Monday, July 06, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 4

அடுத்தது முழம். இந்தச் சொல் கை, கால்களின் மூட்டை (joint) முதலிற் குறித்துப் பின் அதனோடு தொடர்புள்ள நீட்டளவையைக் குறித்திருக்கிறது.

முள் என்னும் வேரில் இருந்து முள்+து = முட்டு என்ற சொல் உடல் எலும்புகள் சேரும் / கூடும் இடங்களையும், அதன் தொடர்ச்சியாய் முன்வந்து மோதிக் கொள்ளும் இடத்தையும், தடைப்படும் இடத்தையும் குறிக்கும். இன்னும் பொருள் நீட்சி பெற்று முழங்காலையும் கூடக் குறிக்கும். அதே வரிசையிற் இன்னும் பல சொற்கள் உண்டு, அவற்றில் கூட்டுப் பொருள் வரும் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

முட்டு+இ = முட்டி (எலும்புகள் சேரும் இடம். கால்முட்டி, கைமுட்டி என்ற பயன்பாடுகளைக் கவனிக்கலாம். முழங்காலில் இருக்கும் முழங்கால் மூடியும் முட்டி என்று சொல்லப் பெறும். “அவனுக்குச் சொல்லி வை, ரொம்பப் பேசினா முட்டிலே தட்டிருவேன்” என்று முரடர் மிரட்டுகிறார் அல்லவா?)
முட்டு+ அம் = முட்டம் (முட்டிக் கொண்டு இருக்கும் இடம், கடலூர் மாவட்டத்தில் உள்ள திரு முட்டம் (ஸ்ரீ முஷ்ணம்), குமரி மாவட்டம், அகத்தீசுவரம் வட்டத்தில் உள்ள ஊர், மலையாளத்து வள்ளுவ நாட்டில் இருந்த ஊர் ஆகியவை முட்டம் என்று குறிக்கப்படும்.)
முட்டு>மூட்டு (எலும்புகள் சேரும் இடம், பொருத்து, மூடும் இடம்)
மூட்டு>மாட்டு (பொருத்து, அகப்பட்டுக் கொள்ளும் இடம்)
மூட்டு+ ஐ = மூட்டை (கூடி, மூடப்பட்ட பொதிக் கட்டு)
மூட்டை>மூடை = பொதி, (பண்ட) மூட்டை
முட்டு>முடு>முடுக்கு = முட்டி, (முன்போக முடியாது தடைப்பட்ட இடம்).
முடு>முடை>முடைஞ்சல் = தடைப்பட்டு இடையூறாய் இருக்கும் இடம்.
முள்+ந்+து = முண்டு (முட்டு)
முள்>முண்டு>மண்டு>மண்டல் (சேருதல்)
மண்டு>மடு (மடைத்து நிறைந்த இடம்)
மடு>மடை (நிறைந்து கிடக்கும் ஏரி நீரை மூடும் பலகை/தட்டம்)
மண்டு>மண்டகம்>மண்டபம் = கூடும் இடம்
மண்டு+இ>மண்டி (பொருள்கள் நிறைந்த இடம்)
மண்டு>மடு>மடம் = சமயத் துறவியர் கூடும் இடம்.

மேலே உள்ள சொற்களைப் போலவே, ளகர, ழகரத்தை இடையொலியாக் கொண்ட சொற்களும் இதே மூட்டுப் பொருளில் வரும். அவற்றில் ஒன்றுதான் முழம் என்பதாகும்.

முள்>முள்ளம்>முளம்>முழம் = மூட்டு
முள்>முளி = உடல் மூட்டு
முளி>முழி = எலும்பு மூட்டு
முழி>மொழி = மணிக்கட்டு, முழங்கால், கணைக்கால் முதலியவற்றின் பொருத்து
முள்>மூழ்>மூழ்கு = மூடிப் போதல்

மாந்தவுடல் எங்கும் பல்வேறு மூட்டுகள் இருக்கின்றன. குறிப்பாகத் தோளில் இருந்து விரல் நுனி வரை பல மூட்டுகள் உள்ளன. அவற்றில் முதல் மூட்டு அக்குள் என்பதாகும். [இந்த மூட்டின் மூலம் கையை வலமாகவும், இடமாகவம் சுற்ற முடிகிற கரணியத்தால், சுற்றியக்கத்தைக் குறிக்கும் மையத் தண்டாக அக்குள்>அக்ஷுள்>அக்ஷ் என்ற சொல்திரிவு வடமொழியிலும், axle என்று மேற்கு மொழிகளிலும் பரவி நிற்கிறது. நாம் மீண்டும் அதைத் திருப்பி வாங்கி, அச்சு என்று சொல்லுகிறோம். ”க்கு>க்ஷ்>ச்சு: என்ற போக்கில், க்க் ஒலியை வடக்கே கடன் கொடுத்து, பின் அங்கு க்‌ஷ் ஆகத் திரிந்து, அதை மீண்டும் தமிழில் திருப்பிக் கடன்வாங்கி ச்ச் ஆக்கும் நடைமுறை பல தமிழ்ச் சொற்களில் நடந்திருக்கிறது.] அக்குளுக்குப் பகரியான கவைக்கட்டு /கவைக்கூடு /கம்புக்கூடு என்ற சொற்களைச் சென்ற பகுதியிற் பார்த்தோம்.

அடுத்தது முழம் என்னும் மூட்டு. கைகளில் இரண்டு இடத்திலும், கால்களில் இரண்டு இடத்திலும் முழம் எனும் மூட்டுகள் இருக்கின்றன. இச் சொல் மற்ற தமிழிய மொழிகளிலும் உள்ள சொல் தான். காட்டு: தெ: முர; க:மொழ; ம:, து: முழம். 

வடமொழியில் முழம் என்பது அரத்னி என்றும் சொல்லப்படும். [அக்குள், முழம் என்ற மூட்டுக்களைப் போலவே கணு என்ற சொல் கைத்தலம் முழங்கையோடு சேரும் மூட்டைக் குறிக்கும். இதைக் கணுக்கை என்றும் சொல்கிறோம். கைத்தலம் என்பது உள்ளங்கைக்கான இன்னொரு பெயர். இதை அப்படியே வடமொழி வாங்கிக் கொண்டு கைத்தலம்>கைத்தம்>hastha என்றாளும். விரல் மூட்டுக்கள் விரல்மடி என்று சொல்லப்பெறூம். முன் விரல்மடி, நடு விரல்மடி, அடி விரல்மடி என்று விரித்துச் சொல்லலாம்.]

இனி முழம் என்ற சொல்லாட்சி பற்றிய செய்திகளைப் பார்க்கலாம். தமிழகமெங்கணும் காணும் பழைய கற்படுக்கைகள் [சங்க காலத்திற்கு முந்தியிருந்து, பின் பல்லவர் காலம் வரையிலும் இருந்த ஆசீவிக, செயினக் கற்படுக்கைகள்] பெரும்பாலும் ஒரு முழ அகலமும், 4 முழ நீளமும் கொண்டதாகவே காணப்படுகின்றன. (தமிழர் அளவைகள் - முனைவர் கு.பகவதி. பக்கம் 52, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) இதனாலும் 4 முழம் = 8 சாண் = 5 1/2 அடி என்ற சாத்தார உயரம் பெறப்படுகிறது. அதே போல இன்றுங் கூட ஆண்கள் அணியும் வேட்டி 4 முழம் இருப்பதை எண்ணிப் பார்க்கலாம் ["உண்பது நாழி உடுப்பது 4 முழம்" என்ற சொலவடை நல்வழி 28 ஆம் பாவில் பயில்வதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.]. இதுவும் சாத்தார உயரத்தையே குறிக்கிறது. 8 முழ வேட்டி என்பது இருமடியாய் ஆக்கி 4 முழமாகவே கட்டப் படுவதையும் எண்ணிப் பார்க்கலாம்.

ஒரு புடவை என்பது ஒரு காலத்தில் 18 முழம் = 36 சாண் = 24 3/4 அடி. இந்தப் புடவையின் முதல் நாலு முழம் இடுப்பைச் சுற்றும் முதற் சுற்றிற்கும், அடுத்த எட்டு முழம் கொச்சகம் (கொசுவம்) வைத்துச் செருகுவதோடு சேர்ந்தாற் போல் இரண்டாம் சுற்றிற்கும், மீந்து இருக்கும் ஆறு முழம் மார்பை மூடிப் பின் தோளுக்கு அப்பால் தொங்கப் போடுவதற்குமாய் அமைகிறது.

முழம் பற்றி ஓர் அருமையான பாடல் வயிற்றோடு தொடர்புறுத்தி திருநாவுக்கரசர் தேவாரத்தில் இருக்கிறது. அந்தப் பாடலுக்குப் போகும் முன்னால் ஒரு சில விளக்கங்களைப் பார்ப்போம்.

மாந்த உயரமான 4 முழத்தில் அரைக்குக் (இடுப்புக்குக்) கீழ் 2 முழமும், தலையிலிருந்து ஒரு முழமும் எடுத்து விட்டால், மாந்தனின் சீரணப் பகுதி 1 முழ ஆழம் தான் உள்ளது. சீரணப் பகுதியைத் தான் வயிறு என்ற பொதுச் சொல்லால் நாம் சொல்கிறோம். வயிறு என்ற தமிழ்ச்சொல் ஓருறுப்பைக் குறிப்பதல்ல. அது இரப்பை, சிறு குடல், பெருங்குடல், மலக்குடல் போன்ற பல உறுப்புக்களின் தொகுதியைக் குறிப்பது. வயிற்றுப் பகுதி என்பது தொப்புளுக்கு அருகில் இடையை மையங் கொண்டுள்ளது. சாத்தார மாந்தனின் உடம்பில் தொப்புளை ஒட்டி ஒரு அட்டையும், தொப்புளுக்கு நேர் பின்னே, முதுகில் ஒரு அட்டையும் வைத்து இடைப்பட்ட தொலைவை அளந்தால், அது பெரும்பாலும் ஒரு சாணாய் இருக்கும். அதாவது அரை முழம். இதையே வயிற்றின் அகலம் என்று சொல்கிறார்கள். “ஒரு சாண் வயிறு” என்ற சொலவடையும் இந்தக் கருத்தையே சொல்கிறது.

கொழுமையான (healthy) மாந்தனின் இடைச் சுற்றளவு (வயிற்றுச் சுற்றளவு) அவன் உயரத்தில் பாதி இருக்க வேண்டும் என்று சத்துணவியலில் (nutrition science) சொல்லுவார்கள். அப்படியானால் ஒரு சாத்தார மாந்தனுக்கு இடைச் சுற்றளவு 2 முழமாய் இருக்க வேண்டும். அதாவது 33 அங்குலம். அதோடு, வயிற்றின் அகலத்தை நீள்வட்டத்தின் நுணவ (minor) அச்சாகவும், வயிற்றின் நீளத்தை அதன் மேய (major) அச்சாகவும் கொண்டு, மாந்த வயிற்றை (இடையை) ஒரு நீள்வட்டமாய் உருவகஞ் செய்ய முடியும். அந்த உருவகத்தில், வயிற்றின் அகலம் அரை முழமாகி, வயிற்றின் சுற்றளவு 2 முழமாக இருக்க வேண்டுமானால், வயிற்றின் நீளம் கிட்டத்தட்ட, வயிற்றின் அகலத்தைப் போல் 1.5 மடங்கு, அதாவது 3/4 முழம் கொண்டிருக்க வேண்டும் என்று கணக்கிட்டுச் சொல்லலாம். [நீள்வட்டத்தின் பக்கமடைச் (approximate) சுற்றளவு = 2*(pi)*[(a^2+b^2)/2]^(1/2). இங்கு a என்பது வயிற்றின் நீளம்; b என்பது வயிற்றின் அகலம் ஆகும். இந்த ஒக்கலியின் (equality) மூலம் கணக்குப் போட்டால், வயிற்று நீளம் = கிட்டத்தட்ட 3/4 முழம் என்று வந்து சேரும்.]

இந்தச் செய்திகளோடு, இனித் திருநாவுக்கரசர் தேவாரம் 4ஆந் திருமுறை 44 ஆம் பதிகம் 2 ஆம் பாட்டைப் பார்ப்போமா? இது திருக்கச்சி ஏகம்பத்து இறைவனைப் பற்றிய பாட்டு.

ஒருமுழம் உள்ள குட்டம் ஒன்பது துளையு டைத்தாய்
அரைமுழம் ஆகும் அகலம் அதனின்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சியே கம்ப னீரே!

குட்டம் என்பது ஆழம். குழிவு என்றும் பொருள் கொள்ளும். இந்தக் குழிவு தான் மாந்தனின் வயிற்றுப் பகுதி. இதன் ஆழம் ஒரு முழம் என்று மேலே சொன்னதை இங்கு திருநாவுக்கரசரும் சொல்கிறார். அரைமுழம் ஆகும் என்ற கூற்றால், வயிற்றின் அகலம் சொல்லப் படுகிறது. ”ஒருசாண் வயிறு” என்ற உலக வழக்கும் அத்னோடு பொருந்துகிறது. இந்த வயிற்றுப் பகுதியோடு ஒன்பது துளைகள் தொடர்புறுத்தப் பெறுகின்றன. மாந்த உடம்பில் இரு கண்கள், இரு காதுகள், இரு மூக்குத் துளைகள், வாய், சிறுநீர்த் துளை, மலத் துளை என ஒன்பது துளைகள் இருப்பதாகச் சொல்வார். இவற்றின் வழியே தான், எந்த வேதிப்பொருளும் உடலுக்குள் போவதும், வெளியே வருவதுமாய் நடக்கிறது. இந்த 9 துளைகளும் வயிற்றுப் பகுதியோடு தாமாகவோ, அன்றி அரத்தச் சுற்றுக் கட்டகத்தின் (system of blood circulation) வழியாகவோ தொடர்புற்று இருக்கின்றன. அடுத்து இவ் உடம்பை உணர்வதற்கும் (to sense), கட்டு உறுத்துவதற்கும் (to control) ஐம்புலன்கள் என்னும் முதலைகள் இருக்கின்றன. அவை இக்குழிவில் வாழவேண்டும் எனில், அதாவது செயற்பட வேண்டும் எனில், [இங்கே உழைவாய்தல் என்பது உழத்தல், செயற்படுதல் என்று பொருள் கொள்ளும்.], வயிற்றுக்குள் தொடர்ந்து சீரணம் நடந்து உடம்பிற்கு ஆற்றல் அளிக்கப் படவேண்டும். அதாவது வயிற்றிற்கு உணவு ஈயப்பட வேண்டும். ”எல்லாம் ஒருசாண் வயிற்றுக்குத் தான்” என்று மாந்தரின் பொதுப் பட்டறிவு சொல்கிறதில்லையா? ”கருமுகில் தவழும் கச்சி மாடத்தில் இருக்கும் ஏகம்பனே! இந்த வயிற்றுக்கு உணவு பற்றிப் பிதற்றுகிறேன், கவனித்துக் கொள்ளப்பா” என்கிறார் திருநாவுக்கரசர். ஒருவேளை பசியோடு கச்சித் திருவேகம்பம் வந்தார் போலும்.

இதே பொருளில் திருநாவுக்கரசர் 4 ஆம் திருமுறையில் 67 ஆம் பதிகத்தில் திருக்கொண்டீச்சுரத்தைப் பாடுகையில் 7 ஆவது பாட்டில்

சாண் இரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்று அறுவரும் மயக்கம் செய்து
பேணிய பதியின் நின்று பெயரும்போது அறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே!

என்று மாந்த உடம்பின் வயிற்றுப் பகுதியை 2 சாண் (=1 முழம்) என்று சொல்வார்.

அடுத்து ஒரு பழமொழியைப் பார்க்கப் போகிறோம். இதைப் பலவிதமாய்ச் சொல்லியிருக்கிறார். ஒருவிதத்தில் இப்பழமொழி ”ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்று அமையும். ஈட்டி எட்டு முழம் என்பது ஈட்டியின் மிக்குயர்ந்த அளவைக் குறிக்கிறது. பொதுவாக ஓராள் உயரத்தில் இருந்து இரண்டாள் உயரமே ஈட்டிகள் இருக்கும். இங்கு இரண்டாள் உயரம் (8 முழம்) சொல்லப் படுகிறது. இந்தக் காலத்தில் சவளம் (javelin - ஈட்டி) எறியும் போட்டிகளை நடத்தும் போது, கிட்டத்தட்ட 1 1/2 ஆள் உயரம் கொண்ட 800 கிராம் எடை கொண்ட சவளமே பயன்படுத்தப் பெறுகிறது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைவு ஒருவரால் ஈட்டி எறிய முடியும் என்று அளந்து பார்த்தார்களா என்று தெரியாது. ஆனால், இந்தக் கால ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில், ஆண்கள் கிட்டத்தட்ட 217 முழம் தொலைவிற்கு ஈட்டியைத் தூக்கி எறிகிறார்.

இன்னும் 2 பழமொழிகள் சாணையும் முழத்தையும் பொருத்திச் சொல்லும். அவை: ”சாண் ஏறினால் முழம் சறுக்கும் (வழுக்கும்”); ”தலைக்கு மேல் வெள்ளம், சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன?”

பெரும் சிவலிங்கம் ஒன்றிற்கு முழக்கணக்கு சொல்லும் சொலவடையும்  உண்டு. திருப்புனவாயில் என்னும் சிவத்தலம் திருவாடானையில் இருந்து ஆவுடையார் கோயிலுக்கு வரும் வழியில் இருக்கிறது. இங்கு இருக்கும் சிவலிங்கம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு அடுத்ததாய்ப் பெரியது என்று சொல்வார். [காலத்தால் தஞ்சைப் பெருவுடையாருக்கும் முந்தியது.] இங்கு உள்ள இறைவருக்கு பழம்பதி நாதர் என்று பெயர். இந்தப் பழம்பதி நாதரின் இலிங்கத்திற்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டுமாம். "மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று " என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும்

அடுத்து அந்தக் காலத்து ஓலைச்சுவடிகளில் உள்ள ஓலைநறுக்கு ஒரு முழம் அளவு கொண்டதாய் இருக்கும். நறுக்கின் அகலம் கிட்டத்தட்ட ஒரு பெருவிரல் (1 3/8 அங்குலம்) இருக்கும்.

முன்னே நீட்டளவை வாய்ப்பாட்டில் தண்டம் (அல்லது பெருங்கோல்) என்று சொல்லப் பட்ட கோல் 8 முழம் கொண்டதால் முழக்கோல் என்றும் சொல்லப்பெறும்.

“என்னம்மா, மல்லிகை முழம் எவ்வளவு?” - இன்றும் கேட்கிறோம் அல்லவா?

அன்புடன்,
இராம.கி.

3 comments:

Nimal said...

மிகவும் பயனுள்ள ஒரு தொடர். மிகவும் தெளிவாகவும் ஒர் ஆராய்ச்சி கட்டுரைக்குரிய விரிவாகவும் எழுதப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய நிமல்,

வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

Unknown said...

எங்கள் ஊரில் (சேலம்) 1909ஆம் வாக்கில் பதிவான பத்திரங்கள் அனைத்தும் மூழம் கணக்கில்தான் பதிவாகி உள்ளது நில அளவையாளர்கள் அனைவரும் ஒரு மூழத்திற்கு ஒண்ணரை அடி என்ற தவறான அளவிலேயே குறிப்பிட்டு பூமியில் இடமில்லை என்று அளவீடு செய்கிறார்கள் ஆனால் ஒரு மூழம் என்பது 16 1/2 அங்குலம் என்ற கணக்கில் அளவீடு செய்தால் பூமியில் சரியாக நிலம் உள்ளது ஆனால் நில அளவையாளர்கள் அரசாங்கத்தின் GO வில் ஒரு முழம் என்பது 1 1/2 அடி என்று எங்கும் காணப்படவில்லை ஆனாலும் நில அளவையாளர்கள் ஒரு முழம் என்பது ஒன்றரை அடி என்று சொல்லி அளவீடு தவறாக செய்கிறார்கள்!!