Sunday, November 23, 2008

ஒட்டியாணம் -2

உகரச் சொற்கள் பலுக்கற் திரிவில் இகரச் சொற்களாய் மாறுவது இயல்பு. அதேபொழுது ஒடுக்கம், சிறுமை, நெருக்கம் என்ற அடிப்படைப் பொருட்பாடுகளைச் சுட்டியே அவை தம் அடையாளம் காட்டும். ஒடுக்கம் என்பது உடலின் ஒடுக்கம், வெளியின் ஒடுக்கம், உட்கொள்ளும தன்மை, மற்றவற்றைப் பார்க்கச் சிறுக்கும் தன்மை ஆகியவை மேலே காட்டிய சொற்களிலும், இனி வரப்போகும் சொற்களிலும் பொருள் காட்டி நிற்கும். ஒடுக்கத்தின் வழிப்பொருள்கள் நெருக்கமும் செறிவும் ஆகும்.

உடு>இடு>இடை = உடலிலுள்ள ஒடுங்கிய அல்லது சிறுத்த உறுப்பு. [36-24-36 என்று சொல்கிறார் இல்லையா? அந்த 24 இதுதான்.]
இடு>இடுப்பு = இடையின் பக்கம் [இக்காலத்தில் இடையையே இடுப்பு என்கிறோம்.]
இடு>இடுகுதல் = ஒடுங்குதல், சிறுத்தல்
இடுகு>இடுக்கு>இடுக்கல் = ஒடுங்கிய இடைவெளி
இடுக்கு>இடுக்கி = ஒடுக்கி (அல்லது நெருங்கிப் பிடிக்கும்) கருவி [இன்றும் நாட்டுப்புறங்களிலுள்ள சொல்]
இடுக்கு என்பது இதுக்கு/இசுக்கு என்றும் தென்மாவட்டங்களில் ஒலிக்கப் பெறும். ”இதுக்குனோண்டு/இசுக்குனோண்டு/இத்துனோண்டு இடமிருக்கு”
[ஓப்பு நோக்குக குடவன்>குசவன், பிடி>பிசி (பொய்)]
இடுக்கம் = நெருக்கம், இடைவெளியொடுக்கம்
இட்டளம் = நெருக்கம், தளர்வு (”பரம பதத்தில் இட்டளமுந் தீர்ந்தது” ஈடு 3:8:2)
இட்டிடை = சிறுத்த இடை “இட்டிடையின் மின்னிப் பொலிந்து” திருவாசகம் 7:16; “இட்டிடை இடைதனக்கு” கந்தபு. தெய்வயா. 183.
இட்டிது = சிறிது “ஆகாறளவு இட்டிதாயினும்” குறள் 478.
இட்டிமை = சிறுமை, ஒடுக்கம்.
இட்டிய = சிறிய (ஐங்குறு 215)
இட்டேறி = சிறிய வண்டிப்பாதை
இட்டி = சிறு செங்கல்
இட்டிகை = மிகச் சிறிய செங்கல்
இடுக்கண் = நெருக்கு வட்டில் ஏற்படும் துன்பம் “இடுக்கண் வருங்கால் நகுக - குறள் 621”
இடுக்கணி = நெருக்கமான (இடுக்கான) இடம்
இடுக்கிடை = நெருக்கம்
இடுகுதல் = ஒடுங்குதல் “கண்களை இடுகக் கோட்டி” (சீவக. 2086), சிறுகுதல் “இடுகிடைத் தோகாய்” (கம்ப ராமாயணம். சித்திர. 19)
இடுங்குதல் = உள்ளொடுங்கல் “கண்ணிடுங்கி” (திவ்ய. பெரிய திருமொழி. 1:3:4)
இடும்பை -= துன்பம் “ஏமஞ் சாலா இடும்பை” - தொல் பொருள்.50)
இடுவல் = இடுக்கு
இண்டு = மிகச்சிறிய இடைவெளி; இண்டும் இடுக்கும் என்பது உலக வழக்கு.

இனி இன்னொரு வளர்ச்சித் தொடரைப் பார்ப்போம்.

உல்>ஒல்>ஒல்கல் = சுருங்கல் ”ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்” குறள் 136.
ஒல்கு>ஒற்கு>ஒற்குதல் = குறைதல் “ஒற்காமரபிற் பொதியில் அன்றியும்” - சிலப் 25:117
ஒற்கு> ஒற்கம் = குறைவு “ஒற்கத்தின் ஊற்றாந் துணை” குறள் 414; வறுமை (தொல்.சொல்.360)
உடு>ஒடு>ஒடுங்குதல் = சுருங்குதல், குவிதல், “தாமரையின் தடம் போது ஒடுங்க” திவ்வி.இயற்.திருவிருத்த. 76
ஒடுங்கி = ஆமை
ஒடுக்கு = அடக்கம்
ஒடு>ஒடி>ஒடிதல் = முறிதல்
ஒடித்துக் கேட்டல் = விலையைக் குறைத்துக் கேட்டல்
ஒடி>ஒசி [ஓப்பு நோக்குக குடவன்>குசவன், பிடி>பிசி (பொய்)]

பேச்சுவழக்கில் உகரச்சொற்கள் அகரச்சொற்களாய்த் திரிவதும் உண்டு.

ஒடுங்கு>அடுங்கு>அடங்கு>அடங்குதல் = சுருங்குதல், உள்ளமைதல், உட்படுதல், கீழ்ப்படிதல், புலனொடுங்குதல், உறங்குதல், சாதல்
அடங்கு>அடக்கு>அடக்கம் = அடங்கிய நிலை “அடக்கம் அமரருள் உய்க்கும் - குறள் 121”
ஒடுங்கு>ஒதுங்கு>ஒதுக்கு>ஒதுக்கம் = ஒடுங்கியநிலை
ஒதுங்கு>அதுங்கு>அதுக்கு>அதுக்கம்; அதுங்குதல் = ஒடுங்கியநிலை.
அதுக்குதல் = வாயில் அடக்குதல்
அதுக்கு = ஒடுக்கு, கல நெளிவு
ஒதுங்கு>ஒருங்கு>ஒருங்குதல் = ஒடுங்குதல் “உரம் ஒருங்கியது ...... வாலியது மார்பு” (கம்பரா. யுத்த. மந்திர.90) [ஒப்பு.நோ. விதை>விரை]
ஒருங்கு>ஒருக்குதல் = அடக்குதல் “மனத்தை ஒருக்கு ஒருக்கத்தின் உள்ளே” (பதினொரு. திருவிடைமும். 24) [இனி ஒடுங்கு>ஒருங்கு என்றுமாம்.

ஒ.நோ. அடுக்கங்கடை>அடுப்பங்கரை, படவர்>பரவர்]

ஒன்றுசேர்தலைக் குறிக்கும் ஒருங்கு என்ற சொல்லும், ஒடுங்கலைக் குறிக்கும் ஒருங்கென்ற சொல்லும் வெவ்வேறாம். ஒன்றுசேர்தற் கருத்தில் சாதற் கருத்துக்கு இடமின்மை காண்க.

இனி,
உல்கு>ஒல்கு>அல்கு. அல்குதல் = சுருங்குதல்
அல்கல் = குறைவு “அல்கலின் மொழி சில அறைந்து” (நைடத. அன்னத்தைக் கண்.66)
பெண்ணின் உடலில் அல்கிய இடம் அல்குல். இதை இடை என்று ஓரோவழி சொல்வாரும் உண்டு; பெரும்பாலோர் ஒக்கலுக்கும் கீழே பெண்குறி நோக்கி, உடலின் மேற்பாகம் குறுகுவதைக் குறிப்பாரே மிகுதி.
அல்கு>அஃகு. அஃகுதல் = அளவிற் குறுகுதல் (நன். 60); சுருங்குதல் “கற்பக் கழிமடம் அஃகும்” (நான்மணி.20); குவிதல் “ஆம்பல் ..... மீட்டு

அஃகுதலும்” (காஞ்சிப்பு. திருக்கண். 104); நுண்ணிதாதல் “அஃகி அகன்ற அறிவு - குறள் 175”
அஃகல் = சிறியதாகை (திவாகரம்)
அல்கு>அற்கு>அற்கம் = அடக்கம் “அற்கம் ஒன்றும் அறிவுறாள்” (திவ்.திருவாய்.6:5:4)

அடுத்த பகுதியில் ஓட்டு, ஒட்ட, ஓட்டி என்ற விதப்பான சொற்களுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

குறுகிய பாதையை இட்டறை என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்... நீங்கள் இடு என்பதன் பொருளை விளக்கிய பிறகு இட்டறை என்ற சொல்லை விளங்கிக் கொள்ள முடிந்தது.

Anonymous said...

//குறுகிய பாதையை இட்டறை என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்... நீங்கள் இடு என்பதன் பொருளை விளக்கிய பிறகு இட்டறை என்ற சொல்லை விளங்கிக் கொள்ள முடிந்தது.//

கோவைப் பகுதிகளில் இட்டேறி எனப்படும். சங்கனூர் கிராமத்தை கோவை மாநகருடன் இணைத்தது 'தயிர் இட்டேறி'.