Monday, April 07, 2008

திசைகள் - 3

திசைகள் பற்றிய விதப்பான சொற்களுக்குப் போகுமுன், பலமுறை நான் உரைக்கும் அடிக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் இங்கே சொல்ல விழைகிறேன். [இதைநான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" எனும் அருமையான நூல். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழிவகுத்தது.]

”ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச்சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) சொற்களும் இல்லை” - என்று திரு. பக்கிரிசாமி அவர் நூலிற் சொல்வார். இதையே, சற்று மாறிய முறையில், "எந்தக் கருத்தும் முதலில் விதப்பான பயன்பாட்டில் இருந்து, பின்னரே பொதுமைக்கு வரும்" என்று நான் வரையறுப்பேன். (அதாவது specific to generic என்பதே என் புரிதல்.)

நெய் என்ற பயன்பாட்டை, விலங்குக் கொழுப்பில் அறிந்த பழந்தமிழ் மாந்தன், பின் எள்ளைக் கடைந்தெடுத்த நெய்க்கு, எள்நெய் (=எண்ணெய்) என்றே பெயரிட்டான். பின், மற்ற வித்துக்களில் நெய்யெடுக்க முடிந்த போது, எள்நெய், எண்ணெயெனும் பொதுச்சொல்லாகி, எள் அல்லாதவற்றில் கிட்டிய எண்ணெய்களையும் குறித்தது.

இதே போலக் "கீழிருக்கும் நிலம்" எனும் விதப்பான இந்தியப் புவிக்கிறுவ (geography) உண்மை "கிழக்குத் திசையைப்" பொதுமையாய்க் குறித்தது.  அதாவது, விதப்பான இடப்பொருள் குறித்த கீழ் எனும் சொல், நாளடைவில் கிழக்குத்திசை எனும் பொதுப்பொருளை பழக்கத்தாற் குறிக்கிறது. (எந்த மாந்தக் கூட்டத்தாரும் தாம் வாழும் புவிக்கிறுவின் கூறுகள், சூரியன் எழும்/சேரும் நகர்ச்சிகள் ஆகியவற்றை வைத்தே, திசை பற்றிய விதப்பான குறியீடுகளைத் தம்மிடை புரிந்து கொள்கிறார்.)

நாவலந்தீவின் புவியமைப்பு சற்றே விதப்பானது; இதன் வடக்கே இமயம், மேற்கே தொடர்ச்சி மலை (மராட்டியத்தில் இது சகயத்திரி என்று பெயர் கொள்ளும்; தெற்கே வரவர, வெவ்வேறு பெயர்களைப் பெற்று, ஆகத் தெற்கில், பொதிகை எனப் பெயர்கொள்ளும்.) என்பவை இருக்க, வட இந்திய நிலம், வடக்கிருந்து தெற்கே சரிந்தும், அதே போல தென்னிந்திய நிலம், மேற்கிருந்து கிழக்கில் சரிந்தும் உள்ளது. (பெரும்பாலான பேராறுகளும் கிழக்குக்கடலில் கலக்கின்றன. நருமதையும், தபதியும் புறனடைகளாய் (exceptions) மேற்குக் கடலிற் கலக்கின்றன. சிந்தாறோ வடக்கிருந்து தெற்கே ஓடிப் பாய்ந்து பின் அரபிக் கடலில் கலக்கிறது; ஆனாலும் அதன் ஓட்டம் மேலே உரைத்த நில அமைப்பிற்கு ஏற்றதாகவே அமைந்திருக்கிறது.)

இப் புவியமைப்பு, வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ் மாந்தர் மனத்திலும் ஆழப் பதிந்து போயிருக்க வேண்டும். மீவுயர்ந்த மேடு west - இலும், கீழ்ந்து கிடக்கும் பள்ளம் east - இலும் இருந்ததால், மேட்டின் அடிச்சொல்லான மேல்,  மேற்கு எனும் சொல்லையும், கிள்>கிழ் எனும் அடிச்சொல் கிழக்கு எனும் பெயர்ச் சொல்லையும், தமிழரிடையே உருவாக்கியது. இதேபோல் உயர்ந்து கிடந்தது உத்தரமாயும் (வடக்கு), தக்கித் தாழ்ந்துகிடந்தது தக்கணமாயும் ஆனது.

தமிழின் விதப்பான திசைபற்றிய சொற்களெலாம், வியக்கத் தக்க வகையில், நாவலந்தீவின் புவிக்கிறுவ (geographical) உண்மையைச் சுட்டிக் காட்டும். அந்த உண்மையே, மொழிதோன்றிய போதில், தமிழன் நாவலந்தீவுள் நுழைந்து விட்டான் என்ற தேற்றத்தை அழுத்தந் திருத்தமாகக் காட்டும். ஒருவேளை வேறிடத்தில் அவனிருந்து, மொழி உருவான பிறகே, நாவலந்தீவினுள் நுழைந்திருந்தால், மேற்கு, கிழக்கு சொற்கள், மேல் (up), கீழ் (down) பொருளில் எழ வாய்ப்பேயில்லை. (அப்புறமும் தமிழர் ஈரான் எலாமைட்டுகளிடமிருந்து பிரிந்துவந்தார் என்று சிலர் சொல்வது முரண்நகை.) மேலும், கீழுமென்ற இடச்சொற்கள் திசைகளைக் குறிப்பது நாவலந்தீவில் நம் முன்னோருக்கு அமைந்த இயற்கை நேர்ச்சிகள் ஆகும்.

