Friday, April 11, 2008

திசைகள் - 4

இனித் தெற்கு என்னும் சொல்லுக்கு வருவோம்.

அவாசி, தக்கணம், யாமினியம், தெக்கு,
சிவேதை, தென், இவை தெற்கு எனலாகும்

என்பது பிங்கல நூற்பா 14 ஆகும். மாற்று வடிவங்களை ஒன்று சேர்த்து, அகர வரிசையாய்ப் பார்த்தால், அவாசி, சிவேதை, தக்கணம் (தெக்கு, தெற்கு, தென் என்பவையெல்லாம் இதனோடு சேர்ந்தவையே), யாமினியம் என 4 சொற்களே தெற்கைக் குறிக்க உண்டு.

முதலில் அவாசி இது முற்றிலும் வடசொல் தோற்றம் கொண்டது. ஆனாலும் கூர்ந்து பார்த்தால், உள்ளிருக்கும் தமிழ் அடையாளம் தெரியும்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே

என்று புறநானூற்றில் வரும் 187 ஆவது பாடல் (அவ்வையார் அருமையாய் எழுதிய பாடல்) அமையும். இதுவும், இதற்கு முன்னும் பின்னும் பல பாடல்கள் அற்றுவிக (ஆசீவக)க் கருத்தால் அமைந்த பாடல்கள். சங்க இலக்கியத்தில் அற்றுவிகப் பாடல்கள் பலவும் இருக்கின்றன. அற்றுவிகத்திற்கும் பழந்தமிழ் மரபுக்கும் இடையே தொடர்புகள் இருக்கின்றன. அற்றுவிகம் ஒரு காலத்தில் தமிழரால் பெரிதும் ஓம்பப் பட்ட நெறி. அந்த அற்றுவிகத்தை தமிழகத்தில் இல்லையென்று ஆக்கி எல்லாவற்றையும் செயினத்திற்குள் போட்டு குழப்படி செய்வது இலக்கியம், கல்வெட்டியல் போன்ற ஆய்வுப் புலங்களில் தொலைய வேண்டும். அற்றுவிகப் பாடல்கள்பற்றி தனிப்பதிவு இடுவதாய்ச் சொல்லி யுள்ளேன். எனவே அதுபற்றி நீண்டெழுதாமல், அவல், மிசை என்ற புவிக் கிறுவச் சொற்களைப் பற்றி மட்டுமே சொல்ல முற்படுகிறேன்.

மிசை= மேடு போல, அவல் = பள்ளம். இதே பள்ளப் பொருளில் அவ்வையார் அதியமான் மகன் பொகுட்டெழினியையும் புறம் 102ல் பாடியிருப்பார். அதன் மூன்றாம் வரியில் கூட, "அவல் இழியினும் மிசை ஏறினும்" என்று வரும். மேலும், மலை படு கடாத்தின் 450 ஆம் வரியில் "மெல் அவல் இருந்த ஊர் தொறும்" என்றவாறு அவல் என்பது "விளை நிலம்" எனும் பொருளில் ஆளப் படும். ஒவ்வொரு விளை நிலமும் ஒரு பள்ளம் தானே? பள்ளிகள், பட்டிகள், பதிகளே பள்ளப் பட்ட போது விளைநிலத்தை ஒரே மட்டத்தில் ஆக்கும் போது (பாத்திகளாய் அமைத்து வரப்பு கட்டும் போது) பள்ளம் ஆகாமலா போகும்? இது போக வீரமாமுனிவரின் சதுரகராதி, அவல் எனும் சொல்லைக் குளம் எனும் பொருளிலும் குறிக்கும்.

அவ்வுதல், அல் எனும் வேர்ச்சொல்லின் வழி வந்தது அல்வுதல்> அவ்வுதல் ஆயிற்று, பின் அவலாயிற்று. அவல் = கீழிருத்தல். இதன் நீட்சியாய் அவலம் = கீழிருக்கும் தன்மை, எனவே வலியின்மை என்ற பொருட்பாடு வரும்.

