Wednesday, April 23, 2008

இருவேறு விடுதலை ஆசைகள்

கீழே வரும் இரு பாட்டுக்களும் தந்தை தன்மகற்குக் கூறியதாய் வரும் சந்தப் பாட்டுக்கள். ஒன்று திருத்தணிகை முருகன் மீது அருணகிரியார் பாடிய 258 ஆம் திருப்புகழ். "மகனே! பெருணவத்தின் பொருளை எனக்குச் சொல்" என்ற சிவன் கூற்றை நினைவுறுத்தி, பிறப்பிலிருந்து விடுபடும் தன் ஆசையைச் சொல்லி "உன்னைத் தொழுகாது இருப்பேனோ" என்று அருணகிரியார் கேள்விகளாய்க் கொட்டுவார். இது இறைப்பத்தியின் வழி எழும் விடுதலை ஆசை!

தனதன தான தனதன தான
தனதன தான தன தானா

எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலாயோ?
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் பவமாற!
உனைப்பல நாளும் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங்(கு) உளிமேவி,
உணர்த்திய போதந் தனைப்பிரி யாது(ஒ)ண்
பொலச்சர ணானுந் தொழுவேனோ?
வினைத்திற மோடு(அ)ன் று(எ)திர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் றவன்"நீயே
விளப்பென மேல்"என் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் புகல்வோனே!
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே!
தினைப்புனம் மேவும் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் பெருமாளே!

இன்னொரு சந்தப்பாட்டும் விடுதலை ஆசையையைத் தான் உணர்த்துகிறது. ஆனால் தமிழர் தரணியில் உயர்ந்து வாழுதற்கான விடுதலை ஆசை. இப்படி ஒரு பாடலைப் பாவேந்தர் மட்டுமே பாட முடியும். தனித்தமிழ் வண்ணம் என்றும் அவர் கவிதைகளில் ("பாரதிதாசன் பாடல்கள்" என்று முனைவர் தொ.பரமசிவன் தொகுத்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1993 பதிப்பில் 489-490 ஆம் பக்கங்களில் இருக்கும்) இந்தப் பாடல் குறிப்பிடப் படுகிறது.

"எளியவர்க்கு உதவியாய் இருப்பாயோ? பிறர்நலம் நாடுகிறாய் என்று கேட்டு நான் மகிழேனோ? எங்கும் தமிழ் என்றாக்க உழையாயோ? தமிழ்நாடு செறிந்து விளங்குகிறது என்று காட்ட என்னை அழையாயோ? 'தமிழ் நம் உயிர்' என்று எல்லோரும் உணர வழி செய்யாயோ? தமிழ்நாடு விடுதலை பெற ஆசை பெருகாதோ?" என்ற சிறிய வினாக்கள்; எளிய கருத்துக்கள்.

தமிழிசை, தமிழிசை என்று பலவிடத்தும் தாகம் கொள்கிறோம்; "பாட்டெங்கே இருக்கிறது?" என்று மறுமொழி எழுகிறது. தமிழிசைப் பாட்டுக்கள், வண்ணமாய்ச் சந்தமாய், வெள்ளமாய்க் கிடக்கிறது, அது பத்திப் பாட்டாக மட்டுமே இருக்க வேண்டுமா, என்ன? பாவேந்தர் பாட்டாக இருக்கவொண்ணாதோ? என்ன சொல்கிறீர்கள்? யாராவது இந்தப் பாட்டை மெட்டமைத்துப் பாடுவீர்களா?

அன்புடன்,
இராம.கி.

---------------------------

விடுதலை ஆசை
(தனித்தமிழ் வண்ணம்)

தனதன தான தனதன தான
தனதன தான தன தானா

கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிடம் மீளும் அழகோனே
கழைநிகர் காதல் உழவினில் ஆன
கதிர்மணி யே,என் இளையோய் நீ
பெரியவ னாகி எளியவர் வாழ்வு
பெருகிடு மாறு புரியாயோ?
பிறர்நலம் நாடி ஒழுகிணை யாக
இருசெவி வீழ மகிழேனோ?
தெரிவன யாவும் உயர்தமி ழாக
வருவது கோரி உழையாயோ?
செறிதமிழ் நாடு திகழ்வது பாரீர்
எனஎனை நீயும் அழையாயோ?
ஒருதமி ழேநம் உயிரென யாரும்
உணவுறு மாறு புரியாயோ?
உயர்தமிழ் நாடு விடுதலை வாழ்வு
பெறஉன தாசை பெருகாதோ?

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தனதன தான தனதன தான
தனதன தான தன தானா

கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிடம் மீளும் அழகோனே
கழைநிகர் காதல் உழவினில் ஆன
கதிர்மணி யே,என் இளையோய் நீ
பெரியவ னாகி எளியவர் வாழ்வு
பெருகிடு மாறு புரியாயோ?
பிறர்நலம் நாடி ஒழுகிணை யாக
இருசெவி வீழ மகிழேனோ?
தெரிவன யாவும் உயர்தமி ழாக
வருவது கோரி உழையாயோ?
செறிதமிழ் நாடு திகழ்வது பாரீர்
எனஎனை நீயும் அழையாயோ?
ஒருதமி ழேநம் உயிரென யாரும்
உணவுறு மாறு புரியாயோ?
உயர்தமிழ் நாடு விடுதலை வாழ்வு
பெறஉன தாசை பெருகாதோ?//

ஐயா!
இப்பாடலை சஞ்சய் சுப்பிரமணியன்; நித்தியசிறி போன்ற தமிழில் பாட ஆர்வம் காட்டும் கலைஞர்களுக்கு
தெரியப்படுத்துங்கள். அவர்கள் செய்வார்கள்.

இராம.கி said...

அன்பிற்குரிய யோகன் பாரிஸ்,

தமிழ் உலக மடற்குழு மட்டுறுத்தர் திரு. ஆல்பர்ட்டின் முயற்சியில் அவருடைய நண்பர் திரு. அழகி.விசுவநாதன் பாடி இசையமைத்து, திரு. ஆல்பர்ட் எனக்கு உடனே அனுப்பி வைத்தார். இதை

http://thamizulagamviza.blogspot.com/

என்ற வலைத்தளமுகவரியில் கேட்கமுடியும் என்று ஆல்பர்ட் சொல்லியிருக்கிறார். எனக்கு அவர் அனுப்பிய தனி இசைக்கோப்பை எப்படி என் வலைப்பதிவில் ஏற்றுவது என்று நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொண்டு வலையேற்றுவேன்.

அன்புடன்,
இராம.கி.