Thursday, April 03, 2008

திசைகள் - 2

திசைகளைப் பற்றிய பொதுவான சொற்களாய்

மாதிரம், திகை,திசை, வம்பல், விசும்பே,
ஆசை, புலமே, உலகு,கோ, காட்டை,
அரிதம், அம்பரம், ககுபம், அனைத்தும் திக்கே

என்று 14 சொற்களை, பிங்கலநிகண்டு 11 ஆம் நூற்பாவில் பதிவுசெய்யும். எழுத்து வரிசையில் இவற்றை "அம்பரம், அரிதம், ஆசை, உலகு, ககுபம், காட்டை, கோ, திக்கு, திகை, திசை, புலம், மாதிரம், வம்பல், விசும்பு" என்று முறைப்படுத்தலாம். [இவை தவிர இன்னும் சில சொற்களும் இருக்கின்றன; அவை சாலை, வழி குறித்து அமைபவையாகும். அவற்றையும் திசை என்ற பொருளில் தான், பல பொழுதுகளில் நாம் பேச்சுவழக்கிற் கையாளுகிறோம். காட்டாக நேரி, நெறி என்ற சொற்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவற்றைக் கடைசியில் பார்ப்போம்.]

முதலில் வருவது அம்பரம். உம்புதல் என்பது மேலே போதல். , உம்பு/உம்பர் என்பவை மேலென்று பொருள்கொள்ளும். உம்பரம் அம்பரமாய்த் திரிந்து, மேலுள்ள இடத்தைக் குறிக்கும். up, upper என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அதையொட்டிய மேலைச் சொற்கள் எல்லாம் இந்த உம்பு, உம்பரை இணை கொண்டே அமையும். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவில் இதுவும் ஒன்று. (வறட்டுப் போக்கில் இரு மொழிக் குடும்ப உறவை மறுப்பவரும் இருக்கிறார்.) உகர/அகரத் திரிவு மேலை மொழிகளிலும் இச்சொல் குறித்து உள்ளது.

அம்பரர்>அம்மரர்>அமரர் என்ற திரிவில், அமரர் எனுஞ் சொல் மேலுலக மீமாந்தரைக் குறிக்கும். உம்பரத் திசை>அம்பரத் திசை என்பது, மேல் நோக்கிய திசை. இங்கே அம்பரம் என்பது விதப்புப் பொருளைத் தவிர்த்து, பொதுமைப் பொருள் சுட்டுகிறது. [தில்லைச் சிதம்பரத்தை சித்+அம்பரம் என்று பிரித்துச் சில பண்டிதர் வானம், ஆகாயம் என்றெலாம் சொற்சிலம்பம் விளையாடுவார். அது ஓர் ஏமாற்றுப் பாடம். உண்மையில் அக்கோயில் சிறு+அம்பலம்= சிற்றம்பலமாய் முதலிலிருந்தது. பின், சிற்றம்பலம்> சித்தம்பரம்>சிதம்பரம் என்று வடபுலத்தார் வாயில் திரிந்து, இன்று நம்மவரே சிதம்பரமென்று சொல்லி அமைகிறோம். நடவரசத் திருமேனிக்கும் முன்னால் அங்கே ஒரு மூலத்தானம் உண்டு. பெரும்பற்றப் புலியூர் என்பது தில்லை ஊரின் முந்நாட் பெயர்.]

அடுத்தது அரிதம். இதை harit = point of compass என்று சென்னைப் பல்கலைக் கழகக் கலைக்களஞ்சியம் (lexicon) குறிக்கும். ஆனால் வடமொழிச் சொற் பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சில் இதற்குச் சரியான விளக்கமும், ஊற்றுகையும் (source) கிடைக்கவில்லை. காந்த ஊசி என்ற பொருளை எங்கிருந்து சொன்னார் என்று விளங்கவில்லை; ஒருவேளை மூல நூல்களைப் பார்த்தாற் கிடைக்குமோ, என்னவோ? தமிழில், அரிதல் என்பது வெட்டுதல், நறுக்குதல் என்ற வினைகளைக் குறிக்கும். அரி என்பது ஒரு பயன்பாட்டில் அரிந்தெடுத்த, மிகத் தட்டையான, திண்ணம் (thickness) குறைந்த, ஒரு தகட்டுக் கூர்ப்பொருளைக் குறிக்கும். இதுவே கொஞ்சம் பொருள்நீண்டு அம்பு என்னும் பொருளையும் குறிக்கும். கூர்ச்சரத்தில் (Gujarat) தோலவீராவில் அம்புக்குறி போட்ட பெருங் கற்பலகை ஒன்று சிந்துவெளி நாகரிக அடையாளமாய்க் கிடைத்தது. இன்றும்கூட ஒரு சதுக்கத்தில் அம்புக் குறிப் பலகைகள் வைத்து, அங்கிருந்து விலகும் வெவ்வேறு மறுகுகளைக் குறிக்கிறோம் அல்லவா? ஒவ்வோர் மறுகும் [மறுகு>மறுகம்>மார்க்கம் எனும் வடமொழிச்சொல்.] ஒவ்வோர் திசையைத் தானே குறிக்கிறது? ஆக, அம்பு காட்டும் திசை அரிதமானது போலும். [அரியின் தொடர்புள்ள இன்னொரு சொல் ஆரம்; சக்கரத்தில் வரும் ஆரம் - radius. இதை விளக்கப் போனால் இன்னும் விரியும், எனவே விடுக்கிறேன்.]

அடுத்தது ஆசை. அகலமான மரம் ஆலமரமெனத் தமிழிலானது போல், அகுசை>அகசை என்பது இங்கு ஆசையாயிற்று. உள்ளே பொதிந்திருக்கும் வினைச்சொல் அல்குதலாகும். இது, அல்குதல்>அஃகுதல் = சுருங்குதல், குவிதல், கூராதல் என்று பொருள்கொள்ளும். [பொதுவாக ஒவ்வொரு பெயர்ச் சொல்லிற்குள்ளும் வினைச்சொல்லைத் தேடுவது நல்ல பழக்கம். அது நம் மொழிநடையைச் சிறக்க வைக்கும். பல்வேறு சொற்களுக்கு இடையே உள்ள பொருந்துமை அல்லது பொருந்தாமையும் புலப்படும்; விதப்புமை (specificity) என்பதும் விளங்கும்; நம்முடைய சொற்றொகுதியும் நாளடைவிற் கூடும்.]

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

எனும் 175 ஆம் குறளில் ’அஃகுதல்’ கூர்மைப் பொருளைக் குறிக்கிறது. அஃகை> அஃசை> அகுசை> அகசை> ஆசை என்பது தமிழில் ஏற்படக்கூடிய இயல்பான திரிவே. கூர்ப்பொருள் இங்கே திசை குறித்தது. இருந்தாலும் இற்றைத்தமிழில், ஆசையின் வேறு பொருட்பாடுகளைக் கருதி, அகுசை என்றே திசைப்பொருளைச் சொல்லிப் பயிலலாம்.

மூன்றாம் சொல் உலகு. இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு பாதையில் நாம் நடந்து போய்க்கொண்டே இருக்கிறோம். நம் கண்களுக்கு நேர்வருவது ஒரு திசை. சற்று திரும்பி, வேறு பக்கம் பார்த்தால், ”இன்னொரு திசையை நோக்குகிறோம்” என்கிறோம் அல்லவா? இப்படி ஒவ்வோர் திரும்பலும் ஒவவோர் திசையை நோக்குவதே. [திரும்பல் என்பதே வட்டப் பொருளின் வளர்ச்சி தான். ஒவ்வோர் பாகையும், அதன் நுணுத்தமும் (minute), ஒரு திசை தானே?] மேலை மொழிகளில் to turn இக்கு இணையான சொற்கள் எல்லாம் திரும்பலைக் குறிக்கும். மேலைமொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் உள்ள உறவு turn எனுஞ் சொல்லிலும் தென்படும். திரும்பலின் இன்னொரு தோற்றம் திரிதல்; மலையாளத்தில் "திரிஞ்ஞு வரு" என்பார். இப்படித் திரிந்து வரும் செயல் உலவுதல் (to go around) என்றும் தமிழில் சொல்லப் படும். உலத்தலும் வட்டமாய் வருவது தான். உலவுதல் எனும் வினை, உலா என்ற பெயர்ச்சொல்லையும் உருவாக்கும். கோயில்களுக்கு வெளியே உலவிச் சுற்றிவரும் திருமேனியை உலாத் திருமேனி (=உற்சவ மூர்த்தி; உலாத் திருமேனி போய், உற்சவ மூர்த்தியே இப்பொழுது ஊரெங்கும் புழங்குகிறது.) என்பார்கள். உலவெனும் பெயர்ச்சொல் உலகென்றும் திரியும். உலகெனும் சொல் திசையைக் குறித்தது இத் திரும்பலால் தான்.

அடுத்தது ககுபம் என்னும் இருபிறப்பிச் சொல். தமிழில் கழு என்பது கழி. [கழுவேற்றப் பட்டான் என்பது he was spiked என்ற பொருள்படும். நண்ணிலக் கடல் (நள் + நிலம் = நண்ணிலம் = mediteranian) நாடுகளில் வேண்டாதவரைக் குறுக்கையில் (cross) அறைவது ஒருகாலத்தில் பரவலாய் இருந்தது போல், நாவலந்தீவில் கழுவேற்றும் தண்டனை் பரவலாய் இருந்தது.] பல வட்டாரங்களில், பெரிய பாதைகள் பிரியும் இடத்தில், குச்சி, கழிகளை நாட்டுப்புறங்களில் நட்டு வைத்திருப்பார்; பக்கத்தில் ஒரு சுமைதாங்கிக் கல்லும் இருக்கும்.

கழுவிற் பெரியது கழுவம். ழகரமும், ககரமும் ஒன்றிற்கொன்று போலியாய் வடபால் திரியும். முழுத்தம் (=3 3/4 நாழிகை =1 1/2 மணி) என்ற கால அளவுச் சொல், முழுத்தம்> முகுத்தம்> முகூர்த்தம் என்று வடமொழியிற் திரிவது போல, கழுவம் என்ற தமிழ்ச்சொல்லும் கழுவம்> கழுபம்> ககுபம் எனத் திரிந்து நமக்கு வடமொழித் தோற்றம் காட்டுகிறது. (சிவகங்கை மாவட்டப் பெண்கள் மட்டும் இல்லையெனில் முழுத்தம் என்றசொல் தமிழில்  மறைந்து இருக்கும் எனலாம்; நாமும் முகூர்த்தத்தின் தலைகீழ் கதையை படித்துக் கொண்டு இருப்போம்.) (ஒரு திருமணத்தில் நடக்கும் முகனச் சடங்குகள் எல்லாம் ஒரு முழுத்தத்துள் முடியவேண்டும் என்பது நம் முன்னோர் மரபு. இதை அறியாத பலர் 3/4 மணி நேரம், 1 மணி நேரம் என்றெலாம் குறிப்பது அறியாமற் செய்கின்ற செயலே.)

அடுத்தது காட்டை என்னும் சொல். நம் நாட்டுப்புறங்களில், முன் சொன்னது போன்ற கழி, அதாவது திசை காட்டும் குச்சி, காட்டை எனப்படும். கோயில், அரண்மனை, நகரம் ஆகியவற்றைச் சமைப்போர், அவ்விடத்தில் சரியான கிழக்குத் திசையை அறிவதற்காகவும், கதிரவன் செவ்விய உச்சிக்கு (right zenith) வரும்நாளை அளப்பதற்கும், நட்டுவைக்கும் குச்சிக்குக் காட்டை - காட்டுத் துரும்பு - என்றுபெயர். வடமொழியில் kaas'ta என்பார். (தமிழக அரசு வெளியிட்டுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகரமுதலியில் இதற்கான விளக்கமுள்ளது.) பேச்சு வழக்கில் கைகாட்டி மரம் என்கிறோம் அல்லவா? அந்தக் காட்டியும், இந்தக் காட்டையும் ஒன்றுதான். இது எல்லை என்ற பொருளும் கொள்ளும்; தவிர ஒரு பழைய கால அளவும் காட்டை எனப்படும். அந்த அளவைக் கீழே கொடுத்துள்ளேன். (இதுவும் முன்சொன்ன செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் எடுத்தது.)

1 கணம் = இமையளவு
4 கணம் = 1 உயிர்
4 உயிர் = 1 நொடி = மாத்திரை
12 நொடி = 1 காட்டை
2 காட்டை = 1 வினாழி
60 வினாழி = 1 நாழிகை (24 நுணுத்தம் = 24 minutes)
3 3/4 நாழிகை = 1 முழுத்தம்
2 முழுத்தம் = 1 யாமம்
4 யாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்

மேலுள்ள கால அளவுத் தொகுதியில் ’முழுத்தம்’ இருப்பதையும் காணுங்கள்.

அடுத்த சொல் கோ. இது cardinal points, direction என்ற பொருட்பாடுகளைக் குறிப்பதாக அகரமுதலிகள் சொல்லும். குவ்வுதல் என்பது குவியும் வினையைக் குறிக்கும் சொல். குவ்வியது, குவளியது ஆகிப் பின் குவடு>கோடு என்ற பெயர்ச்சொல் வழி, குன்றைக் குறிக்கும். குவியல் (heap), குவியம் (focus) என்ற பெயர்ச்சொற்கள் நம் எல்லோருக்கும் தெரியும். புவ்வியது (=மலர்ந்தது) புவ்வு>பூவு ஆகிப் பின் பூ ஆனது. (இன்னமும் தென்பாண்டி மக்கள் பூவு என்றே சொல்வர்; பூ என்று நிறுத்த அவருக்குத் தெரியாது; அவர் பலுக்குவதைக் கேட்காவிட்டால் பூவின் சொற்பிறப்பு யாருக்கு விளங்கியிருக்கும்?) இதுபோல குவ்வு>கோவு>கோ என்று ஆகும். மீண்டும் கூர்ப்பொருள் உள் னிப்பதை உணரலாம். ஓரிடத்தில் நம் பார்வை குவ்வி, அதை நோக்கிப் பார்க்கும் போது அத்திசை கோ என்ற சொல்லால் புரிந்து கொள்ளப் படுகிறது.

இனி திக்கு, திகை, திசை என்று மூன்று சொற்களை ஒரு தொகுதியாகப் பார்க்கலாம். திரும்புதல் என்று முன்பார்த்த வினையின் அடிவேர்ச்சொல் துல்>தில் என்பதே. தில்> திர்> திரு> திருக்கு, தில்> திர்> திரு> திரும்பு, தில்> திர்> திரு> திருத்து எனப் பல்வேறு ஈறுகள் கொண்ட சொற்களை இங்கு எண்ணிப்பார்க்கலாம். அதேபோல தில்> தில்க்குதல்> திக்குதல் என்பதும் to turn என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு திக்கும் ஒரு turning தான். இன்னொரு வளர்ச்சியில், தொடர்ந்து சீராய்ப் பேசிவந்த ஒருவன் மேற்கொண்டு அதேபடி போகமுடியாமல் தடுமாறுவதையும் திக்குதல் என்றே திசைப்பொருளில் (ஆனால் சிந்தனை ஒட்டத்தைக் குறிப்பது போல்) ஆள்கிறோம் அல்லவா? திரிகை என்பது change என்ற பொருளைக் குறிக்கும். திருகு என்ற சொல் கன்னடத்தில் turning, திசை என்பதைக் குறிக்கும்.

திக்கு என்பது திக்கை என்ற பெயர்ச்சொல்லை மேலும் உருவாக்கி, மீண்டும் திகைதல் என்ற வினைச்சொல்லை உருவாக்கும். சில இடங்களில் திக்கை என்பது, ஒரு ‘முட்டுத் திக்கை’ ஆகிவிடும். அதனால் திகை என்பதற்கு முடிவு, எல்லை என்ற பொருளும் அமையும். திகைதல் = முடிதல், தீர்தல்.(தீர்தல் என்பது கூடத் தில் என்னும் வேரில் தோன்றிய சொல் தான்.) "அதன் விலை இன்னும் திகையவில்லை" என்பது தென்னாட்டு வழக்கு. திகையம்> தெகையம்> தேயம்> தேசம் என்பது ஒரு திசையின் முடிவில் இருக்கும் இடம், மக்கள் கூட்டம்.

ஆகத் தேசம் என்றசொல்லின் பிறப்பு தமிழில் உள்ளது. அதை அடையாளம் காணத்தான் ஆட்கள் இல்லை. பெருமை தெரியாமல் நாம் வெறுமையாய்க் கிடக்கிறோம். தேசத்தில் கிளைத்த சொற்கள் பல இந்திய மொழிகளில் உண்டு. இன்றைக்கு தேசம் என்பது nation என்றும், நாடு என்பது country என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது. இந்தியா என்பது ஒரு பல்தேச நாடு. இதில் ஒரு காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாய்ச் சொல்வது தொன்மம்.

தயக்கம்>தியக்கம் எனும் சொல் கூட திகு>தி்க்கு எனும் இச் சொற் குடும்பத்திற் சேர்ந்ததே. செய்வதறியாது நிற்கும் நிலையைக் குறிக்கும்.

ககர/சகரப் போலியில் திகை, திசையாகும். இற்றைத்தமிழில் பரவலாய்  திசை அறியப்படும். திசையன்விளை =  தென்பாண்டி நாட்டில் ஓர் ஊர்.

அடுத்த சொல் புலம். புல்>புலம் என்பது சொல்வளர்ச்சி. நாம் ஏதோ ஓர் இடத்தில் நிற்கிறோம்; அதற்கப்புறம் போகும்வழி நமக்குத் தெரியவில்லை; இருந்தாலும் தூரத்தில் ஏதோ ஒன்று புலப்படுகிறது. இப்படிக் கண்ணுக்குப் புலப்படுவதாலே புலம் எனும் சொல் திசையைக் குறித்தது. (கண்ணுக்கும், பார்வைக்கும், திசைக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

என்று சொல்கிறதல்லவா, 43-ஆவது குறள்? இங்கே தென்புலத்தார் என்பது நம் முன்னோரைக் குறிப்பது. நம் முன்னோர் இறப்பிற்குப் பின் தென்திசை சேருகிறார் என்பது தமிழரின் தொன்மம். ஆண்டில் ஒரு நாள் பிண்டம் கொடுத்து தென்புலத்தாரை வணங்குவது தமிழர் மரபு. இன்றும் கூடக் குமரி மாவட்டத்தில் இப்பழக்கம் இடையறாது நீர்நிலைக் கரைகளில் கடைப் பிடிக்கப் படுகிறது. மற்றவர், முன்னோர் இறந்த திகழி(=திதி)யில் பிண்டம் கொடுப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்கிறார். பிண்டம் கொடுப்பதன் பெயர்கூட வடசொல்லாய்த் திரிந்து தர்ப்பணமாகிப் போனது. (உண்மையில் அது தருப் பிண்டம்> தர்ப்பண்டம்> தர்ப்பண்ணம்> தர்ப்பணம் என்ற திரிவில் புரிந்துகொள்ள வேண்டிய சொல். எப்படி எல்லாம் தமிழ்மூலம் அழிந்தது, பாருங்கள்?) புலம் என்ற சொல் திசைக் குறிப்பது இப்படித்தான். கிட்டத்தட்ட region எனும் பொருள். வடபுலம், தென்புலம், மேம்புலம், கீழ்ப்புலம் என்ற சொற்கள் இப்படித்தான் பயிலுகின்றன.

அடுத்தது மாதிரம். மறுதல் வினை திரும்பற் செயலைக் குறிக்கும். மறித்தல்  பிறவினையாகி திருப்புதல் பொருளைக் கொடுக்கும். முன்னே சொன்னது போல் மறுதல் > மறுகுதல் ஆகி அங்குமிங்கும் திரும்பி நடைபோடுவதைக் குறிக்கும். "என்ன இவன் ஒன்றுஞ்சொல்லாது மறுகிக் கொண்டே உள்ளான் ?" மறுகு>மறுகம் என்ற தமிழ்ச்சொல் மார்க்கமென வடபால் திரிந்து தில்லி நகரெங்கும் Marg என்று அடையாளம் காட்டி நிற்கிறது. நாம் தான் மூலம் தெரியாது உள்ளோம். மறுதல் வினை இன்னோர் ஈற்றில் மறுதம்>மாறுதம் ஆகிப் பின் (பொக்குளம் கொப்புளம் ஆவது போல்) metathesis முறையில் திரிந்து, றகரம் ரகரமாய் மெலிந்து, மாதிரம் ஆகும்.

அடுத்தது வம்பல். எந்த ஓர் இடத்திலும் முன்வந்து தெரியும் பொருளை அடையாளம் காட்டியே திசை காட்டுகிறோம். "உங்கள் இடத்தை அடையக் கவனிக்க வேண்டிய Land mark என்ன?" முன்தள்ளி இருப்பதை எப்படிச் சொல்லுகிறோம்? "அதோ, அந்தத் தொலைவில் பொம்மிக் கொண்டு ( = பொம்பிக் கொண்டு), பம்மிக் கொண்டு (= பம்பிக் கொண்டு) தெரிகிறது பார் அம்மரத்திற்கு அருகில் நாம் போக வேண்டும்" பம்பல் (=to show prominent) என்ற சொல் வம்பல் என இயல்பான பகர/வகரப் போலியில் மாறுகிறது. (Landmark =  பொம்பல் என்று சொல்ல எத்தனை பேர்  முன்வருவோம். லாண்ட்மார்க் என்றோ இடக்குறி என்று சொல்வதற்கே பலரும் முயலுவார்.) பரன் என்பது மேல் என்னும் பொருளில் வரன் என்றும் திரிகிறது அல்லவா?

வம்புதல் என்பது முன்வந்து தெரிந்த காரணத்தால் புதிதாதல் என்றும் பொருளுங் கொள்ளும். "வம்ப மோரியர்" என்ற சொல்லால் மகதத்தில் நந்தருக்கப்புறம் புதிதாக எழுந்த கூட்டத்தைச் சங்கத்தமிழர் அழைத்தனர். இன்னொருவரை வம்பரென்று யார் அழைப்பார்? நாட்பட இருந்த பழையவர் தானே புதியவரை அப்படி அழைக்க முடியும்? அப்புறம் எப்படி, மோரியர்கள் சங்க காலத்திற்கு முன்னவர் ஆனார்? என்ன, கந்தர கோளம், பாருங்கள்? வம்பரெனும் தமிழ்ச் சொற்பிறப்பைச் சரியாகப் புரிந்து கொண்டால், சங்க காலம் மோரியருக்கும் முந்திய நிலையில் தொடங்கியிருக்கக் கூடிய ஒன்று என்று புரிந்துபோகாதோ? இதைவிடுத்து, இன்று நாம் கற்றுக் கொள்ளும் வரலாறு தலைகீழ்ப் பாடமாய் அல்லவா உள்ளது? தாத்தனைப் பேரன் என்று சொல்லும் நடைமுறையில் வம்பரை முந்தையராக்கி், பழையரைப் பிந்தையராக்கி, இந்திய வரலாற்று ஆசிரியர் குழப்படியல்லவா பண்ணிக் கொண்டு இருக்கிறார்? நாமும் அவரோடு சேர்ந்து ஊம் கொட்டி ”ஆமாம் சாமி” போடுகிறோமே?. ஒரு முட்டாள்தனமான புரிதலுக்கு தமிழரும் துணை போகிறோமே? (என்செய்வது? அவ்வளவு ஏமாளியாகத் தமிழர் இருக்கிறோம், சரியாக ஆய்ந்தால் நந்தர் காலத்திலேயே சங்க காலம் தொடங்கிவிடுகிறது. இருந்தாலும் தமிழரைப் புறந்தள்ளியே இந்திய வரலாறு எழுதப்படுகிறது.)

திசைபற்றிய 14 ஆவது சொல் விசும்பு இது areal region, sky என்பதைக் குறிக்கிறது. ஒருகுன்றின் மேட்டுநிலையில் இருந்து கீழ்நோக்கிப் பார்த்த நிலையில், "அதோ அங்கு வியல்ந்து விரிந்து தெரிகிறதே சமவெளி அதைநோக்கி நாம் போகவேண்டும்." என்று சொல்லலாம் தானே?

மேலே மலையின்மேல் பரந்து கிடந்து மக்கள் வாழும்படி ஒரு மிசைநிலமாய் [ = table land like in Cape town, S.Africa, அல்லது புனைக்கு (Pune) அருகில் சகயத்திரி மலையில் பார்க்கும் மிசைநிலம் போன்றது] இருக்கும் இடம் பரம்பு> பறம்பு. பறம்பு இருக்கும் மலை பறம்பு மலை. பறம்பு மலையில் தன்னைத் தானே புரந்து கொள்ளும் நிலையில் விளைபொருட்களும், மற்றவையும் கிடைத்தமையாலே ஒரு மாதத்திற்கு மேல் மூவேந்தர் முற்றுகையிட்டும் வள்ளல் பாரியால் தாக்குப்பிடிக்க முடிந்தது என்று புறப்பாட்டுக்களால் அறிகிறோம். ஆக விரிந்துபரந்து மிசைநிலமாய்க் கிடந்தது பறம்பு. அப் பறம்பு மலை இன்று பிரான் மலை எனப்படுகிறது. பறம்பக்குடி>பரமக் குடி ஆனது வேறு விளக்கத்தைக் காட்டும். [அந்த மாற்று விளக்கத்தை இங்கு தவிர்க்கிறேன்.]

பறம்பைப் போல இங்கு வியல்ம்பு>வியம்பு>விசும்பு என்பது விரிந்து கிடக்கும் இன்னொரு வகை நிலம். பின்னால் இதே சொல் நிலத்திற்கு மாறாய் விண்ணைக் குறிக்கவும் பயன்பட்டது.

திசைகள் பற்றி பிங்கல நிகண்டு உரைத்த 14 சொற்களைச் சொன்னதோடு, முன்னே சொன்னது போல் நேரி, நெறி என்ற சொற்ளைப் புறனடையாகச் சொல்லுகிறேன். இவையும் தமிழில் திசையைக் குறிப்பனவே.

திருநெல்வேலி தாண்டி நாகர்கோவில் போகும் வழியில் 4 திசைகளாய்ப் பிரியும் ஓரிடத்திற்கு நான்குநேரி என்று பெயர் (விண்ணவத் தலம்); இதே போல தூத்துக்குடி/நெல்லையில் இருந்துவரும் சாலைகள் சேர்ந்து திருச்செந்தூரை நோக்கி (ஆறுமுகனை நோக்கி) இட்டுச் செல்லும் திசையைக் காட்டும் ஊர் ஆறுமுக நேரி. இது போலப் பல்வேறு நேரிகள் தென்பாண்டி நாட்டில் உண்டு.

நேரி, பருப் பொருட்திசையைக் காட்ட, நெறி, சிந்தைப் பொருட்திசையைக் காட்டும். அற நெறி, அன்பு நெறி, நெறிபிறழ்தல் என்றெலாம் சொல்கிறோம் அல்லவா? இதிலெலாம் சிந்தைப் பொருள் திசையைக் காட்ட நெறியே பயன் படுகிறது. இச்சொல்லை திரைப்பட நெறியாளர் தங்கர் பச்சான் கூட, தன் ஆக்கங்களில் கையாளுகிறார்; நெறியாள்கை = direction என்று அவர் போட்டுக் கொள்கிறார். திரு. சீமானும் இதேபோலப் போட்டுக் கொள்கிறார் என்று நினைக்கிறேன். (நானும் கூட என் அலுவல் பொறுப்பில் தமிழில் எழுத வேண்டிய இடங்களில் செயல் நெறியாளர் (executive director), நுட்பியல் நெறியாளர் (technical director), புறத்திட்ட நெறியாளர் (project director), நிர்வாக நெறியாளர் (managing director) என்று வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தி இருக்கிறேன். (நிர்வாக நெறியாளர் என்று சொல்ல விழையாத இடங்களில் மானகை நெறியாளர் எனலாம்.) ஒரு நிறுவனம் (corporation) தொடர்பான எல்லாப் பயன்பாடுகளுக்கும் நெறியாளர் என்பதே சரியாக வரும். இயக்குநர் என்ற சொல்லாக்கம் சரியாக அமையாது. ஒரு நிறுவனத்தில் director, operator என்ற இருவரும் உண்டு. முதலாமவரை நெறியாளர் என்றும் இரண்டாமவரை இயக்குநர் என்றும் சொல்வதே பொருள் பொதிந்து இருக்கும்.)

இனி அடுத்த பகுதியில் விதப்பான திசைகளைப் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

Anonymous said...

ஐயா, காட்டை என்ற சொல்லை "Semaphore" என்ற சொல்லுக்கு பயன்படுத்தலாமா?

Anonymous said...

Hi, How to say Association in Tamil?

//(நானும் கூட என் அலுவல் பொறுப்பில் தமிழில் எழுத வேண்டிய இடங்களில் செயல் நெறியாளர் (executive director), நுட்பியல் நெறியாளர் (technical director), நிர்வாக நெறியாளர் (managing director, நிர்வாகம் என்று சொல்ல விழையாத இடங்களில் மானகை நெறியாளர் என்று சொல்லலாம்.) என்று வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு corporation தொடர்பான எல்லாப் பயன்பாடுகளுக்கும் நெறியாளர் என்பதே சரிவரும்.)//

இராம.கி said...

அன்பிற்குரிய ஏலா,

(ஏலன் என்பவன் தோழன்; தென்பாண்டி மீனவர்கள், கூட வேலைசெய்யும் போது தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஏலா என்றுதான் அழைப்பார்கள். தூரத்தில் போகிறவனியும் கூட, "அட, ஏலோ" என்று கூவி அழைப்பார்கள். ஏலோலம், ஆலோலம் என்றெல்லாம் சொல்லிக் வள்ளிமகள் கிளிகளை தினைப்புனத்தில் இருந்து ஓட்டுவாள்.

கூவற் பொருளில் ஏலுதல் என்ற வினை தமிழில் பேச்சு வழக்கில் இன்றும் நிலைக்கிறது. மேலையர் ¦†§Ä¡ என்று சொல்லுவதாலேயே நமக்குத் தொடர்பு கிடையாது என்று பொருளில்லை. எங்கோ சுற்றிவளைத்த ஒரு தொடர்பு உறுதியாய் இருக்கிறது.

இனி நீங்கள் கேட்ட கேள்வி.

Association என்பதை ஒரு காலத்தில் சங்கம் என்றார்கள்; பின்னால் கழகம் என்றார்கள்; இந்தக் காலத்தில் பெரிதும் மன்றம் என்றே அழைக்கிறார்கள். பல தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் Tamil Association தமிழ் மன்றம் என்றே அழைக்கப் படுகிறது.

ஒரு குறிப்பு. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பல நேரம், இது போன்ற பொதுவான கேள்விகள் இடுகைக்குத் தொடர்பில்லாமல் ஒரு சிலரால் கேட்கப் படுகிறது. என்னால் முடிந்த வரை இவற்றிற்கு மறுமொழிக்கிறேன். சில நேரம் அயர்ச்சியால் விட்டுவிடுகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள். இடுகைக்குப் பொருந்திவரும் பின்னூட்டுக்களை கூடிய மட்டும் விரைவாக மறுமொழிப்பேன்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//பல தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் Tamil Association தமிழ் மன்றம் என்றே அழைக்கப் படுகிறது.//

ஐயா, தாங்கள் மன்னிக்க வேண்டும். தங்கள் இடுகைகளை விரும்பிப் படிப்பது வழக்கம். பெரும்பாலும் சரியான அடிப்படை அகரமுதலி தமிழில் இல்லாததால் உங்கள் இடுகைகளை வாசித்து அதில் உள்ள சொற்களைப் பொறுக்கியே எழுதுகின்றோம். அங்கனம் சில குழப்பங்கள் நிலவும்போது உங்கள் உதவியை இவ்வாறு நாடவேண்டிய சூழல் வருகின்றது.

இனிமேல் இவ்வாறான கேள்விகளைக் குறைத்து தங்கள் இடுகைக்குத் தொடர்பான கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா.

Anonymous said...

திசை எதிர்பதம்

இராம.கி said...

திசைக்கு எதிர்ச்சொல் கிடையாது.