Sunday, June 28, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 3

அடுத்தது சாண், இது கையை அகல விரித்து, சுண்டு விரல் நுனியில் இருந்து பெருவிரல் நுனிவரை முடிந்த மட்டும் நீட்டி அதனால் தொடக் கூடிய (=பற்றக் கூடிய) தொலைவைக்
குறிக்கும் அளவீடாகும். இது திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் சிறு திரிவுகளுடன் காணப்படும் சொல்லாகும். ம: சாண்; க:கேண், கேண, கேணு; தெ:சேன; து:கேணு, கேண; குட: சாணி; பட: சாணு; கோத: காண்; துட: கீண்; கொலா: சேன.

கை எனும் சொல்லைக் கவ்வுதலோடு பொருத்தினோம் அல்லவா? கையின் பெருவிரலும், மற்ற விரல்களில் ஏதேனும் ஒன்றோ, அல்லது ஒன்றிற்கு மேலோ, ஒருங்கிணைந்து, ஒரு கவை (fork) போலச் செயற்றிப் பொருள்களைப் பற்றுகிறோம் தானே? கவ்வுதல், வவ்வுதல், அவ்வுதல் ஆகியவை கை, பல்/வாய் ஆகியவற்றின் மூலம் ஒரு பொருளைப் பற்றும் செயலைக் குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொற்கள். இந்தச் சொற்களின் நுண்ணிய வேறுபாடுகளை மறந்து, இற்றைத் தமிழில், ஒன்று மாற்றி இன்னொன்றாய்ப் புழங்கிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் கவ்வுதற் சொல் ஆழமானது. ”சாணி”ன் சொற்பிறப்புப் புரிய வேண்டின், கவ்விற் பிறந்த மற்ற சொற்களையும் அறிந்து கொள்ளுவது நல்லது. ஏனெனில் இவை ஒரு தொகுதி.

முதலில் வருவது கவை. கவ் எனும் வேரில் இச்சொல் பிறக்கும். மரங்களிற் தான் எத்தனை கவைகள்? இவை, கிளையென்றும் சொல்லப்பெறும். கவைத்தல் = கிளைவிடுதல், இரண்டாய்ப் பிரிதல். மாந்தரின் தோளோடு, முழுக்கை பிணையும் அக்குளில், கவை போன்ற கட்டுமானம் (மூட்டு) அமைவதால், அக்குளைக் ”கவைக்கட்டு/கவைக்கூடு” என்றும் சொல்லுவார்கள். [கவைக்கூடு, தென்பாண்டி வழக்கில் கபைக்கூடு>கம்பைக்கூடு>கம்புக்கூடு என்றும் அமையும். “கம்புக்கூட்டில் ஒரு பொக்குளிப்பான் வந்துருச்சு.”]

கவ்வுதலில் இருந்து ”கவவுதல்” பிறந்து, கைகள் ஒன்றிப் பற்றுதலையும், உடல்கள் அணைந்து முயங்குதலையும், குறிக்கும். (“காதலர்ப் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல்” - சிலம்பு மங்கல வாழ்த்துப் பாடல் 61 ஆம் அடி.)

கவ்>கவ்வான்>கவான் என்பது கவைந்து கிடக்கும் பக்க மலை. இந்தச் சொல் கவை கவையாய், வளை வளையாய்ப் பிரியும் arch like foundation க்கு இணையாய்க் கட்டிடவியலில் அணைகள், பாலங்கள் கட்டுவது பற்றிச்சொல்லுவார்கள். கவான்கள் வைத்துப் பல பாலங்கள் உலகிற் கட்டப் படுகின்றன.

ஒரு பாதை இரண்டாய்ப் பிரியும் இடம் கவ்>கவல்>கவலை என்ற சொல்லாற் குறிக்கப்படும். [கவல்/கவலை என்பதும், கூடல் என்பதும் ஒரு junction தான். கூட்டுச்சாலை என்றும் சில பகுதிகளிற் சொல்லுகிறார்கள். எப்படி ”அருவி”யைத் தொலைத்து ”நீர்வீழ்ச்சி”யை உருவாக்கினோமோ, அதுபோலக் கவல்/கவலை, கூடல் ஆகியவற்றைத் தொலைத்துச் சந்திப்பு என்ற சொல்லை இந்தக் காலத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். “திருச்சி சந்திப்பு” - ஐ அறியாதார் யார்?]

ஒரு (பாதைக்) கவலையில் நிற்பவருக்கு, ”எப்பக்கம் போயின், போகவிழையும் ஊர் வந்து சேரும்? அதுவா? இதுவா?” என்ற குழப்பம் ஏற்படும் மனநிலையையும் (மனக்) கவலை என்ற உருவகத்தாற் சொல்வதுண்டு. இன்று பலருக்கும் கவலை என்றால், பருப்பொருள் உருவகம் தோன்றாமல், உளவியற் கருத்தே முன்னாற் தெரிகிறது. மேலும் ககர, சகரப் போலியில் (மனக்)கவலை (மனச்)சவலை என்றும் சொல்லப் பெறும். வளைவுப் பொருள் இன்னும் நீண்டு சவளுதல் என்பது துவளுதலையும் குறிக்கும். நேரே நிற்க முடியாமல் துவண்டு போகும் பிள்ளையைச் சவலைப் பிள்ளை என்று நாட்டுப்புறத்திற் சொல்லுவார்கள்.

கவல்>கவள்>கவளம் என்ற சொல் வாயால் கவ்விக் கொள்ளும் உணவளவைக் குறிக்கும்.

கவள்>கவுள் என்னும் சொல் முகத்தில் மேற்தாடையும், கீழ்தாடையும் சேரும் இடத்தைக் குறிக்கும். இந்த இடத்தின் உள்ளே தான் உணவு கவ்வப் படுகிறது. இந்தக் கவுளின் மேல் உள்ள தோற்பகுதி கன்னம் என்றும் அழைக்கப் படுகிறது.

நூறு வெற்றிலைகளைச் சேர்த்து, மேலும் கீழும் வாழைமட்டையை வளைத்துக் கட்டியது கவளியாகும். கவளுவது, கட்டிவைப்பது என்றும் பொருள் நீளும். பொத்தகக் கவளியும் (= பொத்தகக் கட்டு) அதே போல உருவகப்பெயர் கொள்ளும்.

மடங்கிக் குவிந்த கை போல் தோற்றம் அளிக்கும் சோழி, கவ்>கவ>கவறு என்றே சொல்லப் பட்டது. கவறு (=சோழி) குப்புற விழுந்தால் அதன் மதிப்பு ஒன்று என்றும், மல்லாக்க விழுந்தால் சுழியம் என்றும் கொண்டு, 6 சோழியோ, 12 சோழியோ போட்டு, எத்தனை சோழி குப்புற விழுந்தன என்று எண்ணிப் பார்த்து அத்தனை கட்டம் முன்நகர்வது என்று சூதாட்டங்களிற் கருதியதால் சூதாட்டம், கவறாட்டம் என்றும் சொல்லப்பட்டது. கவறு என்ற தமிழ்ச்சொல் cowry என்று உலகெங்கும் பரவியிருப்பதே, இந்தச் சூதாட்டங்களின் தொடக்கம் நாவலந்தீவு தானோ என்று எண்ண வைக்கிறது. சோழி என்ற சொல்லும் கூடக் கவளி>சவளி>சோளி>சோழி என்று ஆனது தான். சோழி போட்டுப் பார்த்துச் சொல்லும் ”ப்ரஸ்ண ஜ்யோதிஷம்” என்னும் மலையாளச் சோதியம், சோழி போட்டுக் கணக்கிடும் பழங்கணக்கு முறைகள், எல்லாம் இந்த கவளி/கவறு கொண்டே செய்யப் படுகின்றன.

இதே போல இரு நீண்ட தாடைகளைக் பயன்படுத்தி மீனைக் கவ்வும் பறவை மீன்கொத்தி எனப்படுகிறது மீன் கவ்வும் செயலைச் செய்வதால் இது கவுதமாகும். (= kingfisher). கவுதப் பறவையை Kingfisher Airlines காரர்கள் தம்முடைய இலச்சினையாகக் காட்டுகிறார்கள்.

கவள்>கவள்+து = கவட்டு என்பது நம் உடம்பில் இடுப்பின் கீழ் இரண்டாய்ப் பிரியும் மூட்டுப் பகுதியைக் குறிக்கும். வேடிக்கைச் சொலவடையாய் “கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே” என்று சொல்கிறோம் அல்லவா? கவட்டு என்பது கவடு என்றும் சுருங்கும், கவட்டை என்றும் நீளும். கவட்டியென்றும் திரியும்.

கவள்>கவண் என்று திரிந்து, வேறொரு சொல்லும் உருவாகும். சிறு கவட்டையில் அழிப்பட்டை (rubber band) கட்டி, அதிற் சிறு கல்லை வைத்துப் பட்டையை இழுத்துத் தெறிக்க வைத்து, ஒரு விலங்கையோ, கனியையோ, விழுத்தாட்டுகிறோம் அல்லவா? அந்தக் காலத்தில் அழிப்பட்டைக்கு மாறாய், வேறொரு நெகிழ்நார் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ”கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்” என்று அகநானூறு 292 பேசுகிறது. இந்தக் கவண் என்னும் கருவி எப்படிச் செயற்படுகிறதோ, அதே முறையில் தான் இன்றைய gun-உம் வேலை செய்கிறது. நான் கவண் என்ற சொல்லையே gun க்கு இணையாய்த் தமிழிற் பரிந்துரைத்தேன். துவக்கு, துப்பாக்கி என்பவற்றை வேறு கருவிகளுக்கு இணையாய்ப் பயன்படுத்தலாம். [gun, rifle, revolver இன்ன பிறவற்றை வேறுபடுத்த வேண்டாமா?]

எந்நேரமும் கூடும் ஒரு கவட்டைப் போலவே அணியினர் வியகம் (>வ்யூகம்) வகுத்து ”மறு அணியில் இருந்து பாடிக் கொண்டே ஏறிவருபவனைக் (ஏறாளி = rider)” கவைத்து அமுக்கிக் கட்டிப் போடும் ஆட்டத்தைக் கவடி என்று சொல்லுகிறோம். எதிரணிக்காரன் பாடிவரும் பாட்டிலும் கூடக் “கவடி, கவடி” என்ற சொல் விடாது சொல்லப்படும். கவடி>கபடியாகி இன்று இந்தியத் துணைக்கண்டம் எங்கணும் பரவி நிற்கிறது. கவடிப் பிடிப்பால் அந்த விளையாட்டிற்குப் பெயர் ஏற்பட்டது.

கவடி/கவட்டையைத் தோளில் தூக்கிச் செல்வது காவடி. இரண்டு பக்கம் மூங்கிற்பட்டையைக் கவைத்துச் சுமை தூக்குவது காவுதல் என்று சொல்லப் பட்டது. இது போன்ற கவையால் பண்டங்களைக் காவிக் கொண்டு போனதால், பெரும் வணிகனுக்குக் காவிதி என்ற பட்டமும் வழங்கப் பட்டது.

கவடிக் கிடக்கும் கிளிஞ்சல்/சிப்பிக்குள் முத்து இருப்பதால், கவடம்>கவாடம் என்பது முத்தையும் குறிப்பதாயிற்று. கவாடபுரம் என்பது பழம்பாண்டியர் தலைநகர் முத்துக் குளிக்கும் இடத்தைக் குறித்திருக்க வேண்டும். இன்றையக் கொற்கைக்கும், காயலுக்கும் கிழக்கே கடலுள் அமிழ்ந்த இந்நகரைக் கடலாய்வுதான் அடையாளம் காட்ட வேண்டும்.

ஓர் அடிமரத்தில் இருந்து கவைகளாய்க் கிளைபிரிந்து விளக்குகளைக் கொண்ட அமைப்பு, கவர விளக்கு எனப்பட்டது. கவர விளக்கு நிலத்தில் நிலைக்கலாம், விதானத்திலும் தொங்கலாம். சர விளக்கும், கவர விளக்கும் வெவ்வேறு வகையானவை. [chandelier என்பதற்குச் சரவிளக்கு என்று மட்டுமே சொல்லுகிறோம். ஓரோ வழி கவர விளக்கு என்றும் சொல்லலாம்.]

கவ்வுதலில் இருந்து கவர்தல் என்னும் வினைச்சொல் பற்றிக் கொள்ளுதலைக் குறிக்கும். கவர்ந்து கொண்ட பொருள் பற்றிக் கொண்டதும், பின் மறைந்துக் கொண்டதும் ஆகும். இதே வளர்ச்சியில் முடுதல் பொருளில் கவிதல் என்ற வினைச்சொல் கிளைக்கும்.

கவர்தல் வினையில் இருந்து கவரி என்பது மூடும் பொருளைக் குறிக்கும். இமைய மலையில் இருக்கும் ஒருவிதமான யாக் எருமை உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து அதன் முதுகு, மார்பு, வயிறு ஆகியவை மூடினாற் போல் காட்சியளிக்கும். மூடிக் கிடப்பதால் இந்த மயிர் கவரி என்றே சொல்லப் பட்டது. கவரியைக் கொண்ட மா கவரிமா எனப்பட்டது, மா (=விலங்கு) என்பது மான் என்றும் பழங்காலத்திற் சொல்லப்பட்டது. கவரிமான் எனில் ஏதோ ஒரு வகை மான் (deer) என்றே பலரும் எண்ணுகிறார்கள். உண்மையில் கவரிமான் என்பது ஒருவகை யாக் எருமை. [மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் - குறள் 969.]

ககர-சகரப் போலியில் கவரியும், சவரி ஆகும். சவரி, சவுரி என்றும் பலுக்கப் படும். திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணபுரப் பெருமாள், சவரிப் பெருமாள் என்று சோழர் காலக் கல்வெட்டுக்களிலும், இற்றைக் காலத்தில் சௌரிராசப் பெருமாள் என்றும் குறிப்பிடப்படுகிறார். பல்வேறு விலங்குகளைப் போல, நீண்டு கிடக்கும் மாந்த மயிரை வெட்டிக் கொத்தாக்கி அதைக் கொண்டு முடிகுறைந்தோர் ஒப்பனை செய்வது சவுரி வைத்தல் என்றே சொல்லப் படுகிறது. பெண்கள் நீண்ட முடி வைத்துக் கொள்ளுவதை ஒயிலாக நினைத்த, இற்றைக்குச் சற்று முந்தையக் காலங்களில் சவுரிகள் பெரிதும் வாங்கப் பட்டன.

கவரி என்பது கவரம் என்றும் சொல்லப் பெற்று, மயிரைக் குறித்திருக்க வேண்டும். ஏனெனில் கவரம்> சவரம் என்ற திரிவில் இன்றும் பேச்சு வழக்கில் மயிரெடுப்பதைக் குறிப்பிடுகிறோம். (சவரம் செய்து கொள்ளுதல். இங்கே வினைச்சொல் இல்லாது துணைவினை போட்டுப் பெயர்ச்சொல்லை ஆளுவதே நம்மை ஆழ்ந்து நோக்க வைக்கிறது,)

சவரியை அவ்வப்பொழுது வெட்டி எடுத்து விசிறி போற் கொத்தாக்கிக் கட்டுவது சவரம்>சமரம்>சாமரம் என்று சொல்லப்படும். அரசருக்கு / தலைவருக்கு அருகில் சாமரம் வீசிக் காற்றெழுப்புவது பல ஆண்டுப் பழக்கமாகும். நாளாவட்டத்தில் பல்வேறு விலங்குகளின் மயிர்களும் சாமரம் செய்யப் பயன்பட்டன.

மேலே கவரி>சவரி, கவரம்>சவரம், கவலை>சவலை, கவளி>சவளி, கை>கய்>கெய்>செய் என்பது போல இன்னும் பல ககர, சகரப் போலிகள் கவள்>சவள் என்பதை ஒட்டியிருக்கின்றன.

முன்னே சொன்னது போல் வளைதற் பொருளில் உள்ள சவள் படகோட்டப் பயன்படும் துடுப்பையும் குறிக்கும். படகை வலிக்கும் போது துடுப்பு வளைந்து கொடுக்கிறதல்லவா? துடுப்புத் தள்ளுகிறவர் சவளக்காரர் என்றும் சொல்லப் படுவார். சற்றே வளையக் கூடிய ஆனால் நேர்கோடாய் நிற்கும் குத்தீட்டி சவளம் (>javelin) எனப்படும்.

துவண்டு கிடக்கும் துணி சவளி எனப்பட்டது. [பார்க்க: சவளி எனும் கட்டுரை. “தமிழ் வளம் - சொல்” இரா. இளங்குமரன் 1996, திருவள்ளுவர் தவச்சாலை”]

சவள்ந்து கிடக்கும் கயிறும், துணிச் சுருக்கும் கொண்டு ஓராளைச் சவட்ட முடியும். சவட்டுதல் = சவளைக் கொண்டு அடித்தல். அது சவட்டு>சவட்டை>சாட்டை என்றும் நீளும்.

சவள்>சவண்>சவணம் என்பது வளைந்து பற்றும் கருவி. இந்தக் கருவியைக் கொண்டு மாழைக் கம்பிகளை இழுக்க முடியும்.

பலாப்பழத்திற்குள் ஒவ்வொரு பலாச்சுளையைச் சுற்றிலும் அதை மூடினாற்போல் இருக்கும் நார்ப்பகுதி [கிட்டத்தட்ட மேலே சொன்ன கவரி>சவரியைப் போல] சவணி என்று சொல்லப் படும்.

