Friday, July 10, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 8

முந்தையப் பகுதியில் காதம்/காவதம் என்ற அளவீட்டையொட்டிய தமிழிலக்கியச் சான்றுகளைப் பார்த்தோம். இனி, அருமையான சான்றாகக் கிடைத்த சோழன் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டொன்றைப் [Annual Report on Epigraphy 442/1922] பார்ப்போம். இந்தக் கல்வெட்டின் ஊற்றுப் படியை (original copy) நான் பார்க்கவில்லை. ஆனால், ”கல்வெட்டுக்கள் காட்டும் கலைச்சொற்கள்” என்ற பொத்தகத்தின் 198 ஆம் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பார்த்தேன். (டாக்டர் ஆர்.கே.அழகேசன், தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இரண்டாம் தளம், இராயப்பேட்டைநெடுஞ்சாலை, சென்னை 600014). செங்கற்பட்டு மாவட்டத்துக் ’கயாற்’ என்னும் ஊரில் இந்தக் கல்வெட்டுக் கிடைத்திருக்கிறது. [இந்த ஊர்ப்பெயர் எனக்கு விளங்கவில்லை. அதோடு, சென்னைக்கருகில் இவ்வூர் எங்கிருக்கிறது என்பதும் தெரியவில்லை.] இந்தக் கல்வெட்டில். ”நந்தாவிளக்கு எரிப்பதற்குரிய தருமம் தடைப்படின் பாவஞ் சேரும்” என்பதைக் கூறுமிடத்தில்,

”இத் தர்மத்துக்கு பிழைக்க நிற்பார் கங்கையிடக் குமரியிடை எழுநூற்றுக் காதத்திலும் பாவம் செய்தான் செய்த பாவம் கொள்வதாக ஒட்டிக் குடுத்தோம் ஸபையோம்”

என்றதொரு வாசகம் வருகிறது. கங்கையிடக் குமரியிடை எழுநூற்றுக் காதம் என்னும் பொழுது, ”வாரணாசிக்குச் சென்று கங்கையாடும்” பழக்கம் இங்கு உணர்த்தப் படுகிறது. கங்கைக்கும் குமரிக்கும் இடைத்தொலைவு 700 காதம் எனில், தென்புல வாய்ப்பாட்டின் படி, அது 700*6.7 = 4690 கி.மீ. என்றாகிறது. இது உறுதியாய் அதிகம். மாறாக, இத்தொலைவு வட, தென் புலங்களில் வேறாகி, முன்னே சொன்ன ”கோல் அளவு” குழப்பத்தால், கணக்கீடு மாறியிருக்குமோ என்று தோற்றுகிறது. அதாவது நம்மூரில் பெருங்கோல் (=தண்டம்) என்பது 11 அடி. கோல் (=தண்டு, ஓராள் உயரம்) என்பது 5 1./2 அடி. ஆனால் வடக்கே, 5 1/2 அடிக் கோலே குரோசத்திற்கு அடிப்படையாய் இருந்து, கணக்கிட்டிருக்கிறார்கள். [அர்த்த சாற்றம் சொல்லும் அளவும் 5 1/2 அடிக்கே பொருந்துகிறது.] வடபுல வாய்ப்பாட்டை ஒட்டி அளந்தால், ஒரு காதம் (அல்லது குரோசம்) என்பது 3.35 கி.மீ ஆக அமைகிறது. அப்பொழுது 700 காதம் என்பது 700*3.35 = 2345 கி.மீ என்றாகும்.

இன்றைக்குக் குமரியில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக தேசிய நெடுஞ்சாலை 7ஐப் பிடித்து வாரணசி போகும் தொலைவு [235+66+78.09+90.01+1937.83=] 2397.33 கி.மீ ஆகிறது. பெரும்பாலும் பழைய பெருவழித் தடங்களை ஒட்டியே இற்றைப் பெருவழிகளும் அமைவதால், கிட்டத்தட்ட இதே பாதை ஆதித்ய கரிகாலன் காலத்திலும் இருந்திருக்கக் கூடும் என்றால், இந்த ஒக்குமை [2345 கி,.மீ - பழைய மதிப்பீடு, 2397 கி.மீ - இன்றையத் தொலைவு] நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகிறது. [இதில் உள்ள ஒரே இக்கு, (risk) கோல் என்ற அளவீட்டின் வரையறையை மாற்றுவதே. வட, தென் புலங்களுக்கு இடையிருந்த கோல் குழப்பம் பற்றி முன்னாலேயே பேசியிருக்கிறோம். இந்தச் சான்றே, வடபுல வாய்ப்பாடு பேரரசுச் சோழர் காலத்தில் தென்புலத்தில் பயன்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.]

இதே 700 காவதத் தொலைவு இன்னொரு முகன்மையான குறிப்பில் (சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், வேனிற்காதை 1-2 வரிகள்), கடற்கோள்களுக்கு முந்திய பழம் பாண்டிநாடு பற்றிய பலரும் ஏற்கத் தயங்கும் அடியார்க்கு நல்லாரின் உரையில், வருகிறது. [இந்தக் கதையை நம்பாமல் தூக்கியெறிந்த தமிழறிஞர் அதிகம். ஆனாலும் இக்கதை மீண்டும் மீண்டும் இன்னொரு பகுதியினரால் அலசப் படுகிறது. கடலியல், தொல்லியல், பற்றிய செய்திகளும், புரிதல்களும் எழ, எழ, இக்கதையும் மீண்டு எழும்.]

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு

என்ற வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் கொடுத்த உரை கீழ்க்கண்டவாறு அமையும். [பழைய உரைநடை, படிப்பவர் கொஞ்சம் பொறுத்துப் போங்கள்]

-------------------
”நெடியோன் குன்றம் = வேங்கட மலை, தொடியோள் = பெண்பாற் பெயரால் குமரி என்பதாயிற்று. ஆகவே தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால் நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது பௌவம் என்றது என்னையெனின், முதலூழி யிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீயினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறாயுள்ளார் எண்பத்தொன்மதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீயினான்.

அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவம் என்றாரென்றுணர்க.

இஃது என்னைப் பெறுமாறெனின், ’வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ (11:18-20) என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும், பிறவாற்றானும் பெறுதும். ....................”
------------------

சரி, இந்த நீளுரையை இன்றையக் கடலியல், தொல்லியல் அறிவைக் கொண்டு அலசுவது இயலாத செயலாகும். ஆனால், ”பழம் பாண்டிநாட்டில் வடக்கே இருந்த குமரியாற்றிற்கும், அதன் தெற்கெல்லைக்குச் சற்று வடக்கிருந்த பஃறுளியாற்றிற்கும் இடைத்தொலைவு 700 காவதம்” என்பதை நாம் இன்னொரு விதமாய் அணுகி ஓர்ந்து பார்க்கலாம்.

அதாவது சில சொற்களின் பொருட்பாடுகள் காலத்திற்குக் காலம் மாறுபடுவது நடந்திருக்கிறது. ஒரே பொருளை உணர்த்திய இருவேறு சொற்கள் நாளாவட்டத்தில் இரு பொருட்பாடுகளை உரைக்கலாம். இதே போல இருவேறு பொருட்பாடுகளை உரைத்த இரு சொற்கள் காலவோட்டத்தில் ஒரே பொருட்பாட்டை உணர்த்தலாம். கூவுதலும், காவுதலும், ஓசுதலும் ஒரே பொருட்பாட்டை வினைச்சொல்லின் வழி உணர்த்துவதால், கூப்பீடு, காவதம், யோசனை ஆகிய மூன்று பெயர்ச்சொற்களும் கூட மிக முற்பட்ட காலத்தில் ஒரே அளவீட்டைக் குறித்த வெவ்வேறு சொற்களாய் இருந்திருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது. அவற்றிற்கான வேறுபாடு ஒருவேளை பின்னால் நிலைத்ததோ, என்னவோ?.

