Tuesday, July 07, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 5

முழத்திற்கு அடுத்தது கோல். இந்தப் பகுதியில் சிறுகோல், கோல், பெருங்கோல் (=தண்டம்) ஆகிய எல்லாவற்றையும் பார்க்கப் போகிறோம். கோல், கம்பு, கழி, தண்டு, தடி ஆகிய பல மரக்கிளைச் சொற்களும் திரட்சிப் பொருளிலேயே உருவாகியுள்ளன. விதையிலிருந்து முளைத்துச் செடியாகிப் பின் மரமாகும் போது தண்டுப் பகுதிகள் திரட்சி பெறுகின்றன. திரட்சி கூடும்போது அந்த உறுப்புகளுக்கு வலுவும் கூடுகிறது.

குல், கும் ஆகிய வேர்கள் திரட்சி, சேருதல், கூடுதல் ஆகிய பொருள்களைத் தர வல்லன. கும்முதல் வினை திரளும் வினையையும் குறிக்கிறது, கும்> கொம்> கொம்மை என்பது திரட்சியைக் குறிக்கும். கும்>குமர்>குமரி என்பது உடலால் சிறுத்த சிறுமி, பருவம் வரும போது, உடல்திரட்சி அடைவதைக் குறிக்கிறது. கும்மித் திரண்டு எழுந்த பெண் என்ற பொருளிலேயே குமரி என்று அழைக்கப் படுகிறாள். குமர்ப் பருவம் = பெரிய பெண் பருவம். அதேபோல, ஒரு கண்டத்தின் முனையாய் குறுகிக் கூர்ந்துபோகாது, அகண்டு திரண்டு இருந்ததோடு, முனையாயும் ஆகிப் போனதால், தமிழகத் தென்முனை குமரி முனை என அழைக்கப் படுகிறது. கும்> கொம்> கொம்பு என்பது மரக்கிளையைக் குறிக்கும். இதே சொல் ஒகர, அகரப் பலுக்கற் திரிவில் கம்பாக ஒலித்தும் அதே பொருளைக் குறிக்கும். கம்பு + இ = கம்பி என்றாகி, மாழைக் கம்புகளையும், அதன் நீட்சிகளையும் குறிக்கும்.

கும்மல்> குமியல்> குவியல் என்ற வளர்ச்சியும் திரட்சிப் பொருளையே குறிக்கும். மகரமும் வகரமும் ஒன்றிற்கொன்று போலியானவை.

குல்> குலை என்ற சொல்லும், இலை, காய், கனி ஆகியவை எண்ணிக்கையிற் திரண்டதைக் குறிக்கும். குல்>குலம் என்பது ஒரே குடிவழியில் திரண்ட மக்களைக் குறிக்கும். குல்> குலவுதல் = கூடுதல் என்பதும் திரட்சியால் உருவானதுதான். ஏன், குலவுதல்> கலவுதல்> கலவி என்பது கூட ஆண், பெண் கூடலைக் குறிக்கும் சொல் தான். குல்> குற்று> குத்து> கொத்து என்ற சொல்லும் இலைக்கொத்து, காய்க்கொத்து, கனிக்கொத்து போன்றவற்றை, அவற்றின் திரட்சி கருதியே குறிக்கும். குல்> குர்> குரல் என்ற சொல் நெற்கதிர் போன்ற பயிர்க்கதிர்களைக் குறிக்கும்.

குல்>குல்வு>குல்வுதல்>குவ்வுதல் என்பது கூடுதலைக் குறிக்கும். குவ்>குவை என்பதும் திரளும் குவியலைக் குறிக்கும். குவ>குவவு என்பதும் திரட்சியைக் குறிக்கும். குவ்> குவல்> குவால் என்பவையும் நிறைவு, திரட்சியைக் குறிக்கும் சொற்கள் தான். துவல் எனும் சொல் எப்படி நிறைவைக் குறிக்கிறதோ அப்படியே குவல் என்பது திரட்சியைக் குறிக்கும். குவல்> குவள்> குவடு> கோடு என்ற சொல் திரண்ட சிகரத்தைக் குறிக்கும்.

கோல் என்ற சொல் குல்> குவல்> கோல் என்ற வளர்ச்சியில் திரண்ட மரக்கிளையைக் குறிக்கும். குல்> குழு> கழு> கழி என்ற சொல்லும் மரக்கழியையை, விதப்பாக மூங்கில், கரும்பு போன்றவற்றின் தண்டைக் குறிக்கும்.

இனிச் சிறுகோலுக்குப் போவோம். முன்னே கொடுத்த வாய்ப்பாட்டைப் பார்த்தால் 1 சிறுகோல் என்பது 24 பெருவிரலுக்குச் சமம் என்பது புரியும்.

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
2 விரற்கிடை = 1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
6 பெருவிரல் = 1 சாண் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 16 1/2 அங்குலம்
2 முழம் = 1 சிறு கோல் = 33 அங்குலம்
2 சிறுகோல் = 1 கோல் = 5.5 அடி.
4 சிறு கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு = 88 அடி
500 தண்டம் = 1 கூப்பிடு தூரம் = 1 மைல் 220 அடி = 1.675 கி.மீ
4 கூப்பிடு தூரம் = 1 காதம் = 4 மைல் 1 பர்லாங் 220 அடி = 6.7 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 16 மைல் 5 பர்லாங் 220 அtடி = 26.82 கி.மீ

இந்த வாய்ப்பாடு சிலம்புக் காலத்தில் இருந்தே புழக்கத்தில் இருக்கிறது என்கிறாற் போல் சிலம்பின் அரங்கேற்று காதையில் வரும்

நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்து நால் விரலாக (99-100)

என்ற 99-100 ஆம் அடிகள் பதிவு செய்யும். இங்கே சிறுகோலே உணர்த்தப்படுகிறது என்பது 24 (பெரு)விரல் என்பதில் இருந்து விளங்குகிறது. [விரற்கிடையாய் இருந்தால் 48 என்று சொல்லப் பட்டிருக்கும். தவிர, 24 விரற்கிடை என்பதே பொருள் என்றால், சொல்லப்படும் அரங்க அளவு கூத்திற்கு உகந்ததாய் ஆகாமல், மிகச் சிறியதாய் இருந்திருக்கும். எனவே கூடுகை [= கூடிவரும் பொருள், இதைத்தான் ஆங்கிலத்தில் context என்று சொல்கிறார்] பார்த்துப் புரிந்து கொண்டால், இது பெருவிரலாகவே இருக்க முடியும்.]

சங்க காலத்திலும் புழக்கத்தில் இருந்திருக்கக்கூடிய இவ் வாய்ப்பாட்டை வெறும் எண்ணுதியாய்ப் (numerical) புரிந்து கொள்ளாமல், மனக்கண்ணில் காட்சி தோன்றுமாப் போல, பூதியற் போல்மம் (physical model) ஒன்றை உருவகிக்கலாமா? அரங்கேற்று காதையில், மாதவி ஆடிய கூத்தரங்கின் அளவு

”எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் ........................” (101-106)

என்ற வரிகளால் சொல்லப்படும். அதாவது, கூத்து மேடையின் அகலம் 7 சிறுகோல் (= 19 அடி 3 அங்) இருந்ததாம், அதன் நீளம் 8 சிறுகோல் (= 22 அடி) இருந்ததாம். அரங்கப் பலகையின் (stage) மட்டம் (இதைக் குறட்டுயரம் என்று கொடுமுடியார் சொல்வார்.) 1 சிறுகோல் (= 2 அடி 9 அங்.) உயரத்தில் அமைந்ததாம். பொதுவாய், அரங்கப் பலகையின் மேல் மேடைத் தூண்களும், அந்தத் தூண்களின் மேல் உத்தரங்களும் அமர்த்தப் பட்டிருக்கும். உத்தரங்களை ஒட்டிக் கயிறுகளைப் பிணித்திருப்பார். அந்தக் கயிறுகளில் எழினிகள் (திரைச்சீலைகள்) தொங்கும். [உத்தரங்கள் இல்லாத பழைய வீடுகள் நம் நாட்டுப்புறங்களில் உண்டோ?] உத்தரங்களுக்கும் மேலே அமைவது உத்தரப் பலகை. இதை விதான மட்டம் (=ceiling) என்றும் கட்டுமானவியலிற் கூறுவார். உத்தரப் பலகைக்கும், அரங்கப் பலகைக்கும் இடைப்பட்ட அரங்குயரம் = 4 சிறுகோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி. இப்பொழுது கூத்தரங்கத்தை உருவகிக்க முடிகிறதா? மாநெடுங்கண் மாதவி நடமாடிய கூத்தரங்கு உண்மையிலேயே அந்தக் காலத்திற்குப் பெரியது தான்.

கல்வெட்டாய்வாளர் திரு.சு.இராசுகோபால் எடுவிப்பில் (editing) வெளிவந்த “Kaveri - Studies in Epigraphy, Archaeology and History” [பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2001] என்ற பொத்தகத்தில் பேரா. ஒய்.சுப்பராயலுவின் ”Land measurements in Medieval Tamilnadu" என்னும் கட்டுரையில் பல்வேறு மாவட்டங்களில் கிடைத்த, கி.பி.800 இல் இருந்து 1350 வரையிலும் இருக்கும், நில அளவீடுகளைக் குறிக்கும் 51 கல்வெட்டுக்களைக் கொண்டு ஒரு புள்ளி விவரம் குறித்திருப்பார். அதன் மூலம் 11 அடிப் பெருங் கோல் (=132” = 16 சாண்) என்பது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 57 விழுக்காடு பரவலான புழக்கத்தில் 550 ஆண்டுகள் வரையும் இருந்தது என்பதும், இது பல்லவர் காலத்திலும், பேரரசுச் சோழர் காலத்திலும் பெரிதும் புழங்கியது என்றும், பாண்டியர் வந்து 18 சாண் கோலாய் மாற்ற முயன்றும், அது நிலைக்காமல், 16 சாண் கோலே பெரும்பான்மைப் புழக்கத்தில் இருந்தது என்பதும் தெரிகிறது.



அடுத்து துலை பற்றிய செய்தியைப் பார்ப்போம். அந்தக் காலத் துலை ஒரு சிறுகோல் நீளம் இருந்திருக்கலாம். [அதாவது 2.75 அடி அல்லது 24 விரல். நடுவில் இருக்கும் துலைமுள்ளில் இருந்து இருபக்கமும் 12 விரல் தொலைவில் எடைகள் தூக்கும் பலங்கைகள் தொங்க வேண்டும்.]

சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

என்ற 118 ஆம் குறட்பா இதைத்தான் குறிக்கிறது. இந்தப் பாவில் “கோல்” என்ற சொல் துலையையும் குறிக்கிறது, ”சிறுகோல்” என்னும் அளவையும் குறிக்கிறது.

அடுத்து ”புகார் நகரில் வானகிரிப் பகுதியில் ஒரு தூம்பு அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளது. அதன் வாய் அகலம் 84 செ.மீ (33 அங்குலம்) அதாவது ஒரு சிறுகோல் அளவு ஆகும். செந்தர அளவு தொன்றுதொட்டு இருந்ததற்கு முதன்மைச் சான்று இதுவாகும்” என்று கொடுமுடியார் குறிப்பிடுவார். கோலுக்கு வில் (=தனு) என்ற இன்னொரு பெயரும் வழங்கியது. [ஒருவேளை, அந்த நாள் வில்லின் நாண் நீளம் ஒரு கோலோ, என்னவோ? ஆய்வு செய்யப் படவேண்டிய செய்தி.]

அடுத்து நாம் பார்க்கப் போவது, ஓர் ஆளுயரம் எனச் சொல்லப்படும் கோல் = 2 சிறுகோல் = 5 1/2 அடி. ஒரு சாத்தாரத் தமிழரின் செந்தர உயரமென்று இதைத் தான் அக்காலத்தில் கொண்டார் போலும். ஓராள் உயரத்தைச் செங்கோல், தண்டு என்று சொல்வது ஓரோவழி வழக்காகும். குறளில் கோல் எனும் சொல்லாட்சி செங்கோன்மை, கொடுங்கோன்மை என்ற அதிகாரங்களில் ”மன்னவன் கோல்” என்று ஆளப்படுகிறது.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி

இங்கே மன்னவனின் கோல் 2.75 அடியாக இருக்க வழியில்லை. 11 அடியாகவும் இருக்க முடியாது. இது பெரும்பாலும் ஓராளுயரமாய் 5 1/2 அடி இருக்கவே வாய்ப்புண்டு. ஆங்கிலத்தில் fathom என்ற அளவு ஒரு காலத்தில் 5 1/2 அடியைக் குறித்தது. பின்னால் அது 6 அடியையும் குறித்தது. இவ்வழக்கும் வடவர் வழக்கும் ஒன்றாகிறது. அர்த்த சாற்றத்தில் இவ்வழக்கே சொல்லப்படும். . “தனு இரண்டதுவோர் தண்டம்” என்ற கந்தபுராணம் அண்டகோ.6 ஆம் கூற்று 5 1/2 அடி வழக்கைப் பின்பற்றியது. [தனு - வில் - என்ற சொல் 5 1/2 அடி நீளத்தையும் குறித்து, 2 3/4 அடி நீளத்தையும் குறித்திருப்பது வெவ்வேறு வட்டார வழக்குப் போலும்.]

முருகனைத் தண்டபாணி என்று சொல்லும்போது, அவன் கையில் வைத்திருக்கும் தண்டு 5 1/2 அடி உயரம் கொண்டதாகவே இருக்கலாம். முருகன் கை வேலும், தமிழர் வேலும் கூட 5 1/2 அடி உயரமே இருத்தல் இயலும். [ஐயனார் கோயில்களில் நேர்ந்து கொண்ட அல்லது நேர்ந்து கொள்ளும் வேல்களை அளந்து பார்க்க வேண்டும்.] இக்காலத்தில் சவளம் எறிவது பற்றியும் ஈட்டி 8 முழம் என்பதில் மிக்குயர்ந்த உயரம் பற்றியும் சென்ற பகுதியிற் பேசினோம்.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். 567

என்ற குறளில் வரும் ”கையிகந்த தண்டம் - கையில் இருந்து வெளிப்பட்ட தண்டம்” கூட 5 1/2 அடி அளவினதாக இருக்கவே வாய்ப்பு உண்டு. 11 அடித் தண்டமாய் இருக்க வழியில்லை. இதேபோல தண்டச்சக்கரம் என்ற சொல்லால் குயவனது திருகையும், கோலும் உணர்த்தப் படும் போது, அந்தக் கோலும் 5 1/2 அடி தான் இருக்க முடியும். தண்டஞ் செய்து வணங்குதல், தண்டனிட்டல் ஆகியவற்றிலும் ஓராள் உயரமே சொல்லப் பட முடியும். ஓர் உலக்கை என்பதும் கூட ஆளுயரம் உள்ள கோலையே குறிக்கும். மொத்தத்தில் தண்டத்தைக் குறிக்க இரு வேறு பட்ட வழக்கு (5 1/2 அடி, 11 அடி) நம்மிடை இருந்து பின்னால் 5 1/2 அடித் தண்டமே வடவர் பால் பரவியது போலும். எனவே நாம் பழைய ஆவணங்களில் கோல், தண்டம் என்ற சொற்களை ஆளும் இடங்களில் கூர்ந்து பார்த்து வேறுபாடு தெரிந்து பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் தான் பல சோழர் காலக் கோயில்களின் பீடச் சுவர்களில் அங்கு பயன் படுத்தப்பட்ட அளவீடு பூதியலாகவே குறிக்கப் பட்டது போலும். காட்டாகப் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டா புரம் சிவன் கோயிலில் 1 தண்டம் = 11 அடி அளவீடு குறிக்கப் படும். இன்றைக்கும் மாளிகை வீடுகளில் ஒரு தளத்திற்கும், இன்னொரு தளத்திற்கும் இடையே விடப்படும் உயர இடைவெளி பெரும்பாலும் 10.5 அடியாய் இருப்பது, தண்டம் என்னும் அளவுகோலின் திரிவா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

இனி நம்மூர்த் தண்டத்திற்கும் இரட்டை மாட்டுவண்டிச் சக்கரத்திற்கும் இருக்கும் தொடர்பைப் பார்ப்போம். வட்டத்திற்கும் விட்டத்திற்கும் இடையே உள்ள ”பை (pi)” என்னும் தொடர்பு நெடுநாளைக்கு முன்னேயே தமிழர்க்குத் தெரிந்திருக்க வேண்டும். சங்க காலத்திற்கு அப்புறம் [விருத்தப் பாக்கள் எழுந்த காலத்தில்] இருந்த காக்கைப் பாடினியார் பாடியதாக வரும்

விட்டமோர் எழு செய்து திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டிச் செய்யின் திகைப்பன சுற்றுத் தானே

என்ற பாட்டில் விட்டத்தில் இருந்து வட்டச் சுற்றின் நீளத்தைக் கண்டுபிடிக்கும் வகை சொல்லப் படும். வட்டச்சுற்று = 2*(7+4)*D/7. ஆக (22/7) என்னும் பின்னம் வெகு நாட்கள் முன்னாலேயே தமிழர்க்குத் தெரிந்துள்ளது. ஆனால் எந்தக் காலத்தில் இருந்து இக் குணகம் [factor] தெரிந்ததென்று முடிவுசெய்யத்  தொல்லியலே  உதவிசெய்ய வேண்டும். [வட்டத்தின் பரப்பைக் கண்டுபிடிக்க,

வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
சட்டெனத் தோன்றுங் குழி

என்ற தனிக்குறட்பா உதவி செய்யும். மேலே தாக்குதல் என்ற வினை பெருக்குதலை உணர்த்துவதைக் “கணக்கதிகாரம்” என்ற நூல் வழியாகவும் அறியலாம். குழி என்பது பரப்பைக் குறிக்கும் சொல். இதைத் தண்டச் சதுரம் என்று சொல்லியிருக்கிறார்.]

இனி இரட்டை மாட்டுவண்டிச் சக்கரத்திற்கு வருவோம். பொதுவாய் இந்த வண்டிச் சக்கரத்தின் விட்டம் இன்றுங் கூட 5.25 அடியே இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால், மேலே உள்ள குணகமான (22/7)-ஓடு பெருக்கினால் சக்கரத்தின் சுற்றளவு 16.5 அடி (அதாவது 1.5 தண்டம்) ஆகிறது. எனவே சக்கரம் ஒரு சுற்றுச் சுற்றினால், வண்டி 1.5 தண்டம் நகருகிறது. இரட்டை மாட்டு வண்டிகள் பொதுவாகப் பார வண்டிகளாகவே நம்மூரில் அமையும். அவை ஆட்கள் போவதற்கான வண்டிகள் அல்ல. சக்கரம் ஒரு சுற்றுப் போக, 1 தண்டம் நகர வேண்டுமானால், சக்கரத்தின் விட்டம் 3.5 அடி இருக்க வேண்டும். [ஒருவேளை அந்தக் கால ஒற்றை மாட்டு வண்டிகள்/ஒற்றைக் குதிரை வண்டிகளின் சக்கரம் இந்த அளவா என்று தெரியாது. இது போன்ற ஒற்றை மாட்டு வண்டிகளில் நான் போயிருக்கிறேன். அவை இரட்டை மாட்டு வண்டிச் சக்கரங்களைக் காட்டிலும் சிறியவை. ஆனால் அவற்றின் விட்டம், சுற்று ஆகியவற்றை அளக்க வேண்டும் என்று அப்பொழுது தோன்றியதில்லை. இப்பொழுது நாட்டுப்புறங்களில் யாரேனும் அளந்தால் பயனுள்ளதாய் இருக்கும்.]

முன்னே சொன்னது போல், விரல் என்னும் அளவிற்கு இருந்த குழப்பம், சிறுகோல் (= 2 3/4 அடி = 33 அங்குலம்), கோல் = (தண்டு, ஓராள் உயரம் = 5 1/2 அடி), பெருங்கோல் = (தண்டம் = 11 அடி) என்ற மூன்று அளவைகளிலும் உண்டு. அவை மூன்றையும் கோல் என்ற ஒரே சொல்லால் வெவ்வேறு இடங்களில் அழைத்திருப்பதால், இடம், பொருள், ஏவல் பார்த்துச் சரியான அளவை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. காட்டாக, உத்தரமேரூரில் கி.பி.921 ஆம் ஆண்டில் பராந்தக சோழன் ஏற்படுத்திய கல்வெட்டில் உள்ள செய்திகளைப் பார்ப்போம்.

1. ஸ்வஸ்திஸ்ரீ [II*] மதிரை கொண்ட கோப்பரகேசரிபன்ம[ர்*]க்கு யாண்டு பதினாறாவது நாள் இருநூற்று இருபத்திரண்டு காலியூர்க் கோட்டத்து தன்கூற்று உத்தரமேருச் சது[ர்*]வவே[திமங்கலத்து] மாஸபையோம் எழுத்து எம்மூர்த் தெற்கில் பரமேஸ்வர வதி நீராயிட்டு காலியுங் களறும் உள்ளிட்டு மற்று[ம்*] எப்பேர்ப்பட்ட சாதியும் இசங்குவது அரிதாயிட்டு பரமேஸ்வர வதியான முக்கோலோடும் குறை

2. மேற்க்கடைய குடிகள் பக்கல் ஸுப்ரஹ்மண்ய வாய்க்காலுக்கு வட(க்)கிழக்கு மேக்கு இருகோல் அகலங் குழி கொண்டு பழை வதியிலும் ஒருகோல் ...................... ற்காடேய் முக்கோல் அகலத்தால் வதி அட்டிக் கீழ்க்கடை நீர் போவதா[க]வும் ஸுப்ரஹ்மண்ய வாய்க்காலுக்குத் தெற்க்கு ஒரு கண்[ணா]று குடிகள் பக்கல் கிழக்கு மேற்க்கு ஒரு கோல் அகலங் குழி கொண்டு இவ்வொரு கண்ணாறு வதியிலே

3. ஒரு கோலுமாக இருகோல் அக[ல*]ங் கொண்டு வதி யட்டுவதாகவும் அதன் றெ[ற்*]க்கு ஆஸுரியார் எரியளவும் பழையவதியிலே இரு கோல் அக[ல*]த்தால் வதி அட்டுவதாகவும் ........................... வனாக்காய் ஊர்மேல் நின்ற திருவடிகளே கடைக்காட்சியாக இவனே இவதி அட்டிவிப்பானாகவும் இப்பரிசு குடிகள் பக்கல் கொள்ள வேண்டும் பூமிக்கு இவ்வாண்டு தோட்டவாரியஞ் செய்கின்ற தோட்டவாரிய

4. ப்பெருமக்களே பூமி விலைக்குக் [கொ]ண்டு வதிக்கு வேண்டும் ப்ர்யப்பட்டு திருவடிகள் கடைக்காச்சியால் வதி யட்டுகவென்று [மா]ஹாஸபையைத் திருவடி பணித்த ................... ஊரின் றெ[ற்*]க்கு முதற் கண்ணாற்றில் மாதவச்சேரி ஸபையோர் பக்கல் வதி அட்டுவதாக விலைக்குக் கொண்ட குழி இருபத்தெட்டும் பந்தல் பாடகத்து வதி யட்டுவதாகக் கொண்ட குழி கிழக்கு மேக்கு இரு கோலால் தெற்க்குவடக்கு ப

5. தினா[லு*]க் கோலால் விலைக்குக் கொண்ட குழி இருபத்தெட்டும் பந்தல் பாடகத்து வதி யட்டுவதாகக் கொண்ட குழி கிழக்குமேற்க்கு இரு கோலால் தெற்குவடக்கு பதினை[ங்கோலா]ல் வந்த குழி மு[ப்]ப(த்)தும் ஊரின் றெ[ற்]க்கு இரண்டாங் கண்ணாற்று கொரஞ்சி ஸ்ரீதர து[ர்க்க]ய க்ரமவித்தர் பக்கல் விலைக்கு கொண்ட குழி கிழக்குமேற்க்கு இருகோலால்தெ[ற்*]க்குவடக்கு பதினைங்கோலால் வந்த குழி முப்ப

6. தும் ஆஸுரி உருத்ரகுமாரக் க்ரம[வி]த்தர் பக்கல் கிழக்கு மேக்கு [இ]ருகோலால் தெக்குவடக்கு பதினைங்கோலால் விலைக்குக் கொண்ட குழி முப்பதும் ஊரின் றெ[ற்*]க்கு மூன்றாங் கண்ணாறுக் காரம்பிச்செட்டு பரமேஷ்வரதஸபுரிய பட்டர் பக்கல் கிழக்குமேற்க்கு இருகோலால் தெற்க்கு பதினைங்கோலால் கொண்டகுழி முப்பதும் ஆதம்பத்து பசருத்ர க்ரமவி

7. த்தச் சோமாசியார் பக்கல் கிழக்கு மேற்க்கு இருகோலால் தெ[ற்*]க்கு வடக்குப் பதினைங்கோலாற் கொண்ட குழி முப்பதும் ஊரின் றெ[ற்*]க்கு நாலாங் கண்ணாற்று உறுத்த போசர்ஸோமதேவபட்டர் பக்கல் கிழக்குமேக்கு இருகோலால் தெற்க்குவடக்கு பதினைங்கோ[லா]ற் கொண்ட குழி முப்பதும் ஸுரஸாரம்பி [நாரா]ய.......... புரிய[பட்ட]ர் பக்கல்

8. கொண்ட குழி கிழக்கு மேற்க்கு இருகோலால் தெற்க்குவடக்கு ஏ[ழ*]ரைக் கோலால் கொண்ட குழி பதினை..................க்ரமவித்த சோமாசியார் மகனார் தோணவிஷ்ணுக்ரமவித்தர் பக்கல் கொண்டகுழி கிழக்குமேர்க்கு இருகோலால் தெற்க்குவடக்கு ஏழரைக்கோலால் கொண்டகுழி பதி

9. னைந்தும் ஊரின் றெ[ற்*]க்கு அ[ய்*]ந்தாங் கண்ணாற்று உறுப்புட்டுர் சேட்டகுன்றக்ர[மவித்தன் ம]கன் கொண்டகுமாரசர்ம்மன் பக்கல் கிழக்கு மேற்க்கு இருகோலால் தெற்க்குவடக்கு ஏழரைக்கோலால் கொண்டகுழி ஏழரையும் [மா]ங்களூர் நாராயண சேட்ட க்ரமவித்

10. தர் பக்கல் கிழக்குமேர்க்கு இருகோலால் தெற்க்குவடக்கு ஏழரைக்கோலால் கொ[ண்ட*] குழி ஏழரையும் அக்கிப்புறத்து நாராயணக்ரமவித்தர் பக்கல் கிழக்குமேர்க்கு ஒரு கோலால் தெற்க்கு ஏழரைக்கோலால் கொண்ட குழி ஏழரையும் நந்திகாமத்து களமாய்ததஸ

11. புரியன் பக்கல் கிழக்குமேற்க்கு ஒரு கோலால் தெற்க்குவடக்கு ஏழரைக் கோ[லா]ல் கொண்ட குழி ஏழரையும் ஊரின் றெ[ற்*]க்கு ஆறாங் கண்ணாறு அய்யக்கி இளைய ஜ்யேந்த்ர ஸ்வாமி க்ரமவித்தன் பக்கல் கிழக்குமேற்க்கு ஒரு கோலால் தெற்க்குவடக்கு இருகோலால் கொண்ட குழி இ

12. ரண்டுமாக வதி அட்டுவதாக ஊர்மேனின்ற திருவடிகளே கடைக்காச்சியால் தோட்டவாரியப் பெருமக்கள் வதி அட்டுவதாக விலைக்குக் கொண்ட குழி இருநூற்றுஎழுபது குழியும் விலைக்கு கொண்டு இறை இழித்திக் குடுத்தோம் இவ்வதி சந்த்ராதித்தவத்

13. செல்ல தோட்டவாரியஞ் செயும் பெருமக்களே கடைக்காண்பாராக பணித்தோம் உத்தரமேருச் சதுர்வேதிமங்கலத்து ஸபையோ[ம்*] இது கூறியுள்ளிருந்து பெருமக்கள் பணிக்க எழிதினேன் மத்யத்ஸன் சிவதாஸன் உத்தரமேரு ஆயிரத்திருநூற்று

14. வ அலங்காரப் பிரியனேன்.II

மேலே உள்ள கல்வெட்டின் மூலம் நாம் புரிந்து கொள்வது 4 செய்திகள் ஆகும்.

1. வதி என்பது பேரூர்களில் இருக்கும் வண்டிச்சாலை. [கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கும் பரமேஸ்வர வதியைப் போல் இன்னும் 7 வதிகள் உத்திரமேரூரில் இருந்திருக்கின்றன. பதிதல் என்னும் வினைச்சொல்லில் இருந்து பாதை எனுஞ்சொல் ஏற்பட்டது போல் பதிதல்>வதிதல்>வதி என்ற பெயர்ச்சொல்லும் ஏற்பட்டது. இக்காலத்தில் பாதை எனுஞ் சொல் புழக்கத்தில் இருக்கிறது. வதி என்ற சொல் புழக்கத்தில் இல்லை. ஆனால் வழி என்னும் இன்னொரு சொல் இருக்கிறது.] வதி என்பது குறைந்தது 3 கோல் அகலமாவது இருக்க வேண்டும் என்று இக்கல்வெட்டால் அறிகிறோம். ஒரு கோல் ஓரொழுங்கை (one lane) என்று கொண்டால், போக ஓர் ஒழுங்கை, வர ஓர் ஒழுங்கை, கடந்து செல்ல ஓரொழுங்கை என்று இதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு சிறு தேர், அல்லது மாடிழுக்கும் பாரவண்டிக்கு 11 அடி அகலமாவது இருக்க வேண்டும். [”திண்தேர் குழித்த குண்டுநெடுந் தெருவில்” என்று தேரோடும் தெருக்களைப்- பெரும்பாணாற்றுப் படையின் 396 ஆம் வரி குறிக்கும்.] இங்கு 3 கோல் = 3* 5 1/2 = 16 1/2 அடி என்று இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இங்கு ”கோல்” என்னும் சொல் தண்டம் அல்லது பெருங்கோலையே குறிக்கிறது போலும். அதாவது உத்திரமேரூர் வதிகள் 33 அடி அகலத்தோடு இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் பெரும் அரச வீதிகளின் அகலம் 5 தண்டம் என்றே கொடுமுடியார் குறிப்பிடுகிறார். அதாவது 55 அடி. இரண்டு தேர்கள் எதிர் எதிரே போக இடம் இருக்க வேண்டும். இந்தக் காலத்து 100 அடி (கிட்டத்தட்ட 10 தண்டம்), 200 அடிச் (கிட்டத்தட்ட 20 தண்டம்) சாலைகளை அந்தக் காலத்தில் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். பெருவழிகள் என்பவை பெருங்கோலின் (தண்டத்தின்) மடங்கால் அமைந்த நெடுஞ்சாலைகளோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ”பெரு” எனும் முன்னொட்டிற்கும் தண்டத்திற்கும் உள்ள இணைப்பைப் பார்த்தால் இது புரியும். தவிர மயமதம் என்னும் கட்டிடக்கலை நூல் தேரோடும் வீதிகள் 1, 2, 3, 4 அல்லது 5 பெருங்கோல் அகலம் இருக்கவேண்டும் எனக் கூறுகிறதாம். [தமிழில் அறிவியற் கருத்துக்கள் - வி,மி, ஞானப்பிரகாசம், பக்கம் 168, க.ப. அறவாணன் (பதிப்பு) பாரி நிலையம், சென்னை 1975] மொகெஞ்சசொதராவில் உள்ள பெரிய தெருக்களும் 33 அடி அகலம் வரை இருப்பதாகச் சிந்துவெளி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (சிந்துவெளித் தொல்தமிழ் நாகரிகம் - பி. இராமநாதன், கழக வெளியீடு, 2000, பக்கம் 33]

2. சாலைக்காக வாங்கும் நிலத்தின் நீள அகலம் சொல்லிக் குழிக் கணக்குக் காட்டுவதால், 1 கோல் சதுரம் என்பது ஒரு குழி என்று நீட்டல் அளவில் இருந்து பரப்பளவிற்கான உறவு புரிகிறது. 1 கோல் சதுரம் = 1 தண்டச் சதுரம் = 1 குழி = 121 சதுர அடி.

3. முதற் கண்ணாற்றில் மாதவச்சேரி ஸபையோரிடம் 58 குழியும் (2*14 + 2*15 = 58 குழி), இரண்டாங் கண்ணாற்று கொரஞ்சி ஸ்ரீதர துர்க்கய க்ரமவித்தர், ஆஸுரி உருத்ரகுமாரக் க்ரமவித்தர், மூன்றாங் கண்ணாறுக் காரம்பிச்செட்டு பரமேஷ்வர தஸ புரிய பட்டர், ஆதம்பத்து பச ருத்ர க்ரமவித்தச் சோமாசியார், நாலாங் கண்ணாற்று உறுத்த போசர ஸோமதேவ பட்டர் ஆகியோரிடம் 150 குழியும் (2*15 + 2*15 + 2*15 + 2*15 + 2*15 = 150 குழி) ஸுரஸாரம்பி [நாரா]ய.......... புரிய[பட்ட]ர், .........க்ரமவித்த சோமாசியார் மகனார் தோண விஷ்ணு க்ரமவித்தர் ஆகிய இருவரிடம் 30 குழியும் (2*7.5 + 2*7.5 = 30 குழி) அ[ய்]ந்தாங் கண்ணாற்று உறுப்புட்டுர் சேட்ட குன்ற க்ரமவித்தன் மகன் கொண்டகுமார சர்ம்மன், மாங்களூர் நாராயண சேட்ட க்ரமவித்தர், அக்கிப்புறத்து நாராயண க்ரமவித்தர், நந்திகாமத்து களமாய்த தஸபுரியன் ஆகிய நால்வரிடம் 30 குழியும் (1*7.5 + 1*7.5 + 1*7.5 + 1*7.5 = 30 குழி), ஆறாங் கண்ணாறு அய்யக்கி இளைய ஜ்யேந்த்ர ஸ்வாமி க்ரமவித்தனிடம் 2 குழியும் (1*2 = 2 குழி) ஆக மொத்தம் 270 குழியை உத்தரமேருச் சதுர்வேதி மங்கலச் சபையார் வாங்கி 151 கோல் (= 1661 அடி) நீளத்திற்குச் சாலையைப் புதிதாகப் போட்டிருக்கிறார்கள்.

4. மழைநீர் தேங்காமல் அருகில் இருக்கும் வாய்க்காலுக்கு வடியும் வகையில் சாலை அமைத்திருக்கிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

தமிழ் said...

அருமையான கட்டுரை

இராம.கி said...

அன்பிற்குரிய திகழ்மிளிர்,

வரவிற்கும் பாராட்டிற்கும் நன்றி

அன்புடன்,
இராம.கி.

Kamaraj said...

மிக அருமை! இதை சார்ந்த என் பதிவு:
http://icortext.blogspot.com/2011/05/blog-post.html