பற்றுதற் பொருளை உணர்த்திய கவ்>கவள்>கவண் என்று சொல்லில் இருந்து வேறு வகையிற் திரிந்து கவண்>காண்>காணுதல் என்ற சொல் உருவாகிப் பற்றுதல், போதியதாதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். “இவ்வளவு அரிசி எத்தனை பேருக்குக் காணும்? எத்தனை நாள்களுக்குக் காணும்?” என்னும் போது பேர் அல்லது நாள் என்னும் ஒற்றைப் பரிமானத்தில் வைத்து அளக்கும் செய்கை புலப்படும். காண்>சாண் என்றசொல்லும் ஒற்றைப் பரிமானத்தில் ஒரு ஈற்றில் பெருவிரலை வைத்து, இன்னொரு ஈற்றில் சுண்டு விரலை வைத்து வேண்டியமட்டும் நீட்டி அளக்கும் செய்கைதான் காணுதல் என்பதில் வெளிப்படுகிறது. ககர, சகரப் போலியில் சாண் என்ற சொல்லும் ஒற்றைப் பரிமாண அளவீட்டையே குறிக்கிறது.

சாண் என்னும் பெயர்சொற் பிறப்பைப் பார்த்த நாம் இனிச் சாண் என்னும் அளவீட்டைப் பார்ப்போம்.

”எண்சாண் உடம்பிற்குத் தலையே பெருந்தானம்” என்ற சொலவடையும்,

"எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குக்
கண்,கால், உடம்பில் சுரக்கின்ற கைகளில்,
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்
றண்பால் உடம்புதான் நால் உடம்பு ஆகுமே

என்னும் திருமந்திரம் “உடலைந்து பேதம்” என்னும் 119 ஆம் இயலில் வரும் 2102 ஆம் பாவும், [முன்னால் இசைக்குப் பிறப்பிடங் கூறும் பஞ்சமரபு 42 ஆம் பாவைப் போல], நமக்கு சாத்தார மாந்தனின் அளவீட்டைத் தெரிவிக்கின்றன. அதாவது, மேலே சொன்ன திருமந்திரப் புரிதலின் படி, 1 தண்டு = ஓராள் உயரம் = 8 சாண் = 8* 8 1/4 = 66” = 5 1/2 அடி. பஞ்ச மரபு வெண்பாவின் படி 96*11/16 = 66” = 5 1/2 அடி என்ற அளவே ஓராள் உயரம் என்பது பெறப் படுகிறது. வட நாட்டு முறைப் படி, 1 சாண் = 9” என்று சொன்னால், சாத்தார ஆளின் உயரம் 6 அடியாய் ஆகிப் போகும். இன்றும் கூட இந்திய நாட்டில் இதற்கு வாய்ப்பில்லை. 6 அடிவுயரம் என்பது நம் வழக்கில் நிரவலாகச் சொல்லாமல் உயர்வு நவிற்சியாகவே சொல்லப் படுகிறது.]

சாண் என்பதற்குப் பகரியாய் 1 பாதம் அல்லது காலடி என்ற சொல்லையும் கூட முன்னாற் புழங்கியிருக்கிறார்கள். [அடி = foot என்னும் இந்தக் கால அளவீட்டில் இருந்து வேறுபடுத்திக் காட்டக் காலடி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். உண்மையில் அடி என்ற சொல்லே அன்று புழங்கியது. ஆனால் அது 12 அங்குலம் அல்ல. தமிழில் உள்ள (கால்)அடியும், ஆங்கிலத்தில் உள்ள அடியும் ஒரே அளவானவை அல்ல. ஆங்கில அடி என்பது 12 அங்குலம். தமிழ்ப் பாதம்( = தமிழ்க் காலடி = சாண்) என்பது 8 1/4 அங்குலம் ஆகும். பாதம் என்பது குதிகாலில் இருந்து பெருவிரல் முனைவரை உள்ள தூரம் ஆகும். குதிகால் என்பது புவியில் கால் குத்தும் இடம், குதிகாலின் விளிம்பு அல்ல. குதிகாலின் விளிம்பில் இருந்து காற்பெருவிரல் நுனியை அளந்தால் அது 8 1/4 அங்குலத்திற்கும் மேல் இருக்கும். இதோடு, பதிதல் என்ற வினையில் இருந்து பதி (= காலடி) என்ற பெயர்வழக்கு, சற்று மாறி, வதியாகிச் சாலைகளைக் குறிப்பதையும் பல்லவர், சோழர் காலக் கல்வெட்டுக்களில் அறிகிறோம்.]

அன்புடன்,
இராம.கி.

1 comment:

பிரதாப் said...

கவைக்கட்டு/கவைக்கூடு ஈழத்தில் மருவி
கமக்கட்டு என்று பயிலும் (மணப்பாடு, தூத்துக்குடிப் பகுதிகளில் கவைக்கூடு என்றே ஆளப் படுகின்றதென அறிந்திருக்கிறேன்!).கமக்கட்டின் பொருள் புரியாது இருந்தேன், இப்போது
தெளிந்தேன். நன்றிகள்!

- பிரதாப்