Wednesday, July 29, 2009

இடியப்பம் - 1

இடியப்பம் பற்றிய ஓர் உரையாடல் மின்தமிழ், தமிழுலகம், தமிழ்மன்றம் ஆகிய மடற்குழுக்களில் அண்மையில் எழுந்தது. இடியப்பம் என்ற சொல் எப்படி எழுந்தது என்றும் அங்கு சொல்லியிருந்தேன்.

இடியப்பத்திற்கு மாவு செய்வதை மாவு இடித்தல் என்றே தென்பாண்டி நாட்டில் சொல்லுவார்கள். பெரும்பாலான வீடுகளில் இடிப்பதற்கு உதவியாய் உரலும், உலக்கையும் இருக்கும். உரல் என்பது குந்தாணி என்றும் சொல்லப் பெறும். குந்தாழி>குந்தாணி. குந்தம் = உலக்கை.

புழுங்கல் அரிசியை நீரில் போட்டு அலசிப் பின் நீரை ஒரு வேட்டி கொண்டு வடிகட்டி, சற்று ஈரப் பதத்தோடு இருக்கும் அரிசியை உரலில் போட்டு உலக்கை கொண்டு இடித்து (உலக்கைக்கே கூட இடிமரம் என்ற சொல் உண்டு.), பின் அதைச் சலித்து குருணையைப் போக்கி (குருணையை மீண்டும் உரலில் போட்டு இடித்துக் கொள்ளலாம்.) மாவை 3 நாட்கள் நிழலில் பரப்பி உலர வைத்துப் பின் அரைமணி நேரம் வெய்யிலில் போட்டு உலர வைக்க வேண்டும். பின்பு அதை இடியப்பம் செய்யப் பயன்படுத்தலாம். நாலைந்து மாதங்கள் மாவைச் சேமித்து வைத்திருக்க நினைத்தால் வெய்யிலில் உலர வைப்பதற்குப் பகரியாய் ஒரு வாணலியில் போட்டு இளஞ்சூட்டில் வறுத்தெடுக்கலாம்.

இடிதல் = முனை முறிதல், தன்வினைச் சொல், to be broken as a garain of rice.
= முறிதல் (பிங்) to break in two, part in two (செ.அக.)

இல்>இள்>இடு>இடி = குத்துதல், துளைப்படல், உடைபடுதல், துன்புறுதல்

இடித்தல் = தூளாக்குதல் பிறவினைச் சொல், to pound in a mortar; to bray with a pestle; to reduce flour. "பொற்சுண்ணம் இடித்து நாமே” (திருவாசகம் 9,1)

ம:இடிக்குக; க:இடி,இடகு, டிகா,டீகு, துட: இட், து: எடபுனி, எடுபுனி, எட்புனி; தெ: டீகொனு; கொலா:இட்

இடி. பெயர்ச்சொல் மா (பிங்); flour, esp. of rice or millet. சுண்ணம் (பிங்), powder, dust, anything pulverised

ம: இடி; கோத: இரி; துட: ஈரி

இடிசல் = நொறுங்கின தவசம்.

இடிசாந்து = இடித்துத் துவைத்த சுண்ணாம்பு

இடிசிலைச்சாறு = இலையை இடித்துப் பிழிந்த சாறு.

இடித்தடு = பிட்டு. loose confectionary made of flour "நரைத்தலை முதியோள் இடித்தடு கூலி கொண்டு” கல்லாடம் 46. இடித்து + அடு = இடித்தடு

இடியப்பு = இடியும் அப்பும் சேர்ந்த கலவை. இடி = அரிசி மாவு. அப்பு = நீர். (அப்பு என்பது தமிழே என்று சொல்லாய்வறிஞர் ப. அருளி தன் “யா” என்ற பொத்தகத்தில் நிறுவுவார்.)
இடியப்பில் மிகுந்த மாவும் இருக்கக் கூடாது. மிகுந்த நீரும் இருக்கக் கூடாது. மாவும் நீரும் சரியான கலவையாக வேண்டுவது, கைப்பக்குவத்திலேயே அமையும். அந்தக் கலவைதான் இடியப்பக் கட்டையைத் தாழியில் வைத்துப் பிழியும் போது சரியானபடி இழைகளாய்க் கொடுக்கும். எது கூடினாலும் இடியப்பம் நன்றாய் இருக்காது. தமிழ்நாட்டில் பொதுவாய் நெல்லை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தான் சரியான கலவைப் பக்குவம் தெரிந்திருக்கிறது. எனவே இங்குதான் இடியப்பம் நன்றாக இருக்கும்.

இடியப்பம் = இடியப்பை எடுத்து இடியப்பத் தாழியில் போட்டு கட்டை கொண்டு அழுத்தி இழைகளாய் இட்டவித் தட்டில் பிழிந்து பின் இட்டவி செய்வது போல் ஆவியில் இட்டு வேக வைக்க வேண்டும். முன்னே சொன்னது போல் கலவை சரியாக இருந்தால் தான் இழைகள் ஒடியாது நீண்டதாய் அமையும். இல்லையென்றால் தொட்டாலே பொடிப் பொடியாய் உதிர்ந்து போகும். அப்புறம் ஒருவகைப் புட்டாகிப் போகும்.

பேச்சுவழக்கில் இடியப்பம் என்னுஞ் சொல் இடியாப்பமாயும் மாறும்.

வேக வைத்த இடியாப்பத்தில் தேங்காய்ப்பால், சர்க்கரை போட்டு இனிப்பு இடியாப்பமும், அதற்கு மாறாய்ச் சற்று தயிரைப் போட்டுப் பிசைந்து புளிப்பேற்றி [பிசையும் போது இழைகள் உதிராமற் பார்த்துக் கொள்ளவேண்டும்.] பின் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு வறுத்தெடுத்ததை இடியாப்பத்தில் கலந்து உப்பு இடியாப்பமும் செய்வது உண்டு.

உப்பு இடியாப்பத்தோடு கூடவே தொட்டுக் கொள்ள வேறு சில நீர்மச் சேர்மங்கள் உண்டு [பச்சடி, வெங்காயக் கோசு, அவியல், கறிக் குழம்பு.... இன்ன பல.]

அன்புடன்,
இராம.கி.

6 comments:

Vasanthan said...

இடியப்பம் ஈழத்திலும் மிகப்பிரபலமான ஓர் உணவு.

இடியப்பத்துக்கு நாங்கள் கூட்டாகச் சேர்த்துக் கொள்வது சொதியும் சம்பலும் தான்.

குறும்பன் said...

சந்தவை என்று சொல்லப்படுவதும் இடியப்பம் என்று நினைக்கிறேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய வசந்தன்,

ஈழத்திலும் இடியப்பம் விரும்பிச் சாப்பிடும் உணவென்று அறிவேன். நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சொதி உண்டு. சாப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் சிவகங்கையில் பச்சடியையும், கோசமல்லியையுமே (கத்திரிக்காய் நிறையச் சேர்த்து சற்று புளி கூடிய சேர்மம்.) விரும்பி வைத்துக் கொள்ளுகிறார்கள். கறி சாப்பிடுபவர்களே ஆட்டுக்கறிச் சொதியை இடியப்பத்திற்கு உடன் சேர்க்கிறார்கள்.

சம்பல் நான் சாப்பிட்டதில்லை. கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு நாள் ஈழத்தில் சாப்பிடாமலா போய்விடுவேன்?

அன்பிற்குரிய குறும்பன்,

சந்தகம் என்பது சந்தகை, சந்தவை என்றும் பலுக்கப் படுவதாய்க் கேட்டிருக்கிறேன். நண்பர் நாக. இளங்கோவன் திருச்சி மாவட்டத்தில் அப்படித்தான் சொல்லுவார்கள் என்றும், நண்பர் நாக. கணேசன் கொங்கு வட்டாரத்தில் சந்தகை என்றுதான் சொல்லுவார்கள் என்றும் சொன்னார்கள்.

ஒவ்வொரு வட்டார வழக்கையும் நாம் இப்படிப்[ பரிமாறிக் கொண்டு பரப்பினால் தான், எதிர்கால இளையருக்கு இது புரிபடும்.

வட்டார வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

கோவி.கண்ணன் said...

சுவையான இடுகை, நன்றி ஐயா,

இட்டவி யைத்தான் இட்டலி என்கிறோம் என்று தெரிந்து கொண்டேன்

இராம.கி said...

வாங்க கோவி,

இன்னும் இரண்டு பகுதிகள் இருக்கு. அதையும் படியுங்க.

அன்புடன்,
இராம.கி.

சிவஹரி said...

குந்தாணி குறித்து தேடி வருகையில் கூகுளாண்டவர் இந்த பதிவினைப் படிக்கச் செய்து விட்டார்.!

பகிர்ந்தமைக்கு நன்றி