மேலே குமரி - வாரணாசித் தொலைவைக் கணக்கிட்டபோது, [வடபுலக்] காதம், [தென்புலக்] காதம் ஆகிய இரண்டும் வேறுபட்டவை என்று புரிந்தது போல, அடியார்க்கு நல்லாரின் உரையில் வரும் 700 காவதவாற்றைப் புவியியல் நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கையில், ”கூப்பீடு என்பது இன்னும் குறைவாய் 500 சிறுகோலுக்கு இணையாய் ஒருகாலத்தில் இருந்திருக்கலாமோ?” என்றும் எண்ணத் தோன்றுகிறது. இப்படி எண்ணினால், 700 காவதம் என்பது இன்னும் குறைச்சலாய் 1172.5 கி.மீ தொலைவுக்கு இணை என்று புரிபடும். தவிர, இத்தொலைவை இன்றையக் குமரிக்கு நேர்தெற்கு என்று கொள்ளவும் வேண்டியதில்லை. இது வடகிழக்கில் நீண்டு, கிழக்கில் திரும்பி, பின் தெற்கு நோக்கி வளைந்ததாகவும் கொள்ள முடியும். ஏனெனில், முதற் கடற்கோள் நடப்பதற்கு முன் இன்றைய இலங்கைத் தீவு தமிழ்நாட்டோடு நிலத்தால் தொடர்பு கொண்டே இருந்தது; அதோடு அந்தக் காலத்தில் பாற்கடல் / பாற்குடா (Palk bay) என்று இன்று சொல்லப்படும் கடற்பகுதி இருந்தது இல்லை. அதாவது, இன்றையக் கோடிக்கரை, தனுக்கோடி, தலைமன்னார், யாழ்ப்பாணம் ஆகியவற்றிற்கு இடையே கடல் கிடையாது. பஃறுளி என்ற ஆறும் இன்றைய இலங்கைத் தீவிற்குச் சற்று தெற்கே இருந்திருக்கலாம். தவிர குமரிக்குச் சற்று தெற்கே 250 கி.மீ அளவிற்கு நிலமும், இன்றைய இலங்கைக்குத் தெற்கில் 150 கி.மீ நீளத்திற்கு நிலமும் இருந்திருக்கின்றன என்பது பழைய கடல்மட்ட முகப்புக்களைப் (maps) பார்க்கும் போது தெரிகிறது. இத்தகைய பழம் நிலக்கிறுவத்தில் (geography) பழங் குமரியாற்றங்கரையில் [அது இன்றையக் குமரி முனைக்குத் தெற்கில் இருந்திருக்கலாம்.] இருந்து இலாட வடிவில் கடலை ஒட்டி வடகிழக்கிற் போய், பின்னால் சுற்றிக் கிழக்கில் வளைந்து, அப்புறம் இலங்கைக் கடற்கரையை ஒட்டியே தெற்கே போனால் பஃறுளியாற்றைத் தொடும் வகையில் 1172.5 கி.மீ தொலைவு அமையக் கூடலாம்.

ஒருகாலத்தில் தென்னிலங்கையில் இருந்த உரோகண அரசு மிகவும் நாள்பட்டது. அது தேவனாம்பிய தீசன் காலத்துக்கும் பழமையானது. அந்த அரசு தன்னைப் பாண்டிய அரசாகவே கருதிக் கொண்டது என்று மயிலையாரும் கே.கே.பிள்ளையும் சொல்லுவர். ஒருவேளை அந்த அரசு பழம் பாண்டிநாட்டின் எச்சமாய்க் கூட இருந்திருக்கலாம். பஃறுளி என்னும் ஆறு பழைய உரோகணத்திற்குத் தெற்கில் இருந்ததாய், ஓர்ந்தால், குமரிக்கும், பஃறுளிக்கும் இடைப்பட்ட தொலைவு நம் கண்முன் வேறு காட்சியைக் கொடுக்கும். நான் சொல்லுவது ஒரு கருதுகோள் தான். எண்ணிப் பார்க்கலாம்.

