Friday, July 07, 2006

ஒப்பந்த மானுறுத்தலாய்க் காட்சிதரும் கல்வி வாணிகம் - 1

(Education trade viewed as contract manufacturing)

தமிழ்நாட்டில், "அரசு, தனியார், அரசுதவி பெற்ற தனியார்" என மூன்று விதமான கல்வி நிறுவனங்கள் உண்டு. தனியார் நிறுவனங்கள் என்பவை ஒரு காலத்தில், வரலாற்று வரிதியில், பெரும் பணக்காரர்களால், தொண்டு செய்யும் உள்ளங்களால், வள்ளண்மை காரணத்தால் உருவானவை; அரசுதவி பெற்ற தனியார் நிறுவனங்கள் என்பவை ஒரு கல்வி நிறுவனம் நடத்தும் அளவிற்குப் பணம் இல்லாத நடுத்தர வருக்கத்தினரால், தொண்டு செய்யும் முயற்சியில் எழுந்தவை. (இந்தக் கட்டுரையின் கருப்பொருள் தனியார் நிறுவனங்களே என்பதால் அரசு நிறுவனங்கள் பற்றிப் பேசுவதை வேண்டுமென்றே தவிர்க்கிறேன்.)

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த இரண்டு வகையான தனியார் நிறுவனங்களிலும் கொஞ்சமாவது பொதுநல நோக்கு இருந்தது/இருக்கிறது; பொதுவாக இந்த நிறுவனங்களை நிர்வகிப்போர் வேறெங்கோ சம்பாரித்த பணத்தை, இங்கு கல்விக்கெனச் செலவழித்துக் கொண்டு இருந்தனர். இத்தகைய நிறுவனங்களில் வரவும் செலவும், நிருவகிப்போரின் உயர்ந்த நடவடிக்கைகளால், கிட்டத்தட்டச் சரியாகப் பொருந்தி இருந்தன. ஓராண்டில் ஒருவேளை செலவு நடை கூடிவிட்டால், மீண்டும் அடுத்த ஆண்டு நன்கொடை, தன்னார்வலர்கள் என்று முன்வந்து நிற்பதால், பள்ளி/கல்லூரியின் நிதிநிலை சரியாகும். பொது மக்களும், பெற்றோரும் நிதிநிலையைப் புரிந்து கொண்டு தங்களால் இயன்றதை நன்கொடையாய்க் கொடுத்து உதவுவார்கள்; இந்த இயல்பான போக்கால் இந்த நிறுவனங்களில் எந்த ஒரு கட்டடமும், துறையும் புதிதாய் எழும்போது புதிது, புதிதாய் தாளாளர்கள் தோன்றுவார்கள்; கட்டிடங்களில் நன்கொடை கொடுத்தோர் பெயர்கள் பொறிக்கப் படும். மொத்தத்தில் ஆற்றொழுக்கான வெளிப்பாடு, மறைப்பில்லாத தன்மை இந்த நிறுவனங்களில் அன்று இருந்தது. (Correspondent என்ற சொல்லைத் தமிழில் தாளாளர் என்று மொழிபெயர்த்ததே தாளாண்மை கருதித்தான். இப்பொழுது தாளாளர் என்ற சொல்லுக்கே பொருள் இல்லாமல் போய்விட்டது. Cor-respondent என்பவரை இப்பொழுதெல்லாம் பள்ளி/கல்லூரிப் பொறுப்பாளர் என்று சொல்லுவதே சரி).

அந்தக் காலம் மாறி, இப்பொழுதெல்லாம் ஒரு பதினைந்து, இருபது ஆண்டுகளாய் தமிழகத்தில் பள்ளி/கல்லூரிப் பொறுப்பாளர்களின் பாங்கு பெரிதும் மாறிப் போனது. வேறெங்கோ சம்பாரித்த பணத்தைக் கல்வியில் செலவிட்டதற்கு மாறாய், கல்வி அளிக்கும் நிறுவனத்திலேயே சம்பாரிக்கின்ற வழக்கம் எங்கும் ஏற்பட்டுப் பரவிப் போனது. இன்னார் என்று கணக்கில்லை; யார் வேண்டுமானாலும், கண்டு கொள்ள வேண்டியவர்களைக் கண்டு கொண்டால், தமிழ்நாட்டில் இது போன்ற பள்ளிகளை/கல்லூரிகளைத் தொடங்கி விடலாம் என்று ஆகிவிட்டது. கொஞ்சம் கூடக் கூசாமல் ஒரு பழைய அரசியல்வாதியின் மனைவி "கல்லூரி வைத்துச் சம்பாரிக்கலாம் என்ற கருத்தில் 70% விழுக்காடு வட்டிக்கு ஒரு ஏமாற்றுக்காரனிடம் 3 கோடி உருவா கடன் வாங்க முயன்று, தன்னிடம் இருந்த பணத்தை இழந்திருப்பதாக" ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் சொன்னதைக் கேட்ட போது பலரும் அதிர்ந்து போனார்கள். அந்த அம்மா ஏமாந்தது ஒருபக்கம்; ஆனால் அப்படிப் பணம் புரட்டிக் கல்லூரி தொடங்கி பணம் ஈட்டி இந்த வட்டியையும், முதலையும் கட்ட முடியும் என்று நினைப்பது இன்னொரு பக்கம். மொத்தத்தில் இந்தக் குமுகாயம் எவ்வளவு புரையோடிப் போயிருக்கிறது என்று பாருங்கள்!

அடிப்படையில் சொந்தப் பணமே கூடப் போடாமல், வெறுமே அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் / அரசியல் தலைவர்களிடம் தங்களுக்குள்ள பழக்கத்தை வைத்து, அல்லது கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து, நிறுவனம் நடத்த உரிமம் பெற்று, "ஊரான் வீட்டு நெய்யே! என் பெண்டாட்டி கையே!" என்றபடி முற்றிலும் வெளியார் பணத்தை வைத்து, அதையே முதலாக்கி, பள்ளி/கல்லூரி என்ற நிறுவனத்தை உருவாக்கி, "கல்வி வாங்கலையோ, கல்வி" என்று கூவி அழைத்து வணிகம் செய்வதே நாடெங்கும் பெரிதாய் நிற்கிறது; மறைநிலைச் செலவு கணக்குகள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நடைமுறை, "நானா உன் பிள்ளையை இங்கு வரச்சொன்னேன்?" என்பது போன்றதோர் அலட்சிய மனப்பான்மை, "இந்த ஆண்டு எவ்வளவு பணம் தேறும்?" என்ற கேள்விகள் ஆகியவை நிறைந்ததாய் இந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகிப் போகின. எந்தப் பள்ளியில் "சேருங்கள்" என்ற கூக்குரல் (ஒலியெழுந்தோ, எழுகாமலோ) அதிகமாய் இருக்கிறதோ, அங்கு மக்கள் ஓடுகிறார்கள். மொத்தத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில், வரவு என்பது செலவிற்கு மேல் ஆகிவரும் முறையில் வைத்துக் கொள்ளும் காலம் இது. "கல்வி என்பதில் காசு பார்க்க வேண்டும், பொலுவு (profit) அடைய வேண்டும்" என்று முயலுகின்ற காலம் இது. இந்தப் பொறுப்பாளர்கள் ஒரு தொழில் முனைவோரைப் போலத் தோற்றம் அளித்துக் கொண்டு அதே பொழுது இரவோடு இரவாய் ஓடிப்போகும் இயக்காளிகளாய் (fly-by night operators) நடந்து கொண்டு எல்லாவற்றிலும் ஒரு கலவையாய்க் காட்சியளிக்கிறார்கள்.

நாம் அறிந்து பணம் சம்பாரிக்க நாட்டில் இரண்டு வகை உண்டு; ஒன்று வாங்கி விற்கும் வாய்பகரம் (>வியாபாரம் = trade) என்ற வணிகம். இன்னொன்று மானுறுத்தல் (manufacture) செய்து பொருள்களைப் புதுக்கி நடத்தும் தொழில். இயற்பொருட்களை (raw materials) வாங்கி, ஆற்றலைச் செலவழித்து, சில ஊடுழைகளை (utilities)யும் நுகர வைத்து, பூதிக, வேதியற் செலுத்தங்களுக்கு (physical and chemical process) இந்தப் பொருட்களை உட்படுத்தி, கிட்டத்தட்ட வேளாண் விளைப்புப் போலவே புதுக்கம் (production) ஆக்குகின்ற மானுறுத்தற் தொழிலை வணிகம் என்று நாம் யாரும் சொல்லுவதில்லை. (வணிகம், மானுறுத்தல் இரண்டையும் சேர்த்துச் சொல்லும் போது பொதினம் - business - என்றே சொல்லுகிறோம். பொலுவு - profit - நாடிப் பொதிவதெல்லாம் பொதினம் தான்; இருந்தாலும், அதன் பொருள் இன்னும் ஆழமானது.)

அன்புடன்,
இராம.கி.

No comments: