Wednesday, July 08, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 6

இதுவரை சிறுகோல், கோல், பெருங்கோல் என்ற அளவைகளையும், அவற்றைப் புரியுமாப் போல சில சான்றுகளையும் முன்னிருந்த பகுதிகளில் பார்த்து வந்தோம். அடுத்து வரும் அளவு கூப்பீடு (இது கூப்பிடு தூரத்தின் சுருக்கம். எங்கள் ஊர்ப்பக்கம் ”பெருசுகள்” இப்படிச் சுருக்கிச் சொல்லுவதை இளம்பருவத்தில் கேட்டிருக்கிறேன்.) இது கிட்டத்தட்ட ஒரு கல் (=மைல்) தொலைவு தான். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூப்பீட்டிற்கும் ஒரு கல் வைத்திருப்பார்கள் போலும். 500 தண்டம் ஒரு கூப்பீடு என்ற அளவை கொடுமுடி சண்முகம் தன் நூலில் பதிவு செய்திருந்தார். இதன் படி 1 யோசனை என்பது 8000 தண்டம் (பெருங்கோல்) = 16000 கோல் ஆகும். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், இதைக் கேள்விக்கு உட்படுத்துமாப் போல இந்தியாவின் தலைசிறந்த கணித மேதை ஆரிய பட்டாவை எடுத்துக் காட்டி, முனைவர் சண்முகம் தன் பொத்தகம் “பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன் - I ” - இல் 131 ஆம் பக்கத்தில் 8000 நரன் = 1 யோசனை என்ற குறிப்பையும் குறித்திருப்பார். நரன் என்ற வடவர் அளவீடு ஓராள் உயரத்தையே குறிக்கும். 8000 நரன் = 1 யோசனை என்ற ஒக்குமையையை வைத்து ஆரியபட்டா பல வானியற் கணக்குகளைப் போட்டிருப்பதும், அவற்றின் இயலுமையும் நம்மை ஓர்ந்து பார்க்க வைக்கின்றன.

சிறுகோல், கோல், பெருங்கோல் பற்றிய புரிதற் குழப்பங்களைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறதா? இங்கே இரண்டு வேறுபட்ட கணக்கீடுகள் (8000 பெருங்கோல் ஒரு யோசனையா? 8000 கோல் ஒரு யோசனையா?) முரண்படுவதை மீண்டும் சந்திக்கப் போகிறோம். அடுத்து வரும் பெருந்தொலைவுச் சான்றுகளைக் [சிலம்பில் வரும் புகார் - மதுரைப் பயணம், ஆதித்த கரிகாலன் கல்வெட்டில் வரும் குமரி - வாரணாசித் தொலைவு, மணிமேகலையில் வரும் புகார் - மணிபல்லவத் தொலைவு] ஆகியவற்றைக் கணக்கிடும் போது, உண்டாகும் தீர்வுகளை இயற்தொலைவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, முன்னாற் சொன்ன கொடுமுடியாரின் பரிந்துரையை எல்லாவற்றிலும் ஏற்காது, வடபுல ஒக்குமையை எடுத்துக் கொள்வதே சில சமயங்களில் சரியான தீர்வுகளைத் தரும் என்று நான் எண்ணுகிறேன். எனவே அடுத்து வரும் பகுதிகளில் 500 கோல் = 1 கூப்பீடு என்பதை வடபுல வாய்ப்பாடு என்றும் 500 பெருங்கோல் = 1 கூப்பீடு என்பதைத் தென்புல வாய்ப்பாடு என்றும் கொள்ளுகிறேன். இப்படிக் கொள்ளுவதற்குக் கரணியம் உண்டு. வடபுலத்தில் வடபுல வாய்ப்பாடு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. தென்புலத்தில், தென்புல, வடபுல, வாய்ப்பாடுகள் இரண்டுமே வெவ்வேறு காலங்களில் பயன்பட்டிருக்கின்றன. அந்தந்தச் சான்றுகளைப் பார்க்கும் போது விரிவாக இதைச் சொல்லுகிறேன்.

இப்போதைக்கு இந்த வாய்ப்பாடுகளை பட்டியலிடுவோம். அதாவது,

குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு

நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):

500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

நெடுந்தொலை வாய்ப்பாடு (வடபுலம்):

500 கோல் = 31 1/4 கயிறு = 1 கூப்பீடு = 2750 அடி = 0.520835 மைல் = 0.8381798 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 44000 அடி = 8.33333 மைல் = 13.4100875 கி.மீ

கூப்பீட்டிற்கு அடுத்தது காதம். காதம் என்பதைக் காவதம் என்றும் பழம் இலக்கியத்தில் பதிவார்கள். காவுதல் என்பதும் கூப்பிடுதல் தான். இதே காதம்/காவதம் என்னும் கலைச்சொல் வடக்கிலும் (குரோசம் என்று) பரவியிருக்கிறது. குரோசம் என்பது நம்முடைய குரைதல்/கரைதல் (காகம் கா, கா என்று கரைகிறது - to cry) என்ற வினையோடு தொடர்பு கொண்டது. குரையம்>குரயம்>குரசம்>குரோசம். காதம்/காவதம்/குரோசம் ஆகிய சொற்களின் வேர் தமிழில்தான் இருக்கின்றன. தேடி அறிவதற்குத் தான் ஆட்களைக் காணோம்.

காதம் என்னும் அளவீடு கற்பனையோ, அன்றி வெறும் இலக்கியங்களில் வரும் நீட்டல் அளவையோ அல்ல என்பதை நிறுவுமாப் போல, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று தொலைவுக் கற்கள் 1970 களில் கிடைத்தன. ஒரு கல், அதியமான் கோட்டையில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையின் இடது புறத்தில், சிறிது தொலைவில் பதிகால் பள்ளம் என்ற இடத்தில் (கிட்டத்தட்ட இதன் புவியியல் இருப்பு அலகு, 12 பாகை.7’ 20” வடக்கு, 78 பாகை.13’ கிழக்கு என்பதாகும்.), “அதியமான் பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம் 29” என்ற குறிப்போடு கிடைத்தது. [இதைத் தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கண்டு பிடித்தனர்.]

அடுத்து, தருமபுரிக்கு வடக்கே கிருட்டிணகிரி சாலையில் மாட்லாம்பட்டியின் கிழக்கே ஒரு கல் தொலைவில் கெங்குசெட்டிப்பட்டி அருகில் முத்தனூரில் ஒரு கிணற்று மேட்டில் (புவியியல் இருப்பலகு - கிட்டத்தட்ட 12 பா. 13’ 20” வடக்கு, 79 பா. 13’ கிழக்கு) 27ஆவது காதம் குறிக்கும் கல் கிடைத்தது. [இதனை 1.7.78 சனிக்கிழமை அன்று புலவர் மா.கணேசனும், புலவர் பா.அன்பரசுவும் சேர்ந்து சென்று கண்டிருக்கிறார்கள். இச்செய்தி 14/7/78 வெள்ளி தினமணியிலும், The Indian Express, Friday, August 25, 1978, - இலும் வெளியாகியிருக்கிறது.] இதே போல வட ஆர்க்காடு மாவட்டம், திருப்பத்தூர் அருகே, கொண்டமநாயக்கன் பட்டியில் காணப்பெற்ற கல்லில் “நாவற்றாவளத்திற்கு 20 காதம்” என எழுதப் பெற்றிருந்தது. [”தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும்”, ச.கிருஷ்ணமூர்த்தி, தகடூர் மாவட்ட வரலாற்றுப் பேரவை 1988 - என்ற நூலிலும், ”தருமபுரி மண்ணும் மக்களும்”, த.பழமலய், பெருமிதம் வெளியீடு, 37, இளங்கோ வீதி, சீனிவாச நகர், வழுதிபிராட்டி கி.அ.நி. கண்டர்மானடி து.அ.நி., விழுப்புரம் மாவட்டம் - என்ற நூலிலும் இக்கற்களைப் பற்றிய செய்தி இருக்கிறது.]

அந்தக் கற்கள் தகடூரில் இருந்து நாவற் தாவளம் வரை செல்லும் “அதியமான் பெருவழி”க் கற்கள் என்று ஆய்வாளர் சொல்லுகிறார்கள். [கற்களில் அதியமான் பெருவழி என்று எழுதியிருக்கிறது. தாவளம் = தாழுமிடம், தங்குமிடம், வணிகர் சந்தை, station, depot, lodge, நாவற் தாவளம் நாவற் தோப்பிற்கு அருகில் உள்ள தங்குமிடம். இது போல வேம்படித் தாவளம், மஞ்சுபுளித் தாவளம், வண்டித் தாவளம், திருவனந்தபுரம் தாவளம் (திருவனந்தபுரம் வான்புகல் நிலையம்) எனப் பல தாவளங்கள் இருந்திருக்கின்றன. நாவற் தாவளம் என்ற இடம் எங்கிருக்கிறது என்று இன்னும் காணப்படவில்லை. ஆனால் தகடூருக்குக் கிழக்கில் வட ஆர்க்காடு திருப்பத்தூரையும் தாண்டி இது இருந்திருக்க வேண்டும்.]

தவிர, இந்தப் பெருவழியை, அதியமான் குடியைச் சேர்ந்த விடுகாதழகிய பெருமாள் என்ற குறுநிலத் தலைவன் ஏற்படுத்தியிருக்கிறான் என்பதும் தொல்லாய்வின் வழியாகத் தெரிகிறது. இந்தக் கற்களில் 29, 27 என்பவை தமிழெண்களில் எழுதியிருப்பது போக இன்னொரு குறியீட்டிலும் வெளிப்பட்டிருக்கிறது. அதாவது, 20 ஐக் குறிக்க இரண்டு பெரியகுழிகளும், 7 அல்லது 9 ஐக் குறிக்க 7 அல்லது 9 சிறு குழிகளும் இருந்திருக்கின்றன. படிக்காதவரும் குழிகளைத் தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும் போலும்.

29 ஆம், காதக் கல்லிற்கும், 27 ஆம் காதக் கல்லிற்கும் இடையே வளைந்து வளைந்து போகும் இன்றையப் பாதையின் தொலைவு கிட்டத்தட்ட 9 மைல் ஆகும். அதே பொழுது வெறுமே பாகைகளை வைத்து கணக்குப் போட்டால் இது குறைந்த தொலைவாய் 11.113333 கி.மீ (=6.906 மைல்) மட்டுமே இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இந்தப் பெருவழி பாகைக் கணக்கு வழி போட்ட நேர்கோட்டுப் பாதையாய் இருக்கத் தேவையில்லையாதலால், பாதை வளைவுகளையும் சேர்த்து உண்மைத் தொலைவு 6.906 மைலுக்கும் கூடவே இருக்கலாம்.

அந்தக் காலப் பெருவழியில் 27 ஆம் காதத்திற்கும் 29 ஆம் காதத்திற்கும் இடையான தொலைவு 6.906 மைலுக்கும், 9 மைலுக்கும் நெருங்கியே இருக்க வேண்டும். முன்னால் நாம் பார்த்த தென்புல நீட்டளவை வாய்ப்பாட்டின் படி கணக்குப் போட்டால், 2 காதம் என்பது 8 மைல் 1760 அடி = 8 1/3 மைல் (=13.412 கி.மீ) என்று ஆகிறது. இது 6.906 மைலுக்கும், 9 மைலுக்கும் இடைப்பட்டு வருகிறது. அந்த அளவில் இந்த இரண்டு காதக் கற்களும் தென்புல நீட்டளவைக் கணிப்பை உறுதி செய்கின்றன.

வணிக மையங்களை இணைப்பவை பெருவழிகள் (trunk roads). இது போன்ற பெருவழிகள் காரைக்கால் பெருவழி, தஞ்சாவூர் பெருவழி, கொங்கர் பெருவழி, வடுகப் பெருவழி, பெண்ணாற்றுப் பெருவழி [இது தென்பெண்ணை ஆற்றை ஒட்டி, தகடூரில் இருந்து திருக்கோவிலூர் வரை இருந்திருக்கிறது.], இராசகேசரிப் பெருவழி [இது கொங்கு நாட்டில் இருந்து சேரநாட்டுக்குச் செல்லும் பாலக்காட்டுக் கணவாயை ஒட்டியது]. மகதேசன் பெருவழி [சேலம் மாவட்டம் ஆறுகழூரில் இருந்து காஞ்சிபுரம் வரை சென்றது.] என்ற பெயர்களில் முன்னாளில் இருந்தது வரலாற்று ஆய்வில் தெரியவருகிறது.

மேலே தொல்லியல் மூலம் காவதக் கற்களைப் பற்றிப் புரிந்து கொண்ட நாம், அதே காவதத்தை வைத்தே, இனிப் புகார் நகரின் அகலத்தைப் புரிந்து கொள்ள முயலுவோம். சிலம்பு நாடுகாண் காதையில் 32 - 36 ஆம் அடிகள்

”தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயிற் கடைமுகங் கழிந்து
குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர் பொருந்தி” (32-36)

என அமையும். அதாவது ”சோலைகள் நிறைந்த காவிரியின் சங்குமுகத்திலுள்ள [காவிரி கடலிற் சேருமிடம் சங்குமுகம்; சங்குதல் = சேருதல். வட்ட வட்டமாய்ப் புரிபோலச் சுண்ணம் (calcium) சேர்ந்து உயிரோடு அமையும் நீருயிரியில் இருந்து சங்கைப் பெறுகிறோமே? சங்கு தமிழகத்தில் இருந்துதான் இந்தியத் துணைக்கண்டம் எங்கும் சாற்றிப் போனது. (சாற்றுதல் = to sell) சங்கு குளித்தல், முத்துக் குளித்தலோடு சேர்ந்து தானே நடைபெற்றது? எத்தனை காலத்திற்குச் ”சங்குதல் (=சார்தல், சேர்தல், சார்ங்குதல்>சங்குதல்)” என்ற வினைச்சொல் தமிழில்லை என்று சிலர் சொல்வார்களோ, தெரியாது. சங்கு முகத்தைச் சங்கமம் என்று திரித்து சங்கதத்தில் இனங் காட்டுவார்கள். சங்குமுகத்திற்கு மாற்றாய் ஆற்றுமுகம் என்ற ஒன்றும் தமிழில் உண்டு. [ஆற்றுமுகம் = ஆற்றுத்துறை.] புனலாடும் துறையில் இருந்து மேற்கே நடந்து, காவிரியின் வடகரையை ஒட்டிய மலர்வனத்துள் நுழைந்து ஒரு காவதம் கடந்து கவுந்தியின் பூமரத் தோட்டத்திற்கு கோவலனும் கண்ணகியும் வருகிறார்கள்” என்ற செய்தியை இந்த வரிகளின் மூலம் அறிகிறோம். பொதுவாய் முனிவர்கள், துறவிகள் ஆகியோர் எந்தவொரு நகருக்கும் வெளியே புறஞ்சேரியில் தான் பள்ளிகளை வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று கொண்டால், புகாரின் உள்நகர அளவை இங்கே நாம் குத்துமதிப்பாக எடை போடலாம்.

”இங்கே சங்குமுகத்தில் இருந்து புகாரின் நகர மேற்கு எல்லை ஒரு காத தூரத்தில் இருந்திருக்கிறது” என்று மேலே அறிகிறோம். [இங்கு வடபுல வாய்ப்பாடு மிகவும் சிறிய ஊரை இனம் காட்டுகிறது. மாறாகத் தென்புல வாய்ப்பாடே சரியான இயற்தொலைவு காட்டுகிறது. புகாரை நகரமாய்க் கொள்ள 1 காதம் = 4.166 மைல் = 6.7 கி.மீ என்னும் தென்புல வாய்ப்பாடே வகை செய்கிறது]. நகரின் நீளம் நமக்குத் தெரிவதற்குத் தரவு ஏதும் கிடையாது. இருந்தாலும் பொதுவாய் கடற்கரையை ஒட்டி வளரும் எந்த நகரமும். 2:1 என்ற விகிதத்தில் நீள, அகலங்கள் இருப்பதும், ஊருக்கு நடுவே ஒரு ஆறு குறுக்கே போகுமானால், ஆற்றிற்கு வடக்கே ஒரு காதமும், தெற்கே ஒரு காதமும் இருப்பதும் நடக்கக் கூடியது என்று கொண்டால் [இன்றையப் பெருநகரமான சென்னையும் அப்படியே இருக்கிறது.], புகார் நகரம் 2 சதுரக் காதம் இருந்திருக்கலாம் என்ற பட்டுமையான (possible) ஊகம் ஒன்றைச் செய்ய முடியும். [அதாவது புகாரின் பரப்பளவு 89.78 சதுர கி.மீ இருக்கலாம்.] இந்தத் தென்புலக் கணக்கில் புகார் என்பது அந்தக் காலத்திற்குப் பெரிய நகரம் தான்.

காவதம் என்ற அளவீட்டை வைத்து, இனிப் புகாரில் இருந்து மதுரையின் தொலைவையும், அதைக் கணக்கிடுவதிற் பெறப்படும் அருமையான வரலாற்றுச் செய்திகளையும் பார்க்கலாம். [நீட்டளவை பற்றிய என்னுடைய இந்தத் தொடரே சிலப்பதிகாரத்தில், புகாரில் இருந்து மதுரைக்குக் கண்ணகியும், கோவலனும், கவுந்தியடிகளும் போன பயணத்தைக் கணக்கிடப் போய் எழுந்ததே.]

புகாரின் சங்குமுகத்திலிருந்து [ஒருவேளை அதற்கு அருகில், பட்டினப்பாக்கத்தில், கோவலன் மனை இருந்திருக்கலாம்.] புறப்பட்ட கோவலனும் கண்ணகியும் மேலே நாடுகாண் காதையில் 32 - 36 ஆம் அடிகளில் சொன்னது போல் காவிரியின் வடகரையை ஒட்டி ஒருகாத தூரம் கடந்து கவுந்தியின் பள்ளியை அடைகிறார்கள். அங்கிருந்து காவிரிக்கரை ஒட்டியே நகர்ந்து, உறையூர் வந்து, பின் தென்கரைக்கு மாறி, கொடும்பாளூர் வந்து, அங்கிருந்து செல்லும் மூன்று வழிகளில் இடைப்பட்ட வழியை தேர்ந்தெடுத்து, மதுரைக்கு வருகிறார்கள்.

இந்தக் காலத்தில் யாரும் பூம்புகாரில் இருந்து திருச்சிராப்பள்ளி (அதாவது உறையூர்) போய், அங்கிருந்து பெரிதாய்ச் சுற்றிக் கொண்டு, புதுக்கோட்டை (=கொடும்பாளூர்) வழி மதுரை போக மாட்டார்கள். பூம்புகாரில் இருந்து நேரே தஞ்சாவூருக்குப் போய், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு வந்து பின் திருமயம், திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரை போவதுதான் மிகவும் குறைந்த தூரமாய் அமையும். அடுத்த குறைந்த தூரம் பூம்புகாரில் இருந்து காவிரிக்கரையோரம் திருச்சிராப்பள்ளிக்கு வந்து, பின் விராலிமலை, வளநாடு, துவரக்குறிச்சி, மேலூர் வழியாய் மதுரை போவதாகும். (கொடும்பாளூர் இந்த வழியிலும் ஒட்டி வரும்.) ஆகக் கூடிய தொலைவு, பூம்புகாரில் இருந்து காவிரிக்கரையோரம் திருச்சிராப்பள்ளிக்கு வந்து, பின் அங்கிருந்து (அதாவது உறையூரில் இருந்து) புதுக்கோட்டை (=கொடும்பாளூர்), திருமயம், திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரை போவதாகும். ஏதோவொரு காரணத்தில், கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் மூன்றாவது வழியில் சுற்றி வளைத்துப் போயிருக்கிறார்கள். [அந்தக் காலத்தில் விராலிமலை வழி இருந்ததா, ஒருவேளை அடர்காடுகள் அதைத் தேர்ந்தெடுக்க வொட்டாது தடுத்தனவா என்றெல்லாம் நமக்குத் தெரியாது.]

கவுந்தியடிகளைச் சந்திப்பதற்கு முன்னம் வீட்டிலிருந்து ஒரு காத தூரம் நடந்தவுடனேயே, கண்ணகிக்குக் கால்வலித்து விடுகிறது. ”மதுரை எங்கே?” என்று கணவனைக் கேட்கிறாள். பாவம், செல்வந்தர் வீட்டுப் பெண், இம்மென்றால் தேரும், பல்லக்குமாய்ப் போயிருந்திருப்பாள் போலும், நெடுந்தூரம் நடக்கப் பழகாதவள், புகாரை விட்டு அகலாதவள், மதுரையைப் பற்றிக் கேள்விப் பட்டு ஆனால் பார்த்திராதவள், “மதுரை யாது?” என்று ஒரு காதத் தொலைவிலேயே கேட்டது வியப்பில்லை. இப்பொழுது கணவன் மெல்லிதாக நகைத்துச் சொல்கிறான்: “ரொம்பத் தூரம் இல்லையம்மா, நம்முடைய அகண்ட நாட்டிற்கு அப்பால் ஆறைந்து காத தூரம் தான் இருக்கும், போயிறலாம், கொஞ்சம் பொறுத்துக்கோ” இளங்கோவின் வரிகளில்

இறுங்கொடி நுசுப்பு ஓடி நைந்து அடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்ளெயிறு இலங்க
மதுரைமூதூர் யாதென வினவ
ஆறைங்காதம் நம் அகல்நாட்டு உம்பர்
நாறு ஐங்கூந்தல் நணித்து என நக்கு (38-43)

என்று அமையும். இதைப் படிக்கும் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆறைங்காதம் என்பது இங்கு பேதைப்பெண்ணை ஆற்றுப்படுத்தச் சொல்லிய ஒரு சொல்விளையாட்டு, இது உண்மையில் 30 காதத்தைக் குறிக்கிறது. அது புகாரில் இருந்து மதுரை வரையுள்ள தூரம் கூட அல்ல. [அப்படித் தவறாகப் புரிந்து கொண்ட தமிழறிஞர்கள் மிக மிக அதிகம். காதம் என்ற சொல்லின் அளவீடு அந்தக் காலத்தில் உறுதிப்படாத கரணியத்தால் தடுமாறியிருக்கிறார்கள்.] இளங்கோ, கோவலன் வாயிலாய்த் தெளிவாகச் சொல்லுகிறார்: “ஆறைங்காதம் நம் அகல்நாட்டு உம்பர்”, அதாவது ”சோழ நாட்டின் எல்லைக்கு அப்பால் 30 காதத்தில் மதுரை உள்ளது”.

அதோடு இந்தத் தொலைவு கோவலனின் போக நினைத்த பாதையின் தொலைவே யொழிய, அவர்கள் முடிவாகப் போன பாதையின் தொலைவும் அல்ல. கவுந்தியைச் சந்தித்த பின்னால்,
கோவலன் தான் நினைத்த பாதையிற் செல்லவே இல்லை. கவுந்தி தேர்ந்த பாதையிலே தான் கோவலனும், கண்ணகியும் போகிறார்கள். அந்தப் பாதையோ, சுற்றி வளைத்துக் கொண்டு, உறையூர் போய், பின் கொடும்பாளூர் வந்து, அப்புறம் மதுரை போகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காகக் கவுந்தியடிகள் உறையூருக்கு அழைத்துப் போய் அங்கு தங்கிப் பின் கொடும்பாளூர் வழி மதுரை போகிறார். [ஒருவேளை உறையூர் என்பது சமணப் பள்ளிகளின் (செயினம், ஆசீவகம், புத்தம் ஆகியவற்றின் பள்ளிகள் நிறைந்த) இடமாக இருந்திருக்கலாம். [இந்த இயலுமை நீலகேசிக் காப்பியத்தின் வழியாகத் தெரியவருகிறது. ஒருசில உறையூர் அரசர்களே கூட ஆசிவக நெறியாளர்களாய் இருந்திருக்கலாமோ என்ற ஐயமும் பேரா.க.நெடுஞ்செழியன் போன்றோருக்கு எற்படுகிறது. பேரா. க.நெடுஞ்செழியனின் “ஆசீவகம்” பற்றிய நூல்களைப் பார்த்தால் இது விளங்கும்.] ஆங்காங்கு தங்கிப் போன காரணத்தால், உறையூர் தமக்கு வாய்ப்பாக இருக்கும் என்று கவுந்தியடிகள் ஒருவேளை எண்ணியிருக்கலாம். இன்னும் அதிக விளக்கம் கொள்வதற்கு முன்னால், அன்றைய சோழ அரசியல், நாடுகளின் எல்லைகள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது முகன்மையானது.

இந்தக் காலத்தில் இரு வேறு சோழ அரசுகள் இருந்தன. அவை இரண்டுமே சிறிதானவை. ஒரு சோழ அரசு புகாரைச் சுற்றியது. இன்னொரு அரசு உறையூரைச் சுற்றியது. சேரன் செங்குட்டுவன் தான் இந்தக் காலத்தின் மிகப் பெரிய அரசன். பாண்டியன் நெடுஞ்செழியனும் செங்குட்டுவனுக்குச் சளைக்காமல் அதே பொழுது, செங்குட்டுவனை விடச் சற்றே சிறிய நிலத்தைக் கொண்டவன். சோழன் கரிகாலன் சிலம்புக் கதைக்கும் முந்தியவன். சிலம்பைப் பற்றிய குழப்பம் கொண்ட பலரும் புகார்க் காண்டம் கரிகாலன் காலத்தது என்று எண்ணிக் கொள்கிறார்கள். [இப்படி எண்ணிக் கொண்ட தமிழறிஞரும் மிகப் பலர்.] அது முற்றிலும் தவறு. புகார்க் காண்டத்தில் சோழன் கரிகாலன் இளங்கோவால் இறந்த காலத்திலேயே பேசப்படுகிறான்; நிகழ்காலத்தில் பேசப்படவே இல்லை.

புகாரைத் தலைமையிடங் கொண்ட சோழன் [இவன் பெயர் மாவண் கிள்ளி என்று மணிமேகலைக் காப்பியத்தின் வாயிலாய் அறிகிறோம்.] இவன் சேரன் செங்குட்டுவனைச் சற்றும் மதியாதவன். [வஞ்சிக் காண்டத்தில் இவன் சேரனை மதியாத நிலை புலப்படுகிறது.] இவன் செங்குட்டுவனால் மட்டுமல்ல, நெடுஞ்செழியனாலும் கூடப் பெரும் நிலத்தை இழந்திருக்க வேண்டும். ஏனென்றால் உறையூருக்கு மிக அருகில், திருவரங்கத்தில், கோவலனைச் சந்திக்கும் மாடல மறையோன், சோழனின் புகழ் பாடாமல், தென்னனின் புகழ் பாடுகிறான். பொதுவாய் எந்தவொரு நிலத்திலும், அடியவர்கள் ”hail the king” என்ற தோரணையில் பேச்சைத் தொடங்கும் போது, அந்தந்த நிலத்து வேந்தனை அல்லது அரசனைப் பற்றிப் பாடுவதே சங்க இலக்கிய மரபு. [தான் எந்த நாட்டைச் சேர்ந்தவனோ, அந்த நாட்டரசனைப் பாடமாட்டார்கள்.] மாடலன் சேரநாட்டவன் - குடமலையில் இருக்கும் மாங்குடி என்ற ஊரைச் சேர்ந்தவன் - இங்கு திருவரங்கத்தில் இருந்து கொண்டு தென்னன் புகழ் பாடுகிறான் என்றால் திருவரங்கமும் (அதற்குக் கிழக்கிலும் கூடச் சில தொலைவு) பாண்டியனின் ஆட்சிக்குக் கீழ் இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதோடு அல்லாமல், ”புகார்ச் சோழனின் நிலம் பெரிதும் குறைந்திருக்க வேண்டும்” என்ற உண்மையை நாடுகாண் காதையில் வரும் மற்ற செய்திகளாலும், ஏரண முடிவாலும், உணர்ந்துகொள்ளுகிறோம். [அதன் விளக்கத்தைக் கீழே தருகிறேன். சற்று பொறுத்திருங்கள்.]

இதே பொழுது, உறையூரைத் தலைமையிடங் கொண்ட சோழனின் நிலம் புகார்ச் சோழனின் நிலத்தைக் காட்டிலும் கூட இன்னுஞ் சிறியதாய் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் உறையூர் ஆன்பொருநைக் கரூருக்கு மிக அருகில் உள்ளது. பாண்டியன் நிலம் பெரிதாகவும், புகார்ச்சோழனின் நிலம் மிகச் சிறிதாகவும் இருக்கையில் அங்கிருக்கும் புவிக்கிறுவம் (geography), உறையூர்ச் சோழனின் நிலத்தை இன்னுஞ் சிறிதாகவே காட்டும். அதே நேரத்தில் ஆன்பொருநைக் கரூருக்கு அருகில் இருந்த சேரநாட்டு எல்லையைத் தொட்டுக் கொண்டு, அதன் நீட்சி போல உறையூர்ச் சோழனின் குறுநிலம் இருந்திருக்கலாம். உறையூர்ச் சோழன் செங்குட்டுவனின் மைத்துனன் என்பது சிலம்பின் வஞ்சிக் காண்டத்தால் தெரிகிறது. அவன் இயற்பெயரைச் சொல்லாமல் அவன் தாத்தனின் (இவன் செங்குட்டுவனுக்குத் தாய்வழித் தாத்தன்) பெயராய் ஞாயிற்றுச் சோழன் என்று குலப்பெயர் மட்டுமே, சிலம்பிற் குறிக்கப் பட்டிருக்கிறது. முன்னே சொன்னது போல் செங்குட்டுவன் மைத்துனனும் ஒரு கிள்ளியே. அவன் பங்காளிகள் ஒன்பது பேருடன் சண்டையிட்டு, நிலத்தை இந்தக் கிள்ளிக்காகப் பிடுங்கிக் கொடுத்தது செங்குட்டுவனே என்பதும், சிலம்பின் சமகாலத்தில் உறந்தையும், புகாரும் சோழர் தலைநகர்களாய்ச் சொல்லப் படுவதால், புகார்ச் சோழன் சேரனை உறவினனாய் ஏற்றிருக்க மாட்டான் என்பதும் பதிற்றுப் பத்தால் வெளிப்படுகிறது. உறையூர்ச் சோழனின் கிழக்கு, வடக்கு, வடமேற்கு எல்லைகளையொட்டிச் சேரர் நிலமும், தெற்கில் பாண்டியர் நிலமுமாய் இருந்து முற்றிலும் நிலத்தால் அடைபட்ட மிகக் குறுகிய பகுதியாய் உறையூர்ச் சோழ அரசு இருந்திருக்கலாம். மொத்தத்தில் உறையூர்ச்சோழன் செங்குட்டுவனின் கீழுள்ள ஒரு குறுநில அரசனாகவே அன்று இருந்தான் என்று நாம் கொள்ள முடியும்.

உறையூர்ச் சோழனுக்கும், புகார்ச் சோழனுக்கும் இருந்த நிலங்களை இணைக்க எந்தப் பெருவழியும் இருந்ததாய்த் தெரியவில்லை. ஒருவேளை காவிரி ஆறு மட்டும் மெல்லிய இழையாய் இந்த இரு சோழ நிலங்களையும் இணைத்ததோ, என்னவோ?

புகார்ச் சோழனின் நிலத்தைத் தெற்கிலும், தென்மேற்கிலும் வளைத்து எல்லை கொண்டது பாண்டியனாய் இருக்கலாம். அதே பொழுது வடமேற்கிலும், வடக்கிலும், அவனை எல்லை கொண்டது சேரன் செங்குட்டுவனாக இருந்திருக்கலாம். செங்குட்டுவனின் மாற்றாந்தாய் அண்ணனான பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஒரே நாளில் குணகடல், குடகடல் நீரை யானைகள் மூலம் கொண்டுவந்து ஒரு பகலிற் புனலாடியதாகப் பதிற்றுப் பத்தில் பாலைக் கௌதமனார் பாடிய மூன்றாம் பத்தின் பதிகம் சொல்கிறது. எனவே குண, குட கடற்கரைகள்
இரண்டுமே சேரரின் ஆளுகைக்குள் இருந்திருக்கலாம். அதாவது புகார்ச் சோழனின் நிலம் கிழக்கில் கடல், வடக்கு-வடமேற்கில் சேரர் நிலம், தெற்கு-தென்மேற்கில் பாண்டியர் நிலம் என்று மூன்று பக்கம் சிக்கிக் கொண்டிருந்திருக்கலாம்.

இந்தப் பின்புலத்தோடு சிலம்பிற்கு வருவோம். நாடுகாண் காதையின்

காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள் (154-155)

154-155 ஆம் அடிகள் மூலம் கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் ஒரு நாளைக்கு ஒரு காவதம் (6.7 கி.மீ) நடந்தார்கள் என்பதையும், ஆங்காங்கு தங்கி ஓய்வெடுத்தே சென்றார்கள் என்பதும் புலப்படுகிறது. [இவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கு உறையூர் வாய்ப்பானதாய் இருந்தது போலும்.]

இனி, இன்றைக்குப் பெறப்படும் தொலைவுகளை மனத்திற் கொண்டு, மேலே சொன்ன ஆறைங்காதத்தை உள்வாங்கிப் பார்ப்போமா?.

இன்றைக்குப் புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம், திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரை வரை செல்லும் தொலைவு = கிட்டத்தட்ட 100 கி.மீ
இன்றைக்குப் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிராப்பள்ளி வரை உள்ள தொலைவு = 53.75 கி.மீ.

திருச்சிராப்பள்ளியில் இருந்து, காவிரிக் கரையை ஒட்டியே தஞ்சாவூர் வரை கிழக்கு நோக்கிச் சாலை ஒன்று போகிறது. காவிரியாறு தஞ்சாவூருக்கு அப்புறம் சற்று வளைவு எடுத்து வட கிழக்காய்ப் போய் கடலை அடைகிறது. வரலாற்றில் சென்ற 2000 ஆண்டுகளில் காவிரி ஆறு தஞ்சாவூருக்கு அப்புறம், வெவ்வேறு ஆற்றுப் படுகைகளையும், கிளையாறுகளையும் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறது. இன்றைக்கு இருக்கும் ஆற்றுப் போக்கே 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்று உறுதியாகக் கூற முடியாது. இருந்தாலும், திருச்சிராப்பள்ளிக்கும், தஞ்சாவூருக்கும் இடையே காவிரியின் ஆற்றுப் போக்கு வரலாற்றில் மாறவில்லை என்பதைக் கல்லணையைக் கொண்டே உணர முடியும். எனவே காவிரிக் கரையோரம் நடந்து வந்து அடிகளும், கோவலனும், கண்ணகியும், தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி (=உறையூர்) தொலைவை உறுதியாகக் கடந்திருப்பர் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

திருச்சிராப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் தொலைவு = 54.6 கி.மீ.

தஞ்சாவூருக்கு அப்புறம் புகாருக்கான தொலைவு கிட்டத்தட்ட 100 கி.மீ என்று பல்வேறு விரிவான நில முகப்புகளின் (land maps) மூலம் மதிப்பீடு செய்யலாம். இதுவரை பார்த்த பகுதித் தொலைவுகளைப் பட்டியலிட்டுப் பின் கவுந்தியடிகள் தேர்ந்தெடுத்த பாதையின் (நாடுகாண் காதையிலும், காடுகாண் காதையிலுமாய் ஏற்பட்ட பயணத்தின்) தொலைவை மதிப்பிட முடியும்.

புகாரில் இருந்து தஞ்சாவூருக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ
தஞ்சாவூரில் இருந்து உறையூருக்கு = கிட்டத்தட்ட 54.6 கி.மீ
உறையூரில் இருந்து கொடும்பாளூருக்கு = கிட்டத்தட்ட 53.75 கி.மீ
கொடும்பாளூரில் இருந்து மதுரைக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ [மறந்து விடாதீர்கள், பழைய மதுரை எரிபட்டுப் போனது. இன்றைய மதுரை வெற்றிவேற் செழியனுக்கு அப்புறம் சற்றே இடம் மாறி எழுந்து நிற்கிறது. இந்தக் கரணியத்தாலும் 100 கி.மீ என்பது சற்று மாறுபடும். ஆனாலும் அதைத் தரவு இல்லாத கரணியத்தால் ஒதுக்குகிறோம்.]

ஆக, கவுந்தியடிகள் தேர்ந்தெடுத்த பாதையின் தொலைவு மதிப்பீடு = நாடுகாண் காதையிலும், காடுகாண் காதையிலுமாய் ஏற்பட்ட பயணத் தொலைவு மதிப்பீடு = 100+54.6+53.75+100 = கிட்டத்தட்ட 308.35 கி.மீ [கொடுமுடி சண்முகம் தன் பொத்தகத்தில் இதை 300 கி,.மீ என்று மதிப்பிடுவார்.]

இனி உறையூர் வராமல், தஞ்சாவூர் வழி நேரே கொடும்பாளூர் வரும் தொலைவு = 57.39 கி.மீ என்பதனால், புகாரில் இருந்து மதுரைக்கு செல்லக் கூடிய ஆகச் சுருக்கமான தொலைவைக் கீழ் வருமாறு கணக்கிட முடியும்.

புகாரில் இருந்து தஞ்சாவூருக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ
தஞ்சாவூரில் இருந்து கொடும்பாளூருக்கு = கிட்டத்தட்ட 57.39 கி.மீ
கொடும்பாளூரில் இருந்து மதுரைக்கு = கிட்டத்தட்ட 100 கி.மீ

கோவலன் போக நினைத்த பாதையின் தொலைவு = 100+57.39+100 = கிட்டத்தட்ட 257.39 கி.மீ [கோவலன் நினைத்த பாதையிற் போகாமல் கவுந்தியடிகள் தேர்ந்த பாதையில் மூவரும் போனதால், கிட்டத்தட்ட 51 கி.மீ அதிகமாய் அவர்கள் பயணம் போயிருக்கிறார்கள்.]

இதில் புகார்ச் சோழநாட்டிற்கு வெளியே உள்ள தொலைவு = 30 காதம் = 201 கி.மீ. [தென்புல வாய்ப்பாட்டின் படி]. வடபுல வாய்ப்பாட்டின் படி இது 100.5 கி.மீ. ஆகும்.

எனவே புகாரில் இருந்து புகார்ச் சோழநாட்டின் எல்லை = 257.39 - 201 = கிட்டத்தட்ட 56.39 கி.மீ. [தென்புல வாய்ப்பாட்டின் படி]. வடபுல வாய்ப்பாட்டின் படி இது 156.89 கி.மீ ஆகும். முன்னாற் சொன்னது போல் உறையூருக்குச் சற்று தொலைவில் திருவரங்கத்தில் மாடல மறையோன் தென்னவன் புகழ் பாடுவதைக் கருத்திற் கொண்டால், தென்னவன் நிலம் புகார்ச் சோழன் நிலத்திற்கும், உறையூர்ச் சோழன் நிலத்திற்கும் இடையில் ஆற்றை ஒட்டி சற்று அகலமாகவே இருந்திருக்க வேண்டும். வடபுல வாய்ப்பாட்டின் பார்த்தால், புகார்ச்சோழனின் எல்லை உறையூரின் கோட்டையையே தொட்டுவிடும் போல் இருக்கிறது. எனவே தென்புல வாய்ப்பாடே இங்கு சரியாக அமைகிறது.

இதை வைத்துப் புகார்ச் சோழநாடு எவ்வளவு சிறியதாக இருந்திருக்க வேண்டும் என்று இப்பொழுது எண்ணிப் பாருங்கள். ஆறைங்காதம் என்ற தொடர் தான் புகார்ச் சோழ நாட்டின் எல்லை பற்றிய புரிந்துணர்வை நமக்கு அவிழ்த்துக் காட்டியது.

என்னவொரு வியப்புப் பாருங்கள். காதம் என்ற அளவீட்டை வைத்துக் கொண்டு சிலம்பில் வரும் “ஆறைங்காதத்தை” அலசினால் ஒரு பெரிய வரலாற்று உண்மையே வெளிவருகிறது.

இரண்டு சோழரும் கிட்டத்தட்டக் குறுநில அரசர் போலவே இருந்திருக்கிறார்கள். [ஒருவன் செங்குட்டுவனின் மைத்துனன், இன்னொருவன் செங்குட்டுவனை ஏசிக் காட்டும் எதிராளி] அதே பொழுது, சேரனும், பாண்டியனும் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். அதிலும் சேரன் பெருங்கொடி கட்டி ஓகோ என்று உச்சத்தில் இருந்திருக்கிறான். தமிழ் மூவேந்தரின் தான் தான் உச்சம் என்று எண்ணிக் கொண்ட இவன் வீறுகொண்டு வடபுலத்திற்குப் படையெடுத்துப் போனது வியப்பில்லை.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல வேண்டும்; சிலம்பிற்குள் இருக்கும் குறிப்புக்களை நாம் வெறுஞ் சாத்தாரமாகக் கொள்ளமுடியாது. அதற்குள் வரலாற்றுக் குறிப்புக்கள் ஏராளமாய்க் கிடக்கின்றன. நாம் தான் ஆய்ந்து அறியவேண்டும். இந்தக் காதக் கணக்கீடு ஒரு சோற்றுப்பதம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: