புகாருக்கும் மதுரைக்கும் இடையுள்ள தொலைவு பற்றிய கணக்கீட்டையும், அதையொட்டிய வரலாற்றுச் செய்திகளையும் பற்றிப் பேசிய இந்த உரையாடல் ஒரு மடற்குழுவில் முன்பு நடந்த போது, நண்பர் ஒருவர் தொடர்புடைய கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார்: ”இருவரில் ஒரு சோழன் முடி சூடியவனாகவும் மற்றவன் ஆளுனராகவும் இருந்து இருக்கலாமே? முடிமன்னர் மூவர் என்றுதானே சொல்லப்படுகிறது?” இதற்கான விடை, நீட்டளவைக்கு வெளியிருந்தாலும், வரலாற்றுத் தொடர்புகருதி இங்கே அதைச் சொல்ல முற்படுகிறேன். நண்பர் சொல்லுவது ஒருவகையில் உண்மைதான். புகார்ச்சோழனே அந்த மூவேந்தரில் ஒருவனாய்ச் சிலம்பில் சொல்லப்படுகிறான். காட்டு: ஆய்ச்சியர் குரவை உள்வரி வாழ்த்து.
பொன் இமயக் கோட்டு புலிபொறித்து மண்ணாண்டான்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னன் திகிரிப் பொருபடையான் என்பரால்
என்னும் வரிகள். புகார்ச் சோழனையே வேந்தனாய்ச் சிறப்பிக்கின்றன. வாழ்த்துக் காதையின் அம்மானை வரியும், வள்ளைப்பாட்டில் வரும் முதற் பாட்டு அதையே செய்கிறது.
தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்
ஆழிக் கொடித் திண்தேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழி தடவரைந்தோள் பாடலே பாடல்
பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்
இந்தப் பாடலும் புகார்ச் சோழனையே உயர்த்திப் பேசுகிறது. ஆக, முடிவேந்தன் என்ற சிறப்பு, சிலம்புக் காலத்தில் புகார்ச் சோழனுக்கே இருந்திருக்க வேண்டும். அதே பொழுது, முற்றிலும் கருப்பு-வெள்ளையாய் நிலைமை இருந்ததாய்ச் சொல்லமுடியாது என்பதை வேனிற் காதையின் தொடக்கத்தில் நாம் அறிகிறோம்.
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு
மாட மதுரையும் பீடார் உறந்தையும்
களிகெழு வஞ்சியும், ஒலிபுனற் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய
இன்னிள வேனில் ”வந்தனன் இவன்” என (1-7)
என்ற வரிகளில் நாலு தலைநகரங்கள் பேசப்பட்டிருக்கின்றன. புகாரோடு உறையூரும் இங்கே ஒருங்கே நிற்கிறது. இப்படிச் சோழர் இருவேறு பட்டுக் கிடந்த நிலை சேரனுக்கு ஏற்படவில்லை. ஒரு வேந்தனே, சேரலன் என்றும், பொறையன் என்றும், காப்பியத்துள் பேசப்படுகிறான். [எனவே இரு வஞ்சி நகரங்களும் அவன் வசம் தான் சிலம்புக் காலத்தில் இருந்திருக்கிறது.]. பாண்டியன் நிலையும் ஏமத்தோடு இருக்கிறது. மதுரையோடு கொற்கை நகரும் அவன் வசம் தான். சோழன் கதை தான் உடைந்த நிலையாய்த் தெரிகிறது. [There is a challenger to the throne of Pukar holding fort at Uraiyuur and he had the backing of the mighty Cheran, his cousin.]
”வெறுமே உறையூர்ச் சோழன் ஆளுநனாய்” இருந்திருந்தால், இங்கு உறையூர் விதப்பாய்ப் பேசப்படுமோ? கொற்கை, காப்பியத்துள் தனித்துப் பேசப்படுகிறதா? அல்லவே? வெற்றிவேற் செழியன் நெடுஞ்செழியனின் தம்பியோ, மகனோ என்பது நமக்குத் தெரியாது. அவன் கொற்கையில் ஆளுநனாகவே இருந்திருக்கிறான். நெடுஞ்செழியன் இறப்பதற்கு முன் வெற்றிவேற் செழியன் காப்பியத்துள் பேசப்படுவதேயிவில்லை. அதோடு, வழக்குரை காதையில் “நற்றிறம் படராக் கொற்கை வேந்தே” என்று நெடுஞ்செழியன் கண்ணகியால் விளிக்கப் படும் போது, நெடுஞ்செழியன் தான் கொற்கைக்கும் வேந்தன் என்பதும், வெற்றிவேற் செழியன் வெறும் ஆளுநன் என்பதும் நமக்கு உறுதிபடத் தெரிந்துவிடுகிறது. அது போலப் புகார்ச் சோழன் உறையூருக்கும் உரிமையாளன் என்று காப்பியத்தில் எங்கணுமே சொல்லப் படவே இல்லை. மாறாகப் ”பீடார் உறந்தை” என்று புகாரோடு வரிசை வைத்தே சொல்லப் படுகிறது.
எனவே ”உறந்தையும் ஒரு சோழனால் ஆளப்படுகிறது. ஆனால் உறந்தைச் சோழன் புகார்ச் சோழனோடு முரண்பட்ட பங்காளிச் சோழன்” என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியிருக்கிறது. அது செங்குட்டுவன் பற்றிய மற்ற சங்கப் பாடல்களாலும் உறுதி செய்யப் படுகிறது. [உறையூர்ச் சோழன் தன்னுடைய ஒன்பது உறவினரோடு சண்டை செய்து தன் நிலத்தை அடைவதற்குச் செங்குட்டுவன் போரில் உதவியிருக்கிறான்.] செங்குட்டுவனுக்குப் பின்னால், இந்த உறையூர்ச் சோழன் பெரிய ஆளாய் ஆகியிருக்கலாம். அது வேறு செய்தி. [ஒருசில தமிழறிஞர்கள் இவன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியாய் இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். நான் இன்னும் ஆயவேண்டும்.]
இருவேறு சோழர்கள், அவர்களின் ஆட்சியெல்லைக் குறுக்கம், என்பது பற்றி அந்த மடற்குழுவிற் பேசிக் கொண்டிருந்த போது, இன்னொரு நண்பர் அதே உரையாடலில் சோழநாட்டு எல்லை பற்றிய தனிப்பாடல் ஒன்றைக் கொடுத்திருந்தார். இதுபோலத் தொண்டை, சோழ, பாண்டிய, சேர நாடுகளின் எல்லைகள் பற்றியும் நான்கு பாக்கள் இருக்கின்றன. இவை பெருந்தொகை என்னும் திரட்டில் வருகின்றன. [என்னால் பெருந்தொகைத் திரட்டை நேரே தேடிப் பார்க்க முடியவில்லை.] இந்த வெண்பாக்களை கொடுமுடியார் நான் முன்பு கொடுத்த அவர் பொத்தகத்தில் கொடுத்திருக்கிறார். இதில் மூன்று பாடல்களை “தமிழக வரலாறும் பண்பாடும்” என்ற பொத்தகத்திலும் [பேரா. வே.தி.செல்லம், மணிவாசகர் பதிப்பகம்], 4 பாக்களை ”பழந்தமிழ் மாட்சி” என்ற பாவாணர் பொத்தகத்திலும் பார்த்தேன்.
பிழைகள் திருத்திய அந்தப் பாக்கள் வருமாறு:
மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்
ஆர்க்கும் உவரி யணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு
- பெருந்தொகை
கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள் ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதஞ்
சோணாட்டுக்(கு) எல்லையெனச் சொல்.
- பெருந்தொகை மற்றும் சோழமண்டலச் சதகம்
வெள்ளாறு அதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி
- பெருந்தொகை
வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதச்
சேரநாட் டெல்லையெனச் செப்பு
- பெருந்தொகை 2091
இந்தப் பாடல்கள் 3 ஆம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1178-1218) காலத்தில் அவைக்களப் புலவராய் இருந்த கம்பர் பாடியது என்று பாவாணர் சொல்லுகிறார். பெருந்தொகைத் திரட்டைப் பார்த்துத்தான் ”ஆசிரியர் கம்பரா?” என்று முடிவு செய்யவேண்டும். இப்போதைக்கு அப்படியே ஏற்றுக் கொள்ளுவோம்.