இது போக, அல்லுதல் = இல்லாமற் போதல். "அவன் அல்லன், அவள் அல்லள், அது அல்ல" என்ற கூற்றுக்கள் இல்லாப் பொருளில் வெவ்வேறு திணை, பாலில் வந்தவையாகும். அவம் என்ற சொல்லுக்குக் கீழ்மை, கேடு என்ற பொருளும் உண்டு. காட்டு: அவக்குணம் = கீழ்மைக் குணம் "அவகுண விரகனை" என்று வடசொல்போலவே ஒரு திருப்புகழ்ப் பாட்டிற்பயிலும். அங்கு ”க்” எனும் புணர்ச்சி இடைநிலை ஊடே பயிலாததால் வடசொல்லாய்த் தோற்றம் அளிக்கிறது. அவக்காலம் = கீழ்மைக் காலம், எனவே துன்பக் காலம், அவக்குறி = கேடு காட்டுங் குறி; அவக்கேடு = பெருங்கேடு; அவ நம்பிக்கை = கெட்ட நம்பிக்கை. அவமதித்தல் = கேடாக மதித்தல்; அவமானம் = மதிப்புக் கேடு; இது போலப் பல கூட்டுச் சொற்கள் உண்டு. (அவம் என்ற தமிழ்ச்சொல் பல கூட்டுச்சொற்களில் முன்னொட்டாய்ப் பயிலுகிறது. அவையெலாம் வடசொல்லோ என்று நானும் மறுகிய காலம் உண்டு!)

குட்டை தட்டையாகும் என்பதால், அவலின் நீட்சியாய் அவரைக்காய்ப் பெயர் எழும். இவர் (climber) கொடியிலும், படர் (creeper) கொடியிலும், குத்துச் செடியிலும் (shrub) தட்டையாக ஆன காய், அவரைக்காய் (a type of beans) ஆகும்.

இது போக இன்னொரு அவல் உண்டு. அது அரிசியை இடித்து வரும் அவல். அல்முதல்>அம்முதல் வினை அமுக்கும் செயலைக் குறிக்கும். அம்மும் கருவி அம்மி. அமுக்குதல் எல்லோருக்கும் தெரியும். (அமுக்குதல் நீட்சியாய் அமற்றுதல் = நிறுத்துதல் என்ற வினையும் எழும்.) அம்முதல், ஒரு வகை இடித்தலே. அம்மலின் சுருக்கம் அமல். மகர, வகரப் போலியில் அமலின் திரிவு அவல். சாப்பாட்டு அவலின் சொற்பிறப்பு இப்படித்தான். "பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை" என்பது அகநானூறு 141 ஆம் பாட்டின் 18 ஆம் வரி. அவலிடிக்கும் உலக்கைபற்றிச் சொல்கிறது. உலக்கையால் குற்றுவதை அவைத்தல் என்பார். அவல் சாப்பிடாத தென்பாண்டிக்காரர் உண்டோ ? (இன்றைக்கு அவல் இடிப்பது பற்றியே நம் மக்கள் மறந்துவிட்டனர்.)

மொத்தத்தில் அவல் = கீழாக இருத்தல், தாழ்ந்து இருத்தல். அவற்சி = தாழ்ந்த நிலை. அவற்சியின் திரிவில் அவற்சி>அவசி>அவாசி என்றாவது தமிழில் இருந்து வடபுலம் போகும் இருபிறப்பிச் சொல்லாகும். அவாசி, கிழக்கை வடமொழியில் குறித்திருக்கிறது. நம்மூரில் அவல், பள்ளத்தையே குறித்திருக்கிறது.

அடுத்தசொல் சிவேதை. இதன் முந்தைய வடசொல் வடிவம் ஸ்வேதை ஆகும். இன்னும் ஆழம்போனால், இதற்கும் முன்வடிவை ஸௌதையிற் காணலாம். பொதுவாக உகரத்தில் அல்லது ஒகரத்தில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள் வடக்கே இணையும் போது, ஔகார உருவத்திலேயே நிலைக்கின்றன. (தமிழில் ஔகாரச் சொற்கள் மிகமிகக் குறைவு. ஔகாரத் தோற்றம் காட்டும் மிகப்பலவும் வடசொற்களாகவே உள்ளன! அதைப்பற்றியே ஒரு பதிவு போடவேண்டும்.) காட்டாக, நம் குரவம் ( = தலைமைப் பண்பு. குரு>குரவம்; சிவ சமயக் குரவர் நால்வர்), அஙகே கௌரவமாகும். சொகம்>சுகம்> சௌக்யமாகும்; இதுபோல நாம் புத்தம் என்பதை, அவர் பௌத்தம் என்பார். இது புரியாமல், இக்கால இடதுசாரித் தமிழரில் சிலர் அதைப் பவுத்தம் என்றே பயிலுவார். [என்ன செய்வது, நிலப்பிரபு என்றே சொல்லிப் பழகியவரைப் பண்ணையார் என்றுசொல்லச் சொன்னால் எப்படி இவர் அறிவுய்தியாகக் (அய்யய்யோ! அறிவுஜீவியாகக்) காட்சியளிப்பது? :-)]

இந்த வடக்கு/தெற்கு மக்களின் பலுக்கல் வேறுபாட்டை புரிந்து கொண்டால், (ஸௌதை எனும் வடசொல்லுக்கு இணையான) சூதை என்ற தமிழ்ச் சொல்லையும், அதனுள் புதைந்துகிடக்கும் சூல்தல் வினையும் சட்டென்று இனங்காட்டும். சூல்தல் = தோண்டுதல்.

சுல்>சூல் என்ற வேரின் வழி சூல்தல் வினை பிறக்கும்; சூலும் வினையைச் செய்யும் கருவி சூலம். இதைக் கேட்டவுடன், பலருக்கும் இக்காலத்து இரும்புச் சூலமே நினைவிற்கு வரக்கூடும். இன்றைக்குப் பார்ப்பது பழைய கற்காலச் சூலத்தின் பண்பட்ட திருத்தம். அதற்கு மாறாக, பெருங்கற்கால நிலைக்குப் போய், கற்சூலத்தை நினைவு கொள்ளுங்கள்; ஒரு முக்கோணத்தின் இரண்டு சாய்வுப் பக்கங்களிலும் இரண்டு சிறிய முக்கோணங்களைப் பொருத்தி, 3 கூர் முனைகள் கொண்ட கற்கருவியை ஓர்ந்து பாருங்கள். இக்கல்லோடு ஒரு தண்டைப் பொருத்தினால் கிடைப்பது கல்லாலான சூலக்கருவி. இங்கே சொன்ன இருபக்க முக்கோணங்கள் இல்லாது ஒரே ஒரு கூர்முனை மட்டுமே இருந்தால் அது வேல். வேலும் சூலமும் தமிழர் வாழ்க்கையில் புகுந்தது இப்படியே. (தமிழர் வாழ்க்கையில் மட்டுமல்ல; உலகெங்கணும் பழங்குடி மக்கள் சூலம், வேலைப் பழகியுள்ளார். பின் எப்படி விலங்காண்டி நிலையில் பழங்குடி மக்கள் வேட்டையாடுவது? தம்மைக் காப்பாற்றிக் கொள்ளுவது?)

சென்னைக்கு அருகில் பூண்டி நீர்த்தேக்கத்தை ஒட்டி அத்திரப் பாக்கம் எனும் இடத்தில் இன்றைக்கு 20000, 25000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய சூலங்களும், வேல்களும் (தண்டுகள் இல்லாமல் தான்) கிடைத்துள்ளன. தென்னிந்தியாவிற் கிடைத்த பழ எச்சங்களில் மிக முந்தியதாய் இவற்றைக் கருதுகிறார். இன்றைக்கும் பூண்டிபோக வாய்ப்புக்கிடைத்தால், அங்குள்ள தொல்பொருள் காட்சி சாலை பார்த்து வாருங்கள். 70000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈனியல் சான்று பிரான்மலைக் கள்ளரான விருமாண்டி மூலம் உறுதிபெற்றது. அதேபோல, கற்சூலங்களும், கல்வேல்களும் நம் பழங்குடிகள் தெற்கே நெடுநாள் இருந்ததை உறுதி செய்யும்,.

சூல்ந்தது பள்ளமாகும். பள்ளமான இடம் சூத்தையாகும். மாம்பழத்தின் உள்ளே பள்ளமிருந்து தோல்மூடிக் கிடந்தால் சூத்தைப் பழம் என்கிறோம் அல்லவா? புட்டத்தின் (buttocks) ஓரிடத்தில் துளையுள்ளதால் அதைச் சூத்து என்கிறோம் அல்லவா? உள்ளீடில்லாது தட்டையாய்க் கிடப்பதைச் சூத்தை> சொத்தை என்கிறோம் அல்லவா? சொத்தை ஆள் சோதாள் ஆகிறான்; இன்றைய வழக்கில் ள் என்னும் ஈறுபோய், அவனைச் சோதா என்றே சொல்கிறோம். முடி இல்லாது வெறும் தலையாய், பள்ளம் தெரிவது சொட்டைத் தலை ஆகிறதல்லவா? "நொள்ளையும் சொள்ளையும்" என்ற பேச்சுவழக்கில் நொள்ளை என்பது நொகையான (negative ஆன) பேச்சு. சொள்ளை என்பது குறைப்பேச்சு. (சொத்தை, சொதுகையில் சொதுகரம்> சதுகரம்>சதுரமும் பிறக்கும். சதுரம் = குறைந்த கை = நாலு.)

இது போக, வறியவனாக, ஒன்றும் இல்லாதவனாக, உடலுழைப்பை மட்டுமே தந்து உணவுபெறுபவனாக இருப்பவன் சூத்தன்>சூதன் ஆகிறான். [வட மொழி ரகரம் நுழைந்து சூத்ரனாகும். மீண்டுமிதைச் சூத்திரன் ஆக்குவோம்.]

[சூதன்பற்றிப் பேசுமிடத்தில் விலங்காண்டிக் குமுகம் பற்றிய  இடைவிலகல் சொல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொரு படைக்கருவியைக் கைக்கொண்டிருந்த விலங்காண்டி நிலையினர், நாளாவட்டத்தில் குமுகத்தில் 4 வகையாய்ப் பின் நிலைத்தனர். விலங்காண்டி நிலையில் தலைவன், பெருமான் = பெரியவன் எனப்பட்டான்; கூட்டத்தை வழிநடத்தினான். {பெருமான்> ப்ரஹ்மண்> ப்ரம்மன்>ப்ரம்மண். பெருவுடையார் ப்ரஹ்தீசர் ஆவதில்லையா? அதைப் போல், இத்திரிவைப் புரிந்து கொள்ளவேண்டும்.]

அவனையும், மற்றவரையும். வாள், கத்தி ஆகிய படைக்கருவி கொண்டு காப்பாற்றியவன் கத்தியன்> க்ஷத்தியன்> க்ஷத்ரியன். [கணம்> க்ஷணம் திரிவை எண்ணிப்பார்க்கலாம்.] வில்கொண்டு புது இடங்களுக்குப் போய் விலங்கு, நில வளங்களைத் தெரிந்துவந்து பண்டப் பரிமாற்றைச் செய்த வில்லயன்> விற்றயன்> வித்தயன்> விச்சயன்> விசையன்> வைஸ்யன்; (வில்+தல் = விற்றல் என்று புணர்ச்சி விதியில் மாறும் இல்லையா? விற்றல் வித்தலென்று பேச்சுவழக்கில் திரியும். வித்தயன் விச்சயன் ஆவது அடுத்த நிலை.) கூட்டங் கூட்டமாய்ப் போய், விலங்குகளைக் கொன்று குடியினருக்கு ஊனளிக்கச் சூலங்கொண்டு காலாட்படையாய்த் திரிந்தவன் சூல்த்தன்>  சூத்தன்> ஸூத்ரன்.

பெருமார், கத்தியர், விசையர், சூதரெனத் தொழில்வழி வகைப்பட்ட விலங்காண்டிக் கூட்டம், இன்னொரு விலங்காண்டிக் கூட்டத்தோடு இடம், புலம், வளம் காப்பாற்றுவதற்காகப் போரிட வேண்டி வந்தது. நாளடைவில் முல்லைநில வாழ்க்கையிலும் இப்பிரிவுகள் விரிந்து கொண்டே போயின. சாதிப் பாகுபாடுகள் என்பன இதன் வளர்ச்சியே.  [ இன்றது பிறப்போடு சேர்ந்துகொண்டது தவறு. அது மாறவேண்டும் என்பது குமுக எதிர்பார்ப்பு. வருணம் பற்றி இங்கே சொல்லியதை முற்றுமுழுதான முடிவாகக் கொள்ள வேண்டாம். இது ஒரு பார்வை, அவ்வளவு தான். வருணத் தொடக்கம், விலங்காண்டிக் குமுகாயத்தில் முளையாகி, பின் முல்லை நாகரிகத்தில் மலர்ந்தது என்றே தோன்றுகிறது. அதன் உச்ச கட்டம் மருதமாகும்.]