ஆதி மாந்தன் ஆப்பிரிக்காவில் தோன்றி 70000 ஆண்டுகளுக்குச் சற்று முன் அங்கிருந்து நகர்ந்து, சிச்சிறிதாய் மற்ற கண்டங்களை, அடுத்த 65000 ஆண்டுகளில் நிறைத்தானென்று பெரும்பாலோர் சொல்லும் மேவுதி தேற்றமானாலும் (majority theory) சரி, மாறாக ஆப்பிரிக்கா, ஆசியா என்ற இரு கண்டங்களிலும் 100000 ஆண்டுகளுக்கு முன்தோன்றி, பின் நகர்ந்து, சிச்சிறிதாய் மற்ற கண்டங்களை நிறைத்தான் எனச் சிறுபாலோர் சொல்லும் நுணுதித் தேற்றமானாலும் (minority theory) சரி, "தமிழ்மொழி ஏற்பட்டபோது, நாவலந்தீவினுள் தமிழன் இருந்தான்" என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியும். ஏனெனில், தமிழின் திசைச்சொற்கள் எல்லாம் உலகின் வேறு  புவிக் கிறுவைக் குறிக்காது, இந்தியப் புவிக்கிறுவையே குறிக்கின்றன. இந்த உண்மை, தமிழ்ச் சொற் பிறப்பு ஆய்வால் பெறப்படும் உண்மையாகும்.

இவ்வலசலைச் சற்றே இடைநிறுத்தி, தமிழின் 4 திசைச் சொற்களையும் சரியாகப் புரிந்து, மீளத் தொடர்வோம். முதலில் வருவது கிழக்கு.

குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி
கிழக்கின் பெயரே கீழ்த்திசையு மாகும்

என்பது பிங்கலத்தின் 13 ஆம் நூற்பா. அகரவரிசைப்படி இது ஐந்திரம், கிழக்கு, குணக்கு, ப்ராசி, பூருவம் என்ற வரிசையில் அமையும். முதலில் ஐந்திரமெனும் இருபிறப்பியைப் பார்ப்போம்.

தமிழில் இல்தல் / இல்லுதல் வினைச்சொல் குத்தல், குடைதல், குழித்தல், தோண்டல், உள்ளீடிலாதுசெய்தல், இறங்கல் என்ற பொருள்களைப் பெறும். மலையில் குடையப்பட்ட குகைகளில் தான் விலங்காண்டி மாந்தன் முதலில் வாழ்ந்தான் என மாந்தவியலாளர் கூறுகிறார். மலைகளில் இயற்கையாலோ, மாந்தனாலோ, இல்லப்பட்டது இல்; இல்லிற் பெரியது இல்லம். இன்றைக்கு குகை எனும் தோற்றம் இல்லாவிடினும், அதன் நீட்சியாய் நாம் வாழும் வீட்டை இல் /இல்லம் எனும்சொல் குறிக்கிறதே? இல்லின் சொற்பொருள் அறிந்தால், வரலாற்றிற்கும் முந்தை நிலையில், குகையில் வாழ்ந்தகாலத்தில், தோன்றிய இயல்மொழி தமிழ் என்பது முற்றும் விளங்கும். So Tamil is definitely one of the oldest languages of the world. We don't say this arbitrarily; the etymology of the word "il" indicate so.

அடுத்து உள்ளீடு காணா நிலையை "இல்லா நிலை" என்று "இல்லை" எனக் குறிக்கிறோம் அல்லவா? [இல்லப்பட்ட இடத்தில் பருப்பொருளை வைப்பது, அல்லது நாம் அமைவது இருத்தல் எனப்படும். வெறும் இடத்திலிருந்து, பருப் பொருள் இல்லாத நிலை “இல்லை” என்று சொல்லப்படுகிறது. இது ஒரு வழிப் பொருள்.எனவே இருத்தல் வினை ஓரிடத்தில் பருப்பொருள் குத்தி இருப்பதை உணர்த்தும் சொல்லாகும். "அவள் அங்கு இருக்கிறாள்."

இல்-லில் விளைந்த நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்களை இங்கு விரித்தால் அவை பெருகும். ஆயினும் அவற்றை ஆழ்ந்துணர்வது மிகவும் தேவையாகும்.

இங்கே தொடர்புடைய சில பயன்பாடுகளைச் சொல்கிறேன். காட்டாக, இலந்தது இலந்தி; அது இலஞ்சியாகிக் குளப் பொருளைக் குறிக்கும். இலஞ்சி மன்றம் என்று சிலம்பிலும், மணிமேகலையிலும் வருகிறது அல்லவா? இலந்தது வேறுவகையில் திரிந்து இலவந்தி> இலவந்திகை ஆகி வெந்நீர் நிறைத்துக் குளிக்கச் செய்யப்பட்ட குளத்தைக் குறிக்கும். "இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்" என்று ஒரு பாண்டிய மன்னனை புறநானூறு (55, 56,57,61,196,198) பேசும் (வெந்நீர்ச் செய்குளம் இருந்த ஊர்; இலவந்திகைப் பள்ளி என்ற ஊர் எது என இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை; ஆனால் பல்வேறு ஊகங்கள் ஆய்வுக்களத்தில் இருக்கின்றன.)

இனி இலந்தது இல்> இள்> இளி> இழி என்னும் திரிவில் இறங்கல் பொருளை உணர்த்தும். இறங்கல் என்பதும் கீழாதலே. தவிர, இல்> இள்> (இழு)> இகு என்ற திரிவில் தாழ்தல், தாழ்ந்துவிழல் என்ற பொருட்பாட்டைக் காட்டும். இகுத்தல் எனும் பிறவினை தாழ்த்தல் என்றும் பொருள் கொள்ளும். இகழ்தல் என்ற வினையும் கூட இகுதலின் நீட்சி தான்.

"மழை கீழிறங்குவது போலப் பகைவரின் வில் சொரியும் அம்புகள்" என்ற பொருளில் மலைபடுகடாத்தின் 226 ஆம் வரி "மாரியின் இகுதரு வில்லுமிழ் கடுங்கணை" என்று வரும். இதில் இகுதரல் என்பது கீழிறங்கும் பொருளையே கொடுக்கும். அதே மலைபடுகடாத்தின் 44 ஆம் வரியில், மயில் தோகையைத் தாழ்த்தும் காட்சியை விவரித்து "கணங்கொள் தோகையிற் கதுப்பு இகுத்து அசைஇ" என்ற வரிவரும். இகுத்தல் (=இறக்குதல்) என்ற பிறவினை இங்கே ஆளப்படுவதைப் பார்க்கலாம். இதே போல "நீர் இகுவன்ன நிமிர்பரி நெடுந் தேர்" என்ற ஐங்குறுநூற்றின் 465 ஆம் பாடல்வரி நீர் வீழுங் காட்சி உணர்த்தும்.

இகுதல் = மேலிருந்து கீழே வரல், இறங்கல் என்ற இவ்வினையின் நீட்சியாய் இகுதல்>ஈதல் வினை தமிழிலெழும். செல்வம் இருப்பவர் இல்லாதார்க்குக் கொடுக்கும் போது கை இறங்குகிறது. அதை இகுதல் என்கிறோம். இகுதல்  வினை ஈதலென்றும் நீளும். இகுதல்>ஈதலின் தொழிற் பெயர்ச்சொல் ஈகை என்றாகும். வாயிலிருந்து இகுந்துவரும் வாய்நீர் நாட்டுப் புறங்களில் ஈத்தா/ஈத்தை எனப்படும். பிள்ளை பெறுவதுகூட இகுதற் செயலே. தாயின் கருப்பை வாயிலிருந்து பிள்ளை இறங்குகிறதல்லவா? ஒவ்வோர் பிள்ளையிறக்கமும் (=பிறப்பும்), ஈத்து எனப்படுகிறது. "அவள் இவனை ஈன்றாள். இது எத்தனை யாவது ஈத்து?". பிறப்பென்பது பிள்ளையின் பார்வையில் சொல்லப்படுவது. ஈத்து, தாயின் பார்வையில் சொல்லப்படுவது. ஈனியல் என்ற சொல்லால் இன்று genetics ஐக் குறிக்கிறோமே? ஆங்கிலம்போன்ற மேலை மொழிகளில் சொல்லப்பெறும் நிலத்திணை yield - களும் கூடத் தமிழில் ஈத்து என்றே சொல்லப்படுவதை அகரமுதலிகள் வாயிலாய் அறிந்து கொள்கிறோம்.

இகுந்தது (=தாழ்ந்தது) என்பது ஈந்ததென்றும் வடிவங் கொள்ளும். இறங்கிய இடம் (=இறக்கமான இடம்), ஈந்து>ஈந்தமென்ற பெயர்ச் சொல்லை தமிழில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், அச்சொல் பதிவு இக்கால அகர முதலிகளில் இல்லை. இருந்த இடத்தைக் குறிக்கும் ’இருத்தம்’  தமிழ் அகர முதலிகளில் உள்ளபோது, ’ஈத்தப்’ பதிவு இல்லாதது வியப்பாகவுள்ளது. அதே பொழுது, மனையடி சாற்றத்தில் மனைநில அமைப்பை விளக்குகையில், தென்மேற்கு மூலை இருப்பதிலேயே உயரமாயும், வடமேற்கு மூலையும், தென்கிழக்கு மூலையும் அதற்கடுத்த உயரத்திலும், வடகிழக்கு மூலை இருப்பதிலேயே பள்ளமாயும் இருக்க வேண்டுமென்று சொல்லி, வடகிழக்கு மூலைக்கு ஈசான மூலை என்பார்.  ஈத்து என்றசொல், கிழக்கைக் குறித்தால் தான், ஈத்தானம்>ஈதானம்> ஈசானம், ஆகப் பள்ளமான வடகிழக்கைக் குறிக்க முடியும். [இது பற்றி மேலும் ஆய வேண்டும்; என்னால் உறுதியாக இப்போது சொல்ல இயலவில்லை.] [தமிழ் அகரமுதலிகள் இல்லாத, அதே பொழுது இருப்பவற்றிலிருந்து தருக்கவழி உன்னிக்கக்கூடிய சொற்கள் பலவும் உண்டு. ஈந்தம்/ஈத்தம் அப்படிப்பட்டது.]

ஈந்தம், ஈத்தம் என்ற சொற்கள் தமிழ் அகரமுதலிகளில் பதிவு செய்யப்படாது இருக்க, வடபுலப் பலுக்கல்திரிவு முறையில் உருவான ஈந்தம்>ஐந்தம்> ஐந்த்ரம்>ஐந்திரம் என்பது மட்டும் எப்படியோ தமிழ் அகரமுதலிகளில் பதிவாகியுள்ளது. எப்படிச் சிவம், சைவமென வடபுல முறையில் திரிவு பெற்றதோ, அதைப்போல, ஈந்தம் எனும் பள்ளச்சொல், ஐந்தம் எனத் திரிந்து ரகரத்தை வழக்கம்போல் உள்நுழைத்து ஐந்திரத் தோற்றம் காட்டும்.. [மேலை மொழியின் east உம் அப்படியே ஈத்துக்கு இணையாய் ஆவதை என்னால் வியக்காதிருக்க முடியவில்லை. (பொதுவாய் "த்து" எனும் மெய்ம்மொழி மயக்கம் "st" என்றே மேலை மொழிகளில் உருப் பெறுகிறது. இதற்குக் கணக்கற்ற எடுத்துக் காட்டுகள் உள்ளன.)]

அடுத்தது கிழக்கு. கிள்ளப்பட்டது கிழக்கு. கிள்ளுதல் என்பதும் பள்ளுதலே. கிள்தல், கீள்தலென்றும் நீளும். கிள்தல்>கிழிதல் என்றுமாகும். கிளறுதல், கிளைத்தல், கிண்டுதல், கீறுதல், கீழ்தல் ஆகிய வினைகளெலாம் கிள்தலின் நீட்சியே. இவற்றில் கிளைத்த சொற்களும் ஏராளமானவை. கிழக்கு என்ற சொல் பள்ளமான/இறக்கமான இடம் என்ற பொருளில் முதலில் எழுந்து, பின் திசைப்பொருளைச் சுட்டத் தொடங்கியது. ’கிழக்கு’ எல்லோருக்கும் தெரிந்த சொல்லானதால், பெரிதாய் அதை விளக்காமல் நகருகிறேன்.

கிழக்கிற்கு அடுத்தது குணக்கு. குள்ளுவது குள்+து எனும் நீட்சியில் குட்டாகி பின் குட்டமென நீண்டு பள்ளத்தைக் குறிக்கும். சேரலத்தில் பள்ளமான நாடு, குட்டநாடு எனப்படும். அதேபோல் குட்டு, குட்டை என்ற நீட்சியில் நீர்நிறைந்த பள்ளத்தைக் குறிக்கும். இன்னும் வேறுவகையில் குள்>குழி (மேலையரின் hole ஐயும் இங்கு எண்ணுங்கள்) என நீண்டு, பள்ளத்தைக் குறிக்கும். குள், குண்டாகிச் சிறு குட்டையைச் சுட்டும்; "குண்டுங் குழியும்"  சொற்றொடரைக் கேட்டிருக்கிறோமே? குள் வேர்ச்சொல் நீண்டு குள்>குளம் என்ற சொல்லை ஆக்கும். குட்டுவது குடைதலாகித் துளைக்கும் செயல் குறிக்கும். "என்னப்பா, இப்படிக் குடையுறே?" குண்டுதல், குண்ணுதலைக் குறித்து குண்ணம்> குணம் எனும் பெயர்ச்சொல் உணர்த்தித் தாழ்ந்த கீழ்த்திசையைக் குறிக்கும். குணக்கு என்ற பெயர் குண்ணுதல் / குணத்தலின் வழி தோன்றியது.

பதிற்றுப் பத்து 59 ஆம் பாட்டின் ஆறாம் வரி குண முதல் (=eastern horizon) என்ற சொல்லைக் காட்டும். குணவாயில் என்ற சொல் வஞ்சிக்குக் கிழக்கில் சேரநாட்டின் கிழக்குவாயிலைக் குறிப்பதாக அண்மையில் நண்பர் நாக. இளங்கோவன் ஒரு கட்டுரையில் நிலைநாட்டினார். முன்னால், அடியார்க்கு நல்லாரும் கிட்டத்தட்ட இதே பொருளைத்தான் சொல்லுவார். குணகடல் என்பது கிழக்குக் கடலைக் குறிப்பதாக நற்றிணை 153ஆம் பாடல் முதல் வரி, 346 ஆம் பாடல் முதல் வரி, புறநானூறு 17 ஆம் பாடல் 2ஆம் வரி ஆகியவை சொல்லும். அதே போலப் (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய காரிகிழாரின் புற நானூற்று ஆறாம் பாடல் "குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்" என்ற மூன்றாம் வரியாலும் அறியலாம்.

அடுத்தது ப்ராசி எனும் இருபிறப்பிச் சொல். இச்சொல்லே என்னை இக் கட்டுரைத் தொடர் எழுதவைத்தது. பள்ளுதல் என்பது தோண்டற்பொருளைக் குறிக்கும். நாளாவட்டத்தில் உழவைக் குறித்தது; ”பள்ளன்” உழவனைக் குறித்தது. (பின் முட்டாள்தனமாய் சாதிப்பெயராய் மாறிப்போனது.) பள்+நை, பண்ணையாகி பள்ளப்பட்ட நிலங் குறித்தது. பண்ணை உரிமையாளர் பண்ணையார் ஆனார். பள்குதல் பகுத்தலானது. பகுத்தல் = பிரித்தல். பகுத்தது பின் வகுத்தது என்றும் திரியும். பகுக்கப்பட்டது பாகம். பள் எனும் வேர், பதிதல் வினையை உருவாக்கும். பள்ளில் உருவான சொற்கள் பலவும் தமிழிலுண்டு. பள்ளிலிருந்தே பள்ளி என்ற நகரச்சொல் எழுந்தது. பள்+து> பட்டு>பட்டி எனும் நாட்டுப்புற ஊர்ப்பெயரும் அப்படி உருவானதே. பள்ளில் இருந்தே பட்டி வழி பத்தி>பதி எனும் ஊர்ப் பெயரும் உருவானது. இந்தியா எங்கணும் பள்ளி(>ஹள்ளி> வளி), பட்டி, பதி ஆகிய சொற்களின் திரிவுகள் ஏராளம் ஊர்ப்பெயர்களை உணர்த்துகின்றன. தமிழின் அகல் பரப்பை என்று நாம் உணருவோமோ, தெரிய வில்லை?

இனிப் பாசிக்கு வருவோம். கோட்டையைச் சுற்றி அகழப் பட்ட கால்வாய், பகழப் பட்டது எனும் கருத்தில், பகழி எனப்பட்டது. பகழி>பகயி>பகசி என்றும் திரியும். [ழகரம் யகரமாய்த் திரிவது வியப்பில்லை. வாழைப்பழம் வட ஆற்காடு மாவட்டத்தில் வாயப் பயம் என்று பலுக்கப் படுவதில்லையா?] அகல் எனும் மரப்பெயர் அகல்>ஆல் எனத் திரிந்ததைப் போல், பகல் எனும் பொழுது பகல்>பால் எனத் திரிந்ததை போல், பகசி எனும் பள்ளம் பகசி> பாசி எனத் திரிந்து நீர்நிறைந்த அகழியைக் குறிக்கும். இக்காலத் தமிழில் அகழி என்று மட்டுமே சொல்ல நாம் பழகியதால் பகழி, பாசி என்ற சொற்கள் நமக்குச் சட்டென்று பொருள் புரியாமற் போகின்றன.

2 அரசருக்கிடையே போர் ஏற்பட்டு, ஒருவர் கோட்டையை இன்னொருவர் பிடிப்பதையும், அதை மற்றொருவர் காக்க முற்படுவதையும் நொச்சி-உழிஞைப் போர் என்று இலக்கண நூலார் சொல்வார். பழந்தமிழ் மரபுப் படி கோட்டையைக் காப்பாற்றுவார் நொச்சியார் ஆவார். கோட்டையை முற்றுகிறவர் உழிஞையார் ஆவார்.

பெருங்கோட்டைகளைச் சுற்றி 3 அகழிகளாவது இருக்க வேண்டும் என்று குடிலரின் "அர்த்த சாஸ்திரம்" சொல்லும். (Kautilya, The Arthashastra, Penguin Classics, Penguin Books India, 1992 எனும் நூலை வரலாறு, பொருளியல் ஆர்வம் உள்ளவர் படியுங்கள்.) கோட்டைச் சுவரின் அடிப்பாகம் 72 அடியும், அதற்கப்புறம் 24 அடி இடைவெளி விட்டு மூன்றாம் அகழியும் (அகலம் 84 அடி), அதற்கப்புறம் 6 அடி இடைவெளி விட்டு இரண்டாம் அகழியும் (அகலம் 72 அடி), அதற்கும் அப்புறம் இன்னும் ஓர் 6 அடி இடைவெளி விட்டு முதலகழியும் (அகலம் 60 அடி) இருக்க வேண்டுமென அர்த்தசாஸ்திரம் அகழிகளுக்கு வரையறை சொல்லும்.

இதே அளவு இல்லாவிடினும், தமிழர் கோட்டைகளின் அகழிகளும் கிட்டத் தட்ட 200 அடிக்கு அகண்டவையாக இருந்திருக்க முடியுமென உணர்ந்தால் தான், உழிஞைப் போரெனத் தனித்துப் தொல்காப்பியம் குறிப்பிடுவது  புரியும். [அகழிப்பகுதி சிறு அளவினதாக இருந்தால் தனியாகப் போர் நடக்க வாய்ப்பில்லை. மற்ற போர்களுடன் இதை ஒரு பகுதியாய் ஆக்கிவிடலாம். இந்த உழிஞைப்போர் நீருக்குள் நடக்கின்ற செரு (battle) வையே குறிக்கிறது. (நீர்ச்செரு வீழ்ந்த பாசி நிலை என்பது தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணையியல், 1014 ஆவது நூற்பாவில் வரும் ஒரு தொடர்.)

"பகைவருடைய வலிகெட அவருடைய அகழியிடத்துப் பொருதலைக் கூறும் புறத்துறை" எனப் புறப்பொருள் வெண்பாமாலை 6.17 வின் கொளுவும் சொல்லும். தவிர, புறப்பொருள் வெண்பா மாலையின் 111 ஆவது வெண்பா,

"நாவாயும் தோணியும் மேல்கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி உடலவும் - பூவார்
அகழி பரந்தொழுகும் அங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் வீழ்ந்தார் பலர்"

என்று அப்போரின் அகற்சியைத் தெரிவிக்கும். இப்பாசியைக் (=பள்ளத்தைக்) கடந்தே கோட்டையைத் தாக்கும் போர்ப்படை செல்ல முடியும். அதனால், திடீரென்று கோட்டையைத் தாக்கும் போர்ப்படையைப் பாசிப்படை என்றே யாழ்ப்பாண அகராதி பதிவு செய்யும்.

இதுபோக, ’பாசகம்’ என்பது அகரமுதலிகளில் "கீழிருப்பது" என்ற பொருளில் வகுக்கும் எண்ணைக் குறிக்கும். பின்னால், பாசுதல் என்பதும் பகுத்தல் என்ற பொருள்கொள்ளும். அதன்விளைவாய் பாசிதம், வகுத்த ஈவு என்ற பொருள் கொள்ளும். அதோடு பாசனம் என்ற சொல் (நீர்ப் பாசனம் என்பது வேறு; அது பாய்தல் வினையால் வருவது), பங்கு என்ற பொருளையும் காட்டும்.

”பாசறை” சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ஆளப்படும். ஆனால் சங்க இலக்கியத்தில் வரும் செய்திகள் துணுக்குகளாகவே உள்ளன. சங்க இலக்கியம் காட்டும் பாசறைக்குள் யானைகள், புரவிகள், தேர்கள்,  காலாட் படையினர் எல்லோரும் உள்ளார், பருந்து பறக்கவியலா உயரம் வாய்ந்த அரண்கூடப் பாசறைக்குள் உண்டு. இப்படி இதுபோல் விவரிப்புக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சங்க இலக்கியத்தில் உள்ளன. ஆனால் முழு விவரிப்பை அர்த்த சாஸ்திரத்திலேயே பெற முடிகிறது.

அர்த்த சாஸ்திரம் ஆழ்ந்துபடித்தால் அதன்வழி சங்க இலக்கியச் சொல்லான பாசிக்கு இன்னொரு அணைவை நாம் கொண்டுசேர்க்க முடியும். அர்த்த சாஸ்திரம் மகதத்தையே பேசுகிறது என்பதற்காக ஒதுக்க வேண்டியதில்லை. மகதப் பேரரசு தமிழ் மூவேந்தர் காலத்தில் இருந்ததே. நாவலந்தீவில் மக்கள் இடையாட்டம் (interaction) எல்லாக் காலங்களிலும் உண்டெனில், தமிழர் நடைமுறைகளோடு மகத நடை முறைகள் ஓரளவாவது பொருந்தவேண்டும். அர்த்தசாஸ்திரத்தின் படி, பாசறை ஒரு base camp. போர்க்களத்திற்கு அருகில் பாசறையும்  நகரம் போல் அரைநிலைப்பு (semi-permanent) நிறுவனமாக தச்சர், கொல்லர், கம்மியர், இன்னபிற பணியாளர்களால் அமைக்கப் படுகிறது. இதற்கும் அகழி உண்டு (கொஞ்சம் சிறிதாக இருக்கும்.) உள்ளே தேர், புரவி, யானை, காலாட் படைகளோடு அரசன், அமைச்சர், படைத்தலைவர், ஆள், அம்பாரி சேனை, பெண்கள், கலைஞர் முதற்கொண்டு எல்லாரும் தங்கக் கூடாரங்கள் அமைக்கப் பட்டிருக்கும். பள்ளப்பட்ட இடத்தில் செய்யப்பட்ட அறை (பாசு + அறை =) பாசறை. பாசு>பாசி திரிவில் அகழியைக் குறிக்கும். இதைப் பாடிவீடு என்றுஞ்சொல்வர். படைவீடு = cantonment. பாடிவீடு= encampment. பிற்காலத்தில் பாடிவீட்டையும், படைவீட்டையும் ஒன்றிற்கு மற்றொன்று பகரியாய்ப் புழங்கியிருக்கிறார்.

[சென்னையில் மேற்கு அண்ணா நகர் அருகில் உள்ள பாடி என்னும் பகுதியும் ஒரு படைவீடே. இப்படைவீடு பல்லவர் காலத்தது. அங்கு படைவீட்டு அம்மன் கோயில் ஒன்றுண்டு. இன்று படவட்டம்மன் கோயிலெனப் பொதுவில் பலுக்குவார். அந்நகர்ச் சிவன் கோயில் இருக்குமிடம் திருவலிதாயம் எனப்  படும். வலிதாயம் என்றசொல் கூட அரணக் கூட்டம் (corpus of an army division) தங்கியிருந்த இடத்தையே குறிப்பிடுகிறது.]

பாசறை தமிழெனில், பின் பாசியும் தமிழாகத்தானே இருக்க முடியும?. பாசிக்குள் ரகரம் நுழைத்து ப்ராசி என்று ஆகிவிட்டது என்பதால், அது வடசொல் தோற்றம் காட்டுகிறது, அவ்வளவுதான். [இச்சொல் பிறப்பில் நான் பாவாணரோடு முற்றிலும் வேறுபடுவேன். எக்காரணமும் காட்டாமல் அவர் ப்ராசி - வடசொல் என்றுசொல்லி கூடலூர்க் கிழாரை (புறம் 229 ஆம் பாட்டு), தமிழர் வரலாறு எனும் நூலில் கலவுநிலைக் காண்டத்தில், மொழித்துறைப்  பகுதியில் வடசொல் வழக்கென்ற தலைப்பின் கீழ்ச் சாடியிருப்பார். இதை என்னால் ஒப்பமுடியாது. கூடலூ கிழார் பாசி என்ற நல்ல தமிழ்ச்சொல்லை ஆண்டிருக்கிறார் என்பதே என் புரிதல். அதை மேலே விளக்கியிருக்கிறேன்.]

இனி கூடலூர் கிழாரின் புறப்பாட்டு 229 இன் வரிக்கு வருவோம். மேலே எரிமீன் போகின்ற பாதையையும், அதன் போது வானில் இருக்கும் கோள், விண்மீன்களின் நிலையையும் கூறுமிடத்தில் "எரிமீன் கிழக்கிலும் போகாது, வடக்கிலும் நகராது விழுந்தது" என்ற கருத்தில், "பாசிச் செல்லாது ஊசி முன்னாது" என்று சொல்லுவார். பாசியின் விளக்கத்தை இங்கு பார்த்தோம்; ஊசியின் விளக்கத்தை இன்னொரு இடத்தில் பார்ப்போம்.

அடுத்த சொல் பூருவம்.

புகருதல்>பூர்தல் என்ற சொல்லும் குற்றுதல், தோண்டுதல் என்ற பொருளையே தரும். புரைதல் என்ற சொல்லும் அதே பொருளையே தரும். புரை (= pore) சொல் துளை என்ற பொருளையும் கொடுக்கும். பூரியது = தாழ்வானது என்ற பொருள் கொள்ளும். "சீரியன வுள்ளிப் பூரியன மறத்தல் வேண்டும்" என்பது. குறள் 1206க்கு மணக்குடவர் உரையில் வரும் ஒரு வாசகம். பூரியர் என்பவர் இழிந்தவர் என்று பொருள் கொள்ளப் படுவர். "பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தார்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார்" என்பது கம்பராமாயணத்தில் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப் படலம் 116 ஆம் பாடலில் வரும் ஒரு வரி. இங்கே பூரியர் என்பது இழிந்தவர் என்ற பொருளிலேயே வருகிறது. அது போக திருக்குறள், அறத்துப்பால், துறவற இயல், அருள் உடைமை அதிகாரத்தில்,

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

என்னும் முதற்குறளில், பூரியார் என்ற சொல் இழிந்தவர் என்ற பொருளில் வருகிறது. எனவே பூரிய திசை என்பது இழிந்த திசை, அல்லது இறங்கிய திசை. பூருவம் என்பது இறங்கிய பக்கம் அதாவது கிழக்குப் பக்கம்.

இனி அடுத்த பகுதியில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

11 comments:

MURUGAN S said...

வாழ்த்துக்கள் !

Kasi Arumugam said...

அய்யா, பல பயனுள்ள தகவல்கள், சிந்தனைகள்.

நான்கைந்து வருடத்துக்கு முன் (இலக்கிய ஆதாரங்கள் எதுவும் அறியாமல்) இந்தப் பொருளில் கிறுக்கியவை: மேல்நாடும் கீழ்வானமும்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அருமையான விளக்கம். தமிழ், தமிழர் குறித்த பெருமை மேலிடுகிறது.

Anonymous said...

ஐயா, இது சேரலத்தோடு எப்படி பொருந்துகிறது? அது எதிர்மாரான நிலயமைப்பு கொண்டது அல்லவா? அதுவும் பண்டை தமிழகத்தில் ஒரு பகுதிதானே?

Prasath said...

அய்யா, எமக்கு ஒரு அய்யம்.

திருமூலர் - திருமந்திரத்தில்,
"எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கழிவில்லை
அங்கே பிடித்து விட்டளவும் செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனுமாமே"

எனுமிடத்து "பூரி" தாழ்ந்ததைக் குறிக்கிறதா?
இது பூரித்தல் - மூச்சுக் காற்று உள்ளிழுக்கப் படுவதைக் குறிப்பதாகக் கருதுகிறேன்.

Prasath said...

அய்யா மீண்டும் யாம்,
"பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தார்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார்"

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பூரியர் மற்றும் பூரியார் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர் பொருட்களை உணர்த்தவில்லையா?

இயல்பாக நோக்கும் பொழுது அப்படித்தான் தெரிகின்றது. தயவு செய்து விளக்கவும்.

Unknown said...

அன்புள்ள இராம. கி. அவர்களே,
சிறப்பான கட்டுரை.
தமிழ் மீது வெறுப்பில்லாதவர் குருக்கள் எனப்படும் சிவாச்சரியார்கள்.
வடவரால் நூல் போடப்பட்ட்டவர்கள்.
இந்த மரபினர் ஆரியர் அல்லர். இந்த மரபினர் சமீப காலம்வரை வீட்டை குகை என்றே சொல்வது வழக்கம்.
உங்கள் கருத்துக்கு வலுசேர்க்கும் சொல் மரபை கவனிக்க வேண்டுகிறேன்
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஏப்ரல் 15, 2008

இராம.கி said...

அன்பிற்குரிய தமிழ்க்குழந்தை

வாழ்த்திற்கு நன்றி.

அன்பிற்குரிய காசி,

உங்கள் மேல்நாடும் கீழ்வானமும் என்ற பதிவை முன்பு படித்திருக்கிறேன்.

அன்பிற்குரிய ரவி சங்கர்,

கனிவிற்கு நன்றி. தமிழர் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று சொல்லிவருபவன் நான். அதே பொழுது நாம் அறியாததும் உலகில் நிறைய இருந்தது; இருக்கிறது, இன்னும் இருக்கும் என்பதையும் ஏற்பவன் தான்.

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

சேரலம் பற்றிய செய்தியை மேற்கு பற்றிச் சொல்லும் போது கூறுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பிரசாத்,

நீங்கள் எடுத்துக் காட்டிய பாட்டு திருமந்திரம் அட்டாங்க யோகம், பிராணாயாமம் என்னும் பகுதியில் 563 ஆம் பாட்டாக வருகிறது. (நான் சுப. அண்ணாமலையின் திருத்தப் பதிப்பைக் குறிப்பிடுகிறேன்.). நீங்கள் காட்டியது போக, இன்னும் 564, 565, 566, 567 ஆகிய பாடல்களிலும் அது வருகிறது. (வேறு பாடல்களிலும் வரக்கூடும் நான் தேடிப் பார்க்கவில்லை.) இந்த ஐந்து பாடல்களிலும் பூரித்தல் என்ற வினை நிறைத்தல் பொருளிலேயே வருகிறது. விதப்பாக, காற்றை நீள இழுத்து நுரையீரலை நிறைப்பதைக் கூறுகிறது. பூரகம் என்னும் பெயர்ச்சொல் பூரித்தலில் எழும்.

அடுத்து,

"பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தார்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார்"

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

என்ற இரண்டு மேற்கோள்களைக் கொடுத்து இவற்றில் "பூரியர் மற்றும் பூரியார் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர் பொருட்களை உணர்த்தவில்லையா?" என்று கேட்டிருக்கிறீர்கள். இவற்றில் முதல் மேற்கோள் கம்பராமாயணம், யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம் 421 ஆம் பாட்டு.

காரியம் ஆக அன்றே ஆகுக கருணை யோர்க்குச்
சீரிய தன்மை நோக்கின் இதனின்மேற் சிறந்தது உண்டோ?
பூரிய ரேனும் தம்மைப் புகல்புகுந் தோர்க்குப் பொன்றா
ஆருயிர் கொடுத்துக் காத்தார் எண்ணிலா அரசர் அம்மா!

இதில் "கீழ்ப்பட்டவராய் (அற்பராய்) இருந்தாலும் அடைக்கலம் என்று வந்தவருக்கு அழியாத தம் உயிரையும் கொடுத்துக் காத்த அரசர்கள் எண்ணிலாதவர்" என்று இராமன் சொல்லுகிறான். அதே போல,

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

என்ற அருளுடைமை, 241 ஆம் குறளிலும் பூரியர் என்னும் சொல்லுக்கு இழிந்தவர் என்ற பொருளே வருகிறது. ஆக, இரண்டிலும் "கீழ்மக்கள்" என்ற ஒரே பொருள் இருப்பதாக நான் புரிந்து கொள்ளுகிறேன். பொதுவாகப் புரையுள்ளவர் பூரியர். இங்கே பூருதல் என்பது துளைத்தல், பள்ளம் பண்ணுதல் என்றே பொருள் கொள்ளும். கீழ்நிலையர் என்பதே அதன் பொருள்.

இந்த விளக்கம் போதும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி. சிவாச்சாரியர், தம் வீட்டைக் குகை என்று சொல்வது எனக்குப் புதுச் செய்தி. உங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி.
சிவாச்சாரியார்கள் தமிழின் மேல் பற்றுள்ளவரே!

அன்புடன்,
இராம.கி.

Prasath said...

அய்யா,
தங்கள் மறு மொழிக்கு நன்றி.
பூரியர் என்பது "தாழ்ந்தது", "இழிந்தது","கீழானது", "பள்ளமானது" என்று பல பொருள் தரும் என்பதை உணர்ந்து கொண்டேன். மிக்க நன்றி. பள்ளத்தில் தானே நிறைக்க முடியும். உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது இன்னும் நிறையக் கற்க வேண்டும் என்கின்ற ஆவலைத் தருகின்றது.