா நகர்
ஹரப்பா = அருட்பா = அரப்பா
இந்த இரு நகரங்களும் இளமுறியா கண்டத்தில் இருந்த தென் இமய மலையில் உற்பத்தி ஆன தென் கங்கை, தென் இந்து நதிக்கரைகளில் இருந்த நகரங்கள். இந்த கண்டம் கடல் கோளால் அழிந்த பிறகு இதே பெயர்களை தற்போது உள்ள இமய மலை மற்றும் ஆறுகளுக்கு இட்டனர். கரையில் அமைந்த நகரங்களுக்கு அதே பெயர்களை இட்டனர்.
இதை பற்றி உங்கள் கருத்து என்ன ஐயா?
இளமுறியா கண்டம் = இளமை + முறியா கண்டம் (சதுப்பு நிலக்காடுகள் நிறைய இருந்தது)
இந்து (சிந்து) = சந்திரன். பாண்டியர்கள் சந்திர வம்சம். இந்து மதம் என்பது தமிழர்களின் முதல் அரசான பாண்டியர்களால் இளமுறியா கண்டத்தில் இருந்த இந்து நதி கரையில் தோற்று விக்க பட்டது. ஆதி சிவன் முதல்
பாண்டிய மன்னன். அவரது தலையில் சந்திரனை காணலாம்.
மோகஞ்சதொரோ = மோகம் + சிதறா நகர்
ஹரப்பா = அருட்பா = அரப்பா
இந்த இரு நகரங்களும் இளமுறியா கண்டத்தில் இருந்த தென் இமய மலையில் உற்பத்தி ஆன தென் கங்கை, தென் இந்து நதிக்கரைகளில் இருந்த நகரங்கள். இந்த கண்டம் கடல் கோளால் அழிந்த பிறகு இதே பெயர்களை தற்போது உள்ள இமய மலை மற்றும் ஆறுகளுக்கு இட்டனர். கரையில் அமைந்த நகரங்களுக்கு அதே பெயர்களை இட்டனர்.
------------------------------
இதை பற்றி உங்கள் கருத்து என்ன ஐயா?
சமஸ்கிருதம் = சமஸ் (சமசு) + கிருதம்
சமமாக + உருவாக்கப்பட்டது. (தமிழுக்கு சமமாக உருவாக்க பட்டது)
மனிசன் = மண் + ஈசன்
பிராமணர் + பிற + மணர் (பிற மண்ணினர்)
வேதம் = வேதித்தல் (பக்குவ படுத்தல்)
பண்டைய அரசு = பாண்டிய அரசு
குண்டலினி = குண்டலனி = குண்டம் + அனல் + நீ
சுமத்ரா= சு+மதுரா; சு + மதுரை; நன்மதுரை
ப்ருனை(brunei); பொருணை (ஆறு)
காயத்ரி மந்திரம் = காயம் (உடல்) + திரி (மாற்று); மந்திரம்= மன்னும் + திறம்- அழிய கூடிய இந்த உடலை அழியாத பொன்னாக மாற்ற கூடிய திறம் பெற்றது
அன்பிற்குரிய தனபால்,
தாங்கள் செய்ய முற்படுவது உன்னிப்புச் சொற்பிறப்பியல் (gussing etymology) அது போலப் பலவும் செய்யலாம். அவற்றிற்கு அடிப்படை வேண்டும். வரலாறு, ஏரணம், மாந்தவியல், தொல்லியல், அறிவியல் போன்று ஏதேனும் ஒரு பின்புலம் இருக்க வேண்டும். நாம் சொல்லும் கருதுகோளுக்குச் சான்று அல்லது, அமையலாம் என்ற கூடுகை (context) இருக்க வேண்டும். இந்த உன்னிப்பு முறையை பாவாணர் மறுத்தவர். parlement என்பதைப் பார் ஆளும் மன்றம் என்று பிரித்துச் சொல்ல முற்படுவது. இது போன்று வெட்டி ஓட்டும் முறை, இயல் மொழிகளை, அவற்றின் வளர்ச்சியை, உணராமற் செய்வது. இதை நானும் ஏற்பவன் அல்லன்.
நீங்கள் சொன்ன கருதுகோள்களை நான் ஏற்க இயலாது இருக்கிறேன். மன்னியுங்கள்.
அன்புடன்,
இராம.கி.
மிக்க நன்றி ஐயா. இந்த தகவல்கள் என்னுடையது அல்ல. இது சித்தர்கள் கருவூரார் மற்றும் காக புஜண்டர் வழியில் வந்த பாரம்பரியத்தில் குறித்து வைக்க பட்டு இருப்பதாக எனக்கு கிடைத்தது. நீங்கள் கூறியது போல் வலுவான சரித்திர ஆதாரங்கள் ஏதும் கிடைக்க வில்லை. ஆனால் இவை மிக யோசிக்க வைத்தன. (சமசு (சம) + கிருதம் போன்ற சொற்கள்)
அதனால் தான் தமிழ் அறிஞர்கள் இதைப்பற்றி என்ன கருத்து எடுப்பார்கள் என அறிய ஆவலாக இருந்தேன். நன்றி ஐயா.
அன்புடைய இராம.கி அவர்களே.
” ஆனால், தமிழெழுத்தில் ஓர் உருவிற்கு பல ஒலிகள் இருக்கலாம்; இருக்கின்றன” என்று தாங்கள் கூறியுள்ளீர்.”
நான் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் 13 ஆண்டுகள் தமிழ் படித்தபோது ஒலியியல் ( phonetics) கற்றுக்கொடுக்கப்படவில்லை. அமரர்களாகிய என் மிகச்சிறந்த தமிழாசிரியர்களை நான் குறை கூறவில்லை. (அவர்கள் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்). ஏனெனில் இது இலக்கணப் பாடத்திட்டத்தில் இருக்கவில்லை. ஆயினும் படிப்பறிவில்லாத பாமரனும் குழந்தைகளும் பேச்சு வழக்கின் மூலம் மட்டும் சரியான ஒலிகளை கற்றுக்கொள்ளுகின்றனர். பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே ஆடு, மாடு என்பன aaDu, maaDu என்றும் aaTu, maaTu அல்லவென்று எல்லாக் குழந்தைகளுக்கும் தெரியும். தவிர ’டு’ குற்றுகரம் என்று இலக்கணம் படிக்காதவரும் அறிவர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நான் 27 ஆண்டுகள் வட இந்தியாவில் இருந்த போது இரு வட இந்திய மொழிகளைக் கற்றுக் கொண்டதோடல்லாமல் சிலருக்குத் தமிழையும் கற்றுக் கொடுத்தபோது, இதைப் பற்றிச் சிந்தித்த போது எனக்குத் தமிழில் உள்ள பேச்சுவழக்கு பின் வருமாறு.
க என்பது மொழிக்கு முதலில் க (ka) என்றும் (கல்வி) நடுவிலும் [மகன் (இதில் ’க’ ga விற்கும் ha விற்கும் இடையிலான ஒலியுடைத்து.)] ’ங்’ கைத்தொடர்ந்து ga (தங்கை), என்றும் ஒலிக்கிறது. இரு முறை சேர்ந்து வருமிடத்தில் இது kha (பக்கம் )என்று ஒலிக்கிறது. ஆனால் வடமொழியிலுள்ள ख அளவு அழுத்தமில்லை. (aspirated) . இதே போன்று ச, ட, த, ப வும் ஒலிவேறு பாடடைகின்றன.
தொல்காப்பியம் பிறப்பியலில் வல்லின எழுத்துக்கள் மொழியின் இடையிலும், மற்றும் தம்மைச் சார்ந்த மெல்லின மெய்களின் பின்னும் வரும்போது, க3,ச3.ட3,த3, ப3 என்னும் ஒலிகளைப் பெறுகின்றன என்று கூறப்படவில்லையே.
ச பெரும்பாலும் ஸ (sa) என்று ஒலிக்கிறது. இதுவும் ca, cha, & ja என்று ஒலிக்கிறது. தொல்காப்பியத்தின்படி ‘ச’ என்னும் உயிர்மெய், மொழிக்குமுன் வராது. வழக்கிலுள்ள அத்தகைய சொற்கள் வேற்று மொழியிலிருந்து வந்தவையா?
‘க’ வை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். தொல்காப்பியத்தில் கொடுத்துள்ளபடி
ககாரமும் ஙகாரமும் முதல் நாவும் முதல் அண்ணமும் உறப் பிறக்கும்.
Kha, ga, gha என்னும் எழுத்துக்களின் பிறப்பு கூறப்படவில்லை. இவை மேல் அண்ணம் (alveolar) மிடறு (retroflex) மற்றும் வயிற்றிலிருந்து (guttural) piRakkinRana பிறக்கின்றன. நான் அறிந்த மட்டும் முதல் (க1/ka) மற்றும் மூன்றாம் (க3/ga) பேச்சுவழக்கில் உள்ளன. அவ்வாறில்லையெனில் முதல் குறளைக் கீழ் வருமாறு படிக்க வேண்டுமா?
Akara,mutala ezuththellaam aati pakavan mutaRRE ulaku.
ச – இது பெரும்பாலும் ஸ என்று ஒலிக்கிறது. தொல்காப்பியத்தில் மொழிக்குமுன் வரும் உயிர் மெய்களில் ‘ச’ இல்லை. ச வில் தொடங்கும் சொற்கள் எல்லாம் வேற்று மொழிகளிலிருந்து வந்தவையா?
இன்று எனும் சொல் indru என்றும் நேற்று எனும் சொல் nETRu என்றும் ஒலிக்கின்றன. இவற்றிற்கு இலக்கண விதிகள் யாவை.
தமிழ் விக்கிபீடியா கட்டுரையில் “தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "த" எனும் மெய்யொலி சொல்லின் முதலில் வரும்பொழுது மிடற்றொலியாகவும், பிற இடங்களில் ஒற்றிரட்டித்தோ, வேறோரு வல்லெழுத்தால் தொடரப்பட்டோ, அல்லது மிடறு நீங்கியோ ஒலிக்கும்.”
’ த’ என்னும் உயிர் மெய் மொழிக்கு முன் வரும் போது மிடற்றிலிருந்தா (தொண்டை), த3 என்று ஒலிக்கிறது? அவ்வாறெனின் மொழியின் பெயர் த3மிழா (damiz)? அதே போல் க3, ஜ, ட3, ப3 என்ற ஒலிகளோடும் தமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லையே.
தொல்காப்பியத்திலோ வேறு இலக்கண நூல்களிலோ என்னுடைய ஐயங்களைத் தீர்க்கும் விதிமுறைகள் இருந்தால் அவற்றைத் தெரிவிக்கவேண்டுகிறேன்.
வரிவடிவம். இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்துக்களும் ப்3ரஹ்மி யிலிருந்து தோன்றின என்று பெரும்பாலான என்று பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர். ப்3ரஹ்மி என்பது எழுத்திற்கும் மொழிக்கும் ஆன பெயரா? தமிழில் இவ்வெழுத்துக்களை ஏற்றுக்கொள்ளும் வரை தமிழ் பேச்சு மொழியாக மட்டும் இருந்ததா?
மேற்கூறிய வேறுபாடுகளால் தமிழர்கள் பிறமொழிச் சொற்களைச் சரியாகப் பேசவும் எழுதவும் இயலார்.
அன்புடன்
கோவிந்தசாமி
சார்பெழுத்துகள் மூன்று வகைப்படும்.குற்றிகரம் குற்றுகரம் இதற்கு
எடுத்துக்காட்டு கூறுங்கள். நன்றி
:)
Post a Comment