இனி நில அமைப்புக்களுக்கு மீண்டும் வருவோம். இந்தியத் துணைக் கண்டத்தில் சொத்தையான, தட்டையான பகுதியாய், மலை, நில அமைப்பு மிகக் குறைந்து, சற்றே சாய்ந்த சமவெளியாய், செம்புலமாய் (= சமவெளி; செம்புலப் பெயல்நீரைச் செம்மண்நீரெனச் சொல்லிக் குறுந்தொகையின் பொருளை அறியாமற் கிடப்பது இன்னொரு உரைகாரர் சோகம்!), இருக்கும் பள்ளத் திசை சூதத் திசை. அது வடமொழியில் ஸௌத திசை என்று ஆகியது; மேலை மொழிகளிலும் South என்பது பலவாறாகப் பலுக்கப் படுகிறது.

அடுத்தது தக்கணம். இதற்குப் பெருவிளக்கம் வேண்டாம். தள்கு>தக்கு> தக்கணம் என்ற வளர்ச்சி எளிதில் புரியக் கூடியதே / தல்>தள்ளில் இருந்து பிறந்த உறுப்புச்சொல் ’தாள்’. "உடல் உறுப்புச் சொற்கள்" என்ற தலைப்பில் முனைவர் கு. அரசேந்திரன், 2006ல் ஒரு பொத்தகம் வெளியிட்டிருக்கிறார். (காவிரிப் பதிப்பகம், 6, பெருஞ்சித்திரனார் தெரு, சிட்லப்பாக்கம், சென்னை 64). இதில் கால், அடி, தாள், கழல், பாதம் ஆகியவற்றின் சொற்பொருள் வரலாறுகளைச் சொல்லுவார். தாளின் தொடர்பான நிலை தாள்வு>தாழ்வு.

தள்கு என்னும் சொல், தொக்கிய நிலையில், தக்கு என்று ஆகும். பின் அணம் எனும் சொல்லாக்க ஈறு சேர்ந்து தக்கணம் என்று ஆகும். பிறகு கட்டி என்னும் சொல் கெட்டி யாவது போல, பரு>பெரு ஆனது போல, தக்கு என்பது தெக்கு என்று தமிழர் பலுக்கலில் ஆகி, மேலும் இலக்கண மீத்திருத்தம் பெற்றுத் தெற்கு என்று நிலைபெற்றுப் போனது. தெற்கு என்பதைத் தெல்+கு என்று பின்னால் புரிந்து (தல்>தெல்), பின் தெல்+ந்+திசை என்பது தென்திசை ஆனது. தென் என்பது தெல்லின் இன்னோர் உருவமாய்க் கொள்ளப்பட்டது.

தென்னை என்ற சொல் இதே கருத்தில் தோன்றியதல்ல. அது ஆசியத் தென்கிழக்கில் இருந்து தமிழ் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மரம் என்று புதலியலார் (botanists) கூறுவார். நம்மூரைச் சேந்த பனை போலவே இதிலும் கள் இறக்க முடியும் என்றறிந்த தமிழன், இதன் சுவை இன்னும் அதிகம் என்பதால் கள் மரம் என்ற பெயரையே இதற்கு இட்டிருக்கிறான். (பனங் கள் சற்று கடுக்கும்; தென்னங் கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெலாம் வெறியக் காடி - acetic acid பண்ணும் வேலை.) தெல் = கள் என்பதால், தெல்ங்கு மரம் தெங்குமரமானது; தெல்நை, தென்னையானது. தெங்கங்காய் நாளடைவில் தேங்காய் ஆகச் சுருங்கிற்று. தெல் என்பதே இச் சொற்களுக்கு அடிப்படை ஆகும். தெல்லின் நீட்சியாய், அதிலுள்ள வெறியத்தைக் (ethanol) போக்கும் வகையில் அரை நொதிப்பிலுள்ள நீர்மத்தில் சுண்ணாம்பை இட்டு அதன் நீர்ம அயனிச் செறிவை (hydrogen ion concentration) மாற்றி அமில அரங்கில் (acidic range) இருந்து, களரி அரங்கிற்கு (alkali range) கொணர்ந்து உருவான பதநீரை, தென்பாண்டிநாட்டிற் தெளிவென்று சொல்லியும் விற்பார். இதைத் தயக்கம் இல்லாமல், நாட்டுப்புற ஆண்கள், பெண்கள் எல்லோருமே குடிப்பார்; இதைத் தவறென யாரும் அங்குசொல்வதில்லை. (பதநீரை பனையிலும் இறக்கலாம், தென்னையிலும் இறக்கலாம்.) பதநீரில் வெறியச் செறிவு 2-4% இருக்கும். பொதுவாக கள்ளில் 7% க்கு மேல் இருக்கும்.

ஞாவகம் வைத்துக் கொள்ளுங்கள் தென் எனும் திசை குறிக்கும் சொல்லும், தென் எனும் மரங்குறிக்கும் சொல்லும் வெவ்வேறு சொற்பிறப்பில் எழுந்தவை. ”கள் மரம் என்ற பொருள் குறிப்பதாலேயே, தென்னை என்ற பெயராலேயே, அம்மரம் நம்மிடம் இயல்பாய் எழுந்ததல்ல; இறக்குமதி ஆன மரம்” என்ற கருத்து சட்டென்று புரிந்துபோகும். பனை நம்மூருடையது; தென்னை வெளியிருந்து நம் நாட்டில் இறங்கியது.

அடுத்தது யாமனியம். அதாவது யாமன் திசை அல்லது யமன் திசை.

யா என்ற ஓரெழுத்தொரு மொழி பற்றி ஒரு பொத்தகமே போட்டிருக்கிறார் தஞ்சைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சொல்லாய்வறிஞர் ப.அருளி. அதில் கருமைக் கருத்து மூலவேராகிய யாவில் இருந்து யா>யாம்> யாமன்>யமன் வளர்ச்சியில், "கரிய இருள் நேரத்தில், யாமப் பொழுதில், உயிரைக் கவர்ந்து செல்பவன் என்றபொருளில் ’யாமன்’ ஏற்பட்டது" என்பார். யாமன் = இருளன் என்ற புரிதல் தமிழரிடையே உண்டு. யாமன் திசை என்பது இருள்நிறைந்த திசை. மனையடி சாற்றத்தின் படி, தென் திசையை யமன் திசை என்றும் தமிழர் கருதிக் கொண்டார். இதைப் புரிந்துகொள்ள, புவியின் தன்னுருட்டையும், வலயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னால் ”காலங்கள்” தொடரில் புவியின் தன்னுருட்டையும், புவியின் வலயம் பற்றியும் நான் பேசியிருந்தேன். புவியின் தன்னுருட்டுக் காரணமாய், ஒவ்வொரு நாளும் சூரியன் கிழக்கே எழுவது போலவும், பின் மேற்கே மறைவது போலவும் தோற்றுகிறது. அதேபோல, புவியின் நடுக் கோட்டுத் தளமும் (equator), புவியின் வலயத் தளமும் (plane of revolution) 23.5 பாகையில் வெட்டிக் கொள்வதால், ஒவ்வொரு வலயச் சுற்றிலும் (=ஒவ்வோர் ஆண்டிலும்), சூரியன் தெற்கே சுறவ (=மகர) இலகை(=ரேகை)க்குப் போய், மீண்டும் வடக்கே கடக இலகைக்கு வருவதாய்த் தோற்றமளிக்கும். இதைத் தக்கண அயனம், உத்தர அயனமென்று சோதியர் சொல்வார். இன்னொரு வகையில், சூரியன் பனிமுடங்கல் (winter solstice) வரை தெற்கே போவதாயும், பின் கோடை முடங்கலுக்கு (summer solstice) வடக்கே வருவதாயும் காட்சி அளிக்கும்.

இப்படிச் சூரியன் தெற்கே போவதாகக் காட்சியளிக்கும் போது பகற்பொழுது சுருங்கி, இரவுப் பொழுது அதிகமாகும். தெற்கு என்பதை இருட்திசையாகத் தமிழர் கொண்டது, இக்காரணம் பற்றியே. இதே காரணமாய், மனையடி சாற்றத்தில் (நான் மனையடி சாற்றத்தைப் பரிந்துரைக்கிறேன் என்று யாரும் எண்ணாதீர். இச்சாற்றம் தென்னாட்டவர் பங்களிப்பே. அவர் தொன்மங்கள் இதில் அடங்கியுள்ளன. சாற்றத்தையும், அதிலுள்ள கருதுகோள்களையும் விவரித்தால் நான் சொல்வது புரியும்.) ஒரு வீட்டின் வாசல் கிழக்கேயோ, அல்லது வடக்கேயோ பார்த்து இருக்க வேண்டும் என்பார். ஏனென்றால், தன்னுருட்டின்படி கிழக்கு, ஒளிவரும் திசை. மேற்கு இருள் திசை. அதே போல, புவி வலய இயக்கத்தின் படி வடக்கு ஒளிவரும் திசை, தெற்கு இருள் திசை.

பெரும்பாலான முதியவரின் இயல் இறப்பு இருளில் நடப்பதாகத் தமிழரின்  பட்டறிவு சொல்லியதால், தம் முன்னோர் தென்திசையை (யாமன் திசையை) அடைவதாகவே புரிந்து கொண்டார். அதனால் மறைந்த முன்னோரைத் தென்புலத்தார் (=தென்திசையார் = மறைந்தவர்) என்று சொன்னார்.

தென் திசை யாமனத் திசை என்று ஆனது இப்படித்தான். யாமனம் என்பது இருபிறப்பி முறையில் யாமன்யம்>யாமினியம் என்று திரியும். இன்னும் சுருக்கமாய் யாமத் திசை என்பது, யாம்யத் திசை என்றும் திரியும். இதை நல்ல தமிழில் யாமத் திசை, யாமனத் திசை என்றே சொல்லிப் பயிலலாம்.

அடுத்த பகுதியில் மேற்கையும், வடக்கையும் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Unknown said...

அன்புள்ள இராம. கி அவர்களே,
யானைக்கும் அடி சறுக்கும் என்பது எவ்வளவு பொருத்தமான பழம் முது சொல்.
தமிழ் மக்கள் வழக்கில் வீடு தென் திசை பார்த்து இருப்பதே விருப்பமாகவும் முன்பும் இன்றும் கருதப்படுகிறது. மாற்றாக, வட திசை பார்த்த வீடு விரும்பப்படுதில்லை.
அடிப்படைக் காரணம் காற்றின் தேவை கோடையில் தென்றல் குளிரில் தேவையற்ற வாடைக் காற்று.
பலரும் கடைசிப் பகுதியைப்படித்து தடுமாறும் முன் பதிவை மாற்றிட வேண்டி விரும்பும்
ராதாகிருஷ்ணன்
ஏப்ரல் 19, 2008

இராம.கி said...

அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன்,

உடன் மறுமொழிக்காததற்கு மன்னியுங்கள்.

நான் மனையடி சாற்றத்திற்குப் பரிந்துகொண்டு வரவில்லை. அதே பொழுது அதைப் பயிலுபவர்களிடம் அறிந்தே அந்தச் செய்தியைச் சொன்னேன். அவர்கள் கிழக்குமுகமும், வடக்கு முகமும் தான் வாயிலுக்குச் சிறந்தது என்பார்கள். அது அதிக நேரம் வெளிச்சம் கிடைப்பதை வைத்தே சொல்லப் படுகிறது என்றும் அறிந்தேன். நீங்கள் காற்று பற்றிச் சொல்லுவதும் நான் அறிந்ததே. அது மனையடிச் சாற்றக்காரர்களின் பரிந்துரைக்கு மாறியிருக்கிறது. இதில் எது சரி என்பது என்னுடைய புலனறிவுக்கு மீறியது. காற்று பெரிதா? ஒளி பெரிதா? - இது தனியாரின் உகப்பல்லவா?

புரிந்து கொள்ளுவீர்கள் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.