மேலே ”கூப்பீடு என்பதன் தொலைவு வெவ்வேறு காலங்களில் மாறுபட்டு இருந்திருக்குமோ?” என்று ஐயுறுவதற்கு, இன்னொரு போல்மமும் (model) நம்மைத் தூண்டுகிறது. காலத்தின் நீட்சியைக் குறிக்கும் “யுகம்” என்ற சொல், இந்தியத் துணைக்கண்டத்தில் காலத்திற்குக் காலம் பொருள் வேறுபாடு காட்டியிருக்கிறது. கி.மு. 1500 - 1200 அளவில், யுகம் என்று சொல் 5 ஆண்டுகளையே (சமவட்டம், பரிவட்டம், இடவட்டம், அணுவட்டம், உத வட்டம் என்று அந்த ஐந்தாண்டுகளுக்குப் பெயர் சொல்லுவார்கள்.) குறித்திருக்கிறது. பின்னால் முன்செலவத்தைக் (precession) கணக்கில் கொண்டு ஒக்க நாட்கள் (equinox) அல்லது முடங்கல் நாட்கள் (solstice) ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு மெதுவாய் நகரும் காலத்தை யுகம் என்ற சொல் குறித்திருக்கிறது. இந்த யுகம் கிட்டத்தட்ட 2160 ஆண்டுகள் ஆகும். இன்னும் சிலகாலம் கழித்து நான்கு யுகங்கள் என்று சொல்லும் வகையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வருமாப் போலக் கலியுகம் 432000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், த்ரேதாயுகம் 1296000 ஆண்டுகள், க்ருதயுகம் 1728000 ஆண்டுகள் என்றும் பகுத்திருக்கிறார்கள். ஆக யுகம் என்ற சொல்லுக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பொருட்பாடுகள் இருந்திருக்கின்றன. இதே போலக் காதம்/காவதம் என்றசொல்லுக்கும் வெவ்வேறு பொருட்பாடுகள் வெவ்வேறு காலங்களில் இருந்திருக்கலாமே?

முதற்சங்க காலம்:

1 கூப்பீடு = 500 சிறு கோல்.

இடைச்சங்க காலமும் அதற்குப் பின்னும் [கி.மு.1000-300. வடபுலத்துச் சனபதங்கள், மோரியர் ஆட்சிக் காலம்]

1 கூப்பீடு = 500 கோல் (இதுவே வட புலத்தில் நிலைத்திருக்கலாம், பின்னால் பல்லவர், சோழப் பேரரசில் வடமரபு ஆதிக்கம் கூடிப் பின் தெற்கிலும் நிலைபெற்றிருக்கலாம்)

கடைச்சங்க காலம் [கி.மு.500-கி.பி.200]

1 கூப்பீடு = 500 பெருங்கோல் (சிலம்பு வரையிலும் இது பயன்பாட்டில் இருந்து, பின் பல்லவர் ஆட்சியில் வடபுல வழக்கதிற்கு மாறியிருக்கலாம்).

இந்தக் கருதுகோளை இன்னும் பல சான்றுகள் கொண்டு உறுதி செய்யவேண்டும்.

இந்தப் பேரழிவு எப்பொழுது நடந்திருக்கலாம்? அடியார்க்கு நல்லார் சிலம்பையும், நக்கீரரின் இறையனார் பொருளுரையையும், இளம்பூரணரின் முகவுரையையும் பின்புலமாக்குகிறார். சிலம்பிற்கு முன் இந்தச் செய்தி எந்நூலில் பேசப்பட்டது என்று ஆணித்தரமாய்ச் சொல்ல முடியவில்லை. [இந்தச் செய்தியைப் பேசும் கலித்தொகையின் காலம் சிலம்பை ஒட்டியே சொல்லப் படுகிறது] எனவே குத்து மதிப்பாக நமக்குக் கிடைத்த ஆவணங்களின் வழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இச்செய்தி பேசப் படுகிறது என்று கொண்டால், முதலில் இச்செய்தி பேசப்பட்ட காலம் 2000 + X என்பதாக அமையலாம். இந்த X தான் நம்முடைய அறியாமையைக் குறிக்கும் குறி.