ஆக இந்த எல்லைகள் 12 ஆம் நூற்றாண்டு முடிவில் இருந்த எல்லைகள் போலும். இந்த நூற்றாண்டிலும் ”சேர நாட்டு எல்லையெனச் செப்பு” என்று சொல்லுவதால், அந்த நாட்டை மலையாள நாடு என்று சொல்லும் பழக்கம் வரவில்லை என்பது தெரிகிறது. [கேரளம் என்று ஒருவேளை பலுக்கியிருக்கலாம்; உறுதிபடச் சொல்லமுடியவில்லை.] இந்த தொலைவுகள் எல்லாம் தென்வடலான அளவுகளையே குறிக்கின்றன. கொடுமுடியார் கொடுத்த நீட்டளவைகளை வைத்துக் கணக்குப் போட்டால், 12 ஆம் நூற்றாண்டில் இருந்த நால்வகை நாடுகளின் எல்லைகள் பற்றி இன்னும் கூடத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
கிழக்குக் கடற்கரையை வைத்துப் பார்த்தால் கீழே பாண்டியநாடு, நடுவே சோழநாடு, அதற்கும் வடக்கே தொண்டை நாடு. இந்தத் தொலைவுகளைக் கூட்டினால் மொத்தத் தொலைவு [56+24+20=] 100 காதம் ஆகும். குமரி முனையின் அஃகம் (latitude) "8 பாகை (degree) 4 நுணுத்தம் (minutes)" என்று ஞாலப் படத்தால் (world map) அறிகிறோம். இனி மேலே அளவிட்ட 100 காதத்தை அஃக அலகிற்கு மாற்றுவோம்.
வட, தென் துருவங்களின் வழியாக அமையும் புவியின் சுற்றளவு 40008 கி.மீ. இதில் 4 இல் ஒரு பங்கு (அதாவது 10002 கி.மீ) நம்பக்கம் உள்ள புவி நடுவண்கோட்டில் (equator) இருந்து வடதுருவம் வரைக்கும் உள்ள தொலைவைக் குறிக்கும். 90 அஃகப் பாகை என்பது இந்தத் தொலைவைக் குறிப்பதால், 1 பாகை என்பது 111 133333 கி,மீ யைக் குறிக்கும். இதையே தென்புல வாய்ப்பாட்டைக் கொண்டு தலைகீழ்க் கணக்கிற் போட்டால், 100 காதம் (= 670 கி.மீ) என்பது 6. பாகை, 1.73 நுணுத்தத்தைக் குறிக்கும். [வடபுல வாய்ப்பாடு இங்கு கொஞ்சங் கூடப் பொருத்தமாய் இல்லை.]
அப்படியானால், கி.பி.1200 அளவில் தமிழகத்தின் வடயெல்லை (8பா. 4நுணு) + (6பா 1.73நுணு) = 14பா 5.73நுணு ஆகிறது. இதை எப்படிப் புரிந்து கொள்ளுவது? இந்தக் காலத்தில்,
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியின் அஃகம் = 13பா. 40 நுணு.
கதிரி என்னும் ஊரின் அஃகம் = 14பா. 7 நுணு
கூடூரின் அஃகம் = 14பா. 9 நுணு.
ஆக, கி.பி. 1200 அளவில் தமிழ்நாட்டு எல்லை திருப்பதிக்கும் வடக்கில் இருந்திருக்கிறது. இராயல சீமாவின் ஒரு பகுதி தொண்டைநாட்டைச் சேர்ந்தது போலும். சித்தூர் மாவட்டமும், நெல்லூர் மாவட்டமும் 1954 இல் நடந்த ”பொட்டி சீராமுலு”வின் போராட்டத்திற்கு அப்புறம் தானே ஆந்திரத்தோடு சேர்ந்தது. ஆக அதுவும் ஒரு காலத்தில் தொண்டைநாடுதான். மொத்தத்தில் இந்தியா விடுதலை பெற்றபின்னால், தமிழகத்தின் ஒரு பகுதியாய் இருந்த தொண்டைநாட்டு நிலத்தில் இருந்து பெரிதும் இழந்திருக்கிறோம் என்பது புரிகிறது.
