Monday, July 10, 2006

மனசில் தேரோடுமா?

(உரைவீச்சு)

(சென்ற ஆண்டு தேரோட்டத்தின் போது எழுதியது; திண்ணை வலையிதழிலும் வெளிவந்தது. இந்த ஆண்டாவது நிலைமை மாறும் என்று நினைத்தேன்; ஊகும்.... வரலாறு, பிடித்து வைத்த செக்கைப் போல், மாறாது போல், இருக்கிறது. - இராம.கி., 10 சூலை 2006.)

(சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான். ஆனாலும் சில தலைமுறைகளுக்கு முன்னால் வரை எல்லா மக்களும் தான் அங்கே தேர்வடம் பிடித்தார்கள். இன்றைக்குத் தேர்வடம் பிடிப்பதில் ஒரு சாரார் வரட்டுக் குரவம் (கௌரவம்) காட்டுகிறார்கள். நம் குமுகப் பிறழ்ச்சி பலநேரம் நம்மைக் கொதிப்படைய வைக்கிறது. எத்தனையோ பெருமை கொண்ட சிவகங்கைச் சீமையின் மிஞ்சிப் போன அவலங்களுள் இதுவும் ஒன்று.)


"என்னங்கடா,
'இன்னார் மகன்'னு
படங் காட்டுறீயளா?"

"அஞ்சு மணிக்கு நாலுவீதி
சுத்திவரும்னு சொல்லிப்புட்டு,
ரெண்டு மணிக்கே அவுக்கவுக்காய்
ஏறிவந்து வடம் புடிப்பா?

கூடி வந்த எங்க சனம்,
கோயில் தள்ளி நிறுத்திவச்சி,
விறுவிறுன்னு 4 வீதி
சுத்திவர இழுத்துவிட்டு,

தேருநிலை கொள்ளுமுனே,
உப்புக்கொரு சப்பாணியா,
ஓட்டிவந்த இருபத்தாறை
ஒண்ணுகூடித் தொடச்சொல்லி...."

"ஏண்டா டேய்,
320 பேரு வடம்பிடிக்கிற இடத்துலே,
இருபத்தாறுக்கு மேல்
எங்காளுன்னாக் கொள்ளாதோ?

நாலுவடத்தில் ஒண்ணுதந்து
நாகரிகம் பார்த்துவச்சா,
கோணப்பயக, உங்களுக்குக்
கொறஞ்சிபோயி விளஞ்சிருமோ?"

தொட்டவடம் படம்புடிச்சு
பட்டம்விடப் போறீயளோ?"

"இதுக்கு
ரெண்டாயிரம் காவல்,
ஒரு ஆணையன்,
ரெண்டு மூணு வட்டாட்சி,
ஒரு மாவட்டாட்சி,
ஏகப்பட்ட ஊடகம்!"

"போங்கடா, போக்கத்த பயகளா?
போயிஅந்த உயர்மன்றில்
ஓங்கி அறிக்கை வைய்யுங்க!
அரசினோட அதிகாரம்
அமைதிகாத்த கதைவிடுங்க!"

"அப்புறம்

தமிழினத்துத் தலைவரென,
புரட்சிக்குத் தலைவியென,
தமிழ்க்குடியைத் தாங்கியென,
புரட்சியெழும் புயலெனவே

நாலைஞ்சு பேரிங்கே
நாடெல்லாம் அலையுறாக

அவுகள்லாம் இனிமேலே
சிவகங்கைச் சீமைக்குள்ளே
அடுத்தவாட்டி வரவேண்டாம்;
கட்டளையாச் சொல்லிடுங்க.

வாக்குக்கேட்டு இனிஒருத்தன்
வக்கணையா உள்ளவந்தா,
சேர்த்துவச்சு நாங்களெலாம்.....,
செருப்புப் பிஞ்சுரும், ஆமா!"

"டேய், என்னங்கடா பேசிட்டு நிக்கிறீங்க!
தேரோடுற பாதையிலே,
தெளியாத காலத்துலே,
கல்லும், முள்ளும் கிடந்ததனால்,
பள்ளு, பறை நம்ம ஆட்கள்
கையெல்லாம் வேணுமின்னு,
கூப்பிடாய்ங்க! தேரிழுத்தோம்!

இப்பத்தான், எல்லாமும்
பொருளாதாரம்; தலைகீழாச்சே!
அவனவன் சோலி அவனவனுக்கு;
எங்கே பார்த்தாலும் வரட்டுக் குரவம்டா!

அதோட,
நாலுவீதியுந்தான் தார்போட்டு
இழைச்சுட்டாய்ங்களே,
அப்புறம் என்ன?

அவய்ங்க மட்டுமே தொட்டாக் கூடத்
தேர் என்ன, வண்டி கணக்கா ஓடாது?
முக்கா மணியென்னடா?
முக்குறதுள்ளே முடிச்சிருவாய்ங்க?"

"அய்யா, சாமிகளா, போறவழியிலே
சொர்ணமூத்தீசரையும் பெரியநாயகியையும்
நாங்க சாரிச்சதாச் சொல்லுங்க!
நாங்களெலாம் வடந்தொட்டா,

அருள்மிகுந்த அவுகளுக்கு
ஆகிடவே ஆகாதாம்,
கொள்ளாம கூடாம,
கோச்சுக்கவும் செய்வாகளாம்,
மழையினிமே வாராமப்
மந்திரமும் பண்ணுவாகளாம்."

"இப்படியே போனா,
அவுகளும் எங்களுக்கு வேணாம்,
அவுகளை நாங்களும் விலக்கி வச்சுர்றோம்"

"டேய், சாமிகுத்தம்டா,
விலக்கு, கிலக்குன்னு பேசாதே!"

"அடச்சே போங்கடா!
தேரோடுதா(ந்), தேர்?

முதல்லே
அவனவன் மனசுலே
தேரோடுமான்னு பாருங்கடா?"

9 comments:

வெற்றி said...

இராம.கி அய்யா,
சற்று முன்னர்தான் நண்பர் பத்ரியின் பதிவில் இது பற்றி பின்னூட்டமிட்டேன். மிகவும் வருத்தப்பட வேண்டிய விடயம். இந்த அநாகரீகமான , தமிழ்ப்பண்புக்கு விரோதமான செயல்கள் எல்லாம் என்று மறையுமோ?!

பி.கு:- தங்களின் பதிவில் நீங்கள் புழங்கிய சில சொற்களுக்குப் பொருள் விளங்கவில்லை. தயவு செய்து நேரம் கிடைக்கும் போது தெளிவுபடுத்த முடியுமா?

குமுகப் பிறழ்ச்சி = ?

மிக்க நன்றி.

நிலா said...

இறைவனால் மனிதர்கள் பிளவுபடுவதை என்னவென்று சொல்ல...
வட்டார மொழி நன்று

இன்னும் 20 வருடங்களுக்குள் வட்டார மொழி வழக்குகள் முற்றுமாய் மறைந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. இப்படி பதிவு செய்தால்தான் உண்டு. நானும் அதைச் செய்ய முயன்று வருகிறேன்

Chandravathanaa said...

இந்த அநாகரீகமான , விரோதமான செயல்கள் எல்லாம் என்று மறையுமோ?!

╬அதி. அழகு╬ said...

\\தமிழினத்துத் தலைவரென,
புரட்சிக்குத் தலைவியென,
தமிழ்க்குடியைத் தாங்கியென,
புரட்சியெழும் புயலெனவே

நாலைஞ்சு பேரிங்கே
நாடெல்லாம் அலையுறாக

அவுகள்லாம் இனிமேலே
சிவகங்கைச் சீமைக்குள்ளே
அடுத்தவாட்டி வரவேண்டாம்;
கட்டளையாச் சொல்லிடுங்க.

வாக்குக்கேட்டு இனிஒருத்தன்
வக்கணையா உள்ளவந்தா,
சேர்த்துவச்சு நாங்களெலாம்.....,
செருப்புப் பிஞ்சுரும், ஆமா!"\\


தேர் பார்க்க வாய்க்கவில்லை!

பார் காப்போம் என்று

பகட்டுமொழி உரைப்பவர்கள்

படப் போகும் செருப்படியை

ஊர் கூட்டி இல்லாவிடினும்

உனக்கு மட்டும் சொல்லி வைப்பேன்!

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

இவ்வீச்சைச் சென்ற வருடம் படித்தது நினைவில் இருக்கிறது. கண்டதேவித் தேர் என்றாலே இந்தப் பதிவு தான் நினைவுக்கு வரும். இது பற்றிய செய்தி குறித்து முன்னர் அறிந்திருக்கவில்லையென்றாலும், இன்னும் நிலைமாறாது இருப்பது தமிழ்க்குமுகாயத்திற்கே இழுக்கு.

இராம.கி said...

அன்பிற்குரிய வெற்றி,

குமுகம் = சமூகம் (குமுகம் என்பது குமிந்து கிடக்கும் மக்கள் கூட்டம். கும் என்னும் வேர் சம் என்று திரிந்து சமூகம் என்ற இருபிறப்பிச் சொல்லை உருவாக்கும். தமிழ்ச்சொல் இருக்கும் போது கூடியமட்டும் இரு பிறப்பிச் சொல்லைத் தவிர்ப்பது நல்லது.

குமுகங்களின் ஆயம் குமுகாயம்; (பல குமுகங்களின் தொகுதி குமுகாயம்) இதைச் சமுதாயம் என்று இருபிறப்பிச் சொல்லாய் அழைப்பதையும் தவிர்க்கலாம்.

பிறழ்ந்த நிலை = பிறழ்ச்சி = சரியான, முறையான நிலைக்கு மாறிக் கிடப்பது.

அன்பிற்குரிய நிலா,

வட்டார வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது எனக்கு உடன்பாடே.

அன்பிற்குரிய சந்திர வதனா,

இது போன்ற செயல்கள் விழிப்புணர்வு கூடி எதிர்வினை காட்டினால் தான் மறையும்.

அன்பிற்குரிய அழகு,

படப்போகும் செருப்படியைப் பார்த்திருக்கக் காத்திருப்பேன்.

அன்பிற்குரிய செல்வராஜ்,

சென்றமுறை சூன் 22 ல் இந்த உரைவீச்சை இங்கு இட்டிருந்தேன். இன்னும் எத்தனைமுறை இதை நினைவு படுத்த வேண்டி வருமோ, தெரியவில்லை. மன வருத்தம் அப்படியே இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

வெற்றி said...

இராம. கி அய்யா,
தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. உங்களின் பதிவைப் படிக்கும் வரை நான் அறிந்திராத சொல் இது. தங்களின் பதிவு மூலம் ஓர் புதிய சொல்லைத் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

murali said...

நல்ல பதிவு ஐயா, மேலும் கற்று கொடுங்கள் கற்றுக்கொள்ள தயாராய் இருக்கிறோம்.
எதிர் வரும் காலத்தில் ஒரு தமிழ் அகராதிபோல் தங்கள் தளம் இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

நாமக்கல் சிபி said...

//"ஏண்டா டேய்,
320 பேரு வடம்பிடிக்கிற இடத்துலே,
இருபத்தாறுக்கு மேல்
எங்காளுன்னாக் கொள்ளாதோ?

நாலுவடத்தில் ஒண்ணுதந்து
நாகரிகம் பார்த்துவச்சா,
கோணப்பயக, உங்களுக்குக்
கொறஞ்சிபோயி விளஞ்சிருமோ?"

தொட்டவடம் படம்புடிச்சு
பட்டம்விடப் போறீயளோ?"
//

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போல இதுவும் ஒரு கண்துடைப்பு!
சனநாயகச் சீரழிவு! வேறென்ன சொல்ல?

//டேய், என்னங்கடா பேசிட்டு நிக்கிறீங்க!
தேரோடுற பாதையிலே,
தெளியாத காலத்துலே,
கல்லும், முள்ளும் கிடந்ததனால்,
பள்ளு, பறை நம்ம ஆட்கள்
கையெல்லாம் வேணுமின்னு,
கூப்பிடாய்ங்க! தேரிழுத்தோம்!

இப்பத்தான், எல்லாமும்
பொருளாதாரம்; தலைகீழாச்சே!
அவனவன் சோலி அவனவனுக்கு;
எங்கே பார்த்தாலும் வரட்டுக் குரவம்டா!

அதோட,
நாலுவீதியுந்தான் தார்போட்டு
இழைச்சுட்டாய்ங்களே,
அப்புறம் என்ன?

அவய்ங்க மட்டுமே தொட்டாக் கூடத்
தேர் என்ன, வண்டி கணக்கா ஓடாது?
முக்கா மணியென்னடா?
முக்குறதுள்ளே முடிச்சிருவாய்ங்க?"
//

சரியாகச் சாடி இருக்கிறீர்கள் இராம.கி!