முதற்சங்க காலம் என்பது ”4440 ஆண்டுகள்” என்று மேலே உணர்த்தப் படுகிறது. எனவே பெருங் கடற்கோள் முதலில் நடந்தது 4440 + X + 2000 = 6440 + X ஆண்டுகளுக்கு முந்தியிருக்க வேண்டும். இற்றைக்கு 18000 ஆண்டுகளுக்கு முன், அதாவது கடைசிக் குளிரல் மீகுமத்திற்குப் (Last Glacial Maximum) பின் [glacial: 1656, from Fr. glacial, from L. glacialis "icy, frozen, full of ice," from glacies "ice," from PIE base *gel- "cold" (cf. L. gelu "frost"). Geological sense apparently coined by Professor E. Forbes, 1846.], கடலளவு இன்று இருப்பதைக் காட்டிலும் 120 மீட்டர் குறைந்து இருந்தது. அதன்பின் சுற்றுச் சூழலில் பெரும்மாற்றம் ஏற்பட்டு, துருவங்கள், இரோப்பா, வட அமெரிக்கா, இமயமலை, இமயமலைக்கும் வடக்கில் இருந்த ஆசியப்பகுதி ஆகிய இடங்களில் இருந்த பெரும் பனிப்பாறைகள் கொஞ்சங்கொஞ்சமாய் உருகத் தொடங்கி, கடல்மட்டம் உயர்ந்து கொண்டே வந்து. இற்றைக்குப் 15000 ஆண்டுகளுக்கு முன் பனி உருகும் வீதமும் கூடி கடல் திடீரென்று பெரும்வேகத்துடன் உயரத் தொடங்கியது. இதன் காரணமாய் உலகெங்கும் உள்ள கடற்கரைகள் சுருங்கத் தொடங்கி, அன்றைய நெய்தல் நிலங்களுக்குள் கடல்நீர் புகுந்து நிலத்தை அமிழ்த்திக் கொண்டே வந்தது. அந்தந்த இடங்களின் இடக்கிறுவத்தைப் (topography) பொறுத்து நெய்தல்நில அழிவுகள் சட்டென்றோ, கொஞ்சம் கொஞ்சமாகவோ நடந்திருக்கலாம். கடல் உயரும் வீதம் இற்றைக்கு 8000 ஆண்டுகள்ளுக்கு முன் மீண்டும் குறையத் தொடங்கி 6500 ஆண்டுகளுக்கு முன் பெரிதும் குறைந்து விட்டது. உண்மையில் இன்றும் நம்மைச் சுற்றியுள்ள கடல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. [அது கோள வெதுப்பினால் (global warming) நடைபெறுகிறது என்று அறிவியலார் சொல்லுகிறார்கள். கோள வெதுப்பு என்பது மிகப்பெரும் புலனம். இங்கு ஒரு கட்டுரையின் ஒரு பத்திக்குள் அதைப் பேசமுடியாது. எனவே அதைத் தவிர்க்கிறேன்.]

கடலுயர்வு வீதத்தைப் பார்க்கையில், இற்றைக்குப் 15000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, 6500 ஆண்டுகள் வரையுள்ள காலத்தில் தான், இன்னும் குறுக்கிச் சொன்னால் 15000 - 7500 ஆண்டுகளுக்கு முன்னால், மேலே சொன்ன கடற்கோள் நடந்திருக்கலாம். அதாவது முன்னால் சொன்ன அந்த X என்பது பெரும்பாலும் 1000-1500 ஆண்டுகளுக்குள் இருக்கலாம். இந்தக் காலம் சுமேரியர்கள் கடற்கோள் ஏற்பட்டதாகச் சொல்லும் காலத்தோடு ஒத்து வருகிறது. அதாவது சுமேரியாவில் கடற்கோள் எப்பொழுது ஏற்பட்டதோ, அதையொட்டிய காலத்திலே பழந்தமிழ் நாட்டிலும் கடற்கோள் ஏற்பட்டிருக்கலாம். வேறு காலங்களில் நடந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டாம் கடற்கோளால் மிகச் சிறிதான நில அழிப்பு ஏற்பட்டு, இலங்கைத்தீவு இந்தியப் பெருநிலத்தில் இருந்து பிரிந்ததாக அமைந்திருக்கலாம். இது ஒரு கருதுகோள் தான். கடலியல் ஆய்வுகள் தமிழக, ஈழக் கடற்கரையில் நடந்தால் தான் உறுதியாக ஏதும் சொல்ல முடியும்.
.
இனி மணிமேகலைக் காப்பியத்தின் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையில் யோசனை என்னும் தொலைவு பற்றி வரும் வரிகளைப் பார்ப்போம்.

“பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ
அந்தரம் ஆறா ஆறைந்து யோசனைத்
தென்றிசை மருங்கிற் சென்றுதிரை யுடுத்த
மணிபல்லவத்திடை மணிமே கலாதெய்வம்
அணியிழை தன்னைவைத் தகன்றது தானென்”

மேலே பூங்கொடி என்பதும் ஆயிழை என்பதும் மணிமேகலையைக் குறிப்பன. மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தன்னோடு பொருத்தித் தழுவி தென்திசை பக்கம் சென்று மணிபல்லவத்திடை மணிமேகலையை வைத்து அகன்றது. இந்தப் பயணம் “அந்தரம் ஆறா” - அதாவது விசும்பின் வழியாக - நடந்தது. ”திரையுடுத்த மணிபல்லவம்” என்பதால் அது கடலை ஒட்டிய இடம் என்று தெரிகிறது. இது ஒரு தீவா, தீவக் குறையா (=தீபகற்பமா)என்பது தெரியவில்லை. [பல அறிஞரும் இதைத் தீவு என்றே சொல்லுகிறார்கள்.]

பூம்புகார் என்பதன் அஃக அலகு பெரும்பாலும் 11 பாகை 8 நுணுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இன்றையச் சீர்காழி 11 பாகை 14 நுணுத்தமாயும், இன்றைய மயிலாடுதுறை 11 பாகை 6 நுணுத்தமாயும் இருப்பதால், அன்றையப் பூம்புகார் மதிப்பீட்டளவில், 11 பாகை 8 நுணுத்தமாய் இருக்கலாம்..[அன்றையப் பூம்புகார் சற்று இடம் மாறியும் இருந்தால், சற்று முன்னே பின்னே அமையலாம் அல்லவா?]

அடுத்து நாம் பார்க்க வேண்டியது “ஆறைந்து யோசனை” என்ற சொல்லாட்சியாகும். இதை மூன்று விதமாய்ப் பொருள் கொள்ளலாம். முதல் விதம் 1 யோசனை = 8000 பெருங்கோல்.

முதல் முறையின்படி, யோசனையை 4 காதமாய் ஏற்றுக் கொண்டு, ”ஆறைந்து = 30” யோசனை என்று புரிந்து கொண்டால், 30*26.82 = 804.6 கி.மீ என்றாகிறது. இதை அஃக அலகிற்கு மாற்ற, 804.6/111.13333 = 7 பாகை 14.4 நுணுத்தம் என்று அமையும். புகார் அலகில் இருந்து இதைக் கழித்தால், மணிபல்லவம் என்பது புவி நடுவண் கோட்டில் (equator) இருந்து 3 பாகை 53.6 நுணுத்தத்தில் இருப்பதாய் ஆகும். இந்தக் கூற்று முற்றிலும் பொருளற்று இருக்கிறது. ஏனெனில் அந்த அஃகத்தில் இப்பொழுது நிலமின்றிக் கடலே இருக்கிறது. இன்றைய ஈழத்தின் நெய்தல் நிலங்கள் 2300 ஆண்டுகளுக்கு முன் கடற்கோளில் அழிந்திருந்தாலும், அதற்கு அப்புறம் அழிந்ததாய் வரலாறே கிடையாது. கடந்த 2300 ஆண்டுகளில், அங்கும் இங்குமாய் மிகச் சிறிய அளவிலே கடல்நீரில் நிலங்கள் முழுகியிருக்கிறது. அவ்வளவு தான். அதோடு, ஈழத்தின் ஆகத் தென்பகுதியாக இன்றைக்கு இருக்கும் மாத்துறை (Matara) என்னும் நகரம் கூட, 5 பாகை 57 நுணுத்தம் என்னும் அஃக அலகிற் தான் இருக்கிறது. இதற்கும் தெற்கில் 4, 5 கி.மீ.களில் கடல் வந்துவிடுகிறது. எனவே இந்தச் செய்திகளை ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், 30 யோசனை என்ற பொருட்பாடு சரியாகப் பொருந்தவில்லை.பின் ஏன் சீத்தலைச் சாத்தனார் “ஆறைந்து யோசனை” என்று கூறினார்? ஆகத் தென்புல வாய்ப்பாடு என்பது மணிமேகலையின் கூற்றை விளக்கப் பயன்படவில்லை.

இனி வடபுல வாய்ப்பாட்டைப் பார்ப்போம். இதன்படி ஆறைந்து யோசனை = 30*13.41 = 402.3 கி.மீ என்றாகும். இது அஃக அலகில் 402.3/111.13333 = 3 பாகை 44.4 நுணுத்தம் என்று அமையும். புகார் அலகில் இருந்து இதைக் கழித்தால், 11 பாகை 8 நுணுத்தம் - 3 பாகை 44.4 நுணுத்தம் = 7 பாகை 23.6 நுணுத்தம் என்று அமையும். அதாவது மணிபல்லவம் என்பது இலங்கையின் மேற்குக்கரையில் கிட்டத்தட்ட Chilaw என்னும் ஊருக்குச் சற்று தெற்கில் அமையும். இதுவும் ஏமாற்றத்தையே அளிக்கிறது.

இனி மூன்றாவது முறையாய் 1 கூப்பீடு = 500 சிறுகோல் என்ற வாய்ப்பாட்டில் பார்த்தால், ஆறைந்து யோசனை என்பது 30*6.705 = 201.15 கி.மீ என்றாகும். புகாரைக் கூர்ந்தமாய் வைத்து ஒரு வட்டம் போட்டால், யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள பல தீவுகளை இந்த வட்டம் தொட்டுக் கொண்டு போகும். அந்தத் தீவுகளில், அல்லது அதற்கு அருகில் உள்ள கடலில் ஆய்வு செய்தால், பழைய மணிபல்லவத்தை தேடிப் பார்க்க முடியும்.

மூன்றாவது முறையின் படி, 30 ஓசனை = 201 கி.மீ. = 201/111.13333 = 1.809 பாகை = 1 பாகை 48.5 நுணுத்தம் அஃக அலகு வேறுபாடு.

எனவே மணிபல்லவம் என்பது (11 பாகை 8 நுணுத்தம்) -.(1 பாகை 48.5 நுணுத்தம்) = 9 பாகை 20.5 நுணுத்தம் அஃக இலகில் இருந்திருக்க வேண்டும்.

முதல் இரு முறைகளையும் பார்க்க, மூன்றாம் முறை என்பது ஓர் இயல்தொலைவைக் காட்டுகிறது. எந்த முறை இந்தக் கட்டிற் சரியென்று கடலாய்வு, தொல்லாய்வுகள் மூலமே சொல்ல முடியும்.

கணக்கீட்டிற்கு அப்புறம் இருக்கும் உசாத்துணைச் செய்திகளையும் இங்கு சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இன்றைய யாழ்ப்பாணத்தின் அஃக அலகாக 9 பாகை 45 நுணுத்தம் சொல்லப்படுகிறது. மணிபல்லவம் என்பது சம்புகுலப் பட்டினம் என்று சொல்லப் பட்டதாகப் படித்திருக்கிறேன். மயிலை சீனி வேங்கடசாமியும் இதைச் சொல்லுவார். மணிபல்லவம் என்பது பெரும்பாலும் இன்றைய நாகனார்த் தீவு> நயினாத் தீவாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். அதன் அஃக அலகு என்னவென்று தெரியவில்லை. கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆகத் தமிழ் நீட்டளவைகள் மூலம் ஈழத்தில் புத்த பீடிகை, அஃகயக் கலம் (அக்ஷயப் பாத்திரம்) இருந்த இடத்தை ஓரளவு சரியாகவே சுட்டிக் காட்ட முடியும்.

[இன்றையக் கொடுங்கோன்மைப் புத்தர்கள் தான் அங்கு பீடிகை இருந்ததையும், தமிழர்களும் 2300 ஆண்டுகளுக்கு முன்னாலும் அங்கு இருந்தார்கள் என்பதையும் மறைத்து, இனப்போர் நடத்தி, நம் தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். புத்த பகவானை அவர்கள் மறந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. சரி, அவர்களை விடுங்கள், அங்குள்ள தமிழர் நிலைப்பை மற்ற தமிழர்கள் என்று, எக்காலத்தில் உறுதி செய்வோம்?]

அன்புடன்,
இராம.கி.

10 comments:

K. Sethu | கா. சேது said...

இக் கட்டுரைத் தொடரை நான் இன்னும் முழுமையாக வாசிக்காவிடினும் வாசித்தவைகளில் பயனுள்ள தகவட்களும் விளக்கங்களும் பெற்றுள்ளேன். நன்றி

தொடரின் முதற் பதிவில் தாங்கள் பாவித்துள்ள "இருபிறப்பி" என்ற சொல்லானது மொழியியலில் ஆங்கிலத்தில் "cognate" எனப்படுவதுதான? அல்லாவிடின் cognate என்பதற்கு தமிழ் சொல் யாது?

கா. சேது

Vijayakumar Subburaj said...

> ’கயாற்’

காயற்பட்டிணம் ?!

R. said...

அன்புள்ள இராமகி,

இந்தக் கட்டுரைப் பகுதியை இன்று படித்து மகிழ்ந்தேன். ஆய்வும் கருத்தும் நான் அறிந்த அளவில் சிறப்பாகவும் சிந்தனையை வளர்க்கும் தன்மையிலும் அமைந்துள்ளன. மேன்மேலும் தொடர்ந்து பதிவுகளை வழங்க வேண்டும் என்ற ஆவலைத் தெரிவிக்கின்றேன்.
அன்புடன் இராதாகிருஷ்ணன்
ஜூலை 28, 2009

இராம.கி said...

அன்பிற்குரிய சேது,

இருபிறப்பி என்ற சொல் இருவேறு மரபுகளைப் (தமிழ் மரபு, சங்கத மரபு) பின்பற்றி எழுந்தசொல். காட்டாகத் தமிழ்வேரில் பகுதி இருந்து, வடமொழி விகுதி பெற்றுப் பிறப்பது. அல்லது வடமொழி வேர் பெற்றுத் தமிழ் ஈறு பெற்றுப் பிறப்பது.

cognate என்பதற்கு ஓரினச் சொல் என்று தமிழிற் சொல்லலாம். [காட்டாக, ஒரே வேரும், வெவ்வேறு
ஈறும் கொண்ட சொற்கள். பட்டணம், பட்டினம், பட்டி, பட்டு, பேடு, பேட்டை போன்றவை ஓரினச்சொற்கள். பள் என்னும் வேரை வைத்துப் பார்த்தால், பள்ளி கூட இதனோடு சேர்ந்த ஓரினச் சொல் தான்.
c.1645, from L. cognatus "of common descent," from com- "together" + gnatus, pp. of gnasci, older form of nasci "to be born." Words that are cognates are cousins, not siblings.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய சுப்புராஜ்,

அந்தக் கல்வெட்டு செங்கற்பட்டுக்கு அருகில் கிடைத்த ஒன்று என்று சொல்லியிந்தேனே? அது காயல்பட்டினம் ஆக முடியாது. கயாற் என்ற சொல் இன்னும் எனக்கு விளங்கவில்லை

அன்புடன்,
இராம.கி.

K. Sethu | கா. சேது said...

அன்புள்ள இராம.கி,

"இருபிறப்பி" சொல்லுக்கான தெளிவாக்கத்துக்கு நன்றி.

//பட்டணம், பட்டினம், பட்டி, பட்டு, பேடு, பேட்டை போன்றவை ஓரினச்சொற்கள். பள் என்னும் வேரை வைத்துப் பார்த்தால், பள்ளி கூட இதனோடு சேர்ந்த ஓரினச் சொல் தான்.//

ஆந்திராவில் "மதனப்பள்ளி" போல பல ஊர் பெயர்களினது ஈற்றில் "பள்ளி" என காணப்படுவதற்கான காரணம் தங்களது வேர் விளக்கத்தை நோக்குகையில் புலனாகிறது.

"cognates"= "ஓரினச்சொற்கள்" சரி.

"cognate languages" = "சொக்கார மொழிகள்" எனலாமா?

அன்புடன்,
~சேது

இராம.கி said...

அன்பிற்குரிய சேது,

cognate languages = ஓரின மொழிகள்.

அன்புடன்,
இராம.கி.

பிரதாப் said...

மணிபல்லவம் மேற்குப் பகுதியில்
இருந்திருக்கலாம் என்னும் ஆய்வு புதியது. ஆர்வத்தை தொற்றிக் கொள்ள வைத்திருக்கிறது.Chillow சிலாவம் எனப்படும்.ஈழத்தின் தென்பகுதியும் மாத்தறை எனப் பலுக்கப் படும்.
http://tamilnet.com/art.html?catid=98&artid=24628

ஒவ்வோர் நூற்றாண்டும் தமிழகம் எப்படி இருந்தது. அதன் எல்லைகள் எங்கே இருந்தன.மூவேந்தர் நாடுகள் எப்படி இருந்தன. கிடைக்கும் உள்ளுருமங்களின் படி இவற்றையெல்லாம் ஆய்ந்து கால
வரிசையில் முகப்புகளாக, திணைப்படங்களாக கணினி உதவியுடன் வரைந்து வெளியிட்டால்
சிறப்பாக இருக்கும். தாங்கள் போன்றோர் முன்வந்தால் கணினி வரைகலை வேலைகளில் உதவ என்போன்றோர் அணியமாய் உள்ளோம்.

- பிரதாப்

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி ஐயா.

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி ஐயா.