அதே பொழுது, சேரநாட்டின் நீளம் 80 காதம் என்று கொடுத்திருப்பதால், அதன் அஃகத் தொலைவு 4பா. 38நுணு ஆகும். சேரநாட்டின் தென்முனை என்றுமே குமரியில் இருந்ததில்லை. மேலே பாவில் சேரநாட்டு எல்லைக்குச் சொன்ன தென்காசிக் குறிப்பை எடுத்துக் கொண்டு அதற்கு நேர் மேற்கே இருக்கும் கடற்கரையூரைத் தென் எல்லையாகக் கொண்டால், சேர நாட்டின் தென் எல்லை என்பது 8பா. 58 நுணு ஆக அமையும். இதோடு, 4பா. 38நுணுவைக் கூட்டினால்,
கி.,பி.1200ல், சேரநாட்டின் வடயெல்லை என்பது 8பா.58நுணு + 4பா38நுணு =13பா.36நுணு ஆக அமையும். இந்தக் காலத்தில்,
மேற்குக் கடற்கரையில் உள்ள காசரகோட்டின் அஃகம் = 12பா. 30நுணு
மங்கலா புரத்தின் (மங்களூர்) அஃகம் = 12பா. 52நுணு
உடுப்பியின் அஃகம் = 13 பா. 20நுணு.
என்று அறிகிறோம். அதாவது, சேரநாட்டின் வடயெல்லை உடுப்பிக்கு வடக்கிலும், கிட்டத்தட்ட உடுப்பி மாவட்டத்தின் வட எல்லை வரையிலும், 12 ஆம் நூற்றாண்டில் நீண்டிருக்கிறது. இன்று கன்னடம் பேசும் இடங்கள் [தக்கண கன்னடம், உடுப்பி மாவட்டங்கள் - பழைய நன்னன் நிலம்] அன்று கைமாறியிருந்திருக்கிறன, கூடவே அரச மொழியும், அதிகாரங்களும் மாறியிருந்திருக்கலாம். இந்த மாற்றம் எப்படி நடந்தது என்று ஆய்வை யாராவது செய்ய வேண்டும்.
கி.பி. 1200ல் சேர, சோழ நாடுகளுக்கு இடையில் முற்றிலும் நிலத்தால் அடைபட்ட கொங்குநாடு பற்றியும் அதன் எல்லைகள் பற்றியும் நமக்குத் தெரியாது. ஒரு நண்பர் கோட்டைக்கரை பற்றிச் சொல்லியிருந்தார். அது சோழநாட்டிற்கும் கொங்குநாட்டிற்கும் இடைப்பட்ட எல்லையா என்பது தெரியவில்லை. ஏனென்றால் கி.பி. 1200ல் இருந்த சேரமான் பெருமாள் அரசு ஒருகாலத்தும் ஆன்பொருநைக் கரூரைத் தன் ஆளுகையில் வைத்ததில்லை. அந்தக் காலத்தில் கொங்குச் சோழர் என்ற கிளைக்குடியே கொங்கு நாட்டை ஆண்டு வந்தது.
மேலே உள்ள 4 வெண்பாக்களையும், தென்புல வாய்ப்பாடையும், அஃக அலகுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது, இன்னும் அதிகமான புரிதல் கிடைக்கிறது. [அதாவது, தமிழன் நிலமிழந்தது ஒரு தொடர்ச்சியான கதை போலும். இன்றைக்கும் இதே கதைதான் தமிழகத்திற்குத் தெற்கில் கொடூரமாய் நடந்து முடிந்திருக்கிறது. தமிழனின் வாயும் வயிறும் எரிந்து கிடக்கின்றன. உலக ஆதரவோடு, ஓர் இனக்கொலையே நடந்து முடிந்திருக்கிறது. அதையொட்டித் தொடர்ந்து நடக்கின்ற மிரட்டல்களின் காரணமாய், என்ன செய்வதென்று தெரியாமல் தமிழர் தேம்பிக் கிடக்கிறார்கள்.]
இற்றை அறிவியல் அறிவோடு, தமிழிலக்கியச் செய்திகளைப் பொருத்திப் பார்த்தால், புதிய அணுகுமுறை நமக்கு அமையலாம். அந்த வகையில் பழந்தமிழ் நீட்டளவைகளைச் சீர்படுத்திப் புரியவைத்த கொடுமுடியாருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment